Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆணுக்கும் கற்பு உண்டு   அண்ணனின் திடிர்முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அதே நேரத்தில் சந்தோஷமாகவும் இருந்தது.  இன்று காலை பூஜை அறையிலிருந்து வெளிவந்ததும் குமரேசா ஊரில் நம் பூர்வீக வீடு மராமத்து பார்க்க நல்ல நிலையில் தானே இருக்கிறது என்று கேட்டு நாற்காலியில் வந்து உட்கார்ந்தார்.  அதுவரை பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான் அவசரமாக பேப்பரை மடித்து வைத்துவிட்டு அண்ணன் முன்னால் உட்கார்வது பழக்கமில்லை என்பதினால் எழுந்து நின்று ஆமாம், ஆறு மாசத்திற்கு முன்பே எல்லாம் சரி செய்தாகி விட்டது என்றேன்.  என் பதிலால் திருப்தியுடன் தலையாட்டிய அவரிடம் ஏன் அண்ணே திடிரென்று வீடு பற்றி கேக்கிறீர்கள் என்று கேட்கவும் செய்தேன்.

    ஒன்றும் பெரிதாகயில்லை, நான் ஊரை விட்டு வந்து முப்பது, முப்பத்தைந்து வருஷம் இருக்குமா? என்று கேள்வியுடன் என்னிடம் பேச்சை துவங்கினார். இருக்கலாம் அண்ணே. 79-ம் வருஷம் தைமாச, பொங்கலன்று வீட்டை விட்டு கிளம்பினீங்க என்று பதில் சொன்னேன்.  அப்படி, இப்படியென்று வருஷம் ஓடிபோயச்சி.  மனசிலயிருந்த வைராக்கியமும் பிடிவாதமும் கொஞ்ச கொஞ்சமா குறைந்து நிதானத்திற்கு வருகிற மாதிரி இருக்குது.  ஒரு வாரமாகவே ஊர் நினைப்பு அடிக்கடி வருது.  சின்ன வயசில சுத்தி திரிந்த வாய்க்கால் வரப்பு, தென்னந்தோப்பு எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை சுத்தி பார்க்கனும் போல தோணுது என்றார்.  அவர் குரலில் ஏக்கமும் கனவும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பும் இருப்பதை என்னால் உணரமுடிந்தது.

     அவர் ஊலிருந்து கிளம்பி வந்ததை இன்று நினைத்து பார்த்தால் கூட நெஞ்சம் பதபதைக்கும்.  விடிந்தால் பொங்கல் என்று சந்தோஷமாக தூங்க போன நான் காலை எழுந்தவுடன் அம்மா சொன்ன செய்திகேட்டு ஆடி போய்விட்டேன்.  பெரியவன் மனசு ரொம்ப சங்கடமாய் இருக்கிறது என்று விடியற்காலையிலேயே கிளம்பி மெட்ராஸ் போய்விட்டான் அதை சொல்லும் போது அம்மா கண்ணில் நீர் முட்டியிருந்ததை உணரமுடிந்தது.  அவன் அங்கே போயாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று நானும் சம்மதித்து விட்டேன் என்றும் சொன்னார்கள்.  அங்கே அவருக்கு யாரை தெரியும், எங்கு தங்குவார், மனசு விட்டு போய் எதாவது விபரீதமாய் பண்ணிக்கிட்டால் என்ன செய்வது என்று  படபடத்த என்னை அவன் அப்படியொன்றும் கோழையல்ல.  எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்கவும் மாட்டான், செய்யவும் மாட்டான்.  நீ பதட்டப்படாதே என்று அம்மா எனக்கு தைரியம் சொன்னாலும் அவர்களுக்குள்ளும் சிறிது அச்சம் இருப்பதை நான் உணராமல் இல்லை.


     அப்போது அண்ணனுக்கு இருபத்தி ஐந்து வயது தான் இருக்கும்.  கம்பீரமாக உயரமாக இருப்பார்.  அப்பாவை போல் சிவப்பான நிறம். தினசரி உடற்பயிற்சி செய்வதினால் கட்டுமஸ்தான உடற்கட்டு அவருக்கு, கருப்பு மீசைக்குள் தெரியும் சிவப்பு உதடுகள், தீட்சன்யமான பெரிய கண்கள் செதுக்கி வைத்தது போன்ற கூரிய மூக்கு, சுருள் சுருளான தலைமுடி என்று பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்.  ராமலிங்க தேவர் மகன் ராஜசேகர் மாதிரி சினிமா நடிகர்கள் கூட அழகாகயில்லை என்று ஊரில் எல்லோரும் பேசுவார்கள்.  பள்ளியில் படிக்கும் போதும் சரி, கல்லூயில் சேர்ந்த பிறகும் சரி, ஊர் விஷயங்களில் அண்ணா தான் முன்னனியில் நிற்பார்.  விளையாட்டு போட்டிகள், நாடகங்கள் என்று புதிது புதிதாக நிகழ்ச்சிகளை ஊரில் நடத்துவார்.  அவரை சுற்றி எப்போதுமே இளைஞர்கள் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும் ஊர் பொது காரியங்களில் கலந்து கொண்டாலும் கூட யாரிடமும் கெட்ட பெயர் வாங்கமாட்டார்.  ஒரு இடத்தில் ராஜசேகர் இருக்கிறான் என்றால் அங்கே தப்பு இருக்காது என்று வயதானவர்கள் பேசி கொள்வார்கள்.

       அப்பா கூடவே அண்ணாவும் காலையில் எழுந்து தோட்டத்திற்கு போய்விடுவார்.  அங்கு இருகின்ற வேலைகளில் அப்பாவுக்கு ஒத்தாசையாக இருந்துவிட்டு தோட்டத்திலேயே உடற்பயிற்சி செய்வார்.  தண்டால், பஸ்கி, பளு தூக்குதல் என்று ஏகப்பட்ட வகைகளை மிக சுலபமாக அவர் செய்வது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  அவரை விட பதினைந்து வயது சிறியவன் நான்.  என்னை முதுகில் படுக்க வைத்துக் கொண்டு தண்டால் எடுப்பார்.  மேலும் கீழும் போய் வருவது எனக்கு பயமாகயிருக்கும் அவனையும் செய் சொல்லு, களவாணிபயலுக்கு இப்பவே கத்து கொடுத்தா தான் சேட்ட பண்ணாம கிடப்பான் என்று அப்பா கிண்டலாக பேசுவார்.  அண்ணாவின் வியர்வை வழியும் முதுகை கட்டிக்கொண்டு அப்பாவுக்கு அழகு காட்டுவேன்.

     எங்கள் ஊரில் சுடலை மாடசாமி கோவில் திருவிழா மூன்று நாட்கள் விமர்சியாக நடக்கும்.  கிடாவெட்டு, சாமி மயாணம் போகுதல் என்று ஊரே அமர்க்களப்படும்.  எங்களுக்கெல்லாம் தீபாவளி, பொங்கலுக்கு புதுத்துணி எடுத்து தரமாட்டார்கள்.  வருடத்திற்கு ஒருமுறை ஆவணி மாதத்தில் வரும் இந்த கோவில் திருவிழாவின் போது தான் ஊர் முழுவதும் புதுத்துணி எடுப்பார்கள் எதற்குமே வசதியில்லாதவர்கள் கூட பிள்ளைகளுக்காவது துணியெடுத்து விடுவார்கள்.  கோவில் விழாவிற்கு வரி போட்டதும், திருவிழா நாளை எண்ண ஆரம்பித்து விடுவோம்.  முதல் நாளில் வில்லுபாட்டு, இரண்டாம் நாளில் கணியான் கூத்து, மூன்றாவது நாளில் சாமி வீதிஉலா, மயான பயணம் என்று எல்லாம் முடிந்தபிறகு நான்காவது நாளில் ஊரில் உள்ள இளவட்டங்கள் எல்லாம் சேர்ந்து நாடகம் போடுவார்கள்.


     நாடகத்திற்கான ஒத்திகை பதினைந்து நாட்களுக்கு முன்பே துவங்கிவிடும்.  ராஜசேகர அண்ணாதான் கதாசியர், வசனகர்த்தா, இயக்குநர், எல்லாமே, கோவில் மைதானத்தில் பெரிய மேடை போட்டு வண்ண விளக்குகள் வைத்து, ஏறக்குறைய சினிமா போலவே அரங்கம், அமைத்து நாடகம் நடக்கும்.  நீளமான பெஞ்ச் போட்டு அட்டை நாகத்தின் மீது பெருமாள் வேடம் போட்டவர் படுத்திருப்பார்.  பெஞ்ச் தெரியாமல் நீலவண்ண பட்டு துணியை கட்டியிருப்பார்கள்.  மிதமான வேகத்தில் மின் விசிறி சுழலும் போது மஞ்சள் விளக்கு ஒளியில் நிஜமான கடலில் பெருமாள் பள்ளி கொண்டிருப்பது போலவே  பார்வையாளர்க்கு தெரியும்.  ஒரு முறை சமூக நாடகம் போட்டார்கள்.  அதில் திருடனை பார்த்து போலிஸ்காரர் சுடும் காட்சி, சரியான நேரத்தில் துப்பாக்கி ஒலிக்காக வைத்திருந்த பட்டாசு வெடிக்கவில்லை.  எத்தனை முறையோ முயற்சித்தும் அது நடக்காமல் சமாளித்து திருடன் கீழே விழுந்து செத்த பிறகு நிதானமாக பட்டாசு வெடித்தது. மக்கள் எல்லாம் கைகொட்டி சிரித்தது எனக்கு நினைவில் இருக்கிறது.

   அண்ணா கல்லூயில் சேர்ந்த புதுசு, அடுத்த ஊரில் தான் கல்லூரி என்பதினால் அப்பா புது சைக்கிள் வாங்கி கொடுத்திருந்தார். காலையில் எழுந்தவுடன் அந்த சைக்கிளை துடைத்து எண்ணெய் போடுவது, எனக்கு ஆனந்தமான வேலை.  மாலை வீட்டுக்கு வந்த உடன் சைக்கிளின் பின்னால் என்னை உட்கார வைத்து மேற்கு தெருவிற்கும், கிழக்கு தெருவிற்கும் ஒரு ரவுண்ட் போய் வருவார்.  அப்படி போகும் போது மேற்கு தெருவில் வெளிவாசலை பெருக்கி தண்ணிர் தெளித்து நிறைய அக்காமார்கள் கோலம் போட்டு கொண்டிருப்பார்கள்.  அதில் நிறைய பேர் அண்ணா சைக்கிள் ஓட்டுவதை ஓரக்கண்ணால் பார்ப்பார்கள்.  சிலர் தொண்டையை  செருமுவார்கள் சிலர் பாதத்தை தரையில் தட்டி ஒலியெழுப்புவார்கள் இதையெல்லாம் அண்ணா கவனிக்க மாட்டார்.  ஆனால் மாடசாமி மாமா வீட்டு பக்கத்தில் போகும் போது மென்மையாக பெல் அடிப்பார்.  தானாக அவர் தலை அந்த வீட்டை நோக்கி திரும்பும்.  கையில் தண்ணீர் வாளியுடன் தாவணியை இடுப்பில் வாரி  சொருகி இளவரசி அக்கா நிற்பார்கள்.  சைக்கிள் அந்த வீட்டை கடக்கும்.  சில நிமிஷத்திற்குள் அவர்களின் கண்கள் என்னென்னவோ பேசிக் கொள்ளும்.  அந்த வயதில் எனக்கு அதன் அர்த்தங்கள் எப்படி தெரியும்?

   ஒரு சின்ன ரோஜா மொட்டு மலர்ந்து மாலையாகி ஊரார் கண்களையெல்லாம் பறிப்பது போல் அண்ணாவின் காதலும் அவர் நண்பர் வட்டாரத்தில் கசிய ஆரம்பித்துவிட்டது.  பலர் அவரை என்ன மாப்பிள்ளை?  ராஜகுமாரி  தரிசனம் எல்லாம் எப்படி போகிறது என்று கிண்டலடிப்பதை நானே கேட்டுயிருக்கிறேன்.  அதற்கு அண்ணா வெட்கப்பட்டு சிரிப்பாரா?  சங்கடமாக சிரிப்பாரா என்று எனக்கு புரியாது.  நாளாவட்டத்தில் இளவரசி அக்கா என்னை கூப்பிட்டு வைத்து அண்ணாவை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்பார்.  அவர்கள் சந்தோஷப்படும் வண்ணம் நான் எதாவது தகவலை சொன்னால் கடலை மிட்டாய், முறுக்கு எல்லாம் வாங்கி தருவார்கள்.  அப்படி எதுவும் இல்லையென்றால் சரி வீட்டுக்கு போ என்று வெறுங்கையோடு துரத்தி விடுவார்கள்.  இதற்காகவே எதாவது கற்பனை செய்து பொய்யை கூட சொல்லுவேன்.  ஆனால் நான் சொல்லும் பொய் எப்படியோ அவர்களுக்கு தெரிந்துவிடும்.  பொய்மூட்டை பொய்மூட்டை என்று என் தலையில் கொட்டுவார்கள்.


    அண்ணாவின் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த காதல் விசயம் எப்படியோ அப்பாவின் காதுக்கு போய்விட்டது.  அன்றிரவு எட்டு மணி இருக்கும்.  அண்ணா வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்தார்.  அப்போது தான் அப்பாவும் தோட்டத்தில் இருந்து வந்து வெளி திண்ணையில் உட்கார்ந்து இருந்தார்.  அப்பா இருப்பதை பார்த்து தலைகுனிந்த வண்ணம் வீட்டுக்குள் நுழைய முயன்ற அண்ணாவை தம்பி இங்கு வா, உன்கிட்ட ஒரு சங்கதி பேசணும் என்று அப்பா கூப்பிட்டார்.

  நான் வீட்டு முற்றத்தில் பனை நொங்கு கூ ந்ததால் வண்டி செய்வதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தேன்.  பக்கத்து வீட்டு பயல்கள் எல்லாம் புதுசு புதுசாக வண்டி செய்யும் போது நான் மட்டும் செய்யாதிருந்தால் நன்றாக இருக்குமா?  என் கவனம் முழுக்க வண்டி செய்வதியிலேயே இருந்ததினால் அண்ணணுக்கும், அப்பாவுக்கும்  நடந்த உரையாடலை முழுமையாக கவனிக்கவில்லை.  அப்பா கோபமாக பேசுவதும் அண்ணா பதில் சொல்ல திக்கி திணறியது மட்டும் நினைவுயிருக்கிறது.  வீட்டுக்குள் இருந்து வந்த அம்மா கொலைகாரனை  நிக்க வைச்சி கேள்வி கேட்கிற மாதிரி வெளியில் வைத்து பேசுகிறீர்களே வீட்டுக்குள் வந்து பேசுங்க என்று சொல்லவும் நல்ல பிள்ளையை பெத்துயிருக்க போ என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு உள்ளே சென்றார்.  அண்ணணும் கூடவே போனார்.  வீட்டுக்குள் நடந்த உரையாடல்கள் எதுவும் எனக்கு தெரியாது.  அதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் விளையாட்டு புத்தியால் அப்போது எனக்கு இல்லை.


      வெகு நேரம் கழித்து அம்மா என்னை சாப்பிட கூப்பிட்டார்கள்.  அண்ணா கட்டிலில் படுத்து இருந்தார்.  அப்பா சாப்பிட்டு கொண்டிருந்தார்.  அமைதியாக அம்மா எனக்கு சோறு போட்டு கொண்டிருந்தார்.  யாரும் யாரோடையும் பேசாமல் எல்லோரும் அமைதியாக இருந்தால் வீட்டிற்குள் சண்டை நடந்திருப்பதாக அர்த்தம் இப்போது நிலைமையும் அப்படி தான் இருந்தது.  அண்ணணுக்கும் சாப்பாடு போடட்டுமா?  என்று அம்மா கேட்க கேட்க அண்ணா மௌனமாக படுத்து கொண்டிருந்தார்.  வயிற்றில் மறந்திருந்த பசியும், குளத்து மீன் குழம்பு மீனின் ருசியும் என்னை அந்த சண்டையில் ஆர்வம் கொள்ள செய்யவில்லை.  நன்றாக சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து இருந்த அம்மா மடியில் தலை வைத்து உறங்கி போய்விட்டேன்.

     காலையில் நான் கண் விழித்த போது வீட்டு நிலைமை முற்றிலும் மாறியிருந்தது.  நடு முற்றத்தில் போடப்பட்டிருந்த கட்டிலில் வாய் நிறைய வெற்றிலை போட்டு அப்பாவிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார் மாடசாமி மாமா.  இந்த கால பய புள்ளைங்க நம்மள தூக்கி சாப்பிடும் போல இருக்கு.  என் மகளையே எடுத்துக்கோங்க, இத்தனை நாளா எனக்கு கடுகளவு கூட சந்தேக வராம நடந்திருக்கா என்று சொன்னார்.  என் மகன் மட்டும் என்ன யோக்கியமா?  காலேஜிக்கு போறான் , வரான். என்று தான் நானும் இருந்தேன்.  படிக்கும் வேலையை பார்க்கிறானோ இல்லையோ இந்த வேலையில் ஜருரா இருந்திருக்கிறான் என்று அப்பாவும் சிரித்து கொண்டார்..  அண்ணன் வீட்டு உள் வாசலில் கைகளை கட்டிக் கொண்டு தரையை பார்த்த வண்ணம் நின்றிருந்தார்.

   பெரியவர்களின் இத்தகைய பேச்சு அவர்களின் சந்தோஷ முகம் ஏதோ ஒரு நல்லகாரியம் நடக்க போவதை காட்டியது.  முழுவதுமாக எதுவும் எனக்கு புரியவில்லை என்றாலும் நானும் சந்தோஷப்பட்டு கொண்டேன்.  மாடசாமி மாமா கிளம்பி போன பிறகு எல்லாம் சரியா போச்சுன்னு வாய்கால் வரப்பு, முட்டு சந்து என்று அந்த பொண்ணோடு நின்னு பேசாத.  கல்யாணம் முடியும் வரை இரண்டு பேருமே கட்டுகோப்பா இருங்க.  கல்யாண சந்தோஷத்தில் படிப்பை கோட்டை விட்டுவிடாதே என்று அண்ணாவிடம் அப்பா சற்று தடித்த குரலில் பேசினார்.  அண்ணன் தலையை மட்டும் அசைத்தார்.  நேற்று மாலையில் ஏற்பட்ட சண்டை காலை விடிவதற்குள் திருமண பேச்சு வரை எப்படி சென்றது என்றும், அப்பா மனசு எப்படி மாறியது என்றும் இதுவரை எனக்கு தெரியாது.


     ராஜசேகர அண்ணனிடம் இதற்கு பிறகு புதுகளை வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.  அலங்காரம் செய்வதிலும் சரி, மற்றவர்களோடு பேசுவதிலும் சரி, அண்ணன் ரொம்பவும் மாறி போய் விட்டார்.  எனக்கு தான் மிகவும் கவலையாகி விட்டது.  எனது மாலை நேர சைக்கிள் சவாரி போயே போச்சு.  சின்ன சைக்கிள் எடுத்து கொண்டு ரவுண்ட் அடிக்கலாம் என்றால் அப்பா காசு தரவும் மாட்டார்.  அம்மா தரும் காசு மிட்டாய் வாங்கி திண்பதற்கே சரியாகி விடும்.

    அண்ணா கல்லூரி படிப்பை முடித்து இரண்டு மாதத்தில் வீட்டில் திருமணகளை கூடிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.  நிச்சய தாம் பூலம் எப்போது மாற்றி கொள்ளலாம் தாலிக்கு பொன் எப்போது உருக்கலாம் என்று நாட்கள் குறிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  எனக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.  சுடலைமாடன் சாமி கோவில் திருவிழாக்கு மட்டுமே புதிய டவுசர் சட்டை கிடைக்கும்.  அண்ணனுக்கு கல்யாணம் என்பதினால் நிச்சயம் புது துணி உண்டு.  இந்த வருடத்தில் எனக்கு இரண்டு புது துணி கிடைத்த மாதிரி இருக்கும்.  இது தவிர வீட்டில் அதிரசம், லட்டு, முறுக்கு என்று பலகாரங்கள் நிறைய செய்வார்கள்.  வாயில் ஒன்றும், கையில் ஒன்றும் டவுசர் பாக்கெட்டில் மறைத்தும் சாப்பிடுவதற்கு லட்டு நன்றாக இருக்கும்.  திருடி சாப்பிடுவதற்கு முறுக்கை விட லட்டே சுலபமானது.  சாப்பிடும் போது சத்தம் யாருக்கும் கேட்காது.  அண்ணாவும் அவன்  நண்பர்களும் கிண்டலும் கேலி பேச்சுமாக ஒவ்வொரு நாளும் கடந்தது.  இந்த நேரத்தில் தான் மாடசாமி மாமா தங்கைக்கு கர்ப்பபையில் கட்டி என்று மதுரை ஆஸ்பத்தியில் சேர்ந்த தகவல் வந்தது.

  மதுரைக்கு சென்று ஆஸ்பத்தியில் பார்ப்பதற்காக மாடசாமி மாமா, இளவரசி அக்கா, எல்லோரும் சென்றார்கள்.  இளவரசி அக்காவை கூட்டி போக வேண்டாம் என்று அப்பா சொன்னார்.  மாடசாமி மாமா தான் அத்தைக்கு இவள் மேல் கொள்ள பிரியம்.  பிள்ளை முகத்தை பார்த்தால் அவளுக்கு கொஞ்சம் தைரியம் வரும்.  என்று சமாதானப்படுத்தி கூட்டி சென்றார்.  மூன்று பேரையும் பஸ் ஸ்டாண்ட் வரையில் சென்று அண்ணா வழியனுப்பினார்.  நானும் கூடவே போய் இருந்தேன்.  அவர்களோடு புறப்பட்டு போன பிறகு உனக்கு இந்த அண்ணி பிடிச்சிருக்கா என்று என்னிடம் அண்ணா கேட்டார்.  அவர் திடிரென்று இப்படி கேட்கவும் யார் அண்ணி என்று ஒரு குழப்பம் வந்துவிட்டது எனக்கு.  இளவரசி அக்காவுக்கும், அண்ணாவுக்கு கல்யாணம் முடிந்த பிறகு நான் அவர்களை அக்கா என்று கூப்பிட முடியாது, அண்ணி என்று தான் அழைக்க வேண்டும் என்ற விவரம் அப்போது தான் தெரிந்தது.  தத்து பித்து என்று ஏதோ அண்ணனுக்கு பதில் சொன்னேன் என்று நினைக்கிறேன்.


    வீட்டுக்கு வந்து விளையாடி விட்டு நேரத்திலே அன்று உறங்கி விட்டேன்.  நடு ராத்தி இருக்கும் பெரிய குரலில் அம்மா கத்தி அழுவது கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தேன்.  சுவற்றில் மோதி அழும் அம்மாவை இழுத்து பிடித்த வண்ணம் அண்ணா இருந்தார்.  அவர் கண்களில் இருந்தும் கண்ணீர் கொட்டிக் கொண்டு இருந்தது.  பக்கத்து வீட்டு மூக்கம்மா அத்தை, அன்னகிளி பெரியம்மா இன்னும் யார் யாரோ இருந்தார்கள்.  எல்லோருமே அழுதார்கள் தூக்க கலக்கத்தில் இருந்த எனக்கு விவரம் தெரியவில்லை என்றாலும் நானும் அழுதேன்.

   கட்டிலில் இருந்து இறங்கி அம்மாவை கட்டி பிடித்து கொண்டு விம்மி விம்மி  அழுதேன்.  அய்யோ  ராசா உங்க அப்பா போய்விட்டாரே என்று என் தலை மீது முகத்தை புதைத்து அம்மா அழுதார்கள்.  நல்லா தானே அப்பா ஊருக்கு போனார்.  எப்படி திடிரென்று செத்து போனார் என்று எனக்கு எதுவும் விளங்கவில்லை.  என்னை தோளின் மீது தூக்கி வைத்துக் கொண்டு கீரீ க்கும், பாம்பிற்கும் சண்டை நடப்பதை காண்பித்த அப்பா சந்தைக்கு போனால் சின்னவனுக்கு பிடிக்கும் என்று அல்வா வாங்கி வந்து தூங்கினால் கூட எழுப்பி வாயில் ஊட்டிய அப்பா, ரமேஷ் என்னை கல்லால் அடித்து என் நெற்றி வீங்கிய போது அவன் அப்பாவிடம் சண்டைக்கு போன அப்பா ஒரு நொடியில் செத்து போய்விட்டார் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.  அப்பா இல்லாத வாழ்க்கை இருட்டு குகைக்குள் போவது போல் எனக்கு பயமாக இருந்தது.  கதறி அழுதேன்,  கதற கதற மூச்சு திணறியது,  திறந்த வாய் வழியாக காற்று உள்ளே செல்ல மறுத்து மயங்கிய விழுந்துவிட்டேன்.

  எனக்கு மயக்கம் தெளிந்த போது நான் அண்ணாவின் தோள் மீது சாய்ந்து படுத்திருப்பதும் அவர் என் முதுகில் தட்டி கொடுத்து கொண்டிருப்பதையும் உணர்ந்தேன்.  நினைவு வந்தவுடன் மீண்டும் அழுகை வந்தது.  அண்ணாவின் ஆதரவான கை என்னை இறுக்கி அனைத்து கொண்டது.  ஆதரவு அற்று நாலா திசையையும் அலைந்து திரிந்தவனுக்கு புகலிடம் கிடைத்தது போல அண்ணாவின் அரவனைப்பு எனக்கு ஆறுதலையும், தைரியத்தையும் தந்தது.


    சிறிது நேரம் செல்ல செல்லத்தான் செத்து போனது அப்பா மட்டுமல்ல மாடசாமி மாமாவும், இளவரசி அக்காவும் தான் என்ற உண்மை எனக்கு தெரிந்தது.  அவர்கள் மதுரைக்கு சென்ற பஸ் வழியில் ஏதோ பள்ளத்தில் உருண்டு விழுந்து முழுவதும் எரிந்து விட்டதாம்.  அதில் பயணம் செய்த யாருமே பிழைக்கவில்லையாம்.  ஒரே நேரத்தில் மூன்று பிணங்களை தகனம் செய்தது.  அப்போது மட்டும் தான் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.  கல்யாணத்திற்கு செய்ய வேண்டிய பலகாரங்கள் எங்கள் வீட்டில் கருமாதிக்கு செய்யப்பட்டது.  சந்தோஷத்தோடு எடுத்து சாப்பிட வேண்டிய நான் அழுத கண்களோடு மற்றவர்களுக்கு எடுத்து கொடுத்தேன். விவரம் தெரியாத வயதில் தகப்பனாரை பலி கொடுத்த சோகம் அனுபவித்தவனுக்கு தான் தெரியும்.  யாராவது ஒரு தகப்பன் தன் பிள்ளையை சைக்கிளில் கூட்டி போகும் போது நான் தவித்த தவிப்பை எந்த வார்த்தையாலும் விளக்க முடியாது.

   அண்ணா அதற்கு பிறகு நடைபிணமாகவே ஆகிவிட்டார் எனலாம்.  முகச்சவரம் செய்து நல்ல துணி மாற்றி அவரை பார்ப்பதே அரிதாகி விட்டது.  எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் அவர் மௌனமாகவே ஆகிவிட்டார்.  யாரோடும் அதிக பேச்சு இல்லை.  பேசினாலும் அதில் சுரத்தை இல்லை.  எனக்கு மட்டுமாவது அப்பா மட்டும் தான் இல்லை.  ஆனால் அண்ணாவுக்கு இளவரசி அக்காவின் போட்டோவை வெறித்துக் கொண்டு இரவில் வெகு நேரம் விழித்திருப்பார்.  கண்கள் சோர்ந்து போகின்ற வரையிலும் அதை பார்த்து கொண்டே இருக்கும் அவரின் முதுகு குலுங்குவதை பார்த்திருக்கின்றேன்.  அழுவதை கூட சத்தமில்லாமல் அழவேண்டும் என்பது தான் ஆண்மை பெற்ற சாபம்.  வாய்விட்டு கதறி அழுதால் நெஞ்சுக்குள் அடைத்துக் கொண்டு இருக்கும் துக்கம் ஓரளவாவது வெளியேறி விடும்.  ஆனால் ஆண்களால் அது முடிவதில்லை.  நெருப்பை உள்ளுக்குள்ளேயே அழுத்தி அழுத்தி நெஞ்சு சூடுப்பட்டு வெந்து போய் வாழவேண்டும் என்பது தான் ஆண்களின் துர்பாக்கிய நிலை அண்ணாவும் அப்படி தான்.  எத்தனை நாள் தான் அவரால் அப்படி ஜடம் போல் அலைய முடியும்.  அதனால் தான் அன்று பொங்கல் இரவு ஊரை விட்டே கிளம்பி விட்டார்.  அதன் பிறகு அவர் ஊர் பக்கமே வரவில்லை.

   சென்னை சென்ற அவர் ஒரு ஜவுளி கடையில் வேலைக்கு சேர்ந்ததும் தொழிலை நன்றாக கற்று கொண்டு ஊரில் இருந்த சொத்தை அம்மாவை விற்று தர சொல்லி கேட்டு தனியாக கடை துவங்கியதும், என்னையும் அம்மாவையும் தன்னோடு அழைத்து கொண்டதையும், இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்து ஒரு கடையை பல கடைகளாக்கி சென்னையில் முக்கிய பிரமுகராக இன்று மாறியதும் ஒரு தனியான கதை, அதற்குள் இருக்கின்ற போராட்டம், வேதனை எல்லாம் அண்ணா மட்டுமே அறிந்த கதை.


  இரண்டாவது கடையை துவங்கும் போது அம்மா தயக்கத்தோடு அண்ணாவிடம் திருமண பேச்சை எடுத்தார்.  அம்மா தயவு செய்து இன்னொரு முறை திருமண பேச்சை என் முன்னால் எடுக்காதே, நான் இளவரசியை தாலி கட்டி கொள்ளவில்லை.  அவளோடு, குடும்பம் நடத்தவில்லை.  இன்னும் சொல்ல போனால் அவள் மீது என் விரல் கூட பட்டதில்லை.  ஆனால் அவள் தான் என் மனைவி. ஊர் உலகம் அறிய நடத்தினால் தான் குடும்பம் என்பதில்லை மனதிற்குள் நடத்தினாலும் குடும்பம் குடும்பம் தான் என் மனதில் இளவரசியை மனைவி என்ற ஸ்தானத்தில் வைத்து விட்டேன்.  அதில் வேறொருத்தியை வைத்து பார்க்க எனக்கு துணிச்சல் இல்லை.  உன் மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசையை விட்டுவிடு.  தம்பியை படிக்க வைப்போம், அவனுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுவதை கண்ணார கண்டு சந்தோஷப்படு என்றார்.

 அதன் பிறகு அவர் அது சம்பந்தமாக எதுவும் பேசியதே இல்லை.  அம்மா மனது பொறுக்காமல் பேசினாலும் ஒன்று மௌனமாக இருந்து விடுவார்.  அல்லது வெளியில் போய் விடுவார்.  எனக்கு திருமணமாகி பேரன் பேத்திகளை பார்த்து மரணபடுக்கையில் விழுகின்ற வரை அண்ணாவிடம் கெஞ்சிக் கூத்தாடி பார்த்தார்.  அண்ணா அணு அளவு கூட அசையவில்லை.

  அம்மா காலமாகிய பிறகு பெற்ற தாயின் எண்ணத்தை என்னால் நிறைவேற்ற முடியவில்லையே குமரேசா அம்மாவின் ஆத்மா என்னை ஆசிர்வாதம் செய்யாதோ?  என்று அடிக்கடி என்னிடம் புலம்புவார்.  எனக்கு பதில் சொல்ல முடியாது.  அவர் எனக்கு அண்ணன் மட்டும் என்றால் நான் எதாவது சொல்லலாம்.  அவர் எனக்கு அப்பா மாதிரி, அல்ல அல்ல அதைவிட மேலே.  சாமி மாதிரி என்று தான் சொல்ல வேண்டும்.  தெய்வத்தின் உறுதியை தளர்த்தி கொள் என்று சொல்ல எந்த பக்தனுக்கு உரிமை உண்டு.  அப்படி சொல்வது கூட மரியாதை குறைவு அல்லவா?  இப்போதாவது அவர் ஊரில் சிறது நாள் தங்கி பழைய நினைவுகளை மனதிற்குள் ஓட்டி பார்த்தால் ஆறுதல் கிடைக்கும்.  அவரின் ஆறாத காயம் கூட ஆறலாம்.  அதனால் அவரிடம் நீங்கள் ஊருக்கு போக எந்த காரை ரெடி செய்ய வேண்டும்.  என்று கேட்டேன்.


Contact Form

Name

Email *

Message *