Store
  Store
  Store
  Store
  Store
  Store

விஷத்தில் முளைத்த நிலா


   ம்மில் பலர் உண்மையை மட்டும் பேசி வாழ விரும்புகிறோம். ஆனாலும் நம்மால் அந்த நெறியில் நிலைத்து நிற்க முடியாமல் அவ்வப்போது பாதை மாறி போகிறோம். அப்படி உண்மையை கை விடுவதற்கு ஆயிரம் காரணங்களையும் சமாதானங்களையும் கூறுகிறோம். ஆனால் உண்மையில் அந்த சமாதானங்கள் ஏற்புடையதா? இல்லையா? என்பது நமக்கு மட்டும்தான் தெரியும் காரணம் நாம் உண்மையை விட நமது வாழ்வைப் பெரிதெனக் கருதுகிறோம். நம் வாழ்க்கையானது சுகத்துடன் இருக்க எதை வேண்டுமென்றால் இழக்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் வாழ்க்கை உட்பட எதை இழந்தாலும் உண்மையை இழக்க மாட்டேன் என்ற நெஞ்சுறுதி நம்மில் யாருக்கேனும் இருக்கிறதா? அப்படி வாழ்ந்த யாரேனும் இருக்கிறார்களா? என்ற கேள்வியை நாம் கேட்டு பார்த்தால் அப்படி ஒருவர் இருந்தார் அவர்தான் சாக்ரடீஸ் என்ற பதில் நமக்குக்கிடைக்கும். யார் அந்த சாக்ரடீஸ் எந்த உண்மைக்காக தனது வாழ்க்கையை இழந்தார் என்பதையெல்லாம் தெளிவாக அறிந்துகொள்ள குருஜியிடம் வந்தேன்.


சாக்ரடீஸின் காலத்தில் கிரேக்க நாடு எப்படி இருந்தது அதன் அரசியல் மற்றும் சமூக சூழல்கள் எந்த வண்ணம் இருந்தது அதை விளக்கவும்?




   நமது இந்தியத் திருநாடு பல்வேறு இனங்களாகவும், மொழிகளாகவும் பிரிந்து கிடப்பது போலவே அன்றைய கிரேக்கமும் இயற்கை சூழல்களால் பல கூறுகளாகப் பிரிந்து இருந்தது. ஒரு திசையிலிருந்து மறு திசைக்கு மக்கள் பயணம் செய்வதோ, தகவல்களை பரிமாறிக்கொள்வதோ மிகக் கடினமாக இருந்தது. எனவே ஒவ்வொரு சிறு சிறு பகுதிகளும் தனி ஒரு அரசின் அங்கங்களாக இயங்கி வந்தன. நகரங்கள் தன்னை சுற்றியுள்ள சில பகுதிகளை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் சேர்த்துக்கொண்டு ஒரு அரசாக செயல்பட்டு வந்தன. இப்படி பல அரசமைப்புகள் பண்டைய கிரேக்க நாட்டில் நிர்வாகம் நடத்தின. இதனால்தான் வரலாற்று அறிஞர்கள் கிரேக்க அரசியல் அமைப்பை நகர்ப்புற அரசுகள் என்று அழைக்கிறார்கள்.

    இப்படி இருக்கும் நகர அரசு அமைப்புகளில் ஏதென்ஸ் நகர அரசும் ஸ்பாட்டா நகர அரசும் சிறப்பு வாய்ந்த அரசுகளாகத் திகழ்ந்தன. இந்த இரண்டு நகர அரசுகளுக்கிடையில் பல்வேறு வகையான முரண்பாடுகள் இருந்தன. ஆயினும் கி.மு. 5-ம் நூற்றாண்டில் பாரசீக நாடு இந்த அரசுகளோடு போர் பிரகடனம் செய்த போதும் தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளையும் மன பிணக்குகளையும் மறந்து ஒற்றுமையுடன் இணைந்து பாரசீக படையெடுப்பை முறியடித்தன.

    யுத்தம் நடத்திய நாடுகளே யுத்த விளைவால் பல பொருளாதார சிக்கல்களைச் சந்திக்க வேண்டி  இருக்கும். அப்படி இருக்கும்போது யுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட நாடுகளின் நிலை என்ன மாதிரி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. வேளாண்மை மட்டுமே ஜீவ மூச்சாக உள்ள ஸ்பார்ட்டா நாடு யுத்தத்தின் வேகத்தை தாங்காமல் வறுமையால் தள்ளாடியது ஆனால் வாணிபத்தை நம்பி இருந்த ஏதென்ஸ் நாடு யுத்தத்தின் பாதிப்பு சற்று இருந்தாலும்கூட பொருளாதார நுண்ணறிவால் வளமையை நோக்கி முன்னேறியது ஏதென்ஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால் பல பகுதியில் உள்ள பல்வேறு இன மக்களும் அங்கு குடியேறத்துவங்கினர். இதனால் ஏதென்ஸ் நகர பண்பாட்டில் பல புதுமையான பழக்க வழக்கங்களும் பண்பாடுகளும் கலந்தன.

    பண்பாடுகளின் கலப்புகளால் ஏதென்ஸில் இருந்த பழைய பத்தாம் பசலிக்கொள்கைகளும் குருட்டுத்தனமான மூட கருத்துக்களும் சிதைந்து அறிவியல் சார்ந்த சிந்தனை வளரத்துவங்கியது. அந்த நாட்டிலிருந்த செல்வச் செழிப்பு அறிஞர்களின் சிந்தனை பயிர் வளர ஊட்டச்சத்தாக அமைந்தது. இதனால் அவர்கள் இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தைப் பற்றியும் அதன் இயல்புகள் பற்றியும் சிந்திக்கத் துவங்கினர்.

    ஞானம் நிறைந்த பலர் நடமாடும் பல்கலைக் கழகமாக ஏதென்ஸ் நகரில் நடமாடினர். இவர்கள் வாதமேதைகள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த மேதைகள் அரசியல் பலத்தை கண்டோ, செல்வந்தர்களின் ஆணவத்தை கண்டோ பயப்படாமல் தாங்கள் அறிந்த உண்மைகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் இயல்பைப்பெற்று இருந்தனர். இவர்களின் கருத்துக்களை கண்டு அரசியல்வாதிகளும், சமய வாதிகளும் தொடை நடுங்கி உறக்கம் வராமல் தவித்தார்கள் என்றால் அறிஞர்களுக்கு மக்கள் மத்தியில் எத்தகைய செல்வாக்கு இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நட்சத்திரங்கள் நிரம்பிய வானில் முழுநிலா எத்தகைய அழகுடனும், கம்பீரத்துடனும் பவனி வருமோ அதே போன்ற அழகுடனும், அறிவு கம்பீரத்துடனும் இத்தகைய வாத மேதைகளுக்கு நடுவில் சாக்ரடீஸ் என்ற அறிவுச்சக்கரவர்த்தி வாழ்ந்தார்.

இவரது வாழ்வைப்பற்றி அதாவது இவரது குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை விரிவாக கூறவும்?



      இவரது வாழ்வைப்பற்றி விரிவாகக் கூறமுடியாது. அதற்குக்காரணம் அப்படி எந்தத் தகவலும் இவரைப் பற்றி எழுதி வைக்கப்படவில்லை. இவரின் தலைமை மாணவரான பிளாட்டோ சாக்ரடீஸின் உபதேசங்களை முழுமையாக எழுதி வைத்தாரே அல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விரிவாக எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் சாக்ரடீஸின் தகப்பனார் மிகச் சிறந்த சிற்பி எனவும் அவரின் தாய் ஒரு நல்ல மருத்துவர் எனவும் நம்மால் அறிய முடிகிறது. ஆனாலும் இவரது குடும்பம் செல்வ வளம் மிக்கது அல்ல. சாதாரண நடுத்தர குடும்பமாகவே இருந்து இருக்கிறது. கி.மு. 469-ல் பிறந்த இவர் தனது இளமை காலத்தில் போர்ப்படையில் சாதாரண வீரனாக பணிபுரிந்து இருக்கிறார். இது தவிர நிரந்தரமாக என்ன வேலை செய்தார் என்ன தொழிலில் ஈடுபட்டிருந்தார் என்பதைப் பற்றியெல்லாம் ஒரு சிறு குறிப்புகள் கூட கிடைக்கவே இல்லை.

    தாம் வாழ்ந்த காலத்தில் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்த பல அறிஞர்களோடு இவர் நல்ல தொடர்பை வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்ததனால்தான் அவரிடம் தெளிந்த சிந்தனையும், நுண்ணிய வாதத்திறமையும் அபரிதமாக இருந்திருக்கிறது. உலகிலேயே பேருரைகள் நிகழ்த்தாமல் நூல் எதுவும் எழுதாமல் மாபெரும் தத்துவ மேதையாக உருவானவர் சாக்ரடீஸ் மட்டும்தான். இவரை தத்துவ ஞானத்தின் திருப்புமுனை, தத்துவஞானிகளின் துருவ நட்சத்திரம், சிந்தனையாளர்களின் கலங்கரை விளக்கம் என்று சொல்லலாம்.

   வானத்தையும், வானத்துக்கும் மேல் இருக்கும் மறு உலகத்தையும் மரம், செடி, கொடிகளையும் பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருந்து தத்துவ வாதிகளின் சிந்தனை போக்கை மனிதனைப்பற்றியும் அவன் வாழ்வின் செம்மையுறுதல் பற்றியும் சிந்திக்கச்சொல்லி ஒரு மாபெரும் திருப்பு முனையை இவர் ஏற்படுத்தினார் எனலாம். அழகான கருத்துகளை வண்ணமயமான மொழி நடையில் அலங்காரமாக எடுத்துச்சொல்லிய சாக்ரடீஸ் பார்ப்பதற்கு வழுக்கை தலை, குண்டு முகம், பருத்த மூக்கு என்று விகாரமான புறத்தோற்றம் உடையவராக இருந்தார்.
 
   சாக்ரடீஸின் சிந்தனையை சொல்லாமல் அவரின் உருவத்தை பற்றிச்சொல்லுவதற்கு காரணம் இருக்கிறது. பொதுவாக நம்மில் பலர் அழகால் ஈர்க்கப்படுபவர்களாகவே இருக்கிறோம். அழகை ரசிப்பதும், ஆராதனை செய்வதும் தவறு என்று நான் சொல்லவில்லை. அதே நேரத்தில் அழகுக்கும், அறிவுக்கும் சம்மந்தப்படுத்துவதை நான் விரும்பவில்லை. அழகான தலைவர்கள் பலர் நம்மை ஆண்டு இருக்கிறார்கள். அவர்களால் நமது நாடு வளர்ச்சி பெற்றது என்பதைவிட வீழ்ச்சி அடைந்ததுதான் அதிகமாகும். சர்தார்வல்லபாய் பட்டேல், காமராஜர், நரசிம்மராவ் போன்றவர்கள் அழகான தோற்றமுடையவர்கள் அல்லர். ஆனால் அழகான, அறிவான செயல்கள் உடையவர்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் எவராலும் சொல்ல இயலாது. அதற்காக அழகுடையவர்கள் எல்லோருமே அறிவற்றவர்கள் என்று நான் சொல்லவில்லை. உருவத்தை பார்த்து ஒருவரின் செயலையோ, சிந்தனையையோ எடைபோடக்கூடாது என்றுதான் சொல்ல வருகிறேன்.
  
     சாக்ரடீஸின் தோற்றத்தில் எழில் இல்லாது இருந்திருக்கலாம் ஆனால் அவருடைய பேச்சில், செயலில், பழக்கவழக்கங்களில் எளிமையான இனிமை இருந்தது. அறிவிலே தெளிவும் செயலிலே உறுதியும் உடைய சாக்ரடீஸின் உயர்ந்த பண்புகள் ஏதென்ஸ் நகரத்து இளைஞர்களைப் புற்றீசல் போல் தன்பால் ஈர்த்தது என்பதில் வியப்பில்லை.


உன்னையே நீ அறிவாய்! என்ற வாசகம் சாக்ரடீஸின் பெருமையை இன்றும் நிலை நாட்டிக் கொண்டிருக்கிறது. அவர் பெயரை கூட அறியாதவர்கள் இந்த வாசகத்தை அறிவார்கள் இது எந்த நேரத்தில் அவர் உபயோகப்படுத்திய வார்த்தையாகும்?



      உன்னையே நீ அறிவாய்!  என்ற கோட்பாடு சாக்ரடீஸின் தத்துவங்களின் மணிமகுடம் எனலாம். இது மிக ஆழமான பொருளுடைய வார்த்தையாகும். என்னை விட்டால் அறிவில் சிறந்தவன் எவன் இருக்கிறான் என்ற அகந்தையோடும் வீண் கர்வத்தோடும் வீதியில் அலைந்த போலி அறிஞர்களை நிறுத்திவைத்து அடுக்கடுக்கான அறிவு கேள்விகளை கேட்டு அந்த சுயதம்பட்ட புலிகள் விழி பிதுங்கி பதில் தெரியாமல் தத்தளிக்கும் போது எல்லாம் அறிந்தவர் எவரும் இல்லை என்ற உண்மையை அவர்களுக்கு விளக்கி உன் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை உன்னைத் தவிர ஒருவரும் அறிய முடியாது. முதலில் உனது பலவீனங்களை பட்டியலிட்டு சீர்படுத்த பார் அதன்பின் மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்தும் சின்னபுத்தி உன்னை விட்டு அகலும் என்ற அர்த்தத்திலேயே அவர் உன்னையே நீ அறிவாய் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதாவது சாக்ரடீஸின் உண்மையான நோக்கம் மனிதர்களின் வீண் மமதையை  அழிப்பதே ஆகும்.


சாக்ரடீஸ் ஏதாவது ஒரு மதப்பிரிவை சார்ந்தவரா அல்லது  மதத்தை உருவாக்க விரும்பினாரா?



  சாக்ரடீஸ் எந்த ஒரு மதத்தையும் உருவாக்க விரும்பவில்லை ஆயினும் கிரேக்கத்தின் ஆன்மீகப்பாதை என்பது அதன் தொடக்க காலத்தில் சரியான ஒழுங்குமுறை இல்லாது இருந்தது. புலன் கடந்த பொருள்களை பற்றியோ அல்லது உணர்வுகளை பற்றியோ சரியான தெளிவான கொள்கை எதுவும் கிரேக்கர்கள் இடத்தில் அப்போது இல்லையெனலாம். ஆயினும் ஷோபிஸ்டு என்னும் ஒரு பிரிவினர் அப்போது கிரேக்கத்தில் இருந்தனர் இவர்கள் பிதாகரஸின் மனிதனே யாவற்றையும் அளக்கும் கருவி என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டனர். இவர்கள் சாக்ரடீஸின் உன்னையே நீ அறிவாய் என்ற கருத்தை சுவிகாரம் எடுத்துக்கொண்டு சாக்ரடீசை ஷோபிஸ்டுகளின் வழித் தோன்றல் என்று கூறினார்கள். செறிவு மிகக்கொண்ட கருத்து முறைகளைத் தன்னகத்தே கொள்ளாமல் தளர்ச்சியான போக்குடைய ஒரு வித சிந்தனைகளை ஷோ பிஸ்டுகள் கொண்டவர்களாக இருந்தாலும் சாக்ரடீஸ் கிரேக்க ஆன்மீக இயலில் அதன் மரபுத் தன்மையில் ஒரு ஷோபிஸ்டாகவே கருதப்படவேண்டியவராக இருக்கிறார்.

     பிதாகரசும் கார்கியஸ் என்பவரும்  தொடங்கிய ஷோபிஸ்டுகள் புரட்சியை உண்மையாக நிறைவேற்றியவர் சாக்ரடீஸ் எனலாம். ஷோபிஸ்டுகளின் மனிதப்பற்று கோட்பாடு சாக்ரடீஸின் முயற்சியால் உச்சகட்டத்தை அடைந்தது. தனது குறைகளை நன்கு உணர்ந்து கொண்டு அதை மாற்ற முயற்சித்தவர்களுக்கு அதீனியர்களே! புறப்பொருள் சிந்தனைகளுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை இதுவே எளிய உண்மை என்றார். அதாவது தன்னை தான் உணர்ந்து கொள்வதே மனிதனது முதற்கடமை என்பதை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
   
   அதனாலேயே அவர் மனிதர்களின் நல்ல பண்பு நலன்களை வளர்ப்பதற்காக துருவித்துருவி ஆராய்ச்சி செய்தார். சட்டங்களும், சமுதாய கட்டமைப்புகளும், இருந்த போதிலும் தனது தனித்தன்மையை நிலைநாட்டும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது என்றார். இந்த அளவில் மட்டும்தான் சாக்ரடீஸ் ஷோபிஸ்டுகளின் கொள்கைகளோடு ஒத்து போகிறார். மற்றபடி அவர் தனது கருத்துகளுக்கு மதக் கோட்பாடுகள் என்ற விலங்கை பூட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் ஷோபிஸ்டுகள் அல்லாமல் அப்போது கிரேக்கத்திலிருந்த டெல்பி என்ற சமயத்தினர் இவரைத்தெய்வ மொழியாளர் என்று அழைத்தனர்.
   
   ஏதென்ஸ் நகரில் செல்வச்செழிப்பாலும் பணம் படைத்தவனே அனைத்தையும் அறியும் தகுதியும் பெறுகிறான் என்ற ஆணவப் போக்காலும் தனிமனித சுதந்திரம் என்பது அளவுக்கு மீறி தறிகெட்டு ஆணவபேயாட்டம் போட்டுக்கொண்டு இருந்தது. இதனால் வழிபாட்டு சுதந்திரம் என்பதை கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவனும் ஒவ்வொரு மதத்தை உருவாக்கினார்கள். மதங்களை மட்டுமல்ல புதிது புதிதான பல கடவுள்களை உருவாக்கவும் ஆரம்பித்தனர். தகுதி இல்லாதவன் கூடத் தன்னை தீர்க்கதரிசி என்று பிரகடனப்படுத்திக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினான். தானே கடவுள் என்று ஒரு சாராரும், தன் ஒருவனுக்காகவே உலகமானது படைக்கப்பட்டு இருக்கிறது என்று வேறொரு சாராரும் கூறிக்கொண்டு ஏதென்ஸ் நகர தெருக்களில் பவனி வர ஆரம்பித்தனர்.

  அதே நேரத்தில் மதகுருமார்கள் பொருந்தாத பல சடங்குகளை நவநவமாக உற்பத்தி செய்து மக்கள் மத்தியில் பரப்பி வந்தார்கள். அரசியல்வாதிகளும் தங்களது பங்களிப்பாக பல விபரீத கொள்கைகளை மேடை ஏற்றிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஏதென்ஸ் நகர பிரஜையும் தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டு கொண்டு இருந்தனர் என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையில் சிறந்த அரசு எது? சிறந்த பண்பு எது? சிறந்த மனிதன் யார்? என்று கேள்வி எழுப்பிய சாக்ரடீஸ் பெருந்தீனிக்காரர்களின் வாயில் சிக்கிய கல்லைப் போல் உருத்தினார்.
 
  சாக்ரடீஸ் மட்டும் தனது அறிவாற்றலை வாதத்திறமைகளை ஆட்டம் போட்ட மக்களை ஊக்குவிக்கவும், ஆட்சியாளர்களின் அராஜகங்களுக்கு சாமரம் வீசவும் மதவாதிகளின் பேய் உரைகளுக்கு பன்னீர் தெளிக்கவும் பயன்படுத்தி இருப்பாரென்றால் கிரேக்கத்தின் தன்னிகரற்ற சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பட்டிருப்பார்.
   
ஆனால் அவர் தனது திறமைகளை தன் சுயலாபத்திற்காக பயன்படுத்த விரும்பவில்லை. பல கடவுளை உருவாக்கிய பேதைகளின் முன்னால் ஒன்றே கடவுள் என்றார். அதிகார சூறாவளியாக தாக்கவந்த அரசியல்வாதிகளிடம் அறிவுடையவனே ஆளத்தகுதி பெற்றவன் என்றார். போலி மதவாதிகளிடம் மரணம் என்பது வந்தே தீருமென்றால் அதைக்கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்றார். இதனால் அதிகார வர்க்கம் அவரை நாத்திகன் என்றது. இளைஞர்களைக்கெடுக்கும் மாயக் கிழவன் என்றது. கடவுள்களின் ஜீவிதத்தை முடிக்க வந்த நஞ்சு மலை என்றது.

    இந்த விமர்சனங்களையெல்லாம் கண்டு அஞ்சாத சாக்ரடீஸ் என்ற தத்துவ கிழவன் கொள்கை குன்றாக உயர்ந்து நின்றானே அல்லாது கூனி குறுகி பெட்டிப்பாம்பாக அடங்கி போகவில்லை.    தெய்வ பக்தி இல்லாதவர் என்றும் இளைஞர்களை தீய வழிகாட்டி கெடுப்பவர் என்றும் குற்றச்சாட்டை இவர் மீது ஆட்சியாளர்கள் ஏவுகனைகளாக வீசியபோது அந்த கணைகளை அறிவு கம்பீரத்தோடு ஏற்றுக் கொண்டு தனது பெருமை ஒளி பொருந்தியதாக திகழும் வண்ணம் எழுந்து நின்றார்.

   ஏதென்ஸ் நகரத்தை விட்டு போகிறேன் என்று ஒரு வார்த்தை இவர் சொல்லி இருந்தால் தனது உயிரை இவர் காப்பாற்றி இருக்க கூடும் ஆனால் தனக்கு யாவற்றையும் தந்த ஏதென்ஸ் நகரத்தை விட்டுத்தான் அகலக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தான் பிறக்கவும் நடமாடவும் தனது உடலை தந்த ஏதென்ஸ் நகர நிலமாதாவைத் தொட்டுக்கொண்டு இருப்பதே தனது பிறப்புரிமை என்றார்.
 
  உலகப் பொருள்களின் போக்கிலும் வாழ்க்கையின் நடைமுறையும் பலவிதமான வேறுபாடுகளையும் முரண்பாடுகளை நிறைந்ததாக இருப்பதை நன்கு அறிந்த சாக்ரடீஸ் அனைத்து விதமான மாறுபட்ட சூழ்நிலைகளை சாக்ரடீஸ் ஒரு பொதுத் தன்மையை உருவாக்க வேண்டும் என்று புது சித்தாந்தத்தை உருவாக்கினார்.

    இறைவன் படைப்பிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தனித்தனி விருப்பு வெறுப்பு உடையவனாகவே திகழ்கிறான் அதாவது ஆயிரம் மனிதன் என்றால் ஆயிரம் சுபாவங்கள் உண்டு ஆனால் ஒவ்வொரு மனிதனிடமும் ஏதாவது  ஒரு வகையில் ஒரு பொது தன்மை இருக்கும் அந்தப்பொது தன்மையை கண்டறிந்து அது வளர்வதற்கு அறிஞர்கள் வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
 
   நல்லொழுக்கம் என்ற ஒரே வார்த்தையில் பலவிதமான ஒழுக்க முறைகளைக்கொண்டு வந்து விடலாம் கள்ளுண்ணாமை, பிறன் மனை நோக்காமை நீதி வழுவாமை என்று ஒழுக்கங்களை வரிசைப்படுத்திக் கொண்டே போனால் அந்த வரிசைகான அடிச்சுவடு நேர்மை என்ற ஒன்றாகவே அமையும். இந்த நேர்மையை சாக்ரடீஸ் சுத்தமான அறிவு என கருதினார் ஒழுக்கங்களின் ஒட்டு மொத்த வடிவமாகத் திகழும் நேர்மையாளன் எந்த வகையிலும் எந்த நிலையிலும் தவறிழைக்க மாட்டான் என்று அவர் நம்பினார். அதனாலேயே அத்தகைய சுத்த அறிவு பெற்றவர்களே ஆட்சியாளர்களாக இருக்கும் தகுதியைப்பெறுகிறார்கள் என்று முழக்கம் செய்தார்.
  
  அக்காலத்திய ஏதென்ஸ் நகர ஆட்சிமுறை பெரும்பான்மையரின் ஆதரவு என்ற அமைப்பில் நடந்து வந்தது அதாவது அரசாங்கம் ஒரு திட்டத்தைக்கொண்டு வந்தால் அது மக்களுக்கு நன்மை செய்யுமா? செய்யாதா? அத்திட்டம் நீண்ட நாள் பயனுடையதாக இருக்குமா? இருக்காதா? தற்கால சூழலில் அத்திட்டத்தை நடைமுறைபடுத்தலாமா? வேண்டாமா? என்றெல்லாம் யோசிக்காமல் இன்றைக்கு உள்ள அரசாங்கங்கள் மெஜாரிட்டி பலம் தங்களிடம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக அரசியல்வாதிகளின் சொந்த வங்கி கணக்குகளின் தொகையை அதிகரிப்பதற்காகவே எந்தத்திட்டத்தையும் நிறைவேற்றி சுயலாபம் தேட முயற்சிப்பது போலவே அன்றைய ஏதென்ஸ் நகர அரசும் இருந்தது எனலாம்.

    எந்த ஒரு செயல் திட்டத்தையும் சீர்தூக்கி பார்க்காமல் சாதக பாதக நிகழ்வுகளை ஆராயாமல் சிந்தனையும் அறிவும் இன்றி கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்து ஆட்சி நடத்தும் கும்பலாட்சி முறைக்கு இன்றைய காலத்தைப்போலவே அன்றும் மக்களாட்சி என்ற அலங்கார பெயர் வைக்கப்பட்டிருந்தது. விஷம் தடவிய குத்து வாளை தங்க உறையினுள் போட்டு வைப்பது போன்ற போலித்தனமான மக்களாட்சியை சாக்ரடீஸ் எதிர்த்தார்.

  சிந்தனைத் திறனும் அறிவுக் கூர்மையும் இல்லாதவர்கள் தங்கள் பதவி நாற்காலிகளை விட்டுவிட்டு வியாபாரம் செய்யச்செல்லலாம் என்பதோடு நேர்மையும் நற்பண்பும் உடையவர்களே ஆட்சிக்கு வரவேண்டும் என்று வலியுறுத்திய சாக்ரடீஸ் அத்தகைய நேர்மையாளர்களை உருவாக்கும் பயிற்சி சாலைகளை நாடெங்கும் அமைக்க வேண்டும் என்றார்.
 
  சாக்ரடீஸின் இந்த கருத்து இன்று நடைமுறையில் உள்ள மக்களாட்சிக்கு புறம்பானதாகவும், எதிரானதாகவும் தோன்றும். ஏன் என்றால் யார் நேர்மையாளன் என்று எப்படி உறுதி செய்வது அல்லது அவர்களை எப்படி உருவாக்குவது என்ற சிக்கலான பிரச்சினைகள் தோன்றக்கூடும். ஆனால் நாம் சாக்ரடீஸின் கண்ணோட்டத்தோடு நேர்மையாளர்களின் அரசு என்பதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தனது பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ளும் பொழுது சட்டங்களுக்கும் தர்மத்திற்கும் தலை வணங்கும் தலைமுறையினர் தோன்றுவார்கள் அப்படி புரட்சிகரமான ஒரு தலை முறையினரை உருவாக்க ஒட்டு மொத்த நாடும் ஒருங்கிணைந்து செயல்படும்போது சாக்ரடீஸ் விரும்பிய நேர்மையாளர்கள் நிஜமாகவே உருவாகுவார்கள்.
   
   தான்தோன்றித் தனமாக ஆட்சி அதிகாரத்தை சுவை பார்த்துக் கொண்டிருந்த ஏதென்ஸ் அரசும் தங்களது பொய் மூட்டைகள் இனியும் பலன் தராது போய்விடுமோ என்று அஞ்சி நடுங்கிய சமய வாதிகளும் சாக்ரடீஸ தேசத்துரோகி, நாத்திகன் என்று குற்றம் சாட்டி எம்லாக் என்ற கொடிய விஷத்தை கொடுத்து சாகடிக்கும்படி கட்டளையிட்டது.

     மரணத்தை கண்டு சாக்ரடீஸ் அஞ்சவில்லை. தனது மரணதண்டனையை அறிந்தவுடன் புன்முறுவல் பூத்த அவர் நாம் கடவுளுக்குக் செய்த தொண்டைவிட ஒரு நாட்டிற்குச் செய்த நன்மை பெரிதென்று நம்புகிறேன். ஏனெனில் உங்கள் எல்லோரையும் கிழவர்களையும், இளைஞர்களையும் உடலை பற்றியும் சொத்தை பற்றியும் எண்ணங்களை செலுத்த வேண்டாம் என்றும் முதன்மையாகவும் முக்கியமாகவும் ஆத்மாவின் பரிபக்குவ வளர்ச்சிக்கு கவனம் செலுத்தும்படியும் உங்களைத் தூண்டி இருக்கிறேன் இதைத்தவிர வேறொன்றையும் உங்களுக்கு நான் செய்யவில்லை.

    சிறந்த பண்பு ஒன்றே சகல செல்வத்தையும் தரும் கருவியாக இருக்கிறது என்று நான் உங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். இத்தகைய எனது போதனை இளைஞர்களை கெடுத்து சீர் அழிக்கிறது என்று அரசாங்கம் குற்றம் சாட்டினால் இந்த குற்றத்தை ஆயிரம் முறை செய்யத்தயாராக இருக்கிறேன். என்னை இந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தாலும் சரி விடுதலை செய்யாமல் போனாலும் சரி என்னுடைய நெறிகளை போதனைகளை ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் போதனை செய்யும் என் மனமும் நாக்கும் எனது உயிர் பிரிந்தால் மட்டுமே ஓய்வெடுக்கும் பலமுறை நான் சாகடிக்கப்பட்டாலும் எனது பதில் இதுதான் என்று கேட்போரெல்லாம் மெய்சிலிர்க்கும் வண்ணம் சங்கநாதம் செய்தார் சாக்ரடீஸ்.

அரசாங்கம் தீர்ப்பளித்த படியேதான் சாக்ரடீஸின் மரணகாலம் அமைந்ததா? ஞானமும் அறிவும் ஒருங்கே வடிவெடுத்த சாக்ரடீசை காப்பாற்ற செல்வாக்கு மிக்க அவர் சீடர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லையா?




    அரசாங்கத்தின் தீர்ப்பினைக்கேட்டு அவரது மாணவர்கள் திகைத்து போனது என்னவோ உண்மைதான் ஆனாலும் அரசாங்கத்திற்கு மதிப்பளித்து, மதிப்புமிக்க சாக்ரடீஸின் இன்னுயிரை பலிகொடுப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. அறிவுச் சுடர் வீசும் தங்களது ஆச்சார்ய பெருமகனை கொடுஞ் சிறையிலிருந்து எப்படியும் தப்புவிக்கச்செய்து அண்டை நாடுகளில் எதாவது ஒன்றில் அவரை பாதுகாப்பாக தங்கவைக்க வேண்டுமென்று முடிவு செய்து சிறைக்காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர் தப்பிச்செல்ல ஏற்பாடுகளை செய்தனர்.

    ஆனால் நேர்மையின் வடிவமான சாக்ரடீஸ் அதை ஏற்கவில்லை. ஒவ்வொருவனும் தனது தனித்திறமைகளால் அரசாங்கத்தின் கட்டளையை மீறுவதற்கும் முறியடிப்பதற்கும் முயற்சி செய்தால் அரசாங்கம் என்ற அமைப்பே இருக்க முடியாது. இதனால் சமூக கட்டமைப்பும் கட்டு திட்டங்களும் சிதைந்து சின்னாபின்னமாகிவிடும். அரசுக்கு எதிரான கருத்துகளை ஊரெல்லாம் சொல்லலாமே தவிர அதனுடைய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல் மீறி செல்வது நல்ல குடிமகனுக்கு அழகாகாது என்று தன்னை தப்புவிக்கச்செய்யும் பெரும் முயற்சியை தடுத்து நிறுத்தினார்.


  தங்களது சுய செல்வாக்கினால் சிறைச்சாலைகளைக்கூட நட்சத்திர விடுதிகளாக்கி  கொள்ளும் இன்றைய அரசியல்வாதிகள் சாக்ரடீசுக்கு முன்னால் ஒரு அருவெறுப்பான புழுவிற்கு கூட சமமாக மாட்டார்கள். அவரின் இறுதி நிமிடத்தை பற்றி விரிவாக கூறுங்கள்?


   சாக்ரடீஸ் மரண தேவனின் மாளிகைக்குள் செல்லும் கடைசி நிமிடத்தை அவரின் தலைசிறந்த சீடன் பிளாட்டோ தமது பேய்டோ என்ற உரையாடல் நூலில் ஒரு சோக நாடகத்தில் உச்ச காட்சியாக வர்ணனை செய்கிறார்.    சிறைச்சாலை அவரின் சீடர்களால் நிரம்பி வழிகிறது. கண்ணீர் வடியும் முகங்களோடு கூப்பிய கரமும், கெஞ்சும் விழிகளாக சீடர்கள் மண்டியிட்டு நிற்கின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் மரணம் தன்னை தழுவப் போவதை அறிந்தும் கலங்காமல் சிரித்த முகத்தோடு அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார் சாக்ரடீஸ். அப்போது அவர் நிலை பிணமேடைக்குச்செல்லும் மனிதனாக இல்லை மணமேடைக்கு செல்லும் புது மாப்பிள்ளையாக நிற்கிறார்.
  
  மரண தண்டனையை நிறைவேற்றும் அரசாங்க சிப்பந்தி விஷகோப்பையுடன் அவரின் முன் வந்து மண்டியிடுகிறான். அரசின் ஆணைக்கு அடிபணியும் சாதாரண ஊழியன் நான் விஷத்தை கொடுப்பதனால் என்னைக் குற்றவாளியாகக் கருதாதீர்கள் உங்களை குற்றவாளி என்று தீர்ப்பெழுதி என்னை இந்த வேலைக்கு அமர்த்திய அரசு நிர்வாகமே முழுமையான குற்றவாளி ஆகும். என்னை தயவுசெய்து மன்னித்துவிடுங்கள் என்று கண்களில் நீர் சுரக்க கைகளும உடம்பும் கிடுகிடுக்க நச்சுக்கோப்பையை சாக்ரடீஸ் என்ற பனிநிலவுக்கு முன்பு நீட்டினான்.
  

 விஷத்தை கையில் வாங்கிய அறிவே வடிவான அன்பு மகன் சாக்ரடீஸ் சலனமடையவில்லை கையில் இருக்கும் சாவின் சாவியை பார்த்து அச்சம் அடையவில்லை. அவர் வார்த்தையில் கூட நடுக்கம் இல்லை. சிறைக்காவலரே நீர் உம் பணியை செய்கின்றீர் நான் எம் பணியைச்செய்கிறேன். இந்த உதவிக்கு நான் பெரிதும் நன்றி பாராட்டுகிறேன். இந்த விஷத்தை எப்படி அருந்த வேண்டுமென்று எனக்கு கூறுங்கள் என்றார்.
   
    கூடிய இருந்த கூட்டம் விம்மல் ஒலிகளால் அதிர்வு கண்டது. மரணத்தை கூட மகிழ்வோடு ஏற்கும் சாக்ரடீஸின் மாண்பினை கண்டு மலைத்துப்போனது. ஆனாலும் இன்னும் சிறிது நேரத்தில் தங்களது ஆச்சார்ய பெருமகனார் சாவு என்னும் மீளாத் துயிலை ஏற்க போகிறாரே என்று எண்ணி நெஞ்சு வெடித்து அமைதியாக அழுதது.
  
    நஞ்சை கொடுத்த சிப்பந்தி சாக்ரடீஸிடம் சொன்னான். ஐயா விஷத்தை குடித்துவிட்டு நடந்துகொண்டே இருக்கவேண்டும் எம்லாக் என்ற இந்த விஷம் மனிதனை உடனடியாக சாகடிக்காது. கொஞ்ச நேரத்தில் கால்கள் உணர்வு இழந்து மறுத்து போகும் அதன்பின் உங்களால் நடக்க முடியாது. இன்னும் சிறிது நேரத்தில் இடுப்புக்கு மேல் கழுத்துக்கு கீழ் உள்ள அனைத்து உறுப்புகளும் மறுத்து போகும். உட்கார முடியாமல் படுத்துவிடுவீர்கள் இதயத்தின் இயக்கம் நொடி நொடியாகக்குறையும் சுவாச உறுப்புகள் செயல்பட மறுக்கும். மூச்சுத்திணறலும் மூளையில் கொதிப்பும் ஏற்படும் அடுத்த சில வினாடிகளில் உயிர்ப்பறவை பறந்து போகும். இப்படி சொன்ன சிப்பந்தி துக்கம் தாளாது. நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்துவிட்டான். அப்போதும் கூட சாக்ரடீஸின் முகமலர்ச்சி குறையவில்லை நாடாள வா என்று ராமனை அழைத்தபோது அவன் முகம் எப்படி மலர்ந்து இருந்ததோ காடாள போ எனும்போது ராமனின் அழகு வதனம் எப்படி வாடவில்லையோ அப்படியே இருந்தது சாக்ரடீஸின் முகம்.
 
    இத்தனை நேரம் சற்றேனும் அமைதி காத்த மாணவர்களின் மனம் மடைதிறந்த வெள்ளம் போல் கண்ணீரைக்கொட்டி அழத் துவங்கியது. அவர்களைப்பார்த்து அழுவது ஆண்மைக்கு அழகல்ல. நான் அழுகையும் ஒப்பாரியும் கேட்டு சாக விரும்பவில்லை எனது மனம் அமைதியான சூழலில் மரணத்தை முத்தமிட விரும்புகிறது என்றார். அவரின் இறுதி கட்டளை சீடர்களை கல்லாக சமைத்தது.
  
   ஆழ்ந்த அறிவையும், அழகான மொழிகளையும் பேசிய அவரது திருவாய் விஷத்தை அருந்தியது. நஞ்சு உடலில் பரவ நடந்தார். நடக்கும்போது தன் உடம்பிற்குள் விஷம் புகுந்து என்னென்ன உணர்ச்சிகளை விளைவுகளை தருகிறது என்பதை ஒன்று விடாமல் பேசினார். கால்கள் துவள தரையில் அவர் தத்துவ உடல் சாய்ந்தது. அரசின் ஆணைக்கு அடிபணிந்து விஷம் அவர் உடலுக்குள் உயிரை நாலாபுறமும் வலைவீசித் தேடியது அதன் தேடல் பரவ பரவ குளிர்ச்சியான சிந்தனைகளை நெருப்புபோல் உலாவிட்ட சாக்ரடீஸின் முதிய உடல் சில்லிட்டது. நஞ்சு இதயத்தைத்தொடும் வரை அவர் பேசிக் கொண்டே இருந்தார். சுவாச கோசம் இறுகி மூச்சு காற்றுக்கு தத்தளித்த போது கிரிட்டோ, அசிலிபியஸ் தேவதைக்கு சேவல் ஒன்று கடன் பட்டிருக்கிறேன். என்கடன் தீர்ப்பாயா? என்று மெல்லிய குரலில் முனுமுனுத்தார். தங்கள் கடனை நிச்சயமாக தீர்க்கிறேன். வேறு செய்திகள் என்ன? என்று கேட்டான் அவர் சீடன் கிரிட்டோ, பதில் சொல்வதற்கு சாக்ரடீஸ் அங்கு இல்லை. இதுவரை அவர் உபதேசித்த நேர்மையின் ஒரே வடிவமான இறைவனின் திருக்கரங்களில் குழந்தையாக மாறி மூட சமூகத்தை பார்த்து சிரித்து கொண்டிருந்தார் சாக்ரடீஸ்.
  
   இத்தகைய அறிவுச் செறிவும் ஆத்மபலமும் ஒருங்கே கொண்ட சாக்ரடீஸ நான் கௌதம புத்தரை விடவும் ஏசுநாதரை விடவும் ஏன் உலகில் தோன்றிய இனி தோன்றப்போகிற அனைத்து ஞான புருஷர்களைவிடவும் உயர்வானவராகவும் மதிப்புமிக்கவராகவும் வணங்கத்தக்கவராகவும் கருதுகிறேன்.
    அவர் மட்டும் கிரேக்கத்தில் பிறக்காமல் இந்தியாவில் பிறந்திருந்தால் இறைவனின் அவதாரம் என்று வர்ணிக்கப்பட்டு வணங்கப்பட்டிருப்பார். நம் நாட்டில் இல்லாமல் யூதர்கள் மத்தியில் அவர் பிறந்து இருந்தால் தீர்க்கதரிசி என்று புகழ்ப்பட்டு இருப்பார். அங்கு இல்லாமல் அரேபியாவிலோ, ஈரானிலோ அவர் பிறந்து இருந்தால் இறைவனின் முழு பெரும்தூதர் என்று போற்றப்பட்டு இருப்பார்

   அவதாரம் என்றும் தீர்க்கதரிசி என்றும் இறைதூதர் என்றும் சொல்லப்படுகின்ற அனைத்து தகுதிகளும் மற்ற எல்லோரையும்விட இவரிடம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் இவர் ஐரோப்பாவில் பிறந்ததினால் ஒரு நல்ல ஆசிரியர் என்றே அழைக்கப்படுகிறார். இது இவரின் வரமா? சாபமா? என்று தெரியவில்லை.

     சாக்ரடீஸ் ஒரு தத்துவ ஞானி அதில் உலகத்தவர் எவருக்கும் எந்த ஐயப்பாடு இல்லை அப்படி இருக்கும்போது அவரை அவதாரம் என்றோ இறை தூதர் என்றோ அழைப்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது? ஆன்மீக உலகம் அறிவாற்றலை மட்டும் பார்ப்பதில்லை. சில அதீத சக்திகளையும் அதாவது இயற்கையை தாண்டிய சக்திகளையும் எதிர்பார்க்கிறது அப்படி எதுவும் சாக்ரடீஸிடம் இல்லையே அதனால் அவரை ஆசிரியர் என்று அழைப்பதில் என்ன தவறு?



    அவரை ஆசிரியர் என்று அழைப்பதில் எந்த தவறையும் நான் பார்க்கவில்லை. ஆனால் அதீதமான சக்தி படைத்தவர்கள் தான் ஆன்மீகவாதிகள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீரில் நடப்பதும், சூரியனை மறைப்பதும், நோய்களைத் தீர்ப்பதும்தான் அவதாரங்களின் லட்சணம் என்றால் இதை ஒரு சாதாரணமோடி மஸ்தான் கூட செய்துவிடுவான். அதிசயங்களை நிகழ்த்து வது சித்துக்களை காட்டுவது ஆன்மீகம் அல்ல.

   தன்னைத்தான் உணர்ந்து மற்றவர்களையும் அப்படியே உணரச் செய்வது     தான் ஆன்மீகமாகும். அந்த வகையில் சாக்ரடீஸ் ஒரு முழுமையான நிறைவான ஆன்மீகவாதி என்பதிலும் அவரே மிகச்சிறந்த இறைநேசர் என்பதிலும் எந்த மாற்றமும் கிடையாது. சாவைக்கூட புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் உயரிய மாண்பு ஆன்மவியலை அறிந்து கொண்டவர்களுக்கே முடியும். வெறும் தத்துவவாதிகள் பேசுவதில் காட்டும் முனைப்பை செயலில் காட்டுவது இல்லை.


வெங்கட்ராமன் M.Tech







Contact Form

Name

Email *

Message *