Store
  Store
  Store
  Store
  Store
  Store

எனது ஜோதிட அனுபவம்   அரகண்ட நல்லூருக்கு வந்தவுடன் எனது தந்தையார் என்னிடம் சொல்ல்யது ஜோதிடம் படி, அது உன்னைத்தேடி பலரை வரச் செய்யும் என்பது தான். அவரின இந்த வார்த்தை அப்போது எனக்கு வேதனையாக இருந்தது. காரணம் எனது முழு ஆர்வமும் வேகமும் வியாபாரத்தில் தான் இருந்தது. வியாபாரத்தைத் தவிர மற்ற துறைகள் குறிப்பாக ஜோதிடம், சித்த மருத்துவம் என்பதெல்லாம் பொய்மையை அடிப்படையாக கொண்டது என்பதாக எனது அபிப்ரயாமும் நம்பிக்கையும் உறுதியுடன் இருந்தது.

    அப்பா சொல்கிறார் என்பதற்காக மனதுக்குப் பிடிக்காததையெல்லாம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாக அப்போது நான் கருதவில்லை. எனவே ஜோதிடம் படிப்பதற்கான எந்த முயற்சியையும், நான் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அந்தச் சூழல் அதிக நாள் நீடிக்கவில்லை. எனது தந்தையாரின் மிக நெருங்கிய நண்பர் பட்டுசாமி ஐயரிடம் ஒருநாள் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர் ஒரு குறிப்பிட்ட ஜோதிடரின் பெயரைச் சொல்லி அவர் கணக்குகளில் முக்காலமும் தப்பாது, சொன்னது சொன்னபடி நடக்கும் என்று புகழ்ந்து பேசினார்.


   எனக்கு அது நல்ல நகைச்சுவையாகப்பட்டது. பிரபஞ்சக் கணக்கில் பூமி என்பதே ஒரு சிறிய கோலிக்குண்டு தான். அந்தக் கோலிக்குண்டில் ஒட்டிக் கொண்டு இருக்கும் தூசியை விட மனிதன் சிறியவன். அப்படி ஒரு புள்ளியில் அளவிற்குச் கூட தேராத மனிதனை அயனவெளியில் சுற்றுகின்ற பிரம்மாண்டமான கிரகங்கள் எப்படி ஆட்டுவிக்க முடியும்; பூமியை விட ஒன்பது மடங்கு பெரிதான வியாழன் கிரகம் ஒரு மனிதனைத் தேடிவந்து எப்படி நல்லது கெட்டதுகளைச் செய்யும்; அப்படிச் செய்யும் என்பதற்கு நேரடியான ஆதாரம் என்ன இருக்கிறது குருப்பெயர்ச்சியால் நல்லது நடந்தது என்று யாராவது சொன்னாலும் அது காக்காய் உடகார பனம் பழம் விழுந்த கதையாக இருக்குமே தவிர வேறு இல்லை. எனவே ஜோதிடத்தையும், ஜோதிடரையும் பாராட்டுவதை பரிதாபகரமான அவமானமே அல்லாது வேறோன்றும் இல்லை என்று அவரிடம் எனது மனக்கருத்தை வெளிப்படையாகவே கொட்டினேன்.

   அதற்கு அவர் நீ சொல்லுவது ஒரு வகையில் சரியாக இருக்கலாம். ஆனால் அது தான் முற்றிலும் உண்மையானது என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் பல லட்சம் மைல் தொலைவிலுள்ள சந்திரனின் ஈர்ப்பு சக்தி கடலைக் கொந்தளிக்கச் செய்கிறது. பைத்தியக்காரனின் மூளையைச் சதிராடச் செய்கிறது எனும் போது மனிதனின் வாழ்க்கையை மட்டுமே அது ஏன் பாதிக்கக் கூடாது. சந்திரனின் ஈர்ப்பாற்றலை எந்த விஞ்ஞானியால் கண்ணுக்குத் தெரியும் படி நேரடியாகக் காட்ட இயலும். எனவே கிரகங்கள் மனிதனை ஆட்டுவிப்பது முற்றிலும் உண்மை தான் என்றார்.
    அவரின் இந்த விளக்கம் என்னை எந்த வகையிலும் திருப்திப்படுத்தவில்லை. மாறாகச் சீண்டிப் பார்க்கும் எண்ணத்தையே அதிகரித்தது. நவீன விஞ்ஞானம் சூரியனை மையமாக வைத்து தான் மற்ற கோள்கள் எல்லாம் சுற்றுகிறது என்று சொல்கிறது. இது ஆரம்பப் பாடசாலை குழந்தைகளுக்குக் கூட நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் பாவம்; உங்கள் ஜோதிட கணித புலிகள் எல்லாம் பூமியை மையமாகக் கொண்டு தான். கிரகங்கள் சுற்றுவதாக இன்னும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் அறியாமைக்கு இதைவிட வேறு சான்றுகள் என்ன வேண்டும் என்று கேட்டேன்.

     எனது பேச்சு அவரை எரிச்சலடையச் செய்யும், ஆத்திர மூட்டும், பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடச் செய்யும் என்றெல்லாம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அமைதியாக என்னைப் பார்த்து சிரித்தது எனக்குத் தான் வேகத்தை ஊட்டியதே தவிர வேறொன்றையும் தரவில்லை. அவர் நிதானமாக என் கருத்திற்கு மறுப்பு தந்தார்.   சூரியனைத் தான் மற்ற கிரகங்கள் சுற்றுகின்றன என்பது வெள்ளைக்காரன் சொல்லித்தான் தெரிந்து கொண்டோம் என்று கூறும் அளவிற்கு பண்டைய இந்திய வான சாஸ்திகள் முட்டாள்களாக இருக்கவில்லை. இதைக் கண்டுபிடித்து சொல்லிய வெள்ளைக்காரனின் முப்பாட்டன் காலத்திற்கு முன்பே இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கடைக்கோடி மனிகனுக்கும் இந்த விஷயம் தெரியும் உங்கள் வெள்ளைக்கார விஞ்ஞானிகள் பூமி உருண்டை என்று கண்டுபிடித்துச் சொல்வதற்கு பலகாலம் முன்பே அதைத்தெரிந்து பூமியை பூகோளம் என்று அழைத்தவன் இந்தியன் கோளம் என்றால் உருண்டை என்று சின்ன பிள்ளைகளுக்கும் தெரியும் முதலில் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்; வான சாஸ்திரம் என்பது வேறு; ஜோதிட சாஸ்திரம் எனபது வேறு.

     இரண்டு சாஸ்திரத்திற்கும கிரகங்கள் அடிப்படையாக இருக்கிறது என்பதற்காக இரண்டையும் போட்டு குழம்பிக் கொள்வது புத்திசாலித்தனமாகாது. வானசாஸ்திரம் என்பது வானத்தில் கோள்களின் சஞ்சாரத்தையும் நட்சத்திரங்களின் இயல்பையும் அறிவது ஆகும். ஜோதிட சாஸ்திரமோ கிரகங்களின் ஈர்ப்பு நிலை எந்த வகையில் பூமியையும் பூமியில் உள்ள மற்ற பொருட்களையும் மாறுபாடு அடையச் செய்கிறது என்று ஆராய்வதாகும்.


    ஜோதிடப் பலன்கள் உயிர்களுக்காகக் கணிக்கப்படுதிறதே தவிர கிரகங்களுக்காக அல்ல. உயிர்கள் நாம் அறிந்தவரை பூமியில் தான் இருக்கிறது. பூமியில் உள்ள உயிர்களின் நிலையை அறிய இதைத் தான் மையப்படுத்தி ஆராய வேண்டும் தவிர சூரியனை மையப்படுத்தி அல்ல. சூரியனில் உயிர்கள் வாழ்ந்தால் சூரியனை மையப்படுத்தலாம். உன் குடும்பம் எப்படி உனது தந்தையாரை மையமாகக் கொண்டு இருக்கிறதோ அதேபோலத் தான் உயிர்களும் பூமியை மையமாகக் கொண்டு இருக்கிறது. அதனால் ஜோதிடர்களின் கணிப்பும், நம்பிக்கையும் சரியானது தான் என்றார்.

     அவரின் அறிவுப்பூர்வமான இந்தப் பதில் எனக்கு ஒரளவு திருப்தியையும் வியப்பையும் தந்தது என்றாலும் கூட இந்த விளக்கம் மட்டுமே ஜோதிடத்தை முழுமையாக நம்புவற்குப் போதுமானது என்று என்னால் கருத முடியவில்லை.

அதனால் எனது வாதத்தின் அடுத்த பகுதியை அவரிடம் வைத்தேன். உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது; ஆனால் இது சரியானது தானா? என்று முடிவு செய்யும் அளவிற்கு என் அறிவு இன்னும் பக்குவப் படவில்லை. ஆயினும் இன்னும் ஒரு குழப்பம் இருக்கிறது. நீங்கள் ஜோதிடத்தில் 9 கிரகங்களைக் கணக்கிடுகிறீர்கள். இதில் ராகு, கேதுவை நிழற் கிரகங்கள் என்று ஒதுக்கி வைத்து விடுகிறீர்கள். அதாவது அவைகளுக்கு கிரகங்கள் என்ற முழுத்தகுதியை நீங்கள் தரவில்லை. ஆனால் சூரியனை முழுமையான கிரகம் என்றும் அது தான் தலைமைக் கிரகம் என்றும் கருதுகிறீர்கள். உண்மையில் சூரியன் பல வாயுக்கள் அடங்கிய நெருப்புப் பந்து; அதாவது நட்சத்திரம். ஒரு நட்சத்திரத்தைக் கிரகம் என்று எப்படி அழைக்க முடியும். அப்படி அழைக்கும் ஒரு துறையை விஞ்ஞான பூர்வமானது என்று எப்படி நம்ப இயலும் என்று கேட்டேன்.


  அதற்கு அவர் சூரியக் குடும்பத்தில் இருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் நட்சத்திரங்கள் உள்ளன. அவைகளோடு ஒப்படும் போது சூரியன் நமக்கு மிக அருகாமையில் இருக்கிறது. அதே நேரம் சூரியனில் இருந்து தோன்றயவைகள் தான் சூரி\யக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் ஆகும். இவைகளும் இன்றைய நிலைக்கு வருவதற்கு முன் சூரியனைப் போலவே கான் நெருப்புக் கோளமாக இருந்தது. பிறகு தான் கெட்டித்தன்மை பெற்றிருக்கிறது.

   இதை நான் சொல்லவில்லை. உமது விஞ்ஞானிகளின் தான் சொல்லுகிறார்கள். மேலும் கோளங்கள் என்றவுடன் அது கெட்டித் தன்மை பெற்ற கிரகத்தை மட்டும் தான் குறிக்கும் என்று கருதுவது எந்த வகையிலும் பொருந்தாது. உருண்டை வடிவமுடைய எல்லாமே கோளங்கள் தான்.

   அண்ட வெளியில் ஒரு யானையைத் தூக்கி போட்டாலும் அது சுற்றிச் சுற்றி நாளாவட்டத்தில் ஒரு கோளமாக அதாவது உருண்டையாக ஆகிவிடும். சூரியனும் அண்டவெளியில் சுற்றி வருவது தான். அதனால் தான் அந்த நெருப்புப் பந்தம் போல் எரியாமல் உருண்டையாக எரிகிறது. சூரியனுக்கு மிக அருகே சென்று பார்த்தால் அது முழுமை பெற்ற உருண்டை என்று நம்பியது தவறாக இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.   எனவே கோள்கள், கிரகங்கள் என்று கருதுவது எல்லாம் குறியிட்டுக் காட்டுவதற்கு தான். மேலும் சூரியனைப் பக்கத்தில் இருப்பதனால் தான் கோளம் என்ற பெயரிட்டார்களே தவிர தூரத்தில் இருந்தால் அதுவும் நட்சத்திரமாகத் தான் கருதப்பட்டு இருக்கும்.

   அவரின் இந்த விளக்கம் அப்போது என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும் காலம் செல்லச் செல்ல அறிவில் நிதானம் ஏற்பட ஏற்பட இதிலுள்ள உண்மை நன்றாகவே புரிய ஆரம்பித்தது.

    ஆனால் வாதம் புரிவதையே இதமானது என்று கருதிய விடலைப் பருவத்தின் கேள்விகள் இத்தோடு நிற்கவில்லை. ஜோதிடம் சம்டபந்தப்பட்ட வேறு துறைகளிலும் ஆயிரமாயிரம் வினாக்கள் எழுந்து விடைதேட துடிப்பை ஏற்படுத்தியது. இந்த மாதியான காலக் கட்டத்தில் தான் திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் ஒரு வயதான விசித்திர மனிதரைச் சந்தித்தேன். 


    அவரைச் சந்தித்த பிறகு தான் எனது வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது என்றாலும் அவரோடு எனது அறிமுகம் ஒருவித மோதல் போக்காகத் தான் இருந்தது. எனது கைகளில் உள்ள ரேகைகளைப் பார்த்து விட்டு சில பலன்களை அவர் சொன்னார். ரேகைகளை வைத்துப் பலன் சொல்லுவது எந்த வகையில் சாத்தியம் என்று கேட்டேன். அதற்கு அவர் எதை வைத்து இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.

    கைகளில் உள்ள ரேகைகள் நாம் கருவறையில் இருக்கும் போது விரல்கள் மடங்கி இருப்பதனால் ஏற்பட்ட மடிப்புகளே தவிர வேறொன்றும் இல்லை. இந்த மடிப்புகளை வைத்து பலன் சொல்வது என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம் தானே என்று கேட்டேன். அதற்கு அவர் உள்ளங்கையில் இருக்கும் ரேகைகளை வேண்டு மென்றால் வெறும் மடிப்புகள் என்று நீங்கள் சொல்லலாம்.

    ஆனால் விரல் நுனியில் ஏற்பட்டிருக்கின்ற ரேகைகள் எந்த மடிப்பால் வந்தது என்று அவர் என்னைத் திருப்பிக் கேட்டார். அதன்பிறகு எங்கள் வாதங்கள் வேறு வகையில் சென்றது என்றாலும் விரல் நுனியில் உள்ள ரேகையைப் பற்றி அவர் பேசியது என் மனதில் ஆழமாகவே பதிந்து விட்டது.


    இந்தப் பதிவின் வெளிப்பாடு என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது 1984ல் தான். அந்த வருடம் எனது மிக நெருங்கிய நண்பர் திரு மகேந்திரகுமார் ஜெயின் வீட்டிற்கு சில ஜைன துறவிகள் வந்திருந்தார்கள். அவர்களிடம் ஆதிநாத் பகவானைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு அவர்களோடு பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரும்படி நண்பரிடம் நச்சரித்தேன்.

   அவரும் அதற்கு ஒத்துக் கொண்டு பெரும் முயற்சிக்குப் பின்னர் ஜைனத் துறவிகளை நான் சந்திக்க ஏற்பாடு செய்து தந்தார். துறவிகளை நான் முகையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கி பள்ளியிலுள்ள ஒரு வகுப்பறையில் சந்தித்தேன். அம்மணத்தை பற்றியும், குளிக்காது இருப்பதைப் பற்றியும் அவர்களிடம் குதர்க்கமான பல கேள்விகளைக் கேட்டேன். எனது கேள்விகளால் அவர்கள் கொஞ்சம் கூட கோபம் அடையாதது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

   கன்னத்தில் அறைந்தால் கூட சிரித்து கொண்டே வாங்கும் அளவிற்கு பக்குவம் பெற்றிருந்த அவர்களைப் பார்ப்பது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. எனது கேள்விகளுக்கு எல்லாம் ஒரே ஒருவர் மட்டும் பதில் சொல்லாமல் அனைவருமே தாங்கள் அறிந்தவற்றை எனக்கு விளங்குமாறு சொல்லிக் கொண்டு இருந்தனர். அந்தத் துறவிகள் மத்தியில் வயதில் மிகவும் இளைய ஒரு பெண் துறவியும் இருந்தார்.    அவர் எனக்குப் பதில் சொல்லும் போது கைகளைப் பலவிதமாக அசைத்துப் பேசினார். அவர் கைகளைப் பார்த்தவுடன் எனது கவனமெல்லாம் பேச்சிலிருந்து மாறிவிட்டது.

   நெடுஞ்சாலை ஓரங்களில் வாகன ஓட்டிகள் உட்காருவதற்காக காற்று புகும் வண்ணம் ஒயர்களாலோ பனை நார்களúலோ பின்னி விற்கப்படும் ஒரு இருக்கையைப் பார்த்திருப்பீர்கள். அந்த இருக்கை பின்னப்பட்டு இருக்கும் விதத்திற்குள் ஒரே மாதிரி அறுங்கோண வடிவில் ஓட்டை இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். அந்த ஓட்டை எப்படி, இருக்குமோ அதே போன்ற ரேகைகள் அந்தப் பெண் துறவியின் உள்ளங்கை முழுவதும் இருந்ததைப் பார்த்து நான் அதிர்ந்து விட்டேன்.

    ஆயிரம் வார்த்தைகளால் தெளிவுபடுத்த முடியாத அறிவுத் தன்மையை அரை வினாடி காட்சி தெளிவுபடுத்தி விடும். ரேகைகள் எல்லாம் கருவறை மடிப்பு என்று இதுவரை நம்பி வந்த நான் அந்தப் பெண் துறவியின் கைரேகை அமைப்பைப் பார்த்து முதலில் அதிர்ந்தேன். அதன்பிறகு வியந்தேன். பின்னர் கைரேகை ஜோதிடம் இவைகளில் ஏதோ ஒரு உண்மை மறைந்திருக்கிறது. அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சிகளில் இறங்கினேன்.


    நமது நாட்டில் உள்ள பண்டைய கால ரிஷிகளின் நூல்கள் அரிதான ஏட்டுப் பிரதிகள் மேல்நாட்டு அறிஞர்களின் அரிய ஆராய்ச்சி நூல்கள் என்று தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் இத்துறை நூல்கள் மீது எனக்கு ஒரு வெறியே ஏற்பட்டது என்று சொல்லலாம்.

   நூல்களைப் படித்தால் மட்டும் போதாது அவைகளில் உள்ள கருத்துக்களை நடைமுறையில் பயிற்சி செய்தும் பார்க்க வேண்டும் என்று பல நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதனால் பல தரப்பட்டவர்களின் ஜாதகங்களையும் கைரேகைகளையும் வலியப் பெற்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்தேன். அப்பொழுது தான் ஒரு உண்மை தெரிய வந்தது. இந்த மாதிரி விஷயங்களில் நூலறிவை விட குரு மூலமாக ஆனுபவ ஞானத்தைப் பெறுவது தான் சிறந்தது என்பது புலப்பட்டது.

   குருவைத் தேடும் எனது முயற்சிகள் ஒரு பெரும் வேட்டையாகவே இருந்தது. பல ஜோதிடர்களை அணிகிய போது அவர்களில் பலருக்கு அடிப்படை விஷய ஞானமே கூட இல்லாதிருப்பது புரிந்தது.
   அந்த நேரத்தில் தான், திருக்கோவிலூர் வட்டாரத்தில் இருந்த திறமை வாய்ந்த ஜோதிடர் நாராயணசாமி நாயக்கர் பற்றி தெரிந்து கொண்டு கொல்லூர் கிராமத்திற்கு நானும் எனது நண்பர் வேலுநாயக்கரும், குதிரை வண்டி வைத்து கொண்டு சென்றோம். நாராயணசாமி நாயக்கர் எனது தகப்பனாரின் பெயரைச் சொன்னவுடன் என்னை அறிந்து கொண்டார். வித்தை கற்றுத் தர சம்மதித்து ஜோதிட அரிச்சுவடி என்ற நூலையும் தந்து இதை இன்று இரவில்படி நாளை காலையில் வா மற்ற விஷயங்களை ஆரம்பிப்போம் என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

    பொழுதும் விடிந்தது. ஒரு செய்தியும் வந்தது. அது நாராயணசாமி நாயக்கர் காலமாகி விட்டார் என்பது தான். இந்தச் செய்தியால் சற்று வருத்தப்பட்டேனே தவிர முயற்சியைக் கைவிடவில்லை. இரண்டொரு நாளில் கோதண்டபாணிபுரம் சிதம்பரம்பிள்ளை என்பவரைச் சந்தித்து சொல்லித்தர ஆரம்பித்தார். ஆறு மாதத்தில் கடகால் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி கவுண்டர் என்ற ஜோதிடரின் நட்பும் கிடைத்தது. அவரிடமும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.
அன்று முதல் இன்றுவரை ஜோதிட ரீதியில் பல விஷயங்களை ஆராய்ந்து வருகிறேன் அவை அனைத்துமே ஜோதிடத்தில் பல புதுப்புது தகவல்களை காட்டி அது நிஜம்தான் என்பதை அனுபவத்தில் உணர்த்தி வருகிறது

Contact Form

Name

Email *

Message *