Store
  Store
  Store
  Store
  Store
  Store

முக்தி தரும் தை பெளர்ணமி !


   தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதத்தில் பெளர்ணமி பிறந்தாலும் நல்ல வழி பிறக்கும் எனலாம். மகர ராசியில் பிரவேசம் செய்த சூரியன், அந்த மாதம் முழுவதும் சந்திரனோடு சூட்சம தொடர்பு கொள்வதாக  கெளசிக நாடி கூறுகிறது. சூரியனோடு ஏற்படுகிற இத்தகைய தொடர்பால், சந்திர கலையில் தை மாதத்தில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. இதனால் மனிதர்களுக்கு என்ன நன்மை என்று நினைப்பது தான் அனைவரின் சுபாவம்.

மனிதர்களுக்கு ஏற்படுகிற நன்மையை பற்றி பிறகு சிந்திக்கலாம். இதனால், பூமிக்கு ஏற்படும் நன்மையை முதலில் சிந்தித்தால் மனிதன் அடையும் நன்மை எத்தகையது என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். நமது இந்திய தேசத்தில் குறிப்பாக, தமிழ்நாட்டில் பங்குனி மாதம் துவங்குகிற கோடைக்காலம், புரட்டாசிக்கு பின்னர் வருகிற மழைக் காலம் மார்கழி மாத குளிர் காலம் எல்லாம் முடிந்து சமமான சீதோஷ்ணநிலை, தை மாதத்தில் தான் நிலவும். இந்த நேரம் நமது தமிழ் பூமியின் மண்ணில் புதிய உயிர்கள் உற்பத்தியாகும். குறிப்பாக உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் மண்புழுக்கள் அதிகமாக உற்பத்தியாகி, நிலத்தின் நாலாபுறத்தையும் நெகிழ்ச்சியடைய செய்யும். இரசாயன கலவைகளால் விஷமாகிப் போன மண்களை கூட உணவாக எடுத்து செரித்து, நல்ல மண்ணாக மாற்றி தருவதில் மண்புழுவின் பங்கு எத்தகையது என்பது நமக்கு தெரியும்.

மரங்களில் குறிப்பாக, அதன் பட்டைகளில் உள்ள உயிர்ச் சத்து சூரிய சக்தியை ஈர்த்து, வேறு பல வீரியம் மிக்க உயிர்ச் சக்திகளை உருவாக்கம் செய்கிறது. இதன் மூலம் மரங்கள், மழையை பூமிக்கு ஈர்ப்பதில் புதிய ஆற்றலை அடைகிறது. இதுவும் தை மாதத்தில் தான் நடக்கிறது. இந்த தை மாதம் எப்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு சுகம் தருகிற மாதமாக இருக்கிறதோ, அதே போல மனிதர்களுக்கு சுகம் தரும் மாதமாக இது இருக்கிறது என்றால் அது மிகை இல்லை. இயற்கை வளமாக இல்லை என்றால், மனிதனின் வாழ்க்கை சூன்யமாகி விடும். மரம், செடி, கொடிகள் என்பது தனியாக சிருஷ்டிக்கப்பட்ட பொருட்கள் அல்ல. ஜீவன் என்ற வட்டத்தில் நடுநாயகமாக இருப்பது இவைகளே ஆகும். இந்த மரங்களுக்கும், மண்ணுக்கும் புதிய ஆற்றலை தை மாதம் தருகிறது. குறிப்பாக தை மாதம் முழு நிலவு அன்று சூரியனிடமிருந்து தான் பெற்ற ஆற்றலை முழுமையாக பூமிக்கு நிலா தருகிறது. அதனால் இந்த பெளர்ணமி தனிச் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லலாம்.

இந்த பெளர்ணமி அன்று, மலை ஏறி மனிதன் சென்றால் அவனது சிந்தனையும் இறைவனது அருளும் ஒரு சேர சந்திக்கும் என்று, முன்னோர்கள் கூறினார்கள். அதனால் தான் இறைவனின் திருக்குமாரனான குமார சுவாமி கொலு வீற்றிருக்கும் பழனி மலைக்கு பக்தர்கள் காவடி எடுத்துச் செல்கிறார்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதனால், தை மாத பெளர்ணமி தைப் பூச விழாவாகவும் கொண்டாடப்பட, மழையின் மீதிருக்கும் இறைவனை துதிக்கும் வழக்கத்தை நம்மவர்கள் செய்து வருகிறார்கள்.

தைப் பூசம் என்பது முருகனுக்கு மட்டும் உகந்த நாள் அல்ல. அம்பிகையின் உச்சி திலகமாக இருக்கின்ற சந்திரன், அன்றைய தினத்தில் சூரிய - சந்திரனாக பிரகாசம் அடைந்து இருப்பதனால், அம்பிகை வழிபாட்டிற்கு ஏற்ற நாளாகவும் இருக்கிறது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் முக்தி அடைந்ததும் தை மாத பெளர்ணமியில் அதாவது தைப் பூச தினத்தில். அதனால் தான் வடலூரில் அன்று தீப வழிபாடு சிறப்போடு நடக்கிறது. தை மாத முழு நிலவில் தீபம் ஏற்றி மலையில் நின்று வழிபட்டால் மனக்கவலைகள் தீரும். அறிவுக்கண் திறக்கும். ஆண்டவனின் திவ்விய தரிசனத்தை பெறலாம். சுருக்கமாக கூறுவது என்றால், நமது பிறவித்தளையை களைந்து முக்தி அடையலாம் என்ற நம்பிக்கை காலங் காலமாக இருந்து வருகிறது. தைப் பூசத்தில் அம்பிகையின் அருளும், அவளது குமரனின் அருளும், பெளர்ணமி நிலாவை போல முழுமையாக கிடைக்கும்.





Contact Form

Name

Email *

Message *