Store
  Store
  Store
  Store
  Store
  Store

வீட்டுக்கு வீடு குழந்தைகள் பலி


    ஜெர்மன் நாட்டில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் மனிதர்கள் துவங்கி சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருக்கும் மனிதர்கள் வரை தங்களது சுய சொத்தாக கருதுவது குழத்தைகளை தான். செயற்கை கண் பொருத்தி கொள்ளலாம்,  செயற்கை இதயம் வைத்து கொள்ளலாம் செயற்கையான சுவாச பை கூட பொருத்திக் கொள்ளலாம்.  ஆனால் செயற்கையான தலைமுறைகளை உருவாக்கி விட முடியாது. இன்று நம் நாட்டின் நிலையை பார்க்கும் போது புறகணிக்கப்படுவது ஏழை மக்கள் மட்டுமல்ல குழந்தைகளும் என்று தான் தோன்றுகிறது.

    தமிழ்நாட்டில் வீட்டுக்கு வீடு தொலைகாட்சி பெட்டிகள் வரும் காலம் வரையில் அல்லது தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பை துவங்கும் காலம் வரையில் தமிழக தெருக்கள் எல்லாம் மாலை நேரத்தில் விழா கோலம் பூண்டிருக்கும்.  சந்து, பொந்து இண்டு இடுக்குகள் எல்லாமே குழந்தைகளின் விளையாட்டுகளாலும்.  சிரிப்பொலியாலும், பொங்கி வழியும்,  இன்று பாலைவனங்களை பார்க்க வேண்டியவர்கள் ராஜஸ்தான் மாநிலத்திற்கோ.  அரபு நாடுகளுக்கோ போக வேண்டிய அவசியமில்லை.  தாங்கள் பார்த்து கொண்டிருக்கும் டி.வி.யை சற்று அணைத்து விட்டு,  வீட்டுக்கு வெளியே வந்து மாலைநேர தெரு அழகை பார்த்தாலே பாலைவனமும் இப்படி தான் இருக்கும்.  என்ற முடிவிற்க்கு வந்துவிடலாம்.

   நமக்கெல்லாம் நமது குழந்தை பிராயங்களை நினைத்து பார்க்கும் போது வயோதிக சோர்வையும் கடந்து ஒரு உற்சாகம் பிறக்கிறது.  மனதிற்குள் தென்றல் வீசுகிறது என்று கூட சொல்லவலம் ஆனால் நமது குழந்தைகளுக்கு அப்படி ஒரு நினைவு வருங்காலத்தில் வருமா?  என்பதே சந்தேகமாக இருக்கிறது.  முன்புயெல்லாம் ஐந்து வயதை தொட்ட பிறகு தான் பள்ளிகூடத்தில் சேர்ப்பார்கள்.  அதுவும் தலையை சுற்றி காதை தொட முடியவில்லை என்றால் அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளலாம் என்று பள்ளி நிர்வாகமே வீட்டுக்கு அனுப்பி விடும்.

    மேளதாளத்தோடு ஊர்வலமாக அழைத்து சென்று பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளும் உண்டு, அப்பாவின் தோள் மீது சவாரி செய்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் உண்டு,  பாடம் படிப்பது பிடிக்கிறதோ?  இல்லையோ?  வகுப்பறையில் உள்ள பொம்மைகளும் புதிய நண்பர்களும் இதுவரை அனுபவிக்காத சுகந்திரமும் மனதை மயக்கி பள்ளிகூடத்தின் பக்கம் இழுக்கும் மூன்றாம் வகுப்பு வரை பெரியபாட சுமைகள் எதுவும் கிடையாது.  பல நேரங்களில் புத்தக பையை மறந்து எங்கையாவது விட்டுவிட்டு வகுப்பில் வந்து வாய் பிளந்து தூங்கி பிறகு விழித்து வீட்டுக்கு செல்லும் குழந்தைகளும் உண்டு, ஆசிரியர் கூப்பிட்டால் கைகட்டி நிற்பதும், தெருவில் அவரை கண்டுவிட்டால் குரங்கு பெடல் கைக்கிளை ரோட்டில் போட்டுவிட்டு வணக்கம் வைப்பதையும்,  பள்ளிகூட, மாமரத்தில் காய்பறித்து மிளகாய் பொடியில் புரட்டி எடுத்து கண்ணில் நீர் வடிய சாப்பிடுவதும் செத்தாலும் மறக்காது.

    ஆனால் இன்றைய குழந்தைகள் நினைத்து பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.  கால்களை தரையில் உறுதியாக ஊன்றி நடக்க பழகுவதற்கு முன்பே பாதி தூக்கத்தில் சுரண்டு கிடக்கும் குழந்தையை படுத்கையில் இருந்து பிடுங்கி எடுத்து அலற அலற குளிக்க வைத்து,  விம்ம விம்ம தலை துவட்டி, வாய்க்குள் உணவை திணித்து பிஞ்சு பாதங்களை ஷூவிற்குள் சொருகி பள்ளி பேருத்தில் நெருக்கி அடுக்கி பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள்.

    பரந்து விரிந்த வகுப்பறையெல்லாம் கிடையாது.  புறா கூடுகள் மாதிரிதான் எல்லா அறைகளும் மேலே சுற்றிகின்ற மின்விசிறியிலிருந்து தப்பி தவறி காற்றுவந்தால் உண்டு.  இல்லையென்றால் ஒரு குழந்தையின் சுவாசத்தை இன்னொரு குழந்தை இழுத்து கொள்ள வேண்டியது தான். நரகலோகத்தில் தண்டனை நிறைவேற்ற ஆயுதங்களோடு காத்து நிற்கும் பூத கணங்கள் போல கையில் பிரம்பும் மிரட்டு விழிகளோடு ஆசிரியர்கள் ஒரு பக்கம்.

    எழுதி எழுதி களைத்து போகும் விரல்களின் வலி இன்னொரு பக்கம் மனப்பாடம் செய்ய கத்தி கத்தி வறண்டு போகும் தொண்டை வலி வேறொரு பக்கம். ஆசிரியர் எழுதுவதை பார்த்து பார்த்து நீர் முட்ட நிற்கும் கண்ணின் வலி மற்றொரு பக்கம்.  இப்படி நாலாபுறமும் வலியை அனுபவித்து வீட்டுக்கு வந்தால் டியூஷன் ஹோம் ஒர்க்கு  என்று ஆயிரம் ஆயிரம் வேதனைகள் கொஞ்ச நேரமாவது கால்களை வீசி நடக்கலாம் என்றால் அதிகாலையில் எழுப்ப வேண்டும் என்பதற்காக போர்வையில் சுற்றி எட்டு மணிக்கே தூங்க வைத்துவிடும் பெற்றோர்கள்.  இது தான் இன்றைய குழந்தைகளின் எதார்த்த வாழக்கை.


    நமது தமிழ்நாட்டில் மட்டும் ஆரம்பபள்ளிகளில் 38.82 லட்சம் குழந்தைகளும், நடுநிலை பள்ளிகளில் 62.30 லட்சம் குழந்தைகளும் படிப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.  இந்த குழந்தைகளில் ஆறாம்வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்கு 2009-ம் ஆண்டு கணக்குப்படி 6% பேருக்கு பார்வை கோளாறுகள் இருக்கிறது.  இது மட்டுமல்ல இருதய கோளாறு உள்ளிட்ட பல உடல்நல குறைபாடுகள் ஆயிர கணக்கான குழந்தைகளுக்கு இருக்கிறது.  இப்படி பல உடல் நோய்கள் ஒரு பக்கம் குழந்தைகளை வாட்டி வதைத்தாலும் சுமார் என்பது சகவிகித குழந்தைகளுக்கு இந்த வயதில் வரவே கூடாத மன அழத்தம் இருப்பதாக சுகாதார துறையினர் கூறுகிறார்கள்.  இன்னொரு அதிர்ச்சியான விஷயம் பாதியளவு குழந்தைகளுக்கு தற்கொலை செய்து கொள்ளவும்,  வீட்டை விட்டு ஒடி விடவும் விருப்பம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    உடல் நல குறைபாடுகள் பெருமளவு குழந்தைகளை தாக்குவதற்கு என்ன காரணமென்று ஆராய்ந்தால் ஊட்டசத்து குறைபாடே முக்கிய காரணமென்று சொல்லப்படுகிறது.  தனிநபர்களுடைய வருமானம் இப்போது கூடியிருக்கிறது  மக்களின் வாங்கும் திறன் முன்பை விட இப்பொழுது அதிகரித்து உள்ளது.  சினிமா கொட்டகைகளின் கூட்டத்தையும் நகை மற்றும் ஜவுளி கடைகளில் காணப்படும் நெரிசலையும் பார்க்கும் போது நமது குழந்தைகள் ஊட்டசத்து குறைபாடுகளால் அவதிப்படுகிறார்கள் என்பதை நம்புவதற்கு கஷ்டமாக தான் இருக்கிறது.  ஆனாலும் உண்மையை நம்பிதான் ஆகவேண்டும்.

      ஊட்டசத்து கிடைக்காததற்கு வறுமை காரணம் அல்ல,  பெரும்பலான பெற்றோர்கள் குழந்தைகளை காலையில் சாபர்பிட விடுவதே கிடையாது.  அப்படியே சாப்பிட வைத்தாலும் கூட நிதானமாக உண்ண வைப்பதில்லை.  அவசர கதியில் ஊட்டப்படும் உணவு செரிமானமாகாது.  செரிமானம் ஆகாத  உணவு வயிற்க்கும், உடலுக்கும் தீங்கை ஏற்படுத்துமே தவிர ஆரோக்கியத்தை தராது.  குழந்தைகளின் மதிய நேர உணவு தான் மிகவும் கொடுமையானது.  ஒரு ஆயிரம் குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் 900-துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மதிய உணவாக தயிர்சாதம் மட்டுமே கொண்டு வருகிறார்கள் சாதத்தை விட நொறுக்கு தீனிகளே பல அம்மாமார்கள் கொடுத்தனுப்புகிறார்கள்.  சாதத்தை கொட்டி விடும் குழந்தைககள் நொறுங்கு தீணியையே முக்கி உணவாக்கி கொள்கிறார்கள்.  இரவு உணவோ உடல் சோர்வாலும், மன அசதியாலும் சரியாக எடுத்துகொள்ளபடுவதில்லை.  இப்படியே தொடர்ச்சியாக நடந்தால் குழந்தை உடம்பில் உள்ள ஆக்கபூர்வமான சக்திகள் கரைந்து போய் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போய் வாழும் காலம் முழுமையுமே நடமாடும் நோய் கேந்திரமாக ஆகிவிடுவார்கள்.

    உலகத்தில் தோன்றுகின்ற புதிய நோய்கள் எல்லாம் நமது குழந்தைளை பரிசோதை கூடமாக ஆக்கி கொள்வதற்கு நாம் தான் முக்கிய காரணமாக இருக்கிறோம். நான் டாக்டருக்கு படிக்க நினைத்தேன் முடியவில்லை.  நீ கண்டிப்பாக டாக்டராகியே தீர வேண்டும். எதிர்த்த வீட்டு பையன் அமெக்காவில் லட்சலட்சமாய் சம்பாதிக்கிறானாம்.  நம் குழந்தையும் வருங்காலத்தில் அப்படி சம்பாதிக்க வேண்டும்.  அதனால் விளையாட்டு வெண்டைகாய் எல்லாம் தேவையே இல்லை.  படித்துக் கொண்டே இருந்தால் போதும், என்று நமது கனவுகளையும் ஆசைகளையும் குழந்தைகளின் மீது திணிக்கிறோம்.

     விடிந்தால் பள்ளி, சூரியன் விழுந்தால் வீடு என்று வளரும் குழந்தைகள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது. சமூகம் எப்படி இயங்குகிறது.  என்பதை அறியும் திறனை இழந்து விடுகிறார்கள்.  பக்கத்து வீட்டில் வாழ்வது மனிதர்களா? அல்லது வேறு வகை உயிரினமா?  என்பது கூட குழந்தைகளுக்கு தெரிவதில்லை,  எனக்கு தெரிந்த பிரபல திரைபட இயங்குநர் இப்பொழுதைய குழந்தைகளின் நிலையை பற்றி மிக அழகாக என்னிடம் ஒரு முறை சொன்னார் முன்பு எல்லாம் ஒரே வீட்டில் தாத்தா, பாட்டி, சித்தி சித்தாப்பாவுடன் வாழும் குழந்தைகளுக்கு இப்பொழுது அம்மா, அப்பாகூடவே நேரம் கழிப்பது அரிதாகிவிட்டது. பள்ளிலிருந்து வீட்டுக்கு வந்தால் தனியறை அந்த தனியறையும் பதினாறு டிகிரி வெப்பத்தில் தான் இருக்கும்.  பள்ளிக்கு செல்வதும்,  குளிர்வூட்டப்பட்ட வாகனத்தில் வகுப்பறைகளும் கூட குளிர்சாதனம் பொருத்தியது தான்.  இந்த பருவ நிலையில் வளரும் குழந்தை நாட்டின் தட்ப வெப்பத்தைகூட அறிந்து கொள்வது இல்லை.  இப்படிபட்டவர்களிடம் எதிர்கால இந்தியாவின் நிர்வாகத்தை கொடுத்தால் ஏழைகளின் பசி என்றால்  என்னவென்று அறிந்து கொள்ளவே பல ஆண்டுகள் முயற்சிப்பார்களே தவிர உருப்படியாக எதையும் செய்ய மாட்டார்கள் என்றார்.

    இந்த மாதிரி வளரும் குழந்தைகளுக்கு சமூக பொறுப்புயிருக்காது என்பது வேறு விஷயம்.  மனிதர்களின் சுக துக்கங்களை  கூட புரிந்து கொள்ளமல் கொடூரமாக நடந்து கொள்வார்கள்.  தங்களது மன சிக்கல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வழி தெரியாமல் அல்லது வறட்டு கௌரவம் இடம் கொடுக்காமல் தனக்குள்ளையே போட்டு குமைந்து கொண்டு குழப்பி கொண்டு தற்கொலை வாசலையோ போதையின் கதவுகளையோ தட்டி திறந்து வாழ்வை சீரழித்து கொள்வார்கள்.


    இந்த அபாயம் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை தான் அதிகம் சூழ்கிறது. தனியார் பள்ளி நிர்வாகம் தங்களது கல்வி வியாபாரம் செழிக்க குழந்தைகளுக்கு செயற்கையான கர்வத்தை துண்டுகிறார்கள்.  நீ தான் ஆளப்பிறந்தவன்,  மற்ற அனைவருமே அடிமை வர்க்கம் என்ற விஷவிதை குழந்தைகளின் பிஞ்சு மனதில் ஆழமாக விதைக்கப்படுகிறது எப்போதும் நீ முதல் தரத்தில் வரவேண்டும்.  முதல் தரமாக ஜெயிக்க வேண்டும்.  இரண்டாம், மூன்றாம் தரங்கள் என்பது கேவலமானது.  பரிதாபத்திற்குரியது என்றெல்லாம் மூளை சலவை செய்யப்படுகிறார்கள்.  இது பள்ளியின் நிலை என்றால் வீட்டு நிலைமையோ படு பயங்கர மோசமானது.  பக்கத்து வீட்டு பையனோடு சேராதே.  அவன் அப்பா சாதாரண குமாஸ்தா அவர்கள் வீட்டில் ஒரு பிரிஜ்  கூட கிடையாது.  நீ ராஜாவீட்டு  பையன்.  அவர்களோடு சேர்ந்தால் உன் தகுதி குறைந்து விடும், என்று எல்லாம் போதிக்கிறார்கள்.  அடுத்தவர்களை பற்றி மட்டமான சிந்தனையை குழந்தைகளிடம் ஏற்படுத்தலாமா?  என்று கேட்டால் அப்போது தான் இவன் விளையாட வெளியே போகாமல் வீட்டிலிருந்து படிப்பான் என்று சமதானம் கூறுகிறார்கள்.

    எல்லாவற்றிலும் தானே உயர்ந்தவன் என்ற நினைப்பில் வளரும் குழந்தை பெரியவனாகி சமுதாய பங்களிப்பு குடும்ப பராமப்பு என்று வருகின்ற போது எதிர்வரும் சோதனைகளை தாங்க முடியாமல் மற்றவர்களின் ஆலோசனையை பெற முடியாமல் மனதெளிவு, துணிச்சல் இல்லாமல் வாடி, வதங்கி போக வேண்டிய சூழ்நிலை வந்து விடுகிறது.  அல்லது தனது காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களிடம் வஞ்சமாக பழகி முழு சுயநலவாதிகளாக நடந்து கொள்கிறார்கள்.  நவீன கால ஹய்-டெக் மோசடி பேர்வழிகள் பலரும் இந்தமாதிரியான சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

   அரசாங்க பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல வேளையாக இத்தகைய இக்கட்டுகள் அதிகமில்லை குழந்தை பருவத்திலேயே நல்லவன், கெட்டவன், பணக்காரன், ஏழை, என்று பலதரப்பட்டவர்களோடு கலந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.  வாழ்க்கை என்றால் வெற்றியும் தோல்வியும் கலந்த கலவை தான் என்பது சிறு வயதிலேயே தெரிந்து விடுகிறது.

    அரசு பள்ளிகூடங்கள் தான் குழந்தைகளுக்கு சிறந்தது என்று நான் சொல்லும் போது ஒரு சின்ன கேள்வி எழும், தனியார் பள்ளிகளோடு ஒப்பிடும் போது அரசு பள்ளியின் கல்வி தரம் சொல்லி கொள்கின்ற மாதிரி இல்லை. வருங்கால உலகம் என்பது பட்டு கம்பளம் விரித்த பாதையல்ல,  கரடு முரடானது  கல்லும் முள்ளும் நிறைந்தது அத்தகைய கொடிய பாதையில் நமது குழந்தைகள் நடை போட வேண்டுமென்றால் அல்ப சொல்பமான படிப்பினால் எந்த உதவியும் இல்லை.  நல்ல தரமான கல்வி இருந்தால் தான் வாழ்க்கை சூழல் ரம்மியமாக இருக்கும் அதனால் தான் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டியுள்ளது. என்று கூறுவதில் தவறில்லை.

    தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு கிராம புறங்களில் 3000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுப்பதில்லை.  நல்ல கல்வி தகுதியும் அனுபவமும் இருந்தால்  சில பள்ளிகளில் 5000 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.  நகர புறங்களிலும் ஏறக்குறைய இதே நிலைமை தான்.  இவ்வளவு குறைவான ஊதியம் பெற்றும் தங்களது பொறுப்பை மிக நன்றாக உணர்ந்து அவர்கள் செயல்படுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும் ஒரு வகுப்பில் நாற்பது குழந்தைகள் இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் தனி கவனம் செலுத்துகிறார்கள் கல்வி ஆண்டின் முடிவில் தேர்ச்சியின் சகவிகிதம் நிறைவாகவே இருக்கிறது குழந்தைகள் விரும்பி படிக்கிறார்களா?  அல்லது திணிக்கப்படுகிறதா?  என்பது வேறு விஷயம்,  தனியார் ஆசிரியர்கள் பொறுப்பை உணர்ந்து வேலை செய்கிறார்கள் என்பது தான் முக்கிய விஷயம்.

    அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் துவங்கி முப்பதாயிரம் வரையிலும் கூட சம்பளம் கொடுக்கப்படுகிறது.  மிக பழைய காலத்தில் வாக்கரிசிக்கு வழி இல்லாதவன் தான் வாத்தியார் வேலைக்கு போவான் என்ற பழமொழி இருந்தது.  இன்று ஊர் புறங்களிலும், நகர புறங்களிலும் வசதியான மக்கள் யார் என்றால் அரசு ஆசிரியர்கள் தான்.  பல ஆசிரியர்கள் தங்களது வருமானத்தை இரட்டிப்பாக்க கந்து வட்டி கொடுக்கிறார்கள்.  மலிவான விலைக்கு நிலங்களைவாங்கி வீட்டுமனைகள் போட்டு பல மடங்கு லாபம் சம்பாதிக்கிறார்கள்.  வகுப்பறையில் இவர்கள் பாடம் நடத்துவது என்பது காளைமாட்டில் பால் கறப்பதற்கு ஒப்பானது தான்.  பிள்ளைகளை புத்தகம் எடுத்து படிக்க சொல்லிவிட்டு  பார்யாரிடம் இருந்து எவ்வளவு பணம் வரவேண்டியுள்ளது.  புதிதாக யாருக்கு கொடுக்கலாம் என்று கணக்குகள் தான் போட்டு கொண்டு இருப்பார்கள்.  இன்னும் சில ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வந்தோமா?  மேஜையில் கவிழ்ந்து படுத்து உறங்குகிறோமா?  என்று இருந்து விட்டு வீட்டுக்கு போய்விடுகிறார்கள்.   கடமையை செய்ய வேண்டுமென்று நினைக்கின்ற ஒரு சில ஆசிரியர்கள் இந்த இருதரப்பாரிடம் மாட்டி செயல்பட முடியாமல் தத்தளிக்கிறார்கள்.  இந்த சூழலில் படிக்கும் குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பு வந்துகூட எ.பி.சி.டி. தெரியாமல் முழிக்கிறார்கள் என்பதை கூட மன்னிக்கலாம் தமிழே படிக்க தெரியாமல் இருப்பதை நினைக்கும் போது அரசு ஆசிரியர்களின் மீது வெறுப்பு தான் வருகிறது.  ஒரு கோணத்தில் அவர்களை குறை சொல்வதிலும் பயனில்லை.  அரசாங்கம் ஒழங்காக இருந்தால் இவர்கள் ஏன் தப்பு செய்கிறார்கள்.

    இப்போது சமச்சீர் கல்வி கொண்டு வந்து விட்டோம்.  இனி தமிழ்நாட்டில் அமைச்சர் பேரனாகயிருந்தாலும், அன்றாட காய்ச்சியின் பேரனாக இருந்தாலும் கூட ஒரே பாடத்தை தான் படிக்க வேண்டும்.  அறிவில் எல்லோரும் சமமாகி விடுவார்கள்  என்ற பேச்சு மிக வேகமாக அடிப்படுகிறது. சமச்சீர் கல்வி என்றால் என்னவென்று நானும் முழமையாக படித்து பார்த்தேன்.  அதன் செயல்திட்டத்தில் எந்த குறை பாடும் இருப்பதாக சொல்ல முடியாது.  மனப்பாடம் செய்பவனுக்கே அறிவாளி என்ற தகுதி கொடுக்கப்படும் என்ற மெக்காலேயின் அடிப்படை சித்தாந்தம் மாறவில்லையே தவிர இப்போது நடைமுறையில் உள்ள கல்வி முறைக்கு ஒரு தற்காலிக மாற்று மருந்து என்று துணிந்து சொல்லலாம்.

    பரவாயில்லை நிலைமை ஒரளவு சரியாகும் என்று நான் நம்பிக் கொண்டிருந்த போது ஒரு தனியார் பள்ளியின் தாளாளர் என்னை சந்தித்தார். எங்கள் பள்ளிகளில் எல்லாம் தலைமை ஆசிரியர்கள் கட்டளை போடுபவர்களாக இருக்கிறார்கள்.  அரசாங்க தலைமை ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களை வேலை வாங்க நினைத்தாலே தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவார்கள்.  அதனால் எங்களுக்கு சமச்சீர் கல்வியை பார்த்து எந்த பயமும் இல்லை என்றார் அவர் சொல்லுகின்றபடி கூட நடக்கலாம்.  பேய் அரசாட்சி செய்யும் நாட்டில் பிணங்களை திண்ண வேண்டியது தான் சட்டங்களின் வேலை.

    யானைக்கு தன் பலம் தெரியாது என்பார்க்கு இந்த பழமொழி யானைக்கு பொருந்துகிறதோ இல்லையோ கட்டாயம் தமிழனுக்கு பொருந்தும் அன்னிய கலாச்சாரத்தை, அன்னிய மொழியை, அன்னிற மதத்தை உயர்வாக நினைக்கின்ற ஒரே இனம் தமிழினம் தான்.  ஒரு காலத்தில் எகிப்து வரையில் பரவி கிடந்த தமிழ்மொழி இன்று தமிழனின் ஆங்கில மோகத்தால்  தமிழ்நாட்டிற்குள்ளயே அனாதையாக இடக்கிறது.  தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா?  சோறு சாப்பிட முடியுமா?  என்று கேட்கின்ற அளவுக்கு தமிழக அரசு தமிழை கழுத்தை அறுத்து கொன்று கொண்டிருக்கிறது.  இன்றைய தமிழன் மொழியால் மட்டும் அந்நிய தன்மையை பெறவில்லை.  நடைமுறை வாழ்க்கையில்  பழக்க வழக்கத்தில் சிறிது சிறிதாக அந்நியமயமாகி வருகிறான்.

   முன்புயெல்லாம் இருபது வயதிற்கு மேல் தான் காதலிப்பதற்கும்,  காதலை பகிர்ந்து கொள்வதற்கும் தைரியம் வரும்.  இப்போது எல்லாம் பதினைந்து வயதிலேயே இரண்டு காதல் அனுபவத்தையாவது குழந்தைகள் பெற்றுவிடுகிறார்கள்.  இதில் காதலிக்க ஒருவராம். நட்பு பாராட்ட பெண் தோழி (அ) ஆண் தோழன் என பலராம். இதற்கான விளக்கத்தை வேறு குழந்தைகள் தருகிறார்கள்.  காதல் என்பது வாழ்க்கை துணைவன் நட்பு என்பது செக்ஸ் பாட்னார் செத்துவிட்டாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

    குழந்தைகளின் இந்த நடத்தைகள் பெற்றோர்களுக்கு தெரியாமலா நடக்கிறது என்று சிந்திக்க வேண்டிய  அவசியமே இல்லை.  பாதிபேருக்கு குழந்தைகள் இருக்கிறது என்று நினைப்பே கிடையாது.  மிதிபேர் குழந்தைகளின் செயலை விளையாட்டு என்று ரசிக்கிறார்கள்.  விணையாகும் போது செய்வதறியாது தவிக்கிறார்கள்.

    காதல் நோய் தான் இளம் பருவத்திலேயே குழந்தைகளை பீடிக்கிறது  என்று இல்லை.  ஆடம்பர நோயும்,  அபரித கற்பனை நோயும் அவர்களை திசை தவற செய்கிறது.  இத்தனைக்கும் காரணம் என்ன விளையாட வேண்டிய வயதில் விளையாடாமல் உடல்பயிற்சி செய்ய வேண்டி வயதில் செய்யாமல் சதாசர்வ காலமும் குழந்தைகளை படிபடியென்று வற்புறுத்தி அவர்களது குழந்தை தன்மையை காயடிப்பது தான் காரணம்.


    புதிதாக குழந்தை பெற்று கொள்ள போகிறர்களா?  உங்கள் குழந்தை நல்ல பிள்ளையாக வளர வேண்டும் என்று நினைக்கிறிர்களா?  தயவுசெய்து குழந்தையை குழந்தையாக வளர விடுங்கள்.  அது போதும்.  நாளை உங்கள் பிள்ளை உங்கள் பேரை சொல்லுவான் அல்லது இவனை எவன் பெற்றான்.  அவனை முதலில் உதைக்க வேண்டுமென்று ஊர் சொல்லும்.

    நமது குழந்தைகளுக்கு கைவீசம்மா கை வீசு என்று பாடல் கற்று கொடுக்கிறோம்.  அந்த பாடலை கூட குழந்தைகள் கைகளை கட்டியப்படி தான் பாடுகின்றன.  காலகொடுமையால் அவர்களது கல்வி ஆங்கிலமாகவே இருந்து தொலையட்டும் வீட்டிலாவது அவர்களுக்கு தமிழை கற்று கொடுங்கள்.  அதையும் வற்புறுத்தி வேண்டாம்.  நிறைய நேரம் விளையாட விடுங்கள். நல்ல ஆரோக்கியமான உணவை. சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும் என்றால் தாத்தா பாட்டியிடம் குழந்தையை விடுங்கள் அல்லது யாராவது ஒருவர் குழந்தைக்காக வேலையை ராஜினாமா செய்யுங்கள் குழந்தையை விட பணம் பெரியதல்ல.  பணத்தை பெரியது என்று நினைத்தால் உயர்ந்த மலை முகட்டில் கொட்டி கிடக்கும் மாமிச துண்டுகளை காக்கை கழுகுகள் கொத்தி திண்பது போல நமது குழந்தைகளின் எதிர்காலத்தை அரசியல்வாதிகளும், சமூக விரோதிகளும் கொத்தி தின்று விடுவார்கள். இப்பொழுதே விழித்து கொண்டால் சமூக பிழைக்கும் நாளைக்கு பார்க்கலாம் என்றால்….?




Contact Form

Name

Email *

Message *