Store
 Store
 Store
 Store
 Store
 Store

என்னைக் காணவில்லைஅன்புள்ள
அம்மா அப்பாவுக்கு
கண்ணுக்கு தெரிந்தாலும்
உங்கள்
கண்ணில் படாத கண்மணி
எழுதும் கண்ணீர் மடல்

 
இங்கு
என்னுடன் இருக்கும்
பெற்றோர்கள் இருந்தாலும்
அனாதைகளான அரும்புகள் நலம்
பிள்ளை பெற்றாலும்
மலடுகளான நீங்கள் நலமா ?

என்னால்
வளர்க்கப் பட்ட
பூனைக் குட்டிக்காவது
உங்கள்
அன்பு முழுமையாகக் கிடைக்கட்டும்
எனக்கு ஊட்டாத
பாலும் பிஸ்கட்டும்
அதற்காவது கிடைக்கட்டும்
அந்தப்
பூனைக்கு
என் வணக்கத்தைச் சொல்லுங்கள்


கதகதப்பான மையிருட்டில்
தொப்புள் கொடி சுவாசத்தில்
கைமடக்கி கால்மடக்கி
இல்லாத சிந்தனையிலிருந்து
மீண்டு பிறந்தபோது
வாய்விட்டு
அழுதது ஏன் தெரியுமா ?

கண்களை குத்திய
வெளிச்சத்தைக் கண்டு அல்ல
சுவாசக் கோசத்தில்
புத்தம் புதிதாக
நுழைந்த காற்றுத் தந்த
குறுகுறுப்பாலும் அல்ல

என் கண் முன்னால்
படம் எடுத்து நின்ற
கேள்வி குறியை கண்டு
அந்த குறி கேட்ட
புரியாத கேள்வியை பதிலாக்கவே
இந்த கடிதம்


உருண்டு புரண்டு
தவழ்ந்து
நடைவண்டி பழகி
விழுந்து எழுந்து
அழுது
கைதட்டி சிரித்து
உங்கள்
மடியில் கிடக்க வேண்டிய நான்
காப்பகத்தில்
ஆயா
திணிக்கும் பால் புட்டியை
முச்சுத் திணரத் திணர
உறிஞ்சி
  விட்டு
வயிற்றை
சுமக்க முடியாமல்
மல்லாந்துக் கிடக்கிறேன் 


வாய்வலிக்காத
அம்மாவின் மார்பும்
கன்னம் பதிக்க
அப்பாவின் தோளும்
கனவில் மட்டுமே
வந்து வந்து மறைகிறது
நிஜத்தில் இருந்தும்
நிழலை நேசிக்கும்
சுபாவம்
அப்போதே அரும்பி
விட்டது

அப்பா !
நீ
சின்னவனாய் இருந்தபோது
தொட்டிலில் இட்டு
ஆராரோ ஆரிராரோ
பாடி தாலாட்டினாளாம் பாட்டி
கைவீசம்மா கைவீசு
என கொஞ்சினாளாம் அத்தை
நீ
தளர்நடை பயின்று
நெஞ்சில் ஏறி கைகொட்டி
குதித்தப்போது
சங்குச் சக்கர சாமிவந்து
ஜங்கு ஜங்குன்னு ஆடுதாம்மென
சந்தம் படித்தாராம் தாத்தா
நான் தாலாட்டும் கேட்டதில்லை
தொட்டிலில் ஆடியதும் இல்லை
அத்தை முகம் பார்த்ததில்லை

தாத்தா பாட்டியென்றால்
யாரப்பா?
அவர்களுக்கும் நம்மைப் போன்ற
உருவம்தான் இருக்குமா?
அல்லது அவர்கள்
உன்பேச்சிலும் என்கனவிலும்
வந்துபோகும்
பூதங்களா பூச்சாண்டிகளா?
அம்மா !
சாணம் பூசியத்தரையில்
உடம்பெல்லாம் புழுதிப்பட
உருண்டு புரண்டு
மிட்டாய்காக அழுவாயாமே

மரப்பாச்சி பொம்மைக்கு
தலைவாரி
பூச்சூடி பொட்டிட்டு
உன்னோடு
கூடவே உறங்க வைப்பாயாமே

உன்னம்மாவின்
புடவைத் தலைப்பை கிழித்து
தாவணி போட்டு
கதவுக்கு பின்னால் பதுங்கி
நின்று சிரிப்பாயாமே

பள்ளிக்கூட
புத்தகப் பையில்
புளியங்காயும் மிளகாய்த்தூளும்
வைத்ததனால்
அடித்த ஆசிரியரை

கெட்ட வார்த்தையால் திட்டினியாமே

என்னநீ செய்தாலும்
என்பொண்ணுக்கு
குறும்பு
கொஞ்சம் ஜாஸ்தி என்று
உன்னப்பா
அணைத்துக் கொள்வாராமே

அப்பா என்றால்
அடிப்பவர் என்றுதான்
எனக்குத் தெரியும்
அவரால்
அணைக்கவும் முடியுமா?
அதுவெல்லாம்
இருக்கட்டும் அம்மா
குறும்பு குறும்பு என்கிறார்களே
அப்படியென்றால் என்ன ?

ஒருவர்
கண்ணைமூடி
எண்களை எண்ண
மற்றவரெல்லாம்
ஓடிஒளிந்துக் கொள்வது
கண்ணாமூச்சி ஆட்டமாம்
ஒருத்தர்
சட்டையை இன்னொருத்தர்

பிடித்து ஓடுவது
ரயில்வண்டி ஓட்டமாம்

ஆற்றங்கரை ஓரம்
மணலை குவித்து வைத்து
நடுவில் ஓட்டை வைத்தால்
அதுதான் வீடுகளாம்
களிமண்ணை பிசைந்து
உருட்டி விரலால்
துளையிட்டால் சட்டிப் பானைகளாம்

கருவேலம் முள்ளில்
பனையோலையை செருகினால்

காற்றாடியாம்
காகிதத்தை
மடித்து மிதக்க விட்டால்
கத்திக் கப்பலாம்

இன்னும்
என்னனென்வோ
பெயர் சொல்ல முடியாத
உல்லாச ஆட்டங்களாம்
இத்தனையையும்
நீங்கள் பார்த்திருக்கிறீர்களாமே
எனக்கு ஒருமுறை
டி.வி.யிலாவது காட்டக் கூடாதா?

இவையெல்லாம்
நிகழ்வதற்கு
பெரிய இடம் வேண்டுமே
அப்போதெல்லாம்
வீடுகளே இல்லையா?
அல்லது
எல்லோரும் மைதானத்தில்தான்
தூங்குவீர்களா

சுமைதூக்கும் தொழிலாளிக்கு
போனஸ் வேண்டுமென ஆங்கிலப்
பத்திரிக்கையில்
  கட்டுரை
எழுதியிருந்தீர்கள்
சுமப்பது சுலபம் அல்ல
பெரிய கஷ்டம்தான்

சுமைதூக்கும் எல்லோருக்கும்
போனஸ் வேண்டும் என்றால்
எனக்கும்தான் முதலில் வேண்டும்
தினம்தினம்
 நான்
சுமக்கும் புத்தகச் சுமை
அரிசி மூட்டையவிட
கனம்குறைந்ததா என்ன?
ஊரான்
கஷ்டமெல்லாம்
உன் கண்ணில் படுகிறது
உன்பிள்ளை
துன்பம்
ஏன் உனக்கு தெரியவில்லை அப்பா

தன்வீட்டை
தானே சுமக்கும்
ஆமைபோல்
என்முதுகு வளைந்து கிடக்கிறது

ஃபிரட்டும் ஜாமும்
தின்றுதின்று
வயிறும்
கல்லாகிக் கிடக்கிறது

கம்ப்யூட்டர்
 
திரையையே
பார்த்துபார்த்து
கண்களிரண்டும் பூத்துக்கிடக்கிறது

முதுகுவலி தீர
அம்மாமேல்
உருண்டு எழவேண்டும்

வயிற்றுக்
கனம்தீர
ஒருகவளம் சோறுவேண்டும்

கண்கள் குளிர
அப்பா
உன்முகத்தை பார்க்க வேண்டும்
விடுதியின்
மூட்டைப் பூச்சியும்
கொசுக்களும் இல்லாமல்
ஆசிரியையின் மிரட்டும்
முகம்காணாது
ஒரு நாளாவது
நிம்மதியாய் தூங்க வேண்டும்

ஒருநாள் கனவில்
கடற்கரை ஓரம்
கால்வலிக்க ஓடுகிறேன்

கல்லும் முள்ளும்
நிறைந்த பாதையில்
ரத்தம் சொட்டச்சொட்ட
நடக்கிறேன்

வெளிச்சம்
இல்லாத
காட்டிற்குள் அலைகிறேன்
கரடிப் புலிகளையும்
கண்டு மிரளுகிறேன்

அருவியில்
  விழுந்து
ஆற்றில் மூழ்கி
சுழலில் சிக்கி
பாறையில் மோதி
மொத்தப்படுகிறேன்

கொதிக்கும் எண்ணெய்
கொப்பரையில் கிடந்து துடிக்கிறேன்
நாலாபுறமும்

ஈட்டி நெறுங்கும்
சிறைச்சாலைக்குள் மாட்டிக் கொள்கிறேன்
வயிற்றில் பல்முளைத்த
குள்ள பூதங்கள்
என்னைத்
தூக்கிப்போட்டு பந்தாடுகின்றன

அலறலும்
அழுகையுமாய்
எதையோ
ஒன்றை நான் தேடுகிறேன்
கருவறை முதற்கொண்டு
என்னோடு இருந்த
அந்த
எதோ ஒன்றை
காணவில்லை
அது
எதுஎனவும்
எனக்குத் தெரியவில்லை
ஆயினும்
இன்னும் கடினமான
வழியிலெல்லாம்  தேடித்தேடி அலறு
கின்றேன்


தேடுவது எதுவெனத்
தெரிந்தாலாவது நிம்மதிக் கிடைக்கும்
இருண்டக் காட்டிற்குள்
குருட்டுக் கண்களுடன்
மீண்டும் மீண்டும்
முட்டிமோதி தேடுகிறேன்

திடீரென
காற்று ஒன்று வீசியது
அந்தக் காற்றில்
சிறகுகள் முளைத்த
அம்மா மாதிரி
அழகான பெண்ணொருத்தி வந்தாள்

கண்ணே!
நீ
தேடுவது தொலைத்துவிட்ட உனது
குழந்தைத்தனம் என்றாள் 

 எனக்கு இன்னும்
பத்து வயது பிறக்க வில்லை
குழந்தைப் பருவம் மாறவில்லை
அப்போது
எப்படி குழந்தைத் தனத்தை தொலைத்தேன்

நீனாகத்
தொலைக்க வில்லை
உன்னிடம் இருந்து
அதை மற்றவர்கள்
பறித்துக் கொண்டனர்
எனக்கூறி
அப்பெண்ணும்
மறைந்து விட்டாள்

அந்தக்கனவு
முடிந்து இந்தநிமிடம் வரை
யோசித்துக் கொண்டே இருக்கிறேன்
என்
குழந்தைத்தனத்தை
எப்போது எங்கு எப்படித் தொலைத்தேன்

சுற்றிவிட்ட பம்பரம்போல்
சிந்தனைச் சுழலுகிறது
வற்றிவிட்டக் குளத்திற்கு
கொக்குகள் வராததுபோல
விடையும் வரவில்லை

அதனால்தான்
இந்தக்
கடிதம் எழுதுகிறேன்

ஒருநாள்
விடிந்தும் விடியாதக்
காலைப் பொழுதில்
அட்டைப்பூச்சிப்போல்
அம்மாவை கட்டிப்பிடித்து தூங்கிய
என்னை
வலுக்கட்டாயமாய்
தூக்கி குளிக்க வைத்து
அழஅழ பாலர்வகுப்பின்
படிக்கட்டில் கொண்டு விட்டீர்களே
அப்போது
தொலைத்திருப்பேனா

தெருவில் இறங்கி

மிட்டாய் எச்சில்
முழங்கையில்
வழிய
நடந்த நேரம்
வீட்டிலிருந்து
ரைம்ஸ் படியென
இழுத்து வந்தீர்களே
அப்போதுதான்
தொலைந்திருக்குமா

புதிதாய் வாங்கிய
நாய்குட்டி பொம்மையை
பப்லுக்கு காட்ட
எடுத்துப் போகும்போது
டியூஷனுக்கு போவென
துரத்தி
  விட்டீர்களே
அப்போது
தொலைந்திருக்குமோ

நம்வீட்டுத் தோட்டத்தில்
பூத்திருந்த ரோஜாவில்
வந்து உட்கார்ந்த
வண்ணத்துப் பூச்சியை
தொட்டுப்பார்க்க ஓடி
கீழே விழுந்து
உடையெல்லாம் சேறான போது
அடித்தீர்களே
அப்போது தொலைந்திருக்குமோ 


அட!
தேவதை நான் தொலைத்ததாகச்
சொல்ல வில்லையே
யாரோ
எடுத்ததாகத் தானே சொல்லியது

அம்மா
உன்னை ஒன்று கேட்கிறேன்
கோபப்படாதே
அன்றொரு
நாள்
நீ செய்த
முந்திரி அல்வாவை
பக்கத்து வீட்டுச் சீனுவுக்கு

கொடுக்க எடுத்தபோது
திட்டி பிடுங்கிக் கொண்டாயே
அப்படி
என் குழந்தைத்தனத்தையும்
பிடுங்கி
எங்கோ மறைத்து வைத்திருக்கின்றாயோ

அப்பா
வீட்டுப்பாடம் செய்யாமல்
காந்திஜி படம்
வரைந்தபோது
அதைப் பிடுங்கி தூர எரிந்தாயே
அப்படி
இதையும் எங்கோ எரிந்துவிட்டாயோ

நீங்கள்
இருவரும் எடுக்கவில்லை என்றால்
என்
குழந்தைத்தனத்தை வேறு யார் எடுப்பார்?

உதட்டுக்குச்
சாயம்பூசி
ஒய்யாரமாய்
நடந்துவரும்
கணக்கு டீச்சரையும் கேட்டேன்
எடுத்ததற்கெல்லாம்
கம்பைத் தூக்கும்
பூகோள
வாத்தியாரையும் கேட்டேன்
அந்தப்பீஸ்
இந்தப்பீஸ் என
பணத்தையே கொத்தும்
பள்ளி நிர்வாகியையும் கேட்டேன்
எல்லாம் தெரிந்தும்
தெரியாததுபோல்
மௌனமாய்
எழுந்து நிற்கும்
பள்ளிக் கட்டிடத்தையும் கேட்டுவிட்டேன்
எல்லோரும்
மௌனமே சாதிக்கின்றனர் 

 நீங்களும்
அப்படி இருக்கலாமா
பெற்றப் பிள்ளையின்
கேள்விகளுக்கு
பதில்சொல்ல வேண்டியது
பெற்றவர்களின் கடன் அல்லவா? • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்

 •     

  Contact Form

  Name

  Email *

  Message *