Store
  Store
  Store
  Store
  Store
  Store

தடுமாறும் வயசும்.....திசைமாறும் மனசும்...

     கதிரேசனுக்கு பதினாறு முடிந்து பதினேழு வயசு ஆரம்பித்து விட்டது மீசை அரும்பியும் அரும்பாமலும் இருக்கும் அவன் முகத்தில் குழந்தைத் தனம் இன்னும் மாற வில்லை சில நேரங்களில் அவன் குரல் அவனுக்கே வேடிக்கையாக ஒரு ஆட்டுக் குட்டி கத்துவது போலிருக்கும் அந்தக்குரலில் பாடும் போது வெட்கப்பட்டு தானே பாட்டை நிறுத்தி விட்டு அக்கம் பக்கம் பார்த்துக் கொள்வான் யாரும் தன்னை கவனிக்க வில்லை என்றால் தான் நிம்மதி ஏற்படும் அவனுக்கு முகத்தில் அங்கங்கே பருக்கள் வேறு புதிய மனிதர்களை பார்க்க நேரிட்டால் வெட்கம் பிடுங்கித் தின்று விடும் பருக்களை மறைப்பதற்காக நாணிக் கோணி தலை குனிந்து தான் பேசுவான் இது அம்மா அப்பாவுக்கு புரிய மாட்டேன் என்கிறது என்னடா பெண்பிள்ளை மாதிரி நெளிகிறாய் என்று பேசுகிறார்கள்


  அப்பாஸ், மாதவன் முகமெல்லாம் மீசை இல்லை என்றாலும் எப்படி பளபள வென்றிருக்கிறது நம் முகம் மட்டும் அப்படி இருக்க மாட்டேன் என்கிறது சதா எண்ணெய் வடிந்து பார்ப்பதற்கே அவலட்சனமாய்பட்டது அதைப் போக்குவதற்கு க்ரீம் வாங்கி பூசலாம் என்றால் காசு வாங்குவதற்குள் போதும் போதென்றாகி விடுகிறது ஆயிரம் கேள்விகள் இத்தனை கேள்விகள் அப்பா மண்டைக்குள் எப்படித்தான் உதயமாகிறதோ தெரியவில்லை மிடுக்காய் வெள்ளை வெளேர் என்று அயன் கசங்காமல் சட்டை போடலாம் என்றால் அம்மாவுக்கு பழுப்பு போகாமல் துவைக்க தெரிவதில்லை சலவைக்கு போடலாம் என்றாலும் தனியா பணத்திற்கு அவன் எங்கே போவான் இதில் புது சட்டை ஒன்று கூட கிடையாது எல்லாமே அப்பாவுக்கு சின்னதாகிப் போனதை டக் பிடித்து போட்டுக் கொண்டு திரிவது பெரிய சங்கடம் கதிரேசனுக்கு பத்து வயசில் விஷக் காய்ச்சல் வந்துடுச்சாம் பனிரண்டு வயசில் சைக்கிள் ஓட்ட போய் கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டான் இப்படி இரண்டு வருடம் படிப்பு கெட்டு +2 படிக்க வேண்டியவன் பத்தாவது தான் படிக்கிறான் இதனால் இவன் வயது பையன்கள் செய்யும் கேலி ஒருபுரம் அந்த கேலியை பெண் பிள்ளைகள் கேட்டு விட்டால் வரும் பாருங்கள் ஒருவித அவமானம் அதைச் சொல்லி மாளாது



இன்னொருபுறம் ஆறாவது ஏழாவது படிக்கும் போதெல்லாம் நன்றாகத்தான் படிப்பு வந்தது இப்போ என்னவென்றே புரியவில்லை மனம் பாட புத்தத்தையே தொட மறுக்கிறது எதாவது ஒரு சிந்தனை வந்து குதியாட்டம் போடுகிறது சதா ஒரு குழப்பம் சோம்பேறித் தனம் இனம் புரியாத சோகம் என்று பொழுதெல்லாம் வீணாகப் போகிறது தன் கஷ்டத்தை யாரிடமாவது சொல்லலாம் என்றால் இதுதான் கஷ்டம் என்று அடையாளம் காட்ட முடியவில்லையே இப்போதெல்லாம் உலகத்தில் உள்ள துன்பமெல்லாம் தனக்கு மட்டும்தான் வருகிறதோ என்ற எண்ணம் கதிரேசனுக்கு அடிக்கடி வருகிறது


  மணிக்கணக்காக தனிமையில் உட்கார வேண்டும் ஏகாந்தமாக மல்லாந்து படுத்து வானத்தை வெறிக்க வேண்டும் மனக்கண்ணுக்குள் விந்தையான உருவங்களை வரவழைத்து ரசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிட முடிகிறதா என்ன எருமை மாடுமாதிரி வளந்தது தான் மிச்சம் ஒரு சாதாரண கணக்குப் போடத் தெரியவில்லை பரிச்சை முடிவில் மட்டைக்கு நாலா கிழிச்சுடுவே தெண்டம் தெண்டம் உன்னை எல்லாம் ஏன்தான் பெற்றார்களோ எங்கிருந்துடா வந்திங்க என் உசிர எடுக்க  என்று பார்த்த உடனேயே திட்டி தீற்கும் கணக்கு வாத்தியார் பள்ளியில் பள்ளிக்  கூடம் விட்டு வந்ததும் போட்டிருக்கும் துணியை கழற்றி துவைத்தால் என்னடா அதைக்கூட அம்மாதான் செய்ய வேண்டுமா என்று அண்ணன் ஒருபுறமும் வந்தவுடன் முகம் கழுவி வேறு சட்டை போட்டு வெளியில் போயேண்டா வந்ததும் வராததுமாய் அரக்க பரக்க தின்று விட்டு தெருவிற்கு ஓட வேண்டுமா என்று அக்கா இன்னொரு புறமும் வீட்டில் பிக்கல் பிடுங்கல் தாளாது இவைகளை எல்லாம் கூட தாங்கிக் கொள்ளலாம் இந்த அப்பாவத்தான் சமாளிக்க முடியாது தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு வருகிறவர் வரும்போதே புல்லுக்கட்டை கொண்டுவரக் கூடாதா ஆறு மணிக்கு வருவார் வந்தவுடன் முதல் வேலை இவன் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து சைக்கிளை எடுத்துற்று போய் புல்லுக்கட்டை எடுத்துவா என்பார் அந்த நேரத்தில்தான் உலகத்திலேயே முதல் எதிரி இவர்தான் எனத் தோன்றும் புல்லை எடுத்து வருவதில் ஒன்றும் சிரமமில்லை எடுத்து வரும் வழியில் தான் சிரமம் இருக்கிறது காரணம் பூங்கோதை வீடு அந்த வழியில் உள்ளது


  அவனுக்கு அவள் அத்தை மகளாக வேண்டும் நல்ல வாயாடி தண்ணீர் கொட்டுவது போல் சளசளவென்று பேசிக்கொண்ட இருப்பாள் சின்னப் பெண்ணாக இருக்கும் போது அவனோடு கண்ணாமூச்சி எல்லாம் விளையாடி இருக்கிறாள் 
அப்போதெல்லாம் அவளைப் பார்த்தால் அவனுக்கு ஒன்றுமே ஆகாது இப்போது சில நாட்களாகத்தான் அவளை பார்த்த உடன் நெஞ்சி பக் பக்கென்று அடிக்க ஆரம்பிக்கிறது போன மாதத்தில் ஒருநாள் அப்பா புல்லை எடுத்துவர அனுப்பினார் அவனும் வழக்கம் போல பொய் சினுங்கலுடன் தோட்டத்திற்கு போனான் போனவனுக்கு  மாங்காய் பறித்து தின்ன ஆசை வந்து விடவே மரத்தில் ஏறி ஒன்றிரண்டு மாங்காய்களை பறித்து தின்று விட்டு கிணற்றில் இறங்கி தண்ணீர் குடித்து விட்டு கிளம்புவதற்கு நேரம் நன்றாக இருட்டி விட்டது மெதுவாக சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தவனை பூங்கோதை பார்த்து விட்டாள் இது என்ன உலகத்தில் பெரிய அதிசய மெல்லாம் நடக்குது புல்லுத் தின்னும் மாடே புல்லுக் கட்டை சுமக்குது என்று சொல்லி கலகலவென சிரித்தாள் பூங்கோதை
அவனுக்கு சுள்ளென்று ரோசம் வந்து விட்டது அவளை அடிக்க கையை ஓங்கினான் ஓங்கிய கையைதடுக்கும் போது நிலை தடுமாறி அவன்மீது விழுந்து விட்டாள்



     அவன் மீது அவள் சாய்ந்தபோது அவள் இளமேனியின் கதகதப்பு அவனுக்குள் ஊசிபோல பாய்ந்தது மாலை நேரத்து ஈரக்காற்று கழுத்தை வருடி முதுகுத் தண்டை சிலிர்க்க வைத்ததாய் உருகினான் இதுவரை அனுபவித்தறியாத சுகந்தம் நாசியில் சீறி  நிரம்பி நெஞ்சுக் கூட்டை தடதடக்க செய்தது அவள் இடையில் பட்டும்படாமல் உரசிய கைகளில் மிதமான நடுக்கம் பரவி தேகம் எங்கும் சாரைப்பாம்பாய் மேலெழுந்தது சில வினாடிகள் தான் அந்த நெருக்கம் நீடித்தாலும் பல யுகங்கள் தங்களை கடந்துபோனதாக இருவரும் உணர்ந்தார்கள் அதன்பிறகு பலமுறை அவனை பார்க்கும் போதெல்லாம் நேருக்குநேர் பார்ப்பதை தவிர்த்தாள் சூரியக் காந்தி பூவில் மகரந்தம் ஒட்டிக் கெண்டிருப்பதைப் போல் அவள் முகத்தில் நாணம் ஒட்டி இருப்பதை அவனால் உணர முடிந்தது இப்போதுதான் காதல் அரும்பி இருக்கிறது இந்த நிலையில் மீண்டும் அவள் முன்னால் புல்லுக் கட்டை தூக்கி வர முடியுமா வந்தாலும் தான் என்ன நினைப்பாள் என்ன இவன் அசிங்கமாக மாட்டுத் தீவனத்தை சுமக்கிறான் என்று நினைக்க மாட்டாளா இதோ பார் நான் காதலிக்க ஆரம்பித்திருக்கேன் என்னை புல்லுக்கட்டு எல்லாம் சுமக்க சொல்லாதே என்றா நேரிடையாக சொல்ல முடியும்?

   அவருக்குத்தான் அறிவு வேலை செய்யாதா கதிரேசு வளர்ந்து விட்டான் மீசையெல்லாம் முளைத்து விட்டது இனிமேல் அவனை இந்த மாதிரி வேலைக்கெல்லாம் அனுப்ப கூடாது என்று அவருக்கு யோசனையே வராதா? இதுவெல்லாம் அப்பாவுக்கு புரியவே புரியாது அப்பாமேல் கோபம் அண்ணன் மேல் வருத்தம் அக்காவின் மேல் எரிச்சல் ஏன் பல நேரம் பூங்கோதை மேலேக் கூட ஆத்திர ஆத்திரமாய் வருகிறது இவள் அப்படி என்ன சோப்பு போடுகிறாள் என்ன பவுடர் பூசுகிறாள் இவள் முகம் மட்டும் எப்போதும் பளிச்சென்று இருக்கிறது?

பெண்கள் முகமே இயற்கையில் அப்படித்தான் இருக்கும் என்பதை அவனால் ஒத்துக் கொள்ள முடியாது மரகதமும் பெண்தானே அவள் முகத்தில் மட்டும் சதா எண்ணெய் வடிகிறதே அது எப்படி? எண்ணெய் வடிதல் சமாச்சாரம் பற்றி கோபாலிடம் பேசினான் அவன் இதைக் கேட்டு மகா ஜோக்கை பார்த்தவன் போல சிரித்தான் போடா புண்ணாக்கு உலகத்தில் வருத்தபட எவ்வளவோ விஷயம் இருக்கு அதை விட்டு விட்டு எண்ணெய் வடிகிறதாம் எண்ணெய் இதைப் போய் வெளியில் சொல்லி விடாதே மானக்கேடாக போய்விடும் என்று கூறி பெருங்குரலில் சிரித்தான் இந்த மாதிரித்தான் எல்லா மனிதர்களும் இருக்கிறார்கள் தனது பிரச்சனைகள் மட்டும்தான் உலகத்திலேயே பெரிது மற்றவர்கள் பிரச்சனை என்பது ஒன்றுமே இல்லாதது வீணாக எல்லோரும் அலட்டிக் கொள்கிறார்கள் என்று கருதுபவர்கள் தான் அதிகம் இப்படிப் பட்ட உலகத்தில் தெளிவை எங்கிருந்து தேடிப் பெருவது?

   கதிரேசனுக்கு தெளிவும் கிடைக்க வில்லை முடிவும் கிடைக்க வில்லை நூல்கண்டு சிக்கல் மாதிரி ஒன்று மாற்றி ஒவ்வொன்றாக வந்தது எதிலும் நாட்டம் போகவில்லை எல்லாவற்றிலும் வெறுப்பும் விரத்தியும் வந்தது இருட்டு அறையில் மாட்டிக் கொண்டவன் கதையாய் போனது இத்தகைய குழப்பங்களில் மாட்டி சோர்ந்து போய் தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு நடு இரவில் விழிப்பு வந்தது விழித்தவன் தன்னை சுற்றியிருக்கும் இருட்டைப் பார்த்து சற்று குழம்பினான்

    அறையின் வலது மூலையில் யாரோ நிற்பதுபோலவும் தன்னைப் பார்த்து ஏதோ சைகை காட்டுவது போலவும் அவனுக்கு தோன்றியது கொஞ்சம் நிதானத்திற்கு புத்தி வந்ததும் இப்படித்தான் நம்ம வாழ்கையும் இருக்கிறது இல்லாதது எல்லாம் இருப்பதாக தோன்றி ஹிம்சை செய்கிறது இருப்பதை தேடிப்போனால் கையில் கிடைக்காமல் வழுக்கி ஒடுகிறது தப்பித்தவறி கிடைத்தாலும் அந்த நேரத்தில் அது பயன்படுவது கிடையாது இப்படி சிந்தித்தவனுக்கு இந்தச் சிந்தனை தனக்கு இந்த நேரத்தில் தேவை இல்லாமல் ஏன் வருகிறது? என்பதும் புரியவில்லை.

     கட்டிலில் இருந்து இறங்கிப்போய் தண்ணீர் குடித்தான் மீண்டும் உட்கார்ந்து இருட்டை வெறித்தான் அப்போது பளிச்சென அந்தச் சிந்தனை தோன்றியது இந்த ஊரை விட்டு இந்த மனிதர்களை விட்டு எங்காவது கண்காணாத திசைக்கு  ஓடிப்போக வேண்டும் ஒரு பத்து பதினைந்து வருஷங்கள் இவர்கள் யாரையுமே எட்டிப்பார்க்க கூடாது இவர்கள் கண்முன்னால் நடமாடினால்தானே நம்மை இளக்காரமாக பார்க்கிறார்கள் இவன் சுத்த மடையன் தெண்டச்சோறு என்று தோன்றுகிறது நாம் இல்லையென்றால் தான் நமது அருமை தெரியும் ! பாதிகுளிச்சிகிட்டு இருக்கும் போதே கடையில் போய் சீயக்காய் வாங்கிவர அக்காவுக்கு யார் கிடைப்பார்கள்?

   நல்லா தூங்குகிறவனை எழுப்பி சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி வரச்சொல்லி அண்ணன் யாரை அனுப்புவான்? இவர்கள் நினைத்தப்படி எல்லாம் வேலை செய்ய எவன் வருவான்? அப்பா அப்பத்தான் யோசிப்பார் நாம் தோட்டத்திலிருந்து வரும்போதே புல்லுக்கட்டை கொண்டு வந்திருக்கலாம் என்ற ஞானம் அப்போ வரும்

அம்மாதான் பாவம் நம்மைத் தேடி ரொம்ப கஷ்டப்படும் இருந்தாலும் என்ன நான் ஒத்தைக்கோர் பையனா அண்ணன்தான் இருக்கனே அவனைப் பார்த்து ஆறுதல் அடைஞ்சிக்க வேண்டியதுதான் அவையெல்லாம் கிடக்கட்டும் முதலில் எங்கே ஒடுவது எனமுடிவு செய்யலாம்

மெட்ராஸுக்கு போகலாமா ஐய்யய்யோ வேண்டவே வேண்டாம் தாம்பரத்திலிருந்து தண்டையார்பேட்டை வரை சொந்தக்காரனுங்க நெரைஞ்சிக் கிடக்காங்க

எவன் கண்ணிலாவது மாட்டினால் கதை கெட்டுடும் பெங்களூர் இல்லைன்னா திருவனந்தபுரம் பக்கமாக போவதுதான் புத்திசாலித்தனம் அவ்வளவு சீக்கிரமா   யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் சரி எங்கு போவதாக இருந்தாலும் செலவுக்கு பணம் வேண்டுமே !

பணம் இல்லாமல் சாப்பாட்டுக்கும் தங்குவதற்கும் என்ன செய்வது? எதாவது வேலைத் தேடிக் கொள்ளலாம் என்றால் போனவுடன் வரவேற்று உபசரித்து வேலைத்தர மாமன் மச்சானா அங்கிருக்கிறான் இல்லைன்னா நாம் கவர்னர் மருமகனா? வேலைக்கிடைக்காமல் கையில் காசு இல்லாமல் வயிறு திகுதிகுன்னு எரியும் போது ஓட்டலில் சாப்பிடுபவனை நாக்கில் நீர் சுரக்க பார்க்க வேண்டும் சாப்பிடுகிறவன் நாம் பார்ப்பதை கவனித்து விட்டால் முகத்த திருப்பிக் கொள்வான் இலையை மடக்கி வேறுபக்கமாக கூட நகர்ந்து போய்விடலாம் அவையெல்லாம் எத்தனை அவமானம் அம்மா சமைப்பதை நாமும் சாப்பிட்டு புதிதாக யார் வந்தாலூம் அவர்களுக்கும் கொடுத்து மீதம் இருப்பதை நான்கைந்து நாய்களும் வயிறை நிரப்பிக்  கொள்ளும் அப்படிப்பட்ட நான் போய் ஓட்டல் வாசலில் சோற்றுக்காக கையேந்தி நிற்பதா? மற்றவன் தூக்கி எறியும் எச்சில் இலையை ஏக்கத்தோடு பார்ப்பதா? சோறு தண்ணி இல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை ஒருமாதிரிப்பட்ட கும்பலிடம் மாட்டிக் கொண்டால்?


காலையில் மெரினாவில் வாக்கிங் போயிட்டிருந்த டாக்டரையே கடத்திப்போய் கிட்னியை எடுத்துற்றாங்களாம் நாம சின்னப்பயல் இதுவரை ஊரைவிட்டு தூரப்பயணம் போனதில்லை நிச்சயம் போனயிடத்தில் திருதிருன்னு முழிப்போம் நம்ம முகத்தை பார்த்தாலே ஓடிவந்தவன் என்பது சொல்லாமலே தெரிந்து விடும் .

கிட்னிபோனாக் கூட பரவாயில்லை கஞ்சாகடத்தல் கும்பல் மாதிரியுள்ள கூட்டத்தில் மாட்டிக்கிட்டா ஆயுசுபூரா ஜெயிலு கம்பஞ்சோறு என்று கிடக்க வேண்டியதுதான் ஜெயிலில் போலிஸ்காரர்கள் அடிச்சி கொடுமைப்படுத்துறதை விட நிறையநாள் அங்கேயே இருக்கும் கைதிங்க அதிகமா அடிச்சி உதைப்பாங்களாம் சிலசமயத்தில் மூத்திரத்தைக் கூட குடிக்க வைப்பாங்களாம் இதைவிட அசிங்கம் பல வருஷமா பொம்பளைங்களேயே பார்க்காத கைதிங்க சின்னப் பையன்களை குனியவைச்சி வ்வ... நெனைச்சாலே குமட்டுது அப்படியெல்லாம் கஷ்டத்தை நம்மால் அனுபவிக்க முடியாது . பிறகு எப்படி இவர்களிடமிருந்து தப்பலாம்? தற்கொலை செய்ய வேண்டும் ஆம்! அதுதான் சரியான வழி தனக்கிருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்றால் அதை விட சிறந்த மார்க்கம் எதுவும் இல்லை என்ற சிந்தனை பளிச்செனப் பட்டது இந்த எண்ணம் தோன்றியவுடன் எங்கிருந்தோ ஒரு நிம்மதி மேகம் குடைபிடிப்பது போல குளிர்ச்சி ஏற்பட்டது கெட்டக் காரியத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் நல்லகாரியத்தை தள்ளிப் போடக்கூடாது உடனே செய்து முடிப்பதுதான் புத்திசாலித்தனம் எனவும் தோன்றியது தற்கொலை செய்து கொள்வதை கோழைத்தனம் என்று சொல்லுபவர்கள் சுத்த பயந்தாங்கொள்ளிகள்


   வேறொரு உயிரைப் பறிப்பதில் என்ன வீரம் இருக்கிறது வலியும் வேதனையும் மற்றவர்களுக்குத்தான் தனக்கில்லை எனும்போது தானாக துணிச்சல் வந்து விடும் அதே நோவு தனக்கெனும் போதும் பின்வாங்காமல் முனைந்து நிற்பவன்தான் சுத்த வீரன் அத்தகைய வீரர்களில் நானும் ஒருவன் மறவர்கள் ஆயிரம் பேசினாலும் எனக்கு கவலை இல்லைநான் துன்பப்படும் போது எனக்குள்ளேயே உருகி வேதனையில் வாடும் போது மீள்வதற்கு வழி தெரியாமல் தவிக்கும் போது எனக்கு தோள்கொடுக்காத மனிதர்களுக்கு எனது செயலை விமர்சனம் செய்யும் தகுதி இல்லைநான் அவர்களை ஒருபொருட்டாக கருத வேண்டிய அவசியமும் இல்லை

  இந்த உலகம் சுயநல உலகம்தனது முகம் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பண்பாடு நாகரிகம் என்றெல்லாம் ஆயிரம் வண்ணங்களை பூசி நடிக்கும்தனக்கு இணையாக நடிப்பவர்களை பல்லக்கில் தூக்கி சுமக்கும் தனது தவறுகளை சுட்டிக் காட்டுபவறை  தூக்கிப்போட்டு மிதிக்கும்இப்படிப்பட்ட உலகம் பேசுமே என்று வருத்தப் படுவதும் கலங்கி கைகட்டி நிற்பதும் முட்டாள் தனம் கதிரேசனுக்கே தன்னாலும் இப்படி சிந்திக்க முடிகிறதே என்று எண்ணும்போது வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது காலநேரம் ஒத்து வந்தால் அசடன் கூட அறிவாளியாகி விடுவான் என்று அப்பா சொல்லுவது சரிதான் எனப்பட்டது அவன் சிந்தனை அடுத்த கட்டத்தை தொட்டது சாவது என முடிவுசெய்தாகி ட்டது இனி எப்படி சாக வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும் தூக்கு போட்டு சாகலாமா? தூக்கு போட நல்ல கயிறு வேண்டும் முக்கியமாக ஆள் அரவம் இல்லாத இடமாக தேர்ந்தெடுக்க வேண்டும்

     வீட்டில் எப்போதும் யாராவது இருந்து கொண்டே இருப்பார்கள் அது சரிபட்டு வராது தோட்டமோ கொல்லைக் காடோதான் சிறந்தது நல்ல உறுதியான மரமாக பார்க்க வேண்டும் தூக்குப் போட்டால் கழுத்து இறுக்கப்படும்  கழுத்தெலும்பும் சேர்த்து நசுக்கப்படும்  கண்கள் பிதுங்கி நாக்குத்தள்ளி மூக்கு வழியாக இரத்தம் வழிந்து.....ஐய்யோ கொடுமையடா சாமி அப்படி சாகக் கூடாது தப்பித் தவறி அப்படி செத்தால் அந்தக் காட்சியை காலகாலமாக ஊரார் பேசியே மீண்டும் மீண்டும் சாகடிப்பார்கள் இதோடு போகாது தூக்குப் போட்ட மரத்தை பார்க்கும் போதெல்லாம் இன்னார் மகன் இதில்தான் தொங்கினான் பேயாக இப்பவும் சுற்றித் திரிகிறான் என்றெல்லாம் கதைகட்டுவார்கள்

    மண்ணெண்னை ஊற்றி நெருப்பு வைத்துச் சாகலாமா ...? அதுவும் ஒத்து வராது சின்னதா கையில் சூடுபட்டதையே தாங்கமுடியலை உடல் முழுக்க நெருப்பு வைத்துக்கொள்ள நம்மால் ஆகாது சூடுதாங்காமல் கத்திக் காப்பாற்ற பட்டுவிட்டால் நெருப்புத் தழும்புகள் போகவே போகாது பார்பதற்கே இன்னும் கோரமாகிவிடும் தோல் சுறுங்கி நரம்புகள் முறுக்கி வாழ்வது நரகத்தை விட கொடுமை குளத்தில் விழுந்து விடலாமா இப்போவெல்லாம் ஐப்பசி மாதம் கூட எந்த குளமும் நிரம்புவதில்லை இப்படியே விழுந்தாலும் நீச்சல் தெரியுமே சரி கல்லைக்கட்டி குதிக்கலாம் அப்படி குதித்தால் இரண்டு மூன்றுநாட்கள் கழித்துதான் பிணம் மேலே வரும் தண்ணீர் குடித்து அழுகி உப்பலாகி வயிறுகிழிந்து குடல்சரிந்து மிதக்க வேண்டும் செத்தப் பிறகு எப்படி இருந்தால் என்ன என்று சொல்ல முடியாது அவமானம் அவமானம்தானே

   மருந்து வாங்கி சாப்பிடலாம் ரயிலில் போய் விழலாம் எந்தமாதிரி உயிரை போக்க நினைத்தாலும் சிக்கல் இருப்பதாக கதிரேசனுக்குப் பட்டது வேறு எந்தவிதத்தில் செயல் படலாம் என்று பலவாறு யோசித்து களைத்துப்போய் தூங்கி விட்டான் பொழுது விடிந்தது அப்பா வழக்கம்போல் தின்னையில் உட்கார்ந்து எதிர்வீட்டு தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தார் படுக்கையில் இருந்து எழுந்த கதிரேசனுக்கு அவர் குரல் கணீரென விழுந்ததுஅந்தக் கலெக்டர் இருக்கான் பாருங்க ஓணான் மாதிரித்தான் மூஞ்சி இருக்கு ஆனா அவனுக்கு என்ன மரியாதை அந்தஸ்த்து சொல்லி மாளாது போங்க'' என்று சொல்லி கலகலவென சிரித்தார்

''எங்க பெரிய அண்ணன் பார்க்க ஒன்னும் கவர்ச்சியாய் இருக்க மாட்டார் நம்ம கதிரேசு மாதிரி சுமாராத்தான் இருப்பார் அவருக்கு முதலில் எங்க மாமன் மகளைத்தான் கேட்டோம் அந்ந அம்மா மாப்பிள்ளை நல்லா இல்லைன்னு மறுத்திடுச்சி அப்புரம் காரமடைக்கு வாக்குப்பட்டு போச்சி கடேசியில என்னாச்சி புருஷன் குடிகாரன் கூத்திக் கள்ளன் வாழ்நாள் முழுக்க நிம்மதி இல்லாமலே போச்சி ஆனா எங்கண்ணன் அதையே வைராக்கியமா எடுத்துக் கிட்டாரு எங்க வைராவிலேயே யாரும் சம்பாதிக்காத சொத்து சுகம் என்று சேர்த்தாரு இன்னக்கி இந்த வட்டாரத்திலேயே பெரிய மனுஷனா தலைநிமிர்ந்து நிக்காருன்னா அதுக்கு காரணம் அத வைராக்கியம்தான் ஆளப்பார்த்து தோலப்பார்த்து மனுஷனை கணக்கு போடுவது சுத்த அபத்தம் நாலுபேரு மாதிரி அழகா இல்லையேன்னு கவலைப் படுரதும் முட்டாள்தனம்'' என்று சொல்லி மீண்டும் சிரித்தார்


  அந்த சிரிப்பு அவனுக்குள் மின்னல் கீற்றுமாதிரி இறங்கியது அப்பா சொல்லுவது சரிதானே மரியாதையோடும் சந்தோஷத்தோடும் வாழ வேண்டும் என்றால் அழகு மட்டுமிருந்தால் போதுமா அழகாக இருப்பவர்கள் எல்லோரும் இன்பமாகவா இருக்கிறார்கள் என்று நினைத்தான் இரவு தனக்கேற்பட்ட சிந்தனைக்கும் இப்போது ஏற்பட்ட மாற்றத்தையும் எண்ணிப் பார்க்கும் போது அவனுக்கே வியப்பாக இருந்தது ''ஐய்யா ராசா கதிரேசா இந்த சைக்கிளில் போய் கொஞ்சம் மாட்டுக்கு புல்லு எடுத்தாந்ருய்யா'' என்று அப்பா சத்தமாக சொன்னார்.

''சரிப்பா''

என்று பதில் சொல்லியவாரே படுக்கையில் இருந்து எழுந்தான் இப்போது அவன் பூங்கோதையை நினைத்து வெட்கப்படவில்லை.

2009-ம் ஆண்டு தமிழ் நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை - 12290

2009-ம் ஆண்டு தமிழ் நாட்டில் அரசியல் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை - 2584

2008-ம் ஆண்டு தமிழ் நாட்டில் அரசியல் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை - 1851

2009-ல் தேர்வில் தோல்வி கண்ட மாணவர்கள் தமிழ் நாட்டில் தற்கொலை செய்துகொண்ட எண்ணிக்கை - 385

இந்தியாவில் தற்கொலைகளில் , தமிழ் நாட்டுத் தற்கொலை எண்ணிக்கையின் விகிதாசாரம் - 15 சதவீதம் 



Contact Form

Name

Email *

Message *