Store
  Store
  Store
  Store
  Store
  Store

தேவதாசிகளை கற்பழித்த சமூகம்


    ரண்டு நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் சங்காபுரத்திற்கு  பக்கத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து இளைஞன் ஒருவன் என்னை பார்க்க வந்திருந்தான்.  உனது கிராமத்தின் பெயர் என்னவென்று அவனிடம் கேட்டேன்.  அவன் சுற்றி வளைத்து வேறு பல விஷயங்களை பேசினானே தவிர எனது கேள்விக்கு பதிலை சொல்லவில்லை.  அவனை நான் விடுவதாகயில்லை.  எப்படியும் அவன் கிராமத்தின் பெயரை  தெரிந்து கொள்வதென்று முடிவு செய்து வற்புறுத்தி கேட்டேன்.  மிகவும் தயங்கி தயங்கி தேவர்யடியார் குப்பம் என்று சொன்னான் .

    உனது கிராமத்தின் பெயர் நன்றாகத் தானே இருக்கிறது.  அதை சொல்வதற்கு ஏன் தயங்கிகிறாய்?  என்று நான் அவனை கேட்டபோது எங்கள் ஊரின் பெயர் தேவர்யடியார் குப்பம் என்றாலும் நடைமுறையில் அதை தேவடியாள்குப்பம் என்று தான் அழைப்பார்கள்.  அந்த வார்த்தையை சொல்வதற்கு எனக்கு கூச்சமாக இருந்ததினால் தான் சொல்ல தயங்கினேன்.  என்று கூறினான்.  ஊர்ப்பெயரை சொல்ல முடியாத அந்த இளைஞனை பார்த்து எனக்கு வருத்தமாகயில்லை.  கடவுளுக்கு அடியவர், இறைவனுக்கு தொண்டு செய்பவர் என்று பொருள்பட உள்ள தேவர்யடியார் என்று அழகான வார்த்தை கொச்சைப்படுத்தபட்டு உச்சரிக்க கூட தகுதியில்லாத அளவிற்கு தரம் தாழ்த்திய சமுதாயத்தை நினைத்து வருத்தமாகவும் இருந்தது,  ஆத்திரமும் வந்தது.
    தேவதாசி என்ற வடமொழி சொல்லின் தமிழ் வடிவமே தேவர்யடியார் என்பதாகும்.  இசை, நடனம் ஆகிய கலைகளின் மூலமும்,  ஆலயத்திற்கான உளவாற பணி மூலமும் சேவையாற்றும் உயர்ந்த நிலையில் உள்ள பெண்களை மனிதர்களின் ஆதிக்க உணர்வால் பாலியல் பொருளாக ஆக்கப்பட்டதை நினைத்து வேதனை அடையாமல் இருக்க முடியாது.  ஒரு சிலர் தேவதாசி முறையானது இந்து மதம் அதிகார பூர்வமாக நடத்திய பாலியல் பலாத்காரம் என்று உரக்க பேசுகிறார்கள்.  வேறு சிலரோ இந்து மதம் என்பதே எளியவர்களை வலியவர்களுக்கு பலி கொடுக்கும் சிறை கூடம் என்றும் கூச்சல் இடுகிறார்கள்.  மாற்று கருத்துவுடையவர்களின் எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்லும் இந்துக்கள் இந்த தேவதாசி வாதத்தை கையில் எடுத்ததும் பதில் பேச முடியாமல் பலர் மௌனமாகி விடுகிறார்கள்.  அதற்கு காரணம் பதில் சொல்ல பயம் என்பதில்லை.  பதில் சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு தேவதாசி முறையை பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்பதே ஆகும்.

    தேவதாசி முறை என்பது ஆதிகாலத்தில் இந்தியாவில் இருந்தது மட்டுமல்ல.  உலகம் முழுவதுமே நடைமுறையில் இருந்திருக்கிறது.  கணித்து கூற முடியாத மிக பழைய காலம் தொட்டே இறை பணிக்கென்றே தங்களை அர்பணித்துக் கொண்ட கலைஞர் கூட்டம் இருந்திருக்கிறது.  இந்தியாவின் தொன்மை நாகரீகம் என்று போற்றபடுகின்ற சிந்து சமவெளி நாகரீகத்தில் நடனம் என்பது முக்கிய அங்கமாக இருந்திருக்கிறது.  அங்கு கண்டெடுக்கப்பட்ட வெண்கலத்தில் செய்யப்பட்ட நாட்டிய தாரகையொருத்தின் நேர்த்தியான சிலை வடிவம் அதை நமக்கு பளிச்சென அறிமுகப்படுத்துகிறது இந்துக்களின் மிக பழைய இலக்கியமான ரிக் வேதத்தில் துவங்கி மற்ற வேதங்களிலும் நடனம் நடன மாது போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.
    மிக குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வைகறை தெய்வம் என்ற உஷாவை வர்ணிக்கும் ரிக் வேதம், அவளது ஆடை அலங்காரத்தை நடனமாடும் பெண்களின் அலங்காரத்தோடு ஒப்பிடுகிறது.  இன்னும் சொல்வதென்றால் உஷா ஒரு ஆடல் அரசியாகவே வர்ணிக்கப்படுகிறாள்.  வேதங்களுக்கு பிறகு உருவாகிய இதிகாசங்கள்,  புராணங்கள் மற்றும் பல காப்பிய நூல்கள் வரலாற்று சாசனங்கள் உஷாவை நடனமாதாகவே நமக்கு காட்டுகிறது.  நம் நாட்டில் மட்டுமின்றி பழைய கால நாகரீகத்தில் சிறந்து விளங்கிய சுமேரிய,  பாபிலோனிய நகரங்களில் நாட்டியமாடும் பெண்கள் வழிபாட்டு கூடங்களில் இறைபணிக்காக தங்களை அர்பணித்து கலை சேவை செய்ததாக ஆதாரங்கள் உள்ளன.

   தேவதாசி என்ற வார்த்தை இந்தியாவில் பல இடங்களில் பலவிதமாக பயன்படுத்த படுகிறது.  ஆந்திர பகுதியில்  இவர்களை மாதங்கி அல்லது விலாசினி எனவும்,  கொங்குனியில் நாயகி எனவும்,  மராட்டியத்தில் பாசவி எனவும்,  கர்நாடகாவில் சூலி, சானி எனவும்,  ஒரிசாவில் மக எனவும், உத்திரபிரதேசத்தில் பாவினி எனவும் அழைக்கப்படுகிறார்கள் சங்ககால தமிழ் நூல்கள் இக்கலை மாதர்களை பதியிலாள்,  மாணிக்கம்,  தளிச்சேரி பெண்டுகள் எனவும் அழைக்கின்றனர், இந்த பெயர்களின் அர்த்தத்தை மேலுட்டமாக பார்த்தலும் சரி, ஆழ்ந்து அகண்டு பார்த்தாலும் சரி எந்தொரு வார்த்தையும் அவர்களை இழிவு படுத்து தொனியில் இருக்காது.  மாறாக கௌரவபடுத்தும் விதத்திலேயே அமைந்திருப்பதை காணலாம்.
      இந்து மதத்தில் வேதங்களுக்கு இணையாக ஆகமங்கள் கருதப்படுகிறது.  சைவ சமயத்திற்கு என்றும்,  வைஸ்ணவத்திற்கு என்றும் தனிதனியான ஆகமங்கள் உண்டு, இந்த ஆகமங்கள் அனைத்துமே தேவதாசி பெண்களை ருத்திர கண்ணிகை என்றே பெயரிட்டு அழைக்கிறது.  மேலும் இவர்களின் பண்புகளை பற்றி கூறும் ஆகமங்கள் உடலாலும், மனதாலும் தூய்மை,  சொல்லாலும் செயலிலும்,  அறிவிலும் பொறுமை, தோற்றத்தில் இளமை மென்மை,  உடைவர்கள் என்று ரௌரவ ஆகமம் இலக்கணம் வகுத்து தருகிறது.  பரத முனிவன் நாட்டிய சாஸ்திரம் வாஸ்த்தியணரின் காமசூத்திரம் மற்றும் வீராகமம் ஆகிய நூல்கள் தேவதாசிகளின் பெருமையை இன்றும் பறைசான்றுகிறது.

    சைவ சமய குறவர்கள் என்று போற்றபடுகின்ற மூவரில் முதன்மையானவரான திருநாவுக்கரசர் சாமிகள்.

  அருமணித்தடம் பூண் முலையரம்பையரொ டருளிப் பாடியர்
  உமையிற்றொழுவர் உருத்திரபல் கணத்தார்.


    என்று அழகு தமிழில் போற்றிபாடுகின்றார்.  சுந்தரமூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியார் என்பது நமக்கு தெரியும்.  இவர்கள் இருவரின் காதலுக்கு சிவபெருமானே தூதாக சென்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.  இந்த பறவை நாச்சியார் யார் என்றால் ஒரு நடனமாது,  அதாவது தேவதாசி தேவதாசிகளின் நிலை அன்று மிக உயர்வாக இருந்தற்கு இதுவே சரியான எடுத்துகாட்டு.
     தேவதாசி பரம்பரையில் இரண்டுவகை உண்டு,  முதலாவது வகை பதியிலார் என்பதாகும்.  இந்த வகையை சார்ந்த பெண்கள் மனிதர்கள் யாரையும் கணவனாக ஏற்று கொள்ள மாட்டார்கள் இறைவனான மகாதேவனையே தனது பதியாக அதாவது கணவனாக ஏற்று வாழ்க்கையை நடத்துவார்கள் இதனால் இவர்களுக்கு நித்திய சுமங்கலிகள் என்ற பட்டமும் உண்டு.

     இரண்டாவது வகையான ருத்திர கன்னிகைகள் என்பவர்கள் இறைவனின் சன்னிதானத்தின் முன்னால் நாட்டியாஞ்சலி செய்தாலும் தனது மனங்கவர்ந்த கணவன் ஒருவனோடு இனிய இல்லறம் நடத்தியவர்களாக இருந்தார்கள்.  கணவன் இல்லாமல் வாழ்ந்தாலும், கணவனோடு குடும்பம் நடத்தினாலும் ஒழுக்கம் தவறிய வாழ்க்கையை ஆரம்பகால தேவதாசிகள் மேற்கொள்ளவில்லை. பல தேவதாசிகளை விபசாரிகளாக மாற்றியது பிற்கால சமூகமே ஆகும்.  அது எப்படி நிகழ்ந்தது என்று இன்னும் சிறிது நேரத்தில் சிந்திப்போம்.  அதுவரை அவர்களை பற்றி வேறொரு முக்கிய விஷயத்தை பார்ப்போம்.
    இன்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு சமுதாயத்தினரை தேவதாசி பரம்பரையினர் என்று சிலர் நம்பி வருகிறார்கள்.  அதாவது குறிப்பிட்ட ஒரு ஜாதியை சேர்ந்த பெண்கள் மட்டும் தான் தேவதாசிகளாக ஆக்கப்பட்டார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் இது உண்மையான நம்பிக்கையல்ல பல்வேறு ஜாதியை சேர்ந்த பெண்கள் தேவதாசிகளாக இருந்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.  ஆதிகால சமுதாயத்தில் குடும்பத்தில் பிறக்கும் முதல் பெண்ணை கோவிலுக்கு அர்பணித்துவிடும் பழக்கம் இருந்திருக்கிறது.  இந்த பழக்கம் அந்தணர்,  மறவர்,  வேளாளர் என்று ஜாதி வித்தியாசம் இல்லாமல் எல்லா மக்களிடத்திலும் அக்காலத்தில் உண்டு.  தாய் தந்தையர் இல்லாத பாதுகாக்க சரியான உறவினர்களும் இல்லாத பெண்களும் தேவதாசிகளாக ஆகியிருக்கிறார்கள்  இதனால் அவர்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த பெண்களாக கருத இயலாது. நாளாவட்டத்தில் தேவதாசி பரம் பரையினர் எண்ணிக்கை அதிகரித்ததினால் தங்களை ஒரு சமூதாயமாக அறிவித்து கொண்டார்கள் எனலாம்.
    ஆலயங்களில் தேவதாசிகளின் தொண்டுகள் என்பது சிறப்பு வாய்ந்தவைகள் மட்டுமல்ல,  புனிதமானவைகளும் ஆகும். காலை,  மாலை சந்தி பூஜைகளிலும்,  உச்சிகால பூஜையிலும் கடவுள் முன்னால் நாட்டியாஞ்சலி செய்வது தேவதாசியின் முக்கிய பணியாகும்.  அர்த்தஜாம பூஜைக்கு பிறகு மூர்த்தியை பள்ளிறைக்கு எடுத்து செல்லும் போதும் லாலி ஊஞ்சல்,   திருதாழ் அடைப்பு பாடல்களை பாடவேண்டும்.  சில பெரிய ஆலயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேவதாசிகள் இருந்தால் முறை வைத்து பணி செய்தனர்.  கோவிலுக்கு கோவில் சம்பிராதயங்களுக்கு ஏற்றவாறு நாட்டிய முறைகளும், பாடல் வகைகளும் வேறுபடலாம்,  ஆடல் பாடல் தெரியாத தேவதாசிகள் மாலை தொடுத்தல், பூஜை பாத்திரங்கள் சுத்தபடுத்துதல் போன்ற காரியங்களை செய்தனர்.  ஏறத்தாள தொன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தனர்களை போலவே தேவதாசிகளும் ஆலய கருவறைக்குள் வரை சென்று வந்தனர்.    இதற்கான ஆதாரங்கள் திருசெந்தூர் சுப்ரமணியர் ஆலயத்திலும் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திலும்  உள்ளது. 

    இந்து சமய கோவில்களில் மட்டுமின்றி பௌத்த விஹாரங்களிலும்,  ஜெயின பள்ளிகளிலும் தேவதாசிகள் பணிபுரிந்தனர்.  குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தில்  1024-ம் வருடம் கஜினி முகமது படையெடுத்து வந்த போது 500-க்கு மேற்பட்ட தேவதாசிகள் பணிபுரிந்திருக்கின்றனர் இவர்களில் பலரை கஜினி முகமது கடத்திக் கொண்டு போய் கற்பழித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.  தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் ராஜராஜ சோழன் காலத்தில் நானூறு தேவதாசிகள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.  சுசிந்திரம்,  திருவண்ணாமலை,  திருச்செந்தூர்,  போன்ற தமிழக பெரிய கோவில்களிலும் இலங்கையில் உள்ள தேவி நூவர ஆலயத்திலும்,  இந்தியாவில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் தேவதாசிகள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    தமிழகத்தில் உள்ள தேவதாசிகள் நாட்டியத்திலும்,  இசையிலும் மட்டும் கைதேர்ந்தவர்களாக இருக்கவில்லை,  சிறந்த மொழி அறிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.  தமிழ், சமஸ்கிருதம் உட்பட தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர்,  விநோதர மஞ்சரி என்ற நூலில் கவி சக்கரவர்த்தி கம்பன், ஸ்ரீ ரங்கத்தில் ராமாயணத்தை அரங்கேற்ற முற்பட்டபோது கோவில் அதிகாரிகள் உள்ளூர் புலவர்களின் சான்று கவி இருந்தால் தான் அனுமதி வழங்க இயலும் என்று கூறியபோது மீனாட்சி என்ற தேவதாசி சாற்று கவி வழங்கி ராமாயணம் அரங்கேற உதவி செய்ததாக கூறப்படுகிறது.  தஞ்சாவூரில் விஜய ராகவன் நாயக்கர் ஆட்சி நடந்தபோது அரசவை நாட்டிய மணியாக இருந்த சந்திர ரேகா என்ற பெண் சிறந்த கவிஞராகவும் இருந்திருக்கிறார் பெங்களூரை சேர்ந்த நாகரத்தினம்மா அவர்கள் சமஸ்கிருத மாநாட்டிற்கு தலைமை ஏற்கின்ற அளவுக்கு புலமை பெற்றிருந்தார்கள்.
     பொதுவாக எல்லா தேவதாசி பெண்களும் செல்வ செழிப்புடனே வாழ்ந்திருக்கிறார்கள். தங்களிடமுள்ள செல்வத்தை சுயநலத்திற்காக மட்டும் பதுக்கி வைத்து கொள்ளவில்லை.  தாங்கள் வாழ்ந்த பகுதிகளில் அன்னசத்திரங்கள் கட்டியுள்ளனர்.  பாசன வாய்கால்களை சீர்படுத்தி இருக்கிறார்கள்.  பல நூறு குளங்கள் தேவதாசிகளின் சொந்த செலவில் வெட்டப்பட்டு இருக்கிறது.  ராஜமுந்திரிக்கு அருகிலுள்ள இருகொண்டா என்ற ஊரில் ஒரு லஷ்மி நரசிம்மர் ஆலயம்,  லஷ்மி என்ற தேவதாசியால் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டதாக ஆலயகல்வெட்டு பறைசான்றுகிறது.  கி.பி.  பதினொராம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவாவூர் ஆலய தேவதாசியான பறவைநாச்சியார் அம்மையார் நன்கொடையாக நாணூற்றி இருபத்தெட்டு முத்துக்கள்,  பல கோடி ரூபாய் மதிப்புடைய ஏழு ரத்தினங்கள் முப்பத்தியாறு வைரங்கள்,  1500 சவரன் தங்க நகைகள் தியாகராஜர் ஆலயத்திற்கு கொடுத்ததாக கல்வெட்டு சான்று தருகிறது.

    ஆசிய ஜோதி என்று உலகமக்கள் அனைவராலும் அழைக்கப்படும் அன்பே வடிவான கௌதம புத்தர் தனது இறுதிகாலத்தில் கடைசி தானமாக அமிரபாலி என்ற தேவதாசி பெண்ணிடம் இருந்தே மாந்தோப்பு ஒன்றினை பெற்று தனது சங்கத்தில் ஒன்றை நிறுவினார் என புகழ்பெற்ற சீன பயணியான யுவாங் சுவாங் தனது நூலில் குறிப்பிடுகிறார்.  டெல்லியில் இருந்து மாலிக்பூர் என்ற முரட்டு முகமதிய தளபதி ஸ்ரீரங்கத்தின் மீது படையெடுத்து அரங்கநாதர் விக்கரகத்தை சேதப்படுத்த முயன்ற போது அம்சலேகா என்ற தேவதாசி பெண் சாதுர்யமாக மலிக்காபூரை வழிமாற்றி விட்டதாகவும் இதே போலவே திப்பு சுல்தான் சிதம்பரத்தின் மீது படையெத்து நடராஜர் விக்கிரகத்தை அபகரிக்க வந்த போது அவனிடமிருந்து வைப்பி என்ற தேவதாசி பெண் பாதுகாத்ததாகவும் சரித்திரங்கள் சான்று பகிர்கின்றன.  இப்படி தேவதாசிகளின் எத்தனையோ நற்செயல்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

    ஒரு ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்துவிட்டால் அவள் உடலை சாதாரண துணியால் மூடமாட்டார்கள்.  ஆலய மூல மூர்த்திக்கு போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து அவள் உடல் மீது போர்த்தப்படும்.  அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப்படும்.  இறுதி ஊர்வலத்திற்கு எடுத்து செல்லப்படும் அவளது உடல் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னால் சிறிது நேரம் நின்றே மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.  சாதாரண மனிதர்களுக்கு கிடைக்காத பெரும் பேராகிய ஆலய நெருப்பு எடுத்து செல்லப்பட்டே அவள் சிதை எறியூட்டப்படும்.  உடலின் அழகை விலைகூறி விற்கும் விலை மகள்ளாக அவர்கள் வாழ்ந்திருந்தால் இத்தகைய மரியாதை அவர்களுக்கு எப்படி கிடைக்கும்?  அல்லது இந்த மரியாதையை வழங்குவதற்கு பொதுமக்கள் எப்படி அனுமதிப்பார்கள்?  என்பதை சிந்தித்து பார்த்தால் தேவதாசிகளின் சமூக அந்தஸ்து எத்தகையது என்பது புரியும்.

      கோவில் திருவிழாக்ககளில் வீதி உலா வருகின்ற உற்சவ மூர்த்திக்கு கண் திருஷ்டி கழிக்கும் சிறப்பு தேவதாசிக்கு அக்கால சமூகம் வழங்கியிருந்தது.  அது மட்டுமல்ல அரசன் ஒருவன் புதிதாக மூடி சூட்டிக்கொள்ளும் சடங்கின் போது தேவதாசி வீட்டு வாசல் மண்ணெடுத்து வந்து அரசனின் இடுப்பில் பூசூம் வழக்கமும் இருந்தது.  சகுண சாஸ்திரமும் கூட தேவதாசியை நேருக்கு நேராக பார்ப்பது மங்களகரமான செயல் என்று வர்ணனை செய்கிறது.

    ஒழுக்க கெட்ட வாழ்க்கை வாழ்வதை இன்றைய சமுதாயம் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது அக்காலத்திய சமுதாயம் தேவதாசிகள் ஒழுக்க கெட்டவர்களாக இருந்திருந்தால் ஏற்று இருக்குமா?  ஏற்றுதான் இத்தகைய சிறப்பை அவர்களுக்கு கொடுத்து இருக்குமா?  கி.மு.  இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மிலிந்த பஞ்ஞ என்ற பாலிமொழி நூல் கற்பு ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய இந்துமதி என்ற தேவதாசி பெண் கங்கையின் போக்கையே தனது சாபத்தால் மாற்றினாள் என்று கூறுகிறது.  சிலப்பதிகாரத்தில் வருகின்ற மாதவியின் கற்பு  திறமும்,  அவள் மகள் மணிமேகலையின் துறவற சிறப்பும் நாம் அறிந்ததே,  இவ்வளவு சிறப்பு மிக்க தேவதாசி பரம்பரை இழிவு மிகுந்ததாக அவமான சின்னமாக எப்போது ஆனது எப்படி ஆனது?
     தேவதாசி பரபரையில் ஒழுக்ககேடு என்பது திடிரென்று ஏற்பட்டு விடவில்லை.  சிறிது சிறிதாக அந்த மரபு சீரழிந்து போக நமது சமூகமே காரணமாக இருந்தது.  ஆதிகாலத்தில் மூத்த மகளை தேவதாசியாக ஆக்கும் மரபு இருந்தது  என்பது நமக்கு தெரியும்,  நான் வசதி படைத்தவன் என் மூத்த மகளை தேவதாசியாக்க பிரியப்படவில்லை,  அதே நேரம் சமூக பழக்கத்தையும் விட்டுவிட நான் விரும்பவில்லை என்ற நிலை வரும் போது என் கையில் உள்ள பணம் என்னை குறுக்கு வழியில் சிந்திக்க தூண்டி விடுகிறது. 

   என் மகளுக்கு பதிலாக வேறொரு பெண்ணை தேவதாசியாக்கினால் என்ன,  என்று யோசிகிறேன்.  வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு ஆசை வார்த்தை காட்டி அந்த குடும்ப பெண்ணை விலைக்கு வாங்கி தேவதாசியாக்க விரும்புகிறேன் என்னை போல் இருக்கும் சமுதாய மேட்டு குடியினர் பலர் எனது விருப்பத்திற்கு உடந்தையாகயிருந்து ஆக்கமும்,  ஊக்கமும் தருகிறார்கள் இன்றைய காலத்தை போல தான் அக்காலத்திலும் சட்டமும் சமூக பழக்க வழக்கமும் வசதி படைத்தவர்களுக்கு உறுதுனையாக இருந்திருக்க வேண்டும்.  எப்போது வசதியற்ற பெண்களை விலைக்கு வாங்கலாம் என்ற நிலை உருவானதோ அப்போதே ஆண்டவனை மகிழ்விக்க நர்த்தனமாடும் தேவதாசி ஆண்டவனின் மறு வடிவமான அரசனையும் மகிழ்விக்க ஆடலாம் என்ற அவமான நிலை வந்துவிடுகிறது  தலைவனே தவறு செய்யும் போது தொண்டர்கள் செய்யும் தவறை தட்டி கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்.
     இப்படி நான் சொல்வது எனது சொந்த கற்பனையல்ல.  கி.பி.  1174-ல் சோழ நாட்டை அரசாண்ட ராஜாதிராஜ சோழ மன்னன் ஆட்சி காலத்தில் தன வணிகர் ஒருவர் நான்கு ஏழை பெண்களை 700 தங்க காசுகளுக்கு வாங்கி திருவாளங்காடு கோவிலுக்கு அர்பணித்ததாக கல்வெட்டு செய்தியொன்று உண்டு.  இதே போன்ற கல்வெட்டுகள் தமிழகத்தில் பல கோயில்களிலும் கிடைப்பதை வைத்து மேற்கண்ட முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது.  ஆயிரம் வருடங்களாக தேவதாசி மரபில் முறைகேடுகள் சிறிது சிறிதாக வளர்ந்ததினால்,  தேவதாசிகளின் கற்பு நிலையும் பல நேரங்களில் தவறி போய்விட்டது.  மன்னர்களும்,  குறுநில மன்னர்கள் என்ற ஜமின்தார்களும்,  பண்ணையார்களும்,  பல தேவதாசிகளை தங்களது காதல் கிழத்திகளாக வைத்து கொண்டனர்.  அப்போதைய காலத்தில் ஒரு செல்வந்தன் செல்வாக்கின் அடையாளமாக தேவதாசி உறவு பார்க்கப்பட்டது.


    தஞ்சாவூர் போன்ற நில உடமையாளர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த பகுதிகளில் பல தேவதாசிகள் வலுகட்டாயமாக பாலியல் தொழிலாளிகளாக ஆக்கப்பட்டனர்.  பாலியல் தொழிலில் ஈடுபட்ட மற்றவர்களும் கூட தங்களை தேவதாசிகள் என்று அழைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.  இதனால் தேவதாசிகளுக்கு பிறந்த பல குழந்தைகள் சமுதாயத்தால் அவமான சின்னங்கள் என்று பட்டம் கட்டி கொடுமைபடுத்தப்பட்டனர்.
     இது மட்டுமல்ல பல பணக்கார வீடுகளில் விருந்தினர்களை மகிழ்விப்பதற்காகவே பல ஏழை பெண்கள் கொத்தடிமையாக்கப்பட்டு  
பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாயினர்.  வயதான நோய்வாய்ப்பட்ட தேவதாசிகள் பிச்சையெடுத்து பிழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.  உன்னதமாக தெய்வீக மரபு என்பது மனிதனின் வக்கிர புத்தியால் சீரழிந்து சமுதாய அவமானமாக ஆகிப்போன நிலையில் அதை முற்றிலும் ஒழித்து கட்ட 1947-ம் வருடம் தமிழ்நாடு அரசு தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது.  மிக நீண்டகாலமாக தெய்வீகத்திற்கும் ஆடல் கலைக்கும் அருந்தொண்டாற்றிய ஒரு மரபு தனது கீழ்மையை தானே தாங்காமல் தன் கதையை முடித்து கொண்டது என்றே சொல்லலாம்.

    தேவதாசி என்ற சமூகம் இல்லாவிட்டால்  இன்று பரத நாட்டியம் என்ற கலையே முற்றிலும் அழிந்து போயிருக்கும்.  அவர்கள் ஆடிய சதிர், என்ற பரதமே  ஈ.கிருஷ்ண ஐயர்,  ருக்மணி தேவி அருண்டேல் போன்றோரால் செம்மைபடுத்தபட்டு இன்று நம் கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை தந்து கொண்டிருக்கிறது.  இன்று பரத நாட்டிய கலையில் உச்சத்தில் இருக்கும் கலைஞர்கள் சீர்காழி செல்லம் அம்மனி சகோதிரிகள்,  தஞ்சாவூர் சாரதாம்மாள், காரைக்கால் சாரதா அம்மாள்,  திருவாரூர் ஜானம்,  மதுராந்தகம் கெஜதாம்மாள்,  திருவாளபுத்துர் கல்யாணி,  பந்தநல்லூர் தங்கச்சி,  திருவாரூர் கமலம், மயிலாப்பூர் கௌரி திருநெல்வேலி முத்துரத்தினத்தம்மாள், கும்பாகோணம் பானுமதி, தஞ்சாவூர் பாலசரஸ்வதி, மட்டுமல்லா லஷ்மி நாராயணி, பெண்டில்லா சத்ய பாமா,  துக்கிராலா மாணிக்கம்,  எண்டமுரி ராமரத்தினம்,  காளஹஸ்தி ராஜம்மா,  திருமுழுடலூர் சுந்தரம்மா,  கோலார் நாகரத்தினம்  பெங்களூர் சந்திரவதனா போன்யோருக்கு மறக்காமல் அஞ்சலி செலுத்த வேண்டும்.
     அதே போல தேவதாசி பரம்பரை தடை செய்யப்படுவதற்கு காரணமாகயிருந்த கலாநிதி முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்,  மூவதூர் செல்வி ராமதீர்த்தம்மாள் போன்றோர்கள் போற்றி வணங்கப்பட வேண்டியவர்கள். தேவதாசிகளின் வாழ்க்கையை ஊன்றி கவனிக்கு போது மகாபாரதத்தில் வரும் பாதுகாப்பு இல்லாத பெண்கள் உயர்ந்த பாறையின் மீது சிதறி கிடக்கும் மாமிசத்தை போன்றவர்கள்.  காக்கையும், கழுகும் மிக சுலபமாக கொத்தி தின்றுவிடும் என்ற வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.

    இறைபக்திக்காகவும்,  கலைசேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்த பெண்ணினத்தை அவர்கள் சராசரியான குடும்ப வாழ்க்கை வாழாமல் ஒருவித அர்பணிப்பு வாழ்க்கையை வாழ்ந்ததினால் அர்ப்ப மனதுடைய சில ஆதிக்க ஆண் சக்தி தங்களது குறுகிய மன விகாரங்களுக்காக பயன்படுத்தியதினால் போற்ற தக்க மரபு அவமான சின்னமாக முடிந்து போய்விட்டது.  ஆனாலும் ஒரு உண்மையை அழுத்தி சொல்ல வேண்டும் தேவதாசி பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் அல்ல,  இந்த சிந்தனை இளைய தலைமுறையினருக்கு ஏற்பட்டால் அந்த மரபுகளின் எச்ச சொச்சத்தை கனிவுடன் ஆராய்வார்கள்.

Contact Form

Name

Email *

Message *