Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடலுக்குள் மூழ்கிய கண்ணனின் நகரம் !


கிருஷ்ணன் சுவடு 3


    வீட்டுச் சுவர்களில், பொந்துகளை ஏற்படுத்தி அல்லது தானாக ஏற்படும் சுவர் பொந்துகளில், இதுவரையில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக வாழ்ந்துவந்த எலிகளும், சுண்டெலிகளும் மதுவை குடித்து போதை தலைக்கு ஏறியதை போல, பட்டப் பகலில், வீதிகளில் அங்கும் இங்கும் ஓடத்துவங்கின. அவைகள் ஓடுவதை உற்றுப் பார்த்தால், பித்துப் பிடித்த மனிதக் கூட்டம் இலக்கு இல்லாமல் நாலாத் திசையும் தறிகெட்டு ஓடுவது போல் இருந்தது.

எலிகள் மட்டுமா? அப்படி ஓடின. குதிரைகளும், மாடுகளும், ஆடுகளும் கூட கட்டுத் தறியை வலுக்கட்டாயமாக உதறி அறுத்துக் கொண்டு தெருவில் ஓட ஆரம்பித்தன. நாய்கள் தொடர்ச்சியாக குறைத்துக் கொண்டு எங்கே ஓடுவது என்பது தெரியாமல் திக்கு முக்காடி இரைப்பு ஏற்பட திமிறிக் கொண்டு ஓடின.

வீடுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, பானை சட்டிகள், சீட்டடுக்கு மாளிகை போல் சரிந்து விழுந்தன. சுவர்கள் விரிசல் விடத் துவங்கின. பூமிக்குள் இருந்து நாகங்கள் சீறிக் கிளம்புவது போல, ஓசைகள் வந்தன. பூமியில் ஊன்றி நடக்கும் மனித கால்கள், எதோ ஒரு அதிர்வு கால்களுக்குள், குடைவதை உணர்ந்தன. மரங்கள், இலைகளை கவிழ்த்துக் கொண்டு தூக்கு மரத்தில் நிற்கும், கைதிகள் போல சோகமாக நின்றன. மலைகளில் உள்ள உருண்டை பாறைகள் தானாக உருளத் துவங்கின.

நதிகள் தான், ஆண்டாண்டு காலமாக ஓடிய பாதையிலிருந்து முற்றிலும் மாறி எதிர்திசையில் ஓடத் துவங்கியது. நதியில் வாழ்ந்த மீன்களும், முதலைகளும் சூடுபட்டது போல, துள்ளி தரையிலே விழுந்து துடித்தன, துவண்டன. கடலிலிருந்து, கரிய நிறத்து மலைகள் கிளம்புவதை போல, அலைகள் கிளம்பி வந்து கடற்கரை ஓரத்தையும் உடைத்து, துவாரகை நகருக்குள் புகுந்தன.

வெள்ளியாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்ட துவாரகை வீதிகளுக்குள், கருப்பான கடல் வெள்ளம் அசுரவேகத்தில் பாய்ந்தது. மாட மாளிகைகள், நெருப்பில் விழுந்த மெழுகு பொம்மைகளாக உடைந்து விழுந்தன. அரசர்களின் அரண்மனையும், யோகிகளின் தவக் குடிலும், எளிய மக்களின் குடிசைகளும், கரும்பலகையில் எழுதப்பட்ட எழுத்துக்கள் நீர்பட்டு கரைவது போல, ராட்சச அலைகளால் கரையத் துவங்கின. கண்ணன் வாழ்ந்த அரண்மனையும், தண்ணீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், பொடிப்பொடியாக சிதறியது.

வெகுதூரத்தில் நின்று கண்ணனின் நண்பனும், மைத்துனனும் கீதையை கேட்ட, சீடனுமான அர்ஜுனன் தனது மனம் கவர்ந்த கண்ணன் வாழ்ந்த நகரம், தன் கண்முன்னாலேயே கடலுக்குள் அமிழ்ந்து போவதை பார்த்து கொண்டே நின்றான். மலைகளை தூக்கி குடையாக பிடித்த கண்ணன், எத்தனையோ அரக்கர்களை குழந்தை பருவத்திலேயே வதம் செய்த கண்ணன், மாடுகளை மேய்த்து வேங்குழல் ஊதி, மனங்களை மயக்கி, லீலைகள் செய்த கண்ணன், பாதம் பதிய உடம்பில் புழுதிபட நடந்த நகரம், ஒருவினாடியில் உடைந்து போவதை கண்ட அர்ஜுனன் பரிதவித்தான். துடிதுடித்தான்.

தனது எதிரிகளை நிமிட நேரத்தில் கொன்றொழித்த காண்டீபம் கையில் இருக்கிறது. பாரதப் போரில், வீராதி வீரர்களை மரணமே இல்லாத, மகாபுருஷர்களை மண்ணோடு மண்ணாக வீழ்த்திய வீரம், இன்னும் நெஞ்சத்தில் இருக்கிறது. அவனது உடம்பு வலு இன்னும் குன்றவில்லை. இளமை இன்னும் கரையவில்லை. ஆனாலும், சீறிவரும் அலைகளின் முன்னால், ஒன்றும் செய்ய முடியாத கைதி போல அர்ஜுனன் நின்றான். அலைகள் இயற்கையின் சக்தி. அதன் முன்னால், மனிதனான தான் என்ன செய்துவிட முடியும்? என்று தயங்கி அவன் நின்றானா? இல்லை. இல்லவே இல்லை.

இறைவனான சிவபெருமானை எதிர்த்தே போர் புரிந்தவன். அர்ஜுனன், பரசுராமரின் வெல்லமுடியாத சீடர்களில் ஒருவன் கர்ணன் என்று, அவருக்கு தெரிந்திருந்தாலும், அவனையும் எதிர்த்து களம் கண்டவன் அர்ஜுனன். தனது குழந்தை பருவத்திலேயே, கிணற்றில் விழுந்த பந்துகளை எடுக்க அம்புகொண்டு கயிறு திரிக்க கற்றுக்கொண்டவன். அர்ஜுனன் சீறிவரும் அலைகளை, அம்புகளை அணையாக்கியே தடுத்துவிட அவனால் முடியும். ஆனால், அவன் அருகில் கிருஷ்ணன் இப்போது இல்லை. கிருஷ்ணன் இல்லாத, அர்ஜுனன் உயிர் இல்லாத சடலம் எனவே துவாரகை அழிந்ததை அவனால் பார்க்க முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை.

மகாபாரத போர்முடிந்து, முப்பத்தி ஆறு வருடம் கழித்து, துவாரகை அழிந்தது. இப்போது சென்னையிலும், சுமத்ரா தீவிலும், இலங்கையிலும் கோரத்தாண்டவம் செய்ததே கொடிய சுனாமி, அந்த சுனாமி அப்படி பெயர் பெறுவதற்கு முன்பே ஆழிப் பேரலையாக இந்தியாவை எத்தனையோ முறை தாக்கி இருக்கிறது. இந்த தாக்குதல்களின் காரணமாகவே இலங்கையையும் தாண்டிப் பரந்து கிடந்த இந்திய தேசம், குமரிக்கண்டத்தை இழந்து, சுருங்கி போனது. கோவலனும், கண்ணகியும் வாழ்ந்த பூம்புகார், கடலுக்குள் மறைந்து போனது. அப்படி ஒருகாலத்தில், வந்த ஆழிப் பேரலையே குஜராத் எல்லையில் இருந்த, துவாரகை நகரை துவம்சம் செய்தது. தனக்குள் சுவிகரித்துக் கொண்டு, ஒரு கொடிய அரக்கனை போல் ஏப்பம் இட்டது.

துவாரகை கடலுக்குள் போன சங்கதி மகாபாரதத்தில் விரிவாகவே சொல்ல பட்டிருக்கிறது. பாரதம் கூறும் இந்த சம்பவம் உண்மையா? துவாரகை நகர் கடலுக்குள் சென்றது என்றால், அதன் எச்ச சொச்சம் ஏதாவது கிடைக்குமா? என்று ஆராயத் துவங்கினார்கள். தங்களது விஞ்ஞான கண்களை கடலுக்கடியில் செலுத்தினார்கள். நான்கு நாட்கள் பட்டினி கிடந்தது வயிறு, முதுகோடு ஒட்டி கண்களில் பஞ்சடைத்து காதுகளும் கேட்காமல், நடக்கவும் முடியாமல், சாலை ஓரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் விழுந்து கிடப்பவன் வாயில், குவளை நிறைய திராட்சை ரசத்தை ஊற்றியதைப் போல ஆய்வாளர்கள் கைகளில் சில புதை பொருட்கள் கடலுக்கடியில் கிடைத்தன.

செங்கல்கள், பானை ஓடுகள், சூளையில் வைத்து வேகவைக்கப்பட்ட வேறு பல பொருட்கள் கடலுக்கடியில் இருபது மீட்டர் ஆழத்தில் கிடைத்தன. அவைகளில், சில கண்ணனின் முத்திரைகளை தாங்கி நின்றன. அந்த முத்திரைகள், துவாரகையின் செழுமையை காட்டின. மக்கள் எவ்வளவு வளமையோடு வாழ்ந்திருக்க வேண்டும் என்பதையும் காட்டியது. கூடவே மகாபாரதம் சொல்வது போல, துவாரகை கடல் சீற்றத்தால் தான் அழிந்தது என்பதையும், துல்லியமாக காட்டின. அப்படி என்றால் கண்ணனை பற்றி பாரதம் கூறுவதை முழுமையாக தெரிந்து கொண்டால், அவனது வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்ற உண்மைகளை மிக எளிமையாக நாம் புரிந்து கொள்ளலாம் அல்லவா? எனவே சற்று நேரம் மகாபாரதம் என்ற பூஞ்சோலைக்குள் செல்வோம். அங்கே கண்ணன் என்ற பாரிஜாத மலரின் வரலாற்று வர்ணனைகள் என்னவென்று சிறிது காண்போம்.



Contact Form

Name

Email *

Message *