Store
  Store
  Store
  Store
  Store
  Store

உடைந்த ராஜபுத்திர வீணை


    ரண்மனையின் மேல் மாடத்திலிருந்து ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்தான். ராஜ மங்கலத்தின் இளவரசன் ரகுநாத வர்மா. வேறொரு நேரமாக இருந்திருந்தால் கருநீல புடவையில் வைரங்களை கோர்த்துக் கொண்டு வியாபித்து பறந்து கொண்டிருக்கும் வானமங்கையின் பேரைழிலை அணுஅணுவாக ரசித்திருப்பான் ஆனால் இப்பொழுது அவன் மனமோ பாய்மரம் இல்லாத நாவாய் நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்ச தத்தளிப்பது போல் துடித்துக் கொண்டிருந்தது.

  மனித மனம் ஒரு விசித்திர விலங்கு சமதளமான ராஜபாட்டையில் தேரை இழுத்துக் கொண்டு செல்லும் புரவிகள் போல் பல நேரங்களில் சகஜமாக இருக்கும். திடிரென மதனநிர் சுரந்த யானையை போல் கட்டு அடங்காமல் ஆர்ப்பரித்து விடும். இளவரசனின் மனமும் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை புரவி போல் சீராக தானிருந்தது, அந்த பெண்ணை மாளிகையில் சந்திக்கும் வரை, பெண்ணா அவள்? வானத்தில் இருந்து மேக கயிறு பிடித்து இறங்கி வந்து தேவதை அவள்.

  அதிகாலையில் எழுந்து விடுவது ரகுநாத வர்மாவிற்கு இருக்கும் பல நற்குணங்களில் ஒன்று. சூரியன்முளைக்காத  காலை பொழுதில் நந்தவன தடாகத்தில் மூழ்கி  குளிப்பதும் நீர் சொட்ட சொட்ட நின்று அனந்த பத்மநாபனை சேவிப்பதும் அவனது பாட்டி அரசி காஞ்சனா தேவியிடமிருந்து கற்ற பாடம். அன்றும் அப்படி தான். குளித்து முடித்து வழிபாட்டிலிருந்து வெளியேறும் போது சேவகன் ஒருவன் வந்து வணங்கினான். ராஜ புதனத்திலிருந்து நடன மாது ஒருவர் வந்துள்ளார் இளவரசரை தரிசிக்க காத்திருக்கிறார் என்றான்.


     விருந்தினர் அறையில் தங்க வைத்து உபசரி . நான் வருகிறேன. என்று தாயாரின் அந்தப்புறம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். ராஜ மங்கலத்து இளவரசன் வில் போரிலும் வாள் போரிலும் மட்டும் நிபுணன் அல்ல. யாழ் எடுத்து இசை மீட்டுவதிலும், தூரிகையால் சித்திரங்களை தீட்டி தள்ளுவதிலும் மகா விற்பன்னன் ரகுநாத வர்மா பத்மநாபன் சந்நிதியில் ஆட ஆரமித்து விட்டான் என்றால் வைகுண்ட வாசனே தன் முன்னால் தில்லை அம்பலத்தரசன் தான் வந்து ஆனந்த தாண்டவம் ஆடுகிறானோ என்று ஒடிடோடி வந்து கைத்தாளம் போட ஆரம்மிப்பான். நாட்டு மக்கள் இளவரசனை சகலகலா வல்லவன் என்றே அழைத்தனர். அதனால் அவன் சகல கலைஞர்களையும் எப்போதும் மரியாதைவுடனே நடத்துவான்.

   அன்னை படைத்த காலை சிற்றுணவை முடித்துவிட்டு விருந்தினர் மாளிகைளை நோக்கி நடந்தான். காலை இளம் வெயில் மஞ்சள் போர்வையை நடைபாதை புல் வெளியில் போர்த்தி பசும் புல்களை பொன்மயமாக ஆக்கி கொண்டிருந்த வர்ணஜால விளையாட்டை ரசித்த வண்ணம் விருந்தினர் அறைக்குள் நுழைந்தான். இளம் வெயிலின் கதகதப்பு பளிங்கு சுவர்களின் குளிர்ச்சியும் வாசனை தூபங்களின் நறுமணமும் அந்த அறையை இந்திரலோகம் போலாக்கி கொண்டிருந்தது. உயரங்களிலிருந்து தொங்கிய வண்ண திரைச் சீலைகள் இந்திரலோக சாமரங்கள் போல் அசைந்தாடி கொண்டிருந்தன. சுவர்களில் வரைபட்டிருந்த வண்ண ஒவியங்கள் உயிர் பெற்று இளவரசனை வரவேற்பது போல் காட்சியளித்தன. அன்ன பறவை ஒன்றை அரவணைத்த வண்ணம் இளம் முறுவல் பூத்து இளம் மாது ஒருத்தி நிற்கும் ஒவியத்தை ஒன்றை கையை இருப்பில் ஊன்றி இன்னொரு கையால் தலை கேசத்தை வருடியபடி பார்த்து கொண்டிருந்த ராஜபுதனத்து நடனமாது இளவரசனின் காலடி சப்தத்தை கேட்டு அவனை நோக்கி திரும்பினாள் அவள் திரும்பிய அந்த நேரத்தில் பனித்துளி சுமந்த பாரிஜாத மலர்கள் ஆயிரமாயிரமாய் அவன் முகத்தில் மோதியது போல் திகைத்து நின்றான். அவன் திகைப்பும், வியப்பையும் அரை நொடியில் உணர்ந்து கொண்டு அவனை நோக்கி மெதுவாக நடந்து வர ஆரம்பித்தாள் அந்த மாது, ராஜமங்கலத்து இளவரசருக்கு பத்மினி தேவியின் வந்தனம் என்றாள் வீணைக் குரலில். கைதேர்ந்த இசை விற்பன்னன் கூட அந்த குரலில் இருந்த நாத அமைதியை கேட்டு மெய்சிலிர்த்து விடுவான்.


   அவளையும் அவள் நடையழகையும் நடக்கும் போது அசையும் அங்க லாவன்யத்தையும் ஒரே நேரத்தில்  கண்ட இளவரசன் தேன் குடத்தில் விழுந்து விட்ட சின்னஞ்சிறு  ஈயை போல் திக்கு முக்காடி போனான். மூன்றாம் பிறை போல் வளைந்த நெற்றியில் கன்னங்கறிய சுருள் கேசம் ஒவியம் வரைய முயற்சிப்பதும் இளம் சிவப்பு தாமரை பூவில் இரண்டு மயிலிறகுகள் ஒட்டிக் கொண்டது போன்ற ஆழமான கருவிழிகளும் காஷ்மீர் தேசத்து ஆப்பிள் கனியும், கொங்கு நாட்டு மாங்கனியும் வெட்கி தலைகுனியும் கன்னங்களும் அவனது வாலிப வயதை பெரும் சேனையாக தாக்கியது. பேசும் போது மலர்ந்து மூடிய கொவ்வை இதழ்கள் எனது சிவப்புக்கு இணையாக பவளத்தை சொல்வையா, செம்பருத்தி இதழ்களை சொல்வாயா என்று கேட்டது. சிறிதளவே தெரிந்து மறைந்த முத்து பற்கள் உன் தோட்டத்திலுள்ள மாதுளை முத்துக்களை என்னோடு போட்டியிட வைக்க முடியுமா? என வம்புக்கு இழுத்தது. அவள் நிலவு முகத்தை தாங்கி நின்ற வளமையான இளம் கழுத்து சங்கும் எனக்கு  இணையில்லை என்று பத்திரம் படித்தது. அவள் கழுத்தில் தொட்டு உறவாடிய கருமுகில் போன்ற ஒற்றை குழல் நான் பெற்ற பேரை வேறு யார் பெற முடியும்? என்று அகங்கரமாக சிரித்தது. இறுக்கமான மார்கச்சைக்குள் மறைந்து நின்றாலும் மெல்லிய துகிலுக்கு அதிகமான வேலை கொடுத்த அல்லி மொட்டுகள் கொடிய ராட்சஸனை கூட குழந்தையாக்கி கீழே தள்ளி விடுவேன் என்று சிறுங்காரம் பேசியது. வளைந்து நிமிர்ந்திருந்த உடுக்கை போன்ற இடை அவள் நடந்து வரும் பொழுது நாட்டிய கலையின் புதிய அபிநயங்களை கற்பித்தது. ஒடி வருகின்ற நதி இருபுறமும் பிரிந்து பள்ளத்தில் விழுந்து ஒரு சீராக ஒடுவது போல் அவள் இடுப்பை சுற்றி வந்த வண்ண பட்டுசேலை கால்களுக்குள் மடிந்து நடக்கும் போது சங்கீதமாய் சரசரத்தது, இதுவரை அவன் ஒவியத்தில் மட்டுமே வரைந்த உருவம் கண்முன்னால் உயிர் பெற்று நிற்பதை கண்டு சில நிமிடங்கள் சுய உணர்வு இழந்துவிட்டான்.

நீ ராஜகுமாரன் மட்டுமல்ல உணர்வுகளை அடக்க தெரிந்த கம்பீரமான ஆண்மகன் கூட என்று அவன் சுய சிந்தனை உயிர்பெற்று எச்சரிக்கவும் ரசனை கடலிருந்து வெளியேறி அவள் வந்தனத்திற்கு பதில் வணக்கம் செலுத்தினான். அங்கிருந்த ஒரு ஆசனத்தில் அவளை அமரச் சொல்லி கைகளையும் நீட்டினான். அவள் அமர்ந்தாள். ஆசனத்தில் மட்டுமா ? அவன் மனதில் கூடத்தான்.

   தான் ஒரு இளவரசன், இந்த நாட்டின் வருங்கால தலைவன், போர்கள்கள் பல கண்ட மாவீரன், தன் முன்னால் ஒரு அந்நிய நாட்டு பெண் அரசகுலத்தை சேர்ந்தவள் கூட அல்ல ஒரு நடனமாது தான் நிற்கும் போதே தன் எதிரேலேயே அமர்வது எவ்வளவு பெரிய தவறு என்பதை கூட அவன் மோக மனம் சிந்திக்கவில்லை. ராஜபுத்திர நாட்டிய தாரகைக்கு என்னால் ஆக வேண்டிய உதவியென்ன? என்று ஒரு பணியாளன் போல் கேள்வியை முன் வைத்தான்.  அவனது கேள்வியால் தனது மலர் முகத்தை அவனை நோக்கி திருப்பினாள். ராஜ மங்களத்து இளவரசன் என்னை மன்னிக்க வேண்டும். நான் உங்களை வருங்கால அரசராக பார்க்கவில்லை. நீங்கள் இசையிலும், சித்திரத்திலும் நாட்டியத்திலும் கூட மாமேதை என்று மக்கள் சொன்னார்கள். அதனால் ஒரு சக கலைஞனாக நினைத்து தான் நீங்கள் நிற்கும் போதே அமர்ந்து விட்டேன்.

  தங்க கவசத்தால் மூடப்பட்ட தன் பிரத்தியேக ஆசனத்தில் அமர்ந்த இளவரசன் ரகுநாத வர்மா நான் வீண் ஆடம்பரங்களுக்கு மதிப்பளிப்பவன் அல்ல, மேலும் எனக்கு சில அவசர காரியங்கள் உண்டு, உங்களுக்கு தேவையானதை தெரிவித்திருந்தால் செய்து முடித்து விட்டு அடுத்த பணியை தொடர்வேன் என்ற அவனது குரலில் உனது அழகில் மயங்கியது நிஜம் தான், ஆனாலும் நான் அடிமையாகி விடவில்லை என்ற கம்பீரம் ஒலித்தது. அதை அவளும் புரிந்திருக்க வேண்டும். பல நூறு யோசனைகள் பயணம் செய்தவள் அவள் மாந்தர்களின் மன இயல்பை அறியாதிருக்க முடியுமா?

   தங்களது பணிச்சுமையை நானறிவேன் இளவரசே ஒரு நாட்டிய மாடும் பெண்ணுக்கு உடனடியாக உங்கள் பேட்டி கிடைக்க செய்ததே பெரிய பாக்கியம் என்பதையும் நான் உணர்வேன் என்று சொல்லிய பத்மினி தேவி ஆசனத்தில் இருந்து எழுந்தாள். பெரிய சூறைக்காற்று அரசமரத்தை மட்டுமல்ல அரளிபூவையும் கூட கொய்து எறிந்து விடும். என்பதற்கு என் வாழ்க்கை சரியான எடுத்துகாட்டு இளவரசே.


   நான் ராஜபுதனத்து மார்வார் வம்சத்தில் வந்த ஒரு பிரபுவின் மகள். கலை எனக்கு உயிர். அதனால் எனது புகழ் மல்லிகை வாசம் போல் வடபிராந்தியம் முழுக்க பரவி உள்ளது. இப்போது பரத வர்ஷத்தின் வடக்கில் கஜினி முகமது என்ற பேய்காற்று வீசுகிறது. அவன் ஆலய பொருட்களை மட்டுமல்ல அழகான பெண்களையும் காபூல் நகரத்திற்கு கவர்ந்து செல்ல விரும்புகிறான். எனவே குடும்பத்தாருக்கு எனது கற்பையும், கலையையும் மாளிகையில் வைத்து பாதுகாப்பது மரணத்தை அருகில் வைத்து கொண்டிருப்பது போலாகிவிட்டது இப்படி சொல்லும் போது அவள் வீனைக்குரலில் கண்ணீர் துளிகள் தெரிப்பதை உணர முடிந்தது அவளால் உணர்ச்சியின் விளிம்பில் நின்ற இளவரசன் அவள் கதையால் உணர்ச்சி குளத்திலேயே விழுந்து விட்டான். தன்னையும் அறியாமல் எழுந்திருந்து அவள் அருகாமையிலும் வந்தும் விட்டான். அவள் உடலிருந்து வீசிய நறுமண தைலங்களின் வாசனையும் பூக்களின் மனமும் இப்போது அவனுக்கு போதை தரவில்லை. மாறாக அவள் மீது கருணை என்ற நதி பெருக்கெடுத்து ஒடுவதை கண்டான். இளவரசன் தன்னருகில் வந்துவிட்டதை உணர்ந்து இரண்டடி பின்வாங்கிய அவள் மீண்டும் பேசலானாள்.

   எத்தனை நாட்களுக்கு தான் சாகாட்டை வீட்டில் வைத்து பாதுகாப்பது பொறுத்திருந்து பார்த்த என் பெற்றோர்கள் வைரவியாபாரி ஒருவன் பாதுகாப்பில் சேர நாட்டிற்கு என்னை அனுப்பி விட்டனர். உங்கள் சேர சக்கரவர்த்தி பண்புமிக்கவர் மட்டுமல்ல கருணை வடிவானவரும் கூட, என்னை மகளை போல பாவித்து வேண்டியதை செய்து தருவதாக சொன்னார். நான் தான் எனது நாட்டிய பள்ளி சோலைகள் அடர்ந்த பூமியில் இருக்க வேண்டும் என்று உங்கள் நாட்டை தேர்ந்தெடுத்து அவரிடம் சொன்னேன். அவர் உங்களுக்கு ஒலை ஒன்று எழுதி என்னை அனுப்பி வைத்தார். என்று கூறி ஒலை நறுக்கு ஒன்றை எடுத்து ரகுநாத வர்மாவிடம் நீட்டினாள் அதில் சேரநாட்டு அரச முத்திரை தங்க பளப்பளபோடு ஜொலித்தது.


   ஒலையை வாங்கிய இளவரசன் அதில் நாட்டிய பள்ளி நடத்துவதற்கு பத்மினிக்கு உதவி செய் என்று எழுதி சேர மன்னன் கையொப்பம் இட்டுருப்பதை படிக்க சக்கரவர்த்தியே ஒரு பெண்ணிற்காக கைப்பட ஒலை எழுதிகிறார் என்றால் அவள் ஒரு சாதாரண நாட்டியகாரியாக இருக்க முடியாது என்று அவன் உள்ளூணர்வில் ஒரு சிவப்பு நட்சத்தரம் தோன்றி மறைந்தது.

   அங்கிருந்த அழைப்பு மணியை இளவரசன் அடிக்கவும் ஒரு பணியாள் வந்து வணங்கி நின்றான். அவனிடம் சகல மரியாதையோடு இவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய் என்று சொல்லிய அவன் பத்மினி தேவியிடம் திரும்பி தலைநகரம் முழுவதும் சுற்றி பாருங்கள். உங்களுக்கு பிடித்த இடம் எதுவோ அதை தேர்ந்தெடுங்கள் நாட்டிய பள்ளியென்ன கலாசாலையே வைத்து விடலாம் என்றான்.

   இளவரசனின் பெருந்தன்மையும் கருணை மனமும் அவளுக்கு புரிந்திருக்க வேண்டும். அதனால் கண்களில் நீர் தளும்ப கரம் கூப்பி நிச்சயம் செய்வீர்கள் இளவரசே இந்த ஏழைக்கு நீங்கள் காட்டும் கருணைக்கு காலமெல்லாம் அடிமையாக இருப்பேன் என்றாள் தழுதழுத்த குரலில் அதை உணர்ந்தும் உணராதவன் போல் நான் விடை பெறுகிறேன் என்று அங்கிருந்து விரைந்து நடந்தான். அதன் பிறகு தான் இன்னும் சிறிது தாமதமாக கிளம்பி இருக்கலாமோ. அவள் அழுகு என்னும் அமுதத்தை இன்னும் சில நிமிடங்கள் விழிகளால் பருகியிருக்கலாமோ என்று யோசித்தான். அந்த யோசனை வட்டம் தான் சிறுகசிறுக பெருகி நாலாபுறமும் சிலந்தி வலையை போல் ஆக்கிரமித்து அரண்மனை மேல் மாடத்தில் வானத்தை வெறித்து நிற்க செய்தது


    கிருஷ்ணபட்சத்து வானம், இருட்டாகத் தான் இருக்கும். இருட்டு வானத்தில் இருக்கும் போது தான் அழகு இடம் மாறி மனதிற்குள் வந்துவிட்டால் கண்ணெதிரே கற்பக சோலை தெரிந்தாலும் அதன் அடையாளத்தை விளங்கி கொள்ள முடியாது. ரகுநாத வர்மாவின் மனதை பற்றியிருந்த காதல் என்ற இருட்டும் அவனை இப்படி தான் அவஸ்தைப்படுத்தியது. நானொரு ராஜகுமாரன் இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரம், காதலில் வீழ்ந்து ஒரு நடன மாதின் கைத்தலம் பற்றினால் ஊரார் என்ன சொல்வார்கள்? அழகில் மயங்கி வீழ்ந்த பெண் பித்தன் என்பார்களா அல்லது அவளை அழகை கொண்டு அரச போகத்தை அபகரித்த மாய மோகினி என்பார்களா? நமது தாய் தந்தையர் தான் அங்கீகாரம் செய்வார்களா? எல்லாம் இருக்கட்டும், அழகு தேவதையான அவள் முதலில், நம் காதலை ஏற்றுக் கொள்வாளா? வடக்கு திசையிலிருந்து பல காததூரம் நடந்து வந்தவள். வருகின்ற வழியில் எத்தனை சுந்தர குமார்களை சந்தித்திருக்கலாம். அதில் யாராவது ஒருவன் அவள் இதய தாமரையில் கொலுவீற்றிருக்கலாம்.

   நிச்சயம் அப்படியிருக்காது, காதலில் வீழ்ந்தவளின் கண்களில் குழந்தை போன்ற மலர்ச்சி இருக்காது நான் தர்க்க சாஸ்திரம் மட்டுமல்ல மனசாஸ்திரமும் கற்றவன், புறத்தை காட்டும் கண்ணாடி போல் அகத்தைதெளிவாக கண்கள் காட்டிவிடும் அவள் வேறொருவனை காதலிக்காமலும் இருக்கலாம் அதற்காக என் காதலை ஏற்று கொள்ள வேண்டுமென்று என்ன அவசியமிருக்கிறது? நான் ராஜகுமாரன் என்பதினாலா கட்டளை போட்டு வருவதல்லவே காதல் ? என்றெல்லாம் அவன் மனம் சம்பந்தா சம்மந்தம் இல்லாமல் அவன் மனம் எல்லாவற்றையும் போட்டு குழப்பியது அந்த குழப்பத்தால் பயந்து நடுங்கியது. ஒரு வீரனுக்கு வர கூடாத பரபரப்பு வந்தது.

  இன்று காலையில் கூட ரகுநாத வர்மாவின் முக குறிப்பை அன்னையார் கவனித்து விட்டார் ஒரு சிறந்த வேட்டைகாரனுக்கு எந்த புதரில் முயல் இருக்கிறது என்பது பார்த்த மாத்திரத்தில் துல்லியமாக தெரிந்து விடும் அதே போல பெற்றவளுக்கு தன் குழந்தை எவ்வளவு பெரியதானாலும் ஒவ்வொரு நடத்தையின், உள்ளர்த்தமும் தெள்ளென தெரிந்து விடும். ரகுநாதா எப்போதும் இல்லாத ஒரு நிழல் உன் கண்களில் தெரிகிறதே எதாவது குழப்பமா என்று கேட்டாள் அன்னையின் பேச்சை அருகிலிருந்து கேட்ட தந்தை சொன்னார் என் மகனுக்கு என்ன குழப்பம் வர போகிறது? எதாவது ஒரு நந்தவனத்தில் பூப்பறித்துக்கொண்டிருந்த ராஜகுமாரி யாரையாவது பார்த்திருப்பான் என்று பகடி பேசினார். உங்களை போல் தான் உங்கள் மகனும் இருப்பான் என்று எப்படி சொல்ல முடியும்? என்று ராஜமங்கலத்து அரசி அரசனுக்கு பதில் சொன்னாள். ஒரு தாய்க்கும் தந்தைக்கும் இடையில் நடக்கும் வயோதிக காதலின் வார்த்தை விளையாட்டு, எப்படியோ நமது மனதிற்குள் இருப்பதை அவதானித்து விட்டார்கள் நெருப்பை துணி போட்டு மறைக்க முடியாது என்பதை அவன் உணர்ந்து கொண்டான். புத்திசாலி என்பதினால் தனது ஒவ்வொரு செயலையும் பக்கம் சாரது ஆராய முடிந்தது அவனால்.    காதல் வந்தால் பாலும் கசக்கும். படுக்கை நோகும். கோலகிளிமொழியும் காதில் குத்தல் எடுக்கும் என்று புலவர்கள் பாடியது எல்லாம் பொய் மொழி தான் என்று நேற்று வரை நினைத்திருந்தான். கண்வழியாக காரிகையொருத்தியின் காதல் விஷம் ஏறிவிட்டால் மூளை நரம்புகள் சூடாகி சுவையை தீண்டாதே என்று நாக்கிற்கும், இசையை கேட்காதே என்று செவிக்கும் உத்தரவுகள் பறந்துவிடும் அது மனிதனின் சித்தத்தை தடுமாற வைக்கும் சித்தம் தடுமாறும் போது பசி எஙகேயிருந்து வரும் எனவே புலவர்களின் வார்த்தைகள் பொய்யுரைகள் அல்ல. அனுபவம் என்ற கடலில் அவர்கள் கண்டெடுத்த முத்துக்கள் தான். இதை உணர்ந்த போது அவனுக்கு வியப்பாக இருந்தது. அடேங்கப்பா மனிதர்களுக்கு தான் எத்தனை அறிவு.

  பஞ்சனையில் படுத்து பாணர்களின் இசையை செவி குளிர கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய நேரத்தில் தன்னந்தனியாக வானத்தை வெறித்துக் கொண்டிருப்பதில் எத்தனை வேதனை அவளை பார்த்த நேரம் முதல் காதல் நோயில் நான் வேதனைபடுகிறேன். அவளுக்கும் என்னை பார்த்தவுடன் இப்படிதான் எண்ணங்கள் ஒடி இருக்குமோ? காதல் வேதனையில் அவளும் துடித்து கொண்டிருப்பாளோ . இந்த நேரத்தில் அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் நிச்சயம் உறக்கத்தில் ஆழ்ந்து போயிருக்க முடியாது. இரவு பொழது இன்னும் அவ்வளவு ஆகவசில்லை மாடத்தில் உட்கார்ந்து எண்ணம் என்ற நூலில் சிக்கல் எடுப்பதை விட்டுவிட்டு அவள் மாளிகைக்கு சென்று கவனிக்கலாமே அவளையும் பார்த்த மாதிரி இருக்கும். காதல் உறவுக்கு உரம் சேர்ந்த மாதிரியும் இருக்கும்.

    இப்படி எண்ணம் உதயமானது தான் தாமதம். சரசரவென செயலில் இறங்கினான் ரகுநாத வர்மா, மேல் மாடத்திலிருந்து கீழ்வந்து தனது குதிரையை கொண்டு வருமாறு கட்டையிட்டான். சேவகன் கொண்டு வந்து நிறுத்திய வெள்ளை புரவியை தட்டிக் கொடுத்து அதன் மீது ஏறிக் கொண்டான். இளவரசனின் எண்ண ஒட்டம் புரவி புரிந்து கொண்டதனாலோ என்னவோ வேகமாக சென்றால் காதல் மங்கை உன்னை தரம்தாழ்த்தி நினைத்து விட போகிறாள். உனது ஆசை புரவி கட்டுகடங்காமல் ஒடினாலும் நீ ஆரோகிணித்திருக்கும் நான் மெதுவாக போவது தான் உனக்கு மரியாதை என்று எண்ணி இருக்கலாம். அதனால் தனது வழக்கமான வேகத்தை காற்றில் பறக்க விட்டுவிட்டு நிதனமாக நடை பயின்றது.    ராஜவீதியில் ஏற்றபட்டிருந்த விளக்குகள் பிரகாசமடைந்து இருட்டை விரட்ட முயன்று கொண்டிருந்தன. எவ்வளவு தான் உணர்வுகளை விரட்ட துணிந்தாலம் அது ஒடிப்போகாமல் அருகிலேயே நின்று முறைத்து பார்ப்பது போல் இரவு நேர இருட்டு வெளிச்சத்திற்கு கண்ணா மூச்சி காட்டிக் கொண்டிருந்தது இரவு நேர பாதுகாப்பில் வலம் வந்து கொண்டிருந்த வீரர்கள் இளவரசனை அடையாள கண்டு மரியாதையுடன் ஒதுங்கி வணக்கம் செலுத்தி தங்களது பணியை தொடர்ந்தனர். ராஜ வீதி என்றாலும் சில மாளிகைகளிலிருந்து வெளியில் கசிந்த இசை ஒசை நாடு அமைதியாக இருக்கிறது. வளமைக்கு குறைவில்லை என்பதை சொல்லாமல் சொல்லியது. நிதனாமாக நடந்தாலும் ராஜபுதனத்து நடனரசி தங்கியிருந்த மாளிகை முன்னால் அவனை வே கொண்டு வந்து நிறுத்தியது.

   மாளிகையின் வாயிற்காக்கும் சேவகர்கள் வணங்கி வழிவிட்டனர். ஆமணக்கு விதையிலிருந்து எடுத்த சுத்தமான விளக்கெண்ணையால் மாளிகையில் தீபங்கள் குளிர்ச்சியுடன் பிரகாசித்தன. குளிர் நிலா ஒன்று தங்கியிருக்கும் மாளிகையில் நெருப்பு கூட குளிர்ச்சியாகத் தானிருக்கும் என்று அவன் மனம் ஒரு விநாடி நினைத்தது. மாளிகை எங்கும் ஒரு வித நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. ராஜஸ்தானத்து ஆடை அணிந்த ஒருவன் இளவரசனின் முன்னால் வந்து நின்றான். அடிமைக்கு ஐயா இடும் கட்டளை என்ன? என்று கேட்டு குனிந்தான். பத்மினி தேவி எங்கே? என்று இளவரசன் கேட்கவும் மாடியில் இருக்கிறார்கள். உத்தரவு இட்டால் கீழே வரும்படி சொல்கிறேன் என்றான்.

    தேவையில்லை நானே சென்று பார்க்கிறேன் என்று மாளிகையின் மாட படிகளில் தாவி ஏறினான் ராஜமங்கலத்து இளவரசன்.மாளிகையின் மேல்தளத்திற்கு வந்ததும் அதன் விசாலத்தை கண்டு தனது நாட்டு தொழிலாளர்களின் கைதிறனை தனக்குள் வியந்த இளவரசன் பத்மினிதேவி எஙகே என்று கண்களால் தேடினான். அஙகேயிருந்த எதாவது ஒரு அறையில் தான் அவளிருக்க வேண்டுமென்று மெதுவாக நடந்து முதல் அறையை கடந்து இரண்டாவது பக்கம் வந்த போது அந்த அறையின் சாரளதிரை விலகி இருப்பதும் அஙகேயிருந்து பேச்சுக்குரல் வருவதையும் கவனித்து அருகில் சென்றான். அறைகதவு தாளிடப்பட்டு இருந்தாலும் உள்ளே பத்மினிதேவி நின்று கொண்டிருப்பதையும், மஞ்சத்தின் மேல் ஒருவன் அமர்ந்திருப்தையும் கவனித்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்த பிறகு கதவை தட்டலாம் என்று நிதானித்தான்.


   மஞ்சத்தின் மேல் இருந்தவனுக்கு நாற்பது வயதிற்கு மேல் இருக்கும். இருந்தாலும் அவனது உடற்கட்டு இன்னும் கட்டிளம் காளையை போலவே இருந்தது. சற்று பெரிதான மீசை அவனது முகத்திற்கு ஒத்து வராமல் இருந்தாலும் அதை அவலட்சனப் படுத்தவில்லை. அவன் உடுத்தியிருந்த ஆடையின் விதமும், முகபாவமும் வடநாட்டுகாரனல்ல சுத்த தமிழ்நாட்டுகாரன் என்பதை மறைக்காமல் காட்டியது.

   பத்மினிதேவி உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்க வேண்டும். நீங்கள் செய்ய போகிற செயலால் பல உயிர் இழப்புகளை தடை செய்யலாம். என்று நிதானமாக பேசினான். அவனது குரல் ரகுநாதவர்மாவிற்கு தெளிவாக கேட்டது. இவன் என்ன செய்ய சொல்கிறான் எதை செய்வதினால் உயிழப்பை தடுக்கலாம் என்பது இளவரசனுக்கு புரியவில்லை. எனவே அவர்களிடத்தில் நடக்கின்ற உரையாடலை முழுமையாக கேட்டுவிடுவது என்று முடிவுக்கு வந்து சாரள விளம்பில் சாய்ந்து கொண்டான். திரைசீலை கிடந்த விதம் அவர்களால் இவனை பார்க்க முடியாது.

   சேரசக்கரவர்த்தியின் சொல்படி நடந்தால் போரையும் தடுக்கலாம். உயிர் இழப்புகளையும் நிறுத்தலாம். அதற்காக ஒரு நல்ல ஜீவனுக்கு என்னால் தூரோகம் இழைக்க முடியாது. என்றாள் பத்மினிதேவி அவள் குரலில் உறுதியிருந்தது.


  தேவி நீங்கள் குழந்தைதனமாக பேசுகீறீர்கள். அரசியல் சதுரங்கத்தில் துரோகத்திற்கு சாதூர்யம்  என்று பெயர். இது அவன் காரியத்தை சாதிக்கும் லாவகமான குரல் அவனுக்கு.

 அரசியலில்  எல்லாம் சகஜமாக இருக்கலாம். எனக்கு அதில் நாட்டமில்லை அது எனக்கு தேவையுமில்லை. நான் அறிந்தது எல்லாம் நடனம் ஒன்றுதான். அந்த ஒன்றோடு அமைதியாக வாழவே நான் விரும்புகிறேன். தயவு செய்து என் அமைதியை குலைக்க முயற்சி செய்யாதீர்கள்.

 பெண்ணாக பிறந்துவிட்டு அதுவும் அழகான பெண்ணாக பிறந்துவிட்டு அமைதியாக வாழ விரும்புவது முட்டாள் தனம்.

 ஐயா நான் விரும்பி பெண்ணாக பிறக்கவில்லை நான் கேட்டும் அழகை எனக் கடவுள் தரவில்லை நான் விரும்பாமலே பெற்ற சாபத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?

  இது தேவையில்லாத பேச்சு, தேவி உங்களால் ரகுநாத வர்மாவை மயக்க முடியுமா முடியாதா? இப்போது அவன் குரலில் உஷ்ணம் ஏறியிருந்தது. அவர்கள் உரையாடலில் தனது பெயர் இடம் பெறுவதும் அதில் எதோ ஒரு சூழ்ச்சி வலை பின்னப்படுவதும் ராஜமங்கலத்து இளவரசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சுத்த வீரனுக்கே உரிய நிதான புத்தியுடன் அவர்கள் உரையாடலை இன்னும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்


 .

   ஐயா நான் கஜினி முகமது என்ற காமவெறியனிடம்  சிக்கி கொள்ளாமலிருக்க உங்கள் நாட்டில் அபயம் தேடி வந்தவள். நாகரீகமற்ற முறையில் கஜினி முகமது செய்வதை உங்கள் அரசர் நாகரீகமான முறையில் செய்ய முற்படுகிறார். இது தர்மத்திற்கு விரோதமான செயல், அவருடைய எண்ணத்தை மாற்ற சொல்லுங்கள், அது அவருக்கும் மக்களுக்கும் நல்லது.
   
பத்மினிதேவி இப்படி சொல்வதை கேட்டு அந்த மனிதன் மஞ்சத்திலிருந்து எழுந்தான் தேவி நீங்கள்  தவறாக எடை போடுகீறிர்கள். சாதாரண மன்னாகயிருந்தாலும் சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தியாக இருந்தாலும் நாட்டின் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே போகத் தான் விரும்புவார்கள். இதுதான் ராஜதர்மம். ராஜதர்மத்தை நிலை நாட்ட யுத்தம் மட்டும் தான் வழி என்றில்லை. பல குறுக்குவழிகளும் உண்டு.
   எங்கள் சக்கரவர்த்தி பல நேரங்களில் பின்பற்றுவது யுத்த தந்திரமல்ல, ராஜதந்திரம் ராஜமங்கலத்துக்கு இருப்பது ஒரே ஒரு வாரிசுதான். அவனும் சாதாரணமானவன் அல்ல. எல்லாதுறையிலும் நிபுணத்துவம் வாய்ந்த பேரறிஞன் ஆனால் அவன் வயது அவனுக்கு விரோதி உங்கள் அழகில் அவனை பொம்மை போல் ஆட்டி வைக்கலாம். யுத்தம் நடக்காமலேயே சேர சாம்ராஜ்ஜியத்தோடு ஒரு சிற்றரசு இணைந்து விடும். அதற்கு நீங்கள் உதவாமல் இருக்க முடியாது. அவன் குரலில் உறுதியிருந்தது. கட்டளைபோடும் தொனியிருந்தது.

  அவனை பார்க்கும் போது சேர அரசின் ஒரு சாதாரண சிப்பந்தியாக தெரியவில்லை. அவனின் ஆடை ஆபரணங்கள் முகத்தில் இருந்த அதிகாரகளை உடலில் காணப்பட்ட திரட்சி அனைத்துமே அவன் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவன் என்று சொல்லாமல் சொல்லியது.

   ஒரு தேசத்தை அழிக்கும் பெரிய சதி ஒரு சாதாரண சிப்பந்தியிடம் கொடுக்கும் அளவுக்கு சேர மன்னன் முட்டாள் அல்ல என்றுரகுநாத  வர்மாவுக்கு நன்றாக தெரியும். வந்திருப்பவன் சேரநாட்டு ஒற்றர்படை தலைவனாகவோ முக்கியமான தளகர்த்தானகவோ இருக்க வேண்டும் என்று யூகித்தான். ஒருபுறம் ராஜமங்கலத்து அரசரோடு நட்பு பாராட்டிக் கொண்டும் இன்னொரு புறம் நாட்டையே அழித்துவிடும் கொடிய சதிதிட்டத்தை தீட்டிக் கொண்டும். இரட்டைவேடம் போடும் சேரனை நினைத்தால் அருவறுப்பாக தோன்றியது அவனுக்கு

     ஒரு பேரரசுக்கு கட்டுப்பட்ட சிற்றரசாகவே இதுவரை ராஜமங்கலம் நடந்து வருகிறது. சேரனின் பல போர்களுக்கு ராஜமங்கலத்து படைவீரர்கள் தங்கள் இன்னுயிரை கொடுத்து வெற்றி தேடி தந்திருக்கிறார்கள். அத்தனை நன்றியையும் மறந்துவிட்டு செயல்படுவது தான் ராஜதந்திரம் என்றால் அந்த ராஜதந்திரம் மண்ணாக காட்டும். என்று மனதிற்குள் சாபமிட்ட இளவரசன் வந்திருக்கும் இவனை பிடித்து சேரமன்னன் முன்னால் நிறுத்தி உன் சதி என் வீரத்தின் முன்னால் வெறும் தூசு என்ற நிரூபிக்க வேண்டும் எதுவரை பேசுகிறான் என்று பார்ப்போம். பொறுத்திருப்போம். கடைசியில் ஒரே அமுக்காக அமுக்கி விடலாம் என்ற உறுதியோடு அவர்கள் பேசுவதை கவனிக்கலானான் 

  நீங்கள் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அதற்கு என் சம்மதம் எப்போதும் கிடைக்காது. அரசியல் சதுரங்கத்தில் உருட்டி விளையாட நான் விலைமகளல்ல. கலைமகள் என் உடலில் ஒடுவது கலைக்கான குருதி மட்டுமல்ல தேசபக்த ரத்தமும் ஒடுகிறது. ராஜபுதனத்து வீரமறவர்குடி பெண்கள் நாட்டை காப்பாற்ற சாவார்களே தவிர மானத்தை இழக்க மாட்டார்கள். என்றாள்.

   பத்மினியின் ஒவ்வொரு சொல்லிலும் நெருப்பு பொறி பறந்தது. அவள் கண்கள் பெண் புலியின் விழிகள் போல்அக்னியாய் ஜொலித்தது. வந்தவன் அதையெல்லாம் புறக்கணித்தான். தேவி இப்பொழுது உங்களை காப்பாற்ற எங்களை விட்டால் வேறு யாரும் கிடையாது உண்மையை சொல்லி ராஜமங்கலத்தில் அடைக்கலம் வேண்டலாம் என்று நீங்கள் நினைத்தால் அந்த அவகாசத்தை தர நான் மடையன் அல்ல. என்றான் முரட்டுத்தனமாக.

   உங்கள் முன்னால் தலையாட்டி விட்டு பிறகு மாற்றுவழி தேடுவதற்கு நான் துரோகி வம்சத்தில் வந்தவள் அல்ல. அப்பாவியான ஒரு இளவரசனை மயக்கவும் முடியாது. உங்கள் மன்னன் கட்டளைக்கு அடிபணியவும் முடியாது. என உறுதியாக கூறிய பத்மனிதேவி அந்த அறையின் இன்னொரு வாசல் வழியாக மாடத்தின் நீண்ட நிலா முற்றத்திற்கு வந்தாள்.

   தாழ்யிடப்பட்ட அறைகதவை திறக்காமலேயே சாரளவழியாக உள்ளிறங்கி இதுவரை அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த இடத்தை கடந்து நிலா முற்றத்தில் அவர்கள் நிற்பது தெளிவாக தெரியும் இடத்தில் வசதியாக ரகுநாதவர்மா வந்து நின்று கொண்டான் எந்த நேரத்திலும் வாளை உருவுவதற்கு ஆயுத்தமாக அவன் வலதுகை இருந்தது கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கி அங்கு நடப்பதை மேலும் கவனிக்க துவங்கினான்.

பத்மினிதேவி உணர்ச்சி வேகத்தில் பேசுவதை விட நிலவரத்தை அறிந்து நிதானமாக  பேசுவது தான் இந்த நேரத்தில் சரியாக இருக்கும். என்று நினைக்கிறேன். உங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சுழலிருந்து தப்பிக்கவே இங்கு வந்திருக்கிறிர்கள் . உங்களுக்கு அபயம் கொடுப்பது எத்தகைய அபாயம் என்பது தெரிந்து தான் எங்கள் மன்னர் அடைக்கலம் தந்திருக்கிறார். எந்த தேசத்து அரசனும் உங்களுக்கு செய்யாத உதவியிது. அதனால் முதலில் நீங்கள் நன்றிகடன் பட்டிருப்பது எங்களுக்குத்தான். நியாயம், தர்மம் என்று ஆயிரம் காரணங்களை நீங்கள் சொன்னாலும் எங்களது கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் நன்றி மறந்தவராவீர்கள். செய்த உதவியை மறப்பதும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் பேசுவதும் துரோகத்திற்கு ஒப்பானது தான். எங்கள் கோரிக்கையை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் துரோகி என்ற பட்டத்திலிருந்து நீங்கள் தப்பிவிடமுடியாது. ஒன்றுமே செய்யாமல் கெட்டுப்போவதை விட எதையாவது செய்துவிட்டு கெட்டுப்போவது தான் புத்திசாலித்தனமானது அவனது பேச்சில் நயவஞ்சக பாம்பு சீறி எழுந்து நிற்பது தெளிவாக தெரிந்தது.

இதற்கு பத்மினிதேவி மறுமொழி எதையும் கூறவில்லை. இன்னும் இவனிடம் பேசிக் கொண்டிருந்தால் வார்த்தைகள் தான் நீளும் என்பதை புரிந்து கொண்டாள் போலும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவள் போல் தலையை குனிந்து தரையை நோட்டமிட்டாள் அவளது வலதுகால் பெருவிரல் வெறும் தரையில் ஏதோ அறுப கோலங்கள் போட்டு கொண்டிருந்தன, அன்று அதிகாலையில் பார்க்கும் போது தாமரையை பூவை போல் மலர்ச்சியாக தெரிந்த அவள் இன்று இரவு வெளிச்சத்திலும் நிலா ஒளியிலும் அல்லி மலர் தண்டு வளைந்து நிற்பது போல் அழகாக தெரிந்தாள், ஒரு பெண்ணின் சௌதர்யம் என்பது குழப்பாமான நேரத்தில் கூட குறைவில்லாத சுடர் போல பிரகாசிக்க கூடும் என்று இளவரசன் முதல் முறையாக உணர்ந்தான்.

     நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தாலும் கூட அவள் நின்ற கோலத்தில் தன்னை முழுமையாக மறந்துவிட்டான் ரகுநாத வர்மா, அவன் அப்படி நின்ற சில வினாடிகளில் பத்மினி தேவியின் செயல்பாடு மிகதுரித கதியில் இருந்தது. சேரநாட்டு பிரமுகன் சிறிது கூட யோசிக்க முடியாத செயலை அவள் செய்தாள். அவன் இடுப்பிலிருந்து கால் வரை தொங்கியிருந்த வீர வாளை கனநேரத்தில் பத்மினி உருவி எடுத்தாள். சேரன் நிலை குலைந்து போய்விட்டான. அவன் தன்னை சமாளித்து சகஜமாவதற்குள் அவனது மிக நீண்ட வாள் பத்மினியின் மென்மையான அடிவயிற்றில் பாய்ந்து ரத்தம் கொப்பளிக்க தரையில் மடிந்து உட்கார்ந்தாள். அந்த நிலா முற்றத்தில் விரிக்கப்பட்டிருந்த பட்டு கம்பளத்தில் இலவம் பஞ்சு திண்டில் ஒற்றை பின்புறத்தை அழத்தி வலதுகாலை நீட்டி வாளிலிருந்த கையை எடுக்காமலே அளவுக்கதிகமான வலியில் வானத்தை நோக்கி நிமிர்ந்தாள்.

ரகுநாதவர்மா நடந்த சம்பவத்தால் நிலைகுலைந்து போய்விட்டான். அவனது நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டு ஒலியெழுப்ப மறுத்தது. ஆயிரம்  கொலைகளை கண்ணெதிரே பார்த்தவன் என்றாலும்எதிரிகளின்  தலைகளை தேங்காயை போல் பறித்தவன் என்றாலும் கண்னெதிரே கணநேரத்தில் நடந்த தற்கொலையை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. நெற்றி நிறைய வியர்த்து கண்களில் கரிப்பாய் வடிந்ததும் சுயஉணர்வு பெற்றவனாக யாரங்கே என்று ஒங்கி குரல் கொடுத்தான்.

இளவரசனின் பேரோசையை கேட்ட சேரநாட்டான் ஒட முயற்சித்தான். கணநேரத்தில் இளவரசனின் கையில் இருந்த புறப்பட்ட சிறிய கட்டாரி அவன் கெண்டை காலில் பாய்ந்து குப்புறதள்ளியது அதே நேரத்தில் இளவரசனின் வாள்முனை அவனை அசைய முடியாமல் மார்பில் குறி வைத்தது. திடுதிடு என வீரர்கள் கூழ்ந்து விட்டார்கள், அவர்களிடம் சேரனை விட்டுவிட்டு பத்மினியிடம் இளவரசன் வந்தான்.

வானத்தை நோக்கியிருந்த அவள் முகத்தில் மரணசாயல் இல்லை, மாபெரும் அவப்பெயலிருந்து தான் விடுதலை பெற்றுவிட்டோம் என்ற ஆத்ம திருப்தி முழுமையாக தெரிந்தது. அவள் அருகில் மண்டியிட்ட இளவரசன் எப்போதோ அங்கு வைத்திருந்த சிறிய வீணை ஒன்று அவள் கால்களுக்குஅருகில்  நரம்பறுந்து கிடந்ததை பார்த்தான். முரட்டு வாத்தியகாரனால் பத்மினி என்ற வீணை உடைந்தது போல அதுவும் தென்பட்டது, உயிரற்று சாய்ந்த அவள் உடலை தாங்கிய அவன் கைகளில் காதல் இருந்தது கண்களில் போர் முரசு கொட்டியது.


Contact Form

Name

Email *

Message *