Store
  Store
  Store
  Store
  Store
  Store

நெய் தேங்காய் உடைப்பதின் இரகசியம் !




    பாசம் மிகுந்த குருஜி அவர்களுக்கு, உங்கள் இணையதளத்தின் மிகத் தீவிரமான வாசகர்களில் ஒருவன் எழுதுவது. பணிவான வணக்கம். குருஜி உங்கள் எழுத்தை படிக்க ஆரம்பித்த நாள்முதல், பல புரியாத விஷயங்களும், தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆன்மீகத்தில் நுணுக்கமானது, நுண்ணியமானது, ரகசியமானது என்று சொல்லக் கூடிய எத்தனையோ கருத்துக்களை தெள்ளத் தெளிவாக குழந்தை கூட புரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கம் தருகிறீர்கள். அதற்காக கோடான கோடி நன்றி. குருஜி எனக்கு இப்போது ஒரு சந்தேகம். சபரிமலைக்கு செல்பவர்கள், நெய் தேங்காய் எடுத்துச் செல்கிறார்களே? அது ஏன்? என்ன காரணத்திற்காக நெய்யையும், தேங்காயையும் ஒன்றாக்கி கொண்டுச் செல்கிறார்கள். என்பதற்கு தாங்கள் சரியான விளக்கம் தருமாறு வேண்டுகிறேன். நீங்கள் கொடுக்கும் விளக்கம் பலருக்கும் பயம்தரும்படி அமையட்டும்.

இப்படிக்கு,
சாந்தகுமார்,
அபுதாபி.





மது இணையதளத்தின் மூலமாக, வாசகர்களை சந்தித்து மாதம் ஒன்று முடிந்து போயிருக்கும் என்று நினைக்கிறேன். மார்கழி மாத பூஜையை அமைதியோடு நடத்தவும், சற்று இளைப்பாறுதலை எடுத்துக் கொள்ளவும் பூர்வாசிரம கிராமம் சென்று நேற்று தான் வந்தேன். வந்தவுடன் சாந்தகுமாரின் கடிதம் தான் கண்ணில்  பட்டது. கேள்வி நன்றாக இருந்தாலும், அதை விட அவர் கேட்கும் பாணி நன்றாக இருந்ததனால், இடைவெளிக்கு பின்னால் துவங்கும் பணியை சாஸ்தாவின் சன்னதியில் உடைக்கும் நெய் தேங்காயில் இருந்து சந்தோஷமாக ஆரம்பிக்கலாமே என்ற எண்ணத்தில் துவங்குகிறேன்.


நமது மதத்தில் செய்யபடுகின்ற சடங்குகள் எதுவுமே அர்த்தமற்றவைகள் கிடையாது. ஒவ்வொரு சடங்கிலும், பலவிதமான தத்துவங்கள் மறைந்து கிடக்கிறது. அந்த உண்மை முக்கால் பங்கு பலருக்கு தெரிவதில்லை. அதனால், சடங்குகளை மூடநம்பிக்கைகள் என்று பல அறிவாளிகள் ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுமட்டுமல்ல, சடங்குகளின் பொருள் தெரியவில்லை என்பதனால், வெளிநாட்டில் வாழுகிற இந்து குழந்தைகள், இந்து மதம் என்பதே போலித்தனமான சடங்குகளின் கலவை என்று நினைக்கவும் துவங்கி விட்டார்கள். இதை அயல்நாட்டில் வாழுகிற பல பெற்றோர்கள் என்னிடம் வேதனையோடு பகிர்ந்திருக்கிறார்கள்.

மனிதனாக பிறவி எடுத்தவுடனேயே இறுதி இலக்கு எதுவாக இருக்க வேண்டும் என்றால், இறைவனை அடைவதாக இருக்க வேண்டும். மலையில் தோன்றுகிற நதி கடலில் கலப்பதை எப்படி இலக்காக கொண்டு, மேடு பள்ளங்களிலும், காடுகளிலும், சமவெளிகளிலும் பலவாறு பாய்ந்தோடி எப்படி சமுத்திரத்தை அடைகிறதோ அதை போல நமது வாழ்க்கை படகு, சம்சார சாகரத்தில் எங்கு சுற்றினாலும் இறைவன்

என்ற சமுத்திரத்தில் வந்து நிலைபெற வேண்டும். அப்படி நிலைபெறுகிற வரை இடைஞ்சல்கள் பலவற்றையும் தாங்கி ஆகவேண்டும்.

மனிதனுக்கு இடைஞ்சல் தருவதும், அவனை கடவுளோடு கலக்க விடாமல் இடைமறித்து தடுப்பதும், பாசமும், பற்றும் உற்றார் உறவினரும் எந்தளவு இந்த பந்தங்களை விட்டு விட்டு வெளிவருகிறோமோ அந்த அளவு இறைவனின் அருகாமை கிடைக்கும். பாசங்களை அறுத்து விட்டாலும், ஆணவம் அவ்வளவு சீக்கிரம் போகாது. ஆணவத்தை நசுக்கி, ஞானத்தை உள்ளே செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் உடல் என்ற கூடு பறந்து, அதாவது புலன் ஆசைகள் அறுந்து விழுந்து, இறை ஐக்கியம் ஏற்பட்டு விடும். இதை சொல்வது தான் ஐயப்பனுக்கு உடைக்கும் நெய் தேங்காயின் தத்துவம்.

தேங்காயிற்க்குள் பருப்பு இருக்கலாம். சுவையான தண்ணீர் இருக்கலாம். தத்துவம் இருக்குமா என்ன? ஆசையை அறுக்கும் தத்துவம் அங்கே எங்கே இருக்கிறது? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. தேங்காய் ஓட்டிற்கு மேலே இருக்கும் நார்கள் தான் பந்தபாசம் என்பது. அந்த நார்களை உரைக்கும் போது தேங்காயின் மூன்றாவது கண்ணான ஆணவம் தெரிகிறது. மூன்றாவது கண்ணை துளைபோட்டு நெய்யை ஊற்றுகிறோம். நெய் என்பது ஞானம். இறுதியில் அந்த தேங்காய் இறைவன் சன்னதியில் உடைக்கப்படுவது ஆத்மாவியின் ஐக்கியம். இது தான் நெய் தேங்காயின் நிஜமான தத்துவம்.

இது தவிர தேங்காய்க்கு மூன்று கண் இருப்பதனால், அது சிவனின் அம்சமாகவும் கருதப்படுகிறது. தேங்காய் உள்ளே ஊற்றப்படும் நெய் விஷ்ணுவின் அம்சம். பகவான் ஐயப்பன், ஹரிஹர புத்திரன் அல்லவா. அதனால், சிவ விஷ்ணு ஞாபகமாக நெய் தேங்காய் எடுத்துச்  செல்வதாகவும், ஐயப்பன் முன்னிலையில் சிவம் விஷ்ணு என்ற இரண்டு தெய்வங்களும் ஒன்றாகி சாஸ்தா என்ற ஒரே வடிவில் காட்சி தருவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது தவிரவும் பல விளக்கங்கள் இருக்கும் அவைகளை தெரிந்தவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.





Contact Form

Name

Email *

Message *