Store
  Store
  Store
  Store
  Store
  Store

தினம் தினம் கொலைகள்


அன்புள்ள நிர்மலாவுக்கு

உன்னை என்றும் மறவாத மறக்க முடியாத உன் திருவிக்கிரமன்
 எழுதுவது

நான் எப்போதும் போல்தான் இருக்கிறேன் என்னை நலம் என்றும் சொல்லிவிட முடியாது இல்லையென்றும் சொல்லமுடியாது

கடிதத்தை துவங்கும் முன்னர் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும்

கொலை என்பது உடம்பைக் கொல்வது மட்டும்தானா? மனதைக் கொன்றால் அது கொலையில்லையா?

இதற்கான பதிலை கடிதத்தை முழுமையாக படித்து முடித்தப்பிறகு சொல் அவசரம் இல்லை ஆனால் அவசியம் சொல்லியாக வேண்டும்!

அது என்னவோ தெரியவில்லை என் வாழ்க்கை மட்டும் எப்போதுமே காலியான நாற்காலிகளுக்கு முன்னால் ஓடும் திரைப்படம்போல் சுவாரஸ்யம் இல்லாமலே போய்விட்டது

அதைப்பற்றி சிலநேரங்களில் வேறுமாதிரியாகவும் சிந்திக்கிறேன் நான்தான் வாழ்வின் சுவாரஸ்யம் இதுவென அறியாமல் இருக்கிறேனோ என்று

இப்படிநான் நினைப்பது காலம் கடந்ததாக இருப்பினும் கூட சரியாகவும் இருக்கலாம் அல்லவா? இந்தக்குழப்பம் வரவேதான் அவசரமாக உனக்கு கடிதம் எழுதுகிறேன்

வாரத்தில் ஒருமுறைதான் நேரில் பார்க்கிறோமே அப்போது பேசாமல் கடிதம் எழுதுவதுஏன் என்ற கேள்வி உனக்கு எழலாம்

என்னைப்பற்றி நீதான் முழுமையாக அறிவாயே எதையும் நேரில் பேசும்பொழுது திக்கித்திணறி சொல்லவந்ததை சொல்ல முடியாமல் தவிப்பேனென்று

அப்படியொரு சூழ்நிலை ஏற்படக்கூடாது ஏற்பட்டால் எனக்கு மனதளவில் பெருத்த  நஷ்டம் உருவாகிவிடும் என்பதனால்தான் இந்தக் கடிதம்.

உன்னை முதல்முறையாக கல்லூரியில்  சந்தித்தேன் அப்படி சந்திக்கும்முன் இந்தக் திருவிக்கிரமனுக்கு ஒரு வாழ்க்கை  இருந்தது அதில் நன்மையும் தீமையும் கலந்திருந்தது

அவன் நல்லவனாகவோ  கெட்டவனாகவோ இருந்திருக்கலாம் என்றெல்லாம் நீ சிந்திக்காமலே உனக்கு தெரிந்திருக்கும்

இருந்தாலும் அது கற்பனையாகவும்  இப்படியா அப்படியா என்ற அனுமானமாகவோதான் இருக்கவேண்டுமே தவிற உண்மையை பிரதிபலிப்பதாக இருக்க முடியாது

காரணம் என்கடந்தக் காலத்தை வெறும் சம்பவங்களாக மட்டுமல்ல  ரத்தமும் சதையும் கலந்த உணர்வுகளாக நான் மட்டுமே அறிவேன்

அதை இதுவரை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளும்  பக்குவத்தை நான் பெற்றிருக்கவில்லை இனியும் இந்நிலை  தொடர்ந்தால் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மூளை வெடித்தாலும் வெடித்துவிடும்


ஆகாசம்எங்கும் பறந்தாலும் வல்லூறுக்கு  தங்க மரக்கிளையில் கூடுவேண்டும் கள்வனுக்கும் கன்னக்கோல் சாத்த ஒரு இடம்வேண்டும்

எனக்கு என் அந்தராத்மாவை திறந்துக்காட்ட உன்னை விட்டால் யாரு கிடைப்பார்கள்?

துள்ளித்திரியும் பிள்ளை பிராயம் நெஞ்சை விட்டு அகலாத நிலாக்காலம் போன்று இனிமையானது

நாளை வருவதுப் பற்றியோ நேற்று நடந்ததைப் பற்றியோ எந்தக்கவலையும் இல்லாத அந்தப் பருவத்தின் சுகானுபவம் இப்போது நினைத்தால் தித்திக்கின்றது

ஆனால் உண்மையில்  அந்தக்காலத்தில் அது இனிமையாகவா தெரிந்தது? யாருக்கு எப்படியோ நிச்சயமாக எனக்கு வசந்தம் தாலாட்டிய அக்காலம்கூட கசந்துத்தான் கிடந்தது


  ஊருக்கு மேற்கில் உள்ள ஏரிக்கரை மேட்டில் ஜடாமுடி தரித்த மாமுனிவன் தவம் செய்வது போன்று ஒற்றை ஆலமரம்

அந்த ஆலமரத்தடியில் ஊர் பிள்ளைகள் எல்லாம் சூரியன் மறைந்து இருள்கவ்விய பின்னும் குரங்குகள்போல் ஏறுவதும் கீழே குதிப்பதுமாய் இருப்பார்கள்

அவர்களிடமிருந்து வருகின்ற சிரிப்பொலியும் சண்டைச்சத்தமும் ஏரிக்கரை பிரதேசம் முழுவதுமே எதிரொலிக்கும்

பெருமாள் கோயில் கோபுரத்தின் நான்காம் நிலையில் அழகழகான வெள்ளைப்புறாக்கள் வந்து இரவில் உறக்கம் கொள்ளும் 

கோபுரத்தின் உள்வழியாய் பதுங்கி ஏறி தூங்கும் புறாக்களை பூனைபோல் அமுக்கி பிடித்ததையும்

மண்டபத்தில் சதா காதுகளை விசிறி அசைந்தாடி நிற்கும் யானையில் வாலைபிடித்திழுத்து ஒடி ஒளிந்ததையும் கண்கள் விரிய விரிய  பையன்கள் சொல்லி என் பிரமிப்பை வளர்ப்பார்கள்

அவர்கள் சொற்களில் வழிந்த மதுமயக்கத்தில் நானும் ஒருநாள் யானைவாலை மிடிக்க முயற்சிக்கும் போது கண்ணன் பட்டாச்சாயார் பார்த்து துரத்திவிட்டார்

அவர் அத்தோடு மட்டும் விட்டிருந்தால் பரவாயில்லை அப்பாவிடம் வந்து சொல்லியும் விட்டார் அப்புறமென்ன?

பெருமாளுக்கு பூஜை நடப்பது மாதிரி எனக்கும் பூஜை நடந்தது ஒரேஒரு வித்தியாசம் பெருமாளுக்கு மணியடித்து பூஜை செய்வார்கள் இங்கு என்னை அடித்து செய்தார்கள்


    சந்தை மைதானத்தில் பிள்ளைகள் கபடியாடும் போதாகட்டும் தெருமுனையில் பச்சைக் குதிரை தாண்டும் போதாகட்டும் ஆசை புறப்படுவதற்கு முன்னே அப்பாவின் மிரட்டும் கண்களும் பிரம்பு பிடித்த கையும் தோன்றி மனதிற்கு விலங்கு  போட்டுவிடும்

எதிலும் கலந்துக்காமல் தூர நின்று எல்லாவற்றையும் ஏக்கத்தோடு பார்க்க மட்டும் செய்வதினால் பையன்கள் எனக்கு வைத்த பெயர்  என்ன தெரியுமா?

"வீங்கல்'

அப்படின்னா என்ன அர்த்தம் என்றே வெகுநாட்கள் எனக்குத் தெரியாது ஏதோ சொல்லி கிண்டல் செய்கிறார்கள் என்றுமட்டும் புரியும்

வேறொருநாள் மாணிக்கம்தான் வீங்கல் என்றால் பொறாமையில் புழுங்கி சாகிறவன் என்ற அர்த்தத்தைச் சொன்னான் மனதுக்கு கஷ்டமாக இருந்தது

பிறகு நாம்தான் பொறாமைப்படவில்லையே இயலாமையில் தானே விழி பிதுங்குகின்றோம் எனவே அந்தப்பெயர் நமக்கு பொருந்தாது என்று என்னையே நான் சமாதானப்படுத்திக் கொண்டேன்

அப்போது எனக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது இஷ்டம்போல் வெளியில் சுத்தவும் முடியாது நண்பர்கள் என்று யாரும் கிடையாது  வீட்டிலும் என்னை விட்டால் வேறு பிள்ளைகளும் இல்லை

தனிமையை போக்கிக் கொள்ள ரேடியோதான் என் ஒரே துணைவன் இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனல் திரைவிருந்து பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியும் என எல்லா நிகழ்சிகளையும் அம்மாவோடு சேர்ந்து உன்னிப்பாய் கேட்பேன்



     தெரிந்தோ தெரியாமலோ கேட்டப்பாடல்கள் எல்லாம் மனதில் ஒட்டிக் கொண்டது மந்திரம் முனுமுனுப்பதுபோல பாடல்களை என்னையும் அறியாமல் வாய் அசைபோடும் அந்த மெல்லிய ஒலி அப்பாவின் பாம்புக் காதில் எப்படியோ விழுந்து விட்டது

    உடனே இவன் சரியா படிக்கலை அதனால் ஐந்தாம் வகுப்பில் கூட ஒருவருஷம் போடுங்கள் என்று ஹெட்மாஸ்டரிடம் சொல்லி விட்டார்

விழுந்து விழுந்து படித்தும் என்ன பிரயோஜனம் என் வகுப்பு தோழர்கள் எல்லாம் சட்டைக் காலரை தூக்கி விட்டுக்கொண்டு ஆறாம் வகுப்பிற்கு போக நான் மட்டும் கூனிக்குறுகி பூனைக்குட்டி மாதிரி ஐந்தாம் வகுப்பையே ஒருவருஷம் சுற்றி வந்தேன்

அந்த வருஷம்தான் ஐந்தாம் வகுப்பிற்கு புதுசா ஒரு டீச்சர் வந்தாங்க அவர்களுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது

""வழிய வழிய எண்ணெய் தடவி நெற்றியை மறைச்சி நாமம் போட்டு அசல் பண்டாரம் மாதிரியே பள்ளிக்கூடம் வர்ரான் பார்'' என்று பையன்கள் முன்னாலே சொல்லி கிண்டல் அடிப்பார்கள்

பெண்பிள்ளைகள் எல்லோரும் சில்லரை  கொட்டியமாதிரி சிரிப்பார்கள் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும் நாமம் போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்றால் அப்பா அடிப்பாரோ என்ற பயம் மெல்லவும் முடியமல் விழுங்கவும் முடியால் தேமேன்னு பள்ளிக்கு போவேன்

சுற்றி என்ன நடக்குது என்று தெரியாமலே பத்தாம் வகுப்பை முடித்தேன் அப்போ 450 மார்க் வாங்கியும் கூட இது ஒரு மார்க்கான்னு அப்பா திட்டத்தான் செய்தார் என்னசெய்வது? நான் பிறந்த நேரம் அப்படி!

 நான் பத்தாம் வகுப்பு முடிச்ச வருடம்தான் +1,+2 என்ற பெயரில் புதிய வகுப்புக்கள் துவங்கபட்டிருந்தது மேல்நிலைப்பள்ளியில் முதல்முறையாக நுழைந்த உடன் வகுப்பறையில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்

அழகான தாமரைப்பூவில் இரண்டு வண்டுகள் மொய்ப்பது போல அவள் முகம் எனக்குப் பட்டது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் முகத்தில் பன்னீர் தெளித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது

அவள் கன்னங்களின் மீது சுருள்சுருளாக தவழ்ந்த கேசக்கற்றையின் எழிலோவியம் இத்தனை வருடங்கள் ஆனாலும் மனதில் அழியாமல் பசுமையாக நிற்கிறது இந்த அழகு தேவதையை காணத்தான் இத்தனை காலங்கள் கஷ்டப்பட்டேனோ என்று தோன்றியது

பள்ளியின் விடுமுறை நாட்கள் எனக்கு நரகமாகியது என்றாவது ஒரு நாள் அவள் பள்ளிக்கு வரவில்லை என்றால் செத்துப் போய்விடலாமா என்று கூடத் தோன்றும் 

எந்தவொரு சினிமாப்பாடலைக் கேட்டாலும் அவளும் நானும் ஏரிக்கரை மேட்டில் சேர்ந்து ஆடிப்பாடுவதாக மனது ரெக்கைக்கட்டி பறக்கும் வண்ண வண்ணக் கனவுகளால் இரவு உறக்கம் கரைந்துப் போகும் புத்தகத்தை திறந்தாலே அவள் பெயர்தான் உச்சரிப்பாய் வரும்

பின்னர் படிப்பென்ன ஆயிருக்கும் என்பதை நான் சொல்லாமலே நீ புரிந்திருப்பாய் முழுவருடப்பச்சை முடிந்த உடன் அப்பாவை வரவழைத்து என் லக்ஷ்சணத்தை தலைமை ஆசிரியர் போட்டு உடைத்தார் இப்படியே படிப்பு போனால் +2 வில் பையன் தேற மாட்டான் என்றார்


 கோழியைக் கேட்டு மசாலா அறைக்கும் பழக்கம் உடையவரா அப்பா? என்னிடம் ஒருவார்த்தைக்கூட கேட்கவில்லை கசாப்புக்கடையில் ஆட்டுக்குட்டியை வெட்டுக்கட்டையில் தள்ளுவதுபோல வேறொரு பள்ளியில் சேர்த்துவிட்டார் 

அரும்புவிட்டு மொட்டாகியிருந்த என் காதல் பட்டென்று கருகிப்போனது

ஒருமுக்கியமான விஷயத்தை இப்போது உன்னிடம் சொன்னால் தான் எனது முழுமையான லக்ஷணம் என்னவென்பது தெளிவாகத் தெரியும்

நானும் அவளும் ஒரே வகுப்பில் பத்து மாதங்கள் படித்தோம் முந்நூறு நாட்கள் அவளை தொடர்ந்து பார்த்திருக்கிறேன் அதில் ஒருநாள் கூட அவள்பக்கத்தில் சென்றது கிடையாது ஏன் ஒரு வார்த்தைக்கூட பேசியதில்லை 

அவளை நேருக்குநேர் பார்த்தாலே நெஞ்சு படக்படக்கென்று அடிக்க ஆரம்பித்துவிடும் உடலெங்கும் வியர்த்துக் கொட்டி தொண்டை காய்ந்து குரல்வறண்டு நாக்கு ஒட்டிக்கொள்ளும் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை முறைத்து பார்த்து போல என்று சொல்வார்களே அதுதான் என்காதல் கதை !


 கதை இப்படி இருந்தாலும் கூட என்மனதில் கூடுகட்டி குஞ்சுகள் பெற்றிருந்த கற்பனைப் பறவை கழுத்தறுப்பட்டு செத்துவீழ்ந்ததை  நினைத்தால் இப்போதும் நெஞ்சு வலிக்கிறது

இரும்புப் பொதியை சுமந்துக்கொண்டு ஆற்றைக்கடந்தவன் போல ஊமைக்காதல் கனவுகளை சுமந்த வண்ணம் தட்டுத்தடுமாறி +2 கரையைத் தொட்டேன் 

நம்மால் கூட தேறிவிட முடிந்ததே என்று சந்தோஷமாகவும் இருந்தது எப்படித் தேறினோம் என்று வியப்பாகவும் இருந்தது இனி சுதந்திரமாக கல்லூரியில்  உலாவரலாம் என மனது குதித்தது பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டுமென அம்மா மூலம் அப்பாவிடம் முறையிட்டேன்

""இலக்கியம் படித்து கிழிக்கப்போறானா அவன்? பி.காம்.தான் சேர்க்கப் போகிறேன் நாலுபேருக்கு கணக்கு எழுதியாவது பொழைச்சிக்கிலாம்'' என்று அந்த ஆசையையும் சுட்டுத்தள்ளி பி.காம் குளத்தில் மூழ்கவைத்தார்

அதுவும் ஒருவிதத்தில் நல்லது என்று உன்னைக் கல்லூரியில் கண்டபின் மனதை தேற்றிக்கொண்டேன் நமது கல்லூரி  வாழ்க்கை எப்படியெல்லாம் நடந்தது என உனக்குத் தெரியும் கணக்குகள் வந்ததோ இல்லையோ உன்னைப் பற்றி பக்கம் பக்கமாக கவிதைகள் வந்தது

இருப்பினும் ஒரு உண்மையைச் சொல்கிறேன் உன்னை அனு அனுவாக காதலித்தாலும் கூட என்மன சிம்மாசனத்தில் அழுத்தமாக உட்கார்ந்திருந்தது என்னவோ அந்த +1 தேவதைதான்!

கல்லூரியைவிட்டு வெளிவந்ததும் என் அதிர்ஷ்டமா அப்பாவின் செல்வாக்கா தெரியவில்லை இந்தியன் வங்கியில் வேலைக்கிடைத்து

சென்னை வந்தவுடன் நம்காதல் விவகாரத்தை அம்மாவிடம் சொன்னேன் விஷயம் தெரிந்தடன் வானத்திற்கும் பூமிக்கும் அப்பா குதிக்கப்போகிறார் என நினைத்தேன்

    என்ன ஆச்சரியம்! அம்மா செய்தியை அவரிடம் சொன்னவுடன் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா ""இதுவரை என்சொல்லை அவன் தட்டியதே இல்லை

இதுவரை வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பக்குவத்தை  அவன் பெறவில்ல என்பதனால் நாம் வழிவகுத்தோம் இனி அவன் பெரியவன் தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளும் திறமை இருக்கு அவனிடம் பெண்ணுக்கு எந்த ஊர் யார்மகள் என்ற விவரத்தைக் கேள் பேசிமுடிப்பாம்'' என்றிருக்கிறார்

எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை பரவாயில்லையே அப்பா திருந்திவிட்டாரே எனத் தோன்றியது இருந்தாலும் ஒருசின்ன வருத்தம் ஊஞ்சலாடியது

இப்போது திருந்தியவர் பத்து வருஷத்திற்கு முன்பு திருந்தியிருந்தால் என் பிள்ளைப்பருவ சந்தோஷங்கள் சுடுகாட்டிற்கு போயிருக்காது அல்லவா?

முதல்முறையாக என் மகிழ்ச்சிக்காக உன்னைப் பெண்கேட்க அப்பாவந்தார் ஆனால் உன்தந்தை பெண்தர சம்மதிக்கவில்லை அதற்கு ஏதேதோ காரணங்கள் சொன்னார் எல்லாக் காரணங்களுக்கும் அடிப்படையில் என் குடும்பத்தின் பொருளாதாரம் இருந்ததை நாங்கள் தாமதமாக புரிந்துக் கொண்டோம்

உன்னிடம் கெஞ்சினேன் மன்றாடினேன் அப்பா அம்மாவை மீற உனக்கு துணிச்சல் வரவில்லை பெற்றபாசத்திற்கு முன்னால் காதல் தூசு எனப்பட்டது உனக்கு! யாரோ ஒருவனுக்கு கழுத்தை நீட்டினாய்

தோல்வி கொடுத்த துயரம் கோபமாக மாறி நானும் மணமேடை ஏறினேன்

என் திருமணம் முடிந்த அடுத்த வருடமே விதி உன் பூவையும் பொட்டையும் பறித்து விட்டது அப்போது என்னை நானே சாட்டையால் அடித்துக் கொண்டேன்

சோகத்தை சுமந்துக் கொண்டு ஒருவருடம் நடந்திருந்தால் உனக்கு மறுவாழ்வு தந்திருக்கலாம் நானும் ஒட்டியும் ஒட்டாமலும் மற்றொறு பெண்ணுடன் வாழும் தண்டனையிலிருந்து தப்பியிருக்கலாம்

என் மனைவிக்கும் மரக்கட்டையான புருஷனோடு வாழவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டிருக்காது கணவன் மனைவியாக வாழவேண்டிய நாம் வெறும் நண்பர்களாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லாமல் போயிருக்கும்

ஒருவேளை  நாம் நினைத்தெல்லாம் நினைத்தப்படி நடந்துவிட்டால்  வாழ்வின் சுவாரஸ்யம் போய்விடும் என்பதனால் தான் கடவுள் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறானோ

    கடவுளின் எண்ணம் புரிந்துவிட்டால் மனிதன் ஏன் தறிகெட்டு அலைகிறான்? தனக்கு விதிக்கப்பட்டது இன்னதுதான் என அமைதியாய் இருந்து விடலாம் அல்லவா!

சரி இந்த விஷயங்கள் எல்லாம்தான் எனக்குத் தெரியுமே புதிதாக எதுவும் இல்லையே என நீ நினைக்கலாம் உண்மைதான் ஆனால் இனி சொல்லப் போகின்றவைகள்தான் நான் உன்னிடம் சொல்லவந்தது

ஆணும்சரி பெண்ணும்சரி திருமணத்திற்கு பிறகுதான் வாழ்வில் சுதந்திரம் பெறப்போவதாக நினைக்கிறார்கள் சமுதாய அந்தஸ்து தனக்கு கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள் மாயக் கோட்டைக்குள் நுழைந்தப் பின்னர்தான் அதனுள் இருக்கின்ற சிலந்திவலைகள் தெரிகிறது

நான் மட்டும் என்ன? உன்மீது வந்த கோபத்தால் கல்யாணம் செய்தாலும் அதைப்பற்றிய கனவுகள் ஏராளமாய் வளர்த்தவன் தானே

ஆனால் அந்தக் கனவுகளுக்கும் நிஜத்திற்கும் சம்மந்தமே இல்லை என்பதை இரண்டே நாளில் தெரிந்துக் கொண்டேன்

பாரதியின் கவிதைகளை மனைவியிடம் சொன்னேன் தூக்கம் வருகிறது என்றாள் ரவிசங்கரின் கித்தார் இசைபிடிக்குமா என்றேன் எனக்கு எந்த சத்தமும் பிடிக்காதென்றாள் சரி கதைகளாவது வாசிப்பாயா என்றேன் எப்போதாவது சினிமா பார்ப்பேன் என்றாள்

இப்போது புரிந்திருக்குமே என்குடும்ப வாழ்வின் லக்ஷ்சணம் ஒருபுத்தக கண்காட்சிக்கு போயிருந்தேன் சில புத்தகங்களை நான் வாங்கி வந்தபோது என்ன சொன்னாள் தெரியுமா?

"" வீட்டிலேயே நிறைய பேப்பர் மூட்டையாய் கிடக்கு அது போதாதென்னு இது வேறையா? எல்லாம் தலைவிதி''  அன்றுமுதல் புத்தகம் வாங்குவதை மட்டுமல்ல வீட்டில் வாசிப்பதையே விட்டுவிட்டேன் எல்லாம் லைப்ரரியோடு   சரி!

எதேச்சயாக படுக்கையறையில் நடந்த விபத்தில் முதல் பையன் பிறந்தான் ஆசைஆசையாய் அவனுக்கு யதுகுலன் என்று பெயரிட விரும்பினேன் விஷயம் தெரிந்த என்மாமனார்

""என்ன பெயர் இது பிள்ளைக்கு அழகாய் பெருமாள் பெயரை வைப்பதை விட்டு அந்தக்குலன் இந்தக் குலன்னு பேசாம எங்கப்பா பெயரை வைங்க'' என்றார்

ஆமாமா அதுதான் சரி என்றாள் அவள் பிறகு நான் பேசுவதற்கு என்ன இருக்கு? யதுகுலன் என்பதும் பெருமாள் பெயர்தான் என நான் சொன்னாலும் அவர்களின் பரந்த அறிவு அதை ஏற்றுக் கொள்ளவா போகிறது? அடுத்ததாகப் பிறந்த பெண்ணுக்கு பெயர் வைப்பதைப் பற்றி நான் நினைந்துக் கூட பார்க்கவில்லை

பெண்டாட்டிக்கு நான் புருஷன் பிள்ளைகளுக்கு அப்பன் குடும்பத்தைப் பொருத்தவரை நான் விருந்தாளி  அதுவும் மாதாமாதம் சம்பளம் வாங்கிக் கொடுக்கும் விருந்தாளி

நிலமை இப்படி இருந்தாலும் என் மனைவி என்னைப்பற்றி வைத்திருக்கும் கருத்து என்ன தெரியுமா? ஒருநாள் எனக்கு நல்ல ஜுரம் ஆபிஸ்க்கு போக முடியலை என் மாமியார் வேறு ஊரிலிருந்து வந்திருந்தார்கள் ஹாலில் இருந்து தாயும் மகளும் பேசுகிறார்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் அவள் குரல் ஓங்கிஒலிக்கிறது



 "" அவர் சுத்த அம்மாஞ்சி எதையும் மனசுவிட்டு பேசமாட்டார் எல்லாவற்றையும் வாய்க்குள்ளேயே அமுக்கிடுவார் எப்பப்பாரு ஏதோகனவில் நடக்கிறவர்மாதிரித்தான் இருப்பார்

நாலு காசுசம்பாதிச்சோம் சேர்த்துவச்சி நகையோ நிலமோ வாங்குவோம் என்ற எண்ணமே கிடையாது பேங் விட்டா லைபரரி லைபரரி விட்டா வீடு

இப்படி ஒரு  மனுஷனை பார்க்கவே முடியாது என்ன செய்வது மரம்மாதிரி மனுஷனோடு வாழ வேணும்ங்கிற விதியை மாத்த முடியுமா?''

எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என் உணர்வுகளை புரிந்துக் கொள்ளும் பக்குவம் அவளுக்கில்லை அவளை சந்தோஷப்படுத்த எனக்குத் தெரியவில்லை அதனால்  பலநேரங்களில் மௌனமே எனது வாய்மொழியாகி விட்டது

தப்பித்தவறி என் எண்ணங்களை நான் வலியுறுத்தி பேசினால் குடும்பம் சண்டை மைதானமாக ஆகிவிடக்கூடும் அந்த சச்சரவு சத்தம் குழந்தைகளின் மனதில் பேரிடியாக ஒலித்து அவர்களின் அமைதியைக் குலைத்துவிடக் கூடாதல்லவா?

கட்டியவளிடம் மௌனியாக வாழ்வதில் உள்ளக் கொடுமை அனுபவித்தால் மட்டும்தான் தெரியும் இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்துக் கொண்டுதான் எத்தனையோ குடும்ப வண்டிகள் ஓடுகின்றன

பெண்டாட்டித்தான் இப்படி அமைந்து விட்டாள் குழந்தைகளாவது நம் எண்ணப்படி நடக்கும் என எதிர்பார்ப்பது தவறு என்று நீ சொல்ல மாட்டாய் நானும் எதிர்பார்த்தேன் நடந்தது என்ன?

பையனை எப்படியாவது டாக்டராக்கி பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டேன் ""ஐயா மகராஜா என்னை காப்பாற்றிய நீ கடவுள் மாதிரி'' என ஊரார் என்பிள்ளையை வாழ்த்துவதை காதாரக் கேட்க விரும்பினேன்

அதற்கு அவன் என்னசொன்னான் தெரியுமா "" டாக்டர் என்றால் ராத்திரி பகல் பார்க்க முடியாது நம்ம சொந்த சந்தோஷங்களை புதைத்துதான் வாழவேண்டி வரும் என்னால் யாருக்காகவும் எதையும் இழக்க ஆகவே ஆகாது''என்றான்

அப்பா சொன்னதற்க்காக ஆங்கில இலக்கியத் தாகத்தை மூட்டக்கட்டிய நான் எங்கே முகத்துக்கு நேராக வார்த்தைகளை அள்ளிவீசிய மகன் எங்கே?

குழந்தை என்று வந்துவிட்டால் நமது அடிப்படை உரிமைகளைக்கூட விட்டுத்தரலாம் என்று அறிவு சொல்கிறது மனது அதை ஏற்றுக் கொள்ளமறுத்து முரண்டுபிடிக்கிறது இந்தப் போராட்டம் சாகும் வரை ஓயாது என நினைக்கிறேன்

   குழந்தைப்பருவ ஆசைகள் அப்பாவால் போனது இளமைப்பருவ எண்ணங்கள் மனைவியால் மழுங்கியது முதுமையிலும் பிள்ளைகளுக்காக விருப்பங்களை சாகடிக்க வேண்டியிருக்கிறது இப்போது முதலில் கேட்ட கேள்வியைத் திருப்பிக் கேட்கிறேன்


கொலை என்பது உடம்பைக் கொல்வது மட்டும்தானா? மனதைக் கொன்றால் அது கொலையில்லையா?

இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல் பதிலை நீ சொல்லி முடிக்கும் போது வேறொரு கேள்வியும் எனக்குள் எழும்பலாம்

அது "" ஒருவேளை இது கொலையில்லை என்றால் தற்கொலையாக இருக்குமோ?'' எதற்கும் இதற்கான பதிலையும் தயார்படுத்திக் கொள் நேரில் பேசலாம்

              இப்படிக்கு
(எதற்கும் லாயக்கில்லாத)

Contact Form

Name

Email *

Message *