Store
  Store
  Store
  Store
  Store
  Store

உன் சாவு எனக்கு சந்தோஷம்


கற்பனை கலப்பில்லாத பச்சை உண்மை கதை
  மக்கு மிக நெருங்கியவர்கள் யாராவது செத்து போனால் சந்தோஷமாக இருக்குமா?  எதிரி செத்து போனால் கூட துக்கப்படுவது தான் சாதாரண மனிதனின் இயல்பு ஆனால் நான் அமிர்தகனி அக்கா செத்துப் போனார்கள் என்று அறிந்தவுடன் சந்தோஷப்பட்டேன்.  கடவுளுக்கு நன்றியும் சொன்னேன்.  அவர்கள் மரண செய்தியை சொன்னவர்கள் வேறொரு தகவலையும் சொன்னார்கள் நேற்று காலையிலேயே உயிர் போயிருக்கும் போல் இருக்கு.  யாரும் கவனிக்கல.  இப்போ ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் பார்த்து  இருக்காங்க முழுசா ஒரு நாள் ஆனதுனால ஈ எறும்பு அரிச்சு பொணம் விறைச்சி போய் கிடக்கு.  மற்ற காரியத்திற்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு தான் உனக்கு தகவல் தரேன்.

  அவர்கள் சொன்ன கோலத்தை நினைத்து பார்க்க மனதுக்கு தைரியமில்லை என்பதினால் அடுத்த வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.  ஆனால் அவ்வப்போது அக்காவை பற்றிய சிந்தனை வந்தது.  எனக்கு ஞாபகம் தெரிந்த நாளிலிருந்து அவர்களை மனநோயாளியாக தான் பார்த்திருக்கிறேன்.  நான் பள்ளிகூடம் போகும் போது அவர்கள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருப்பார்கள்.  கால்களில் விலங்கு பூட்டியிருக்கும்.  பக்கத்தில் சாப்பாடு தட்டில் சிதறி கிடக்கும் சாதத்தை கோழிகள் பொறுக்கி கொண்டிருக்கும்.  அவர்கள் காதுகளில் கருவேலங் காய்கள் கம்மலாக தொங்கிக் கொண்டிருக்கும்.  தலையில் ஏதோ விதவிதமான பூக்கள் சில வண்ண காகிதங்கள் கூட சொருகப்பட்டிருக்கும்.


  தூரத்தில் என்னை பார்த்தவுடன் வெய்யிலுக்கு கண்ணை மறைப்பது போல் தன் கைகளை முகத்திற்கு பக்கம் கொண்டுபோயி சண்முக வடிவு பேரனா?  இங்கே வா ராஜா என்று கூப்பிடுவார்கள்.  நான் கட்டை காலில் கம்புகள் ஊன்றி சிரமப்பட்டு அவர்கள் அருகில் போவேன். 

  என் வயது பசங்க அவர்களை பார்த்து பயப்படுவார்கள்.  பைத்தியம் பக்கத்தில் போகாதே.  எதாவது பண்ணிவிடும்.  என பயமுறுத்துவார்கள்.  எனக்கு அவர்களை பார்த்தால் பயமிருக்காது.  என் வீட்டில் ஒருவராக தான் நினைக்க தோணும்.  அதுவும் இல்லாமல் காலில் விலங்கு இருந்தாலும் அதை தூக்கி பிடித்து கொண்டு எங்கள் வீட்டிற்கு நடந்து வந்து விடுவார்.  வந்தவர்கள் நடுவாசலில் உட்கார்ந்து கொண்டு ராணியே நல்ல பால் ஊற்றி ஒரு டம்பளர் காப்பி கொடு என்று என் அக்காவிடம் கேட்பார்.

   காபி கொடுத்தால் எப்போவாவது ஒரு முறை தான் குடிப்பார்கள் மற்றப்படி வாங்கி சுடு காப்பியில் ஆள்காட்டி விரலை வைத்து சிலுவை போடுவார்கள்.  அப்போது அவர்கள் இயேசுவின் ரத்தம், இயேசுவின் ரத்தம் என திரும்ப திரும்ப சொல்லுவார்கள் காபி தானாக ஆறிவிடும்.  ஆறிய காபியை கொய்யா மரத்தடியில் ஊற்றி விட்டு நிறைய சக்கரை போட்டு காபி குடிக்காதீங்க மக்களே என்று அக்காவிடம் சொல்வார்கள்.  அக்கா தலையாட்டி கொள்வாள்.  

   என் அக்கா என்று இல்லை வேறு யாராவதாக இருந்தாலும் கூட அமிர்தகனி சொல்வதற்கு தலையாட்டி ஆக வேண்டும்.  மறுத்தால் அவர்களுக்கு கோபம் வந்துவிடும்.  பித்து பிடித்த மனது கடிவாளமே இல்லாமல் வார்த்தைகளை கொட்டும்.  அத்தனையும் கேட்க சகிக்காத பச்சை கெட்ட வார்த்தைகள் நான் கூட அவர்கள் கூப்பிட்டவுடன் போவதற்கு இது தான் முக்கிய காரணம்.  ஒரு முறை அவர்கள் கூப்பிட்டும் நான் போகவில்லை.  என் வயதுக்கு சம்பந்தமே இல்லாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்.  என்ன தோன்றியதோ தெரியவில்லை திண்ணையிலிருந்து இறங்கி மண்ணை வாரி என் மீது வீசியெறிந்தார்.

 நாம் அமைதியாக அருகில் சென்றுவிட்டால் ஒன்றும் பிரச்சனையில்லை.  தலையில் கை வைத்து ஆசிர்வதிப்பார்.  கட்டை விரலால் நெற்றியில் மாறி மாறி சிலுவை போட்டு நல்ல புத்தியை தாரும், நல்ல பாதையை காட்டும் என்று பல முறை சொல்வார்கள்.  அவர்களிடம் இது தான் பிரச்சனை எந்த ஒரு வார்த்தையும் பல முறை சொல்வார்.  சில நாட்களில் வேத புத்தகம் வேத புத்தகம் என்று நாள் முழுக்க சொல்லி கொண்டேயிருப்பார்.  மூச்சுவிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மந்திரம் போல வார்த்தைகள் உதிர்ந்து கொண்டேயிருக்கும்.

   எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அமிர்தகனியை பைத்தியமாகத் தான் பார்க்கிறேன்.  என் அம்மா வயது இருக்கும் அவர்களுக்கு. இளமையில் மிக நாகரீகமாக உடை உடுத்துவாராம்.  கஞ்சி போட்டு அயன் பண்ணிய கதர் புடவையை கட்டிக்கொண்டு நடக்கும் போது டீச்சர் அம்மா மாதிரி இருக்குமாம் எனது அம்மா மற்றும் அப்போதைய அவர் தோழிகள் அமிர்தகனி உட்பட எல்லோரும் ஒரே இடத்திலிருந்து தான் நூல் நூற்ப்பார்களாம்.  பஞ்சை எடுத்து தொடையில் உருட்டி ராட்டினத்தில் கொடுத்து அறுந்து போகாமல் நூல் நூற்கும் கலையில் அமிர்தகனி பலே கில்லாடியாம்.  வலதுபுறம் ராட்டினமும், இடதுபுறம் பைபிளும் வைத்துக் கொண்டு வாசித்தப்படியே வேலை செய்வார்களாம்.

அவர்கள் பைத்தியமான பிறகு கூட பைபிள் வாசகங்களை ஏற்ற இறக்கத்தோடு அழகாக சொல்வார்கள்.  இப்போது கூட

   " ஐந்து அப்பங்கள்
      மீனும் கொண்டு
      ஐந்தாயிரம் பேர்களுக்கு
      விருந்து கொடுத்த
      இயேசு ராஜா வருவார்
      இன்னும் கொஞ்ச காலம் தான் "


 என்ற பாடல் என் காதில் அடிக்கடி ஒலிக்கும்.  தன்னை கடந்து போகும் ஒவ்வொருவரையும் வலிய கூப்பிட்டு இயேசு வழியில் போ கர்த்தர் உன்னை காப்பாற்றுவார் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்.


   ஊரில் எல்லோருக்கும் அமிர்தகனி முத்திப் போன பைத்தியம்.  சின்ன குழந்தைகளுக்கு பயமுறுத்தும் பூச்சாண்டி.  சிறுவர்களுக்கு கல்லால் அடித்தாலும் அழாமல் வாய்விட்டு சிரிக்கும் ஒரு இயந்திரம்.  ஆனால் எனக்கு அவர் ஒரு ஞான பண்டாரம்.  பலவிதமான பாடல்களால் என் கற்பனை ஊற்றை தூண்டி விட்ட சுடர்கோல்.

  எங்கள் ஊர் தலைவர் காலமான போது அமிர்தகனி பாடிய ஒரு பாடல் மறக்கவே முடியாது.

  "பேராம் பெரியவராம்
  பேருலகை ஆண்டவராம்,
  ஓடி திரிந்த மூச்சி
  ஒரிடத்தில் நின்றதினால்
  எட்டகால் கட்டிலேறி
   பட்டனத்தில் போய் விழுந்தாராம். "


   வாழ்க்கையின் தத்துவத்தை புரியாத வயதில் தெரிய வைத்த பாடல் இது.  தற்காலத்தில் உழலுகின்ற மனம் செத்து போயி கடந்த காலத்திலேயே நிலைத்து விட்ட பித்து நிலை தான் முன்பு அறிந்ததை மறக்கவே மறக்காது போலும். 


  ஒரு முறை அமிர்தகனியை வித்தியாசமான கோலத்தில் பார்த்தேன்.  இரண்டு நரிக்குறவ குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டு வாசலிலேயே பிச்சை கேட்டு நின்றார்.  அவர் இடுப்பில் இருந்த குழந்தைக்கு ஒரு வயது இருக்கும்.  எலும்பு கூட்டில் தோலை போர்த்தி வைத்தது போல் பரிதாபமாக இருந்தது.  கையில் பிடித்திருந்த பெண் குழந்தைக்கு அதிகபட்சம் நாலு வயது இருக்கலாம்.  கிழிந்த ஆடை, பறட்டை தலை, மருண்டு விழித்த பெரிய கண்கள்,

  அந்த காட்சி பசியால் தவிக்கும் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட துடிக்கும் ஒரு தாயின் தவிப்பாக தான் தெரிந்தது.  பிழைப்புக்காக ஊர் ஊராக திரியும் குறவர் குழந்தைகள் எப்படியோ அவர்கள் கையில் கிடத்திருக்கிறது.  அதன் பிறகு அந்த குழந்தைகளுக்கு அவர் ஆகாரம் ஊட்டிய அழகு பைத்தியமாகி போனாலும் பெண்மைக்குள் கசிந்து கிடக்கும் தாய்மை உணர்வு எப்போதுமே ஈரம் காயாது.  சந்தர்ப்பம் கிடைத்தால் சிறிய பாறை இடுக்கை கூட கிழித்து கொண்டு வெளிவரும் மரகன்று போல் வெளிப்படும் என்பதை உணர்ந்தேன்.

 அமிர்தகனிக்கு குழந்தைகள் என்றால் சலிக்கவே சலிக்காது.  யார் குழந்தை தெருவில் விளையாடி கொண்டிருந்தாலும் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு இரும்பு சங்கிலியை இழுத்த வண்ணம் நடக்க ஆரம்பித்து விடுவார்.  பைத்தியத்தின் கையில் குழந்தையை கொடுத்து விட்டு எந்த தாயால் அமைதியாக இருக்க முடியும்.  எனவே அவர்களை கண்டவுடன் தாய்மார்கள் குழந்தைகளை பதுக்கி கொள்வார்கள்.  ஆனாலும் அவர்களால் எந்த குழந்தைக்கும் இதுவரை பாதிப்பு ஏற்பட்டதில்லை.


  அப்போதுயெல்லாம் எங்கள் ஊரில் வீட்டிற்கு வீடு தண்ணிர் குழாய் இணைப்பு கிடையாது.  குடிப்பதற்கு அம்மன் கோயில் கிணற்று தண்ணீரும், குளிக்க, துவைக்க நாராயண சாமி கோயில் கிணறும் தான் ஒரே கதி.  நான் சின்னபிள்ளையாக இருக்கும் போதே காலை ஐந்து மணிக்கெல்லாம் குளிக்க என்னை தூக்கிப் போய்விடுவாள் என் அக்கா.  ஒரு இடுப்பில் என்னையும், இன்னொரு இடுப்பில் தண்ணீர் குடத்தையும் வைத்து கொண்டு அவள் நடப்பது இன்று வரை எனக்கு அதிசயம்.  தூக்கம் கலையாத காலை நேரத்தில் கிணற்றடியில் உட்கார வைத்து பல்லை விளக்கு என்று கோபால் பல்பொடி கொடுப்பது மிக பெரிய அவஸ்தை.

 இப்படி தான் அன்று வாயில் பல் பொடியும், கண்ணில் தூக்கமாக உட்கார்ந்திருந்தேன்.  அந்த வழியாக வந்த அமிர்தகனிக்கு என்னை கண்டதும் உற்சாகம் பற்றிக் கொண்டது.  வேகமாக என் பக்கத்தில் வந்து வழக்கமாக கேட்கும் சண்முக வடிவு பேரனா நீ என்று கேட்டு என் பதிலை எதிர்பார்க்காமலே என்னை தூக்கி கிணற்று கட்டையில் உட்கார வைத்துவிட்டார்கள். 

  அது நல்ல ஆழமான கிணறு.  நான் உள்ளே விழுந்தால் அண்டாவில் கோலி குண்டு விழுந்தது போல் வெளியில் தெரியவே மாட்டேன்.  அந்த கிணற்று கட்டையும் அகலம் குறைவு தான்.  எனக்கு பயம் பத்திக்கொண்டது. வாய்விட்டு அழ ஆரம்பித்துவிட்டேன்.  நான் அழுதவுடன் அமிர்தகனிக்கு ஆவேசம் வந்துவிட்டது.  இனி மேலாவது ஒழுங்கா பள்ளிகூடம் போவாயா அழாமல் பதிலை சொல் என்று என்னை அடிக்க குச்சியும் தேட ஆரம்பித்துவிட்டார்கள்.  நல்ல வேளையாக என்னை கிணற்றடியில் விட்டு சென்ற அக்கா வந்தாரோ இல்லையோ காப்பாற்றப்பட்டேன்.  சிறிது தாமதமாக வந்திருந்தாலும் இந்த கதையை எழுத முடியாமல் பல வருடங்களுக்கு முன்பே ஜல சமாதியாகியிருப்பேன்.


  அமிர்தகனியின் வீடு அம்மன் கோவில் பக்கம் தான்.  விசுவாசமாக பைபிள் படிக்கும் அமிர்தகனிக்கு திடிரென்று அம்மன் மீது பக்தி பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிடும் துடப்பத்தை எடுத்து கோவில் மைதானத்தை பெருக்க ஆரம்பித்து விடுவார்.  அந்த நேரத்தில் யாராவது குறுக்க போய்விட்டால் ஆள் பத்திரகாளியாக மாறிவிடுவார்.  சராமாரியாக கெட்ட வார்த்தைகள் புறப்படும்.  வந்தவனின் பிறப்பும், அவன் அப்பனின் பிறப்பும் அசிங்கமான வார்த்தைகளால் மங்களா சாசனம் செய்யப்படும்.  வீட்டை பெருக்க துப்பில்லாத மூதேவி கோயிலில் குப்பையை கொட்ட வந்தியா?  ஓடு ஓடியே போயிடு.  நின்னா குடல உறுவி மாலை போடுவேன் என்ற முத்தாய்ப்பான வார்த்தையோடு அர்ச்சனை முடியும்.

  களை கூத்தாடிகள், குடுகுடுப்புகாரர்கள் என ஊருக்குள் நாடோடி கும்பல் வந்தால் அம்மன் கோயில் மைதானத்தில் தான் டிக்கான போடுவார்கள், அப்போது எல்லாம் அமிர்தகனியின் கால் விலங்கு சத்தம் அங்கு தான் ஓயாமல் கேட்கும்,  நாடோடியின் குழந்தைக்கு தொட்டில் ஆட்டுவது, பூவரசன் இலையை பறித்து ஊதாங்குழல் செய்து கொடுப்பது எல்லாமே அமிர்தகனி தான்.

   ஒரு முறை அமிர்தகனிக்கு கடுமையான ஜூரம்.  நாடோடிகள் வேற வந்துவிட்டார்கள் அவர்களால் அமைதியாக படுக்க முடியுமா?  மைதானத்துக்கு போய்விட்டார்.  அங்க போனவுடன் குளிர் ஜூரம் அதிகமாகி தரையில் விழுந்து விட்டார்.  களை கூத்தாடிகள் சாக்கு போட்டு படுக்க வைத்து உடம்புக்கு மேலேயும் கோணி பையால் மூடிவிட்டு போய்விட்டார்கள்.  நடுங்கும் அமிர்தகனியின் உடம்பின் மீது ஒரு காக்கை உட்கார்ந்து கொத்தியதை அழியாத ஓவியமாக மனம் படம்பிடித்து வைத்து கொண்டது.


  அமிர்தகனியின் காலில் கனமான இரும்பு விலங்கு எப்போதுமே பூட்டப்பட்டிருக்கும்.  அதில் நீளமான ஒரு சங்கிலி போட்டு அதன் முனையில் இரும்பு குண்டு ஒன்றும் மாட்டப்பட்டிருக்கும் இரும்பு குண்டை கையில் தூக்கி கொண்டு அவர்கள் நடக்கும் போது அதிலிருந்து கலிர் கலிரென சத்தம் வரும்.  இந்த சத்தத்தை எங்கள் மேற்கு தெருவில் இரவு பகல் என்று பாராமல் எப்போது வேண்டுமென்றாலும் கேட்கலாம்.  ஒன்று அவர்கள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு எதாவது பைபிள் வசனத்தை திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருப்பார்கள் அல்லது பாடிக் கொண்டே தெருவில் சுற்றுவார்கள் இது தவிர அவர்கள் அடிக்கடி நடமாடும் இடம் அம்மன் கோவில் மைதானமும், நாரயண சாமி கோவில் கிணற்றடியும் தான்.

 நாராயண சாமி கோவில் பக்கத்தில் நடமாடுவதற்கு ஒரு அழகான காரணத்தை சொல்வார்கள்.  நான் சின்னபிள்ளையா இருதப்ப காலனா காசை இங்க தொலைச்சிட்டேன்.  எங்க அய்யா கோவத்தில அடிச்சிட்டார்.  அடிச்ச வேகத்துல காதுல இருந்த கம்மல் கழுண்டு போயி கிணற்று பக்கத்தில் விழுந்திடுச்சி.  அது தான் தேடி பார்க்கிறேன்.  இன்னும் கிடைக்கல என்பார்கள்.  அவர்கள் தொலைத்தது காது கம்மலையா?  தெளிந்த மனதையா?  என்று எனக்கு கேள்வி பிறக்கும்.  அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

திடிர் திடிரென எனக்குள் அந்த வயதில் இன்னொரு கேள்வியும் தோன்றும்.  கண் தெரியாமல், வாய் பேச முடியாமல் பிறவிலேயே சிலர் ஊனமாக பிறப்பது போல் அமிர்தகனி அக்காவும் பிறக்கும் போதே பைத்தியமாக பிறந்துவிட்டார்களா?  அல்லது பிறந்த பிறகு பைத்தியமானர்கள் என்றால் எப்படி என்று.   

  அதற்கான விடையும் என் அம்மாவிடமிருந்து கிடைத்தது.  அவர்கள் என்னிடம் நேராக சொல்லவில்லை அப்படி சொல்லும் அளவுக்கு நான் பெரிய மனுஷனும் இல்லை.  குமரேஷன் அண்ணனுக்கு கல்யாணமாகி புதிதாக வந்த முத்துலட்சுமி அண்ணியிடம் இதை பேசிக் கொண்டிருந்தார்கள். 

  அமிர்தகனி என்னை விட இரண்டு வயசு சின்னவ.  ஆள் பார்ப்பதற்கு கறுப்பா இருந்தாலும் லட்சணமா இருப்பா.  துணி உடுத்துவதிலும் சரி, அலங்காரம் செய்வதிலும் சரி ரொம்பவும் நேர்த்தியா பண்ணுவா.  அந்த காலத்திலேயே தினசரி மூணுகழி மூணு அனாவுக்கு நூல் நூற்று விடுவாள்.  சின்னபிள்ளைகள் என்றால் அவளுக்கு அப்போதே கொள்ளை பிரியம்.  என் மகள் ஜான்சிராணி (என் அக்கா) பிறந்த போது குழந்தையை கீழே விடமாட்டாள்.  மடியில் தூக்கி வைத்து கொண்டு தான் நூல் நூற்பார்.

அமிர்தகனி அம்மாவுக்கு பண பைத்தியம் ஜாஸ்தி.  ஒரு அனா கிடைக்குதுன்னா அஞ்சு மைல் கூட நடப்பாள்.  அவளுக்கு இளைய பெருமாள் என்பவரோட பழக்கம் இருந்தது.  அவர் அப்போது நிலம் அளக்கறவரா வேலை பார்த்தார்.  கையில் நல்ல காசு.  ஆனா அவருக்கு வயசு அப்ப நாற்பதுக்கு மேலே இருக்கும்.  அவருக்கு அமிர்தகனி மேல ஆசை.  அவள் அம்மாவுக்கோ அவர் பணத்துமேல ஆசை.

  அவர் உன் பெண்ணை கட்டி தா நிறைய பணம் தருகிறேன் என்று அந்த அம்மாவிடம் சொல்லயிருக்கிறார்.  போதாதா.  சும்மாவே கள் குடிச்ச குரங்கு அவ.  இப்ப கஞ்சா வேறு அடிச்ச மாதிரி ஏறி போச்சு.  அமிர்தகனிகிட்ட அந்த ஆள கட்டிக்க சொல்லி கேட்டு இருக்கா.  இருபது வயது பெண்ணால் அதை எப்படி ஏற்றிருக்க முடியும்.  கிணத்துல விழுந்து செத்தாலும் சாவேனே தவிர இளைய பெருமாள கட்டிக்க மாட்டேன் என்று கராரா சொல்லிட்டா.

அந்த அம்மாவால அந்த பதில ஏத்துக்க முடியல.  பொண்ணுகிட்ட கெஞ்சியும் மிஞ்சியும் பார்த்திருக்கா.  இவ மசியல்ல, அடிச்சி உதைச்சி கூட பார்த்தாலும் கிழவன கட்டிக்க அமிர்தகனி தலை அசைக்கல.  ஆத்தாகாரி அந்த மனுஷனோட சேர்ந்துகிட்டு ஆலோசனை பண்ணியிருக்கா.   


  அதற்கு அவரு மலையாளத்துள இப்படி வம்பு பண்ணுகிற பெண்ணுகள வழிக்கு கொண்டு வர வசிய மருந்திருக்கு.  வாங்கிதாரேன் எப்படியாவது மயக்கி அவள சாப்பிட வச்சிடு உனக்கு ஆயிரம் ரூபாய் தாரேன் என்று சொல்லி மருந்தை வாங்கி வந்து கொடுத்து இருக்கார். 

 படுபாவி பொம்பள பெத்த பொண்ணுன்னு பாராம வசிய மருந்தை பாலில் கலக்கி கொடுத்திருக்கா ஒரு தரம் கொடுத்தா வேலை செய்யுமோ செய்யாதோன்னு பொருளங்கா அளவுல உள்ள வசிய மருந்தை பல முறை கலக்கி கொடுத்திருக்கா.  மருந்து வீரியம் தலைக்கேறி அமிர்தகனி பித்து பிடிச்சவளா ஆயிட்டா. 

 இப்படி அம்மா சொல்வதை கேட்டு அந்த வயதிலேயே அவர்களை பார்க்க எனக்கு பாவமாக இருக்கும்.  காலம் செல்ல செல்ல உலக அறிவு விரிய விரிய பணத்திற்காக பாழாய் போன ஒரு பெண்ணின் வாழ்வு, தன் சுகத்திற்காக பெற்ற மகளையே பலி கொடுத்த ஒரு தாயின் ஆசை என் மன கண் முன்னால் எழுந்து கோரமாக முறைக்கும்.

   பெண்கள் தெய்வமாம்.  யார் சொன்னது அப்படி சொன்னவன் கூட பெண்ணை மதித்திருப்பானா அவள் உணர்வுகளை புரிந்திருப்பானா?  நிச்சயம் இருக்க முடியாது.  இது இந்த நாட்டின் பெண்கள் பெற்ற சாபம்.  பெண் என்பது இங்கு உயிரல்ல பொருள்.  வாங்கவும் விற்கவும் பயன்படும் பொருள்.  சந்தையிலே கடைவிரித்து பகிரங்கமாக விற்கப்படவில்லையே தவிர அவள் வீட்டிற்குள் விற்கப்படுகிறாள்.  ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் கூட அவள் விற்பனையாகிறாள்.

  சமைக்க பெண் வேண்டும், துணி துவைத்து போட பெண் வேண்டும், சுகத்திற்கு கூட படுக்க பெண் வேண்டும், நம் எதிர்கால வாரிசுகளை சுமக்க பெண் வேண்டும், ஆனால் அவள் ஆசைகள் நமக்கு வேண்டாம், அவள் விருப்பத்தில் ஒரு துளி கூட நமக்கு வேண்டாம், பணமாக, உடலாக அவள் மட்டும் வேண்டும்.  இப்படி வாழ்வதை விட பெண்கள் சாகலாம்.  அல்லது தன்னை அப்படி ஆக்குபவனை சாகடிக்கலாம்.  பெண்மைக்குள் அத்தகைய ஆண்மை விழித்தெழும் வரை இப்படிப்பட்ட அமிர்தகனிகள் செத்துபோவது எனக்கு சந்தோஷமே.

Contact Form

Name

Email *

Message *