Store
 Store
 Store
 Store
 Store
 Store

அல்கொய்தாவாகும் அஜீரணம்


  லையளவு சோறு கொட்டி அதன் நடுவில் குளம் போல் சாம்பார் விட்டு யாராவது சாப்பிட்டால் அதை பார்ப்பதே பெரிய சந்சோஷம்.  கோழி மூக்கால் கிறுக்குவது போல் ஒன்றிரண்டு சாதத்தை பொறுக்கி திண்பவர்களை பார்த்தாலே எரிச்சல் வரும்.  என்னை பொறுத்தவரை மனிதர்கள் நன்றாக சாப்பிட வேண்டும்.  கடினமாக உழைக்க வேண்டும்.  அதன் பிறகு நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும்.  இன்று இது எத்தனை பேருக்கு ஆக கூடிய காரியமாக இருக்கிறது.


   சிலர் நிறைய சாப்பிடுவார்கள்.  உட்கார்ந்த இடத்தை விட்டு நகரமாட்டார்கள்.  மூளையை வளர்க்க சொன்னால் உடம்பையும் கொழுப்பையும் வளர்ப்பார்கள்.  இன்னும் சிலர் இருக்கிறார்கள்.  சிறிது நேரம் கூட ஓய்வு இன்றி ஓடி கொண்டேயிருப்பார்கள்.  செய்ய வேண்டிய வேலையை தவிர உண்பது, உடுப்பது, இப்படி எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தமாட்டார்கள்.  எதையும் தேடிப்போவது கிடையாது.  எதாவது கிடைத்தால் சாப்பிடுவோம்.  அதற்கென்று ஒதுக்கும் நேரத்தில் உருப்படியாக வேறு எதாவது வேலையை கவனிக்கலாம் என்று சொல்வார்கள். 

   அதிகமாக சாப்பிடுவது, வேளா வேளைக்கு சாப்பிடாமல் இருப்பது ஆகிய இரண்டு பழக்கங்களுமே மிகவும் தீமையை தரக்கூடியது.  இதில் மூன்றாவது ஒரு ஜாதி இருக்கிறது.  அந்த ஜாதி நாட்டில் இருப்பதே பெரிய அபாயம்.  உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லையென்பதை விட உணவேயில்லை என்பது தான் அந்த ஜாதியினன் அன்றாட வாழ்க்கை.  ஒருபுறம் பசி வர மாத்திரையும், இன்னொருபுறம் பட்டினியால்  யாத்திரையும் எந்த நாட்டில் அதிகமிருக்கிறதோ அந்த நாடு உருப்பட்டதாக சரித்திரமில்லை.   


   நாம் இப்போது நாட்டு நிலவரத்தை பற்றி பேச போவது இல்லை.  மனிதர்களின் வயிற்று நிலவரத்தை வைத்து தான் பேசபோகிறோம்.  காரணம் ஒரு நாட்டிற்கு மத்திய பகுதியில் பிரச்சனை ஏற்பட்டால் நாடு முழுவதுமே பிரச்சனை ஆகிவிடும் என்பது போல மனிதனின் மத்தியப்பகுதியான வயிற்றில் பிரச்சனை வந்தால் எல்லாமே சிக்கல்தான்.  உலகத்தை அச்சுறுத்துவது மத தீவிரவாதம் என்றால் வயிற்றை அச்சுறுத்தும் பல தீய சக்திகளில் அஜீரணம் என்பது அல்கொய்தா மாதிரி மிகவும் சக்திவாய்ந்ததாகும்.  பயங்கரமானதும் கூட.

 காலையில் பொங்கலும், இரண்டு மெதுவடையும் சாப்பிட்டேன்.  வயிறு மந்தமாகிவிட்டது.  மதியம் சாப்பிட முடியவில்லை என்றால் அதை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.  செட்டியார் கடையில் ஒரு சோடாவோ, மூலகடையில் ஒரு இஞ்சி மிட்டாயோ வாங்கி சாப்பிட்டால் சரியாகி போய்விடும்.  அதே நேரம் இந்த வயிற்று மந்தம் நாள் கணக்கில், மாத கணக்கில் நீடித்தால் மும்பை தாஜ் ஓட்டலுக்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது டெல்லி உள்துறை அமைச்சகத்தில் தேநீர் விருந்து நடத்தியது போல விஷயம் விபரீதமாகிவிடும்.


  நாம் தெரிந்தும் தெரியாமலும் செலுத்துகின்ற வரி நமது நாட்டை நிர்வாகம் செய்ய பொருளாதார பலமாக அமைகிறது.  அதே போலத்தான் நாம் அன்றாடம் எடுத்து கொள்ளவும் உணவு நமது உடல் இயங்க ஜீவசக்தியாக மாற்றம் அடைகிறது.  அந்த உணவு ஜீரணமானால் தான் சக்தியாகும்.  ஜீரணமாகாமல் வயிற்றுக்குள்ளேயே தங்கியிருந்தால் வயிறு குப்பை கூடையாவது மட்டுமில்லை ரத்தமும் சாக்கடை போலாகி விடும்.

  சின்ன குழந்தைகள் கக்கலும் கரைசலுமாக வெளுத்து மலம் போனால் அனுபவமுள்ள பாட்டிமார்கள் உடனே குழந்தைக்கு அஜீரணமாகிவிட்டது என்று முடிவு செய்துவிடுவார்கள்.  இன்றைய நவீன மருத்துவர்கள் எதையும் ஆதாரபூர்வமாக ஏற்று கொள்பவர்கள் என்பதினால் அஜீரணம் என்ற முடிவுக்கு வரவே அந்த பரிசோதனை, இந்த பரிசோதனை என்று பணத்தையும் விரயமாக்குவார்கள், கால நேரத்தையும் வீணாக்குவார்கள்.  இப்படி மலம் போனால் அஜீரணம் என்பது குழந்தைகளுக்கான அறிகுறி மட்டுமல்ல பெரியவர்களுக்கும் இந்த அறிகுறி பொருந்தும்.


  இதற்கு வேறு சில அறிகுறிகளையும், கூட சுட்டிக் காட்டலாம்.  வயிறு உப்பிக் கொண்டு இருக்கும். வலியும் எடுக்கும்.  அடிக்கடி கொட்டாவியும் வரும்.  மேலும் மலச்சிக்கல், நெஞ்சு எரிச்சல் தலை கிறுகிறுப்பு, வாய் நாற்றம், தலைவலி போன்றவைகளும் இதனால் வருவது உண்டு.

  பொதுவாக அஜீரணம் என்பது உணவை ஒழுங்காக மென்று சாப்பிடாததினாலும் சாப்பிட்டவுடன் போதிய தண்ணீர் குடிக்காததினாலும், அதிகமாக தண்ணீர் குடிப்பதனாலும் ஏற்படுகிறது என வைத்திய நூல்கள் சொல்கின்றன.  இப்போதைய நவீன ஆய்வுகள் இந்த காரணங்களோடு வேறு சில புதுகாரணங்களையும் சேர்த்து கொள்ள சொல்கிறது.

  உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று ஒரு பழமொழி உண்டு.  இந்த பழமொழியை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் பல சோம்பேறிகள் சாப்பிட்டவுடனேயே நீட்டி நிமிர்ந்து படுத்து குறட்டைவிட்டு உறங்கிவிடுகிறார்கள்.  இது மிகவும் தவறான பழக்கமாகும்.  


    சாப்பிட்டவுடன் உணவை செரிமானப்படுத்த வயிற்றுக்கு சற்று அதிகமான ரத்தம் தேவை.  இதனால் மூளையின் செயல்பாட்டிற்கு போதிய ரத்தத்தில் ஓரளவு குறைவு ஏற்படும்.  அந்த நேரத்தில் கடினமான வேலைகளை செய்தோமென்றால் தேவையற்ற உடல்சோர்வு ஏற்படும். 

  இதனால் உணவுக்கு பிறகு சிறிதுநேரம் ஓய்வு தேவையே தவிர உறக்கம் தேவையில்லை.  இப்படி உறங்கினால் அஜீரண கோளாறு தான் ஏற்படும்.  இது மட்டுமல்ல அடுத்த வீட்டுக்காரன் புதுகார் வாங்கிவிட்டான் என்று பொறாமைப்பட்டாலும், குதிரை ரேஷில் பத்துகோடி ரூபாய் பணம் கிடைக்காதயென பேராசைப்பட்டாலும் மனைவியிடம் சிரித்து பேசினால் புதுபுடவை வாங்கி கொடுக்க வேண்டுமா என்று பயப்பட்டாலும், வீடு ஒட்டடை அடிக்கப்படிவில்லையே என்று கோபப்பட்டாலும் கூட அக்னி மந்தம் என்ற அஜீரண கோளாறு ஏற்படும் என சொல்லப்படுகிறது.  


  உலகில் புகழ் பெற்ற மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதம் என்ற இந்திய மருத்துவ முறை கபம் என்ற நீர் தோஷத்தாலும், பித்தம் என்ற அக்னி தோஷத்தாலும், வாதம் என்ற வாயு கோளாறாலும் அஜீரணம் ஏற்படுவதாக சொல்கிறது.  அது எப்படி என்று சிறிது பார்ப்போம்.

 ஒரு சிலரது கண்களும் முகமும் புஷ் என்று உப்பி ஜøரம் வருவது போல் நீர் கோர்த்து கொண்டிருக்கும்.  உடல்கணம் குறைந்து அதிக சோர்வும், பசியின்மையும் இருக்கும்.  அடிக்கடி ஏப்பம் வருவது போல் இருக்கும்.  ஆனால் வராது.  இந்த அறிகுறி கபதோஷத்தால் வரும்.  அஜீரணநோயை சுட்டி காட்டுவதாகும்.  இப்படி யாருக்காவது இருந்தால் அதிகமாக பயப்பட வேண்டிய அவசியமில்லை.  பகல் முழுவதும் திட ஆகாரம் எதுவும் சாப்பிடாமல் அடிக்கடி வெந்நீர் குடித்து வந்தாலே சரியாகி விடும்.  சில நேரத்தில் அதிக தாகம் தலை கிறுகிறுப்பு, கண்கள் இருண்டு கொண்டு வருதல், புளிச்ச ஏப்பம், நெஞ்சு எரிச்சல் போன்றவைகள் வாட்டி வதக்கி அன்றாட வேலைகளை தடுக்கும்.  இந்த வகை அஜீரணம் பித்த தோஷத்தால் வரும் என்று சொல்கிறார்கள்.  இதற்கு சிறிது வெந்நீர் உப்பு போட்டு பருகினால் உடனே வாந்தி வரும்.  ஜீரணமாகாமல் உணவு குழாய்க்குள் இருந்து உணவு எச்சங்கள் எல்லாம் வெளியேறி விடும்.  உப்பிட்ட வெந்நீரை அதிகம் பருகுவதினால் வாந்தியின் வேகம் அதிகக்கும் பூரண சுகம் உடனே கிடைக்கும்.

  தொடர்ச்சியாக சில நாட்கள் மலச்சிக்கல் இருக்கும். சிறுநீர் வருவது கூட சரிவர இருக்காது.  வயிறு உப்புசமாகி வயிற்று வலியும், பசியின்மையும் இருக்கும்.  இது வாயு கோளானால் ஏற்படும் அஜீரணமாகும்.  உணவு வயிற்றை விட்டு குடலுக்குள் சென்றவுடன் வாயு உற்பத்தி அதிகரித்து வயிற்று வீக்கத்துடன் தோன்றும்.  வாதாஜீரணம் என்ற இந்த நோய் நீங்க வெந்நீர் உத்தடம், தேன், இஞ்சிசாறு, சுக்கு நீர் போன்றவைகள் நல்ல பலனை தரும்.  

   வாதம், பித்தம், கபம் என்று எந்த குறைபாட்டினால் அஜீரண கோளாறு ஏற்பட்டாலும் அவற்றை நீக்க ரிங்குவாஷ்டக சூரணம் என்று ஒரு வகை மருந்து ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.  இந்த சூரணத்தை குழந்தை முதல் பெரியவர்கள் வரை மோரில் கரைத்து சாப்பிட்டால் உடனே குணமாகும்.  சாதத்தில் பருப்பு பொடி போட்டு பிசைந்து சாப்பிடுவது போல் சாப்பிட்டால் வியக்கத்தக்க விதமாக சில நிமிடங்களிலேயே நிவாரணம் பெறலாம்.  இந்த ரிங்குவாஷ்டக சூரணம் எப்படி செய்வது அதற்கு என்ன பொருட்கள் வேண்டும்.  என்பதை பார்ப்போம்.
 •    பெருங்காயம்  -    30 கிராம்
 •    சுக்கு         -     20 கிராம்
 •    திப்பிலி       -    20 கிராம்
 •    மிளகு         -    20 கிராம்
 •    சீரகம்         -    20 கிராம்
 •    கருஞ்சீரகம்    -    20  கிராம்
 •    ஓமம்          -    30 கிராம்
 •    இந்துப்பு      -     30 கிராம்

முதலில் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மண்சட்டியில் போட்டு பொரிக்க வேண்டும்.  அதன் பிறகு இந்துப்பையும் துண்டுகளாக்கி சட்டியில் இட்டு வறுக்க சடசடவென பொரியும்.  இதில் மிகவும் கவனிக்க வேண்டியது காயம், இந்துப்பு ஆகிய இரண்டையும் தனித்தனியாக பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு சுக்கு திப்பிலி, மிளகு, சீரகம், ஓமம், கருஞ்சீரகம் ஆகியவற்றை பச்சையாக பொடி செய்து கொண்டு வறுக்கப்பட்ட காயம், இந்துப்புகளோடு கலந்து பாட்டிலில் அடைத்து கொள்ள வேண்டும்.  மிக கண்டிப்பாக பிளாஸ்டிக் டப்பா கூடாது.  விறகு அடுப்புதான் தேவை.

இதை செய்து சாப்பிட்டு பாருங்கள் அஜீர்ணம் மட்டும் அல்ல பல நோய்களும் குணமாகும்.Contact Form

Name

Email *

Message *