Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுளை நெருங்கும் மனிதன்

சித்தர் ரகசியம் - 19


   னிதனது உடம்பில், விசுத்தி சக்கரம் ஐந்தாவது நிலையில் இருக்கிறது. கீழிருந்து மேல்நோக்கி போகும் போது, இது ஐந்தாவது நிலையில் இருந்தாலும், குண்டலினி பாதையில் குண்டலினி சக்தியை தொடுவதற்கு மிக அருகினில் இருப்பதனால், இதை குண்டலினி நிலைக்கு முந்தையது, இரண்டாவது தகுதியில் இருப்பது என்று சொன்னாலும், அதுவும் சரியாகத்தான் இருக்கும். காரணம் விசுக்தியை தொட்டபிறகு குண்டலினி சக்தி தான் அடையவேண்டிய இறுதி லட்சியம்.

இந்த சக்கரம் பதினாறு இதழ் கொண்ட அழகிய தாமரை பூ வடிவத்தில் இருக்கிறது. தாமரை வடிவத்தில் இருந்தாலும் இதன் நிறம் செம்மை அல்ல பசுமையாகும். அடர்ந்த நீலம் கரைந்து கரைந்து தனது வடிவத்தை முற்றிலுமாக இழக்கும் போது, பசுமை வடிவத்தில் வருமென்று வண்ண கலவைகளின் தத்துவம் அறிந்தவர்கள் கூறுவார்கள். அடர்ந்த கருமை வண்ண வானம், சூரிய வெளிச்சத்தால் வெளிர் நீலமாகி மனித கண் கொண்டு உற்று பார்க்கும் போது, வெளிர் பச்சை நிறத்தில் தான் தெரியும். அதனால் தான் விசுக்தி சக்கரத்தை ஆகாய ஸ்தானம் என்று யோகிகள் கருதுகிறார்கள்.

இந்த ஆகாய ஸ்தானத்தில் அருள் செய்யும் சக்தியாகிய, அன்னை டாகினி என்பவள் நிறைந்திருக்கிறாள். டாகினி தேவி ஒருமுகம் கொண்டவள். ஆகாயம் பலமுகம் கொண்டது அல்ல. பிரபஞ்ச வெளியில் எங்கிருந்து பார்த்தாலும் ஒரே தன்மை உடையது என்பதை மனதில் வைக்க வேண்டும். இந்த ஆகாய தேவி, பாதிரி பூவின் நிறம் போல வெண்மை கலந்த சிவப்பு வண்ணம் உடையவள். கைகளில் கட்வாங்கம், கத்தி, சூலம் மற்றும்  கேடயம் ஆகிய ஆயுதங்களை தாங்கியவளாக இருக்கிறாள்.

விசுக்தி சக்கரம் பதினாலு இதழ் கொண்ட என்று முதல் பத்தியில் பார்த்தோம். பதினாறு இதழ்கள் என்பது வடமொழியில் உள்ள பதினாறு உயிர் எழுத்துக்களின் வடிவமாகவும் இருக்கிறது ஒவ்வொரு இதழிலும் அம்ருதா, ஆகர்ஷின், இந்த்ராணி, உமா, ஊர்த்வகேசி, ருத்திகா, ஈசானி, ரூகாரா, லுகாரா, லூகாரா, ஏகபாதா, ஐஷ்வர்யாத்மீகா, ஓங்காரா, ஒளஷதி, அம்பிகா, அக்ஷரா என்ற பதினாறு தேவிகள் உயிர் எழுத்தின் துவக்க எழுத்தாக கொண்டு அமர்ந்திருந்து ஆட்சி செய்கிறார்கள்.

இந்த சக்கரத்தில் குண்டலினி சக்தியானது பயணப்பட்டு வருகின்ற போது மனிதனுக்கே உரிய நான், எனது என்ற அகங்காரம் அழிந்து போகிறது. நாலு திசையிலும் கட்டுக்கடங்காமல் ஓடிக் கொண்டே இருக்கும் மனம், சந்திர மண்டலத்தில் உள்ள அமிர்தமான நீர் தடாகத்திற்குள் விழுந்து முற்றிலுமாக கரைந்து, மறைந்து உருவங்கள் அற்ற அருவமான பிரம்மத்தை நோக்கிய தியானத்தில் லயித்து விடுகிறது. இப்படி லயிக்கும் போது, குண்டலினி சக்திக்கு அதீத சக்தி உருவாகி ஒரே பாய்ச்சலில் ஆஞ்ஞை சக்கரத்தில் போய் உட்கார்ந்து விடுகிறது.

ஆஞ்ஞை என்பது ஆறாவது சக்கரம். இதுவே இறுதி சக்கரம். நமது இரண்டு புருவங்களுக்கு நடுவே இரண்டு இதழ் கொண்ட தாமரை பூ போல இது இருக்கிறது. இது அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதின் ஸ்தானமாகும். இங்கு குண்டலினி சக்தி வருகின்ற போது, நிலம், காற்று, நீர், தீ மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களால் உருவான மனது நசிந்து விடுகிறது. எனவே தான் ஆஞ்ஞை சக்கரத்தின் அதிபதியான ஹாகினி தேவிக்கு பஞ்சபூதங்களின் ஐந்து வடிவமும், மனதின் ஒருவடிவமும் சேர்ந்து ஆறு முகங்கள் அமைந்திருக்கிறது.

இந்த தேவி நான்கு கை உடையவளாக இருக்கிறாள். உடுக்கை, அக்ஷமாலை ஞான முத்திரை, கபாலம் ஆகியவைகள் அவள் கைகளிலே இருக்கிறது. இந்த தேவி மனித உடம்பில் உள்ள எலும்புகளில் இருக்கும் மஜ்ஜையில் தனது சக்தியை நிலை நிறுத்துகிறாள். இவளே விசுக்தி முதலாகிய ஐந்து சக்கரங்களின் தலைவி ஆவாள். ஐந்து சக்கரங்களின் செயல்பாட்டையும் ஹாகினி தேவியே முன்னின்று நடத்துகிறாள். ஆஞ்ஞை எனும் ஈரிதழ் தாமரையில், ஒருபக்கம் ஹம்சவதி தேவதையும், இன்னொருபக்கம் ஷமாவதி தேவதையும் பரிவார தேவதைகளாக இருந்து ஹாகினி தேவதைக்கு தொண்டு செய்கிறார்கள்.

சக்கரங்களில் இறுதி சக்கரமாக ஆஞ்ஞை இருந்தாலும், இது குண்டலினி சக்தியின் முடிவான உறைவிடம் அல்ல. அதனால் தான் நமது ஞானிகள் இதற்கு ஆஞ்ஞை என்று பெயரிட்டார்கள். அப்படி என்றால், சிறிது வெளிப்படுதல் என்பது பொருளாகும். அதாவது குண்டலினி சக்தி தான் இன்னார் என்றும், தனது சக்தி இன்னதென்றும் ஒரு சிறிது நேரம் வெளிப்படுத்துவதற்கே இந்த சக்கரம் துணை செய்கிறது. இதை தொட்டுவிட்ட குண்டலினி, மனித முயற்சி இல்லாமலே இறைவனின் கருணையால் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையின் வடிவமான சகஸ்ரத்தை அடைந்து தனது பயணத்தை முடித்து கொள்கிறது.

குண்டலினி சக்தி சகஸ்ரத்தை தொடும் நிகழ்வை வைதீகர்கள் சொர்க்கம் என்கிறார்கள். சித்தர்களும், ஞானிகளும் முக்தி என்கிறார்கள். கெளதம புத்தர், மகாவீரர் போன்ற அவாதார புருஷர்கள் பரிநிர்வாணம் என்கிறார்கள். எந்த பெயரிட்டு அழைத்தாலும், அந்த நிகழ்வு இறைவனும் மனிதனும் ஒரே நேர்கோட்டில் வருகின்ற நிகழ்வாகும். அதாவது எலும்பும், சதையும் கொண்ட மனிதன், நேருக்கு நேராக இறை தரிசனத்தை பெறுகிறான் அல்லது இறைவனை உணர்கிறான் எனவே குண்டலினியின் சகஸ்ர நிகழ்வு விரிவாக பார்க்க கூடியது.

எனவே இறை தரிசனத்தின் முழுமையான இரகசியத்தை உணர்வதற்கு முன்பு, அதை பெறக்கூடிய மனிதனின் தத்துவப்பூர்வமான வாழ்க்கை எப்படி இருக்கும், எப்படி அமையவேண்டும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். எனவே சித்தர்களின் தத்துவங்களுக்கு மத்தியில் சஞ்சாரம் செய்து, அதன்பிறகு சகஸ்ர அனுபவத்தை உணர்ந்து கொள்வதே சரியான மார்க்கமாகும். அதனால், இதுவரையில் அதிகமாக பேசப்படாத சித்தர் தத்துவத்தின் மிக நுட்பமான பகுதிகளை நமது சிற்றறிவு கொண்டு அறிய முயற்சிப்போம்.



Contact Form

Name

Email *

Message *