Store
  Store
  Store
  Store
  Store
  Store

அப்பா நன்றாக யோசியுங்கள்


அன்புள்ள அப்பாவுக்கு
நீங்கள்
தலைக்குமேல்
தூக்கிக் கொஞ்சும் போது
உங்கள்
நெஞ்சில் மிதித்த பிஞ்சு மகன் எழுதுவது


உங்களுக்கு நினைவிருக்கிறதா
கிணற்றின்
ஆழத்தைக் கண்டு
நான் பயந்தபோது
வயிற்றிற்குள் கைகளை கொடுத்து
நீந்த  கற்றுக் கொடுத்தீர்கள்


அன்று முதல் இன்றுவரை நீந்துகிறேன்
கறை இன்னும் தெரியவில்லை
களைத்து தலை சாய்க்க
ஓரு தோளும் எனக்கில்லை


சட்டையில் போட்ட பூக்கள்
நன்றாக இல்லையென
அழுதேன்
என் கண்ணீரின்
அளவை விட
அதற்காக நீங்கள் சிந்திய
வியர்வையின் அளவு அதிகம்
என்பது அப்போது தெரியாது


இங்கிலீஷ்  மீடியத்தில்
சேர்த்திருந்தால்
அதிக மார்க் வங்கியிருப்பேன்
என ஆலட்டிக் கொண்டேன்


அந்த மீடியங்களின்
வாசலைக் கூட
தொட முடியாத
உங்கள் வருமானம்
என்னை
கல்லூரி வரை கரை
சேர்த்த அதிசயத்தை அறியேன்


ஆசை முளைத்து
ஆசை துள்ளிய போதும்
மொட்டைச் சுவர் ஓரமாய்
கட்டுப் பீடி பிடித்த போதும்
உங்கள் முறைத்த கண்களே
எனக்கு காவல் ஆனது


சீட்டாட்டம்
ஆடிய நண்பர்களோடு
பிடிபட்டு
காவல் நிலையச் சுவரோரம்
முட்டுக்கட்டி
உட்கார்ந்த போது
உங்கள் முரட்டுப் பாசத்தின்
அர்த்தம் புரிந்தது


அழுக்காடையில் இருந்த போதும்
ஆழமானது
உங்கள் செல்வாக்கு என்பது தெரிந்தது


என்வேலை உங்கள் சுமையை
குறைக்கும் என்று
கால்காசுக்கும்
உதவாத மனிதர்களிடத்தில்
கால் கடுக்க காத்திருந்தீர்கள்


பெட்டியுடன் கிளம்பும் போது
வழியனுப்பிய
உங்கள் கண்களில்
ஆயிரம்
கனவுகள் அணிவகுத்ததைப் பார்த்தேன்


அதில் அடமானப் பட்ட வயலையும்
தங்கையின் திருமணத்தையும் தான்
பார்த்திருப்பீர்கள் என்பது தெரியும்
அப்பா!
அக்கா கல்யாணக்
கடனை மறக்காமல் நினைத்திருப்பீர்கள்


பாப்பா
கல்யாணத்தயும்
எப்படியோ நடத்தியாச்சி
நல்ல பெண்
அமைந்ததால்
உனக்கும் நல்லது பண்ணியாச்சி


வெள்ளத்தில்
பயிர் மூழ்குவதைப் போல்
வட்டியில்
நிலம் மூழ்குவதாக
கடிதம் போட்டிருந்தீர்கள்


அம்மாவுக்கு
அடுத்ததாய் சோறு போட்டதல்லவா
வயல்
உங்கள் வியர்வையின்
வெளிப்பாடு அல்லவா அது
நமக்கு பின்னும்
உங்களின் பேரனின்
மகனுக்கன்றோ அது சொந்தம்


அதை
மீட்காமல்
வாழ்வது ஓரு வாழ்வா


உங்கள் மருமகளிடம்
பதமாகச் சொன்னேன்
கழுத்தை சாய்த்து
கன்னத்தில் கையூன்றி
கவனமாய் கேட்டாள்


நீங்கள்
எனக்கு முடித்து வைத்தப்
பெண்ணல்லவா அவள்
நல்ல அறிவாளி
நாளைக்கு நடப்பதை
இன்றே கணக்கிடும் தீர்க்கதரிசி


மாமாவின்
உழைப்பை மதிக்காமல்
விட்டுவிடலாகாது
காப்பாற்றியே ஆக வேண்டும்
ஆனால்
இப்போது கையில் காசு இல்லையே
என்ன செய்வது


அன்றியும்
கிராமத்தில் கிடக்கும்
நிலத்திற்கு வருங்காலத்தில்
என்ன மதிப்பிருக்கும்


நமது
குழந்தைகள் நன்றாக
படிக்க வேண்டும்
நாலுபேரோடு
சேர்ந்து நாகரீகம் பழகவேண்டும்


வேலை வாய்ப்பெல்லாம்
கிராமத்தில் ஏது
அதனால்
நல்ல விலைக்கு
இப்போதே விற்றால்
இங்கொரு
வீடுவாங்கலாமே என்கிறாள்


நாலும் தெரிந்தவர் நீங்கள்
அவள் கூற்றில் உள்ள
நியாயம் தெரியாதா உங்களுக்கு


நீங்கள் பட்டத் துயரை
நாங்கள் பட
அனுமதிப்பீர்களா


வண்டி மாட்டிற்கு
சுகவீனம் என்றாலே
தூங்காத நீங்கள்
பேரக்குழந்தையின் நலத்திற்கா விரோதி
அப்பா!
நன்றாக யோசியுங்கள்...



  • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்

  •  

                                                         

    Contact Form

    Name

    Email *

    Message *