( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சூரியனை சுட்ட வெப்பம்...

      அலெக்சாண்டரின் மனம் நாலா புறமும் தறிக்கெட்டு ஓடும் குதிரைகளைப்போல் ஓடியது, அவனது சிந்தனையில் இந்தியாவை வெல்ல வேண்டும், அதில் தனது ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும், அதுவும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று ஓடியது. ஆயினும் அதில் சில சிக்கல்களும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளும் மாறி மாறி தோன்றி அவனை அலைக்கழித்தது பாரதத்தை படை பலத்தால் வீழ்த்த வேண்டுமென்றால் மௌரிய பேரரசையும் அதன் கட்டுக் கோப்பான படை பலத்தையும் அழிக்க வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் சாணக்கியனின் மதி நுட்பத்தை மழுங்கடிக்க வேண்டும், அது இயலுமா? தன்னால் முடியுமா? சாணக்கியனின் மதிநுட்பத்தை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்கிறார்களே அவர் ஆயிரம் அரிஸ்டாடிலுக்கு இணையானவர் என்கிறார்களே அந்த மகா மேதையின் அறிவு பலத்தின் முன்னால் தனது சேனையின் பலம் சின்னாபின்னமாகி விடாதா? என்றெல்லாம் யோசித்து குழம்பினான், எதற்குமே அஞ்சாத அவன் இதயம் கௌடில்யரின் அறிவாயுதத்தை நினைத்த போதே சற்று நடுங்கியது.

   கூடாரமடித்து மதிய வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த படைவீரர்களையும் படுத்து புரண்டு கொண்டு இருந்த புறவிகளையும் மாறி மாறிப் பார்த்துவண்ணம் சிந்து நதிக் கரையோரம் நடந்து கொண்டு இருந்த அலெக்சாண்டருக்கு தூரத்தில் ஒரு மர நிழலில் ஒரு மனிதன் படுத்திருப்பது கண்ணில் பட்டது, அந்த மனிதனிடம் செல்லவேண்டும், அவனோடு பேசவேண்டும் என்ற அவா ஏனோ திடீரென ஏற்பட்டது, தனது நடையை துரிதப்படுத்தி அந்த மனிதன் அருகில் அலெக்சாண்டர் சென்றான்       அலெக்சாண்டர் வந்ததையோ தனது அருகில் ராஜ உடையில் ஒருவன்வந்து நிற்பதையோ அந்த மனிதன் சட்டை செய்யவே இல்லை, தன்பாட்டிற்கு கண்களை மூடுவதும் தனக்குள் எதையோ எண்ணி முறுவலிப்பதுமாக இருந்தான்

          அலெக்சாண்டர் அந்த மனிதனை உற்று கவனித்தான், திடகாத்திரமான தோள்களும் பரந்த மார்பும் அவனிடமிருந்து வெளிப்பட்ட ஒரு வித தேஜசும் மரியாதையை ஏற்படுத்தியது, ஆனாலும் அவனது அலட்சியம் தன்னை கவனித்தும் கவனிக்காது இருந்த போக்கும் மனதிற்குள் சிறிது சினத்தை மூட்டியது

    சினத்தை உள்ளுக்குள் மறைத்துவிட்டு அந்த மனிதனைப் பார்த்து “யார் நீங்கள்”? என்று கேட்டான், அலெக்சாண்டரின் கேள்வி பிறந்ததும் மின்னல் வெட்டியது போல் அவனைத் திரும்பிப் பார்த்த அந்த மனிதன் “ நீ யாரோ! அவனே தான் நான் ” என்றான், இந்த பதிலின் அர்த்தம் அலெக்சாண்டருக்குப் புரியவில்லை, ஆனாலும் தான் ஒரு மாமனிதன் முன் நிற்பதாக உணர்ந்தான், அந்த உணர்வு அவனுக்கு  ஏற்பட்டவுடன் மண்டியிட்டு அவனை வணங்கினான்,


    “ ஐயா நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது, உங்களது பதிலில் உள்ள ஆழமான பொருளால் நீங்கள் ஓர் மகாஞானியாக இருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன், நெருப்பை வாரி இறைத்தது போல் சுற்றுப்புறமெல்லாம் சூரியனின் தகிப்பு பரந்து கிடக்கிறது, மரநிழலும் குளிர்ச்சியை தரவில்லை ஆயினும் நெடுநேரம் இதே இடத்தில் நீங்கள் இருப்பது போல் நான் உணர்கிறேன், வெயில் உங்களை சுடவில்லையா? நான் கிரேக்கச் சக்கரவர்த்தி என் உத்திரவுக்காக ஆயிரம் பேர் காத்து கிடக்கிறார்கள்

    நான் திரும்பும் இடமெல்லாம் செல்வத்தையும் அழகிய வனிதையர்களையும் தவிர வேறு எதுவும் இல்லை, தாங்கத் தொட்டியில் பன்னீரில் குளிக்கவேண்டும் என்று நான் நினைத்த மறுகணமே அதைப் பெற முடியும், ஏன்? உலகில் எந்த மூலையில் நான் விரும்புவது இருந்தாலும் அதை பெற்றுவிடும் சூழல் எனக்கு உண்டு  ஆனாலும் என் மனது குழம்புகிறது, அச்சப்படுகிறது, துயரத்தால் துடிக்கிறது, நீங்கள் பெற்று இருக்கும் முகத்தெளிவையும் உங்கள் குரலில் உள்ள உறுதியையும் என்னால் பெறமுடியவில்லை, எதுவுமே இல்லாமல் எப்படி நீங்கள் இந்த வரத்தை பெற்றீர்கள்?” என்று அலெக்சாண்டர் இன்னும் எவையவையோ பேசிக் கொண்டே சென்றான், எல்லா பேச்சுகளையும் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதன் அலெக்சாண்டரை பார்த்து மெதுவாக கேட்டான்

    “ நீ படைநடத்தி எதை சாதிக்கப் போகிறாய்? ” என்று
    “ என் நாட்டின் எல்லையை விரிவுபடுத்தப் போகிறேன்,”
    “ அதன் மூலம் நீ பெறுவது என்ன, ”
    “ சக்ரவர்த்தி என்ற பட்டம்! ”
    “ சக்ரவர்த்தி பட்டம் உனக்கா? உன் உடலுக்கா? ”
    இந்தக் கேள்வியில் அலெக்சாண்டர் மௌனமானான், அவனுக்குள் குதித்துக் கொண்டிருந்த சமுத்திர அலை இன்னும் அதிகமானது, ஒருபுறம் சாணக்கியனைப் பற்றிய எண்ணமும் மறுபுறம் இந்தக் கேள்வியின் தாக்கமும் அவனை ஆற்றில் விழுந்த காகிதப்படகு போல் அலைகழித்தது நீருக்குள் விழுந்தவன் மூச்சுக்கு துடிப்பது  போல் தவித்தான்.

    “ ஐயா சக்ரவர்த்தி பட்டம் உயிருக்கா உடலுக்கா என்பது எனக்குப் புரியவில்லை, ஆயினும் உடலும் உயிரும் வேறு வேறானது என்று நீங்கள் கூறுவது போல் உணர்கிறேன், உடலும் உயிரும் வேறு வேறு என்றால் உடல் இல்லாமல் உயிர்  எப்படி தன்னை வெளிப்படுத்தும்? அல்லது உயிர் இல்லாமல் உடல் எப்படி இயங்கும்? அரிஸ்டாட்டிலின் உபதேசத்தில் இத்தகைய கேள்வியும் இல்லை, இதற்கு பதிலும் இல்லை அதனால்தான் எனக்கு எதுவும் விளங்கவும் இல்லை ” என்றான்

    அந்த மனிதன் சிரித்தான், புறாக்கள் படபடவென சிறகடித்துப் பறப்பது போல் இருந்தது அவன் சிரிப்பு, அன்பு மகனே உடலை ஆதாரமாக வைத்து சிந்திக்கும் போதுதான் பந்தபாசமும் பற்றும் வருகிறது, எங்கு பற்று வந்து விடுகிறதோ அங்கே துன்பமும் துயரமும் தானே வந்து விடுகிறது, அந்த பற்றினால் தான் கிரேக்கத்திலிருந்து சிந்து நதிவரை நீ ஓடிவந்திருக்கிறாய், அதோ அங்கே உனது பாசறையில் ஓய்வெடுக்கும் வீரர்களையும் குதிரைகளையும் பார். குதிரைகளின் முகத்தில் உள்ள மலர்ச்சி உன் வீரர்களுக்கு இல்லை ஏன்? ஒரு நிமிடம் சிந்தித்துப் பார், குதிரைகளுக்கு மரண பயம் இல்லை, உன் வீரர்களுக்கு நடைபெற போகும் யுத்தத்தில் ஏற்படப்போகும் சாக்காட்டைப் பற்றிய பயம் முகத்தை வாட்டசெய்திருக்கிறது, குதிரைகளுக்கு இல்லாத மரண பயம் மனிதர்களுக்கு அறிவு வளர்ச்சியாலா வருகிறது? இல்லை மகனே இல்லை, சரீரத்தின் மேல் கொண்ட பற்றுதலால் வருகிறது, சரீரங்களால் தான் வாழமுடியும என்று அவர்கள் நம்புகிறார்கள், அதனால் தான் துயர வயப்படுகிறார்கள்,

    “ நீ வெறும் சரீரமல்ல சரீரம் என்பது ரதம் போன்றது, அந்த ரதத்தை இழுத்துச் செல்லும் குதிரை ஆத்மாவாகும், குதிரை இழுக்கிறது, ரதம் செல்கிறது, ஆனாலும் ரதம் நினைத்துக் கொள்கிறது தன்னால் தான் குதிரை ஓடுகிறது என்று உண்மையில்  குதிரைதான் ரதத்தை இழுக்கிறது,  அதே போன்று தான் உனது உடலை உன் ஆத்மா இயக்குகிறது, நீ உடல் அல்ல ஆத்மா என்பதை அறிந்து கொள் ”
   “ ஐயா ஆத்மா என்றால் என்ன? ”
    “ சிலர் அதை உயிர் என்கிறார்கள், வேறு சிலர் அது உயிரை இயக்கும் சக்தி என்கிறார்கள், இது வாதம்தான் ஆனால் ஆத்மாவை உணர்ந்தவர்கள் அது விவரிக்க முடியாத மாபெரும் சக்தி என்கிறார்கள், ஆத்மாவால் உயிர் இயங்குகிறதா? அல்லது உயிரே தான் ஆத்மாவா? என்பதை அரிதியிட்டுக் கூற பலபேர் முயன்று வருகிறார்கள், ”

    “ ஆனாலும் இன்னும் முடிவுக்கு யாரும் வந்தபாடில்லை, இனிமேலும் யாரும வரமுடியாது என்றே நான் கருதுகிறேன், என்னைப் பொருத்தமட்டில் ஆத்மா உயிராகவும் இருக்கிறது உயிரை இயக்குவதாகவும் இருக்கிறது, அதனால் தான் ஆத்மாவை நான் கடவுள் என்கிறேன், காணும் பொருள் எல்லாம்-மரம் செடி புழு பூச்சி இந்த மணல் அந்த ஆறு அங்கு நிற்கும் குதிரைகள் நீ நான் எல்லாமே கடவுள் என்ற பேரத்மாவின் சிறு அம்சங்களே என்றே நான் உணருகிறேன், ”

    “ அதாவது கடவுளின் தன்மை உனக்குள்ளும் உள்ளது எனக்குள்ளும் உள்ளது மற்ற எல்லா உயிரினங்களிலும் அந்த தன்மை உறைந்து மறைந்து கிடக்கிறது, அதை உணர வேண்டும், வைக்கோல் பொதிக்குள் ஊசியைக் தேடுவது போல் சரீரத்திற்குள் சென்று ஆத்மாவை தேடுவது, தேடி அதை அடைவது சற்று சிரமமான காரியந்தான், ஆனாலும் முடியாத காரியம் இல்லை, நீ வெற்றிகளை மட்டுமே இதுவரை கண்டு இருக்கிறாய், சரீர சுகத்திற்கான காரணங்கள் மட்டுமே உனக்கு காட்டப்பட்டு இருக்கிறது, நாடும் நகரமும் அதிகாரமும் பதவியும் மட்டுமே அறிந்தவனாக இருக்கிறாய், ”

    “ உன்னைவிட சிறந்தவன் உன்னைவிட பராக்கிரமசாலி யாருமே இல்லை என்று உனக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது, அதனால் தான் உன்னை விட மேலானவனைப் பற்றி கேள்விப்படும் போது அச்சப்படுகிறாய், அதனால் துயரம் ஏற்படுகிறது, ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள், உனக்கு மேலானவர் எவரும் இல்லை கீழாகவும் யாரும் இல்லை வானத்திற்கு கீழே பூமிக்கு மேலே எல்லாமே சமமானது, எவருமே சரி நிகர் சமமானவர்கள், இந்த சமநோக்கு உனக்கு வரவேண்டுமென்றால் உள்நோக்கு என்பது முதலில் வரவேண்டும், உன் ஆசைகளை உற்றுப் பார் உன் அழுகைகளை ஆழமாக நோக்கு உன் அறிவை பகிர்ந்துபார், அப்போது புரியும் அவை எல்லாமே அர்த்தமற்ற ஒரு நாடகம் என்று,”
     “ நீனும் நானும் மற்ற எல்லா மனிதர்களும் இத்தகைய அர்த்தமற்ற நாடகத்தைதான் நடத்திக் கொண்டு இருக்கிறோம் அல்லது நடித்துக் கொண்டு இருக்கிறோம்,” இப்போது அலெக்சாண்டர் கேட்டான், “ வாழ்க்கை என்பது நாடகம் தானா? நாம் வெறும் நடிகர்கள் தானா? அப்படி என்றால் இந்த நாடகத்தில் கதாசிரியன் யார்? அவன் எங்கே இருக்கிறான்? எப்படி இருப்பான்? ”

    ஞானி மீண்டும் சிரித்தான், “நான் முதலிலேயே சொன்னேன் பெரும் ஆத்மாவின் சிறு துளிதான் நாம் என்று அந்த பெரும் ஆத்மாதான் நாடக ஆசிரியன் அப்படி என்றால் நீனும் நானும் கூட கதாசிரியன் தான், பரமாத்மா பாத்திரங்களை உருவாக்கித் தருகிறான், நாம் பாத்திரத்தின் இயல்பறிந்து அதற்கு தகுந்தாற்போல் பாவனை செய்கிறோம், இந்த மரம் மரமாக நடிக்கிறது, நீ மன்னனாக நடிக்கிறாய், நான் ஞானியாக நடிக்கிறேன், மரம். மன்னன். ஞானி என்று பெயர்கள் வேறுபட்டாலும் அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான், ”

    “அதாவது சரீர சம்பந்தம் இருப்பதனால் எல்லாமே ஜீவாத்மாக்கள் தான், இதைப் புரிந்து கொள், இப்போது புரிந்ததை விட இன்னும் ஆழமாக தனிமையில் புரிந்து கொள், அப்போது ஞானம் பிறக்கும், அந்த ஞானம் இன்பம் துன்பம் வெற்றி தோல்வி காதல் மோதல் எல்லாமே ஒன்றுதான் என்பது விளங்கும், அப்படி விளக்கும் போது நீ ஏன் கவலைப்படுகிறாய், நான் ஏன் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வர ஆரம்பிக்கும், அவஸ்த்தைகள் என்பது உடம்புக்குத்தான் நமக்கு இல்லை என்ற புத்தி தெளிவு ஏற்படும் போது வெய்யில் உன்னை சுடாது பனி உன்னை குளிர்விக்காது எந்த மாற்றமும் இல்லாத சமுத்திரத்தைப் போல் எப்போதும் நீ ஆழமாக இருப்பாய் ஆனந்தமாகவும் இருப்பாய்,”

    “நான் மெலிந்தவன் என்று எண்ணும் போது வலிமையை கண்டு பயம் வரும், வலிவும் மெலிவும் ஒன்றுதான் என்ற ஞானம் வரும்போது துயரமும் துன்பமும் ஓடிப்போகும் உன் உடம்பிற்குள் இருந்து நீ வெளியில் வா அப்போதுதான் சாணக்கியனும் சாமான்யனும் ஒன்றாகப்படுவார்கள்,”
    சந்திரனை மறைத்துக் கொண்டிருந்த மேகத்திரை விலகி குளிர்ந்த கதிர்கள் பரவுவதைப் போல் அலெக்சாண்டரின் மனக்குழப்பம் விலகியது, சாம்ராஜ்ய பெரும் கனவும் சாணக்கியனின் பேரச்சமும் ஓடி மறைந்தது, ஞானியிடம் அலெக்சாண்டர் முடிவாக கேட்டான், ஐயா தாங்கள் யார் ஞானி சொன்னான் நான் சாணக்கியனின் உதவாக்கரை சீடன் இப்போது அலெக்சாண்டருக்கு முற்றிலுமாக குழப்பம் நீங்கியது, சரீரபற்று விலகினால் துயரம் விலகும் என்பதை முழுமையாக நம்பினான்

''அனைத்தையும் சமமாக நோக்குவதால் என்ன லாபம்?"" மன்னனின் கேள்வி இது சாது சொன்னான் "" நாடாளும் மன்னன் நீ நிற்கின்றாய் ஒரு மண் ஓடு கூட சொந்தம் என்றிராத நான் படுத்திருந்து பதில் பேசுகிறேன் இதுதான் உனக்கும் எனக்கும் உள்ள வேற்றுமை '' சாதுவின் பதிலில் இருந்த உறுதி வீர சூரியனை சுட்டது''

+ comments + 7 comments

வணக்கம்

ஐயா முடியல ,

உங்களின் கருத்துக்களை திணிக்க வரலாற்றை தவறாக பயன்படுத்தாதீர்கள்

அலெக்ஸான்டர் வந்து சென்றபின்தான் சாணக்கியனும், சந்திரகுப்தனும் மௌரிய பேரரசை உறுவாக்கினார்கள்.

நன்றி

03:20

Mr.Vanam,
History says tht alexander and chanakya lived during the same time.They were involved in wars . Please brush your history before posting comments.

Thanks

வரலாற்றிற்கு முற்றிலும் பிழையான கேள்வி இது. அலெக்ஸாண்டர் தூதர் சந்திரகுப்த மவுரியரை சந்தித்து இருக்கிறான் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் உண்டு, மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க பிரதிநிதி அலெக்ஸ்சாண்டரின் அவையில் இருந்தவன் என்பதும் அவனே மவுரியர்களின் அவைக்கு வந்தவன் என்பது உலகறிந்த செய்தி. மேலும் கி.மு 230 முதல் 223 வரையிலான காலத்தில் அலெக்ஸாசாண்டரால் ஏற்பட்ட அந்நிய ஆக்கிரமிப்புகளை சந்திரகுப்தன் முற்றுலுமாக ஒழித்துக் கட்டினான் என்பதும் வரலாற்று உண்மையாகும். சந்திர குப்தனும் அலெக்சாண்டரும் ஒருவருக்குகொருவர் நேருக்கு நேர் பார்க்க வில்லையே தவிர பரஸ்பரம் அறிந்திருந்தார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்த கேள்வியை கேட்டவர் அதையெல்லாம் படித்து அறிந்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

சேமித்து வைக்க வேண்டிய பொக்கிஷம் இந்த தகவல் , அருமை நன்றி ....

Anonymous
08:39

பலாப் பழச்சுவையை சுவைக்காமல் அதன் தோலைத்தின்று இடர்ப்படும் மூடர்கள் போல் இருக்காதீர்கள் என்னருமை வரலாற்று அறிஞர்களே!
சுவாமிஜி எவ்வளவு அருமையான நுட்பமான ஆன்மீகக் கருத்துக்களை எவ்வளவு அழகாகத் தந்துள்ளார். அதை உணர்ந்து நாமும் சற்று உள்நோக்கிப் பார்ப்பதை விடுத்து என்னமோ வரலாறு நடந்தபோது பக்கம் இருந்து எழுதினவர்கள் போல் வாதிடுவது எவ்வகையில் அறிவுடைமை.இக்காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு வகையில் நம்பும்படியாகச் செய்திகளைத்தருகின்றன. நடுநிலையில் இருப்பவனுக்கு எது உண்மை என்றே புரிவதில்லை. இந்த நவீன விஞ்ஞான உலகிலேயே வரலாறுகளுக்கு இந்தக்கதி. இதையெல்லாம்
உணராமல் எவரோ சில ஓட்டைச் சான்றுகளைக் காட்டி எழுதி வைக்கும் வரலாரை நம்புபவர்களை மூடநம்பிக்கையாளர் என்பதில் என்ன தவறு இருக்கிறது. எல்லாம் நம்பிக்கைதான். சொல்லும் ஆதாரங்களையும் நம்பினால்தான் கதி மோட்சம்.
சுவாமியின் இக்கதையில் எவ்வளவு ஆன்மீகக் கருத்துக்கள் சிந்தித்துச் செயல்படுத்த வேண்டிய கருத்துக்கள் இருப்பதை ஆழ்ந்து படித்தஉணருங்கள் என்னருமைச் சகோதரர்களே!;உணர்ந்து உள்நோக்கி நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து மேலும் ஆன்மீகமாக முன்னேற முயலுங்கள் என்னருமைச் சகோதரர்களே!

Swamiji, Evvalavu periya Unmaiyai
ivvalavu azhagaha solli ulleergal.
Mikka nantri.

10:26

nantri


Next Post Next Post Home
 
Back to Top