Store
  Store
  Store
  Store
  Store
  Store

நட்பை பாராட்டும் சீன மதம்


கேள்வி:
      கிரேக்கர் எகிப்தியர் என்பவர்களை பற்றியெல்லாம் நாம் முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவேனும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இதே அளவு நமது அண்டை நாடுகளான ஜப்பான், சீனா போன்றவற்றின் மதச்சிந்தனைகளை அறியாமல் இருக்கிறோம் அதற்கு நாம் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மையாகும். எனவே ஜப்பானின் ஆன்மீக சிந்தனையை அறிய ஆசைபடுகிறேன்?
குருஜி:
       ஜப்பானியர்களின் தாய்மதம், பூர்வீக மதம் ஷின்டோ மதம் ஆகும். இந்த மதத்தை ஜப்பானியர்கள் இயற்கை வழி என்றும் கலாச்சார வழி என்றும் இரு பிரிவுகளாக பிரிக்கிறார்கள். இதில் இயற்கை வழி பிரிவு சூரியன் மற்றும் சந்திரனின் வழிபாட்டை வலியுறுத்துகிறது. சூரியனை உலகின் ஜீவன் என்று கருதி அவர்கள் உலகத்தின் தோற்றமும் அழிவும் சூரிய சலனத்தை பொருத்தே அமைவதாக கருதி சூரியனால் கிடைக்கும் அமிர்ததாரைகளாக தானியங்களை கருதி அதை சூரியனுக்கே படைத்து வழிபட்டதோடு அல்லாமல் சூரியனால் விளையும் பயிர்களை பாதுகாப்பதும் பயன்படுத்துவதுமே மனிதனின் தலையாய கடமை என்று கூறி உழைப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தார்கள் நாளாவட்டத்தில் என்ன காரணத்தினாலோ இயற்கை வழி ஷிண்டோ மதம் மறைந்து கலாச்சார வழியிலான ஷின்டோ மதமே இன்று ஜப்பானில் இருந்து வருகிறது.


     ஷிண்டோ மதத்தில் புனித தன்மை என்பது மட்டும் தான் சிரேஷ்டம் ஆனது. நன்மை செய்வது புனிதமானது தீமை செய்வது அருவறுக்க தக்கது தீமைகளையும் தீயவர்களையும் கடவுள் வெறுக்கிறார் என்பதே ஷிண்டோ மதத்தின் மிக முக்கியமான உபதேசமாகும்.

    புனிதம் என்பதை ஷிண்டோ மதம் அகபுனிதம், புறபுனிதம் என்று இரு கூறுகளாக பிரிக்கிறது. ஆத்மாவானது புனித மடைந்தால் மட்டுமே கடவுளோடு மனிதன் ஒன்றுபட முடியும் என்று கருதும் ஷிண்டோ தத்துவம் ஆத்மா புனிதமடைய புறபுனிதம் அதாவது உடல்சுத்தம், செயல்சுத்தம் ஆகியவைகள் மிக அவசியம் என்று வரையறுக்கிறது.  இதுமட்டுமல்லாது ஷிண்டோ மதம் தங்களை ஆளும் அரசர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்று மக்களுக்கு உபதேசிக்கிறது. இந்த உபதேசம் நாடாளும் மன்னனை கண்டேன் நாராயணனை கண்டேன் என்ற தமிழ் வாசகத்தோடு பொருந்தி இருப்பதை காணலாம்.

   எனவே தான் ஜப்பானியர்கள் ஷிண்டோ மதத்தை ஒரு தேசியக் கோட்பாடாக ஏற்று தங்களை ஆளும் அரசர்கள் ஷிண்டோ தர்மத்தின் படியே வாழவேண்டும் என வலியுறுத்துகிறார்கள். அதனால்தான் இன்றுகூட ஜப்பானிய அரசகுடும்பத்தினர் ஷிண்டோ மதத்திலிருந்து வேறு மதங்களுக்கு மாறினால் தங்களது அரச வம்ச தகுதியை இழக்கிறார்கள்.


     ஷிண்டோ ஜப்பானிய தேசிய கொள்கையாக இருந்தாலும் கூட சர்வ தேசங்களுக்கும் பொருந்த கூடிய நல்ல அம்சங்கள் பல அதில் உள்ளன. மத சகிப்பு தன்மை, வழிபாட்டு சுதந்திரம், சகோதரபாவம் ஏற்ற தாழ்வற்ற சமூக கோட்பாடுகள் ஆகியவைகள் ஷிண்டோவின் வைர முடிச்சுகள் ஆகும்.

    மேலும் அதன் சில முக்கிய கோட்பாடுகள் மிகவும் ஏற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. முன்னோர்களையும் அனுபவசாலிகளையும் அவமதிக்காமல் மனதில் நிறுத்தி அஞ்சலி செலுத்துதல் கருணை ஒன்றே கடவுளின் வடிவமாக கொள்ளுதல் நீதியை நிலைநாட்ட தவறுபவனே கோழை என்று ஒதுக்குதல் அன்புடையவன் வீட்டிற்கு அழைக்காமலே போகுதல் என்று நல்ல விஷயங்களை அடுக்கடுக்காக சொல்லும் ஷிண்டோ மதம் பிறப்பும், இறப்பும் விதிப்படி நடந்தே தீரும் என்ற ஞான வைராக்கியத்தை தருவதோடு அல்லாமல் வானத்தை உங்கள் தந்தையாக கருதுங்கள் பூமியை உங்கள் தாயாக கருதுங்கள் மற்ற எல்லாவற்றையும் எல்லோரையும் சகோதர சகோதரிகளாக கருதுங்கள் அப்போதுதான் நீங்கள் துவேஷத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுபட்டு மோட்சத்தின் இன்பத்தை அடைவீர்கள் என்கிறது ஷிண்டோ பிரார்த்தனை.
     இது மட்டுமல்ல நமது இந்து தர்மம் எப்படி மனிதனும் தெய்வமாகலாம் என்ற கருத்துடையதாக இருக்கிறதோ அதே போன்றே ஷிண்டோ தர்மமும் மனிதன் தெய்வமாகும் வழியை கூறுகிறது.

     தாய், தந்தை உத்தரவுபடியும் ஆசிரியர்கள் மற்றும் குருமார்கள் உத்தரவின் படியும் நடந்து வாருங்கள் விவேகத்தோடும், விசுவாசத்தோடும் பணி புரியுங்கள் எப்போதும் எந்த நிலையிலும் நேர்மையான மனதை உடையோராய் இருங்கள் பொய்மையை நீக்குங்கள் நன்றாக கற்று உங்களது ஞானத்தை விரிவாக்கி கொள்ளுங்கள் தேவைக்கு ஏற்ற பொருட்களை உருவாக்குவதில் முனைப்புடன் இருங்கள் இவைகள் தான் கடவுள் அம்சத்தை நீங்கள் அடைய ஒரே வழி என்கிறது ஷிண்டோ மதம்.
 கேள்வி:
   ஒவ்வொரு நிலத்தின் தன்மையை பொறுத்தே சிந்தனையின் போக்கும் செயல்களும் அமையும் என்று படித்திருக்கிறேன். பாலைவனவாசிகளிடம் முரட்டுத்தனமும் மூர்க்ககுணமுமே மிகுந்து இருக்கும் விவேகமும், சகிப்பு தன்மையும். அவ்வளவாக இராது செழுமையான நிலத்தில் வாழ்பவர்கள் பெருவாரியான பேர்கள் நல்ல சிந்தனையும் நல்ல செயலும் உடையவர்களாக இருப்பார்கள் என்பதை நான் அறிந்துள்ளதை ஜப்பானிய ஷிண்டோ மதம் உறுதிபடுத்துகிறது. அடுத்து சீனர்கள் என்ன மாதிரியான ஆன்மீக உணர்வுகளை பெற்றிருந்தார்கள் என்பதை அறிய ஆசைபடுகிறேன்?

குருஜி:
       ஜப்பான் தேசம் கூட பூகம்பங்களுக்கும், சூறாவளிகளுக்கும் அடிக்கடி ஆட்படுவதுண்டு ஆனால் சீனா நம் நாட்டை போலவே சமச்சீரான இயற்கை மாற்றங்களை கொண்டிருக்கிறது. 
    நமது நாட்டிலிருந்து புத்தமதம் சீனாவிற்கு செல்வதற்கு முன் அங்கே கன்பூஷியஸ் என்ற மகான் உருவாக்கிய மதக்கொள்கைகளே பரவி இருந்தது. ஆனாலும் கன்பூஷியஸ் காலத்திற்கு முன்பே சீனாவில் ஒருவிதமான ட்ராகன் வழிபாடும் ஆவிகளின் வழிபாடுமே இருந்து இருக்கிறது.

    விந்தையான உருவம் உடைய ட்ராகன் கடவுளின் நேரடி பணியாளனாக இருந்து உலகத்தை படைத்ததாகவும், தாங்கி கொண்டு நிற்பதாகவும் மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப தண்டனைகளையோ வெகுமானங்களையோ தருவதாக நம்பி இருந்தார்கள்

  இத்தகைய வழிபாட்டில் கடவுளின் மீது பக்தி என்பதை விட ஒருவித அச்ச உணர்வே மேலோங்கி நின்றது எனலாம். ஆவிகளின் வழிபாடும் ஏறக்குறைய ட்ராகன் வழிபாடு போலவே பயத்தை மூலதனமாகக் கொண்டு அமைந்து இருந்தது. கன்பூஷியஸின் உபதேச மொழிகள் சீனர்களின் மனதை பெரிதும் பக்குவபடுத்தி சீராக்கியது எனலாம்.
  ஐரோப்பிய சிந்தனைகளுக்கு எப்படி சாக்ரடீஸ் மூலமோ இந்திய சிந்தனைகளுக்கு எப்படி வேதங்கள் மூலமோ அதே போன்றதே சீன சிந்தனைகளுக்கு கன்பூஷியஸ் மூலமாவார்.

  தள்ளாத வயதிலும் கன்பூஷியஸ் அயராது உழைத்த உழைப்பே இன்றைய நவீன சீனாவாகும். அவரிடம் மக்களுக்காக அரசாங்கமானது செய்யவேண்டியது என்ன என்று ஒரு முறை கேட்டபோது அவர்களை அதாவது மக்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் முதல் வேலையாகும் என்றார்.

    அதன்பின் அவரிடம் இரண்டாவதாக மக்களுக்கு அரசாங்கம் செய்யும் பணி எது என வினவியபொழுது நல்ல தரமான பண்பாடுடைய கல்வியை வழங்க வேண்டும் என்று பதில் கூறினார்.
     பசியாலும், பட்டினியாலும் வயிறு சுருங்கி துடித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் சென்று நீதி போதனை செய்தால் அது சுவரிடம் வேதாந்தம் பேசியது போல் இருக்கும். பசி மயக்கத்தில் கிடப்பவனுக்கு முதல் தேவை சாதமே தவிர வேதங்கள் அல்ல

   இந்த உண்மையை கி.மு. 551-ஆண்டிலேயே கன்பூஷியஸ் சொன்னார். ஒரு நாடு அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வளர்ச்சி பாதையை நோக்கிச்செல்ல வேண்டுமென்றால் அந்த நாட்டு மக்களிடம் செல்வமும் கல்வியும் மட்டும் இருந்தால் போதாது. சுதந்திர தாகமும் எதையும் தியாகம் செய்யும் வீரமும் பாய்ந்து வரும் ஈட்டிக்கு முன் திறந்த மார்புடன் நிற்கும் தைரியமும் வேண்டுமென்று கன்பூஷியஸ் தமது வாழ்நாள் முழுவதும் உபதேசித்தது மட்டுமல்லாது அதை நடைமுறையிலும் செய்து காட்டினார். நாட்டிற்கு அமைச்சராக அவர் இருந்த காலத்தில் சீனா முழுவதும் மஞ்சள் நதி கூடவே கன்பூஷியஸின் உபதேச நதியும் பெருக்கெடுத்து ஓடியது.

    கன்பூஷியஸின் போதனைகளில் பரம்பொருள் பற்றியோ மறுஜென்மம் பற்றியோ எந்த செய்தியும் கிடையாது. மரணத்தை பற்றி ஒரு சீடர் அவரிடம் கேட்டபொழுது நீ இந்த உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கும் வாழ்க்கையை பற்றிய முழுமையான அறிவை பெறாதபோது மரணத்தை பற்றியும் மறுஉலக வாழ்க்கை பற்றியும் அறிந்து கொண்டு என்ன செய்ய போகிறாய் என்று திருப்பி கேட்டார்.
    மனிதனாக படைக்கப்பட்டவன் எதனோடும் தொடர்பு இல்லாத தனி ஒரு ஜீவன் அல்ல. அவன் ஜன சமுதாயத்தில் ஒரு அங்கமே ஆவான். எனவே ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப்பற்றி சுய விழிப்புணர்வு பெற்றால் சமுதாயமானது அறிவுப்பூர்வமாக திகழும் விழிப்புணர்வு இல்லாத மனிதர்களை குழுக்களாக கொண்ட சமூகம் கல்லடிபட்டு தேன் கூடுகலைந்து போவதுபோல் போய்விடும்.

    காட்டிலே வாழுகின்ற விலங்குகளுக்கு சுயசிந்தனை என்பது கிடையாது அல்லது அவைகளுக்கு அது உண்டா, இல்லையா என்பது நமக்குத்தெரியாது ஆனால் மனிதன் விலங்குகளை போல் அல்ல அவன் இரண்டு கால்களால் நடப்பதாலும் ஆயுதங்களை பிரயோகிக்க தெரிந்திருப்பதனாலும் மட்டுமே விலங்குகளிலிருந்து மனிதன் மாறுபடவில்லை
     சுய சிந்தனை உடையவனாக இருப்பதனாலேயே விலங்கு நிலை கடந்த மனிதன் என்று அவன் கருதப்படுகிறான் எனவே அவனுக்கு தனது வாழ்க்கையை தாமே அமைத்துக்கொள்ளும் வல்லமை இருக்கிறது. ஒவ்வொருவனின் சிந்தனை திறனையும் செயல் திறனையும் பொருத்தே அவனவன் எதிர்காலம் உருவாக்கப்படுகிறது.

   நடைமுறைக்கு உகந்த நன்மையை கடைபிடித்து ஆவல்களை கட்டுப்படுத்தி ஓய்வில்லாமல் செயல்படும் எந்த மனிதனும் தோற்றுப்போவதில்லை இவைகள் சீன ஞானியின் சிறப்பான வழிகாட்டுதலாகும்.கேள்வி:
    உலகிலேயே நட்பைப்பற்றி அதிகமான கருத்துகளை சொன்னவர் கன்பூஷியஸ் என்று நான் கேள்விபட்டுள்ளேன் வள்ளுவரை விடவா அவர் அதிகமாக அறிவுபூர்வமாக நட்பைப் பற்றி பேசி இருக்கிறார்?

குருஜி:
      ஒருவரை இன்னொருவரோடு ஒப்பிட்டு பார்ப்பதில் எப்போதுமே சிக்கல் எழும். நமக்குப்பிடித்தமான ஒருவரை இன்னொரு நபரோடு இணைத்து வைத்து பார்க்கும்போது நமது அன்புக்குரியவர்களின் குறைகளை மறந்து மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்தியே நம்மால் பார்க்கமுடியும்      நான் கூறுவது எத்தனை சதவிகிதம் உண்மையென்று மனோதத்துவம் அறிந்தவர்கள் அறிவார்கள் வள்ளுவரின் சூழல் வேறு, பண்பாடு வேறு கன்பூஷியஸின் சூழலும், பண்பாடும் வள்ளுவரோடு எப்போதுமே ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிட்டால் பெரியவர்களின் நிறை குறைகளை அறிந்து கொள்ளலாம் என்று நாம் கருதுவது அறிவீனமாகும்.

 உண்மையானவர்கள், நேர்மையானவர்கள், அனுபவசாலிகள் ஆகிய மூன்று தரப்பிலுள்ள மனிதர்களின் நட்பு எப்போதுமே நன்மை தரக்கூடியதாகும். நாடாளும் மன்னனிலிருந்து நாடோடி மனிதன் வரை நண்பர்களை சம்பாதித்து கொள்வது தவிர்க்கமுடியாத சிறப்பான செயல்கள் ஆகும்.

   சமுதாய உறவில் நட்பு என்பதே மணிமகுடம் ஆகும். அதே நேரம் தனக்கு நிகர் இல்லாத எவரிடமும் நட்பு பாராட்டக்கூடாது. ஒன்று அவர்களை ஒதுக்கிவிடவேண்டும். அல்லது அவர்களிடமிருந்து ஒதுங்கிவிடவேண்டும். நல்ல நண்பன் எப்படி துன்பத்தை குறைத்து இன்பத்தை பெருக்குகிறானோ அதே போன்றே தீயவனான அறிவீனனான நண்பன் நமது துயரங்களுக்கும் தோல்விகளுக்கும் காரணமாக இருக்கிறான்

       நட்பு என்பது ஏழைகளுக்கு செல்வம் போன்றது. பலவீனர்களுக்கு பலம் போன்றது நோயாளிகளுக்கு மருந்து போன்றது நண்பர்களுக்கிடையே எது இருக்கிறதோ இல்லையோ பரஸ்பரம் நம்பிக்கையானது வேண்டும். நம்பிக்கை இல்லாத நட்பு கழுத்தை குறிபார்த்து இருக்கும் கத்தியை போன்றது.

   உதட்டிலே அன்பும் உள்ளத்தில் விஷமும் உடையவர்களின் உறவு என்றாவது ஒருநாள் நமது வாழ்க்கை படகை நடுக்கடலில் ஓட்டைபோட்டு மூழ்கடித்துவிடும் இவைகள் கன்பூஷியஸின் நட்பை பற்றிய சிந்தனையாகும். இதே போன்றதுதானா அல்லது வள்ளுவரின் சிந்தனை இதிலிருந்து மாறுபட்டதா என்பதை வேறு சமயத்தில் பேசலாம்.


 கேள்வி:
      கன்பூஷியஸ் சீனநாட்டின் அமைச்சராக இருந்ததாக குறிப்பிட்டடீர்கள் அப்படியென்றால் அரசு நிர்வாகம் பற்றியும், அரசியலை பற்றியும் முழுமையான அறிவுடையவராகவே அவர் இருந்திருக்கவேண்டும். அவைகளை பற்றி அவர் என்ன கூறுகிறார் என்பதை அறிந்துகொள்ள ஆசைபடுகிறேன்?


 குருஜி:
       அவர் வாழ்ந்த காலத்தில் சீனநாடுகளிலும் சரி இந்தியாவின் சில பகுதிகளை தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் மன்னராட்சி முறையே நடைமுறையில் இருந்தது. மன்னராட்சி முறை என்பது ஜனநாயகமும், சர்வாதிகாரமும் கலந்த ஒரு கலவையாகவே அன்று இருந்தது. அந்த காலத்தில் வாழ்ந்த அவர் மிகவும் புரட்சிகரமான ஒரு கருத்தை வெளியிட்டார்.

   மன்னன் நல்லவனாக இல்லாதபோது மக்கள் ஒருநாளும் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள் என்றார் அதாவது மக்களின் தவறுகளுக்கு மன்னனே தண்டனை ஏற்கவேண்டும் என்ற கருத்தில் இதை கூறினார். 


    நவீன கால சீன அரசியல்வாதிகள் எத்தகைய முரட்டுதனம் வாய்ந்தவர்கள் என்தை தினாய்மென் சதுக்கத்தில் மாணவ புரட்சியை அடக்கிய விதத்தை 10 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் பார்த்திருக்கிறோம். இவர்களின் முகமே இத்தகைய கொடியது என்றால் அக்காலத்திய சீன மன்னர்கள் எத்தகையவர்களாக இருந்திருப்பார்கள் அவர்கள் முன்னாலேயே இந்த கருத்தை ஒருவர் சொல்லவேண்டுமென்றால் அவரின் துணிச்சலையும் நெஞ்சுறுதியையும் எண்ணி வியக்காமல் இருக்கமுடியாது.

   அரசர்களை பற்றி அவர் சொல்லுவதை இன்னும் கேள். மன்னன் என்பவன் எந்த நேரத்திலும் மன்னனாக மட்டுமே இருக்கவேண்டும். தகப்பனாகவோ, கணவனாகவோ, நண்பனாகவோ அவன் இருக்கக்கூடாது. அப்படி இருக்கும் மன்னன் ஆட்சி கலையின் நுட்பத்தை அறியாமல் தன்னையும் தனது நிர்வாகத்தையும் சீரழித்து விடுகிறான் என்கிறார்.

   ஒரு அரசாங்கமானது அதிகார பீடத்தில் இருப்பவர்களின் கஷ்டங்களை உணரவேண்டும் ஆட்சியாளர்கள் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளின் கஷ்டத்தையும் உணரவேண்டும் இப்படி நிர்வாகியும் நிர்வாகமும் பரஸ்பரம் புரிந்துகொண்டு செயல்பட்டால் மக்களின் கஷ்டங்களை எளிதில் போக்கிவிடலாம்.


    நல்லதொரு அரசு அமைய நாட்டில் போதுமான உணவு உற்பத்தியும் தொழில்வளமும் விசுவாசமிக்க இராணுவ பலமும் ஆட்சியாளர்களின் பேரில் மக்களுக்கு பரிபூரண நம்பிக்கையும் வேண்டும் என்கிறார்.

  அரசை நடத்தும் அரசியல்வாதிகள் அதாவது ஆட்சியாளர்கள் ஒழுங்கீனமானவர்களாக இருந்தால் நாட்டில் வர்த்தகர்களின் ஆடசியே நடக்கும். அதாவது மக்கள் முழுமையான சுரண்டலுக்கு உட்பட்டு வறுமையின் பிடியில் தள்ளப்படுவார்கள் என்கிறார்.

 அதன் அடிப்படையில் இன்றைய சூழலில் பார்த்தோமென்றால் உலகின் பெரும்பாலான நாடுகளில் வர்த்தகர்களின் ஆட்சியே நடைபெறுகிறது எனலாம்.
இவரின் போதனைகளில் பெருவாரியாக சமூக கோட்பாடுகள் மிகுந்து ஆன்மீக சிந்தனைகள் குறைந்திருப்பதற்குக் காரணம் மனிதர்களிடம் நேர்மையும், ஒழுக்கமும் மிகுதியானால் ஆத்ம வளர்ச்சியென்பது தானாகவே நடைமுறைக்கு வந்துவிடும் என்பதனால்தான்.
இவ்வாறு எனது பல கேள்விகளுக்கு தெளிவாகவும் நுணுக்கமாகவும் பதில் சொன்ன குருஜியிடம் இருந்து ஆசீர்வாதம் வாங்கி விடைபெற்றேன்.


      சந்திப்பு  சதீஷ் குமார்Contact Form

Name

Email *

Message *