Store
  Store
  Store
  Store
  Store
  Store

இருட்டில் கட்டிய தாலி


  ம்மன் கோவில் மணியடிக்கும்  போது இரவு நேரம் மணி பனிரெண்டை தாண்டி இருக்கும்.  மணி விடாமல் அடித்தது.  யாரோ கயிற்றை பிடித்து தொங்குவது போல் விடாமல் மணியோசை கேட்கவும் ஊரே எழுந்துவிட்டது.  பொதுவாக இப்படி கிராமத்தில் எங்கோ தீப்பிடித்து விட்டாலும், யார் வீட்டிலாவது திருடன் புகுந்து மாட்டிக் கொண்டாலோ ஊராரை கூப்பிட மணியடிப்பது வழக்கம்.

   இன்றும் அப்படி தான் எதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும் என்று ராகவன் எழுந்தான்.  பாதி தூக்கத்தில் இருந்த மனைவி தூக்கம் கலையாமலேயே ஏங்க எழுந்து போவாதிங்க, பேசாம படுங்க எதுனாலும் காலையில் பேசிக்கலாம் என்று முணு முணுத்தாள் நீ சும்மா கிட போயி என்னன்னு பார்த்தா தான் உறக்கம் வரும் என்று எழுந்த ராகவன் கையில் டார்ச் லைட்டை எடுத்து கொண்டு தெரு கதவை திறந்து சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.


   தெரு முனையில் இருந்து பார்க்கும் போதே அம்மன் கோவில் வெளிச்சத்தில் நிறைய பேர் கூடி நிற்பது தெரிந்தது.  ராகவனை போலவே நிறைய பேர் தூக்க முகத்தோடு அவனுக்கு முன்னும் பின்னும் போய் கொண்டு இருந்தார்கள்.  யாருக்கும் விவரம் தெரியவில்லை அதை தெரிந்து கொள்ளும் ஆவலே எல்லோரிடமும் இருந்தது.  முக்கால் பங்கு ஊரே கோவில் மைதானத்தில் தான் இருந்தது.  எல்லோரும் கசமுசா என பேசிக் கொண்டதினால் எதுவும் தெளிவாக காதில் விழவில்லை.  கூட்டத்தை விலக்கி மைதானத்தில் நடுநாயகமாக இருந்த அரச மர மேடை பக்கத்தில் ராகவன் வந்துவிட்டான்.

  தலையை குனிந்தபடி குற்றம் செய்தவள் போல் அமுதா நின்று கொண்டிருந்தாள்.  அவள் பக்கத்தில் ஏறக்குறைய அதே போல் ஒரு இளைஞனும் இருந்தான்.  அமுதாவை இந்த இடத்தில் பார்த்தவுடன் ராகவன் மனம் சங்கடப்பட்டது.  இவள் நல்ல பெண்ணாயிற்றே படிக்கவில்லை என்றாலும் புத்திசாலிதனமாக நடந்து கொள்வாளே எப்படி இந்த வம்புகார கூட்டம் இவளை இங்கே இழுத்து வந்தது. 


   பக்கத்தில் நிற்பவன் யார்?  அவனுக்கும், இவளுக்கும் என்ன சம்பந்தம் என்ற சிந்தனை எழவே அங்கே நின்ற சுப்ரமணியனிடம் என்ன சங்கதி என்று விசாரித்தான்.  அதற்கு சுப்ரமணியன் நல்லா கேட்டிங்க போங்க இதோ நிக்கறாளே  அடங்காபிடாரி அமுதா அவள் இந்த தடியனோடு ஓடிபோக பார்த்து இருக்கா.  நல்லவேளை அவளோட அண்ணன் பார்த்ததினால கையும் மெய்யுமா பிடிச்சி பஞ்சாயத்துக்கு கூட்டிட்டு வந்துட்டான் என்று கோபமாக சொன்னான்.

  சுப்ரமணி சொல்லி வாய் மூடல இப்படிப்பட்ட ஓடுகாலிகளையெல்லாம் வெட்டி போடனும்.  இவளுக்கு கொழுப்பு எடுத்து அடிக்கும் கூத்துகள பார்த்து ஊர் பொண்ணுங்க எல்லாம் கெட்டு போயிடும் என்று ஏழுமலை கத்தினான்.  அட அவள மட்டும் குத்தம் சொல்ல வந்துட்ட, அவள் இளிச்சுகிட்டு வந்தான்னா இந்த அசலூரு பையன் கூட்டிகிட்டு ஓடிடுவானா இவன கட்டி வச்சி சாத்துற சாத்துல இந்த மாதிரி நினைப்பு இருக்கறவன் எல்லாம் பயத்துல மூத்திரம் அடிக்கனும் என்று ஆவேசப்பட்டான் வரதராஜன்.


   ராகவனுக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது.  அமுதாவும் அந்த பையனும் ஒருத்தரை ஒருத்தர் நேசித்து இருக்கிறார்கள்.  முறைப்படி கல்யாணம் செய்வதில் ஏதோ சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.  அதனால் தான் வழி தெரியாத சின்ன சிறுசுகள் ஓடிப்போக முயற்சி செய்து இருக்கிறார்கள்.

   அந்த வேளையில் தான் இந்த வல்லூறுகள் கண்ணில் பட்டு ஊர் நடுவில் நிற்கிறார்கள்.  அமுதாவும் இருபது வயதை கடந்தவள் தான்.  தான் விருப்பப் பட்டவனை கரம் பிடிக்க அவளுக்கு பரிபூரண உரிமை இருக்கிறது. அந்த பையனது முகம் வெளிச்சத்தில் சரிவர தெரியவில்லையே தவிர ஆள் வாட்ட சாட்டமாக தான் இருந்தான்.  இவர்கள் இருவரும் திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது.  யாருக்கு பாதிப்பு இருக்கிறது. 

  அவளுக்கு தாய் தகப்பன் கிடையாது.  இவள் கூலி வேலைக்கு போய் தான் ஒரே அண்ணணுக்கு சோறும் போட வேண்டும் சாராயம் குடிக்க காசும் கொடுக்க வேண்டும்.  ராகவனை கேட்டால் அந்த அப்பாவி பெண்ணின் முடிவுக்கு சபாஷ் போடுவான்.  ஆனால் அது இந்த கும்பலுக்கு எப்படி பிடிக்கும்.  பசித்த வயிற்றுக்கு சோறு போடாத சமூகம் மண்ணை அள்ளி தின்றால் மட்டும் குத்தம் சொல்லும், கேலியும் செய்யும்.


   சரி சரி ஆள் ஆளுக்கு பேசினால் விவகாரம் முடியாது.  விஷயம் ஊர் பொதுவுக்கு வந்து விட்டதே தலைவர் வரட்டும்.  அவர் விசாரித்து என்ன முடிவு சொல்கிறாரோ அதற்கு எல்லோரும் கட்டுபடுவோம் என்று சம்பவத்தின் போக்கை நிதானப்படுத்த ராகவன் பேசினான்.

  கூட்டத்திற்குள் எங்கிருந்தோ வந்த அமுதாவின் அண்ணன் தங்கராசு ராகவனின் கையை பிடித்துக் கொண்டு மாப்பிள்ளே என் நிலைமை எப்படி ஆகி போயிச்சு பார்த்தியா.  ஊருக்குள்ள கம்பீரமாக நடந்த என்ன தலை குனிய வச்சுட்டா இந்த ஓடுகாலி என்று அழுதான். 

   அந்த இரவு நேரத்திலும் அவனிடமிருந்து வந்த சாராய நெடிவீசி வயிற்றை குமட்டியது.  இவன் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் இந்த பெண் இப்படி நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை யோசித்த ராகவன் வீட்டு ஆம்பள ஒழுங்காக இல்லன்னா குடும்பம் இப்படித்தான் சந்திக்கு வரும் நீ இப்படி அழுது ஆகப்போவது ஒன்னுமில்ல பேசாம இரு தலைவர் வந்தப்பறம் அவரிடம் பேசு என்று அவனை சமாதானப்படுத்திய ராகவன், சுப்ரமணியை பார்த்து தலைவருக்கு தகவல் சொல்லியாச்சா பாவம் அவர் நல்ல தூங்குற நேரம் என்று கேட்கவும் செய்தான்.


  தலைவர் கூப்பிட கோழி கடை குப்புசாமி முதலியார் போயிருக்கார் இப்ப வர நேரம் தான் என்று முந்தி கொண்டு பதில் தந்தான் ஏழுமலை.  இப்போது கூட்டம் இன்னும் அதிகரித்துவிட்டது.  உறங்கும் குழுந்தைகளை தோள் மீது போட்டுக்கொண்டு பல பெண்களும் வந்து விட்டார்கள்.  அனைவரது கண்களிலும் தூக்கமும் கேலியும் இருப்பது ராகவனுக்கு நன்றாக தெரிந்தது.

 எதாவது ஒரு குற்றத்தை தான் செய்து மாட்டிக் கொள்ளும் போது மட்டும் ஊரே கூடி என்னை வேடிக்கை பார்க்கிறதே.  மற்றவன் கஷ்டத்தை ரசிப்பதில் தான் இவர்களுக்கு எத்தனை பிரியம் என கரித்து கொட்டுகிற மனிதன் மற்றவர் விஷயத்தில் அதை மறந்து விடுகிறார்கள்.  இது தான் ராகவனுக்கு வியப்பாக இருந்தது.  என்ன உலகம் இது என்று அலுத்துக் கொண்டான்.

 சந்தைகடை போல் கத்திக் கொண்டியிருந்த கும்பலின் ஓசை திடிரென அடங்கியது.  அனைவரின் மௌனமும் தலைவர் வந்துவிட்டார் என்பதற்கு வரவேற்பாய் அமைந்தது.  கூட்டம் வழி விட அரச மரத்து மேடைக்கு அவர் வந்தார்.

  என்ன முதலியாரே வர வர நம்ம ஊர் பஞ்சாயத்து அர்த்த ராத்தியிலும் கூட வேண்டியதா போயிடிச்சு என்று பேசிய வண்ணம் மேடையில் வந்தமர்ந்த அவர் நல்ல உயரமாக இருந்தார்.  பனைமரத்தில் விளக்கெண்ணை ஊற்றியது போல் பளப்பளபான கருப்பு நிறம், முழங்கை வரையில் நீண்டு தொங்கிய கதர்சட்டையும் கரண்டை கால் வரை கட்டப்பட்ட வேஷ்டியும் அவருக்கு கம்பீரத்தை கொடுத்தது என்றாலும் மனுஷன் மானத்த மறைக்க தான் துணியே தவிர அலங்காரத்திற்காக அல்ல என்று சொல்வது போல் இருந்தது.


    கை ஊன்றி மேடையில் உட்கார்ந்த அவர் தலை குனிந்து நின்ற அமுதாவை மேலும் கீழும் பார்த்தார்.  ஏண்டியம்மா, அமுதா உனக்கு அந்த பையனுக்கும் எத்தனை காலமா பழக்கம் என்று கேட்டார்.  இது வரை அமைதியாகயிருந்த அமுதா முதல் முறையாக வாய் திறந்தாள்.  எட்டு மாசமா பழக்கங்க என்றாள் பயத்துடன்.

  எட்டு மாச பழக்கத்துல இவன் நல்லவனா?  கெட்டவனா உன்ன வச்சி காப்பாத்துவானா?  மாட்டானா?  அதையெல்லாம் விட உன்கிட்ட பழகின மாதிரியே வேறு எவளிடமாவது பழகுகிறானா?  இல்லையா என்கிற சங்கதி முழுசா உனக்கு தெரியுமா?  எட்டு மாசத்துல நீ எடுத்து இருக்கிற முடிவு சரியானதான்னு நம்புறியா?  என்று கேட்டார்.

   அதற்கு அவள் மௌனமாக தலையசைத்தாள்.  அவள் தலையை தான் அசைக்க முடியும்.  எந்த ஆண்பிள்ளையை நம்பி அவனை முழுசா நம்புறேன் என்று சத்தமாக கூற முடியும்.  மரத்திற்கு மரம் தாவுவதில் ஆண் இனமும், குரங்கும் பங்காளி அல்லவா?

இப்போது அந்த இளைஞனை பார்த்து டேய் படவா ராஸ்கோல் எங்க ஊரு பொண்ணு மேல கை வைக்கனுமின்னா தனி துணிச்சல் வேணும்.  நீ பெரிய கில்லாடி தான்.  அது கிடக்கட்டும் உன் பெயரென்ன எந்த ஊரு, என்ன வேலை செய்யுற என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.


  ஐயா என்ன மன்னிச்சுருங்க உங்க ஊரு பொண்ணு மேல கை வச்சி என் துணிச்சலை காட்டணும்ன்னு நான் நினைக்கிலைங்க.  இந்த பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.  அது இல்லாமல் அவளுடைய கஷ்டமும் எனக்கு தெரிஞ்சி கல்யாணம் பண்ணிக்க முடிவு செஞ்சேங்க என்று அவன் பணிவாக பேசினான். 

  அவன் பேசுவதை இடைமறித்த கோழிகடை குப்புசாமி முதலியார் அப்போ ஊர்ல எந்த பொண்ணு கஷ்டப்பட்டாலும் உனக்கு கல்யாணம் பண்ணிக்க தோணுமா?  கட்டிக்க பிரியப்பட்டவன் நாலு பெரிய மனுஷனை வச்சி முறைப்படி தானே பொண்ணு கேட்கனும்.  அத விட்டுட்டு கூட்டிட்டு ஓட நினைச்சது சுத்த காவாளி தனம் என்றார்.

இது வரைக்கும் நம்ம ஊர் பொண்ணுங்கள அசலூர்கார பசங்க ஏறெடுத்து பார்த்தது கூட கிடையாது.  நம்ம ஊர் பொண்ணுங்களும் அப்படி இப்படி நடந்ததும் கிடையாது.  நம்ம ஊருக்கே இது புது பழக்கம்.  இவங்க ரெண்டு பேருக்கும் கொடுக்குற தண்டனை அடுத்தவன தப்பு பண்ண நினைக்கும் போதே நடுங்க வைக்கணும் என்று குதித்தான் ஏழுமலை. 


    ஆமாம் அப்படி தான் செய்யவேண்டும் என்று எல்லோரும் ஒரே நேரத்தில் கத்தினார்கள்.  குப்புசாமி முதலியார் அனைவரையும் அமைதிபடுத்தினார்.  தலைவர் கூட்டத்துல இருக்கும் போது நாம பேசறதே தப்பு என்று அவர் சொல்லவும் நீ தான் முதலில் கோண வாயை திறந்தீர் என்று கூட்டத்தில் யாரோ பதில் குரல் கொடுத்தார்கள்.

எல்லோரும் அமைதியான பிறகு அந்த இளைஞனை நோக்கி தலைவர் பார்த்தார்.  அப்படி அவர் பார்த்தால் மேலே பேசு என்று அர்த்தம்.  அதை புரிந்த கொண்ட அவன் நான் முறைப்படி தானய்யா முதலில் பெண் கேட்டேன்.  எங்க அப்பாவும் அம்மாவும் வந்து கேட்டதற்கு இவளுடைய அண்ணன் பொண்ணு தர மறுத்துட்டார்.  அது தான் வேற வழி தெரியாம இப்படி பண்ணிட்டோம் என்றான் அவன் குரலில் கெஞ்சல் இருந்தது.

 அடேய் தங்கராசு இப்படி முன்னால வா என்று அமுதாவின் அண்ணனை தலைவர் கூப்பிட தள்ளாடிய படி வந்து நின்றான்.  நிதானமா இருக்கும் போதே உனக்கு அறிவு வேலை செய்யாது.  சாத்தானை வேற வையித்துக் குள்ள வச்சியிருக்க எங்க இருந்து அறிவு வேலை செய்ய போவுது.  சரி அது கிடக்கட்டும் இவனோட தாய் தகப்பன் வந்து பொண்ணு கேட்டாங்களா, நீ மறுத்தது நிசந்தானா?  என்று எரிச்சலாக அவனிடம் கேட்டார்.


  கேட்டது வாஸ்தவம் தானுங்க இந்த பையல் ஐஸ் விக்குறான்.  ஒரு ஐஸ் விக்கறவனை நம்பி பொண்ணு கொடுக்க முடியும்ங்களா?  எப்போதுமே போதையில் குழறி பேசும் தங்கராசு இப்போது தெளிவாக பேசினான்.  ஆமாம் அவன் ஐஸ்விக்கிறான் நீ கப்பல் ஓட்டுறீயோ?  ஒழுங்கா ஒருவேலையும் செய்ய துப்புயில்லாத குடிகார பயல் நீ உழைக்கறவனை குத்தம் சொல்லீறியா என்று தங்கராசுவை திட்டிய தலைவர்

  உனக்கு குடிக்க காசு வேணும்ன்னா உன் தங்கச்சி வேணும்.  அவளும் கல்யாணம் முடிஞ்சி போய்ட்டா உன்னை சிந்துவாரு இல்ல அதனால தான் பொண்ணு கேட்டவங்கள திருப்பி அனுப்பியிருக்க என்று உண்மையை நேருக்கு நேராக போட்டு உடைத்த தலைவர் அந்த இளைஞனை நோக்கி திரும்பினார்.

  ஏண்டா, டேய் அந்த குடிகார பயல் தான் ஒத்து வரலன்னா ஊர்ல இருக்க நாலு பெரிய மனுஷன் கிட்ட பேச வேண்டியது தானே.  அத விட்டுட்டு ராத்தியோட ராத்தியா யாருக்கும் தெரியாம பொண்ண கடத்துவியா என்று கேட்கவும் அய்யய்யோ!  அவரு ஒண்ணு என்னை கடத்தல, நானும் விருப்பப்பட்டு தான் அவரோட போனேன் என்று படப்படபோடு கூறினாள் அமுதா.


  அவன் கூப்பிட்டானோ, நீ போனியோ அது எல்லாம் இங்க முக்கியமில்ல நீங்க ரெண்டு பேரும் செஞ்சது பெரிய தப்பு உங்கள சும்மா விட்டுவிட்டால் இதை பார்த்து மத்தவங்களும் தப்பு செய்ய துணிவாங்க அதனால் தண்டனையை அனுபவிச்சே ஆகனும் என்று கூறிய தலைவர் பஞ்சாயத்தாரை பார்த்து என்ன தண்டனை கொடுக்கலாம் சொல்லுங்க என்று கேட்டார். 

 கைகளை கட்டி பவ்யமாக நின்ற சுப்ரமணி பேச ஆரம்பித்தார்.  இன்னிக்கு தங்கராசு தங்கச்சி செய்ததை நாளைக்கு மத்தவங்களும் செய்ய ஆரமிப்பாங்க.  இந்த வட்டாரத்திலேயே போலிஸ் நுழையாத ஊருன்னு நம்ம ஊருக்கு ஒரு மரியாதை இருக்கு.  அந்த மரியாதை குறையாத வண்ணம் இவங்களுக்கு தண்டனை கொடுக்கனும்.

 சுப்ரமணியின் இந்த பேச்சை கேட்ட வரதராஜன் பலமாக தலையை ஆட்டினான்.  ஆமாங்க தலைவர் ஐயா, ஊரு மரியாதை கெட்டு போச்சுன்னா நாம தலை நிமிர்ந்து நடக்க முடியாது.  அசலூருகாரங்க கேலி பேசுவாங்க.  நீங்க தலைவரா இருக்கும் போது இப்படியொரு அவமானம் நம்ம ஊருக்கு வரக்கூடாது.


   நீ சொல்றது நியாயமான பேச்சு தான்.  நம்ம ஊரு பொண்ணு முறைப்படி கல்யாணம் ஆகாம ஒருத்தனோட ஓடிப்போறான்னா நம்ம எல்லோருக்கும் அவமானம் தான்.  இன்னிக்கு இவங்களை மன்னிச்சு விட்டுட்டா நாளைக்கு தப்பு பண்ணறவங்களுக்கு இது ஒரு வாய்ப்பா போயிடும்.  நம்ம காலத்துல உலகம் இருந்தா மாதிரி இப்ப இல்லை.  கண்ட கண்ட புஸ்தகங்களும், கன்றாவி சினிமாக்களும் பசங்க மனதை கெடுத்து குட்டிச் சுவராக்கி வைச்சிருக்கு என்று பீடிகையோடு பேசிய தலைவர், நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

 அமுதாவுக்கு நல்லது கெட்டது செய்ய ஆயி அப்பன் இல்லை.  இருக்கற அண்ணகாரனும் மொடாக்குடியன்.  அவன் சம்பாதிச்சு இவள கரையேத்தனும்ன்னா கிழவியான பிறகும் நடக்காது.  ஊர்காரங்களான நாம தான் எதாவது செய்தாகனும்.

 அமுதா வயசுக்கு ஏத்த வாலிப பசங்க நம்ம ஊர்ல நிறைய பேர் இருக்காங்க.  அவங்களில் யாராவது ஒருத்தர் இவளுக்கு வாழ்க்கை கொடுத்தா நல்லா இருக்கும் என்று சொல்லி கூட்டத்தினரை சுற்றி ஒரு பார்வை பார்த்தார்.


   இது எப்படிங்க நியாயமாகும்.  அவ இன்னொருத்தனை விரும்பி இருக்கா அவனோட ஓடி போகவும் தயாராயிட்டா, அப்படிப்பட்ட ஒருத்தியை கல்யாணம் கட்டிகிறத்துக்கு நம்ம ஊர் பசங்க என்ன இளிச்சவாயன்களா?  என்று ஆவேசமாக கூறிய ஏழுமலையை தலைவரின் முரட்டு பார்வை அடக்கி உட்கார வைத்தது.

  சரி நம்ம ஏழுமலை சொன்ன மாதிரி யாரும் வாழ்க்கை கொடுக்க தயாராக இல்லையின்னா வீட்டுக்கு 1000 ரூபாய் வரி போடுவோம்.  மொத்த பணத்துல ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் நடத்திடுவோம்.  ஒரு விளக்க ஏற்றி வச்ச பெருமை நம்ம ஊருக்கு கிடைக்கட்டுமே என்று தலைவர் சொல்லவும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.  யார் யாரோ என்னென்னவோ பேசினார்கள்.  தலைவர் சொன்னதில் ராகவனுக்கு உடன்பாடு இருந்தது.  தான் அதற்கு சம்மதிப்பதாக முன் கூட்டியே சொன்னால் பிரச்சனை வேறு வடிவம் எடுக்கும் என்று அமைதியாக இருந்தான்.

 கூட்டத்தில் சலசலப்பு சற்று குறைந்து இருட்டில் இருந்த யாரோ ஒருவர் எழுந்து பேசினார் நம்ம ஊரு ஜனங்க ஒன்னும் வசதி படைச்சவங்க இல்லை.  எல்லோருமே வாய்க்கும் கைக்கும் போராட்டம் நடத்துறவங்க தான்.  சுளையா 1000 ரூபாய் எடுத்து கொடுக்க எல்லோர்கிட்டையும் வசதியில்லை.  அதனால வேற வழிய சொல்லுங்க.  இந்த குரலுக்கு ஒட்டுமொத்த சம்மதம் தெரிவிப்பது போல் கூட்டம் அமைதியாக இருந்தது.


   தொண்டையை செருமிய தலைவர் அப்படின்னா கல்யாணம் பண்ணிக்கவும் ஆள் இல்லை.  பணம் தரவும் வசதி இல்லை ஆக மொத்தம் வாயால பேசுவீங்களே தவிர யாரும் பொறுப்பு சுமக்க தயாராயில்லை பொறுப்பு ஏற்க முடியாத எவருக்கும் மானம் வெக்கத்த பற்றி பேச அருகதை இல்லையின்றது என்னுடைய அபிப்பிராயம்.  என்று கோபமாக சொன்ன தலைவர் அந்த இளைஞனை நோக்கி திரும்பினார்.  ஏண்டா அறிவு கெட்ட மடையா கட்டிக்க ஆசைப்பட்டவள் வெறுங் கழுத்தோட நிற்கிறாள் நாளைக்கு ஒரு கஷ்டம்ன்னா உதவி ஒத்தாசைக்கு பொண்டாட்டி தரப்புல யாரும் இல்லை.  இந்த நிலைமையில இவள கல்யாணம் பண்ணி நீ என்ன செய்யப்போற பேசாம ஊர பார்த்து நடையை கட்டு என்று சொன்னார்.

 ஐயா காசு பணத்த பார்த்து நான் இவளை விரும்பலைங்க.  என் மனசுக்கு பிடிச்சு போயிடுச்சு, வாழ்ந்தா இவளோடத்தான் வாழனும்ன்னு உறுதிக்கு வந்துட்டனுங்க.  ஐஸ் விக்கிறனோ, மூட்டை தூக்கறனோ, இல்லை எதுவுமே முடியலைன்னா பிச்சை எடுத்தாவது கட்டியவளை காப்பாத்துவேனே தவிர கை விட முடியாதுங்க என்று நிதானமாக பேசினாலும் உறுதியாக பேசினான் அந்த இளைஞன்.


   கோழி கடை குப்புசாமி முதலியாரை  அருகில் அழைத்து ஏதோ சொல்லி அவரை எங்கோ அனுப்பி வைத்த தலைவர் சட்டை பையில் இருந்து சுருட்டை எடுத்து பற்ற வைத்தார்.  பொதுவாகவே அவர் சுருட்டு புகைக்க ஆரம்பித்து விட்டார் என்றால் ஏதோ ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்று பொருள்.  சுருட்டை பிடித்து முடிக்கும் வரை யாரோடும் எதுவும் பேசாமல் மௌனம் காத்த அவர் வேகமாக முதலியார் திரும்பி வருவதை பார்த்து சுருட்டை தூக்கி போட்டு காலால் மிதித்த வண்ணம் எழுந்து நின்றார்.  அருகில் வந்த முதலியார் தலைவர் கைகளில் ஏதோ ஒரு பொருளை ரகசியமாக கொடுத்தார்.

 அதை வாங்கி கொண்ட தலைவர் ராகவனை நோக்கி ராகவா கோவிலை திறக்க சொல்.  அம்மாள் கழுத்திலிருந்து மாங்கல்ய கயிரை எடுத்து வா என்று கட்டளையிட்டார்.  ராகவனுக்கு ஒரே உற்சாகமாகி விட்டது.  ஏதோ பெரிய சாதனை நிகழ்த்துவது போல் கோவிலுக்குள் சென்றான்.  அம்மனை வணங்கி திருமாங்கல்யத்தை எடுத்து தலைவரிடம் பணிவாக வந்து கொடுத்தான்.

 அடியே அவசரகார கழுதை அவன் பக்கத்துல போயி நில்லு என்று அமுதாவிடம் கூறிய அவர் தாலி கயிரை அந்த இளைஞன் கையில் கொடுத்து கட்டுடா அவ கழுத்துல என்று உத்தரவு போடும் பாணியில் சொன்ன அவர் கூட்டத்தினரை பார்த்து பொம்பளைங்க எல்லாம் சும்மா நின்னா எப்படி நம்ம ஊரு பொண்ணுக்கு கல்யாணம்ன்னா குலவை சத்தமில்லாமல் நடக்கலாமா, எல்லோரும் சத்தமா குலவையிடுங்க என உற்சாகமாக கூறினார்.  


   அர்த்தஜாம வேளையில் குலவை சத்தம் மங்களகரமாக ஒலிக்க அமுதா கழுத்தில் அவன் தாலி கட்டினான்.  மணமக்கள் இருவரும் தலைவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.  அவர்களை தூக்கி நிறுத்திய அவர் அமுதாவின் அண்ணன் தங்கராசுவை பக்கத்தில் கூப்பிட்டு முதலியார் தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த பொருளை அவன் கையில் திணித்து உன் தங்கச்சி கழுத்துல போட்டு மனபூர்வமா ஆசிர்வாதம் பண்ணு என்று சொன்னார்.

 அந்த பொருளை கையில் வாங்கிய தங்கராசு அதை வெளிச்சத்தில் பார்த்து மலைத்து போனான்.  நல்ல கனமான தங்க சங்கலி தான் பத்துவருடம் பாடுபட்டால் கூட இப்படியொரு நகையை வாங்க முடியாது.  என்று நினைத்த அவன் குடிகார கண்களிலும் நன்றியால் நீர் சுரக்கும் என்று நிருபித்து தங்கையின் கழுத்தில் தங்க ஆபரணத்தை போட்டான்.

 ராகவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.  தலைவர்கள் என்றாலே சுயநலகாரர்கள் தான் என்ற காலத்தில் இப்படியும் ஒரு நல்ல மனிதர் இருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் என நினைத்து கொண்டு இருக்கும் போதிலே அவர் கூட்டத்தை பார்த்து பேசலானார். 

   இப்ப இங்கு நடந்த கல்யாணம் என்னுடைய தீர்பு அல்ல.  இப்ப என் தீர்பை சொல்றேன்.  எல்லோரும் நல்லா கேட்டுக்குங்க நான் இவர்களுக்கு கல்யாணம் பண்ணி வைத்தாலும் இரண்டு பேரும் ஓட நினைத்ததற்கு தண்டனை பெற்றே ஆகனும்.  இந்த மாதிரி தப்பு இந்த ஊரில் மீண்டும் நடக்க கூடாதுன்னா அதற்கு இது பாடமா அமையனும்.  அதனால இவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு தொடங்கி பத்து வருஷ காலம் இந்த ஊர் மண்ண மிதிக்க கூடாது.  மீறி மிதிச்சா தலை மொட்டை அடிக்கப்படும் என்றார்.  கூட்டம் உறைந்து போனது.  ராகவன் மட்டும் காலம் மாறும் என்று நினைத்து கொண்டான்.

Contact Form

Name

Email *

Message *