Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஈழத்தில் அடுத்த யுத்தம் எப்போது...?   லங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தனி நாடு அவசியம் தேவையா?  இப்படி ஒரு கேள்வி இன்று நேற்று அல்ல 1980 - முதலே தமிழக மக்கள் பலரிடத்தில் கேட்கப்படுகிறது.  இலங்கையை ஆளுகின்ற சிங்கள இனவாதிகள் தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கிறார்கள்.  தமிழ் பண்பாட்டு கூறுகளை எந்த வகையிலாவது இல்லாது செய்து விட வேண்டும் என்று கங்கனம் கட்டி செயல்பட்டு வருகிறார்கள்.

   தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும், மானத்திற்கும் உத்திரவாதம் இல்லை.  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தனது தாய் பூமியில் வேர்பதித்து வாழ்ந்த பூர்வ குடிமக்கள் அனாதைகளாக புலம் பெயர்ந்து இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பெயர் கூட வாயில் நுழையாத பல நாடுகளில் அகதிகளாக வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலை மாற பாதிக்கப்பட்ட இலட்ச கணக்கான தமிழர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட தனி நாடு ஒன்று அவசியமாக தேவையென தமிழகத்தில் பலர் கருதுகிறார்கள்.

தனி நாடு வேண்டும் என்று சொல்வதற்கு எத்தனை பேர் இருக்கிறார்களோ அதே அளவிற்கு தனி நாடு தேவையில்லை என்று சொல்பவர்களும் இங்கே உண்டு.  இந்தியாவை போல இலங்கையும் சரித்திர காலத்தில் தனித்தனி பகுதிகளாக பிரிந்திருந்திருக்கலாம்.  நல்லதோ கெட்டதோ ஆங்கிலேயர் காலத்தில் ஒருங்கினைந்த இலங்கையாக உருவாகி விட்டது.  மீண்டும் ஒரு நாட்டை பிரிக்க நினைப்பது முற்றிலும் தவறு.

   பழைய சரித்திரத்தை மாற்ற நினைத்து ஈராக் குவைத்திற்குள் நுழைந்தது எப்படி தவறோ அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது எப்படி சரியில்லையோ அப்படியே இலங்கையையும் பிரிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

   தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் பிரச்சனைகள் இருந்தால் அது ஒன்றுப்பட்ட இலங்கைக்குள் தீர்க்கப்பட வேண்டுமே தவிர பிரித்தால் தான் தீரும் என்று கூறுவது வீண் பிடிவாதமாகும்.  தனி ஈழம் உருவாக ஆதரவு தெரிவித்தால் சீக்கியர்களின் காலிஸ்தான் கோரிக்கையும் காஷ்மீரிகளின் தனி நாடு போராட்டமும் நியாயமானதாக போய்விடும் என்றும் காரண காரியங்களை சொல்கிறார்கள்.

மறைந்த சதாம் உசேன் அவர்கள் குவைத்தை பிடித்த போது சொன்ன காரணம் ஒப்புக் கொள்ள முடியாதது.  ஒரு காலத்தில் ஈராக் நாட்டின் ஒரு அங்கமாக குவைத் இருந்திருந்தாலும் கூட அது பல நூறு ஆண்டுகளாக தனி நாடாகத் தான் இருந்தது.

   காலிஸ்தான் மற்றும் காஷ்மீரின் தனி நாடு கோரிக்கை ஈழப் பிரச்சனையோடு முற்றிலும் ஒத்து வராது.  சீக்கியர்களோ காஷ்மீரிகளோ இந்தியாவில் அடிமைகளாக நடத்தப்படவில்லை.  மாறாக சாதாரண இந்தியன் எந்த உரிமையோடு இந்த நாட்டில் வாழ்கிறானோ அதே உரிமையோடு அந்த மக்களும் வாழ்கிறார்கள்.

   மேலும் அம்மாநில மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்தியது அந்நிய சக்திகளே ஆகும்.  இந்திய அரசாங்கம் அந்த மக்கள் மீது எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியையும் எப்போதுமே காட்டியதில்லை.  ஆனால் இலங்கையில் நிலைமை தலைகீழாக உள்ளது.

   அந்த நாட்டை ஆளுகின்ற தலைவர்களும், மற்ற அரசியல் கட்சிகளும் தமிழர்களை அந்நியர்களாகவே கருதுகிறார்கள்.  சிங்கள மக்களின் வாழ்வுரிமையை பறிக்க வந்த எதிரிகளாகவே பார்க்கிறார்கள்.  நியாயப்படி கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட தமிழர்களுக்கு கொடுப்பதில்லை.

  தமிழர்களின் மீது இனரீதியிலான பகீரங்க போர் பிரகடனத்தையே அரசாங்கம் செய்கிறது.  தமிழர்களை குறி வைத்து தாக்குகிறது.  தமிழர்களின் கல்வி மற்றும் பொருளாதார மையங்களை முற்றிலுமாக அழிக்கிறது.  கோரிக்கைகள், வேண்டுகோள்கள், கண்டனங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் போன்ற அறவழி போராட்டங்ளை ராணுவத்தை கொண்டு வன்முறையாக ஒடுக்குகிறது. 

   இந்த நிலையில் தான் ஒரு இனத்தின் பன்நெடுங்கால துயரை தீர்ப்பதற்கு தனி நாடு ஒன்று தான் நிரந்தரமான தீர்வு என்ற முடிவுக்கு அம்மக்கள் வந்து போராடுகிறார்கள்.  அவர்களின் நியாயமான போராட்டத்தை பிரிவினைவாதங்களோடு போட்டு குழப்பிக் கொள்வதால் பல சிக்கல்கள் உருவாகின்றன.  ஒரு உண்மையான விடுதலை போராட்டம் பலவித தவறான விமர்சனங்களுக்கு உட்பட்டு விடுகிறது என்று நாம் சொன்னால், அது தவறல்ல

 இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் இந்திய தமிழர்களோடு தொப்புள்கொடி உறவு உள்ளவர்கள் தான்.  ஆனால் அவர்கள் இந்தியர்கள் அல்ல.  இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் ஈழ மக்கள் போராட்டத்திற்கு தார்மீக ரீதியிலான ஆதரவு வழங்குகிறார்கள் என்பதை மையமாக வைத்து ஈழ போராட்ட குழுங்கள் இந்திய மண்ணில் பிரிவினை வாதிகளோடு கூட்டு வைப்பதும் இந்திய அமைதிக்கு சட்ட விரோதமான முறையில் குந்தகம் செய்வதும் எந்த வகையில் நியாயம் என்று சிலர் கேட்பதை நம்மால் தட்டி கழித்து விட முடியவில்லை.  ஈழ தேசத்திற்கான தமிழகத்தின் குரல் இந்த கேள்வியால் பலகீனமடைவதை யாரும் மறுத்து விட முடியாது.

  ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு முன்பு தமிழ் நாட்டில் ஈழ போராட்டத்திற்கு இருந்த மரியாதையே வேறு.  அல்லல்பட்டு அவதியுற்று இந்தியாவிற்குள் அகதிகளாக வரும் ஈழ தமிழர்களை அந்நியமாகவோ, சந்தேகமாகவோ தமிழக மக்கள் பார்த்ததில்லை.

  தாங்கள் உண்ணுகின்ற சோற்றை பாதியை பகிர்ந்து கொடுக்கவும் கூட தயாராக இருந்தார்கள்.  ஆரம்ப காலத்தில் ஈழ போராட்டத்தின்பால் தவறான அபிப்பிராயம் கொண்டிருந்த ராஜீவ் காந்தி கூட தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தான் கடைசி காலத்தில் இலங்கை பிரச்சனையை அணுகினார். 

  ஆனால் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.  ராஜீவ் காந்தியின் கொலைக்கு விடுதலை புலிகள் தான் முற்றிலும் காரணமென்ற குற்றசாட்டுக்கு பல மறுப்பு காரணங்கள் கூறப்படுகிறது. 

  அவைகள் உண்மையோ, பொய்யோ அதை பற்றி எல்லாம் தமிழக மக்கள் ஆராய விரும்பவில்லை.  ஒரு அரசியல் படு கொலைக்கு புலிகள் இயக்கம் நேரடி கருவியாக இருந்து விட்டார்கள் என மக்கள் ஆழமாக நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கைக்கு வலுவான காரணங்கள் இல்லாமல் இல்லை.  தமிழகத்துக்கு அந்நியமான ஆயுத நடமாட்டம்    தனி தமிழ்நாடு கோரிய சில தீவிரவாத அமைப்புகளோடு புலித் தம்பிகள் பகிரங்கமாக உறவாடியதும் தங்களுக்குள்ள சகோதர சண்டையை இந்திய மண்ணில் கூட நடத்தியதும் புலிகளின் செயல்பாட்டின் மீது மக்களை அவ நம்பிக்கை கொள்ள வைத்துவிட்டது. 

    தமிழக மக்கள் எப்போதுமே ஆயுத போராட்டங்களில் நம்பிக்கையில்லாதவர்கள்.  படுகொலைகள் மூலம் ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல ஆர்வமில்லாதவர்கள்.  இந்திய விடுதலை போராட்ட காலங்களில் கூட காந்தியின் அறப்போராட்டத்திற்கு இருந்த மதிப்பு மற்ற வழி போராட்டங்களுக்கு மக்கள் கொடுத்தது இல்லை. 

   தமிழ் நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று சொல்லும் எந்த தலைவரும் இங்கே அரசியல் அனாதையாகத் தான் ஆக்கப்படுவார்கள்.  இப்படிப்பட்ட அரசியல் அனாதைகளை நம்பி புலிகள் பல காரியங்களை தமிழகத்தில் செய்ததினால் அதற்கு முத்தாய்ப்பாக ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்ததினால் இந்திய தமிழர்கள் ஈழ போராட்டத்தை சந்தேக கண்ணோடு பார்க்க ஆரமித்துவிட்டார்கள்.

தமிழகத்தில் விடுதலை புலிகள் இயக்கம் பேரும், புகழும் பெறுவதற்கு திரு. எம். ஜி. ராமச்சந்திரனின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் முக்கிய காரணமாக இருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது.  ஐ.நா. மன்றத்தில் இலங்கை தமிழர்களின் அவநிலையை உணர்ச்சி பூர்வமாக எடுத்து கூறி உலக நாடுகளின் கருத்துகளை தமிழர்களின்பால் பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் ஈர்த்ததை சரித்திரம் இன்றும் பேசும்.

   கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கூட இலங்கை தமிழர்களுக்காக கடந்த காலங்களில் சில உருப்படியான செயல்களை செய்திருக்கிறார் என்பதை நினைவு கூறத்தான் வேண்டும்.  தமிழக தலைவர்கள் மட்டுமல்ல அனைத்திந்திய தலைவர்கள் கூட இலங்கை விவகாரத்தில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதை சுட்டிகாட்டியே ஆக வேண்டும்.

இலங்கையில் நம் தமிழ் குடிமக்கள் படும் கஷ்டங்களை நினைக்கும் போது நம் கண்கள் குளமாகின்றன.  மக்களை காப்பாற்ற வேண்டிய அரசாங்கமே வன்முறையை கடைபிடிக்கிறது.  மக்களை அடக்கி ஒடுக்குகிறது.  சிறுபான்மையினருக்கு அன்பு காட்டி, கட்டி காத்து பெருபான்மையினரையும் வளர்பது எந்த அரசிற்கும் தலையாய கடமையாகும். 

  சிறுபான்மையினர் அதிகமாக உள்ள பகுதியில் மொழி, மதம், இனம் இதர உரிமைகள் காக்கப்பட வேண்டியது போக அவர்களிடமிருந்து சாதாரன குடிமக்களுக்குரிய உரிமைகளை கூட பறித்து ஆதரவற்றவர்களாக செய்யும் இலங்கை அரசின் செயல்பாட்டை என்ன வென்பது? 

  சிறுபான்மை வர்க்கத்தினர் இருக்கும் பகுதியில் அவர்களுக்கு அவசியமாக பாதுகாப்பு கொடுப்பது அரசியல் நீதியல்லவா?  இதை இலங்கை அரசாங்கம் மறந்தது ஏன்?  இது நியாயமா?  இது தர்மமா?  இது பொறுக்குமா? 

  தர்மத்தின் பெயரால், சட்டத்தின் பெயரால், குடியரசு ஜனநாயகம் என்ற உயர் அரசியல் முறையின் பெயரால், பண்பாட்டின் பெயரால் இந்த மாபெரும் அநீதிக்கு தீர்வு காண அறை கூவல் விடுகிறேன்.  பரிகாரம், பிராயசித்தம் செய்ய கோருகிறேன்.  இங்கே நாம் விடுக்கும் அறை கூவல் அனைவரது காதுகளிலும் விழ வேண்டாமா?  அனைவரது இல்லங்களிலும் எதிரொலிக்க வேண்டாமா?  சுதந்திரம் நமக்கு உயிர் என்று சொல்லி கொடுத்தது சீவக சிந்தாமணி.  உயிர் கொடுக்கும் தமிழர்களின் சுதந்திரம் பறிபோக கூடாது என்ற ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராம்ராவ் அவர்களின் கம்பீரமான கருணை பேச்சும்,

இலங்கையிலேயே தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் துயரத்தையும் அதன் காரணமாக தமிழக தமிழர்கள் கொண்டிருக்கும் வேதனையையும் நான் முழுமையாக மனதில் கொள்கிறேன்.  இலங்கையிலேயே தமிழர்கள் படுகிற அவதி தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே பாதிக்க கூடிய பிரச்சனையாகும். 

  அந்த தமிழர்களின் துன்பம் நமது துன்பம்.  அவர்களின் ரத்தம் நம்முடைய ரத்தம்.  தமிழ் மக்களை கொடுமைபடுத்திக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்த கூட்டம் மனித வேட்டைகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று எச்சரிப்பதாக இருக்கட்டும் என்ற முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயின் வீர உரையும்,

இலங்கையில் போராடும் தமிழர்களின் வீரத்திற்கு என்னுடைய வணக்கம்.  இலங்கை நாட்டில் காற்றுள்ள வரையிலும் தமிழர்களின் கலாச்சாரம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும்.  பத்தாயிரம் ஜெயவர்த்தனாக்கள் வந்தாலும் அவர்கள் அழிவார்களே தவிர அவர்களது முயற்சியால் தமிழர்களின் கலாச்சாரத்தை தனித்தன்மையை அழித்து விட முடியாது.  ஈழ தமிழர்களே உங்களுடைய போராட்டத்திற்கு எங்களது ஆதரவு என்றென்றும் உண்டு என்ற பஞ்சாப் அகாலிதளத்தின் பிரதிநிதி பல்வத் சிங் ராமுவாலியாவின் ஆதரவான பேச்சும்,

  தமிழகத்தில் மதுரை மாநகரின் 1986-ல் கேட்டது.  ஆனால் அதன் பிறகு அப்படியொரு ஒட்டுமொத்த கவன ஈர்ப்பை ஈழ பிரச்சனை பெற முடியாமல் போனதற்கு யார் காரணம்?  இந்திய அரசின் செயல்பாடு மாறியது தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.  தமிழ் நாட்டு கட்சிகள் பின்வாங்கி விட்டன என்று ஆயிரம் காரணங்களை கூறலாம்.  அவைகளில் உண்மையும் இருக்கலாம்.  ஆனால் அதற்கு மூலக்காரணம் யார்? 

  இந்த கேள்விக்கு பதிலை பெற தோண்டி துருவி சென்றால் பேரொளி குழுக்களுக்கிடையே நடந்த பங்காளி சண்டைகள் தான் காரணம் என்ற பதில் நமக்கு கிடைக்கிறது.  சகோதர யுத்தம் என்பது இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாறு முழுவதுமே காணக்கூடிய ஒன்று தான்.  ஒரு வீட்டில் ஒரே தட்டில் உணவருந்தும் ஒரு தாய் மக்களிடத்தில் கூட பல சமயங்களில் சச்சரவுகள் மூண்டதை சரித்திரமும், இலக்கியங்களும் மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கையும் நமக்கு காட்டும்.

  சகோதர யுத்தம் என்றாலே கொள்கைகள், கோட்பாடுகள் என ஆயிரம் காரணங்கள் கற்பிக்கப்பட்டாலும் அதனுள் மறைந்திருப்பது மேலதிகாரம் என்ற ஆதிக்க மனோபாவம் தான்.  இந்த ஆதிக்க மனோபாவம் ஈழ பேராளி அமைப்புகளிடம் ஏராளமாக இருந்தது.

  அதன் பரிணாம வளர்ச்சியால் தான் தமிழக வீதிகளில் கூட ஈழ துப்பாக்கிகள் குண்டுகளை பொழிந்தன.  தமிழர்களுக்காக போராடும் மனோவேகத்தை கருணாநிதி போன்றோர்களிடம் கூட இல்லாமல் செய்தது.  ஈழ குழுக்களின் குடுமி பிடி சண்டை தான் அன்று ஒரவரையொருவர் அழித்து கொள்ள காரணமாயிருந்த சகோதர யுத்தம் துரோகமாக மாறி விடுதலை போராட்டத்தையே மழுங்கடிக்க செய்தது. 

  இந்திய தமிழர்களின் நிஜமான தலைவர்களை கைகழுவி பிரிவினைவாதிகளை கூட்டாளியாக்கியதினால் தமிழக தமிழர்களையும் ஈழ போராட்டத்தை கண்டு முகம் சுளிக்க செய்து விட்டது.

இன்றைய சர்வதேச அரசியல் சூழலை மேலோட்டமாக கவனிப்பவர்கள் கூட ஒரு விஷயத்தை நன்றாக அறிவார்கள்.  உலக நாடுகள் அனைத்தும் கொள்ளை நோய்களுக்கு பயப்படுவதை விட, கொடிய வறுமைக்கு அஞ்சுவதை விட, பயங்கரவாதிகளின் சதி செயலுக்கு பயம் கொண்டு நடுங்குகிறார்கள்.  பின்லேடன் என்ற தனிமனிதனை கண்டு உலக வல்லரசான அமெரிக்க அரசாங்கமே கிடுகிடுத்து போகிறது என்றால் பயங்கரவாதத்தின் தன்மையை பெரிதாக விளக்க வேண்டியதில்லை.

சிங்கள அரசாங்கத்தின் பரப்புரையும், ஈழ விடுதலை போராளிகளின் சில செயல்களும் பயங்கரவாதத்தின் சாயல் புலிகளின் அமைப்பு மீது விழ வைத்து விட்டது.  இத்துடன் தமிழ்நாட்டிலுள்ள சில பிரிவினைவாத அமைப்புகளுடன் புலிகளின் நெருக்கமான உறவும் சேர்ந்து மேற்சொன்ன அச்சத்தை இன்னும் பல மடங்கு அதிகரித்து விட்டது.

இலங்கை அரசாங்கமும் தற்போதைய இந்திய அரசாங்கமும் சேர்ந்து ஈழ விடுதலை போரை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக பேசி கொள்கிறார்கள்.  இத்தகைய பேச்சை விட முட்டாள் தனமான கூற்று எதுவுமே இருக்காது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

  எரிகின்ற நெருப்பை பட்டு துணி கொண்டு போர்த்தியது போல் தான் விடுதலை போராட்டத்தை ராணுவ பலம் கொண்டு முறியடிக்கும் விதமும்.  உலகில் இதுவரை நடைபெற்ற எந்த சுதந்திர போரும் மட்டுபடுத்தப்பட்டு இருக்கிறதே தவிர முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது கிடையாது.

  விடுதலை புலிகளின் அமைப்பையே சிதைத்து விட்டோம்.  இனி யாழ்குடா நாட்டில் போராட்டங்கள் எதுவும் உயிர்பெற்று எழாது என்பது வெறும் கற்பனை.  புலிகள் அமைப்பு இலங்கை அரசாங்கம் சொல்வது போல் மறைந்து விட்டது என்றே வைத்து கொள்வோம்.  அதற்காக இன்னொரு அமைப்பு வீ று கொண்டு எழாது என்று எப்படி சொல்ல முடியும்?

ஈழ போரில் இப்போது ஏற்பட்டு இருப்பது தற்காலிகமான தேக்க நிலையேயாகும்.  மிக விரைவில் தமிழர்களின் சுதந்திர போராட்டம் தலை நிமிர்த்தி பீடு நடை போடப் போகிறது.  அப்படி நிகழும் போது கடந்த காலத்தை போலவே இப்போதும் விடுதலை புலிகள் அமைப்பே அந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்வது சர்வநிச்சயம்.

  நல்லதோ கெட்டதோ ஈழ போராளிகள் என்றால் புலிகள் தான் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.  இது எக்காலத்திலும் மாறாது.  எனவே ஈழ போராட்டத்தை பயங்கரவாதம் என்ற மாய நிழல் படாமல் மீட்டு வரவேண்டியது விடுதலை புலிகளின் வேலையே ஆகும்.

   இதற்காக அவர்கள் தங்களது கடந்த கால சகாக்கள் பலரின் உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.  அப்படி செய்தால் மட்டும் தான் தமிழகத்திலும், உலக அரங்கிலும் தாங்கள் இழந்த நற்பெயரை மீண்டும் தட்டி எழுப்ப முடியும்.

ஒவ்வொரு இலங்கை தமிழன் மனதிலும் இந்திய தமிழன் உணர்விலும் முள்ளி வெளி யுத்தம் ஆறாத ரணமாக படிந்து விட்டது.  இந்த காயத்தை ஆற்றுகின்ற மருந்து நிச்சயம் புலிகள் தான் தர வேண்டும்.  முதலில் அவர்கள் ஈழ மக்களின் மனதிலுள்ள இனம் புரியாத அச்சத்தை விலக்குவதற்கு தங்களது வருங்கால திட்டங்களை விலக்கி வெளிப்படையான அறிக்கைகள் தர வேண்டும்.

 தங்களது மிக நீண்ட மௌனத்தை கலைக்க வேண்டும்.  அப்படி அவர்கள் மௌனம் கலைந்தால் தான் அடுத்த கட்ட யுத்தத்திற்கு கால அவகாசம் எடுத்துக் கொண்டாலும் மக்கள் துணிச்சலுடன் துணை நிற்பார்கள்.

Contact Form

Name

Email *

Message *