Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுள் யார் ..?

கடவுள் யார்?
   
மிகச் சுலபமாக இந்தக் கேள்வியை கேட்டு விட்டீர்கள்.ஆனால் இந்தக் கேள்வியின் ஆழமும், அர்த்தமும் பலகாலம் தவம் புரிந்த ஞானிகளாலும்,முனிவர்களாலும் கூட அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை கடவுளைப்பற்றி பலவிதமான விளக்கங்களும் கருத்துகளும் அநாதி காலம் தொட்டே கூறப்பட்டு வருகின்றன.ஆனால் அவற்றாலும் அல்லது வேறு எதனாலும் இறைவனைப்பற்றி முழுமையாகக் கூறமுடியாது. ஏனென்றால் கூறுதல், கேட்டல் என்பது “வார்த்தை” சம்பந்தப்பட்ட விஷயம்.இன்று உலக நடைமுறையில் இருக்கும் எல்லா வார்த்தைகளுமே எச்சில்படுத்தப்பட்டவை.எச்சில் படுத்தப்பட்ட எந்த வார்த்தையாலும் இறைவனை உணரமுடியாது. சொல்லப்படாத வார்த்தைகளே இறைவனை யார் என்று நமக்கு உணர்த்தும். ஏனென்றால் அவர் அனைத்திற்கும் ஆதாரமனாவர், மேலும் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர், அவரிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன, அனைத்தும் வாழ்கின்றன. மடிகின்றன, அவரை நெருப்பு சுடாது. நீர் நனைக்காது. காற்று உலர்த்தாது. பஞ்சபூதங்களையும். ஐம்புலங்களையும் கடந்தே கடவுளை யார் எனக் காணலாம். ஆனாலும் காணலாமே தவிர, சொல்ல இயலாது.
கேள்வி : கடவுளை அடைய என்ன வழி?
    அறிவு,உணர்ச்சி ஆகிய இரண்டும் வேறு வேறானவை என்று நாம் பொதுவாகக் கருதியிருக்கிறோம், ஆனால் நம் வாழ்க்கையில் இவை இரண்டுமே பின்னிப்பிணைந்து நம்மை வழிநடத்தி வருகின்றன, ஆயினும் உணர்ச்சி அலைகளே நம் வாழ்க்கைச் சமுத்திரத்தில் மேலோங்கி வீசுகிறது, அன்பு. ஆசை. கோபம். பயம். வெறுப்பு என்ற உணர்ச்சிகளே நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றன.
அறிவின் செயல்பாடு என்பது மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளது, அதுவும் ஆன்மிகம். கடவுள். ஆன்மா போன்ற விஷயங்களில் நமக்கு அறிவு குறைவாகவே உள்ளது, (இன்றைய சூழலில்) அறிவையும். உணர்ச்சியையும் ஒருங்கிணைத்தால் கூட கடவுளைப் பற்றிய விஷய ஞானம் நமக்கு வந்துவிடாது.

பின்னர் கடவுளை அடைய என்ன செய்வது?அறிவும், உணர்வும் உதாவதபோது கடவுளை அடைய நமக்கு எது உதவி செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். அறிவும், உணர்வும் தடமாறக் கூடியன.தடுமாற்றமே இல்லாத தீவிர நம்பிக்கைதான் கடவுளை அடைய ஒரே வழி, நம்பிக்கையுடன் தொடரும் இறைவேட்கையே இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும் எனவே நம்புங்கள். இறைவனை அடையலாம்.

கேள்வி : மந்திரங்களை உரு ஏற்றுதல் என்றால்?
முதலில் மந்திரங்கள் என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்வோம், “கங். க்லிம். ஸ்ரீம்” என்ற மந்திரங்களை எடுத்துக்கொண்டு அகராதியில் அதற்கான பொருளைத் தேடுவீர்களாயின் உங்களுக்கு பொருள் எதுவும் கிடைக்காது, அப்படியாயின் இது பொருளே இல்லாத வார்த்தையா என நீங்கள் சந்தேகப்படலாம், முதலில் இவை வார்த்தைகளே அல்ல.

விறகு வெட்டும் தொழிலாளி கோடாரியை ஓங்கி விறகைப் பிளக்கும்போது ஒரு ஹீங்கார ஒலி எழுப்புவான், கவனித்திருக்கிறீர்களா? அந்த ஒலி எங்கிருந்து வந்தது? அவனது நாபிக் கமலத்திலிருந்து (அடிவயிற்றிலிருந்து) வருகிறது, அதைப் போன்று மேற்குறிப்பிட்ட மந்திரங்கள் ஞானிகளின் நாபிக்கமலத்திலிருந்து வெளிவந்த  ஒலிகளே ஆகும், எப்படி அந்த மந்திர ஒலிகள் உருவாயினவோ அப்படியே அதை உபயோகிப்பது தான் உரு ஏற்றுதல் என்பதாகும்,  அதாவது உள்ளுக்குள் உருவானதை உள்ளுக்குள்ளேயே இடையறாது தியானம் செய்வதே உரு ஏற்றுதல் ஆகும். அப்படி உரு ஏற்றினால் மட்டுமே மந்திர சித்தி ஏற்படும்.


மௌன விரதம் என்பதன் பொருள் என்ன?

    “நிசப்தமே” மௌனம் ஆகும்.ஓசை எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருப்பதா நிசப்தம்? இல்லை, சதா சர்வ காலமும் எதையோ ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மனத்தைப் பிடித்து அடக்குவதே நிசப்தம், அதுவே மௌனம் ஆகும், இன்று நிறையப்பேர் மௌனவிரதம் இருக்கிறார்கள், பேசமட்டும் மாட்டார்கள், மற்ற எல்லாவற்றையும் செய்வார்கள், இதில் வேடிக்கை என்னவெனில் “ஆங். ஊங்” என்று ஒலிவேறு எழுப்புவார்கள், பல விஷயங்களை எழுதியும் காட்டுவார்கள், இது மௌன விரதம் ஆகாது.


பின்பு மௌன விரதம் இருப்பது எப்படி?
1    முதலில் உன் மனத்தை அமைதிப்படுத்து.
2     நீ விடும் மூச்சைக் கவனி.
3    அது எங்கே புறப்பட்டு எங்கே முடிகிறது என்று ஆராய்ச்சி செய்.
4    பின்னர் மூச்சு ஓட்டத்தில் மனத்தை லயப்படுத்து.
5    இவ்வாறு செய்ய உனக்குள் ஓர் அசாதாரணமான அமைதி நிலவுவதை உணர்வாய்.
6    இப்படி ஒரு நாளில் அரைமணி நேரமாவது பயிற்சிஎடு.
   இதுதான் விரதங்களில் மிகச் சிறந்த விரதமாகும். உன்னை இறைவனோடு ஐக்கியப்படுத்துவதற்கு மிகச் சிறந்த மார்க்கம் இதுதான்,மனத்தைப் பட்டினி போடுவதே அதாவது எண்ணங்களை அறுத்தெறிவதே விரதம் ஆகும்.உன் வாழ்க்கைப் போராட்டம் வெற்றியடைய வேண்டுமானால் இத்தகைய விரதத்தை மேற்கொள்,ஒருவேளை நாளைக்கே நீ இறைநிலையை அடையலாம்.

Contact Form

Name

Email *

Message *