Store
  Store
  Store
  Store
  Store
  Store

கண்மறைந்த காதலியே...!இருட்டான 
வயதில் 
வெளிச்சமாய் வந்து சென்றவளே! 
உன் 
பூவிரல் பிடித்து 
எழுந்து 
நின்றவன் எழுதும் கடிதம்.....

உன்னை 
முதல் முறையாக 
உன் வீட்டு 
முற்றத்தில்
மூங்கில் நாற்காலியில் 
பூத்த
தாமரைப்பூவாக பார்த்தேன் 

பார்த்த நொடியிலேயே 
நீதான் எனக்கு 
எல்லாமென என்னை கொடுத்தேன் 

உன் 
முகதரிசனம் 
பெரும் மாலை வேளைக்காக 
நாள் முழுவதும் 
கடிகாரத்தின் 
அடியில் 
தவம் கிடந்திருக்கிறேன் 
நொடிமுள் 
ஓசையை 
என் இதயத்துடிப்பு வென்றிருக்கிறது

உன் வீட்டுச் சுவரும் 
என் வீட்டுச் சுவரும் ஒன்றுதான் 
என்றாலும் 
அச்சுவரின் இடைவெளியை 
ஆகாய இடைவெளியாய் 
எண்ணி எண்ணி 
இதயம் கனத்திருக்கிறேன் 

உன் 
சந்திர வதனத்தையும் 
சங்கு கழுத்தையும் 
தொடுகின்ற ஆபரணத்தை 
ஏக்கமாய் பார்த்திருக்கிறேன் 

உன் 
இடையை சுற்றி 
தவழும் புடவையின் 
சின்ன நூலாக மாற தவமிருந்திருக்கிறேன் 

நீ மார்போடு 
அணைக்கும் புத்தகமாய் 
நானிருக்க கூடாதா 
என அழுதிருக்கிறேன் 

வெட்கத்தை விட்டு சொல்கிறேன் 
உனது 
பூம்பாதம் தாங்குகின்ற 
செருப்பாக  பிறந்திருக்க கூடாதா 
என 
என்னையே நான் 
நொந்திருக்கிறேன் 

உன் கால்களை 
தழுவும் கொலுசுகளின் 
மீது பொறாமைப் பட்டிருக்கிறேன் 

உன் கொலுசுகளிலிருந்து 
எழும்புகின்ற 
கிணுகிணு ஓசை 
என் செவிகளை 
தீண்டும் போது 
ஆத்மா சிலிர்ப்படைய மெய்மறந்திருக்கிறேன் 

உன் விரல் 
நுனித் தீண்டிய 
புத்தகப் பக்கங்களை 
வருடி கனவுகளில் மிதந்திருக்கிறேன் 

நீ 
முதல் முதலாக 
என்னிடம் பேசியது 
ஊரில் இருந்து எப்போது வந்தாய் 
என்ற நான்கு வார்த்தைகள் 
அந்த நான்கு வார்த்தைகள்தான் 
எனது நான்கு வேதங்கள் 
உன் 
குரலைக் கேட்டதும் அப்போதுதான் 
என் 
காதுகள் 
திறந்ததும் அப்போதுதான் 

இந்த 
வார்த்தையை உன்னிடமிருந்து 
கேட்பதற்காகவே 
ஜனனம் எடுத்திருப்பதை உணர்ந்தேன் 
என் 
பிறவியின் 
பயன் கிடைத்து விட்டதாக மகிழ்ந்தேன்

நீனாக 
வந்து என்னிடம் பேசியது 
மலரே 
வந்து வண்டிடம் 
கைகுலுக்கிக் கொண்டது போலிருந்தது 

நீ 
வந்து பேசிய 
அந்த நாளில் 
எனது வானில் 
ஆயிரம் நிலவுகள் அணிவகுப்பு நடத்தின 

என் தோட்டமெங்கும் 
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடித்துப் பறந்தன 
என் 
மனதிற்குள் மட்டும் 
மழை மேகம் 
சூழ்ந்து மத்தளம் கொட்டியது 

நான் 
பார்த்த இடமெல்லாம் 
தங்க நிறத்தில் 
அன்னப் பறவைகள் 
அமிர்த குளத்தில் நீச்சலடித்தன 
மின்னல் பூக்கள் 
சரம்சரமாய் தோரணம் கட்டின

நீ 
படிக்கச் சொன்னதனால் 
ஆமணக்காய் 
கசந்த கணக்கும் 
பூமணமாய் விரிந்தது 
இதுவரை 
தூங்கி வழிந்த வகுப்பரை 
வண்ண விளக்குகளால் 
அலங்கரிக்கப் பட்டன
மூகாரியாய் கேட்ட பாட சத்தம் 
பூபாளமாய் ஒலித்தது 
கடேசி இருக்கையில் 
காலம் தள்ளிய நான் 
முன்னுக்கு வந்தேன் 
உன் 
முன்னாலும் வந்தேன் 
மஞ்சள் புத்தகத்தையும் 
அரசில் அறிக்கைகளையும் 
மேய்ந்த என் கண்கள் 
உன் உதட்டசைவில் 
உதிர்ந்த 
வார்த்தை முத்துக்களை 
கோர்த்தப்பிறகு 
திருக்குறளையும் பகவத் கீதையையும் 
தேடிப்போனது 

உன் 
சுட்டுவிரல் காட்டிய 
திசையில் 
எனதறிவுக் குதிரை 
நடைபழக துணிந்தது

மீசை முளைத்தப் போது 
அறும்பிய காதல் 
ஊற்று நீராய் பொங்கி 
ஆற்று வெள்ளமாய் ஓடி 
என் ஆத்ம சகரத்தில் சங்கமித்தன

உனக்கு ஞாபகம் இருக்கிறதா 
அன்று 
மாட்டுப் பொங்கல் 
கொம்பு சீவிய 
மாடுகளும் வண்டிகளும் 
சாலையில் அணிவகுத்த 
மாலை நேரம் 
உன்வீட்டு வாசலில் நீயும் 
என்வீட்டு வாசலில் நானும் 
நின்றிருந்தோம் 
வெறும் காற்றில் 
வண்டி ஓட்டிய உன் தம்பிமை
தூக்கி அணைத்து முத்தமிட்டு 
ஒரக்கண்ணால் என்னைப் பார்த்தாய் 
அந்தப் 
பார்வையின் பாரத்தை 
தாளாமல் 
நான் கண்சொறுகியப் போது 
மலர் மலரும் 
ஓசையில் நீ சிரித்தாய்


ஒரு வெள்ளிக் கிழமை 
ஒலியும் ஒளியும் 
பார்க்க வீட்டுக்கு அழைத்தார் 
உன் அப்பா 
எனக்கு பிடித்த மாதிரி 
தண்ணீர் 
கலக்காத கட்டிப் பாலில் 
சர்க்கரை
இல்லாத காபி கொடுத்தாய் 

தங்கம் போல் மின்னிய 
பித்தளை டம்ளரை 
வாங்கும் போது 
இருவர் 
விரல்களும் உரசிக் கொண்டன 

அந்த உரசலில்தான் 
உயிர் தீண்டலில் 
தத்துவம் அறிந்தேன் 
இதுவரை 
அறிமுகம் இல்லாத 
உணர்வுகளின் உருவங்களைப் பார்த்தேன் 
உருகுதலின் உண்மைத் தெரிந்தது

தொட்டால் மட்டுமே 
சுகமென்று 
நினைக்கும் வயதது 
உன் தீண்டலுக்காக 
ஒவ்வொறு இரவும் 
தூங்காமல் கனவுகளில் மிதந்தது 

உன்னை 
பார்க்கும் நேரமெல்லாம் 
தீயில் விழுந்து 
புழுவாய் நெழிந்தது 
உன் 
கழுத்தோர பூனை ரோமங்களில்  
உதடுகள் பதித்து 
இந்திர லோகத்திற்கு செல்ல 
துடிதுடித்து துவண்டது 
மருதாணி பூசிய 
உன் விரல் நகத்தில் 
முகம்பார்த்து 
கண்ணயர காத்திருந்தது 
நீ 
நடந்து செல்லும் போது 
மிதந்து வரும் வாசனையை 
நுகர்ந்து ஜீவன் வளர்ந்தது

அப்பப்பா! 
அந்த வயது 
கனவுகளும் ஏக்கங்களும்தான் 
எத்தனை சுகமானது 
இன்று நினைத்தாலும் 
நீரின்றி வெடித்த 
கிடக்கும் 
கந்தகப் பூமிகூட 
பச்சை போர்வையை போர்த்திக் கொண்டு 
பூவாய் சிரிக்கின்றது 
எரிமலை வாயிலிருந்துக் கூட 
வசந்தம் அழைக்கிறது 

காதலும் காமமும் 
கைகோர்த்துக் கொண்டு நடனமாடிய 
அந்த நாளில் 
ஒர்இரவு 
நீயும் நானும் 
 ""நாம்'' 
என்றானோம்

வானத்தில் மிதப்பதற்கே 
மேகம் பிறந்தது 
கடலில் கலப்பதற்கே 
நதி பிறந்தது 
மலரை அணைப்பதற்கே 
காற்று வந்தது 
தாகம் தணிப்பதற்கே 
நீர் வந்தது 
உன்னில் நானும் 
என்னில் நீயும் 
கறைந்து போவதற்கே
நமக்கு ஜீவன் வந்தது

சங்கமித்தப் பிறகுதான் 
நம் கண்கள் திறந்தன
திறந்தக் கண்களில் 
பூவெல்லாம் 
நெருப்பாக வந்து விழுந்தது 
வானத்தில் 
வட்டமடித்த வல்லுர்கள் 
நம்மை 
கொத்தித் தின்னக் காத்துக் கிடந்தன 
பொந்திற்குள் 
பதுங்கியப் பாம்புகள்
சீறிவிழுந்தன 
தொட்ட இடமெல்லாம் 
சிலந்தி வலைகள் 
நம்மை சிறைபிடிக்க துடித்தன 
கண்ணுக் கெட்டிய 
தூரம் வரை 
பாலை வனமே காட்சியளித்தது 
வேட்டை நாய்களின் 
வெறிபிடித்த துறத்தலுக்கு 
என்னை மட்டுமே 
தத்தளிக்க விட்டு 
நீ 
எங்கோ 
மறைந்திருந்து 
வரைந்த
ஓவியத்தில் 
வரையாத ஓவியமாய் சிரிக்கிறாய்

அந்த ஓவியத்தில்
வெகு நாட்களுக்கு பிறகு
உன்னைக் கண்டேன்
உன்
நீல விழிகள்
சிவந்த அதரங்கள்
கூரிய நாசி
அப்படியே இருக்றது


உன்
விரல்களும்
நகங்களும்
அதில் முகம் பார்க்கும்
நிலவும் அப்படியே இருக்கிறது

வாழைக் குறுத்தில்
குங்குமத்தை பூசிய
உன்
பிஞ்சி உள்ளங் கால்களும்
அப்படியே இருக்கிறது
பூ மலரும்
ஓசையையும்
அதிர்ச்சியாôக்கும்
உன் யாழ் குரல்
இன்னும்
அப்படியே இருக்கிறது


நீ
நடந்து செல்லும் போது
கடந்து செல்லும்
தாமரைப்பூ வாசமும்

இன்னும்
அப்படியே இருக்கிறது


மோகத்தைக் கொல்லும்
உன் பார்வையும்
காமத்தை வெல்லும்
உன்னசைவும்

இன்னும்
அப்படியே இருக்கிறது


நான் மட்டும் தான்
நரை விழுந்து கூன் ஒடிந்து
கண்களில் குழி விழுந்து
மாரிக் கிடக்கிறேன்


வலுவான என் கைகள்
ரயில் சக்கரம் போல
தடதடக்கிறது
என்கால்களும்

குடிகாரன் போல் தள்ளாடுகிறது
இமைகள் பிரியவும்
உதடுகள் அசையவும் மறுக்கின்றன
மழை இல்லாமல்
வெடித்துக் கிடக்கும் நிலம் போல
கால தேவன்
என்னுடலெங்கும் கோடு வரைந்திருக்கிறான்
அதனால்
செலறித்த மரமாய் கிடக்கிறேன்இப்போதுதான்
உன்
இளமையும் யவனமும்
குறையாத ரகசியம் தெரிகிறது
நீ
அழியாத ஓவியம் ! 
சிலையாய் நிற்கும் காவியம்!

அனல் காற்றில் 
புழுதி பறக்க 
பாதையெல்லாம் 
கானல்நீர் தொடர 
வயல்வெளி எல்லாம் 
வெடித்து பிளக்க 
கொக்குகளும் நாரைகளும் 
கருவேலம் மரத்தில் செத்துவிழ 
கலப்பைக் கட்டைகள் 
விறகுகளாகும் கடேசி நேரத்தில் 
வானிலிருந்து 
பூமிக்கு வந்த 
மழைத்துளி  தேவதை நீ

என் கண்மறந்த காதலியே! 
உன் உதட்டு உஷ்னத்தால் கிடைத்த 
உயிர்சிலிப்பும் 
நீ பேசிய வார்த்தைகளால் பெற்ற 
பேராண்மையும் 
உன்விரல் பிடித்து நடந்ததனால் வந்த 
அனுபவமும் 
என் னை இன்னும் 
மனிதனாக ஜீவிக்க வைக்கின்றது 
என்றாலும் 
நானோ 
எலும்புகளில் சதைபோர்த்தி 
நரம்புகளால் கட்டப்பட்ட 
சாதாரண மனிதன்

வானத்திலிருந்து 
பாய்கின்ற 
சூரிய அம்புகள் 
என்உடல் கிழித்து 
உட்புகும் நசநசப்பிலும் 
கூரைவழியாக ஒழுகி 
கால்வழியாய் வழிந்தோடும்
மழைநீரின் பிசுபிசுப்பிலும் 
நமத்துப்போன நம் வாழ்கை 
செல்லரித்த ஓவியமாய் 
சுவற்றில் தொங்குகிறது 
கூடவே
நானும் தொங்குகிறேன்
Contact Form

Name

Email *

Message *