Store
  Store
  Store
  Store
  Store
  Store

இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டும்


  லகபந்து சிக்கலின்றி சுற்றி வர உயிர் துடிப்போடு அது திகழ உயிர்கள் வேண்டும்.  உயிர் நிலைத்து வாழ்வதற்கு உணவு வேண்டும்,  உணவை தருவது வேளாண்மை அதனால் தான் வான்புகழ் வள்ளுவன் உழவே தலை என்று போற்றி புகழ்கிறான்.  உழதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என்று ஓளவை பிராட்டி வாயார சொல்கின்றார் உணவு எனப்படுவது நிலமும் நீரும் என உணவின் பிறப்பிடத்தை கூறி சேற்றில் கால்வைத்து உழும்  உழவனை பசிப்பிணி போக்கும் மருத்துவன் என புறநானூறு புகழ்ந்து பாடுகிறது.

      மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என ஐந்தாம் வகுப்பில் படித்திருக்கிறோம்.  மலை சூழ்ந்த பிரதேசத்தில் அடர்ந்து செழித்து வளரும் மரங்கள் ஏராளமாக மழையை தாங்கள் இருக்கும் பகுதிக்கு வரவழைத்து கொள்கிறது.  வந்து விழும் மழைத்துளியை ஒன்றை கூட வீணாக்காமல் மண்மடியில் சேகரித்து பொங்கும் புணலாக வெளியிட்டு சிற்றோடையாக ஓடி முல்லை நிலம் வழியாக ஆறாக பெருக்கெடுத்து ஒடி மருத நிலத்திற்குள் புகுந்து செவ்வாழை தோட்டத்தையும் சென்நெல் வயல்களையும் மா, பலா, தோப்புக்களையும் செழிக்க செய்து துள்ளி குதிக்கும் கயல்கள், வாழ்வை வளம் கொழிக்க செய்யும் நெய்தல் நிலத்தில் ஒடி கடலை கலக்கும் குறிஞ்சியும் முல்லையும் மழை வராது போனால் தாய்ப்பால் இல்லாத குழந்தை சவலை குழந்தையாகி விடுவது போல நிலம் பாலையாகி விடும்,  சங்கத்தமிழ் இலக்கியங்கள் நிலத்தின் தன்மையை இயற்கையின் இயல்பை இப்படிதான் நமக்கு படம் பிடித்து தருகிறது .  ஆண்டாண்டு காலமாக கண்டும், கேட்டும், அனுபவித்து வருவதும் இந்த உண்மையை தான், இந்த நிலை மாறாது  இருக்கும் வரை தாவரங்களுக்கு ஊர்வன, பறப்பன, நடப்பனவைகளுக்கு, மனிதர்களுக்கு உயிர் வாழ்வதில் எந்த சிக்கலும் இல்லை, எத்தகைய இடையூறும் இல்லை இதில் சிறிது மாற்றம் வந்தால் எல்லாம் தலைகீழாகி விடும்.


     பிறந்த நாள் முதல் ஆட்டுக்கறியும் கோழித்தொடையும் சாப்பிட்டு பழகியவனை திடிரென்று ஒரு நாள் பிடித்து வந்து இன்று முதல் நீ காய்கறி உணவு தான் சாப்பிட வேண்டும்.  அசைவ ஆகாரத்தை கண்ணால் கூட பார்க்க கூடாது என்று கட்டாயப்படுத்தினால் அவன் நாளா வட்டத்தில் மெலிந்து, நலிந்து செத்தே போய்விடுவான்.  அசைவத்திலிருந்து சைவைத்திற்கு மாறுவதே இந்த விபத்தை ஏற்படுத்தும் என்றால் ஆப்ரிக்க உணவை தான் நாளை முதல் இந்தியர்கள் சாப்பிட வேண்டும் என்று சட்டம் போட்டால் என்ன நிகழம்,  ஒரே வருடத்தில் இந்தியாவின் ஜனதொகை பாதியாக குறைந்து விடும்.  அதே போன்ற செயல் தான் மண்ணுக்கு ஏற்றாற் போல விவசாயம் செய்யாமல் மனம் போன போக்கில் விவசாயம் செய்தால் ஏற்படும்.  நாடு முழுவதும் உள்ள பூகோள அமைப்புப் படியும், மண்வளத்திற்கு தக்கவாறும், இயற்கையின் தட்பவெட்ப பருவகால அடிப்படையிலேயும் மழை மற்றும் வறட்சியை கணக்கிட்டும் பண்டைய கால அனுபவத்தின் தன்மைக்கு ஏற்ப நவீனயுக்திகளை கையாண்டும் உழவு தொழிலானது அமையவில்லை யென்றால் பயிர்களுக்கு பதிலாக விஷத்தையே அறுவடை செய்ய நேரிடும்,  அதாவது நாடு முழுவதிலும் உணவு பாதுகாப்பு என்பது காணல் நீராகி  விடும்.


     எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள் விளைய கூடிய பூமியில் ஆழ்துழாய் கிணறுகள் போட்டு பாசனவசதியை ஏற்படுத்தி கரும்பு நெல் போன்ற பயிர்களை விளைவிக்க முயன்றால் இயற்கையின் சமன்பாடு பாதிக்கப்பட்டு எல்லாமே தாறுமாறாகி விடும்.  தினை, சாமை, சீரம், கடுகு பழவகைகள், மூலிகைகள் என்று விளையும் மலை பிரதேசங்களில் கூட நிலத்தடி நீரை  தோண்டி எடுத்து நஞ்சை  பயிர்  செய்தால் வளம்கொழிக்கும் மலை பிரதேசங்கள் கூட வறண்டு பாலை நிலமாகி விடும்;.  விவசாயத்தின் கழுத்தை நெறிப்பது போன்ற இத்தகைய முரண்பாடு வேளாண்மை தான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நமது இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகிறது.  இதனால் மலைப்பகுதிகளில் வாழும் உயிரினங்கள் குடிப்பதற்கு கூட நீர்  இல்லாமல் ஏறக்குறைய முழமையாக அழிந்து வருகின்றன.  புவியின் வெப்பம் அதிகரித்திருப்பதும் மனித சுரண்டல்கள் மிதமிஞ்சி போனதும் இந்த அழிவிற்கு காரணமென்று மனசாட்சி உடைய எவனும் ஏற்றுக் கொள்வான், நாளைக்கு வருவதை நாளை பார்த்து கொள்ளலாம்,  இன்று கிடைப்பதை வைத்து முழுமையாக அனுபவிப்போம் என்று நினைக்கின்ற சமுதாயம் உருப்பட்டதாக வரலாறு இல்லை.  நீர் ஆதாரம் முற்றிலும் அழிந்துவிட்டால் நாளைய தலைமுறை  மயான பூமியில் தான் கண் விழிக்க வேண்டும் என்பதை கூட மறந்து பூமிக்குள் இருக்கும் நீரை முக்கால் பங்கு உறிஞ்சி விட்டதும் வீணாகும் நீரை சரியாக பாதுகாக்க தெரியாத  அல்லது பாதுகாக்க மனமில்லாத அரசாங்க நிர்வாகமும் மக்களின் பேராசையும், மிகபெரும் உணவு பஞ்சம் நமக்கு ஏற்பட சரியான அஸ்திவாரம் போட்டு வைத்திருக்கிறது.     பரந்த நிலப்பரப்பும், குறைவான் மக்கள் தொகையும், மிதமான தட்பவெப்பம் நிலையும் ஐரோப்பிய நாடுகளில் நிலவுகிறது.  அமெரிக்க நாட்டில் ஒரு விவசாயிக்கு குறைந்தது ஐநூறு ஏக்கர் நிலமாவது இருக்கும், அவ்வளவு பெரிய நிலபரப்பில் எல்லா வேலைகளையும், மனிதர்களை  கொண்டு செய்வது என்பது அசுர பிரயத்தனமாகும்.  பத்து ஆள் செய்யும் வேலையை ஒரு ஆளால் செய்ய முடியாது எனும் போது அவர்கள் இயந்திரங்களை நாடித்தான் ஆக வேண்டும்.  அதில் தவறில்லை நம் நாட்டு விவசாயம் அப்படி அல்ல, தலைக்கு ஒரு ஏக்கர் தேறினாலே பெரிய அதிசயம், இந்த நிலையில் நமது விவசாயத்திற்கு இயந்திரங்களை ஈடுபடுத்துவது முயலுக்கு கொம்பை ஒட்டி வைப்பதற்கு சமமாகும்.

   பூமிக்கு ஒத்த பருவகாலத்திற்கு   ஏற்ற விவசாய முறையை கையாளாமல் அந்நிய முறைகளை கையாண்டு விவசாயம் செய்வது தற்கொலை செய்வதற்கு ஒப்பாகும் கிராம புறங்களிலும் சரி, நகர்புறங்களிலும் சரி  காலையிலிருந்து மாலை வரை எந்தவிதமான வேலை வெட்டியும் இல்லாமல் ஒரு கூட்டம் தினம் தினம் சுத்தி வருகிறது.  எதாவது வேலை செய்ய கூடாதா?  நாலு காசு சம்பாதித்தால் குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருக்குமே என்று அவர்களை கேட்டால் வேலை செய்ய நாங்கள் ரெடி, செய்வதற்கு என்ன வேலையிருக்கிறது. அதை காட்டுங்கள் நாங்கள் செய்கிறோம் என்கிறார்கள்.


     நமது காடகனூர் தண்டபானி கழனியில் கரும்பு விளைந்து விட்டது,  ஆலையிலிருந்து கட்டிங் ஆர்டரும் வந்து விட்டது,  கரும்பை வெட்டி வண்டியில் ஏற்றுவதற்கு ஆள்கள் கிடைக்க வில்லை.  கிராமம் கிராமமாக பதினைந்து நாள் சுற்றி அலைந்து ஒரு ஆள் கூட சிக்கவில்லை.  அகப்பட்டவன் எல்லோரும்  அடுத்தவாரம் வருகிறேன் என்கிறான். வீடடை விட்டு ஒரு மாதத்திற்கு நகர மாட்டேன் என்கிறான், இத்தனைக்கும்  இரண்டு வேளை உணவ கொடுத்து, காபி, வடை, போண்டா என்று சிற்றூண்டி கொடுத்து கையில் தினசரி  தலைக்கு முன்னூறு ரூபாய் கூலிக்கு தான் அழைக்கப்படுகிறார்கள், மாதம் இருபதுநாள் வேலை செய்தாலே ஆறாயிரம் ரூபாய் வருமானம் வந்து ஒரு குடும்பத்தை எளிமையான முறையில் நடத்த இந்த பணம் போதும்.


    ஆனால் இப்போது கிராம தொழிலாளி என்ன சொல்கிறான் தெரியுமா? அரசாங்கம் இப்பொழுது வருடத்திற்கு நூற்றி ஐம்பது நாள் வேலை தந்து தினசரி  100 ருபாய் கூலி தருகிறது,  ஒரு கிலோ அரிசி ஒரு ருபாய் தான், மாதம் ஐம்பது ரூபாய்க்கு மளிகை பொருள் வேறு தருகிறார்கள், மனைவி வேலைக்கு போய் சம்பளம் வாங்கி சமைத்து கொடுத்து விட்டு அரசாங்கம் தந்த தொலைக்காட்சியில் தொடர்களை பார்த்து அழுது கொண்டிருக்கும் நேரத்தில் கொஞ்சம் வெளியில் சென்று டாஸ்மார்க் கடையில் ஒரு குவார்ட்டர்   வாங்கி ஊற்றி விட்டால் நிம்மதியாக தூக்கம் வரும்,  அதை விட்டுவிட்டு கஷ்டப்பட்டு கரும்பு வெட்டி, சுமைதூக்கி பிழைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.


    இப்படி நான் எழதியிருப்பது வேடிக்கைக்காக அரசாங்க திட்டங்களை நையாண்டி செய்வதற்காக என்று நீங்கள் நினைக்க கூடும்.  நிச்சயம் அப்படியல்ல, நாட்டின் இன்றைய நிலை இதுதான், இலவச திட்டங்களை அறிவித்து சோம்பேறிகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டு இருக்கிறது அரசாங்கம், பயிர் செய்தால், களை எடுக்க ஆளில்லை, நாத்து நட யாரும் இல்லை, அறுவடை செய்ய முடியாமல் வயல் வெளியிலேயே அழுகி கொண்டு கிடக்கிறது பயிர், இந்த நிலையில் கடன் வாங்கி, மனைவியின் நகையை அடகு வைத்து விவசாயம் செய்த விவசாயி  என்ன ஆவான், ஒன்று கடனை அடைக்க முடியாமல் சாகவேண்டும்,  அல்லது ரியல் எஸ்டேட் காரனுக்கு சோறு போட்ட பூமியை விற்க வேண்டும்.


    முப்போகம் விளைந்த பூமியெல்லாம் சமபடுத்ததப்பட்டு வீட்டு மனைகளாக ஆக்கப்பட்டு இருக்கின்றன.  சீட்டு குலுக்கி மனைகள் விற்கப்படுகின்றன.  தாம்பரத்தில் வேலை செய்யும் ஒருவனுக்கு தாராபுரத்தில் வீட்டுமனை கிடைக்கும்.  ஏரிக்கு நடுவில் இருக்கும் அந்த மனையில் அவன் வீடு கட்டுவானா? விவசாயம் செய்வானா? முழுத்தேங்காயை உருட்டும் நாய் போல எனக்கு மனையிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு திரியலாமே  தவிர வேறு ஒரு பயனும் அதிலில்லை.  இப்படி பயிர் செய்ய முடியாமல் விவசாய நிலங்களெல்லாம் பாழ்பட்டுகொண்டிருக்கின்றன,ரியல் எஸ்டேட் நடத்தும் முதலாளிகளின் கல்லா பெட்டி மட்டும் லட்சகணக்கில் நிரம்பி வழிந்த வண்ணம் கிடக்கிறது,  யாரிந்த முதலாளிகள் இவர்கள் அனைவருமே சர்வகட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் அல்லது அரசியல்வாதிகளின் அடியாட்கள் நிலைமை இப்படியே போனால் பசியால் விவசாயி சாக மாட்டான், மற்றவர்களை சாகடிக்க ஆரம்பிப்பான் .


    தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியா என்ற ஒரு நாடு இருக்கிறது தெரியுமா? அந்த நாடுதான் உலகை போதை வர்த்தகத்தின் உற்பத்தி கேந்திரமாக இன்றும் இருக்கிறது,  உங்கள் பக்கத்து வீட்டில் யாராவது ஒருவன் சிகரெட்டிற்குள் கஞ்சாலை திணித்து புகைப்பதை பார்த்திருப்பிர்கள்,  நிச்சயம் அந்த கஞ்சா உங்கள் ஊர் கடைத் தெருவிற்கு கொலம்பியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதாக தான் இருக்கும், அந்த அளவிற்கு போதை மருந்து உற்பத்தியில் கொலம்பியா கொடி கட்டி பறப்பதற்கு என்ன காரணம்? அந்த நாட்டு விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பலவித வரிகளை போட்டு அரசாங்கம் கொள்ளையடித்தது, பல வகை கடன்களை கொடுத்து தனி முதலாளிகள் விவசாயிகளை சுரண்டினார்கள், உப்பு வாங்க கூட வக்கத்து போன விவசாயி திக்குதிசை தெரியாத தவித்து தப்பு செய்வதே தப்பிக்கும் மார்க்கமென நம்பி கோகைன் , கஞ்சா, போன்றவைகளை பயிரிட்டான்,  நாட்டு நலத்தை கொன்றான், அதுதான் இங்கும் நடக்கும்.


    2001-முதல் 2006 வரையிலான ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஆந்திரம் மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களின் மட்டும் 11,500 பேர்கள், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் ஏறத்தாழ இந்த அளவு தான் இந்த தற்கொலைகள் தனிப்பட்ட காரணத்திற்காக நடந்தாக சொல்லி விடமுடியாது,  கந்து வட்டி காரர்களின் நெருக்குதல், அரசு வங்கி அதிகாரிகளின் மிரட்டல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நடந்தது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.


    தற்பொழுது ஆட்சியிலிருக்கும் முன்பு இருந்த அரசுகள் எல்லாம் விவசாயிகளின் பேரில் மகா கருணையோடு நடந்து கொண்டன.  நடந்தும்; வருகின்றன,  பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளின் வயிற்றில் பாலை வளர்த்துயிருக்கிறார்கள் மானிய விலையில் விவசாய இடுபொருட்களையும் உரங்களையும் வழங்குகிறார்கள்.  கண்ணை இமை காப்பது போல, தாய் பிள்ளையை காப்பது போல விவசாயிகளை அரசாங்கம் பொத்தி பொத்தி பாதுகாக்கிறது, என்று சில கட்சி அபிமானிகள் நம்மிடம் வாதம் செய்கிறார்கள்.     ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மலிவு விலையில் உரங்கள் கொடுக்கப்படுகின்றன.  இன்னும் பல உரங்கள் எல்லாம் செய்யப்படுகின்றன பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் கூட தள்ளுபடி செய்யப்பட்டது,  உண்மைதான் யாரும் மறுப்பதற்கு இல்லை,  அரசின் இந்த திட்டங்களால் பயனடைவது உண்மையில் விவசாயிகள் தானா அரசியல்வாதிகளா? பெரிய பண்ணையார்களா? என்பது தான் நமது கேள்வி ,உண்மையில் வேளாண் பெருமக்கள் என்ற போர்வைக்குள் மறைந்திருக்கும் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற  அங்கத்தினர்கள், ஆளுகட்சி பிரமுகர்கள் ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் பண்ணை முதலாளிகள் போன்றோர்கள் தான், தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் கடன் தள்ளுபடி திட்டங்கள், சிறு குறு விவசயிகளுக்கு எந்த பலனையும் தருவது கிடையாது.  கருவாடு விக்கிறவன் கூட தன் பொருளுக்கு தான் விலை வைத்துக் கொள்ளலாம்,  ஆனால் மனைவியின் தாலியை விற்று பயிர் செய்பவன் பொருளுக்கு சம்பந்தே இல்லாத வியாபாரி  தான் விலை வைக்கிறான்,  இந்த நிலைமை எந்ந நாட்டிலும் கிடையாது  செருப்பு விற்பதை கூட வியாபாரம் என்று ஏற்றுக் கொள்ளும் வங்கிகள் விவசாயத்தை தொழிலாக அங்கீகரித்து கடன் வழங்குவது கிடையாது,  நிலைமை இப்படியே போகுமானால் கலப்பை பிடித்த உழவன் ஏ.கே 45 பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.  அதற்குள் அரசாங்கம் விழித்துக் கொண்டால் நாடு அமைதி பூங்காவாக தொடரும்


    நமது தமிழக அரசியல்வாதிகள் தமிழ் மொழிக்கு உயிரை கொடுப்பதாக மேடையில் முழங்குவார்கள்,  ஆனால் தமிழ் படித்தவனுக்கு வேலை கொடுக்கமாட்டார்கள்,  அதே போல தான் விவசாயத்திற்காக விவசாயிகளின் கஷ்டத்திற்காக நா தழு தழுக்க கண்ணில் நீர் அரும்ப படித்த மேதாவிகளும்.  அரசியல்வாதிகளும் பேசுவார்கள். உண்மையில் எல்லாமே வெறும் பாசாங்கு தான்.

     உதாரணமாக சென்ற சில ஆண்டுகள் வரையில் ரசாயண பூச்சி கொல்லி மருந்துகளையும், உரங்களையும் பயன்படுத்தினால் மட்டுமே நல்ல விளைச்சல் கிடைக்குமென்று வானொலிகளும், தொலைக்காட்சிகளும் மாறி மாறி முழங்கின,  இன்று அவர்கள் முன்பு பேசியது எல்லாம் மறந்து விட்டு ரசாயன உரங்கள் மண்ணின் உயிர்சத்தை சாகடித்து விடுகிறது.  பூச்சி கொல்லிகள் தொல்லை தரும் பூச்சிகளை மட்டுமல்ல, நன்மை தரும் புழுக்களையும் சேர்ந்து கொன்று விடுகின்றன.  அதனால் இயற்கையான தழை உரங்களையும், சாண உரத்தையும் பயன்படுத்துங்கள் என பிலாக்கணம் பாடுகின்றன,  அவர்களின் இந்த மாற்றத்தை பார்க்கும் பொழுது இந்திய மண்  ரசாயண உரங்களால் மலட்டு தன்மை அடைந்து விட்டதை அறிந்து தான் தங்களை திருத்திக்கொண்டு பேசுகிறார்கள்  என்று நமக்கு எண்ணத்தோன்றும், ஆனால் உண்மை நிலை அப்படி அல்ல.


     இந்திய ரயில்வே துறைக்கு பெட்டிகள் வேண்டுமென்றால் அரசாங்க உற்பத்தி ஆலைகளுக்கே பெட்டி தயாரிக்க அனுமதி கொடுப்பது தான் சிறந்த வழி.  ஆனால் நமது அரசு அதை செய்யாமல் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது ஏன் நமது பொதுத்துறை நிறுவனங்களிடம் அந்த வசதியில்லையா? என்று யாரும் கேட்ககூடாது காரணம் இறக்குமதி செய்தால் தான் அரசியல் வாதிகளும்   அதிகாரிகளும் கணிசமான கமிஷன் பெறலாம், பொதுத்துறைவிடம் கொடுப்பதினால் எந்த லாபமும்  இல்லை. இதே போன்றது தான் திடீரென இவர்களுக்கு இயற்கை விவசாய மோகம் பிறபதிருப்பதும், சர்வதேச உர நிறுவனங்கள் கமிஷன் கொடுப்பதை பெருமளவு நிறுத்திவிட்டதினால் ரசாயண உரங்களே வேண்டாம் என பிரச்சாரம் செய்கிறார்கள், நான் ரசாயண உரங்கள் சிறந்தது என்று சொல்ல வரவில்லை, இயற்கையின் பால் தீடிரென்று ஏற்பட்டுள்ள அக்கரைக்கான காரணத்தைதான் சொல்கிறேன்.


    ஊருக்கு சோறு போடும் வேலை விவசாயம் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது, நமது முதல் பிரதமர் ஆசிய ஜோதி நேரு அவர்கள் இந்தியாவை தொழில் மயமான நாடாக்கி பார்க்க ஆசைப்பட்டார், அதற்காக பெரும் தொழிற்கூடங்களை நாடுமுழவதும் ஏற்படுத்த அயராது உழைத்தார்,  இந்த உழைப்பை குற்றம் சொல்ல முடியாது, ஆனால் அவர் தனது தொழில்மய கனவு திரைப்படத்திற்காக விவசாயிகள் தோலை உரித்து திரை  கட்டினார்,  எலும்புகளை ஒடித்து மேடை கட்டினார், இந்தியாவின் உயிர் மூச்சான விவசாயம் கழுத்து நெரிக்கப் பட்டதினால் குறை மூச்சானது இன்று ஊசலாடுகிறது.  விவசாயியின் மகன் விவசாயத்தில் ஈடுபடுவதை அரசாங்கமே கேவலப்படுத்தியது, அரசாங்கத்தின் குரலாக ஊடகங்கள் நாற்காலி தொழிலை அலங்காரப்படுத்தி காட்டியது.  அதனால் இன்று எந்த வேலைக்கும் லாயக்கு இல்லாதவன் தான் விவசாயம் செய்வான் என்ற மனோநிலை மேலோங்கி சோம்பேறிகளின் பட்டாளம் ஊர் சுற்றி வருகிறது.
    ஆட்சி அதிகாரம் தங்கள் வசமே காலகாலமாக நிலைத்திருக்கும் என்று கனவு காணும் வர்க்கமும் ஊரான் உயிரை குடித்தாயினும் தங்கள் உதிரம் வளர பாடுபடும்; உன்மத்தர் கூட்டமும், பட்டம், பதவி என படித்து பார் புகழ பவனி வரும் கூட்டமும், கல்வியை என்னவென்று அறியாத குருடர்களும், நான் தான் மேதாவி என மேடையில் முழங்குகின்ற மூடர்களும்  எத்தனை முறை சொன்னாலும், நல்லதை நான் கேட்கவே மாட்டேன் எனும் செவிடர்களும், துப்பாக்கியால் தான் விடுதலை கிடைக்கும்,  கெடுதலை ஒழியும், சத்தியம் நிலைக்கும் என நம்பி போராடும் வன்முறை வெறியர்களும், பசியென்று வந்துவிட்டால் விவசாயின் கால்களில் தான் விழ வேண்டும் என்பதை மறந்து கொக்கரிக்கிறார்கள், கூச்சலிடுகிறார்கள்,


    உழவு தொழிலின் தரத்தை  தரங்கெட்ட கூட்டத்தார் தரம் தாழ்த்தி பிரச்சாரம் படுத்தியதினால் இன்று களையெடுக்கவும் ஆளில்லை, நாத்து நடவும் யாருமில்லை, மனிதர்கள் செய்ய வேண்டிய வேலையை இயந்திரங்கள் செய்கின்றது, இயந்திரங்களை வைத்து விவசாயம் செய்வதில் என்ன தவறு? என்று சிலர் கேட்கலாம், ஒரு ஏக்கர் பூமியை ஒரு டிராக்டரை வைத்து உழுவதினால் வருவாய் ஒருவனுக்கே, போகிறது.  நான்கு கலப்பைகளை வைத்து உழுதால் நான்கு  குடும்பம் வாழ்கிறது, இயந்திரம் வேகமாக உழும் போது மண்ணில் உள்ள இயற்கை உயிரனங்கள் பல மடிந்து போகின்றன மாடுகட்டி உழுதால் அந்த பிரச்சனை இல்லை, இதற்காக இயந்திரமே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை,  எதற்கு தேவையோஅதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.  கூலிக்கு ஆள் கிடக்காமல் தானே இயந்திரங்கலை நம்ப வேண்டி வந்தது என்றும் வருத்தப்படலாம், உண்மைதான் மனிதவளத்தை தட்டி பறித்ததினால் தடம்மாறி போக செய்ததினால் ஏற்பட்ட கேடு என்று தான் இதை சுட்டி காட்டுகிறேன்.


    மலைப்பகுதி முதல் கடற்கரை பகுதி வரை மனிதர்களின் உபயோகத்திற்கும்,  விவசாயத்திற்கும் தண்ணீர் தட்டுபாடு தலைவிரித்து ஆடுகிறது இந்த நிலை எப்படி வந்தது பூமிதாய் தண்ணீரை மறைத்து வைத்து கொண்டாளா? இல்லவே இல்லை.  பாதாளம் வரையில் ஆழ்துளை கிணறு போட்டு வசதி உள்ளவன் நீரை உறிஞ்சி எடுக்கிறான் பேராசை கொண்டு அரசியல்வாதியோ ஆற்று படுகையில் மணல்  எடுத்து ஆறுகளை சாகடிக்கிறான்.  இதனால் கிணறுகள் எல்லாம் பாதாள குகையாகி விட்டது ஏரி, குளங்களெல்லாம் காய்ந்த நிலமாகி விட்டது,  சிறு விவசாயிகளின் நிலைமையோ கேள்வி குறியாகி விட்டது.  பாசனத்திற்கு தண்ணி இல்லை, நான்கு நாட்கள் காத்திருந்து தண்ணீரை ஊற வைத்து வயலுக்கு பாய்ச்சுவோம் என்றால் மோட்டார் இயங்குவதற்கு மின்சாரம் இல்லை, தப்பிதவறி மின்சாரம் வந்தாலும் அதன் அழுத்தம் குறைவால் மோட்டார் ஒடுவதில்லை, பல நேரம்காயல் எரிந்து விடுகிறது,  மெக்கானிக்கை கூட்டி வந்து சரி செய்து முடித்தால் மீண்டும் மின்சாரம் இருப்பதில்லை இல்லாத மின்சாரத்திற்கு தமிழ்நாட்டில் என்ன பெயர் தெரியுமா? ஏழை விவசாயிக்கு இலவச மின்சாரம் என்ற அலங்கார பெயர் அதற்கு.


    விவசாயம் வாழ வேண்டுமென்றால், விவசாயி  பிழைக்க வேண்டுமென்றால், விவசாயத்தை ஒரு தொழில் என்று முதலில் அறிவிக்க வேண்டும்,  அறிவித்த பிறகு குறைந்தது இருபத்தி ஐந்து வருடம் கழித்து தான் அதற்கு வரி போட வேண்டும் ஒவ்வொரு பருவ வேளாண்மைக்கும் காப்பீடு  வழங்க வேண்டும் சுலபமான வழி முறையில் விவசாய கடன்கள் வழங்கி நேர்மையான முறையில் வசூல் செய்ய வேண்டும்,  இலவச மின்சாரம் என்ற மாய்மால திட்டங்களை தூக்கி குப்பையில் போட்டு விட்டு குறைந்த கட்டணத்தில் சீரான மின்சாரம் வழங்க வேண்டும்,.  அரசாங்கமே மானவாரி நிலங்களில்  கூட்டு பண்னைகளை உருவாக்கி விவசாய பட்டதாரிகளின் முலம் உற்பத்தி செய்யலாம்,  அரசாங்க சந்தைகளிலும், தனியார் சந்தைகளிலும் பயிர்க்கான விலையை தீர்மானிக்கும் உரிமை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், பெட்ரோலிய பொருட்களின் விலையை நிறுவனங்களே தீர்மானித்து கொள்ளும் போது விவசாயிகள் தீர்மானிப்பதில் எந்த தவறுமில்லை, படித்த இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.  விவசாய பொருட்களின் ஏற்றுமதிக்கு உள்ளவரியை குறைத்து வேளாண் ஏற்று மதியை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்.  பயனற்று போன நிலங்களை இயற்கை முறையில் பராமத்து மறு சீரமைப்பு செய்ய வேண்டும் நிலத்தடி நீர் ஆதாயம் உயர நவீன யுக்திகளை பயன்படுத்த வேண்டும், நாடுமுழவதிலும் உள்ள கால்வாய்களை சீரமைத்து, ஏரி, குளங்களை ஆழப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும், மரபுவழி வேளாண்மைக்கு படிபடியாக முன்னுமை அளித்து நாளாவட்டத்தில் இயற்கை வேளாண்மை மட்டுமே நிலைக்க வழி செய்ய வேண்டும் ; அரசாங்கமும், அதிகாரிகளும் கருத்தரங்குகளில் பேசுவதை விட்டு விட்டு களத்து மேட்டுக்கு வர வேண்டும்.


மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்   http://www.verdicms.com/images/goButton.gif

Contact Form

Name

Email *

Message *