Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுள் உருவாக்கிய மதம்


இந்து மத வரலாற்று தொடர் 1
  ன்பை நிலை நாட்டுவதற்கு உருவானது தான் மதங்களாகும்.  எந்த மதமும் வன்கொடுமையை வலியுறுத்தவில்லை.  ஆனால் மதங்களின் பெயரால் தான் வன்முறைகள் இன்று பரவலாக நடந்து வருகிறது.  அதற்கு காரணம் என்ன?  அன்பை போதிக்கும் மதங்களால் அராஜகங்கள் நிகழ்வது ஏன்?  என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் கிடைக்கும் பதில் ஒன்றுதான்.  மதங்களை தவறுதலாக புரிந்து கொள்வதும் என்மதம் தான் உயர்ந்தது என்று மற்ற மதங்களை ஊதாசினப்படுத்தும் மனப்போக்கும் தான் மத வன்முறைகளின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது என்ற பதில் கிடைக்கும்.

மத வெறியையும் மத அறியாமையையும் நீக்குவதற்கு என்ன வழி என்று மக்களை நேசிக்கும் மனித நேயமிக்க சிந்தனையாளர்கள் பலரும் தங்களது அறிவாற்றலைக் கொண்டு ஆராய்ந்து வருகிறார்கள்.  அவர்களின் சிந்தனைக்கு உரமாகவும் சீர்திருத்தத்திற்கு வழியாகவும் எனக்கொரு யோசனை தோன்றியது அந்த யோசனையின் விளைவுதான் இந்த தொடர் பதிவாகும் 


 மதப்பிரச்சாரம் என்பது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஒரு விஷயமாகும்.  ஆனால் அந்த பிரச்சாரம் எந்த நோக்கில் அமைந்திருக்கிறது என்றால் ஒன்றை தாக்கியும் இன்னொன்றை போற்றியும் தான் அமைந்திருக்கிறது.  இதில் தான் சிக்கல்களும் பிரச்சனைகளும் முளைவிடுகின்றன.  எனவே அந்த மதப்பிரச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.  இதில் இன்னொரு விஷயத்தையும் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  பொதுவாக இன்றைய மதப்பிரச்சாரம் என்பது சுய மதத்தினரிடம் அல்லாமல் மாற்று மதத்தினரிடம் தான் அதிகப்படியாக நடத்தப்படுகிறது.

 எனவே காழ்புணர்ச்சி அற்ற வகையிலும் சுய மதத்தினரே தங்களது மதக் கருத்துகளை நன்கு புரிந்துணரும் வகையிலும் நமது நோக்கம் அமைந்திருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மதங்களில் புகுந்திருக்கும் வெறியுணர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.  ஆகவே அந்தந்த மத அறிஞர்கள் தங்கள் மக்களுக்கு தம்தமது மதக்கருத்துகளை புரியும் வண்ணம் போதித்து மாற்று மதத்தினரையும் நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மதங்களின் மீது பதிந்திருக்கும் வன்முறை என்ற கொடிய பாவம் கழுவப்படும்.

 சில நாட்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒரு அன்பரை நான் சந்திக்க நேட்டது.  அவர் பல விஷயங்களைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கடைசியாக மதசம்பந்தப்பட்ட சில கேள்விகளை என்னிடம் கேட்டார்.  அந்த கேள்விகளில் மிகவும் முக்கியமானது இந்துக்களாகிய நீங்கள் சிலைகளை வழிபடுவது ஏன்?  பல கடவுள்களை நம்புவது ஏன்?  என்பதாகும்.  அவருக்கு நான் இந்துக்கள் உருவ வழிபாட்டை கடைபிடிப்பதன் காரணத்தையும் கடவுள் கொள்கைகளையும் விளக்கமாக எடுத்துச் சொன்னேன்.  அந்த விளக்கங்களில் அவர் எந்த வகையிலும் திருப்தி அடையவில்லை.  பொத்தாம் பொதுவாக கல்லை வணங்குவது தவறு என்பதில் பிடிவாதமாக இருந்தாரே தவிர நான் சொன்ன கருத்துகளை புரிந்து கொள்ள எந்த முயற்சியுமே எடுக்காமல் கண்மூடித்தனமாக தான் பேசுவதையே பிடித்துக் கொண்டு நின்றார்.  இத்தகைய பிடிவாதக் காரர்களிடம் வாதம் செய்வது என்பது மலையின் முன்னால் பேசுவதற்கு ஒப்பானதாகும்.  நமது பேச்சு நம் காதில் விழுமே தவிர மலையை எந்த வகையிலும் பாதிக்காது அதனால் அவரிடம் வேறு சில காரியங்களை பேசி அனுப்பி வைத்து விட்டேன்.  இப்படி மற்றவர்களின் கருத்துகளை காது கொடுத்து கேட்காதவாறு பல மனிதர்கள் உருவாக்கப்பட்டு நடமாட விடப்பட்டிருக்கிறார்கள்.  அவர்கள் மற்றவர்களின் கருத்துகளை மட்டுமல்ல மன உணர்வுகளையும் புரிந்து கொள்வது இல்லை.


  சரி ஒரு இஸ்லாமியன் இந்து மதத்தை புரிந்து கொண்டு விடுவதினால் பல நன்மைகள் உண்டு என்றாலும் கூட புரிந்து கொள்ளாமல் போவதனால் பெரும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டு விடப்போவதில்லை.  ஆனால் ஒரு இந்து தனது மதத்தை தெரிந்து கொள்ளாமல் போவதனால் நிச்சயம் பல பாதிப்புகள் ஏற்பட்டே தீரும் அந்த பாதிப்புகள் நமது நாட்டின் ஆத்மாவை அழிப்பதாகவே அமைந்து விடும்.

 மிக வேதனையான ஒரு விஷயத்தை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.  இந்துக்கள் என்று கூறிக்கொள்ளும் எத்தனை பேருக்கு தங்களது மதத்தைப் பற்றிய அறிவும் தெளிவும் இருக்கிறது.  என்னால் சர்வ நிச்சயமாக அறுதியிட்டு கூறமுடியும் நம்மில் நூற்றுக்கு பத்து பேருக்கு கூட நம் மதத்தைப் பற்றி துளி அளவும் ஞானமில்லை என்று.  சரி நம்மவர்கள் ஞானம் இல்லாமல் போனதற்கு அவர்கள் மட்டும் தான் காரணமா என்று கேட்டால் நிச்சயம் அவர்களை மட்டுமே குற்றவாளிகள் என்று கூறி விட முடியாது.  சமயத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய ஆச்சாயர்களே தங்களது பணிகளை திறம்பட செய்யாத குற்றவாளிகள் என்று கருத வேண்டும்.

 புவியியல், பொறியியல் என்று படிப்பதனால் வேலை கிடைக்கிறது.  வருவாய் வருகிறது.  வயறும் நிறைகிறது.  மதத்தை பற்றிய அறிவை பெறுவதினால் என்ன கிடைத்து விடப்போகிறது உலக வாழ்க்கைக்கு உதவாத மத அறிவு தேவையே இல்லை.  என்று சிலர் நினைக்கிறார்கள் இவர்கள் நிச்சயமாக புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே எனது கருத்தாகும்.  ஒரு மனிதன் வாழ்வதற்கு ஆகாரம் மட்டுமே போதுமானது என்றால் மனிதனையும், மிருகத்தையும் சமமான தரத்திலேயே வைத்துவிடலாம்.  மிருகத்திலிருந்து மனிதனை வேறுபடுத்தி உயர்த்தி காட்டுவது பகுத்தறிவோடு கூடிய பண்பாட்டு செறிவாகும்.  பண்பாடு தெரியாத எந்த மனிதனும் அமைதியாக வாழ்ந்து விடமுடியாது.  மதம் என்பதும் மனிதனை பண்படுத்தும் பண்பாடு தான்.  இன்னும் சொல்வதென்றால் மதத்திலிருந்து தான் பண்பாடே தோன்றியது எனலாம்.

  கடிவாளம் இல்லாத குதிரை நாலா திசையும் ஓடி ஆடி வீணாக அலைவது போல் ஒழுக்க நெறியில்லாத மனிதனும் தனது வாழ்நாளை வீனாக்கி கொள்கிறான்.  எனவே மனிதன் தான் அமைதியாக வாழவேண்டும் என்ற சுயநல காரணத்திற்காவது மத அறிவை பெற்றே ஆகவேண்டும்.  அப்படி பெற மறுத்தால் காற்று போன போக்கில் காற்றாடி பறந்து கிழிந்து கிடப்பது போல் நமது வாழ்க்கையும் கிழிந்து போய்விடும்.

 நமது ஜனங்கள் மத அறிவை பெறாமல் இருப்பதற்கு அவர்களின் அசட்டை மட்டும் காரணமல்ல ஆச்சாயர்களின் கவனக் குறைவும் காரணம் என்று முன்பே சொன்னேன்.  அது நான் வேடிக்கைகாக கூறியது அல்ல வேதனையோடு கூறியது ஆகும்.  நமது சங்கராச்சாயர்களும், ஜீயர்களும், பட்டர்களும் தங்களது பார்வைகளை விசாலப்படுத்தாமல் ஒரு சிறு குழுக்களின் மீது கவனம் செலுத்தி பெருவாரியான ஜனங்களை தங்களது ஞானத்தால் வழிநடத்தாமல் போனதே மிகப்பெய குற்றமாகும்.  மடாதிபதிகள் என்பவர்கள் மக்களின் பணியாளர்களே தவிர இறைவனின் அவதாரங்கள் அல்ல.  இவர்கள் தங்களை அவதார புருஷர்களாக கருதிகொண்டதனால் ஏற்பட்ட சோகமே நம்மக்களின் தோல்விகளாகும்.  மன்னர்களின் மானியங்களை திருமடங்களின் கருவறைக்குள் பாதுகாத்து வைக்கும் சிறத்தையை விட்டுவிட்டு மதக்கருத்துகளை மன்னவனுக்கு மாடு மேய்க்கும் சின்னவனுக்கும் சொல்லியிருப்பார்களே யென்றால் இன்றைய அவல நிலை ஏற்பட்டிருக்காது.

 கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மத அமைப்புகளில் ஒரு நடைமுறை இருக்கிறது.  அது என்ன வென்றால் தங்களது மதத்தைச் சார்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது வரை மதக்கல்வி  அளிப்பது ஆகும்.  அந்த நடைமுறை நமது இந்து மதத்தில் எந்த பகுதியிலும் இல்லை அதனால் தான் நம் மதத்தின் புனித நூல் எது என்று கூட அறியாத பலர் இன்றும் இருக்கிறார்கள்.  இந்த நிலைமை இன்னும் தொடர்ந்தால் வருங்காலத்தில் நம் மதத்தின் அறிவுக் கருவூலங்கள் எது என்பதே தெரியாத வன்னம் அழிந்து போகக் கூடிய துயர நிலை ஏற்பட்டுவிடும்.  இதை மாற்ற உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தே ஆகவேண்டும்.


  சிலர் கேட்கலாம் நமது நாடு முழுவதும் இந்து கோவில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  திருப்பதி, சபரிமலை, வைஷ்ணவி, காசி போன்ற புனித ஸ்தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  நகரங்கள் மட்டுமல்லாது கிராமபுறங்களில் கூட ஆன்மீக கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் போன்றவைகள் அதிகத்திருக்கிறது.  நிலைமை இத்தகைய வளர்சி பாதையில் செல்லும் பொழுது மத அறிவு வளர்ந்து தானே இருக்க வேண்டும்.  நூற்றுக்கு பத்துபேருக்கு கூட மத ஞானம் இல்லை என்பது எந்த வகையில் சரியாகும் என்று.

  இவர்கள் கேட்பதில் தவறுகள் இருப்பதாக நான் கருதவில்லை.  ஆனால் இவைகளால் மட்டுமே மதஞானம் பெருகி உள்ளது என்று கூறி விட இயலாது.  ஆலயங்களுக்கு செல்வதும் யாத்திரைகள் மேற்கொள்வதும் கருத்தரங்கங்களை கேட்பதும் ஒரு மனிதனின் சமய அறிவை பெருக்கிவிடும் என்றால் பட்டி தொட்டியெங்கும் பகவத் கீதை பரவியிறுக்கும் பெருவாயான கிறிஸ்துவர்கள் கையில் பைபுளை வைத்துக் கொள்வது கௌரவம் என்று கருதுவது போலானது பகவத் கீதையை வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கும்.

  ஆனால் நிலைமை என்னவென்று நமக்கு தெரியும் மக்கள் இன்று அலகு குத்துவதும், காவடி எடுப்பதும் நெருப்பில் நடப்பதும் தான் சமய வாழ்க்கை என்று கருதும் அறியாமை நிலை மாறியிருக்கும்.  பல கிராமங்களில் சில காட்சிகளை நேரடியாகவே நான் பார்த்திருக்கிறேன் கிறிஸ்துவ மத போதகர்கள் நம் மக்களை பார்த்து நீங்கள் கல்லையும், மண்ணையும் வணங்குகிறீர்கள் அது சாத்தானின் வழிபாடாகும் என்று கேலியும் கிண்டலுமாக பேசுகின்ற பொழுது  நம் மக்களில் பலர் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதையும் கோபத்தால் துடிப்பதையும் பார்த்திருக்கிறேன்.  அவர்களிடம் மட்டும் சரியான சமய அறிவு இருந்திருந்தால் கேலி செய்யும் பாதிரிகளை பார்த்து கத்தோலிக்கே ஆலயங்களிலிருக்கும் சிலைகள் மட்டும் கடவுளா முதலில் உங்களது சிலை வழிபாடுகளை நிறுத்தி விட்டு எங்களை பற்றி பேசுங்கள் என்று காரசாரமாக பதில் சொல்லியிருப்பார்கள்.  ஆனால் பாவம் அவர்கள் அப்படி பயிற்றுவிக்கப்படவில்யே நமது மடாதிபதிகள் அவர்களை பல்லாக்கு தூக்குபவர்களாகத்தானே வைத்திருக்கிறார்கள்.


 இந்த மாதிரியான சிந்தனைகள் எனக்குள் எழுந்து கொண்டு இருந்த பொழுது எனது சீடர்களில் ஒருவரான சிவானந்தத்தின் குழந்தை சிவசங்கரி என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள். “ குருஜி இந்து மதம்னா என்ன”?  என்பதே அந்த கேள்வியாகும்.  இது சாதாரணமான ஒரு குழந்தையின் விளையாட்டு தனமான கேள்வியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் அந்த கேள்வியை என்னால் விளையாட்டு தனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  காரணம் நமது மதத்தை பற்றிய அறிவு மக்களிடம் இல்லை மத வல்லுநர்கள் அதை மக்களுக்கு தரவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது இந்து மதம் என்றால் என்ன என்று மக்கள் அறிந்து கொள்ள இதுவரை நாம் செய்தது என்ன என்றெல்லாம் எனக்குள் எத்தனையோ கேள்விகள் எழும்பியது.

 மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சொல்லுவது மிக எளியது.  ஆனால் அப்படி குற்றம் கண்டுபிடிப்பதில் மட்டுமே ஒருவனின் சமூகப்பணி முடிந்து விடுகிறதா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.  குறைகளை பற்றி பேசிக்கொண்டிராமல் அவைகளை நிறைகளாக்க முயற்சிப்பவனே சிறந்த மனிதன் என்று எப்போதுமே நான் கருதுவது உண்டு.  அதனால் என்னால் முடிந்த வரை நமது மதத்தை பற்றி எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்து சொல்வது என்று முடிவு செய்ததின் விளைவே இந்த பதிவாகும் .

 எந்த ஒரு புத்தகத்தையும் எழுதுவதற்கு முன்னால் அதை எப்படி ஆரம்பிப்பது என்பது சிக்கலான ஒரு விஷயமாகும் அந்த சிக்கலை நிவர்த்தி செய்து விட்டோம் என்றால் எந்த சிக்கலையும் எதிர்கொண்டு சமாளித்து விடலாம்.  எனவே இந்த தொடரை குழந்தை சிவசங்கரி கேட்ட இந்து மதம் என்றால் என்ன என்ற கேள்வியிலிருந்தே ஆரம்பிக்கலாம்.


  நாம் அனைவரும் இந்துக்கள் நமது மதம் இந்து மதம் என்பது எப்படி நமக்கு தெளிவாகத் தெரியுமோ அதை விட தெளிவாக இந்து மதம் என்ற பெயர் நமக்கு நாம் சூட்டிக் கொண்டது அல்ல.  அந்நியர்கள் நமக்கு தந்த பெயராகும் என்று தெரியும்.  நமது நாட்டிலுள்ள பழைய கால நூல்கள் எதுவும் நமது மதத்தை இந்து மதம் என்ற பெயரில் அழைக்கவே இல்லை.  அவைகள் நமது மதத்தை சனாதன தர்மம் என்ற பெயரிலேயே அழைக்கிறது.  கி.பி. 5-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தத்த சாஸ்திர நூல் ஒன்றே இந்து மதம் என்ற வார்த்தையை முதல் முதலில் பயன்படுத்துகிறது.  அதற்கு முன்பு உள்ள அனைத்து நூல்களும் என்றும் அழியாது நிலைத்திற்கும் வழிமுறை என்ற பொருள் கொண்ட சனாதன தர்மம் என்ற பெயரையே மதத்தை குறிப்பிட பயன்படுத்துகிறது.  நிலைமை இப்படி இருக்க இந்து மதம் என்ற பெயர் எப்போது யாரால் நமக்கு கொடுக்கப்பட்டது என்ற வினா எழும்புவது இயற்கையே ஆகும்.

   சிந்து நதிக்கு கிழக்கு பக்கத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் கிரேக்கர்கள் இந்துக்கள் என்று அழைத்தார்கள்.  சிந்து நதியோர மக்கள் என்றால் அவர்களை சிந்துக்கள் என்று தானே அழைக்க வேண்டும்.  இந்துக்கள் என்று எப்படி அழைக்கலாம் என்று கேட்டால் அதற்கொரு வேடிக்கையான பதில் இருக்கிறது.  பழைய பாரசீக மொழியில் சீ என்ற எழுத்தே கிடையாது.  அவர்கள் சீ என்று துவங்கும் பதங்களை ஹீ என்ற எழுத்திலேயே அழைப்பார்கள் அதனால் தான் சிந்துக்கள் ஹிந்துக்களானார்கள்.

  உலகிலுள்ள பிற மதங்கள் அனைத்திலேயும் ஒரு குறிப்பிட்ட கொள்கை மட்டும் தான் இருக்கும்.  அந்தக் கொள்கையை மட்டுமே சுட்டிக்காட்டி அந்த மதங்களை விவரித்து விடலாம்.  ஆனால் இந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் கொண்டது அல்ல.  அதனால் நமது மதத்தை வேற்றுமைகளின் உரைவிடம் என்று கூறிவிடவும் முடியாது.


   நமது ஒருமைபாடு கொள்கை அடிப்படையிலேயோ அமைப்புருவாலோ இல்லை.  அதே நேரம் நம் மதம் ஒரு இறையியல் கோட்பாடுமாகாது.  கடவுள் என்பது இது தான் இப்படித்தான் என்று பிடிவாதம் செய்யும் சுபாவமும் நம் மதத்திற்கு இல்லை.  குருட்டாம்போக்கிலான நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் ஆட்பட்டது அல்ல.  இன்னென்னவற்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அடம் பிடிப்பதும் நமது மதமாகாது.  குறிப்பிட்ட வரையறைகளோ எல்லைகளோ நமக்கு இல்லை.  கடவுளை இல்லை என்பவனும் இந்து தான்.  அவர் உள்ளார் என்று தூக்கி வைத்து ஆடுபவனும் இந்துதான்.  வேதங்களை மறுத்தாலும் ஏற்றுக் கொண்டாலும் அவன் இந்து தான்.  உருவ வழிபாடு மடத்தனமானது என்பவனும் சிலைகளின் கலைகளில் இறைவனை கானுகிறேன் என்பவனும் நமது மதத்தை சார்ந்தவனாகத் தான் கருதப்படுகிறான்.

 இந்து மதம் எந்த மதத்திலேயும் குற்றம் குறைகளை கண்டுபிடித்து கேலி பேசும் சுபாவம் கொண்டது அல்ல.  விண்ணிலிருந்து விழுகின்ற ஒவ்வொரு மழைதுளியும் எப்படி தூய்மையானதோ, நதிகள் எல்லாம் பல இடங்களில் தோன்றினாலும் எப்படி அனைத்தும் கடலில் போய் சங்கமிக்கிறதோ அதே போலவே எல்லா மதங்களும் புனிதமானவைகள் தான்.  அனைத்து மதங்களும் இறைவனிடம் மனிதனைக் கொண்டு சேர்ப்பவைகள் தான் என்று உயரிய கோட்பாடுகளை கொண்டது தான் இந்து மதம்.

எவனாவது தன்னை வெட்ட வந்தவனை சாகடிக்க முயற்சி செய்தவனை மார்போடு அனைத்து நீயும் என் சகோதரன் தான் என்று கூறுவானா அப்படி கூறுகிறவன் எவனாக இருந்தாலும் மனித நிலையிலிருந்து புனித நிலையில் இருப்பவனாகவே கருதப்படுவான் அல்லவா.  இந்து மதமும் அப்படித் தான் தன்னை அழிக்க வந்த தனது அஸ்தி வாரத்தையே ஆட்டம் காட்ட வந்த புத்த மதத்தை தனது ஒரு பிரிவாகவே கருதி கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக ஏற்று தமதாக்கிக் கொண்ட பெருந்தன்மை நம் மதத்திற்கு மட்டும் தான் உண்டு.


  நம் மதம் எப்போதும் தான்தான் உயர்ந்தது என்று பெருமையடித்து கொண்டது இல்லை.  தனது குருமார்கள் மட்டும் தான் இறைவனின் தூதர்கள் என்று வீண் ஜம்பம் பேசியது இல்லை.  தனது கொள்கைகளை கடைபிடிப்பவர்கள் மட்டும் தான் இறைவனின் குழந்தைகள் மற்றவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்று பேதம் காட்டியது கிடையாது.  பொதுவாக இந்து மதத்தை பற்றி சுருக்கமாக சொல்லுவது என்றால் இது வெறும் மதம் மட்டுமல்ல பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியாக உள்ளது என்றே சொல்லவேண்டும்.


 மற்ற மதங்கள் இன்ன இடத்தில் இன்னாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று சொல்லிவிடலாம்.  ஆனால் இந்து மதம் தானாகவே மெல்ல மெல்ல வளர்ந்து பரவி நிற்கும் ஜீவசக்தியாகும்.  மற்ற மதங்களை தார்சலைக்கு ஒப்பிட்டால் நம் மதத்தை ஒற்றையடி பாதைக்கு ஒப்பிடலாம்.  தார்சாலையை எந்த அளவு மக்கள் பயன்படுத்துகிறார்களோ அந்த அளவு அது பழுதடைந்து காலத்தால் மறைந்துபோய் விடும்.  ஒற்றையடி பாதை நாம் எந்த அளவு பயன்படுத்துகிறோமோ அந்த அளவு பண்படும் உறுதிபடும் காலத்தால் இயற்கை மாற்றங்களால் கூட அழியாமல் நிலைத்து நிற்கும்.
                                  Contact Form

Name

Email *

Message *