Store
  Store
  Store
  Store
  Store
  Store

பிள்ளையை சுமந்தபோது மிதித்தவள்


தானும் ஒரு பொம்பளை 
என்பதை
மறந்தவ செத்துக்கிடக்கிறாள்
எனக்கு
தாலிக்கயிற்றை தந்தவனை
சுமந்தவள் செத்துக்கிடக்கிறாள்

சொல்லுக்கு சொல்
என்னை சுட்டு ரசித்தவள்
வாய்மூடிக் கிடக்கிறாள்
வார்த்தையை நெஞ்சில்
அறைந்துக் கொன்றவள்
அணைந்துக் கிடக்கிறாள்

நாலணா கொடுத்தால்
அறைக்கும் அரிசியை
குத்தச் சொன்னவள்
முதுகு ஒடிய
குத்தி முடிச்சா
குற்றம் சொன்னவள்
வயிற்றில் பிள்ளையை
சுமந்தபோது
நெஞ்சில் மிதித்தவள்
என்
வாழ்க்கைத் துணையை
வாயைக்கட்டி
கல்லாய் சமைத்தவள்

வாரிசைக் கொண்டு
வாசலில் வந்தபோது
வரிசையை மட்டும்
வாங்கிக் கொண்டவள்
குறைந்த நகைக்கு
குத்திக்காட்டி
என்
குலத்தை பழித்தவள்

அக்கம் பக்கம்
வீடுகளில் எல்லாம்
வம்பை வளத்தவள்
வார்த்தைப் பேச
முடியாமல்
என் நட்பைக்
கெடுத்தவள்

இரும்புப் பெட்டி
சாவி கொண்டு
ஆட்சி செய்தவள்
இன்று
எறும்பு மொய்க்க
கட்டிலின் மீது
பிணமாய் கிடக்கிறாள்

ரத்தம் குறையும்
நரம்புத் தளரும்
என்று நினைத்தாளா?
சதையும் ஒட்டி
கண்ணும் மங்கும்
என கனவு கண்டாளா?
முட்டுத்தட்டி
மூலையில் விழுவோம்
என்பதை தெரிந்தாளா?
செத்தால் கூட
வருவது எதுவென
நினைத்துப் பார்த்தாளா?

பெட்டி நிறைய
உள்ளப் பத்திரம்
கூடவந்திடுமா?
நீ கட்டிக்காத்த
காசும் பணமும்
மூச்சைத் தந்திடுமா?

வட்டிப் பணத்தில்
வளர்ந்த உடம்பு
நெறுப்பில் குளிர்ந்திடுமா?
மாமியார் என்ற மரியாதையில்
மண்ணும் விட்டுடுமா?

வாழும்போது
வார்த்தையில் கொஞ்சம்
அன்பை சேர்த்திருந்தால்
வீழும்போது
என்நெஞ்சக் கூடு
விறகாய் எரிந்திடுமே!
பாழும் பணத்தை
பார்த்த
நீ என்னை
பெண்ணாய் பார்க்கலையே!
பாலு ஊற்றும்
பொழுதில் கூட
பாசம் பிறக்கலையே!

எனக்கு வந்த
மருமகளை
ஓரம் தள்ளாமல்
பிணக்கு வந்து
என்னை அவளும்
எட்டி உதைக்காமல்
உனக்கு வந்த
நிலையால்
கற்றுக் கொண்டேன் நான்


  • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்



  • Contact Form

    Name

    Email *

    Message *