Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜாதி பார்த்தால் சொத்து இல்லை

 ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று என் தாத்தாவின் அப்பா காலத்திலிருந்து பேசப்படுகிறது. இதை ஒரு உதாரணத்திற்கு தான் சொல்கிறேன். உண்மையில் இந்த கருந்து புத்தர் காலத்திலிருந்து ஆரம்பித்துவிட்டது. ஆனால் இன்று வரை ஜாதி ஒழிந்த பாடில்லை. இந்திய புராணம் ஒன்றில் ரத்த பிஜ அரக்கன் என்று ஒருவன் காட்டப்படுகிறான் அவனை வெட்டினால் அவனது உடலிருந்து வருகின்ற ஒவ்வொரு துளி ரத்தமும் அவனை போலவே பல அரக்கர்களை உருவாக்குமாம். ஏறக்குறைய ஜாதியும் அப்படி தான் இருக்கிறது. ஒரு பக்கம் அதை துரத்தினால் இன்னொரு பக்கம் பிரம்மாண்டமாக உருவெடுத்து வருகிறது. உண்மையில் ஜாதியை ஒழிக்கவே முடியாதா? ஜாதிகளே இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாதா? என்று தணியும் ஜாதி என்ற நெருப்பு.

   நமது அரசியல்வாதிகளிடம் சென்று இந்த கேள்விகளை கேட்டால் பன்நெடுங்காலமாக இதற்கு தானே பாடுபட்டு கொண்டிருக்கிறோம். எப்படியும் வெற்றி பெற்று விடலாம், நம்பிக்கையோடு காத்திருங்கள் என்று பல நூறு வருஷமாக கூறி வருகின்றனர். பொருளாதார மேதைகளிடம் சென்று இந்த கேள்வியை வைக்கும் பட்சத்தில் ஒவ்வொரு தனி மனிதனின் வருவாயும் அதிகரிக்கும் போது தானாகவே ஜாதி என்ற நெருப்பு அனைந்து விடும் என்கிறார்கள். பணத்தாலும் படிப்பாலும் உயர்ந்து விட்ட பிறகும் பெருவாரியான மனிதர்கள் ஜாதி பற்றுதலை விடவில்லையே என்று அவர்களிடம் திருப்பி கேட்டால் நீண்ட மௌனத்தை தான் பதிலாக தருகிறார்கள். சரி இவர்கள் எல்லாம் உலக ஆசையில் கிடந்து உழலுகின்ற சாதாரண ஜீவன்கள், பற்றுதலை விட்டுவிட்ட ஆன்மிகவாதிகளிடம் சென்று கேட்போம் தக்க பதில் கிடைக்காதா என்று பார்த்தால் அவர்களோ அம்பலத்தில் ஆடுகின்ற ஆண்டவன் முன்னால் ஆண்டானும் ஒன்று தான், அடிமையும் ஒன்று தான் என்று வேதாந்தம் பேசுகின்றனர், இவர்களின் பேச்சை கேட்டால் பசியால் மயங்கி கிடக்கும் ஒருவனை தண்ணீர் தெளித்து தட்டியெழப்பி இன்றும் உனக்கு சோறு இல்லை பசியோடு தான் தூங்க வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது, நிச்சயம் ஜாதியை ஒழிக்க வழி எதுவும் இல்லாமல் இல்லை, மனம் தான் இல்லை.


   ஜாதி ஒழிந்து விட்டால் பல பேருடைய பிழைப்பு நடக்காது பதவியில் உட்கார்ந்து கொண்டு ஆனந்த பூங்காற்றை அனுபவிக்க முடியாது. அதனால் ஒரு கையில் துப்பாக்கியும் இன்னொரு கையில் அமைதி புறாவும் வைத்திருக்கும் சந்தர்ப்பவாத சர்வதிகாரிகள் போல் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று மேடை போட்டு பேசிக் கொண்டே ஜாதி ஊர்வலங்களுக்கு பட்டுகம்பளம் விரிக்கிறார்கள். என் இனத்தார்க்காக பாடுபடுவதே நான் பிறவி எடுத்ததன் நோக்கமென்று நெஞ்சை நிமிர்த்தி அறைகூவல் விடுவது கூட வெட்கமாக படவில்லை, வெற்றி முரசாகப்படுகிறது.

   ஜாதியை எல்லோரும் பிரச்சனையாகவும், கீழ்த்தரமான சமூக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறார்கள், அதிலுள்ள நல்ல விஷயங்களை யாரும் பார்ப்பது கிடையாது, ஜாதியின் அடிப்படையில் தொழில்கள் அமையும் போது குறிப்பிட்ட தொழிலின் மீது அபரிதமான நிபுணதன்மை ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல அவரவர் தொழிலை கவனிக்கும் போது வேலையில்லாத திண்டாட்டம் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை. அந்நிய சக்திகளோ, பண்பாடுகளோ, சமூகத்தில் ஊடுறுவும் போது சமூக சிதைவுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது, உள் கட்டுமான அமைப்பில் சண்டை சச்சரவுகள் ஏற்படும் போது நிலைமை கட்டுக்கடாங்காமல் போவது தவிர்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஜாதி குழுவும் தங்களுக்குள் சகிப்பு தன்மையை வளர்த்து கொள்வதினால் சட்டம் ஒழங்கு பிரச்சனை ஏற்படாமல் சமூக அமைதி பேணப்படுகிறது. வாணிபத்திலும், தொழில்துறையிலும் தேவையில்லாத போட்டா போட்டிகள் உருவாகாமல் பொருளாதாரம் சமச்சீராக இருக்கிறது, இப்படி சிலர் ஜாதி கொள்கைக்ககு சாமரம் வீசுகிறார்கள்


    பண்டையகால சமூக வரலாற்றை உன்னிப்பாக கவனிக்கும் போது இந்த கருத்து சரியாக தான் இருக்குமோ என்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது, ஆனால் கீழ் ஜாதி பெண்கள் மாராப்பு அணிய கூடாது, மேல்ஜாதிகாரர்களிடம் பேச நேரிட்டால் 25 அடி தூரமாவது தள்ளி நின்று பேச வேண்டும். ஊர் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க கூடாது, பொது பாதையில் நடக்ககூடாது செருப்பு அணிய கூடாது, தோளில் துண்டு போடகூடாது கொட்டாங் குச்சியில் தான் தேநீர் அருந்த வேண்டும் என்றெல்லாம் ஆயிரமாயிரம் மனித தன்மையற்ற கொடுமைகள் ஜாதியின் பெயரால் நடைபெறும் போது நல்ல மனிதர்களின் அடிவயிறு பற்றிஎரிகிறது , எப்பாடுபட்டாவது ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று உடம்பும் மனதும் துடிதுடிக்கின்றது.

  மேல்ஜாதிகாரர்களின் கொடுமையை கண்டு கீழ் ஜாதிகாரர்கள் பொங்கி எழும் போது ஆராவாரம் செய்து வரவேற்க தோன்றும் அதே நேரத்தில் தற்கால ஜாதிபோராட்டங்கள் நமது வயிற்றில் புளியை கரைக்கிறது. அரசு வேலை வாய்ப்பில் எங்கள் ஜாதிக்கு இத்தனை சதவிகிதத்தை  ஒதுக்கிட வேண்டுமென்று கோரிக்கை கூட நியாமானது தான். ஆனால் அந்த லட்சியத்தை அடைய அவர்கள் கடைபிடிக்கும் நடைமுறைகள் நாகரிக சமூகத்திற்கு ஏற்றதாக இல்லை. அந்தந்த ஜாதிகாரர்களே வெட்கி தலை குனியும் வண்ணம் பல நேரங்களில் அவர்களின் செயல்கள் அமைந்து விடுகிறது. கடைகளை சூறையாடுவதும், பேருந்துகளை தீ வைத்து கொளூத்துவதும், கட்டிடங்களை சேதப்படுத்துவதும் பொதுமக்களை ஒட ஒட அடித்து விரட்டுவதும் வார்த்தைகளால் எழுத முடியாத அபாச சொற்களை பயன்படுத்துவதும் கண்டு நமது நெஞ்சு பொறுக்கவில்லை.


     இன்று ஜாதிக்கொரு தலைவர்கள் இருக்கிறார்கள். அப்பாவி தொண்டர்களை தூண்டி விட்டு விலை மதிக்க முடியாத மரங்களை சாலை நடுவில் வெட்டி வீழ்த்தி, பொது ஜனங்களுக்கு இடையில்   கலகத்தை உருவாக்கி, உயிர் , சேதங்களை ஏற்படுத்தி, கட்சியை வளர்த்து அரசு பதவிகளை பிடித்து கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்து தங்களது தோட்ட மாளிகைகளை பளிங்குகளால் மெழுகி, ஜாதிகாரர்களுக்கு கொடுக்க வேண்டிய அமைச்சர் பதவிகளை தங்களது சொந்த பந்தங்களுக்கு மட்டுமே கொடுத்து ஏற்றி விட்ட ஜாதிமக்களை எட்டி உதைத்து யார் அதிகம் இடம் தருகிறார்களோ அந்த கட்சிகளோடு கொள்கை கோட்பாடுகளை பற்றி கவலையில்லாமல் கூட்டணி வைத்து தங்களது வாழ்க்கையை வளப்படுத்தி கொள்ளும் தலைவர்கள் ஒரு பக்கம்

    ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உழைப்பேன் என்று களமிறங்கி தலைமை பதவியை தக்க வைத்து கொள்ள படாதபாடுபட்டு தன் ஜாதிகாரர்களையும் கைவிட்டு தன்னையும் நிலை நிறுத்தி கொள்ளாமல் பரிதவித்து நிற்கம் தலைவர்கள் இன்னொரு பக்கம், இந்த தலைவர்கள் பாழ்பட்டு கிடக்கும் தங்கள் சமூகம் வாழ்விப்பதற்காக எதையாவது செய்யமாட்டார்களா என்று ஏங்கி எதிர்பார்த்து கோஷம் போட்டு கூடிய இளைஞர் கூட்டம் திசை தெரியாது தவிப்பது வேறொரு பக்கம்.

    ஜாதிக்காக உழைக்கிறேன் என்று கிளம்பி விட்ட இந்த தலைவர்களால் அழிக்கப்பட வேண்டிய ஜாதி மரம் தழைத்து ஒங்கி வளர்கிறது, எந்த வித ஒளிவும் மறைவும் இல்லாமல் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டு மென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பு எல்லாம் ஆதிதிராவிட மக்களுக்கும், வன்னியர் இன மக்களுக்கும் எந்த பகைமையும் இருந்தது கிடையாது. தெற்கு பகுதியில் தேவேந்திர குலவேளாளர் மக்களுக்கும் மற்ற ஜாதிகாரர்களுக்கும் பெரியளவில் சண்டை சச்சரவுகள் கிடையாது, என்று ராமதாஸ் , கிருஷ்ணசாமி, திருமாவளவன் போன்ற தலைவர்கள் உருவானர்களோஅன்று பிடித்தது சமூக அமைதிக்கு சனி, இந்த தலைவர்களின் வருகையால் அப்பாவி மக்கள் எந்த பயனையும் அடைந்தது இல்லை, மாறாக இந்த தலைவர்களின் செல்வாக்கும், செல்வவளமும் தான் அதிகரித்து இருக்கிறது.

    முன்று தலைவர்களின் பெயர்களை மட்டும் நான் குறிப்பிட்டதனால் ஜாதிவெறியை வளர்ப்பது அவர்கள் மூவரும் தான் என யாரும் தவறுதலாக நினைக்க வேண்டாம், இன்று இந்தியாவில் இருக்கின்ற அரசியல்கட்சி தலைவர்கள் அனைவருமே ஜாதி பாகுபாட்டை மறைமுகமாகவோ நேர்முகமாகவோ வளர்த்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவுடமை பேசும் கம்னியூஸ்ட் கட்சியாக இருக்கட்டும்;, தேசியம் பேசும் காங்கிரஸ் மற்றும் பா.ஜா.க கட்சிகளாக இருக்கட்டும் பிராந்திய பிரச்சனைகளை முன்னிறுத்தும் மாநில கட்சிகளாக இருக்கட்டும் எல்லோருமே தேர்தல் இல்லாத காலங்களில் ஜாதி சமத்துவம் பேசியும், தேர்தல் காலங்களில் ஜாதியின் வலுவை பேசியுமே வருகிறார்கள். ஒரு தொகுதியில் உண்மையான கட்சி தொண்டர்கள் யார் என்று பார்த்து தேர்தலில் நிறுத்துவதை விட தொகுதியில் எந்த ஜாதிவலு அந்த ஜாதிக்காரனை வேட்பாளாராக அறிவிப்பது தான் நடைமுறை அரசியலாக இருக்கிறது, தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குகளை சேகரிக்க பணம் கொடுக்கப்படுகிறது, மது கொடுக்கப்படுகிறது என்பதை விட நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்ந ஜாதிகாரர்களுக்கு சலுகைகள் வழங்குவோம், இன்ன ஜாதிகாரர்களை அரசியல் ரீதியாக ஒரம் கட்டுவோம் என்ற வகையில் விஷமம் வளர்க்கப்படுகிறது.

   ஜாதிகளுக்கிடையில் வளர்க்கப்படும் துவேஷ உணர்வே பல மாநிலங்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதாக உள்ளது, உதாரணமாக தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கும், பிராமணர் அல்லாதோருக்கும் காழ்புணர்ச்சியை தூண்டி விட்டே 1947-க்கு பிந்தைய அரசியல் நடந்தது, இன்றும் ஏறக்குறைய அப்படியே நடக்கிறது, மராட்டிய மாநிலத்தின் அரசியல் கதையும் இப்படி தான், ஆந்திராவில் கம்மவார் நாயுடுகளுக்கும், ரெட்டியார்களுக்கும் தங்களின் யார் உயர்ந்தவர் என்பதை பலபரிச்சை செய்வதே ஆந்திர அரசியல், ஆந்திர மாநிலத்தில் கணிசமாக உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து உருவாக்கிய பிராஜ ராஜ்ஜியம் கட்சி கூட ரெட்டியார் மற்றம் நாயுடுகளை எதிர்க்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொம்பு சீவி அரசியலை துவங்குகிறது என்று சொல்லலாம் ராஜஸ்தானில் ஜாட் இன மக்களுக்கும், ரஜபுத்திர இன மக்களுக்கும் புகைச்சலை அணையாமல் காப்பதும் குஜராத்தில் பணியா மற்றும் பட்டேல் பாகுபாட்டை நெய் ஊற்றி வளர்ப்பதும், பீகாரில் யாதவ் மற்றும் தாகூர் இன பாகுபாட்டை தூண்டிவருவதும் ஹரியானாவில் ஜாட்டுகளுக்கும் பிராமணர்களுக்கும் பகையை வளர்ப்பதும், கேரளாவில் ஈழவர் மற்றும் நாயர் மக்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படாமல் பார்த்து கொள்வதும் தற்கால அரசியல்வாதிகளின் லீலைகளே என்று சொல்லலாம்.

  நமது நாட்டை பொறுத்தவரை சில ஆயிரம் ஆண்டுளாக அரிஜன மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டு வருகிறார்கள், சாதாரணமாக ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை கூட அந்த மக்கள் போராடித் தான் பெற வேண்டியுள்ளது அம்பேத்கர் போன்ற தலைவர்கள் ஆயிரம் முயற்சி எடுத்தும் கூட அரிஜனங்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. உண்மையில் அரிஜனங்களின் விரோதி பிராமணர்கள் அல்ல பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் மக்கள் தொகையே தமிழகத்தில் அதிகம் இந்த பெருவாரியான மக்களே அரிஜனங்களை தீண்டதாகதவர்களாகவும், அடிமைகளாகவும் நடத்துகிறார்கள் .

  உதாரணமாக திண்டுக்கல் மற்றும தேனி பகுதிகளில் இரட்டை டம்ளர் முறை இன்னும் நடைமுறையில் இருப்பதும்,அரிஜன பெண்களை பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்துவதும், பிற தமிழக பகுதிகளில் ஊர் பொது கோவில்களுக்குள் அரிஜனங்களை நுழைய விடாமல் தடுப்பதும், பிராமணர் அல்லாத மக்கள் தான்.

  இப்படி சொல்வதனால் பிராமண ஜாதி என்னவோ யாரையும் கொடுமைப்படுத்தாத உத்தமஜாதி என்று அர்த்தமல்ல , தஞ்சாவூர் பிராணர்களும் கேரள நம்பூதிரிகளும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த கொடுமைகள் வரலாற்று ஏடுகளில் கருப்பு பக்க மாகவே இன்று வரை இருக்கிறது, இது மட்டுமல்ல மற்ற ஜாதிகாரர்களுக்கு எல்லாம் ஆரம்காலங்களில் ஜாதி வெறியை ஊட்டி வளர்த்தது ஜாதிகளிடத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டால் சுகமாக அரசாளலாம் என்ற ஞானத்தை அரசியல்வாதிகளுக்கு கொடுத்தது பிராமணர்களே ஆகும்.


   பல பிராமணர்கள் மக்களை நான்கு ஜாதிகளாக கடவுள் படைத்திருப்பதாகவும் அதன் படியே சமூக அமைப்பு இயங்க வேண்டும் என்ற விதி இருப்பதாகவும் நம்புகிறார்கள், தாங்கள் நம்பியதை மற்றவர்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று பிரச்சாரங்களையும் செய்தனர். ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூத்தகமும், பகவத்கீதையும் மனுநீதி சாஸ்திரமும், ஜாதிகட்டமைப்பை வலியுறுத்துவதாக கூறுகிறார்கள், இதற்கு ஆதாரமாக பல வாதங்களை ஆண்டாண்டு காலமாக முன் வைக்கிறார்கள், நிறைய பேர் பிராமணர்கள் அரிஜனங்களை மட்டும் தான் தீண்டதாகதவர்கள் என்று ஒதுக்குவதாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் பிராமணர் அல்லாத அனைவரையுமே அவர்கள் அடிமை ஜாதிகளாக தான் கருதுகிறார்கள், சூத்திரன் என்ற வார்த்தை அரிஜனங்களை மட்டும் குறிப்பதல்ல, பிற ஜாதியினர் அனைவரையுமே சூத்திரர்கள் தான் என்றும் அவர்கள் ஆழமாக நம்புகிறார்கள். அதாவது அவர்கள் பார்வையில் ஜாதியின் வகை நான்கு அல்ல பிராமணர், சூத்திரர் என்ற இரண்டு மட்டுமே.

  பிராமணர்களின் இந்த பைத்தியகாரத்தனமான எண்ணத்தை சரிவர புரிந்து கொள்ளாத மற்றவர்கள் தங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு அரிஜனங்களை கேவலப்படுத்துகின்றார்கள். வேறு ஒரு சாரர் பிராமணர்களின் வாதம் தான் இந்து மதத்தின் கொள்கை என்று தவறாக நினைத்து கொண்டு இந்து மதத்தை ஒழிப்பதே தங்களது தலையாய பணி என கிளம்பிவிட்டார்கள்.


 கடவுளின் தலையிலிருந்து பிராமணன் வந்ததாகவும், மார்பில் இருந்து சத்திரியன் தோன்றியதாகவும், வயிற்றிலிருந்து வைசிகன் உதயமானதாகவும் கால்களிலிருந்து சூத்திரன் உருவானதாகவும் இந்துமதம் கூறுகிறது. கால்களில் இருந்து சூத்திரன் வந்ததால் அவன் தாழ்ந்தவன் என்று மனிதரில் ஒரு பகுதியினரை இந்து மதம் இழிவுபடுத்துவதாகவும் மிக பலமான பிரச்சாரம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

உண்மையில் இந்துமதம் ஜாதிகளை பிறப்பின் அடிப்படையில் எப்போதுமே வகுப்பதில்லை. ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட குணங்களை தான் பிராமண. சத்திரிய, வைசீக, சூத்திர என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறது, மனிதனின் குண இயல்பை அறிவு மயமானது, செயல் மயமானது, பொருள் மயமானது, உடல் மயமானது என்று நான்காக பிரிக்கலாம், நீக்ரோவாக இருந்தாலும், ஆசியனாக இருந்தாலும் மனிதர்கள் அனைவருமே இந்த நான்குவகை குணத்தின் அடிப்படையில் உள்ளவர்களே ஆகும்.

நிர்வாகத்துறையில் உள்ளவர்கள் மனிதனின் இத்தகைய குணாதிசியத்தை மிக நன்றாகவே அறிவார்கள், சிலர் திட்டமிடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள், சிலர் செயலாற்றுவதில் மட்டுமே திறமை பெற்றிருப்பார்கள் சிலர் எல்லா விஷயத்திலும் லாப நஷ்ட கணக்கு போட்டே செயல்படுவார்கள், சிலர் சுயசிந்தனை இல்லாமல் சொன்னதை மட்டும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள், இந்து மதம் தனக்குரிய பாதையில் மனித இனத்தை இப்படிதான் பிரிக்கிறது. அறிவே வடிவான ஒருவனுக்கு சுயசிந்தையே இல்லாத ஒருவன் வந்து பிறக்கலாம் அறிவுபூர்வம் என்பது பிராமண தன்மையே குறிக்கும் சுயசிந்தனை இல்லாதது சூத்திர தன்மையை குறிக்கும், அதாவது பிராமனுக்கு பிறந்தவன் சூத்திரனாகவும் இருக்கலாம் என்பதே இந்து மதத்தின் ஆதார கருத்தாகும். பிறகு எப்படி பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள் உருவாயின என்று சிலர் கேட்கலாம், இதற்கு ஒரே பதில் மனிதனின் சுரண்டல் மனோபாவமே ஆதிக்க வெறியே ஜாதிகளை பிறப்பின் அடிப்படையில் தீர்மானம் செய்தது என்று சொல்ல வேண்டும், இந்த உண்மையை உணராமல் இந்து மதத்தை குறை கூறுவது முட்டாள்தனமாகும்.


இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதி பிரிவுகள் இருக்கிறது என்பதும் அறியாமையான கருத்தாகும். மனிதர்கள் எல்லோரும் சகோதர்களே என்று போதித்த முகமது நபி அவர்கள் உருவாக்கிய இஸ்லாம் மதத்தில் கூட ஷியா, சன்னி என்ற ஜாதிபிரிவுகள் உள்ளன. இந்தியாவின் தென்பகுதி முஸ்லிம் இடத்தில் பட்டானி, ராவுத்தர் மரக்கியார், லப்பை, மாப்பிள்ளை, என ஜாதிபிவுகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது, கிறிஸ்த்துவ மதம் கூட உலக அளவிலும் சரி , இந்திய அளவிலும் சரி, பல ஜாதி வகைகளை தனக்குள் அடக்கமாகவே கொண்டுள்ளது கிறிஸ்த்துவ ஜாதி போராட்டத்திற்கு பலசம்பவங்களை உதாரணமாக சொல்லலாம் என்றாலும் தென்னிந்திய திருசபையின் தலைமை பொறுப்புகளுக்கு எந்த தலித் கிறிஸ்த்துவர்களும் சுலபமாக வந்து விட முடியாது, ரெட்டியார் மற்றும் நாடார் ஜாதி கிறிஸ்த்துவர்களின் ஆதிக்கம் அங்கு ஏராளம்.



   ஆக நமது நாட்டில் எல்லோரும் போட்டி போட்டு கொண்டு ஜாதி வெறியை வளர்த்து கொண்டிருக்கிறார்கள், மற்றவர்களால் அடிமைபடுத்தப்படுகிறோம் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் அரிஜனங்கள் கூட தங்கள் உயர்வுக்காக கொண்டு வரப்பட்ட தீண்டாமை தடுப்புசட்டத்தை பல நேரங்களில் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள், மற்ற ஜாதிக்காரர்களை மிரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் தீண்டாமை தடுப்பு வழக்குகளே மிக அதிகம் எனலாம், திருட்டு குற்றம் சாட்டப்பட்ட ஒரு தாழ்த்தப்பட்டவன் தன்னை பாதுகாத்து கொள்ள காவல் துறையின் அதிகாரிகள் மீதே தன்னை ஜாதியின் பெயரை சொல்லி இழிவு படுத்தியதாக குற்றம் சாட்டிவிட்டால் சில மனித உரிமை அமைப்புகள் நல்லது கெட்டதை ஆராயமல் ஆர்பாட்டம் பேரணி என்று இறங்கிவிடுகின்றன.

   எல்லாம் சரி, ஜாதியை ஒழிக்க என்ன தான் வழி என்று மண்டையை போட்டு உடைக்கிறீர்களா? அதெல்லாம் தேவையற்றது, ஜாதியை ஒழிப்பது ஒன்றும் ஆகாயத்தை வில்லாக வளைப்பது, மணலை கயிராக திரிப்பது போன்று நடைபெறாத விஷயம் இல்லை, ஆட்சியாளர்கள் மனது வைத்தால் இரண்டு மணி நேரத்தில் ஜாதியை ஒழித்து விடலாம், ஜாதியாக இருக்கட்டும் அல்லது மற்ற சமூக கேடுகளாகட்டும் எல்லாமே பொருளாதார நலத்தை அடிப்படையாக கொண்டு உருவானது தான் எனவே சொந்த ஜாதிகளுக்குள் திருமணம் செய்து கொண்டால் சொத்துரிமை இல்லை என்று சிறியதாக ஒரு சட்டதிருத்தம் கொண்டு வந்தாலே ஜாதி பஞ்சாக பறந்துவிடும். இதை செய்ய போவது யார்? கடவுளுக்கே வெளிச்சம்.

Contact Form

Name

Email *

Message *