Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆங்கில புத்தாண்டை கொண்டாடலாமா?



   ங்கில புத்தாண்டை கொண்டாடலாமா? அப்படி கொண்டாடுவது இந்திய மரபிற்கு ஏற்றதா? என்ற கேள்விகள் ஒவ்வொரு ஜனவரி மாத பிறப்பின் போதும் சிலர் கேட்கிறார்கள் நமக்கும் அதே போன்ற சந்தேகம் தோன்றிவிடுகிறது. 

காலனி ஆதிக்கம் வேரூன்றி இருந்த காலத்தில் ஆங்கில அரசாங்கத்தின் நடைமுறை நிகழ்வுகளை சரியனானபடி நடத்துவதற்கு அவர்களுக்கு ஐரோப்பிய காலண்டர் மிகவும் அவசியமாக இருந்தது அதற்கு காரணம் அவர்களது ஆட்சி ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆஸ்த்ரேலியா ஆகிய அனைத்து கண்டங்களிலும் பரவி கிடந்தது. 

ஒவ்வொரு கண்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான காலநேர கணக்குகள் பின்பற்றபட்டன அவற்றை அப்படியே பயன்படுத்தினால் ஆட்சி நடத்துவதில் குழப்பங்களும் தேவையில்லாத சிக்கல்களும் உருவாகும். எனவே பூர்வீக மரபுகளை முற்றிலுமாக சிதிலமடைய செய்துவிட்டு ஆங்கில மரபை கொண்டுவந்து விட்டால் பிரச்சனை தீர்ந்தது என்று கருதிய காலனி ஆதிக்க அரசு ஆங்கில வருட பிறப்பை உலகம் முழுவதும் நடைமுறை படுத்தி அதை காலனி மக்கள் மறுப்பேதும் சொல்லாமல் ஏற்று கொள்வதற்கு கல்வி மற்றும் கலாச்சாரத்தை நன்கு பயன்படுத்தி கொண்டன. அதன் விளைவு தான் இன்றைய கொண்டாட்டத்தின் வளர்ச்சி என்பது. இந்த உண்மையை எவரும் மறுப்பதற்கு இல்லை. 

பிரிட்டிஸ்க்காரன் தனது தேவைக்காக கொண்டுவந்த ஒரு நடைமுறையை அவன் போன பிறகும் நாம் ஏன் பயன்படுத்த வேண்டும். நமக்கென்று சொந்த மரபுகள் இருக்கின்றன அதன் சிறப்புகள் இருக்கின்றன அதை நமது தலைமுறையினருக்கு காட்டாமல் நம்மை அடிமையாக வைத்திருந்த அவல சின்னங்களை ஏன் காட்டவேண்டும் அதை ஒழித்து கட்டுவது தானே முறை என்று ஒரு சாரார் கேட்கிறார்கள். இதிலும் நியாயம் இல்லை என்று சொல்ல முடியாது. 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னால் சர்வ தேசத்து வணிகம் இருக்கிறது. பல லட்சம் கோடி டாலர்கள் இந்த வணிகத்தில் உருண்டு புரண்டு விளையாடுகிறது ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கேளிக்கைகளை எந்தளவு உயர்த்தி பிடிக்கிறோமோ அந்தளவு லாபத்தின் எண்ணிக்கை கூடும். இந்த நிலையில் மரபு பண்பாடு என்று பேசுபவர்கள் அனைவரும் பிற்போக்கு வாதிகள் பழமை வாதிகள் என்று பார்க்க படுவார்களே தவிர அவர்கள் பக்கத்திய நியாய தர்மங்கள் வெளியில் வராது. என்றும் சிலரும் கருதுகிறார்கள். 

இதில் வணிகம் அரசியல் என்பதெல்லாம் இருந்தாலும் கூட மதவெறி தன்மை தான் அதிகமாக இருக்கிறது . புத்தாண்டு என்பது கிருஸ்தவர்களால் கொண்டாடபடுகிற மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிருஸ்தவத்தை தாக்க வேண்டும் அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடவேண்டும் என்று நினைப்பவர்கள் கொடி உயர்த்துகிறார்களே தவிர மற்றவர்கள் கவலைபடாமல் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள் என்று கிருஸ்துவர்களில் சிலர் கூறுகிறார்கள் 

புத்தாண்டு பண்டிகை என்பது கிருஸ்துவர்களின் பண்டிகை என்பதெல்லாம் பழைய கதை வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போல வெளியிலிருந்து வந்த பண்டிகையாக இருந்தாலும் கூட அதை அரவணைத்து வரவேற்று போற்றி பாதுகாப்பதில் இந்து மதமும் இந்து மக்களும் முன்னணியில் இருகிறார்கள் கிருத்துவ தேவலையங்களில் நடக்கின்ற சிறப்பு பிரார்த்தனைகளை விட இந்து ஆலயங்களில் நடக்கின்ற பூஜைகளும் அபிசேக ஆராதனைகளும் அதிகம். எனவே இதை மத நோக்கத்தோடு பார்ப்பது முட்டாள் தனமானது என்றும் கூறபடுகிறது. 

சித்திரை மாதம் என்பது வசந்த காலத்தின் ஆரம்ப காலம் மரங்கள் இலைகளை உதிர்த்து புதிய இலைகளை போர்த்தி கொள்வதும் இயற்கை முழுவதும் புதிய பரிணாமத்தை நோக்கி ஓரடி முன்னேறுவதும் வானியல் கணக்குப்படி சூரியன் உச்சம் அடைவதும் சித்திரை மாதத்தில் தான் எனவே அதை வருடத்தில் முதல் நாளாக கொண்டாடுவதில் சிறப்பு இருக்கிறது. சரியான காரணமும் இருக்கிறது. அதை விட்டு விட்டு ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது வரலாற்றுப்படி குருட்டு தனமானது என்ற கருத்தும் ஆங்காங்கே நடமாடுகிறது. 

ஆங்கில மாதங்கள் அனைத்துமே விஞ்ஞானப்படி உருவானது அல்ல சில அரசர்கள் தங்களது பெயர்களை புத்திசாலி தனமாக மாதத்தின் பெயர்களாக சூட்டி விட்டார்கள் உதாரணமாக சொல்வது என்றால் ஜீலியட் சீசர் என்பவர் பெயர் தான் ஜூலை மாதம் ஆனது அகஸ்டஸ் என்றவர் பெயர் ஆகஸ்ட் மாதமானது இப்படி போப் ஆண்டவர்களின் பெயர்களும் மாதத்தின் பெயர்களாக ஆனதே தவிர இவைகளுக்கு அறிவு சார்ந்த பின்னணி எதுவும் கிடையாது. 

கிரகங்களின் நகர்வு குறிப்பாக சந்திரனின் இடப்பெயர்ச்சி போன்றவற்றை துல்லியமாக கணக்கிட்டு உருவானது தான் உண்மையான காலண்டராக இருக்க முடியும். ஆங்கில காலண்டர் என்பது சொந்த மூளையில் உருவானது அல்ல மாயன்களின் காலகணிதத்தை திருடி அதில் சில மாற்றங்களை செய்து உருவாக்கப்பட்டது தான் இந்த காலண்டர். இதில் சில நாட்களை சேர்த்ததும் சில நாட்களை தேவை இல்லை என்று வெட்டி எறிந்ததும் அறிஞர்கள் அல்ல அரசர்களும் போப் ஆண்டவர்களும். எனவே சிறிது கூட ஆழ்ந்த சிந்தனை இல்லாத காலண்டர் முறையை தூக்கி எறிந்துவிட்டு பாரம்பரியமான முறைகளுக்கு செல்வது தான் சரியானது என்று அறிகர்கள் சிலரும் கருதுகிறார்கள். 

இப்படி எத்தனையோ கருத்துக்கள் ஆங்கில வருட பிறப்பை பற்றி இருக்கிறது. இதில் எதை ஏற்பது எதை ஏற்காமல் இருப்பது என்ற முடிவிற்கு நம்மை போன்ற சாதாரண மக்களால் வரமுடியவில்லை எல்லோருடைய கருத்துக்களும் நம் அறிவுக்கு சரியாகத்தான் படுகிறது. இதில் எதையாவது ஒன்றை நம்புவதோ அல்லது புதியதாக ஒன்றை உருவாக்குவதோ நம் அறிவிற்கு அப்பாற்பட்டதாக தெரிகிறது. 

எந்த கருத்துக்கள் எப்படி இருந்தாலும் அதை பற்றியெல்லாம் கவலை படாமல் நமது மக்கள் ஆலயங்களில் காத்திருந்து புதுவருடத்தில் இறை தரிசனத்தை பெற கூட்டம் கூட்டமாக செல்ல போவதை யாராலும் தடுக்க முடியாது. நகை கடை, ஜவுளிக்கடை, சினிமா கொட்டகை, கடற்கரை போன்ற இடங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்தவும் முடியாது. எந்த வசதியும் இல்லாத கிராம புறங்களில் கூட புதுவருஷம் அன்றைக்கு மட்டுமாவது பாயசம் வடையோடு சமையல் செய்ய வேண்டும் என்று ஆசைபடாமல் இருக்கும் அன்னையர்கள் கிடையாது. 

நல்லதோ கெட்டதோ ஆங்கில வழி காலகணக்கை தான் இன்று உலக முழுவதும் அனைவரும் பின்பற்றுகிறார்கள் அதை விட்டு விட்டு புதிய பாதையில் நாம் சென்றால் உலகத்திலிருந்து நாம் அந்நிய பட்டுவிடுவது போல் தோன்றும். இந்த விஷயத்தில் ஜப்பான் சீனா கொரியா போன்ற நாடுகளின் செயல்பாட்டை நாம் பின்பற்றலாம் என்று நினைக்கிறன். அவர்கள் தங்களது சொந்த காலண்டர்படி உள்ள வருட பிறப்பையும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள் ஆங்கில வருட பிறப்பையும் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள் நாமும் அப்படி செய்யலாமே? 

நம் ஊரில் சித்திரை ஒன்றாம் தேதியை சீந்துவார் யாருமில்லை ஏதோ நாலு பழைய பஞ்சாங்கங்கள் ஒன்று சேர்ந்து டிவியில் பட்டிமன்றம் பார்த்து பரவசபடுவதோடு சரி வேறு எந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களை ஆங்கில புத்தாண்டை போல் கொண்டாடுவது கிடையாது. எனவே ஜனவரி ஒன்றை போதையோடு கொண்டாடுவதை நிறுத்தி விட்டு ஏதாவது உருப்படியான காரணத்தோடு கொண்டாடும் நாளாக கொண்டுவந்து விட்டு நம்ம சொந்த புத்தாண்டு தினத்தையும் கொண்டாடுவதற்கு முயற்சி செய்தால் நன்றாக இருக்கும். 

அதை விட்டு விட்டு வீண் விவாதங்களில் கால நேரத்தை செலவழிப்பது சரியல்ல என்பது என் சொந்த கருத்து. இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இவ்வளவு பேசுகிற நான் எந்த புத்தாண்டையும் கொண்டாடுவது கிடையாது காரணம் இறைவன் படைப்பில் எந்த நாளும் முதல் நாளும் அல்ல இறுதி நாளும் அல்ல. துவக்கம் என்று வந்துவிட்டால் முடிவு என்பது உண்டு. காலமும் கடவுளும் துவக்கம் இல்லாத ஒன்றாகும். மேலும் நாம் வாழ்வதற்கு இறைவன் கொடுத்திருக்கின்ற காலம் ஒவ்வொன்றுமே புத்தாண்டு போல கொண்டாடப்பட்ட வேண்டிய நாட்களாகும். அதில் ஒருநாளை மட்டும் கொண்டாடிவிட்டு மற்ற நாட்களை கொண்டாடாமல் இருப்பது சிறப்பானது அல்ல.

இருந்தாலும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது சரியான மரபாக இருக்காது. எனவே ஆங்கில புத்தாண்டை கொண்டாடுபவர்களுக்கும் கொண்டாடதவர்களுக்கும் சர்வ வல்லமை பொருந்திய இறைவனான வாசுதேவ கிருஷ்ணன் பரிபூரண அருளாசி தர வேண்டி விரும்பி பிராத்தனை செய்து வாழ்த்துகிறேன். ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.



Contact Form

Name

Email *

Message *