Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுளே அறியவே பிறந்தோம் !



சொற்பொழிவு தொடர் 21


ன்பார்ந்தவர்களுக்கு, வணக்கம்.. 

இதுவரை நமது சொற்பொழிவில் பழங்கால ஞானிகள் கடவுளைப் பற்றி கொண்டிருந்த கருத்துக்கள் சிலவற்றை பார்த்தோம். பெரிய ரிஷிகள் முனிவர்கள் என்பவர்கள் எல்லாம் கூட கடவுளை நம்புவதில், கடவுளை பற்றிய இருப்பு விஷயத்தில் சந்தேகங்களையும் குழப்பங்களையும் அவநம்பிக்கைகளையும் வெளிப்படுத்தியவர்களாக இருந்திருக்கிறார்கள். 

பொதுவாக ஆதிகால முனிவர்கள் என்பவர்கள் தெய்வத்தை நம்புபவர்களாக, தெய்வத்தின் மீது அதீத பக்தி கொண்டு தெய்வத்தையே சரணாகதி அடைவதற்கு தவம் செய்பவர்களாக நம்மால் நம்பப்பட்டு வந்திருக்கிறது. அப்படிப்பட்ட முனிவர்களே, அதுவும் குறிப்பாக இந்து மதத்தின் ஆதார தூண்களான கருத்துக்களை உருவாக்கிய முனி சிறேஷ்டர்களே கடவுளைப் பற்றி இத்தகைய கேள்விகள் கேட்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். 

கடவுள் என்பது வெறும் நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட கருத்துரு அல்ல. கண்களுக்கு தெரிவதில்லை. புலன்களுக்கு அகப்படவில்லை என்பதனால் வெறும் வார்த்தை ஜாலங்களால் செதுக்கப்பட்ட சிலையும் அல்ல. கடவுள் என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. அறிவின் துணை கொண்டு ஆராயத்தக்கது. அறிவாலும் அனுபவத்தாலும் உணரத்தக்கது. அத்தகைய கடவுளை நம்பிக்கை என்ற ஒரே ஒரு அளவு கோலை வைத்துக்கொண்டு முடிவு செய்துவிட முடியாது. 

விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையில் சிந்திப்பதற்கு, ஆராய்வதற்கு பல கருவிகள் உருவாக்கப்பட்ட நிலையில் எத்தனையோ விதமான பரிணாமங்களை மனித அறிவு பெற்றுவிட்ட நிலையில், கடவுளைப் பற்றிய வாதங்களும் விவாதங்களும் இருப்பது இயற்கை. ஆனால் இயற்கையை மட்டுமே துணையாகக் கொண்டு மனிதன் வாழ்ந்த காலத்திலேயே அவனது சிந்தனை ஒரு வானத்தின் அளவு விரிந்திருப்பதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். 

இந்த சொற்பொழிவை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு அடிப்படையான ஒரு குழப்பம் வரும். நமது ஞானிகள் நிஜமாகவே கடவுள் இருக்கிறார் என்கிறார்களா? அல்லது இல்லை என்கிறார்களா? என்பது தான் அந்தக் குழப்பம். முனிவர்களின் கருத்துக்களை வகை வகையாகப் பிரித்துக் காட்டுகிற நீ.. அதாவது நான்.. கடவுளைப் பற்றி இறுதியாகக் கொண்டிருக்கின்ற முடிவுகள் தான் என்ன என்பதையும் கேட்கத் தோன்றும். அந்தக் கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்லவேண்டிய கடமை நிச்சயம் எனக்கிருக்கிறது. 

நமது ஆதிகால ரிஷிகள் பெரிய அறிவாளிகள். கடவுள் என்ற ஒரு தத்துவம் விஞ்ஞான அடிப்படையில் எப்படியெல்லாம் பார்க்கப்பட வேண்டும் என்பதை நமக்கு காட்டுவதற்காகவே கடவுள் தேவையா? கடவுளின் அவசியம் உண்டா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு பதிலை சொல்லி, நமது எண்ணங்களையும் அறிவுகளையும் விருத்தி அடையச் செய்தார்கள். 

கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்று நேற்று தோன்றிய கேள்வி அல்ல. மனிதன், என்று மனிதனாக படைக்கப்பட்டானோ அன்றே தோன்றிய கேள்வி இதுவாகும். மின்னல் வெட்டுகிறது.. இடி இடிக்கிறது.. மழை பொழிகிறது.. நெருப்பு சுடுகிறது.. இவற்றிற்கெல்லாம் காரணம் யார்? இவைகளை இயக்குவது யார்? என்றே கேள்விகளை கேட்டு அவைகளுக்கெல்லாம் அதிகாரி கடவுளாகத்தான் இருக்க வேண்டும் என்று குழந்தைத்தனமாக முடிவு செய்தவன் அல்ல மனிதன்.

ஆதிகால சிந்தனையிலிருந்து அவனுடைய எண்ணத்தின் விரிவாக்கம் அளப்பரியதாக இருந்திருக்கிறது. இயற்கை சீற்றங்களுக்கு கடவுள் காரணம் என்றால் அந்த கடவுளுக்கு யார் காரணம்? என்று அடுத்தடுத்து பல கேள்விகளை அவன் கேட்டான். அந்தக் கேள்விகள்தான் இன்று மதமாக சமயமாக தத்துவங்களாக வளர்ந்து வந்திருக்கின்றது. எனவே, கடவுள் உண்டா? இல்லையா? என்ற கேள்வி இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை எவனும் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. காரணம்.. உண்டு இல்லை என்ற பதில்களே பல ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டிய பதில்களாகும். 

சிந்தனை என்பது உயர்ந்த சிகரத்தில் ஏறி நிற்கும் போது அங்கே கடவுளைப் பற்றிய விவாதம் என்பது அர்த்தமற்றதாகக்கூட ஆகிவிடக்கூடும். சில பெரிய சிந்தனையாளர்களும் அறிஞர்கள் என்று நம்மால் பாராட்டப்படுபவர்களும் பகுத்தறிவுவாதிகள் என்று பட்டங்களை சூட்டிக் கொள்பவர்களும் கடவுள் என்பவர் இல்லை என்பதை நிரூபிக்க மிகவும் பிரயத்தனப்பட்டு, அடுக்கடுக்கான கருத்துக்களை சொல்லிக்கொண்டே போகிறார்கள். இது பல நூறாண்டுகளாக வரலாற்றுப் பக்கங்களில் வளர்ந்து கொண்டே வருகிறது. 

அவர்களது சிந்தனைகளை ஆழ்ந்து படிக்கும் போது, நாம் ஆராய்கிறபோது, கடவுள் இல்லை என்ற அவர்களின் சிந்தனை கடவுளைப் பற்றிய பல புதிய தகவல்களை நமக்குத் தருவதாக இருக்கிறதே தவிர கடவுள் இல்லை என்ற முடிவை நம்மை அடைய விடுவது இல்லை. அதனால் தான் கடவுள் இருக்கிறார் என்பதை முழுமையாக நிரூபிக்க முடியாமல் மனிதன் எப்படி தவிக்கிறானோ, அதே போலவே அவன், இல்லை என்றும் நிரூபிக்க வகை இல்லாமல் இருக்கிறான். 

பொதுவாக மனிதனின் சுபாவம் பலனை எதிர்பார்த்தே செயல்களை செய்வதாகும். அன்னை குழந்தையிடம் அன்புகாட்டுவதும், மக்கள் பெற்றோர்களை அரவணைப்பதும், கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுவதும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், எதாவது ஒரு வகையில் பலனை நோக்குவதாகவே இருந்திருக்கும். பலன் இல்லாத, பலன் கிடைக்காத எந்தக் காரியத்தையும் மனிதன் தொடர்ந்து செய்ய மாட்டான். 

கடவுள் என்ற பொருளையும் இதே கருத்துக்குள் ஆட்படுத்தி நாம் சிந்திக்க வேண்டும். கடவுளை வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை என்றால், கடவுள் மீது பக்தி செலுத்துவதனால் எந்தவிதமான லாபமும் இல்லை என்றால், மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளாக அதே காரியத்தில் தொடர்ந்து ஈடுபடுவது ஏன்? பயனே தராத கடவுளுக்கு ஆலயங்கள் எழுப்புவது ஏன்? சாம்ராஜ்யங்களை உருவாக்கி, அதில் கடவுளின் ஆட்சி நடக்க வேண்டுமென்று பாடுபடுவது ஏன்? என்பதை சிந்தித்தால் பெருவாரியான மனித குலம், கடவுள் தேவை.. கடவுள் இல்லாமல் மனித வாழ்க்கைச் சக்கரம் உருளாது என்ற நிலைக்கு வந்துவிட்டது நன்றாகத் தெரியும். 

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது முடிவு செய்ய முடியாத விஷயம். தத்துவங்களும் அறநெறிகளும் சமயங்களும் காலம் காலமாக மனித குலத்தை ஒழுக்கம் குலையாமல் கட்டுப்பாடு மாறாமல் பாவ புண்ணியங்களை மறுக்காமல் வழிநடத்தி வந்திருக்கிறது என்றால் அந்தக் கடவுள் என்பது எவ்வளவு பெரிய தாக்கத்தை மனித சமுதாயத்தில் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் முதலில் சிந்திக்க வேண்டும். 

கடவுள் இல்லை என்று சொல்பவனுக்கு, நம்புகிறவனுக்கு, பாவத்தின் மேலும் புண்ணியத்தின் மேலும் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஒழுக்கமே இல்லாத நாஸ்திகன்தான் மரண காலம் வரையில் நாஸ்திகனாக இருக்கிறான். ஒழுக்கம் நிறைந்த நாஸ்திகன் அறிவு முதிர்சி அடையும் போது ஆஸ்திக பாதைக்கு வந்துவிடலாம். இதை நமது அனுபவத்தில் இன்று நாம் மிகத் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

பொதுவாக நாஸ்திக வாதிகள் கடவுளைப் பற்றி விவாதிப்பதை விட கடவுளை மையமாக வைத்து இயங்குகிற மதத்தின் மூலமாக நடக்கும் மோசடிகளையும், அநீதிகளையும், தவறான மூட நம்பிக்கைகளையும் மிக அதிகமாகப் பேசுகிறார்கள். அப்படிப் பேசுகிறபோது மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காக மக்களின் அறிவை மழுங்கடித்து, அறியாமையை வளர்த்து, கடவுள் என்ற ஒரு மாயப் பொருளை கற்பித்து வயிறு வளர்ப்பதற்காகவே, கடவுள் இருக்கிறார் என்ற வாதத்தை வைக்கிறார்கள் என்றும் வாதம் செய்கிறார்.

அவர்கள் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தில் அத்தியாவசிய தேவையாகிப் போன ஒன்றில், நடைமுறையில் பல தீமைகள் இணைந்து விடுவது தவிர்க்க முடியாத செயலாகும். எந்த ஒரு நல்லதையும் சுயநலம்பிகள் தங்களது தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். நல்லதை தீயதாக நடைமுறைப் படுத்துவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அதன் அடிப்படையிலே கடவுள் என்ற சித்தாந்தமும் மதம் என்ற தத்துவமும் பல நேரங்களில் சுயநலக் கூடாரமாக இருக்கிறதே தவிர, அதனுடைய உண்மையான சுபாவம் அப்படி அல்ல. எனவே, மத நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளை வைத்துக்கொண்டு, கடவுளைப் பற்றி முடிவுக்கு வருவது நிஜமான அறியாமையாகும்.

நம்மைச் சுற்றி உள்ள இயற்கையைப் பார்க்கிறோம். பூமியையும் தாண்டி அண்ட சராசரங்களில் உள்ள பல்லாயிரம் கிரகங்களையும் நட்சத்திர மண்டலங்களையும் தினசரி பார்க்கிறோம். இவைகள் அனைத்தும் திட்டமிட்டபடி ஒழுங்குமுறையில் சிறிதளவேனும் பிசகாமல் பல யுகங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது. 

காலையில் சூரியன் வருகிறான்.. பகல் பொழுது உதயமாகிறது.. இதமான கதகதப்பான சூரியக் கதிர்கள் உச்சி வேளையில் சுட்டெரிக்கிறது. மாலையில் மீண்டும் சூரியன் மேற்குத் திசையில் போய் விழுகிறான். இரவு வருகிறது. இருட்டு பரவுகிறது. குளிர்ந்த காற்று இதமாக வீசுகிறது. இப்படி இன்று மட்டுமல்ல.. நமது பாட்டன் காலத்திலும் அவனுடைய பாட்டன் காலத்திலும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கணிக்க முடியாத காலத்திலிருந்தே பருவ நிலை இப்படித் தான் நடந்து வருகிறது. உயிர் இயக்கத்தின் விரிவாக்கம் தொடர்ந்து வர இந்தக் கால இயக்கமே துணை செய்கிறது. 

இயற்கையில் எந்த ஒரு செயலும் கட்டுப்படுத்த முடியாமல் ஒழுங்கு முறை இல்லாமல் நடக்கவே இல்லை. எதோ ஒரு கட்டளைக்கு அடிபணிந்தது போலவே எல்லா இயக்கங்களும் நடந்து வருகிறது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்று நமது தமிழ் முன்னோர்கள் கூறுவார்கள். அதாவது பிரபஞ்ச வெளியில் என்ன நடக்கிறதோ அதுவே நமது உடம்பிற்குள்ளும் நடக்கிறது என்பது தான் அதன் பொருள்.

உலகத்தில் இயற்கை எப்படி ஒழுங்கு மாறாமல் நடை பயின்று கொண்டிருக்கிறதோ அதே போன்றுதான் மனித உடம்பின் இயக்கமும் நடந்து வருகிறது. நான் நினைத்தால் கால் நடக்கிறது. கைகள் வேலை செய்கிறது. நான் மூடச் சொன்னால் கண்கள் மூடிக் கொள்கிறது. என் உடம்பு முழுவதுமே என் கட்டளைக்கு உட்பட்டு நடக்கிறது என்று நம்மில் யாரும் பெருமை பேசிக் கொள்ள இயலாது. 

கண்களை மூடிக்கொள்ளலாம். நுரையீரலை மூடிக் கொள்ள முடியுமா? கை கால் இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். இதயத்தின் இயக்கத்தை கட்டளை போட்டு நிறுத்திவிட முடியுமா? இரத்தம் ஓடுவதும் செரிமானம் நடப்பதும் நம்மைக் கேட்காமலே நடந்து கொண்டிருக்கிறது. அன்னையின் வயிற்றில் சிறு புள்ளியாக என்று நாம் உதயமானோமோ, என்று கல்லறைக்குள் நமது உடம்பு சென்று அடைக்கலமாகுமோ, அன்று வரை இந்த இயக்கம் உலகத்தின் இயக்கம் போல ஒழுங்குமுறை மாறாமல் நடந்துகொண்டே இருக்கும். 

வயலில் தானியமாக கிடைத்த பயிர்கள் நமக்கு உணவாகிறது. அந்த உணவை ஜீரணம் செய்து இரத்தமாக உருமாற்றி பல உள்ளுறுப்புகளுக்கு ஜீவ சக்தியாகக் கொடுக்கிறது. ஒரு இயக்கம் உணவை எரித்து ஜீவ சக்தியாக மாற்றுவதற்கு பிராண வாயுவே உடலுக்குள் இருக்கிறது. ஒரு இயக்கம் இரத்தத்தால் உடம்பும் உடம்பால் மூளையும் மூளையால் மனமும் மனத்தால் அறிவும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே பேரதிசயம். இந்த அதிசயம் நமக்கு மட்டுமல்ல. நமது பேரனுக்கும் தொடரும். நமது முப்பாட்டனுக்கும் இருந்தது. 

தனிமனிதனுடைய இயக்கத்திலிருந்து அண்டத்திலுள்ள கிரகங்கள் வரையிலும் எல்லாமே ஒரு நியதிக்கு உட்பட்டு சலனமடைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த அதிசயத்தின் மூலம் என்ன? இயற்கை என்று ஒரு சாரார் சொல்லலாம். அது தவறல்ல.. கடவுள் என்று இன்னொரு சாரார் சொல்லலாம். அதுவும் தவறல்ல.. ஒருவகையில் சொல்லப் போனால் கடவுள் இயற்கையாக இருக்கிறார். இயற்கை கடவுளாக இருக்கிறது. இதைத்தான் ஜைமினி மகரிஷியும் பதஞ்சலி மகரிஷியும் வேறு வேறு பாஷையில் சொன்னார்கள்.

இந்த உலகத்தின் இயக்கத்தை மனிதர்களாகிய நமது சிற்றறிவைக் கொண்டே நுணுக்கமாக ஆராய்ந்தோம். ஆனால் ஏதோ ஒரு பெரிய ஆற்றல் நம்மைச் சுற்றி உள்ள அனைத்தையும் நம்மையும் நமது கண்ணுக்குத் தெரிவதையும் தெரியாததையும் நெறிப்படுத்தி நடத்திக் கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரியவரும். 

அந்தப் பேராற்றலை இறைவன் என்றும் சொல்லலாம். கடவுள் என்றும் சொல்லலாம். தெய்வம் என்றும் சொல்லலாம். வேறு எந்தப் பெயரை வேண்டுமானாலும் வைத்து அந்த ஆற்றலை அழைக்கலாம். அப்படி அழைக்கும் போது மனிதன் அறிவைப் பயன்படுத்தாமல் அறியாமையின் விளிம்பில் நின்று சிந்திக்கிறான் என்று கூறிவிட முடியுமா? 

சூரியனையும் சந்திரனையும் எல்லையே இல்லாத விண்ணையும் எல்லைக்கு உட்பட்ட மண்ணையும் காற்றையும் கடலையும் மனிதன் போற்றி வழிபட்ட காலம் ஒன்று இருந்தது. மனிதனின் மனது விரிய விரிய அவனது அறிவு வளர வளர இயற்கையின் இரகசியங்களை ஓரளவு தெரிந்து கொண்டான். அதுவரையிலும் இரகசியத்தை தெரியாது இருந்த மனிதனுக்கு தெரிந்த பிறகு மேலும் வியப்பு பலமடங்கு அதிகரித்தது. அந்த வியப்பின் அளவுகோல் இன்றுவரை விரிந்து கொண்டே போகிறது. சவரத் தொழிலாளியின் குப்பை மேட்டை கிளறக் கிளற தலைமுடி வந்துகொண்டே இருப்பது போல, இயற்கையின் இரகசியத்தை உணர உணர மனிதனின் மலைப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் கடவுளின் மீது, கடவுளின் இருப்பு மீது மனிதன் கொண்ட நம்பிக்கை இன்னும் இறுக்கமாகிக் கொண்டே வருகிறது. 

மனிதன் இயற்கையை வென்றான். இயற்கையை அடிமைப்படுத்தி விட்டான். இயற்கையை தனது தேவைகளுக்காக வசியப்படுத்தி அனுபவிக்கத் துவங்கி விட்டான் என்பதெல்லாம் கேட்பதற்கு ரசமாக இருக்கின்ற கருத்துக்களே தவிர உண்மை அதுவல்ல. ஒருபோதும் மனிதன் இயற்கையை வெல்ல முடியாது. வேண்டுமானால் இயற்கையின் இரகசியங்களை தெரிந்து கொண்டு வருகிறான் என்று சொல்லலாம். 

கண்ணுக்குத் தெரியாத அணுவை உடைத்து அதன் பேராற்றலை மனிதன் வெளிப்படுத்திய போது இயற்கையின் வீரியத்தைக் கண்டு அவன் மெய்சிலிர்த்துப் போனான். அப்போது கூட அவன் இறைவனின் ஆற்றலை வியந்து அதிசயித்தானே ஒழிய சந்தேகப்படவில்லை. இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று பிரகலாதன் சொன்ன தத்துவத்தை, இறைவன் தன்மையை, அணுவில் இருப்பதை மனிதன் புரிந்து கொண்டான். 

அணுவாற்றலின் இரகசியத்தை முதல் முதலில் அறிந்து கொண்ட விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூட, இறைவனின் பேராற்றலை பாராட்டினானே தவிர இறைவன் என்று ஒருவன் இல்லை, எல்லாமே மனித ஆற்றலுக்கு உட்பட்டதுதான் என்று கூறி நாஸ்திகனாகி விடவில்லை. 

அண்டவெளியில் விஞ்ஞானத்தால் மனித அறிவால் கண்டறிய முடியாத எத்தனையோ அதிசயங்கள் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. கற்பனை செய்து பார்க்கக் கூடிய கால எல்லைகளுக்குள் இயற்கையின், இறைவனின் பேராற்றலை மனிதன் கண்டு அறிந்துவிட முடியாது. அதற்கான காலமும் மனித ஆயுளுக்கும் அறிவுக்கும் கிடையாது. 

விண்ணில் மறைந்து கிடக்கும் இரகசியங்களையும் மண்ணில் புதைந்து கிடக்கும் அதிசயங்களையும் காணக் காண, மனிதன் இந்த உலகத்தின் முன்னால் இதன் ஆற்றலின் முன்னால் தான் எவ்வளவு சிறியவன், ஒரு சிறு புள்ளி அளவிற்கு கூட தகுதி இல்லாதவன் என்பதை உணர்ந்து பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை எண்ணிப் பார்த்து வியந்து போகிறான். 

அந்த வியப்பின் மறுவடிவம் தான் பக்தி. இறைவா.. உன் பாதார விந்தங்களுக்கு முன்னால் நான் வெறும் தூசி. உனது அருளாற்றலுக்கு முன்னால் எனது ஆற்றல் எறும்பை விடக் கேவலமானது. நீ எதற்காக எதைப் படைத்திருக்கிறாய் என்பதை அறிந்து கொள்ளவே நான் ஆயிரம் முறை பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு க்ஷணமும் நினைத்து நினைத்து கடவுளின் இருப்பை உணர்ந்து உணர்ந்து மனிதன் வளர்ந்து வருகிறான். அந்த வளர்ச்சிக்கு இலக்காக எல்லையாக இருப்பவன் தான் இறைவன். 

மனிதனாகப் பிறந்தவன் எப்போது இறைவனை அறிகிறானோ.. இறைவனின் இருப்பிடத்தை உணர்கிறானோ.. இறைவனின் ஆற்றலை அனுபவிக்கிறானோ.. அன்றுவரை, அன்றைய காலம் வரை மனிதப் பிறப்பு சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். அதற்கு கால எல்லை என்பது வகுக்கும் தைரியம் தகுதி எவருக்கும் இல்லை. 

இரகசியங்களுக்கு எல்லாம் இரகசியமாக இருக்கும் இறைவனை இன்னதென்று துல்லியமாக சுட்டிக்காட்டும் தகுதி மனிதர்கள் யாருக்கும் இதுவரை இல்லை. உலக வரலாற்றில் எத்தனையோ ஞானிகள் யுக புருஷர்கள் இன்றுவரை தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இறைவனைப் பற்றி சொன்னார்கள். அப்படி அவர்கள் சொன்னது, அவர்கள் அறிந்த ஒரு சிறு பகுதியை மட்டும் தான். அவர்கள் அறியாமல் விட்டிருக்கும் பகுதியோ இன்னும் ஏராளம். 

யானையைத் தொட்டுப் பார்த்த குருடர்கள், தூண் என்றும் பானை என்றும் முறம் என்றும் பாம்பு என்றும் வித விதமாகச் சொன்னது போல், இறைவனை உணர்ந்த ஞானிகள் தனது அனுபவத்தை மட்டுமே சொல்ல முடிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அறிவுக்கெல்லாம் அறிவாக, மூலத்துக் எல்லாம் மூலமாக இருக்கும் இறைவனை, உண்டு என்று சொல்வதற்கான தகுதியும், இல்லை என்று சொல்வதற்கான தகுதியும் இன்னும் எந்த மனிதனுக்கும் இல்லை என்பதே என் கருத்து. 

எனவே இறைவனை.. இறைவனின் தன்மையை.. இறைவனின் ஆட்சியை.. இறைவனின் அன்பை முழுவதுமாக உணருவதற்கு நமது ஆயுள் காலம் அனைத்தையும் அற்பணித்து பாடுபடுவோம். நமக்கு இறைவன் மனிதப் பிறவியை தந்திருப்பதன் இரகசியமே அவனை அறிந்து கொள்ள உழைப்பதற்காகத்தான். எனவே நமது சின்னஞ்சிறு கரங்களைக் கொண்டு, விண்ணுக்கும் மண்ணுக்குமாக எழுந்து நிற்கும் விஷ்வ ரூபியான வாசு தேவ கிருஷ்ணனை அறிந்து கொள்ள பாடுபடுவோம். 

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம். 


 
முற்றும் 


Contact Form

Name

Email *

Message *