Store
  Store
  Store
  Store
  Store
  Store

லஞ்சம் வாங்கவில்லை என்றால் உயிர் போய்விடும்    ஞ்சம் இல்லாத நாடு உலகில் எங்கேனும்  இருக்கிறதா? தோண்டித்துருவி  தேடிப் பார்த்தாலும் அப்படி ஒரு நாடு கிடைவே கிடையாது. வேண்டுமென்றால் புதிதாக எதாவது ஒரு நாடு தோன்றினால் உண்டு, ஆனால் அங்கு கூட முதலில் குடியேறினால் அதிகமான நிலம் புலன்களை வளைத்து போட்டு கொள்ளலாம் என்பதற்காக யாருக்காவது லஞ்சம் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை, வளர்ந்த நாடுகள் பணக்கார நாடுகளில் கூட அதிகாரிகள், அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள், என்று இருக்கும் கும்பல்கள் சர்வசாதாரணமாக லஞ்சம் வாங்கி குவித்து இருக்கிறார்கள், ஏழை நாடுகளை பற்றி கேட்கவே வேண்டாம்,  லஞ்சம் கொடுக்காமல் மழை கூட வானத்திலிருந்து கிழே இறங்காது,  லஞ்சத்தை அடிப்படை மூலதனமாக வைத்தே பல தொழில்கள் அங்கு நடைபெற்று வருகின்றன, லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் நின்று விட்டால் அந்நாடுகளில் தொழில் துறை கூட முடங்கி விடும்.


   நமது இந்தியாவை பொறுத்தவரை  லஞ்சம் என்பது கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றியது என்றே சொல்லலாம்,  சாம, பேத, தானம் தண்டம் என்ற ஒரு வாசகத்தை நாம் அடிக்கடி பயன்படுத்துவோம்,  சிலருக்கு இதன் பொருள் தெரியும்,  பலருக்கு தெரியாது,  ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமென்றால் அதற்கு யாராவது தடையாக இருக்கிறார்கள் என்றால் முதலில் அவர்களிடம் இதமாக பேசி பார்க்க வேண்டும்.  அதன் பெயர்தான் சாம பேசியும் அவர்கள் ஒத்துவரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபரின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், அல்லது அந்த நபரை சார்ந்தவர்களிடம் பிளவை ஏற்படுத்த வேண்டும்.  இதன் பெயர் தான் பேதம், நம்மால் குழப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற நிலை வருகின்ற போது அவர்களுக்கு எதாவது பொருளாக அன்பளிப்புகள் கொடுத்து முடிக்க பார்க்க வேண்டும்.  இதன் பெயர் தானம்,  எதற்குமே ஒத்துவரவில்லை என்றால் ஆளை போட்டு தள்ளிவிட வேண்டியது தான் இது தான் தண்டம்,  இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது காரியம் சாதிக்க அன்பளிப்புகள் வழங்கலாம் என்ற சிந்தனை தோன்றிய இடத்தில் தான் லஞ்சம் என்பது பிறந்தது, அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் என்னென்ன வகையான லஞ்சங்கள் கொடுக்கலாம் என்று பெரிய பட்டியலே போட்டு வைத்திருக்கிறார்,  அதில் முக்கியமானது தங்கம், பெண்கள், நிலம், மது, இப்படி பட்டியல் நீள்கிறது,  ஆனால் இந்த லஞ்சகங்கள் எல்லாம் அந்த காலத்தில் எதிரிநாடுகளை வீழ்த்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப் பட்டது.  உள்நாடு என்று வரும் போது ஏறக்குறைய பதினான்காம் நூற்றாண்டு வரையில் அரசு நிர்வாகம் என்பது பெரிய அளவில் லஞ்சத்தை எதிர்கொள்ளவில்லை, அதிகாரிகளும் அரசனும் ஒரளவு பாவ புண்ணியம் பார்ப்பவர்களாகவே அன்று இருந்திருக்கிறார்கள்.

    அரசியலாக இருக்கட்டும் அறிவியல் மற்றும் ஆன்மீகமாக இருக்கட்டும் இந்தியர்களுக்கென்று தனி பாணி உண்டு, அந்த பாணியை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது நமக்கே பிரம்பிப்பாக இருக்கும் அல்லது அதிர்ச்சியாக இருக்ககும்.  இந்த லஞ்ச விஷயத்தை எடுத்து கொள்வோமே இதில் கூட  நம் பாணி அலாதியானது தான்.  மற்ற நாடுகளில் லஞ்சம் கடமையை செய்யாமல் இருப்பதற்கும் அல்லது கடமையை மீறி செயல்படுவதற்கும் தான் கொடுக்கப்படுகிறது.  நம் நாட்டிலோ கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இவ்ளவு அற்புதமான நிர்வாகிகளை உலகத்தில் எந்த மூலையில் தேடினாலும் காண்பது கடினம், இந்த அதிசய பிறவிகளை நிர்வாகிகளாக பெற்றதற்கு இந்திய மக்கள் அனைவரும் பலநூறு வருஷம் தவமிருந்திருக்க வேண்டும்.  லஞ்சம் வாங்குவதில் திறமைசாலிகள் யாரென்று போட்டி நடத்தினால் உலகளவில் முதல் பரிசு நமக்கு தான்.


    அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பொதுமக்களும் கூட லஞ்சம் வாங்ககூடாது என்று எத்தனையோ தடுப்பு முறைகளை உருவாக்கியிருக்கிறார்கள்.  லஞ்ச ஒழிப்புதுறை என்பது ஒவ்வொரு இலாக்காக்களிலும் தனித்தனியாக இருக்கிறது.  உதாரணமாக தொலைபேசி துறையில் ஊழலை தடுப்பதற்கென்றே தனிபிரிவு  உண்டு,  இப்படி எல்லாதுறையிலும் தனிதனியாக உண்டு, இது தவிர ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு, லோக் அயுத்தா என்ற தனி அரசு நிறுவனங்களும் செயல்படுகின்றன.  இத்தனையும் தாண்டி லஞ்சம் எப்படி தாண்டவமாடுகிறது என்று அப்பாவியாக நாம் சிந்திக்க வேண்டியதே இல்லை, இந்த பிரிவுகள் எல்லாம் ஆளும் நிர்வாகத்திற்கு ஆகாதவர்களை தான் தோண்டி எடுப்பார்களே தவிர  ஆளும் வர்த்தக்திடம் மௌனியாகி விட வேண்டியது தான், இது பொது விதியாகும்.

    நமது அரசாங்கம் வார விடுமுறை ஏன் விடுகிறது தெரியுமா? அலுவலக நாட்களில் லஞ்சத்தை எப்படி வாங்கலாம்? எப்போது வாங்கலாம்? யார் யாரிடத்தில் வாங்கலாம்,  புதிபுதிதாக வாங்குவதற்கு என்னென்ன வழிமுறைகளை ஏற்படுத்தலாம்? என்று ஆற அமர சிந்திப்பதற்கு தான்,  எந்த பதவியில் இருப்பவர்களுக்கு எத்தனை சதவிகிதம்  லஞ்சத்தை கொடுக்கலாம் என்ற ஒரு விதிமுறையே நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இந்த விதி   முறையின்  நுணுக்கம் என்பது நாளுக்கு  நாள் நவீனபடுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.  அவ்வபோது வானொலியிலும் , தொலைக்காட்சியிலும் நிதிகமிஷன் என்ற பெயரை நாம் கேட்டிருப்போம், அந்த கமிஷனின் வேலை நாட்டின் ஒட்டுமொத்த வருவாயை மத்திய அரசுக்கும், மாநில அரசுகரக்கும் முறைப்படி பிரித்து கொடுப்பது தான்,  நிதிகமிஷனின் பகிர்வு முறையில் கூட தவறுகள் ஏற்படலாம்,  ஆனால் லஞ்சத்தை தலைக்கு தலை நிர்ணயம் செய்வதில் மயிரளவு கூட பிசகுவது கிடையாது.  அவ்வளவு நேர்த்தி மிக்க பணி அவர்களுடையது.


    பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை இன்னின்ன காலத்தில் தான் வாங்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பார்கள்,  ஆனால் அதில் கூட பல நேரங்களில் போட்ட முதல் பூஜ்யமாகி விடுவதுண்டு, தொழில் வியாபாரம் என்று வந்து விட்டாலே ஒரு நேரம் லாபமும் இன்னொரு நேரம் நஷ்டமும் வருவது இயற்கை, ஆனால் நஷ்டமே ஏற்படாத ஒரு துறை என்று ஒன்று இந்தியாவில் இருக்குமென்றால் அது வருவாய் துறை தான், அந்த துறையில் வேலைக்கு சேரும் போது கோவணம் கட்டி போனவன் கூட கோட்டும் சூட்டு மாகத்தான் போன பிறகு காட்சியளிப்பான்.

    வருவாய் துறையில் கடைநிலை பணி  தலையாரி வேலை தான், ஒரு தலையாரி ஓய்வு  பெறுகிறான் என்றால் அந்த இடத்திற்கு அடுத்தவர்கள்  வருவதற்கு நடக்கும் போட்டா போட்டி இருக்கிறதே அதை சொல்லி மாளாது.  கிராம நிர்வாக அதிகாரி. வருவாய் கண்காணிப்பாளர், தாசில்தார் என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து விஷேசமாக  கவனிக்க வேண்டும்.  வி.ஏ.ஒ பின்னால் புத்தக கட்டுகளை தூக்கி கொண்டு அலைய வேண்டிய வேலைக்கு பிள்ளையார் கோவிலில் சுண்டல் வாங்க அடிதடி நடப்பது போல போட்டி நடப்பது ஏன் என்று கேட்கவே வேண்டாம்.  கிராம நிர்வாக அதிகாரி வாங்குகிற லஞ்சம் சரிபாதி தலையாரிக்கு வந்துவிடும்,  லட்ச கணக்கில் முதலீடு செய்து வியாபாராம் செய்பவனுக்கு  கூட வருடத்தில் சில ஆயிர ரூபாய் தான் வருவாய் கிடைக்கும்.  ஆனால் தலையாரி வேலை கிடைத்த சில மாதங்கிலேயே வட்டிக்கு பணம் கொடுக்க ஆரம்பித்து விடுவான்.    எல்லா அரசு ஊழியர்களையும் லஞ்ச பேர்வழிகள் என்று எப்படி சொல்ல முடியும்.  எனக்கு ராமசாமி என்று ஒரு தாலுக்கா ஆபிஸ் குமாஸ்தாவை தெரியும்,  அவர் பத்து பைசா கூட லஞ்சம் வாங்குவது கிடையாது,  இவரை போல எத்தனையோ  நல்ல மனிதர்கள் இருக்கலாம் அல்லவா, அவர்களை கண்டுபிடித்து பாராட்டலாமே என்று சிலர் கேட்கலாம் உண்மையில் லஞ்சம் வாங்காத சிலர் இருக்கிறர்கள் அவர்கள் யாரென்றால் வாய் திறந்து கேட்பதற்கு கூச்சப்படுபவர்கள், தப்பிதவறி குறைவாக கேட்டு மதிப்பை கெடுத்து கொள்வோமோ? என்று குழம்புவோர்கள் நாம் கேட்பதை பக்கத்து சீட்டுக்காரர் ஒட்டு கேட்டு விடுவாரோ என்று சந்தேகப்படுபவர்கள் லஞ்சம் வாங்கினால் விஷயம் தெரிந்தவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டுமே என்று தயங்குபவர்கள் தான் லஞ்சம் வாங்க சற்று யோசிக்கிறார்கள்

    பெரிய பொறுப்புகளில் புதியதாக வந்து அமருபவர்கள் உடனடியாக லஞ்சம் வாங்க ஆரம்பிக்கமாட்டார்கள்,  இதற்கு இரண்டு காரணத்தை சொல்லலாம்,  முதலாவது லஞ்சம் வாங்குவதற்கு சுலபமான வழிகள் எவையெல்லாம் உண்டு என்று ஆராய்வது,  இரண்டாவது மிகவும் கண்டிப்பானவர்கள் போல் நடந்து கொண்டால் லஞ்ச பணம் சற்று அதிகமாகவும், அபாயமில்லாத வழியிலும் வந்து சேரும் என்பதற்கு, முன்றாவதாக மிக குறைவான ஒரு காரணம் உண்டு, அதன் பெயர் மனசாட்சி அரசாங்கம் சம்பளம் தருகிறது.  அதற்கான வேலையை செய்யாமல் கைவூட்டு பெறுவது பாவமல்லவா என்ற யோசனை ஆரம்பத்தில்வரும் அதன்பிறகு சுற்றியிருக்கும் ஊழியர்களின் நிஜத்தன்மையை பார்த்து கோவணம் கட்டியவன் ஊரில் வேட்டி கட்டியவன் பைத்தியகாரன் ஆன கதையாக ஆகி விடகூடாது என்று கும்பலோடு கும்பலாக கோவிந்தா போட ஆரம்பித்துவிடுகிறார்கள்.    லஞ்சம் வாங்குவதில் நல்ல பழக்கப்பட்ட அல்லது அனுபவம் வாய்ந்த கில்லாடிகள் இருக்கிறர்களே அவர்களை  கைதேர்ந்த கலைஞர்களுக்கு ஒப்பிடலாம்,  பரத நாட்டியம் கற்றுக்கொள்ள நாம் சென்றோம் என்றால் முதலில் உணர்வுகளை அதாவது காதல், பயம், பக்தி, வேண்டுதல், போன்றவற்றை முகபாவத்தின் மூலம் எப்படி வெளிபடுத்தலாம் என்று கற்று தருவார்கள்.  கண் அசைவின் மூலமாகவும் பாடல் வரிகளுக்கு அபிநயம் பிடிக்க கற்று தருவார்கள் அதன் பின் தான் கையசைவு, கால் அசைவு எல்லாம், லஞ்ச கில்லாடிகள் எந்த நாட்டிய பள்ளிகூடத்துக்கு போகாமலே பலவிதமான அபிநயங்களை, பாவங்களை கற்று இருக்கிறார்கள்,  அதை அவர்கள் பயன்படுத்தும் போது நாட்டிய பேரொளி பத்மினியும், அபிநய தாரகை சரோஜாதேவியும் கூட தோற்றுவிடுவார்கள் அவர்கள் கற்ற நாட்டிய சாஸ்திரத்தில் மேஜைக்கடியில் பணம் வை என்று சொல்ல என்ன பாவமிருக்கிறது.

    இப்பொழது எல்லாம் காலம் ரொம்ப முன்னேறி விட்டது.  மேஜைக்கடியில் பணம் வாங்குவதெல்லாம் திப்பு சுல்தான் காலத்து பாணி, அப்படி பணத்தை வாங்கி சட்டை பையில் வைத்திருக்கும் போது யாராவது ஒரு பிரகஸ்பதி மொட்டை பெட்டிஷன் அது இதுயென்று போட்டு அதிகாரிகள் வேலை மெனக்கட்டு சோதனைக்கு வந்து வாங்கும் பங்கையும் வாங்கி கொண்டு தற்காலிக வேலை நிறுத்தம் விசாரனை என்று ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்தால் என்ன செய்வது.

    சுலபமாக உலகத்தில் வாழ முடிகிறதா என்ன? அரசு ஊழியர் மனைவி பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவாக புடவை கட்ட முடியுமா? கழுத்திலும் காதிலும் பத்து, இருபது பவுனாவது போட வேண்டாமா? சாதாரண  வீட்டில் வாழமுடியுமா சிமென்ட் தரையில் நடந்தால் கால் வலிக்கிறது என்பதற்காகவே மார்பில்  பதிக்க வேண்டி இருக்கிறது.  பொண்ணு டாக்டராக ஆசைப்படுகிறாள்.  பையன இன்ஜினியங் காலேஜில் தான் சேர்வேன் என்று அடம் பிடிக்கிறான்,  பாழாய் போன படிப்பு இப்போது திறமைக்காகவா  கிடைக்கிறது.  லட்சகணக்கில் கொட்டி அழுதால் தான் பிள்ளைகளின் கனவை நினைவாக்க முடியும்,  பஸ்க்கு காத்திருக்கவெல்லாம் முடியாது.  வியர்வை நாற்றத்தில். கூட்ட நெரிசலில் மனிதன் பயணம் செய்ய முடியுமா? அதற்கு கார் வேண்டும், பெட்ரோலும், டீசலும் தான் தினசரி  ஏறி கொண்டே இருக்கிறதே இப்படி எத்தனையோ காரியங்களுக்கு லஞ்சம் அத்தியாவசியமாக தேவைபடுகிறது.  இந்த சூழலில் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டால் எப்படி வாழ முடியும்.

     அரசு ஊழியர்கள் அநியாமாக லஞ்சம் வாங்கும் போது மாட்ட கூடாது என்று உதவ பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அரசு அலுவலகங்கள் அருகிலோ எதிரிலோ டீ, கடை அல்லது ஜெராக்ஸ் கடை இருப்பதை பார்த்திருப்பிர்கள், நமது பரிதாபத்துக்கு உரிய  ஊழியர் அலுவலகம் முடிந்ததும் அந்த கடைகளில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசுவார் கடைக்காரர் பேரில் இவ்வளவு அன்பா என்று யாரும் தவறாக நினைக்க கூடாது நமது கடமை தவறாத அரசு ஊழியர் தன் கையால் லஞ்சம் வாங்கினால் பரிசுத்தம் கெட்டுவிடும் சிக்கலில் மாட்டிக்கொள்வேன் என்பதற்காக தனது அந்தபுர கரங்களாக   டீ, கடைக்காரர்க்கு அந்தஸ்து வழங்கியிருக்கிறார் அவ்வளவு தான்.

    தேசிய அளவில் நமது தமிழ்நாட்டுக்கு தனி சிறப்புகள் உண்டு. சினி மாக்காரர்களை ஆட்சியாளர்களாக்கி அழகு பார்ப்பதிலாகட்டும், சினிமா நடிகர்களுக்காக சங்கம் அமைத்து கட்டி புரண்டு சண்டை போடுவதிலாகட்டும் தமிழகனுக்கு நிகர் தமிழன் தான் யாரும் அவன் பக்கத்தில் நிக்க முடியாது.  இத்தனை சிறப்பு மிக்க தமிழன் லஞ்ச விஷயத்தில் மட்டும் பழைய பத்தாம் பசலி கொள்கைகளை தூக்கி பிடித்து கொண்டு திரிவானா? அறிவில் சிறந்த தமிழ்நாடு அல்லவா?  நமது மாநிலம், புத்தம் புதிதாக பல நூணுக்கங்களை கஷ்டப்பட்டு  கண்டுபிடித்து தினம் தினம் உலகத்திற்கு வழங்கி கொண்டிருக்கிறான் .

          அலுவலகத்தில் வாங்குவது கடை கன்னிகளில் கொடுத்து வைப்பது வீட்டுக்கு தேவையான கட்டில், பிரோ, ஏ.சி என வாங்குவது என்பதெல்லாம் இப்பொழது மலையேறிவிட்டது.  மாமன் பெயரிலோ மைத்துணன் பெயரிலோ வங்கி கணக்கு பிறந்து இணையதளம் வழியாக பண பரிமாற்றம் நடைபெறுகிறது மனைவியின் பெயரில் நிறுவனங்களின் பங்குகள் வாங்கி கொடுக்கப்படுகிறது.  சம்பந்தமேயில்லாத பஸ் போக்குவரத்து கூட சரிவர அமையாத ஊர் புறங்களில் ஏக்கர் கண்க்கில் நிலம் வாங்குவது,  சர்வதேச சுற்றுலா தளங்களுக்கு உல்லாச பிராயணங்களுக்கு ஏற்பாடு பண்ணித்தர சொல்வது,  இன்னும் எண்னென்னவோ புரியாத வகைகளில் எல்லாம் லஞ்ச பணம் பரிமாறப்படுகிறது.  சில பேருக்கு விடிய விடிய உட்கார்ந்து பார்த்தாலும் சதுரங்க ஆட்டத்தின் சூட்சமம் புரியாது, அது போல  லஞ்சத்தை பொறுத்த வரை அவர்களின் நுணுக்கங்கள்  நமது மண்டையில் ஏறவே மாட்டேன் என்கிறது.

    என்ன பெரியதாக லஞ்சம் வாங்கி விட போகிறார்கள்,  தப்பான வழியில் வரும் பணம், நேர்மையான வழியில் செலவாகாது என்பது அவர்களுக்கு தெரியாதா?  என்று சில அப்பாவிகள் நினைக்கிறார்கள், அத்தகைய அப்பாவிகளுக்கு ஒவ்வொரு வருடமும் துறைவாரியாக நடக்கும் ஊழலின் அளளவை சொன்னால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.


   சமீபத்தில் நாடு முழவதும் ஒரு வருடத்திற்கு சாதாரண பொதுமக்களிடமிருந்து லஞ்சமாக அதிகாரிகள் எவ்வளவு பணத்தை சுரண்டி ஏப்பம் விடுகிறார்கள் என்று ஒரு தோராய கணக்கெடுப்பு நடந்தது.  அதன் அடிப்படையில் இந்தியாவில் போலீஸ்  துறையில் 215 கோடியும், போக்குவரத்து துறையில் 500  கோடியும்,  வீட்டு வசதி வாரியத்தில் 157 கோடியும், பத்திரபதிவு  துறையில் 124 கோடியும் மின்சார துறையில் 105 கோடியும், மருத்துவபிரிவில்  87 கோடியும், வங்கிகளின் மூலமாக 83 கோடியும் உணவு பொருள் விநியோகத்துறையில் 45 கோடியும் வனத்துறையில் 24 கோடியும், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 24 கோடியும், பள்ளிகல்வி அமைப்பின் மூலமும் கிராம வேலைவாய்ப்பு திட்டங்கள் மூலமும் சராசரி 7-கோடியும் ஒரு வருடத்தில் லஞ்சமாக பெறப்படுகிறதாம் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த கணக்கு எல்லாம் ஒரளவு வெளியில் தெரிந்த தோராய கணக்குகள் தான்,  ஒளிவு மறைவாக நடப்பது இதைவிட பல மடங்காகவே இருக்கும்.  இன்னும் ஒரு விஷயம் இந்த ஊழல் தினசரி நடக்கும் சம்பவங்கள் தான்.  அரசியல்வாதி பராமாத்மாக்களால் நடத்தப்படும் ஊழல் சிறப்பு திருவிழாக்கள் போன்றது. அதை இந்த கணக்கில் சேர்த்தால் நமக்கு பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும்.


    நமது நாட்டினுடைய முதல் பிரதமர் நேரு காலத்திலேயே ராணுவத்திற்கு ஜீப்புகள் வாங்குவதில் சில கோடி லஞ்சம் விளையாடியதாம்.  இந்திரகாந்தியின் லஞ்சம், ராஜீவ்காந்தியின் ஊழல், எல்லாம் நாடறிந்தது தான்,  மொராஜி தேசாயின் மகனும், மருமகளும், நரசிம்மராவின் மகன்களும் தேவகவுடா, சந்திரசேகர், இந்தர் குமார் குஜரால் காலங்களில் நடந்த ஊழல்கள் குறைவு என்றாலும் சில ஆயிரம் கோடிகளையாவது தொடும் எனலாம், வாஜ்பேயின் ஆட்சி காலத்தில நடந்த டகல்கா ஊழல், ஜார்ஜ் பெர்னாண்டஸ் பீரங்கி ஊழல் மற்றும் கார்கில் வீரர்களுக்கு சவபெட்டி வாங்கியதில் ஊழல் இப்படி நீண்ட பட்டியல்கள் கொடுத்தாலும் நமது பொருளாதார மாமேதை டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆட்சிகாலத்தில் அலைவரிசை  ஊழலின் தரம் தான் மிக அதிகம், பல லட்சம்  கோடி ரூபாய் ஊழலை விஞ்ஞான முறைபடி நடத்துவதற்கு வழிகாட்டியது தமிழின தலைவர் என்பதினால் அதன் மகத்துவத்தை வார்த்தைகளில் சொல்ல இயலாது.

    டாக்டர் கலைஞர் அவர்கள் இந்த அலைவரிசை  ஊழலை பெரிது படுத்த கூடாது, ஏன்னென்றால் அந்த துறை அமைச்சர் ஒரு தலித் என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எல்லாம் பெரிய சேவை செய்தார் பாருங்கள் அந்த அரிய சேவையின் முன்னால் அனைகட்டுவது பள்ளிகூடம் திறப்பது எல்லாம் வெறும் தூசிக்கு சமானம்.

    நமது தமிழகத்தில் இதுவரை நடந்திருக்கின்ற ஊழல்கள் அதன் மகத்துவம் என்று எல்லாம் பேச ஆரம்பித்தால் லாலு பிரசாத் யாதவின் கால்நடை தீவன  ஊழல், உர ஊழல் என்ற பயங்கர ஊழல் எல்லாம் சும்மா ஒன்றுமே இல்லாத விஷயங்கள் என்பது தெரியவரும்,  தானை  தலைவர்  வீராண  ஊழலிருந்து செம்மொழி மாநாட்டு ஊழல் வரையில்ஒரு சின்ன கணக்கு போட்டாலே ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுத வேண்டிய வரும்,  ஒரேடியாக கலைஞரை தாக்குகிறானே ஒரு வேளை டாக்டர்.  .ஜெ. ஜெயலலிதா செய்த ஊழல்கள் எதுவும் இவன் கண்ணில் படவில்லையா? என்று சிலர் நினைக்க கூடும்,.  குற்றாலத்தின் அழகை காண ஆயிரம் கண் போதாது என்ற திரிகூட ராசப்ப கவிராயர் பாடுவார்,  புரட்சி தலைவியின் புனித ஊழல்களை பார்ப்பதற்கு ஒரு ஜோடி கண்களால் முடியுமா? அவரின் ஊழலின் அழகு தான் என்ன? வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்த அழகு டான்சி நிலபேர ஊழலின் தனியழகு, அரசு பாடபுத்தகங்கள் அச்சிடுவதில் நடந்த எழில் மிகு சுரண்டல் கோலம் மகாராணி போல் கும்பகோண மகாமகத்தில் தோழியோடு தரிசனம் தந்து கண்ணில் கண்ட நிலங்களை, வீடுகளை, நட்சத்திர ஹோட்டல்களை, வாங்கி குவித்த பேரழகு, காலில் அணிவதற்கு நூறுஜோடிக்கு மேல் செருப்புகள் சேகரித்த அழகு, பட்டு புடவைகளின் அணிவகுப்பு, சக்கரவர்த்திகளின் அந்தபுரத்தில் கொட்டி கிடக்கும் பொன் நகைகள் போல் வீடெங்கும் நிறைந்து கிடந்த தங்க நகைகளின் ஜொலிஜொலிப்பு ஆகா ஆகா ஆயிரம் கண் போதாது வண்ண கிளியே.

    சொந்தம் என்பது தொடர்கதை தான் முடிவே இல்லாதது, என்று ஒரு பழைய திரைப்படல் பாடல் உண்டு,  ஊழல் என்பதும் அப்படி தான் சாவே இல்லாதது என்று நமக்கு பாட தோனுகிறது,  அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தான் பொதுமக்கள் தலையைமொட்டை அடிக்க வேண்டுமா? அவர்கள் மட்டுமென்ன அம்மா வயிற்றில் இருபது மாதங்களா குடியிருந்தார்கள்? நாங்கள் மட்டுமென்ன மொட்டையடிக்க தெரியாத தற்குறிகளா? என்று நினைத்து சில தனி மனிதர்கள் சீட்டு கம்பெனி, ரியல் எஸ்டேட், என்று இறங்கி சகட்டு மேனிக்கு மக்களின் தலைமுடியை மழிக்க துவங்கி விட்டார்கள், செயற்கை கோளிலிருந்து படமெடுத்தால் இந்தியாவில் முக்கால்வாசி தலை மொட்டையாக இருப்பதை பார்க்கலாம்.  ஒன்று இரண்டு முடி உள்ள தலை தென்பட்டால் நிச்சயமாக அந்த தலைகள் மொட்டை அடிப்பவர்களின் தலைகளாக தான் இருக்கும்.


    இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லவில்லை என்றால்இந்த கட்டுரை பூரணத்துவம் அடையாது,   பொதுவாக கிராமபுறங்களில் சொந்த ஜாதிக்குள் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அடுத்த ஜாதிகாரணை நுழைய விட மாட்டார்கள்.  உடைந்தாலும் சட்டி ஒன்று தான்  என பிரச்சனைகள் வரும் போது கூடி விடுவார்கள் இதே போல தான் ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருப்பார்கள் என்று முட்டாள் தனமாக சில காலங்களுக்கு முன்பு நம்பி கொண்டு இருந்தேன், விஷயம் தெரிந்த போது உண்மையாகவே நான் அடைந்த வியப்பிற்கு அளவே இல்லை.

    எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கி பழகப்பட்ட கைகள் தங்களது சக ஊழியர்களிடத்திலும் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை செய்வேன் என்று அடம் பிடிக்குமாம்.  நமது நண்பர் ஒருவர் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறையில் கடைநிலை ஊழியராக பணிபுகிறார்.  அவர் தமது மகளின் திருமணத்திற்கு அலுவலக மூலமாக கடன் பெறுவதற்கு முயன்ற போது மேலதிகாரி தனக்கும் மற்ற ஊழியர்களுக்கும்  ஒரு குறிப்பிட்ட சகவிகிதம் கமிஷன் வெட்டினால் தான் சாத்தியப்படும் என்றாராம்  இவரும் கொடுத்த பிறகு தான் வேலை நடந்ததாம், இது மட்டுமல்ல விடுப்பு எடுக்க, சிறப்பு ஊதியம் பெற, வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் பெற, வீடு கட்டுவதற்கான கடனுக்குரிய நடைமுறைகளை பூர்த்தி செய்ய, ஈட்டிய விடுப்பை பணமாக்கி கொள்ள , லஞ்சம் கொடுத்தால் தான் வேலையாகுமாம், நல்ல வருவாய் வரும் சீட்டிற்கு மாற்றல் வாங்க சில லட்சங்கள் கூட அதிகாகளுக்கு ஊழியர்கள் லஞ்சம் கொடுக்க வேண்டுமாம், இதை எல்லாம் பார்க்கும் போது இவ்வளவு சிக்கலான அபாயமான ஒருசமூக சூழலில் நம்மால் கூட வாழ முடிகிறதே என்ற வியப்பு மேலிடுகிறது.  ராட்டினத்தின் உயரத்தில் இருந்து பார்ப்பது போல தலை சுற்றுகிறது.

    ரத்தத்தின் மூலம் எய்ட்ஸ் கிருமி கூட பரவாமல் இருக்கலாம்,  இறுகிய பாறையில் அழகான ரோஜா மலரலாம் வீசுகின்ற காற்று கூட நின்று போகலாம்.  சுவாசம் என்பது இல்லாமலே உயிர்கள் வாழலாம், இன்னும் நடைபெறவே முடியாதது கூட எல்லாம்  நடக்கலாம்.  ஆனால் நமது அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சம் பெறாமல் வாழவே மாட்டார்கள் என்பது பொட்டில் அறைந்தது போன்ற உண்மையாகும்.  லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்.  என்று நினைப்பவனும். சொல்பவனும் இன்றைய தேதியில் முழு முட்டாள்.

  லஞ்சம் பெற்று வாழ்வாரே வாழ்வார் 
மற்றோர் எல்லாம் கெஞ்சியே சாவார்

என்று வள்ளுவர் பூமிக்கு வந்தால் புது குறள் எழுதுவார்.

Contact Form

Name

Email *

Message *