Store
  Store
  Store
  Store
  Store
  Store

கத்தி முனையில் நின்ற மோகினி

மந்திர அனுபவங்கள் 2
 
    கராத்தே, சிலம்பம், குஸ்தி போன்ற வீரவிளையாட்டுகளை கற்று கொள்ள ஆரம்பிக்கும்போது பயன்படுத்தி பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் முயல் குட்டி போல் துள்ளி குதிக்கத்தான் செய்யும்.  தொடர்ச்சியான பயிற்சி அந்த ஆர்வத்தை செழுமைபடுத்தி நிதான நிலைக்கு கொண்டு வந்து விடும்.  இது எல்லா விஷயத்திற்கு பொதுவானது தான்.  எனக்கும் ஆரம்பகாலம் ஆர்வம் மிகுந்ததாகவே இருந்தது.  ஆனால் முதல் கட்டத்தில் நான் அடைந்த வெற்றிக்கு பிறகு பயிற்சியில் அடுக்கடுக்கான தோல்விகளை தான் கொடுத்தது.  அந்த தோல்விகள் என் புத்தியை பரப்பரப்படையாமல் பார்த்து கொண்டது என சொல்லலாம்.
    
தோல்விகள் மனதை அமைதிப்படுத்தியதோடு மட்டுமல்ல உள்ளுக்குள் உறங்கி கிடந்த போர்குணம் விடாமுயற்சியாக வெளிப்பட்டது என்றும் சொல்லலாம்.  அந்த முயறிசியாலோ, இறைவனின் அருளாலோ சிறது சிறிதாக தோல்விகள் வெற்றிகளாக மாற துவங்கியது.  அதன் பிறகு நாம் கற்றது சரிதானா என்பதற்காக பரிசோதனை செய்து பார்க்க முடிந்ததே தவிர பெருமைக்காக செய்து பார்க்க தோன்றவில்லை.


  முதல்முறையாக அதர்வன வேத மந்திரத்தில் எனக்கு சித்தி கிடைத்தாலும் கூட அது நான் எதிர்பாராத நேரத்தில் கிடைத்ததாகும்.  ஆனால் நான் முயன்று பெற்ற சித்தி மோகினி கன்ம வசிய சித்தி என்பதாகும்.  இதற்கான முயற்சியை நான் பிறந்த ஊரில் என் பூர்வாசிரம வீட்டில் பூஜையறையில் செய்தேன்.  முறைப்படி மோகினி வசிய மந்திரத்தை பயிற்சி செய்து முடித்திருந்ததினால் அதை வரவழைத்து தான் பார்ப்போமே என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.  எண்ணம் தோன்றிய மாத்திரத்திலேயே செயல்படுத்தவும் துவங்கினேன்.  மந்திரம் ஜெபிக்கும் முன்பு செய்ய வேண்டிய புற நடைமுறைகளை முடித்துவிட்டு கண்களை மூடி மனதை ஒருநிலைபடுத்தி 1008 முறை மந்திர உச்சாண்டம் செய்தேன்.
    
 மந்திர உச்சாடனம் முடித்த பிறகு கண்களை திறந்த நான் அதிர்ந்து போய்விட்டேன்.  அந்த அதிர்ச்சியை மீண்டும் இதுவரை எந்த காரணத்திற்காகவும் நான் அடைந்ததே இல்லை.  என் முன்னே அழகே வடிவான ஒரு பெண் சலனமற்ற பார்வையால் விழி இமைக்காமல் என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.  காற்றில் அவளின் நீண்ட கூந்தல் அசைவதை இப்போது நினைத்தாலும் மயிர்கூச்செரியும்.  அதுவரை அப்படியொரு அழகிய பெண்ணை எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் சரித்திர கதைகளில் தான் பார்த்திருக்கிறேன். 


   வெள்ளை வஸ்திரத்தில் அடர்த்தியான கருங்கூங்தலும், சந்தனநிற மேனியும், நீல விழிகளும், நெற்றியில் ஜொலித்த செந்தூரமும், ரோஜாவை போன்று சிவந்த உதடுகளும், அவளிடமிருந்து வந்த நறுமணமும் இன்னும் மனதைவிட்டு அகலவே இல்லை.  அந்த காட்சி இப்போது ரசனை மிக்கதாக தெரிகிறது.  ஆனால் அதை நேருக்கு நேராக சந்திக்கும் போது பயத்தால் நான்பட்ட பாட்டை வார்த்தையில் சொல்ல இயலாது. 

  நெஞ்சு படபடக்க, உடலெங்கும் நடுங்க, தொப்பலாக வியர்த்து போக, கத்த முடியாமல் வாய் ஒட்டிக்கொள்ள அப்பாடா அதை இன்று நினைத்தாலும் சற்று நடுக்கம் வரத்தான் செய்கிறது.  ஒரு மந்திரத்தை சொன்னால் அந்த மந்திரத்திற்குரிய உருவம் கண் முன்னால் தோன்றும் என்று தெரிந்து இருந்தாலும் கூட நேருக்கு நேராக அனுபவிக்கும் போது எந்த சமாதானங்களும் நினைவுக்கு வருவதில்லை.
    
மேலும் நான் பயப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.  ஒன்று மோகினியை பற்றி சிறிய வயதில் கேட்ட பல பயங்கர கதைகள்.  அந்த கதைகளில் மிக முக்கியமானது அந்த காலத்தில் உவரி சுயம்புலிங்க சாமி கோயிலுக்கு தை பூச விழாவில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்திலிருந்து மாட்டுவண்டி கட்டி வருவார்களாம்.  


  அப்படி ஒருவர் மாட்டுவண்டி கட்டி வந்து கொண்டிருந்த போது நேரம் நன்றாக இருட்டி விட்டதாம்.  வண்டிக்கு முன்னாலையும் பின்னாலையும் யாருமே இல்லையாம்.  அப்போது ஒரு இளம்பெண் வண்டியை மறித்தாளாம்.  வண்டி ஓட்டிக் கொண்டிருந்த பெரியவர் யார் நீ? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டாராம். 

  அதற்கு அந்த பெண் என்னிடம் வெற்றிலை இருக்கிறது, சுண்ணாம்பு இல்லை உன்னிடம் இருந்தால் கொடு என கேட்டாளாம்.  வண்டி ஓட்டிய பெரியவரும் சாதாரண ஆள் இல்லையாம்.  மலையாள மந்திரத்தை கரைத்து குடித்தவராம்.  தனது மந்திர சக்தியால் சுண்ணாம்பு கேட்பது மனுஷ பெண்ணல்ல, காட்டுக்குள் திரியும் வன மோகினி என கண்டு கொண்டாராம்.
    
உடனே அந்த பெரியவர் சுண்ணாம்பை கையில் எடுத்து கொடுக்காமல் தனது இடுப்பில் பாதுகாப்பிற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அதன் முனையில் சுண்ணாம்பை வைத்து மோகனியிடம் நீட்டினாராம்.  சுண்ணாம்பில் மந்திரமும் அவர் ஜெபித்து இருந்ததினால் அதை தொட்டவுடன் மோகினி அடங்கிவிட்டதாம்.  அடங்கிய மோகினியை பிடித்து அதன் உச்சந்தலையில் மந்திர ஆணி அடித்து தனது வீட்டு வேலைக்காக பெரியவர் கூட்டி போய்விட்டாராம்.


  ஒரு நாள் வீட்டு வேலையெல்லாம் முடித்த மோகினி இந்த பெரியவரின் மருமகளிடம் தலையில் பேண் கடி தாங்க முடியவல்லை எனக்கு கொஞ்சம் பேண் பாரு என்று சொலியதாம்.  அந்த பெண்ணும் பேண் பார்க்க ஆரம்பித்தாளாம்.  அப்படி பார்க்கும் போது தலையில் அறையப்பட்டிருந்த ஆணியை பார்த்து ஐயோ இது என்ன உன் தலையில் இத்தனை பெரிய ஆணி என்று கேட்கவும் அப்படியா! அதை உருவி எடுத்துவிடு என்று மோகினி சொன்னதாம். 

  அவளும் எடுத்துவிட்டாளாம்.  அடுத்த கணமே சுயபுத்தி வந்த மோகினி அந்த பெண்ணை கீழே தள்ளி வயிற்றை கிழித்து கொன்றுவிட்டு தனது இருப்பிடமான காட்டிற்கு ஓடியே விட்டதாம்.  இந்த கதையை நான் மிகவும் சிறியவனாக இருக்கும் போது என் அம்மாவின் தாயார் சண்முக வடிவு பாட்டி கதையாக சொல்வார்கள்.

   அகலமாக கண்களையும், வாயையும் விரித்து கதையை கேட்டு இருக்கிறேன்.  இது மட்டுமல்ல அழகான ஆண் பிள்ளைகளை மோகினி பிடித்து கொண்டால் கடைசி வரை விடாதாம்.  உயிரை உறிஞ்சி எடுத்து விடுமாம்.  இப்படி மனதில் ஏற்றப்பட்ட சிறிய வயது பயங்கள் எவ்வளவு வயதானாலும் கூட தொடர்ந்து தான் வரும்.  


  இரண்டாவது மந்திரம் சொல்லி மோகினியை வரவழைக்க தெரியுமே தவிர அதை முறைப்படி திருப்பி அனுப்பும் மந்திரம் எனக்கு தெரியாது.  அதையும் கற்று கொண்டு செய்ய வேண்டிய வேலையை அவசரப்பட்டு செய்தால் இப்படித்தான் வம்பில் போய் முடியும்.
    
ஆனால் நல்ல வேளை நெஞ்சை நொறுக்கும் அந்த பய நேரத்திலும் என்னையும் அறியாமல் ஒரு நல்ல காரியம் செய்தேன்.  கண்களை இறுக மூடிக்கொண்டு ராமா, ராமா என மனதிற்குள் ஓலமிட்டவாறு சொன்னேன்.  இப்படி நான் சொன்னது நிச்சயம் திட்டமிட்டு அல்ல.  பயமும், போக்கிடமில்லாத திக்கற்ற நிலையும் கடவுள் பெயரை என்னை சொல்ல வைத்தது. 

 அதனால் நல்ல வேளையாக காப்பாற்றப்பட்டேன்.  வந்த மோகினி சத்தமில்லாபமல் போய்விட்டது.  அதன் பிறகு இப்படி விஷ பரிட்சைகள் எதிலும் நான் அவசரப்பட்டு இறங்குவது கிடையாது.  முறைப்படியான பரிசோதனைகளை  இந்த சம்பவங்கள் முடிந்து சில மாதங்களுக்கு பிறகே செய்தேன்.  


  எனது நெருங்கிய நண்பர் வேலுநாயக்கர் என்ற முருக வேலுக்கு மனரீதியாக இருந்த சில சிக்கல்களை நீக்க மந்திரங்களை பயன்படுத்தினேன்.  அது நல்ல விளைவுகளை கொடுத்தது.  அந்த விளைவுகளால் சற்று ஏறக்குறைய ஒரு வருட காலம் நண்பர்களின் பிரச்சனைகளுக்காக மந்திரங்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தேன்.  அது நல்ல பயிற்சியாக எனக்கு அமைந்தது.  மந்திரம் கற்று முடித்து நல்ல அனுபவம் வந்த பத்து வருடத்திற்கு பிறகே வெளி நபர்களுக்காகவும் செய்தேன்.


     மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்



Contact Form

Name

Email *

Message *