குருஜி அவர்களுக்கு, நமஸ்காரம். நானும், என் மனைவியும் எழுபது வயதை கடக்கப் போகிறோம். எங்களுக்கு குழந்தைகள் யாரும் கிடையாது. சொல்லி கொள்கிற மாதிரி உறவுகளும் இல்லை. அவளுக்கு நான். எனக்கு அவள் என்று இதுவரை வாழ்ந்து விட்டோம். கையில் சிறிது பணம் இருக்கிறது இதை வைத்துக் கொண்டு புண்ணிய யாத்திரைகளை செய்யலாம் என்று நினைக்கிறோம். எங்களது மிக முக்கிய வருத்தம், நாங்கள் இறந்த பிறகு எங்களுக்கு கொள்ளிப்போடுவது யார்? திதி, சிரார்த்தம் என்று செய்வது யார்? என்பது புரியாமல் தவிக்கிறோம். எங்களுக்கு நாங்களே திதி போன்றவற்றை இப்போதே செய்து கொள்ளலாம் அதாவது ஆத்ம பிண்டம் என்ற வகையில் செய்யலாம் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். அது உண்மையா? அப்படி செய்யலாமா? இந்த முதியவனுக்கு மன ஆறுதல் தரும் நல்ல பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்.
இப்படிக்கு,
தாமோதர பத்மநாபன்,
பம்மல்.
“அஸ்வமேத யாகம்” செய்வது பெரிய புண்ணியம் தருமென்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆயிரம் “அஸ்வமேத யாகம்” செய்பவர்களை இந்திர லோகமே இறங்கி வந்து வரவேற்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மஹாபாரதத்தில் வருகின்ற சந்துனு மகாராஜாவின் வம்சத்தை தோற்றுவித்த நகுஷன் என்ற அரசனே ஆயிரம் அஸ்வமேதா யாகம் செய்ததாக தெரிகிறது. மிகப்பெரும் பொருட்செலவு ஆவதனால் அந்த யாகத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் செய்துவிட முடிவதில்லை.
ஆனால் ஆயிரம் அஸ்வமேதா யாகம் செய்தால் கிடைக்கும் புண்ணியத்தை வேறொரு காரியத்தால் மனிதர்கள் பெற்றுவிடலாம் என்று ஹிந்து தர்ம சாஸ்திரங்கள் தெளிவாக தெரிவிக்கின்றன. அனாதையாக, கேட்பாரற்று இறுதி கிரிகைகள் செய்வதற்கு யாரும் இல்லாமல் தெருவிலே கிடக்கின்ற பிணங்களுக்கு முறைப்படி இறுதி கிரிகைகள் செய்து வைத்தால் அந்த புண்ணியத்தை ஈட்ட முடியுமென்று சாஸ்திரங்கள் உறுதி தருகின்றன.
புனித நாட்களிலும், அமாவாசை மற்றும் தர்ப்பண காலங்களிலும் திதி கொடுப்பவர்கள் தங்கள் குலத்தவர்களுக்கு மட்டுமல்லாமல் அனாதைகளுக்கும் சேர்த்தே தர்ப்பணம் செய்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தர்ப்பண மந்திரத்தின் ஒரு பகுதி வீட்டிலிருந்து காணாமல் போனவர்கள், ஈமச்சடங்கு சரிவர செய்ய இயலாதவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாதவர்கள், மாறுபட்ட சடங்குகளால் அடக்கம் செய்யப்பட்டவர்கள் இவர்களுக்காகவும் தர்ப்பணம் செய்கிறேன் என்று வருகிறது.
எனவே இறுதி காரியம், தர்ப்பணம் போன்றவற்றை சொந்த மக்கள் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. பீஷ்மர் நைஷ்டிக பிரம்மச்சாரி பெண்களின் வாசனை இன்னதென்று அறியாதவர். அவருக்கு குழந்தைகள் இல்லை. ஆனால், பீஷ்ம தர்ப்பணம் என்ற ஒன்றை இன்றுவரை அனைவரும் செய்வதை அறிவீர்கள். அதாவது ஒரு பிள்ளை பெறாதவருக்கு ஊர் முழுவதும், உலகம் முழுவதும் குழந்தைகள் இருக்கிறது என்பது இதன் ஆறுதலான அர்த்தமாகும்.
தனக்கு தானே பிண்டம் வைப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவைகளை சந்நியாசத்திற்கு வருவதற்கு முன்பு தான் செய்ய வேண்டுமே தவிர குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே இத்தகைய காரியங்களை செய்யக்கூடாது என்பது எனது அபிப்ராயமாகும். யாருமே எங்களுக்கு இல்லை என்று ஏன் வீணாக கவலைப்படுகிறீர்கள். உங்கள் அக்கம், பக்கத்து வீடுகளில் நல்லவர்கள், நன்மை செய்ய தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் அவர்களிடம் பாசத்தோடு பழகத் துவங்குங்கள். மகனும், மகளும் செய்யாததை அவர்கள் செய்வார்கள்.
+ comments + 2 comments
திரு. தாமோதர பத்மநாபன் , அவர்களுக்கு ,
அடியேன் இரமேஷ் எழுதும் மடல் , உங்களை எனக்கு தெரியாது ஆனால் உங்களை வாட்டும் எண்ணம் புரிகிறது , அடியேன் முடிந்த உதவி செய்ய காத்திருக்கிறேன் எனது தொலைபேசி எண் 9043875862
Bhramanargal poojai cheyyalam enbatharku Guruji alitha vilakkam miga arumai ippadiku Sridhar Saptharishi