Store
  Store
  Store
  Store
  Store
  Store

உறங்கும் அரசும் ! உறங்காத மக்களும் !


மக்கள்:- வீதியில் வெள்ளம் புகுந்துவிட்டது. வண்டி வாகனங்கள் செல்ல முடியவில்லை. யாராவது விரைவில் வந்து அடைத்து கொண்டிருக்கும் வடிகால்களை திறந்துவிடுங்கள். சீக்கிரம் செய்யுங்கள் இல்லை என்றால் நிலைமை விபரீதமாகிவிடும்.

அரசியல்வாதி:- கண்ணீர் விட்டு வளர்த்த வாழ்க்கை தண்ணீரில் தடுமாறுகிறது. வாக்களித்து பதவி தந்த சாதாரண குடிமகன் சேற்றிலும், சகதியிலும் நடக்கிறான். பதவி பெற்றவர்கள் கால்களில் கூட ஈரம்படாமல் உயரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். இந்த ஆட்சி ஒழிய வேண்டும்.

ஊடகங்கள்:- தெருவில் பெருக்கெடுத்து ஓடும் மழைவெள்ளம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தாலும் ஆச்சரியப்படுதவதற்கு இல்லை. இதுவரை அரசு இயந்திரம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று தெரியவில்லை.

சமூக ஆர்வலர்கள்:- நீர் நிலைகளை ஆக்கிரமித்தால், ஏரிகளை வீடுகளாக மாற்றினால், குளங்களுக்கு பட்டா போட்டுக்கொண்டால் இது தான் நிலைமை. இயற்கையை நாம் பத்து அடி அடித்தால், அது நம்மை ஒரே அடியில் வீழ்த்தி விடும் என்பதை அதிகார வர்க்கமும், பொது ஜனங்களும் மறந்து போய்விட்டார்கள்.

மக்கள்:- ஐயோ வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிட்டது. கெண்டைகால் அளவு வெள்ளம் உயர்ந்துவிட்டது. யாராவது எங்களை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்.

அரசியல்வாதி:- திக்கற்று நிற்கிறார்கள் மக்கள். உயிரை காப்பாற்றி கொள்ள திசை தெரியவில்லை அவர்களுக்கு. ஓட நினைகிறார்கள் ஓடுவதற்கு இடமில்லை. உயரத்தில் ஏற முனைகிறார்கள் அவர்களுக்கு. பள்ளங்களும், படுகுழிகளும் தெரிகிறதே தவிர மீட்சி பெற மார்க்கம் தெரியவில்லை.

ஊடகங்கள்:      வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. மக்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள். இன்னும் அதிகமாக மழை வருமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது. பெரிய அளவில் வெள்ள சேதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

சமூக ஆர்வலர்கள்: இப்படி ஒரு மழை வருமென்று முன்பே கவனித்து, அதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். இப்போது இங்கு நடப்பதை பார்த்தால் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? இல்லையா என்ற சந்தேகம் வருகிறது. இனி வருங்காலங்களில் எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்க வேண்டும்.

மக்கள்:- கழுத்து வரை வெள்ளம் வந்துவிட்டது. சிறு குழந்தைகளை தலைக்கு மேலே தூக்கி பிடித்து கொண்டிருக்கிறோம். வயதானவர்கள் தள்ளாடுகிறார்கள். நோயாளிகள் திணறுகிறார்கள். யாராவது விரைந்து வாருங்கள். எங்களை காப்பாற்றுங்கள்.

அரசியல்வாதி:- அபயக்குரல் அரசு காதில் விழவில்லையா? காப்பாற்றுங்கள் என்று கதறுவது யார் கண்ணிலும் படவில்லையா? கோடி கோடியாக சம்பாதிக்க கூட்டம் கூடினீர்களே! இன்று உங்கள் அக்கறை எங்கே போனது? மக்களின் பிண மேடைகளுக்கு மேல் இன்னொரு ஆட்சியை அமைக்கலாம் என்று கனவு காண்கிறீர்களா?

ஊடகங்கள்:- பல வீடுகள் நீரில் மூழ்கிவிட்டன. பல கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. எங்கும் அழுகை குரல் கேட்கிறது. மருத்துவமனையில் மின்சாரம் இல்லை. ஆபத்தான நோயாளிகள் இறந்து போனார்கள். எங்கும் இருட்டு. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

சமூக ஆர்வலர்கள்:- வெள்ளத்தை தடுப்பதில் நாம் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டோம். இனி தொற்று நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கப் போகிறது. அதிலிருந்து மக்களை மீட்டெடுக்க என்ன திட்டம் இருக்கிறது? யாரதை செய்யப் போகிறார்?

மக்கள்:- தண்ணீரில் என் பெற்றோர்கள் அடித்து செல்ல பட்டு விட்டார்கள். எங்கள் குழந்தைகள் பசியால் துடிக்கின்றன. குளிரால் நடுங்குகின்றன. உண்ண உணவில்லை. உறங்க இடமில்லை நாங்கள் இருப்பது சென்னையா? ஜல சமாதியா? என்பது புரியவில்லை. கடைசி நிமிடமாவது கெஞ்சி கேட்கிறோம். பேசுவதை விட்டு விட்டு எங்களை வந்து யாராவது காப்பாற்றுங்கள். தயவு செய்து காப்பாற்றுங்கள். உயிர் போகிறது. இன்னும் சிறிது நேரத்தில் நாங்கள் அனைவரும் மரித்து விடுவோம் அதற்குள் எங்களை காப்பாற்றுங்கள்.

அரசு (உறக்கத்தில் இருந்து விழித்து சோம்பல் முறித்த வண்ணம் ):- என்ன ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருக்கிறது. யாரோ கத்துகிறார்களே! என்ன சத்தம்? நம் அரசாங்கத்தை பாராட்டி, மக்கள் கூட்டம் நிறைந்து விட்டதா?

Contact Form

Name

Email *

Message *