Store
  Store
  Store
  Store
  Store
  Store

மரத்திற்குள் உறங்கும் மனம்அம்மன் கோயில்
அரச மரத்திற்கு
ஆயிரமாயிரம் கதை தெரியும்...


ஒருநாள் நள்ளிரவு
ஊரெல்லாம் உறங்கி கொன்டிருந்தது
சில
நரிகள் தவிற


வேரில் பழுத்த  பலா வீட்டிற்குள்
ஒரு
பன்றி நுழைந்ததை
பூட்டிட்டு சந்திக்கு இழுத்தன. . .


அரச மரத்தடியில்தான்
அசிங்கம் அம்பலமானது
பலாவை கொத்த நினைத்த வல்லூறுகள்
கத்தி கத்தி பறந்தன
உடல் வளைவுகளால்தீர்ப்பு மாறியது
மரம் மட்டும் சாட்சியாய் நின்றது

இன்னொரு நாள்
திருடன் பிடிபட்டான்
அவனும் அங்கேதான் கட்டப்பட்டான்
அடித்தவர்களை பார்த்து மரம்
சிரித்தது
பாவம்
அகப்பட்டுக்கொண்டவன் அடிபடுகிறான்
அடிப்பவனை யார் அடிப்பார்

அடிமேல் அடிவைத்து
மரத்தை  சுற்றினால்  திருமணம் கூடுமாம்
கூடியது  திருமணம்  மட்டுமா
நான்கு கண்களும்  தான்
மரம்  தனக்குள்
பேசிக்  கொண்டது
நான்  பார்க்காத   நாடகமா  என்று

அம்மாவை காப்பது யார் என்று
அண்ணனுக்கும் தம்பிக்கும்
வழக்கு
மரத்திற்கு கண்ணீர்  வந்தது
பத்துப் பிள்ளைக்கு
சோறு போட்ட இவளுக்கு
சோறு போட ஒரு பிள்ளை இல்லை
சாவ கொடுத்திருந்தாலாவது
ஆறுதலாய் அழுதிருப்பாள்

வெள்ளைவேட்டியும்
அரிதார சிரிப்பும்
கசங்காத நோட்டும்
கும்பிட்ட கையோடு
கருப்பு மனிதர்
இங்கேதான் காரில் இறங்கினார்
ஏழை மனங்கள்
வளைந்து நின்றதை பார்த்து
அரசமரம் காரித் துப்பியது
 கோலிக் குண்டுக்கும்
கில்லி கட்டைக்கும்
அம்மணமாய் புரளும் பிஞ்சுகளை
இலைத் தூவி அணைத்துக் கொள்ளும் மரம்
 வீட்டை எழுதிக் கொடு
கடைசி வரை  சோறு போடுகிறேன் என்ற
தம்பியை நம்பி
அனாதையாக செத்த
நொண்டிக் கிழவன் பிணத்திற்கு
பூ போட்டு
வழியனுப்பியது
இந்த ஒற்றை மரம்தான்


நெற்றியில் சுருக்கமும்
கையில் புத்தகமும்
கொண்ட ஒருவர் சொன்னார்
மரம்போல் நிற்காதீர்கள் என்று
மரத்திற்கு அவமானமாய் போய் விட்டது

நானும் மனிதனும் ஒன்றா
என்று நினைத்து
மழையை தின்ன மறுத்தது. . .

மரத்தின் சத்யாகிரஹம்
யாருக்கு தெரியும்
மௌனத்தை  மொழி பெயர்க்க
இதயங்களால் மட்டும்தான்  முடியும்
இன்று இதயங்கள்
மனிதர்களால்
சிலுவையில் அறையப்பட்டு
மரித்து போய்விட்டனவேகதை தெரிந்த அரசமரம்
சாட்சியாக நிற்பதற்காகவாது
உயிருடன் இருக்க வேண்டும்
ஆகவே மரமே...!
மழையைதின்று
 ஜீவனோடு இரு.. என
குயிலும் காகமும்  கூட்டாக கேட்டன  . . . . . . .
 


Contact Form

Name

Email *

Message *