Store
  Store
  Store
  Store
  Store
  Store

நான் வயசுக்கு வந்துட்டேன் .....!


கதை

வானத்தில் நிலா காய்கிறது..

துளிகூட மேகமில்லை. நிலவின் வெளிச்சம் நீலப் புடவையில் மஞ்சள் தெளித்தது போல கவர்ந்து இழுக்கிறது.

மாதம் ஐப்பசி. மழைக்கான சாரலும் இதமான காற்றும் வீசிக்கொண்டிருக்கிறது. மனம் குறுகுறுக்கிறது. மொட்டை மாடியில் மல்லாக்கா படுத்து நிலவை ரசிக்க வேண்டும். வானத்தை வருடிப் பார்க்க முயல வேண்டும் இப்படி எத்தனையோ எண்ணங்கள் இதயத்தில் பற்றி எரிய மாடிப் படியில் ஏறப்போனேன்.

நான் என்ன செய்யப் போனாலும் இப்போது எல்லாம் அம்மாவிற்கு மூக்கு வியர்த்து விடுகிறது. எப்படியாவது கண்டுபிடித்து விடுகிறார். சூனியக்கார கிழவி கதாநாயக இளவரசனை மந்திரக்கோலால் தடுப்பது போல் எதிரே வந்து நின்றுவிடுகிறாள். 

இப்போதும் அப்படித்தான்.. இடுப்பில் கைவைத்து கண்களை விரித்து எங்கடி போகிற? இந்த நேரத்துல? என்று கேட்டாள்... சும்மா கொஞ்ச நேரம் மாடியில உக்காந்துட்டு வரப்போரம்மா என்றேன் நான். 

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். ரோட்டுல காவாலி பசங்க நடமாடுகிறாங்க. உங்க அப்பன் வேற கடைத்தெருவுல வீட்ட கட்டி விட்டான். நீ மாடில நின்னால் எல்லோரும் பாப்பானுங்க. சும்மா உள்ளயே கிடந்து டிவி பாரு என்றாள் அம்மா.

எனக்கு கோபமாக வந்தது. இந்த அம்மாவுக்கு என்ன வந்தது? போன பத்துநாள் முன்பு வரை நல்லா தானே இருந்தா? இப்போது அவளுக்கு பேய் பிடித்துவிட்டதா என்ன? இங்கே போகாதே அங்கே நிக்காதே அவுங்களோடு பேசாதே என்று ஏகப்பட்ட கண்டிசன் போடுறாளே.. என்ன ஆச்சி இவளுக்கு? நினைக்க நினைக்க குழப்பமாகவும் இருந்தது அழுகையும் வந்தது. 

என்ன பெரிய தவறு செய்துவிட்டேன்? எதற்காக என்னை இப்படி பாடாய் படுத்துகிறாள்? ஒன்றுமே புரியவில்லை. நான் எப்போதுமே அப்பா பொண்ணு. எனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும். எங்க அப்பா பார்ப்பதற்கு கம்பீரமா அழகா இருப்பார். பெரிய அறிவாளி. என்ன கேட்டாலும் சரியா பதில் சொல்வார். நான் கேட்பதை எல்லாம் வாங்கித் தருவார். என்ன செல்லக் குட்டி என்று கொஞ்சி மகிழ்வார். 

ராத்திரி ஆச்சின்னா அவர் மேல காலைப் போட்டுக்கொண்டு தூங்கவில்லை என்றால் தூக்கம் வராது. அப்பா என்னை மார்போடு அணைத்துக் கொண்டு முதுகில் தட்டிக்கொடுத்து கதை சொல்வார். கதையை கேட்டபடியே தூங்கிப் போவேன். நான் நன்றாக உறங்குகிறேனா? என்று பார்த்துவிட்டு வேறு படுக்கையில் என்னைப் படுக்க வைத்த பிறகு தான் அவர் உறங்குவார். 

அப்படித்தான் அன்றும் வழக்கமாக உறங்கப் போனேன். இனி நீ அப்பா கூட படுக்கக் கூடாது. தனியா போய் படு என்று அம்மா சொன்னாள். அப்பாவும் அதை ஆமோதிப்பது போல மெளனமாக இருந்தார். எனக்கு அழுகை தாங்கவில்லை. அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்?  ஒன்றும் புரியவில்லை. 

அன்று காலையிலிருந்தே எனக்கு உடம்பு ஒரு மாதிரியா முருகலா இருந்தது. உடம்பிற்குள் சாத்தான் புகுந்தது போல ஒரு பரபரப்பு இருந்தது. அடிவயிறு கனமாகவும் எதோ ஒன்று வெளியில் வர துடிப்பது போலவும் இருந்தது. பள்ளிக்கூடம் போகவேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் அன்று முக்கியமான பாடம். போகவில்லை என்றால் டீச்சர் திட்டுவா.. வேறு வழி இல்லாமல் போனேன். 

மதியத்தில் வயிற்று வலி தாங்க முடியவில்லை. அடிவயிற்றை முறுக்கி எடுத்தது போல வலி. அப்படி ஒரு வலியை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை. அட கடவுளே.. எனக்கு எதற்கு இப்படி வலியைத் தருகிறார் என்று அவரைத் திட்டினேன். உடனே என் வலியை நிறுத்தும் படியும் வேண்டினேன். என் பிரார்த்தனைகளை, வேண்டுதலை கடவுள் கேட்கவே இல்லை. வலியும் நிற்கவே இல்லை.

சிறிது நேரத்தில் இரண்டு தொடைகளும் ஈரமாவது போல இருந்தது. வகுப்பில் என்னால் உட்கார முடியவில்லை. பாம்பு நெளிவது போல நெளிந்து கொண்டே இருந்தேன். மஞ்சுளா இதை கவனித்து விட்டாள். ஏண்டி இப்படி நெளியிற என்று கேட்டாள்? அவளிடம் விஷயத்தை சொன்னேன்.

அவள் எதையோ புரிந்து கொண்டது போல நமட்டு சிரிப்பு சிரித்தாள். பிறகு டீச்சரிடம் சென்று காதுகளில் எதையோ கிசுகிசுத்தாள். டீச்சர் என்னை பாத்ரூமுக்கு அழைத்துச் செல்லும் படி சொன்னார். மஞ்சுளா தான் என்னைக் கூட்டிப் போனாள். அதற்குள் வீட்டுக்குத் தகவல் சொல்லப்பட்டு அம்மா அவசர அவசரமாக வந்தாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது எனக்கு? மஞ்சுளா என் காதுகளில் சொன்னாள், நீ வயசுக்கு வந்துட்ட. பெரிய மனுஷியாயிட்டே என்றாள். 

அரைமணி நேரத்தில் எப்படி நான் வயதுக்கு வரமுடியும்? எப்படி பெரிய மனுஷியாக முடியும்?  கையும் காலும் வளரவில்லை. உடம்பு கூட குட்டையாகத் தான் இருக்கு. பிறகு என்னை பெரிய  மனுஷி என்றால் எப்படி நம்புவது? 

அம்மா வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள். தனியாக ஒரு மூலையில் உட்காரச் சொன்னாள். ஏன்? நான் ஹாலில் உட்காரக் கூடாதா?  என்று கேட்டதற்கு தலையில் கொட்டினாள். மண்டு.. பேசாம இரு என்றாள். வேறு வழியில்லை மூலையில் விரித்த போர்வையின் மீது உட்கார்ந்தேன். இப்போது வலி கொஞ்சம் குறைந்திருந்தது. 

அம்மா என்னைத் தனியே கூட்டிப் போய் என் இடுப்பை துணிகளால் சுற்றினாள். என்னென்னவோ செய்தாள். எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. ஒன்றும் புரியவில்லை. மீண்டும் என்னை அழைத்து வந்து மூலையில் உட்கார வைத்து விட்டாள். அசதியாக இருந்தது. அப்படியே உறங்கிப் போனேன். 

விழித்துப் பார்த்தால் எங்கள் காலனியில் இருக்கின்ற எல்லாப் பெண்களும் இங்கே தான் இருந்தார்கள். எல்லோரும் என்னைப் பார்த்து குறும்பாக சிரித்தார்கள். எனக்கு அவர்களைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. நான் என்ன தவறு செய்துவிட்டேன். எதற்காக இப்படி இவர்கள் என்னைச் சுற்றி இருக்கிறார்கள்? இவர்களுக்கு வேறு வேலை இல்லையா?  என்று தோன்றியது. 

அன்று மாலையே என்னை வீட்டுக்கு அழைத்தார்கள். வீட்டுக்கு அழைப்பது என்றவுடன் எனக்கு தமாசாக இருந்தது. நான் வீட்டில் தானே இருக்கிறேன். பிறகு எதற்காக என்னை வீட்டுக்கு அழைப்பதாகக் கூறுகிறார்கள்? என்ன உலகமோ இது? சுத்த முட்டாள் தனமாக எனக்குப் பட்டது. 

ஆனால் சும்மா சொல்லக் கூடாது. இந்தப் பத்து நாளும் அம்மா என்னை விழுந்து விழுந்து கவனித்தாள். ஆனால் காலையில் மட்டும் நல்லெண்ணையில் எதையோ கலக்கி குடிக்கச் சொன்னாள். குமட்டிக் கொண்டு வந்தது. அப்பா, எனக்கு புது பாவாடை சட்டை எல்லாம் எடுத்தார். புடவை கூட எடுத்தார். ஐயையோ புடவை கட்டுகிற அளவிற்கு நான் வளர்ந்து விட்டேனா? இனி நான் அம்மாவைப் போல் புடவை கட்டிக்கொண்டு தான் திரிய வேண்டுமா?  பயமாகவும் வெக்கமாகவும் இருந்தது. 

உறவினர்களுக்கெல்லாம் அப்பா மஞ்சள் பூசி அழைப்பிதழ் அனுப்பினார். திருமண மண்டபம் ஒன்றில் என்னை உட்கார வைத்து ஏதேதோ செய்தார்கள். சந்தனம் பூசுவதும் பொட்டு வைப்பதும் திருஷ்டி சுத்தி போடுவதும் என்று ஏகப்பட்ட ரகளை. சொந்தக்காரங்க எல்லோரும் வந்திருந்தார்கள். நல்ல சாப்பாடு.. எனக்குப் பிடித்தமான மோர் மிளகாய் கூட சாப்பாட்டில் இருந்தது. நிறையப் பேர் பரிசு தந்தார்கள். காசும் கொடுத்தார்கள். ஆனால் கடைசி வரையில் இதுவெல்லாம் எதற்காக என்றே எனக்குப் புரியவில்லை. 

இப்போது அம்மாவிடம் கெஞ்சினேன். அம்மா! அம்மா!! மாடியிலே போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்திட்டு வருகிறேன் என்று அழாத குறையாகக் கேட்டேன். அம்மாவுக்கும் மனசு உண்டு தானே?  என் அம்மா ரொம்ப நல்லவ.. என் மேல சின்ன காயம் பட்டால் கூட அவளால் தாங்க முடியாது. நான் உடம்பு சரியில்லாமல் படுத்துவிட்டால் ராத்திரி முழுக்க தூங்க மாட்டாள். என் பக்கத்திலே உட்கார்ந்து மருந்து தேய்ப்பதும், ஒத்தடம் கொடுப்பதும், உடம்பைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பதும் என்று இருப்பாள். 

நான் சுகமாகி விட்டால் மூச்சுத் திணறத் திணற என்னைக் கட்டிபிடித்து கன்னத்தில் முத்தமிடுவாள். என் அம்மாவிடம் முத்தம் வாங்குவதே ஒரு தனி சுகம். அம்மாவுடைய பஞ்சு மாதிரியான உதடுகள் என் கன்னத்தில் படும் போது எனக்கு வானத்தில் பறப்பது போல இருக்கும். நான் பிறக்கும் முன்பு இருந்த சுகம் கதகதப்பு அப்போது தெரியும். அம்மாவின் முத்தத்திற்காகவே நான் பல நாள் ஏங்குவேன் .

சரி போயிட்டு சீக்கிரம் வந்திடு என்று அம்மா அனுமதி கொடுத்தாள். எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. மாடிப்படியில் கிடுகிடுவென்று ஏறினேன். மொட்டை மாடிக்கு வந்த பிறகு, பறந்து விரிந்த நீல வானம் என்னை வா வா என்று அழைத்து அணைத்துக் கொள்வது போல இருந்தது. அடடா இந்த வானம் என்ன அழகு இந்த அழகுக்கு இணையான அழகு உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. 

கண்ணை சிமிட்டும் நட்சத்திரங்களும், இளவரசி மாதிரி பவனி வருகிற வட்ட நிலாவும், தாத்தாவின் நரைமுடி தலையைப் போன்ற பஞ்சு மேகங்களும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே வராது. எனக்கு வானத்தின் அழகை அறிமுகம் செய்தவர் என் அப்பா தான். அவர் நிறைய கவிதைகளை படிப்பார். கவிஞர்களை ரசிப்பார். தான் படித்தவற்றை எனக்கு புரிவது போல அழகாக விளக்குவார். 

அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு பொக்கிசங்கள் போல. அவர் சொல்வதிலுள்ள கற்பனையை வைத்து நான் சொப்பன உலகத்தில் நேரம் போவதே தெரியாமல் சஞ்சாரம் செய்வேன். அப்படி நான் சஞ்சாரம் செய்வது, பல நேரம் வானத்தில் தான். யாருக்கும் இல்லாத மோகம் எனக்கு இந்த வானத்தின் மீது எப்படி வந்தது? புரியவே இல்லை. அதைத் தொட்டுப் பார்க்க முடியாத தூரத்தில் இருப்பதாலா? அல்லது நான் திரும்பும் திசையெல்லாம் என் கண்களுக்குள் அகப்படுகிறதே அதற்காகவா?  இருக்கலாம். ஆனால் இதற்கான விடையை ஒருநாள் நானே கண்டுபிடிப்பேன். 

மொட்டை மாடியின் கைப்பிடி சுவரை பிடித்துக் கொண்டு கீழே தெருவைப் பார்த்தேன். தெரிந்தவர் தெரியாதவர் என்று நிறைய பேர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். எதிர்த்த வீட்டு ராஜூ, இடுப்பில் கையை ஊன்றிக் கொண்டு நின்று கொண்டிருந்தான். அவனுக்கு எப்போதும் தன்னை சினிமா நடிகரைப் போல் காட்டிக்கொள்ள வேண்டுமென்று ஆசை. வித விதமான கலர்களில் ஆடை அணிவான். தலையையும் அதைப் போல் வாரிக்கொள்வான். பார்ப்பதற்கு தமாசாக இருக்கும். நானும் மஞ்சுளாவும் அவனைப் பற்றி எங்களுக்குள் பேசி சிரித்துக் கொள்வோம். 

என்னை விட இரண்டு வகுப்பு அதிகமாக படித்துக் கொண்டிருந்தான் ராஜூ. ஏனோ எனக்கு அவனைப் பிடிப்பதில்லை. அவன் பேசுவதும் சிரிப்பதும் பெண் பிள்ளைகள் என்றால் அவர்கள் மார்பையே முறைத்துப் பார்ப்பதும் எனக்கு சுத்தமாகப் பிடிப்பது கிடையாது. இவன் என்ன மனுஷன்? நாங்களும் அவனைப் போல அம்மாவின் பிள்ளைகள் தானே? எங்களுக்கு மட்டும் விஷேசமாகவா கையும் காலும் முளைத்து இருக்கிறது. பிறகு எதற்கு பொம்பள பசங்களயே இவன் தேடி ஓடுகிறான் என்று பட்டது. 

ராஜூ எதேச்சையாக தலை நிமிர்ந்தவன் மாடியில் என்னைப் பார்த்து விட்டான் என்று நினைக்கிறேன். தலையைக் கோதி விட்டுக் கொண்டான். நன்றாக வெளிச்சம் படும்படி போய் நின்றான். இப்போது அவன் முகத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எங்கள் வீட்டு டாமிக்கு அம்மா முட்டை சமைத்துப் போடும் போது அது முட்டை சாதத்தை எப்படி பார்க்குமோ அப்படி ராஜூ என்னைப் பார்த்தான். என் அடிவயிற்றுக்குள் என்னவோ போலிருந்தது. 

என்னைப் பார்த்து சிரித்தான். அவன் சிரித்த சிரிப்பு அருவருப்பாக இருந்தது. சிரித்ததோடு அவன் நிற்கவில்லை. கைகளை அசைத்து, கீழே வா என்று என்னைக் கூப்பிட்டான். எப்போதுமே வராத கோபம் அப்போது எனக்கு வந்தது. அவனை காரித் துப்ப வேண்டும் என்று தோன்றியது. அதற்கு நான் தொண்டை இருமிய நேரத்தில் அவன் விரல்களை மடித்து ஒரு புதிய அபிநயம் பிடிப்பது போல எனக்கு ஜாடை காட்டினான். 

அந்த ஜாடை விசித்திரமாக இருந்தது. அதன் மூலம் அவன் என்ன சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. ஆனாலும் அதை அவன் இன்னொரு முறை செய்யமாட்டானா என்று தோன்றியது. நான் நினைத்தது அவனக்கு எப்படி தெரிந்ததோ தெரியவில்லை. மீண்டும் அதைப் போலவே செய்தான். எனக்கு சிரிப்பு வந்தது. சிரித்தேன். என் சிரிப்பு அவனுக்கு தைரியத்தை கொடுத்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து இன்னும் என்னென்னவோ ஜாடை செய்தான்.

எனக்கு அதை தவிர்க்க தோன்றவில்லை. அவன் செயலிலிருந்த கோமாளித்தனமோ அல்லது அழகோ புரியவில்லை, மீண்டும் மீண்டும் அதைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதை நான் செய்தேன். அவன் தேன் குடித்த குரங்கு கூத்தாடுவதைப் போல ஆகிவிட்டான். தான் பெரிய மனுஷன் என்பதை காட்டுவதற்கோ என்னவோ பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்து என்னைப் பார்த்து புகையை விட்டான். 

சட்டென்று அவனைப் பார்க்கும் போது வருகின்ற அருவெறுப்பு இப்போது வந்துவிட்டது. அடச்சீ..! இவனைப் போய் ரசித்தோமே என்று தோன்றியது. பத்து நாளைக்கு முன்பு யாரையும் நான் இப்படி ரசித்தது இல்லை. இப்போது ரசிக்கும் எண்ணம் எப்படி எனக்குள் வந்தது? யார் அதைக் கொண்டு வந்தார். இது தான் நான் வயதுக்கு வந்ததின் அடையாளமோ?  என்று தோன்றியது. 

அப்பா என்னிடம் அடிக்கடி சொல்வது ஞாபகத்திற்கு வந்தது. நீ சின்னப் பொண்ணு. இந்த உலகம் எப்படின்னு வளர வளரத்தான் கத்துக்க முடியும். ஏன் உன்னைப் பற்றியே நீ பல புதிய விஷயங்களை, வளரும் போது தான் தெரிந்து கொள்வாய். எதையும் தெரிந்து கொள்ள ஆசைப்படு. ஆனால் அந்த ஆசையில் ஒருபோதும் மூழ்கி விடாதே என்பார். 

அவர் சொன்னது சரிதான். ஆசையில் மூழ்கினால் இப்படித்தான். நம் நிலையை மறந்து போவோம். அம்மா கூட, நீ வயதுக்கு வந்தவள். முன்பு போல இருக்கக் கூடாது. யார் கிட்டையும் நெருக்கமா போகக் கூடாது என்று சொன்னது தப்பு இல்லை என்று பட்டது. 

ஒரே ஒரு வினாடியில் தடுமாறுகிற மனது தொடர்ந்து தாக்கப்பட்டால் தடுமாறாமல் என்ன செய்யும்? அதனால் தான் அப்பாவும் அம்மாவும் எனக்கு வேலி போடுகிறார்கள். அது தெரியாமல் நான் அவர்களை வெறுக்கிறேன். என் சுதந்திரத்தை அவர்கள் பறிப்பதாக நினைக்கிறேன். அது எவ்வளவு பெரிய தப்பு என்று இப்போது எனக்குப் புரிந்தது. அதனால் அம்மா சொன்னது போல உடனே மாடியை விட்டு கீழே இறங்கலானேன்....







Contact Form

Name

Email *

Message *