Store
  Store
  Store
  Store
  Store
  Store

இடித்தது தின்னையை அல்ல என்னை


உயிரைவிட
மேலான
என்று தொடங்கினால்
உலக வழக்கில் அது சாதாரணமாய் படும்
சம்பிரதாயமாகக் கூட தோன்றலாம்
எனவே
உன்னை
என்னைவிட மேலானவன்
என அழைப்பதுதான் சரியானதாக இருக்கும்
எனவே
நண்பா
அப்படி அழைத்தே
இந்தக் கடிதத்தை துவங்குகின்றேன்

படிப்பு ஏனோ
எனக்கு ஏறவில்லை
ஆயினும்
நீ படித்தாய்
அவனோடு சேர்ந்தால்
மாடுமேய்க்க கூட லாயக்கில்லாமல்
போய்விடுவாய்
உன்னோடு
அவனைப் பார்த்தால்
தோலை உரித்துவிடுவேன்
என மிரட்டிய அப்பாவை
அலட்சியம் செய்துவிட்டு
என்னோடு தோப்பிற்கு வருவாய்

ஒரே மாங்காய்க்கு
இரண்டுபேர் கல்லெறிவோம்
புளிப்பும் காரமுமாய்
தின்றுவிட்டு
மொட்டைப் பாறையில்
மல்லாந்துப் படுத்து
வானத்தை அளப்போம்
சிலநேரம்
இங்கிலீஷ்  டீச்சரின்
பெண்ணின் அழகையும் அளப்போம்

நம் வகுப்பு தோழர்கள்
பலவேசமுத்து, இசக்கியப்பன்,
பெருமாள், அப்துல்லா
இவர்களெல்லாம்
எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை
ஆனால்
என் கனவுகளில்
இன்னும் மீசைமுளைக்காத
முகத்தோடு வந்து பேசுகிறார்கள்

அவர்களோடு
நீயும் நானும்
என் வீட்டுக் கூடத்தின்
தூண்களில் மறைந்து கண்ணாமூச்சி
விளையாடினோமே
நினைவிருக்கிறதா
பரண்மீது
ஒளிந்திருந்த மணி
தூங்கி விட்டதனால்
எல்லா இடமும்
தேடி அலைந்து கிடைக்காமல்
பயத்தோடு
திண்னையில் முடங்கிக் கிடந்தோமே
அந்தத் திண்னை
எவ்வளவு அழகாக இருக்கும்
வெள்ளிக் கிழமைதோறும்
சாணம் மெழுகி
பூப் பூவாக
சுண்ணாம்புக் கோலமிட்டு
அகல் விளக்கு ஏற்றிவைப்பாள் பாட்டி

 விளக்கில் வந்து
விழுகின்ற விட்டில் பூச்சிக்களை
பிடிக்க
சுவற்றில் தவமிருக்கும் பல்லி
பல்லியைப் பிடிக்க
பதுங்கி
அசையாமல் படுத்திருக்கும் பூனை
இப்படி எத்தனையோ
இந்திரஜாலங்களை
அதில் கண்டிருப்போம்

அத்தனையும் தந்த
என் வீட்டுத் தின்னையை
இடித்து விட்டார்களாம்
அடி வயிற்றில் நெருப்புக் கத்தியை
செருகியது போலிருந்தது

எனக்கும் தின்னைக்கும்
உள்ள உறவு
தாய்க்கும் மகனுக்கும்
உள்ள உறவென்று யாருக்குத் தெரியும்


பணக்கட்டுக்களையும்
நகை நட்டுகளையும்
தொட்டு உறவாடுபவர்களுக்கு
மனதிற்குள் இசைக்கும்
ஆத்ம கீதத்தின்
ஸ்ருதியின்
சுகம் தெரியாது

இந்த தின்னையில் இருந்து தான்
மேற்கு வானத்தின்  அழகையும்
அங்கே தெரியும்
மலை முகட்டையும் ரசித்திருக்கிறேன்

வானமும் மலையும்
மௌனமாக சொல்லும்
காட்சித் தத்துவம்
வெறும் கல்லையும் சிற்பமாக்கும்
கல்லே சிலையாகும் போது
மனிதனுக்குள் எத்தனை
ரசாயன மாற்றம் ஏற்படும்
மாற்றத்தின் விளைநிலம்
தின்னை அல்லவா

தன்னைத்தான் உண்பவன்
தின்னையைத் தின்பான்
தின்னையில் இருந்து துவங்கிய
ஆன்னா ஆவன்னா தான்
கதையாய் பிறந்து
கவிதையாய் வளர்ந்து
பரிசும் பாராட்டும்
விருதுகளுமாய்
வாகனமுமாய் அணிவகுத்து நிற்கின்றன

பாட்டியின் மடியில்
தலை வைத்து
பழங்கதைகள் கேட்டதும்
கற்பனை சுகத்தில் மிதந்ததும்
இந்த
தின்னையில்தான்

கண்ணாமூச்சிக்கு
அம்மா மடிக்குள்   ஒளிந்து
அப்படியே தூங்கிப் போனது
இந்த தின்னையில் தான்

அப்பா கொண்டுவரும்
கடலை முறுக்கை
திருடி யாருக்கும் தெரியாமல்
தின்பதும் தின்னை ஓரத்தில் தான்

பாட்டி வெற்றிலை இடிப்பதும்
அம்மா கதைபேசுவதும்
அப்பா காலாட்டுவதும்
அக்கா தலை வாருவதும்
தம்பி தூங்குவதும்
பாப்பாவுக்கு எண்ணை தேய்ப்பதும்
கோழிக்கு தவிடு பிசைவதும்
பிச்சைக்காரன் இளைப்பாறுவதும்
இந்த
தின்னையில் தான்


இப்போது
தின்னை இல்லை
அதன் உறவுமில்லை
வெறும் கனவுகள்
 மட்டும் தான்
காய்ந்த நிலத்தில்
பாளங்கள் போல வெடித்துக் கிடக்கிறது
இப்போது
கடந்த காலத்து
நினைவுகளை மட்டுமே
அசைபோடும் மாடுகளாகி விட்டோம்
நமது
உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும்
உள்ள உயிர்
இங்கு யாருக்கு தெரியப்போகிறது


  • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்




  • Contact Form

    Name

    Email *

    Message *