Store
  Store
  Store
  Store
  Store
  Store

உயிரோடு இருப்பவர்களுக்கு திதி

   து செய்வதனால்இது கிடைக்கும் என்று பலன் நோக்கிச் செய்யும் காரியங்கள் எதுவும் தர்மப்படி சிறப்பு உடையது ஆகாது. பலன் கருதாத செயல்களே அதாவது பகவத்கீதையில் குறிப்பிடப்படும் நிஷ்சாமிய கர்மங்களே மனிதனது ஆத்மாவைச் சுத்தப்படுத்தி இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்லும் வாகனங்களாக மாறும். துரதிருஷ்டவசமாக பலன் நோக்காத செயல்களை பெருவாரியான மனிதர்கள் செய்வது இல்லை. அதனாலேயே மனிதர்கள் துயர பட்டு துன்பப்பட்டு வாழ்க்கை முழுவதுமே வதைபடுகிறார்கள்.

உடலும் சதையும் உயிரும் மட்டும் உடையவர்களை முழு மனிதர்களாக எந்த நாகரீக சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது. அறிவு, திறமை, பராக்கிரமம், இவற்றோடு பொதுநல நோக்கமும் எவரிடம் அதிகமாக இருக்கிறதோஅவரையே மனிதராக ஏற்றுக் கொள்கிறோம். அப்படிப்பட்ட மனிதர்களிடத்தில் கூட பயன்நோக்காது செயல் புரிகின்றவர்களையே மனிதருள் மாணிக்கமாக மாமனிதனாக நாம் ஏற்றுக் கொண்டு போற்றி வழிபடுகிறோம். அவர்கள் உலகத்தை விட்டுச் சென்று வெகுகாலம் ஆனாலும் கூட பல நூறு தலைமுறைகளுக்குப் பின்னரும் கூட அம்மாமனிதர்களின் செயல்கள் மக்களால் நன்றி உணர்வோடு எண்ணிப் பார்க்கப்படும் மனிதர்களின் மனதில் சங்கலித் தொடர்ச்சிபோல் எண்ண அதிர்வுகளை ஏற்படுத்தும். இந்த மஹா புருஷர்கள் காலத்தை வென்று சிரஞ்சீவிகளாக நிலைத்து நிற்கிறார்கள்.
 
 
    இத்தகைய நிலையில் நமது முன்னோர்கள் நமது குலத்தோன்றல்கள் இருக்கிறார்களா?  இல்லையா?  என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் இன்று நாம் வாழும் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டவர்கள் ஆவார்கள்.  எனது அப்பன் பாட்டன் சொத்து சுகம் எதையும் எனக்கு விட்டுவைக்கவில்லை என்று நாம் அங்கலாய்ப்பதற்கு அர்த்தமே கிடையாது.  ஆயிரம் ஆயிரம் சுகபோகங்களை சம்பாதிக்கக் கூடிய கரங்களை நமக்குத் தந்து இருக்கிறார்கள்.  வீடு, வாசல், நிலம், பதவி, அதிகாரம், ஆள், அம்பு, படைபலம் இவைகளை அவர்கள் வைத்துச் சென்றால் கூட அவையெல்லாம் கால தேச வர்த்தமான சூழலில் சுழற்காற்றிற்குள் அகப்பட்ட சருகுகள் போல் சென்று மறைந்துவிடும். என்றுமே மறையாத உழைக்கும் திறனையும் உணரும் அறிவையும் நமக்குத் தந்து சென்றிருக்கிறார்கள்.  தனது வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பாடுபட்டு சேகரித்த செல்வங்களை பசி தாகம் மறந்து உறக்கம் இன்றி அல்லும் பகலும் பாடுபட்டு ஏராளமான செல்வங்களை நமது மூதாதையர்கள் நாம் ஆண்டு அனுபவிக்க விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

    காலம் ஓடும் வேகத்தில் நமது வேலைகள் இழுக்கும் சுழற்சியில் தன்னை மறந்து நம்மை மட்டுமே நினைத்து வாழ்ந்த தாய் தந்தையரை மறந்து விடுகிறோம்.  நாளை நமக்கும் நமது பிள்ளைகள் இதே போன்ற கதியைத்தான் ஏற்படுத்துவார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.  ஆனால் துன்பம் வரும்போது துயரம் வந்து நம்மை சுட்டெரிக்கும் போது தரையில் விழுந்த மீனாக அனலில் விழுந்த புழுவாக நாம் துடிக்கின்றபோது ஜோதிடர்களும் நிமித்தக்காரர்களும் பித்ருக்களுக்குச் சாந்தி செய்யுங்கள்.  அப்போதுதான் உங்கள் துயரத்திற்கு விடிவு ஏற்படும் துன்பத்திற்கு முடிவு ஏற்படும் என அறிவுறுத்தும் போது மட்டும் முன்னோர்களுக்கான சடங்குகளைச் செய்யத் தயாராகிறோம்.


    இது மிகவும் கேவலமான குணாம்சம் ஆகும்.  ஆனால் இன்று காணும் இடமெல்லாம் இத்தகைய மனோ நிலைகளே தோன்றி நம்மைப் பயமுறுத்துகின்றன.  குளிரூட்டப்பட்ட அறைகளிலும் கணிப்பொறியின் திரைகளிலும் மனிதாபிமானமும் இரக்க சிந்தனையும் மடிந்து விட்டதோ என்ற ஐயமே நல்லவர்களுக்கு ஏற்படுகிறது.  தன்னை மட்டுமே பிரதானமாகக் கருதும் மனோபாவம் இன்று இளைஞர்களிடம் பல்கி பெருகி வருவதைக் காண முடிகிறது.  அப்பன் பாட்டனோடு சேர்ந்து நடமாடிய காலம் எல்லாம் கதையாகிப் போய் விட்டது.  கரன்சி நோட்டுகளும் கட்டித் தங்கங்களுமே இன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் பிரதானமாகி விட்டது.  இந்நிலையில் பித்ரு காரியம் தர்ப்பணம் என்பதெல்லாம் அநாகரீகச் செயல் என்று பேசத்தலைப்பட்டு விட்டாலும் தங்களது வாழ்க்கை உயரும் என்பதற்காக இயந்திரகதியில் கர்மக்கிரியைகளைச் செய்ய முன் வருகிறார்கள்.  ஆனாலும் ஆத்மார்த்தத்தோடு செய்யக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.  அவர்களுக்காகவாவது பித்ரு தர்மங்களைப் பற்றிச் சொல்ல வேண்டிய கடமை எம்மைப் போன்றவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.

    ஒவ்வொரு மனிதனும் தர்மம் செய்வதற்காகவே படைக்கப்பட்டு இருக்கிறான்.  தர்மம் என்றால் வாழ்வைச் சிறப்படையச் செய்யும் அனைத்து செயல்களுமே தர்மங்களாக வடிவெடுக்கிறது.தனிமனிதச் செயலானது சுயதர்மம் ஆகவும் அந்தச் சுயதர்மம் பரிணாமம் அடைந்து சமூகப் பந்தங்களைக் கட்டித் தழுவும்போது பொது தருமமாகவும்மாறி அமைகிறது. பிறப்பும் இறப்பும் மாறி மாறி அமையும் ஜனன மரண சக்கரத்தில் பிறவாது இருக்கும் பெருநிலையை அடைவதே மானுடதர்மத்தின் லட்சியம் ஆகும்.  அந்நிலையைப் பெறுவதற்குத் துணைபுரிகின்ற கருவிகளாக மற்ற எல்லா உலகப் பொருட்களும் இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது.
 
 
    மனிதனாகப் பிறந்தவன் தான் பிறந்த நிலையில் அடைந்த மனிதப் பிறவி எனும் பெரும் பேற்றை பயன் உள்ளதாகச் செய்கின்ற நோக்குடன் மனிதத்தன்மை படைத்து மனிதனாக வாழந்து மேன்மேலும் உயர்ந்து சிறப்பைப் பெறச்செய்கின்ற செயல்கள் அனைத்தும் தர்மமாகவும் இதற்கு மாறாக மனிதத்தன்மையை மறந்து மிருகத் தன்மை பெற்று தன்நிலையிலிருந்து கீழிறங்கிச் செய்கின்ற செயல்கள் அனைத்தும் அதர்மமாகும்.  தர்மம் தாங்கும் நன்மை உடையது.  அதர்மம் தாக்கும் தன்மை உடையது.  உலகச் சத்திரத்தில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையில் நடக்கின்ற யுத்தமே நாகரீக வளர்ச்சியாக மறுமலர்ச்சி அடைகிறது.

    மனிதர்கள் தங்களது சுயச்சூழ்நிலை பெருங்காற்றால் தாக்கப்பட்டு நிலை குலையும் போது தர்மம் எது அதர்மம் எது என்று பாகுபடுத்திப் பார்க்க முடியாமல் குழம்பி தானும் கெட்டு சமுதாயத்தையும் கெடுத்து விடுகிறான்.  அப்போது அவனுக்கு கீதாசாரியனாக அருகில் இருந்து தர்ம வழியைக் காட்டுவது சாஸ்திரங்களும் சட்டங்களுமே ஆகும்.  அத்தகைய சாஸ்திரங்களும் சட்டங்களும் அதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் பல்கிப் பெருகிக் கிடக்கிறது.

  தர்மத்தின் கடைத் தெருவில் விற்கப்படும் சாஸ்திரப் பொக்கிஷ்ங்களை வாங்கும் மனிதர்கள் குறைவுதான் என்றாலும் அப்படி வாங்குகின்ற ஒரு சிலராவது இருக்கிறார்களே என்பது ஆறுதலான விஷயமாகும்.  எனவே தர்ம சாஸ்திரத்தில் முன்னேர்களுக்குச் செய்யும் வழிபாட்டு முறைகளும் அர்பணிப்புக் கடமைகளும் என்னவென்று சொல்லுவது நம் கடமை ஆகும்.  அப்படிச் சொல்லாமல் விட்டால் பித்ருகாரியம் போன்ற நற்கருமங்களை மனிதகுலம் மறந்து போவதற்கு நாமும் காரண கர்த்தா ஆகிவிடுவோம். ஆவிகளைப் பற்றி இதுவரை ஒரளவு அறிந்த நாம் அந்த ஆவிகளுக்கு நாம் புரிய வேண்டிய கர்மங்கள் என்னவென்பதையும் அதனால் நாமும் நமது சந்ததியினரும் பெறும் புண்ணியங்கள் என்னவென்பதைப் பற்றியும் சற்று சிந்திப்போம்.
 
 
    நமது மூதாதையினர் பித்ருலோகத்தில் வாழ்கிறார்கள்.  அவர்கள் வசுக்கள்,  ருத்ரர்கள்,  ஆதித்தியர்கள் ஆகிய தேவகணங்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருக்கிறார்கள்.  மூதாதையர்களின் பௌதீக உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் வாழ்கிறார்கள்.  அதன்பிறகு தங்களது சந்ததியினர் செய்யும் நற்செயலின் விளைவாகவும் தாங்கள் ஜீவித்து இருந்த காலத்தில் செய்த சொந்த நற்கர்மங்களின் பயனாகவும் பிரேதநிலை நீங்கப் பெற்று வசு, ருத்ரா, ஆதித்தியா என்று மூன்று பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில் தங்களது தகுதிக்கு ஏற்றவாறு இடம் பெறுகிறார்கள். 

  இத்தகைய பித்ருக்கள் அனுக்கிரகம் செய்யும் தகுதியை அடைகிறார்கள். அவர்களை முறைப்படி வழிபடுவதால் எளிதில் திருப்தி அடைந்து தங்களது பூமியில் வாழும் இறந்துபோன ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அந்த ஆத்மாக்களின் நேரடி வாரிசுகளான மகன்கள் மகன் வழியில் வரும் போன்கள் சகோதரர்கள் ஏழு தலைமுறைக்குள் உள்ள ரத்த சம்பந்தங்கள் திருமணம் முடிந்து புகுந்த வீட சென்ற பெண் மக்கள் அவர்களின் வாரிசுகள் செய்யும் சிரார்த்த கர்மங்கள் ஆத்மாவைக் கடைத்தேற வைக்கவும், திருப்தி அடையச் செய்யவும் வழிவகுக்கிறது.

    வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது குலமுன்னோர்களான பாட்டன் பாட்டிக்கும் தாய் தந்தையர்களுக்கும் மிகக் கண்டிப்பாக அவர்கள் இறந்த திதியில் சாஸ்திரப்படி தானங்கள் செய்து விரதம் இருந்து சிரார்த்தம் செய்ய வேண்டும்.  இவர்களுக்கு மட்டுமல்லாது காருணீக பித்ருக்கள் என்று அழைக்கப்படும் மனைவியின் தாய் தந்தை,  சகோதரர் சகோதரி தாய்மாமன் தன் சொந்தச் சகோதரன் மனைவி மருமகள் மாப்பிள்ளை எஜமானர் நண்பர் மனதிற்கு இசைந்த குரு ஆகியோர்களுக்கும் முறைப்படி சிரார்த்தம் செய்யக் கடமைப்பட்டு உள்ளான்.  இத்தகைய சிரார்த்த கர்மங்களை முறைப்படி செய்து வருபவனின் குடும்பம் சகல சம்பத்துக்களையும் பெற்று சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழும் என்பது தர்மத்தின் விதி ஆகும்.
 
 
    பொதுவாக சிரார்த்தங்கள் மூன்று வகைப்படும்,  அமாவாசையில் செய்கின்ற தர்ச சிரார்த்தம்,  புரட்டாசி மாதம் வரும்மகாளய பட்சத்தில் செய்கின்ற மகாளய சிரார்த்தம்,  ஆப்தீக சிரார்த்தம் பீரயத்யாப்தீக சிரார்த்தம், தினசரி செய்கின்ற பிரம்மயஞ்ஞ தேவ ரிஷி பித்ருதர்ப்பண அங்கமான பித்ருயஞ்ஞம் ஆகியவைகள் நித்ய சிரார்த்தம் எனப்படும்

இரண்டாவது மாதப் பிறப்பு சூரியச் சந்திர கிரகணக் சுபகாரியங்கள் நடக்கும் போது செய்கின்ற நாந்திமுக சிரார்த்தம் மரணம் ஏற்பட்ட 11 நாட்களுக்குள் செய்கின்ற நக்ம,  நவ ஏகோப்தரப்பிருத்தி, ஏகோத்திம்ட சிரார்த்தங்கள், சவுண்டி கரணத்தன்று  செய்கின்ற ஏகோத்தரம் பார்வண சிரார்த்ம்,  ஊனமாசிகனு என்ற மாதந்திர சிரார்த்தம் சோத குடும்பம் சிரார்த்தம் ஆகியவைகளுக்கு நைமித்தகம் சிரார்த்தம் என்று பெயர்.  மூன்றாவதாக வருடப்பிறப்பு, புனித யாத்திரைகள் புண்ய நதிக்கரைகளில் செய்யும் காமிக சிரார்த்தம் ஆகும்.

    நித்தியம்,  நைமித்யம், காமிகம் ஆகிய மூன்று வகை சிரார்த்தங்களைச் செய்வது சாலச் சிறந்தது என்றாலும் பொருளாதார பலம் கால அவகாசம் ஆகியவைகள் எல்லா நேரத்திலும் சரிவர அமைவது இல்லை.  அதனால் வருடாந்திர சிரார்த்தத்தையோ மரணத்திதி தெரியாத போது மஹாளயபட்ச சிரார்த்தத்தையோ தவறவிடாமல் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதனால் பித்ருக்களின் வாழ்த்து எப்போதும் நமக்குக் கிடைக்கிறது. 
 
 
  பித்ருக்களை வருடா வருடம் அழைப்பதனால் அவர்களோடு விஷ்வ தேவர்களும் கர்மப்பலனை அடிஒற்றி நல்வினையை ஏற்படுத்தும் மஹாவிஷ்ணு ஹோமம்,  யாகம் முதலியவற்றை பாகம் பெறுகின்ற அக்னி தேவர்களும் நமது இல்லத்திற்கு வந்து சர்வமங்களத்தையும் தருவதாக ஐதீகம் உள்ளது.

 மேலும்,  பிண்ட தானத்தாலும் விகிராண்னத்தாலும் திருப்தி செய்யப்படாத நரக வாசிகளும் பித்ருலோகம் அடைய முடியாமல் தவிக்கும் ஆவிகளும் சிரார்த்தத்தன்று கொடுக்கப்படும்  அன்னதானத்தால் சாந்தி அடைகிறார்கள்.  இறந்தவர்களின் நினைவாகச் செய்யப்படும் அன்னதானத்தால் வாழுகின்ற தரித்திரர்களும் ஏழை எளிய மக்களும் வயிறார உண்டு நமது குடும்பத்தினருக்கு ஆசிகளையும் வாழ்த்துதல்களையும் தருகிறார்கள்.

 மேலும் அன்று காக்கைகளுக்கு உணவு அளிப்பதனால் நாம் அறிந்திராத பித்ருக்களும் திருப்தி அடைகின்றனர்.  சகல தேவர்களும் வாசம் புரிகின்ற பகவிற்கு கீரைகள் பழவகைகள் போன்றவற்றை சிரார்த்த தினத்தில் அன்புடன் அளிப்பதனால் நம்மை ஒவ்வொரு நொடியிலும் வாழ வைத்துக் கொண்டு இருக்கின்ற சகல தேவதைகளும் சந்தோஷம் அடைந்து சிரார்த்த கர்மம் செய்யும் மனிதர்களுக்கு நோயற்ற வாரிசுகள் செல்வம் செல்வாக்கு ஆரோக்யம் ஞானம் இம்மை மறுமையில் மேன்மை இவைகளைக் கொடுக்கிறார்கள்.
 
 
  சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள் செய் நன்றி மறந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.   அப்படிப்பட்டவர்களுக்கு பித்ருசாபம் ஏற்பட்டு தாங்கள் பெற்ற சீரையும் சிறப்பையும் இழந்து தங்களது சந்ததியினர்க்குப் பெரும் பாவத்தைச் சம்பாதித்து வைத்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்.  இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.  இதனால் சிரத்தையுடன் சிரார்த்தம் செய்வதையே  வைதீக சட்டங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயமாக்கி உள்ளது.

    பித்ருக்களைப் பற்றியும்,  பித்ருக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும்,  அதனால் மன மகிழ்ச்சி எய்தும் பித்ருக்கள் நமக்குத் தரும் சன்மானங்களைப் பற்றியும் அதர்வண வேதத்தின் கடைசிக் காண்டத்தில் மிக விரிவாக தரப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருக்கும்மிக முக்கியமான விஷயங்களில் எந்த வித மாற்றமும் இன்றி வாசகர்களுக்குத் தந்தால் பித்ரு கர்மாக்களின் முழுப்பலா பலனையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள் எனக் கருதுகிறேன்.

    ப்ருதிவி,  அந்தக்ஷம்,  ஒளி உலகம்,  தந்தை குலத்தினர்கள் இடம்,  பித்ருக்களின் தேசம் ஆகிய பகுதிகளில் உங்கள் முன்னோர்கள் வாழ்கிறார்கள்.  மிகப் பழமையான காலத்திலிருந்தே நமது முன்னோர்கள் வான வாசிகளாக இருந்து வருகிறார்கள்.  அவர்கள் அவர்களுடைய சந்ததியினராலோ அல்லது மற்றவர்களாலோ அழைக்கப்படும் போது பூமிக்கு வந்து தங்களது அனுக்கிரகத்தைத் தந்து செல்கிறார்கள்.
 
 
    பிதிர்யானம் என்ற ஒரு வழி உள்ளது.  இந்த வழியாகவே பித்ருக்கள் வந்து செல்கிறார்கள்.  அந்த வழியை சூரியன் மட்டுமே நன்கு அறிவான்.

    மனிதனாகப்பட்டவன் விருந்தாளிகள் உறவினர்கள் ஆகியோரின் மரியாதையுடனும் பாசத்துடனும் வரவேற்று உபசரிக்கின்றவனாகிறான்.  அப்படி உபசரிப்பவனும் தெய்வத்தை நிந்தனை செய்யாமல் இருப்பவனும் பிதிர்யான மார்க்கத்தைக் கடந்து செல்லும் தகுதியைப் பூமியில் பெறுகிறான்.  பிதர்யான மார்க்கமானது சூரிய கிரணங்களிலும் இருக்கிறது.  அதாவது ஒளிவீச்சிலும், அந்த ஷத்திலும் வசிப்பவர்கள் இந்த வழியே வந்து செல்கிறார்கள்.  மேலே சொல்லப்பட்ட படி அக்னியும் பிதிர்யான வழியை அறிந்தவனாகிறான்.

    இந்த அக்னி பித்ருக்கள் எந்த உலகில் இருந்தாலும் அவர்கள் கண்களில் பட்டாலும் படாவிட்டாலும் எப்படியோ அவர்களை அடையாளம் கண்டு கொண்டு நாம் அவர்களுடைய திதிக் காலத்தில் ஹோமத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஹவிஸ்ஷை கொண்டுபோய் சேர்க்கிறான்.
 
 
    இப்படி திதி கொடுக்கப்படாத பித்ருக்கள் பட்டினியாகவே இருந்து தன் வம்சத்தார்களுக்குச் சாபம் கொடுக்கிறார்கள்.

    திதி கொடுக்கப்பட்டு திருப்தி அடைந்த பித்ருக்கள் நமக்காக சர்வேஸ்வரனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.  நமது துயரங்கள் முடிந்து போவதற்கும்.  எதிரிகளின் ஆயுதம் முனை மழுங்கிப்போவதற்கும் துணை செய்கிறார்கள்.

    நம்மை எதிரிகளிடமிருந்தும சர்ப்பங்கள் போன்ற விஷ ஐந்துக்கவிடமிருந்தும் பாவங்களில் இருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் விபத்துகளிலிருந்தும் காப்பாற்றுகிறார்கள்.

    சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்றுத் தருவதையும் மங்களத்தையும் நலனையும் செய்வதையும் சந்தான பாக்கியம் அளிப்பதையும் முற்பிறவியின் பாவத்தை போக்குவதையும் நீண்ட ஆயுளைத் தருவதையும் சிற்சில வேளைகளில் மரணத்தின் வாசலில் இருந்து காப்பாற்றுவதையும் பித்ருக்கள் நமக்காகச் செய்கிறார்கள்.

     நாம் நாள்தோறும் அன்னத்துடன் பித்ருக்களை நமஸ்கரிக்க வேண்டும்.

    அவர்களுக்குய ஸ்வதா அளித்தல் நித்ய கடமை ஆகும்.  (ஸ்வதா என்பது உணவுப் பொருட்களைப் படைத்து உண்ணுதல் ஆகும்).
 
 
    அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண புண்ய காலங்கள் அஷ்டகா, அன்அஷ்டகா ஆகிய நாட்களில் நீர்வழியாக பித்ருக்களுக்கு நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    கூவி அழைத்தால் பித்ருக்கள் நாம் செய்யும் பித்ருயாகத்திற்கு வருவர்கள்.  அவர்கள் நம் பிரார்த்தனையைச் சிரத்தையுடன் கேட்கிறார்கள்.  நம் விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறார்கள்.  எப்போதும் நம்மைக் காப்பாற்றுகிறார்கள்.  அதனால் அவர்களுக்கு யாகம் செய்வதற்கு நாம் கடமைப்பட்டு உள்ளோம்.

    எல்லாவிதமான நாம் அறிந்த அறியாத எல்லா பித்ருக்களுக்கும் யாக அன்னம் அளிக்க வேண்டும்  அவர்களை முன்னிட்டு தரித்திரர்களுக்குப் பலவித தானங்கள் செய்ய வேண்டும்.

    நமது வீட்டில் அடிக்கடி அக்னி காரியங்கள் செய்ய வேண்டும்.  ஏன் என்றால் அக்னியானது பித்ருக்களுக்குப் பல வித உபகாரங்களைச் செய்கிறது.
 
    அக்னி பித்ருக்களுக்கு ஹவிஸ்களையும் பலகாரங்களையும் எடுத்து வருகிறது. இதனாலேயே அக்னிக்கு ஹவ்விய ஹானன் என்ற பெயர் வந்தமைகிறது.

    அக்னி பித்ரு லோகத்தில் வெகு தூரத்தில் மறைந்து இருக்கும் நமது மூதாதையர்களையும் அறிந்து வைத்திருக்கிறது.  எவர் பிதுர் லோகத்தை விட்டு கீழே இருக்கிறார்களோ எவரை நாம் அறிந்தும் அறியாமலும் இருக்கிறோமோ அத்தனைபேருமே அக்னிக்கு அறிமுகமானவர்கள்தான்.  அக்கினி பிரேத ஆத்மாக்களின் தோஷங்களைக் களைந்து பித்ரு லோகம் அனுப்பி வைக்கிறது.

    இவைகள் எல்லாம் அதர்வண வேதத்தில் பித்ருக்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் உரிய கடமைகளைப் பற்றி கூறப்பட்டு இருக்கும் விஷயங்கள் ஆகும்.  பித்ருக்கள் என்றால் யார்?  அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு ரிக் வேதத்தில் சிறிய குறிப்பு ஒன்று உள்ளது.

 ரிக்வேதம் கடைசி காண்டம் 16வது மந்திரத்தில் யம லோகம் விட்டு அதற்கும் ;மேலே உள்ள பகவானுடைய உலகம் செல்லாத தேகத்தன்மை அடையாத மனித ஆத்மாக்களே பித்ருக்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தேவத் தன்மையை அவர்கள் அடையாவிட்டாலும் கூட தங்களது வாரிசுகளுக்கு அவர்களின் அன்பை ஏற்று உதவ வருவார்கள் என்றும் 19வது மந்திரத்தில் பித்ருக்கள் நோய்களையும் பயத்தையும் நீக்குகிறார்கள் என்ற கூறப்பட்டு இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கின்ற போது பித்ருக்கள்தான் புண்ணிய ஆவிகள் என்ற முடிவிற்கு நாம் வரவேண்டிய உள்ளது.
 
 
    புண்ணிய ஆவிகளான பித்ருக்களை நாம் அழைத்து சாஸ்திரப்படி அன்பு செய்தால் அவர்கள் நமக்கு உதவுவார்கள்., ஆனால் திருப்தி அடையாது அமைதி இல்லாமல் அலைந்து கொண்டு இருக்கின்ற ஆத்மாக்களாக நமது முன்னோர்கள் இருந்துவிட்டால் அவர்களை நாம் அழைக்கும்போது அவர்கள் நமக்கு நன்மைக்குப் பதிலாக தங்களது கோபத்தின் அடிப்படையில் தீமை செய்து விட்டால் நம் நிலை பரிதாபகரமாகி விடும் அல்லவா. 

அப்படிப்பட்ட நிலையை முன்னோர்களால் நாம் பெற்று வீணாகச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் சும்மா இருந்து விடுவது சுகம்தானே என்று சிலர் கேட்கலாம்.  இதற்கான பதிலை யஜூர் வேதத்தில் நாம் பெறலாம்.  அலையும் ஆவிகளாக இருந்தாலும் ரௌத்ர ஆத்மாக்களாக இருந்தாலும் அவைகள் தங்களுக்கு மனிதர்களால் சாதகமான சூழ்நிலை ஏற்படுகிறது என்ற கருதும் போது நிச்சயமாக எந்தத் தீங்கையும் அவைகள் தங்களது வாரிசுகளுக்குச் செய்வதில்லை என்பதை யஜூர் வேதம் உறுதிப்படுத்துகிறது.

    நாம் செய்கின்ற பித்ருக்கள் யாகங்களுக்கான பலன் நமது மூதாதையர்கள் வானுலகில் இருந்தால் அவர்களுக்குச் சென்று அடைந்து அவர்களை மேன்மையுறச் செய்வது உண்மைதான்.  ஆனால் அவர்கள் தங்களது வானுலக வாசத்தை முடித்துவிட்டு கருவறை வாசத்தை அதாவது மீண்டும் பிறவி எடுத்து விட்டார்கள் என்றால் நாம் செய்யும் பித்ருகள் யாகத்தால் என்ன பயன்  ஏற்ப்பட போகிறது என்ற சிலர் கேட்கலாம். 
 
 
 இதற்கான பதிலாக அவர்கள் எங்கு பிறந்து இருக்கிறார்களோ அங்கு தங்களது கஷ்டங்களிலிருந்து விடுபட்டு சுகவாழ்வை அடைவார்கள் என்ற சாம வேதம் கூறுகிறது.   எனவே மூதாதையர்கள் பிறந்து இருந்தாலும் பிறக்காவிட்டாலும் சிரார்த்த பலனை அனுபவிக்கிறார்கள்.  அப்படிப் பார்க்கின்ற போது உயிரோடு இருக்கும் நமக்காகவும் எங்கோ ஒரு மூலையில் முகம் தெரியாமல் இருக்கும் நமது பூர்வ ஜென்ம சந்ததியினர் சிரார்ந்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    ஆவிகள் திருப்தி அடைய சாஸ்திரங்கள் சடங்குகளைக் கூறுகின்றன.  அதை நம்பும் நாம் அந்தச் சடங்ககளைத் தவறாமல் செய்கிறோம்.  ஆனால் உண்மையில் ஆவிகள் அந்தச் சடங்குகளில் திருப்தி அடைகிறார்களா மேன்மை அடைகிறார்களா என்பதை நாம்அறிந்து கொள்ள முடிவதில்லை.  அப்படி அறிந்து கொள்ள நாம் ஆவிகளின் துணையைத் தான் நாடவேண்டி உள்ளது.  அது அல்லாமல் சடங்குகள் முடிந்தவுடன் ஏற்படும் சில நிகழ்வுகளை வைத்து ஆவிகள் திருப்தி அடைந்து விட்டன என நம்புகிறோம்.  சில சமயங்களில் மாறான நிகழ்வுகள் நடைபெறும் போது ஆவிகளின் அதிருப்திக்கு ஆளாகி விட்டோமோ என்று அஞ்ச வேண்டிய இருக்கிறது.  காரணம் நிகழ்வுகள் அல்லது நிமித்தம் என்பதை நாம் முழுமையாக அறிந்தவர்களாக இல்லை.  சரியைத் தவறாகவும் தவறை சரியாகவும் சில சமயங்களில் மாற்றிப் புரிந்து கொள்கிறோம்.  அதற்குக் காரணம் சிறு வயதில் நம்மனதிற்குள் பதிந்து விட்ட சில சம்பவங்களும் பய உணர்ச்சியுமே ஆகும்.

    உதாரணமாக பிணத்தைப் பற்றிய பயம் சிறுவயதிலேயே நமக்கு ஏற்பட்டு விடுகிறது.  நமது தாய் தந்தையர் இறந்த வீடுகளின் அருகிலும் இறுதி ஊர்வலத்திலும் மயானங்களின் அருகாமையிலும் நாம் செல்வதை நமது பாதுகாப்பு கருதி குழந்தை பிராயத்தில் தடுத்து விடுகிறார்கள்.  இதனாலேயே இறப்பு சம்பந்தப்பட்ட அனைத்திலும் நமது சுயபயம் மரணத்தை அவலமாகவே கருத வைக்கிறது.  இதனால் கனவுகளில் கூட பிணம் மயானம் என்று வந்தால் ஏதோ ஒரு துர்சம்பவம் நடக்கப் போவதாக எண்ணிப் பயப்படுகிறோம்.  ஆனால் உண்மையில் கனவு சாஸ்திரம் இத்தகையவைகளைக் கனவில் கண்டால் சுப நிகழ்ச்சிகள்தான் நடைபெறும் என்று கூறுகிறது.  இருப்பினும் நாம் இதை கெட்ட சொப்பனத்தில் தள்ளி விடுகிறோம்.
 
 
    இதே போன்று தான் சடங்குகளின் தன்மையை நாம் எடுத்துக் கொள்கிறோம்.  ஆனால் அந்தச் சடங்குகளால் பயன் பெற்ற ஆவிகள் சடங்ககளைப் பற்றி கூறுவதைக் கேட்டால் நாம் சிறிது அதிர்ச்சியடைய வேண்டி உள்ளது.  எனக்குத் தெரிந்த ஒருவன் பாட்டனார்க்கு சாஸ்திர படி வருட சிரார்த்தத்தை நடத்தினார்கள்.  இதனால் அந்தக் கிழவனாரின் ஆவி சந்தோஷப்பட்டதா என்பதை அறிய அந்த ஆவியை அழைத்து பேசினோம். 

  அந்த ஆவி சொன்ன பதில் எங்களை துணுக்குறச் செய்தது.  பட்சணங்கள் இருந்தன.  நான் விரும்புகின்ற அனைத்துப் பொருட்களையும் வாங்கி வைத்து இருந்தனர்.  ஆனால் அதில் எதையும் நான் தொட்டுப் பார்க்கக் கூட முடியவில்லை.  காரணம் சிரார்த்த மந்திரங்களை சொன்ன புரோகிதனின் வாய் மந்திரங்களை உச்சத்ததே தவிர அவன் மனது தான் செய்யும் சடங்கில் இல்லை.  எஙகோ இருக்கும் தன் மகளைப் பற்றிய சிந்தனையிலேயே யந்திர கதியாக மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தான்.  மந்திரங்கள்தானே முக்கியம்.  அது இந்த பொருட்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள உதவுவது இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்.  மந்திரங்கள் முக்கியம்தான்.  ஆனால் அதை விட முக்கியமானது.  அதை உச்சரிக்கின்றவனின் மனது.  ஒரு நிமிட நேரமாவது தான் இன்னாருக்காகச் செய்யும் இந்த சடங்கு அவரைப் போய் சேரட்டும் என்று நினைவுகளோடு மந்திரங்கள் சொல்ல படவில்லை என்றால் நாங்கள் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியது. 

    வேறு ஒரு சமயம் இன்னொரு ஆவி சொன்ன தகவலையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.  சடங்குகளைச் செய்த புரோகிதர்கள் தவறான மந்திர உச்சரிப்புகளால் எங்களை இம்சைப் படுத்துகிறார்கள். இதனால் இங்கு எங்களுக்கு உள்ள சூட்சமத்திரேகம் வதைப்படுகிறது என்று கூறியது.  
 
 
  எனவே சடங்ககளைச் செய்யும் புரோகிதர்கள் சரியான முறையில் மந்திரங்களை உச்சரிக்கத் தெரிந்தவர்களாகவும் அதைக் கொஞ்சமேனும் ஆத்மார்த்தத்துடன் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும்.  என்பது புலனாகிறது.  மேலும் ஆவிகள் பொதுவாக இந்தச் சடங்குகளால் திருப்தி அடைகிறதா என்று நேரடியாகக் கேட்டபோது அந்த ஆவிகள் உண்மையில் நீங்கள் கொடுக்கும் பிண்டப் பொருட்களும் மந்திரப் பிரயோகங்களும் எங்களுக்குப் பேருதவியாகும். 

  பெரும் ஜென்ம சாபல்யமாகவும் அமைகிறது.  அதே நேரம் எங்களை முன்னிட்டு மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் தானங்கள்தான் இங்கே எங்களது பிரேத கர்மங்களை நிவர்த்திக்கப் பெரும் அளவில் துணை செய்கிறது.  நீங்கள் செய்யும் சடங்குகளைத் தொடர்ந்து செய்யுங்கள் அதில் தவறில்லை.  ஆனால் அதனோடு எங்களுக்காகத் தானங்களையும் செய்யுங்கள். 

   தானங்கள் என்றால் பெரும் செலவு செய்து செய்ய வேண்டியது இல்லை.  எங்களை நினைத்து நாங்கள் உயர வேண்டும் என்று இறைவனைப்  பிரார்த்தனை செய்து பிச்சைக்காரர்களுக்கு உணவிடுங்கள்.  அது முடியாவிட்டாலும் ஒரு பசுக்கு ஒரு பிடி அகத்திக் கீரையாவது கொடுங்கள். அதுவும் முடியாவிட்டால் நாலணா பொரி வாங்கியாவது மீன்களுக்குக் குளத்தில் போடுங்கள். பல ஜீவன்களின் வயிறு குளிரும்.  போது எங்களது ஆத்மாவும் குளிரும்.  சிலிர்க்கும் உங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை எங்களுக்கள் துளிர்க்க வைக்கம். இப்படி கூறும் ஆவிகளின் ஆப்த வாக்கியம் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

    நம் வாழ்க்கையில் சிக்கல்கள் வரும் போது அடுத்து செய்வது என்னவென்று அறியாது தவிக்கும் போது துயரங்கள் நம்மைத் துரத்தில அடிக்கும் போது ஆவிகளிடம் முறையிட்டு நமது குறைகளைத் தீர்த்து வைக்கும்படி மன்றாடுகிறோம்.  அதற்கு இரங்கி அவர்கள் நமது பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்கும் போது வசதியாக ஆவிகளை மறந்து போகிறோம்.  அதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்களைக் கூறி சப்பைக் கட்டுகிறோம்.  நம் பிள்ளை நமக்குச் சோறு போடவில்லை என்றால் நம் மனம் எப்படித் துடிக்கிறது.  அதே போன்று தானே நமக்காக வாழ்ந்த நமது முன்னோர்களின் மனமும் துடிக்கும.

        உறவுகள் என்பது ரயில் பயணங்களில் ஏற்படும் வெறும் சந்திப்புகள் அல்ல.  அது நமது வாழ்வோடும் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்களோடும் வெற்றி தோல்விகளோடும் பின்னிப் பிணைந்து வாழ்வதற்கு அப்பாலும் தொடர்ந்து வரக்கூடிய உதிரச்சங்கலிப் பிணைப்பு ஆகும்.

   காலங்கள் மாறலாம்.  புதிய புதிய வாழ்க்கை வசதிகள் நமக்குக் கிடைக்கலாம்.  விண்ணில் சாடி கதிரவனையும் பிடித்து வந்து கூட்டில் அடைக்கலாம்.  நினைத்த இடத்தில் நொடிப் பொழுதில் செல்லும் வசதியை நாம் பெறலாம்.  ஆனாலும் எதை நாம் பெற்றலும் எதை நாம் அனுபவித்தாலும் மாறாத விஷயங்கள் பல உள்ளன.  அதை மாற்றி அமைக்க நாம் நினைத்தால் அமைதி என்பது கானல் நீராகி நம்மிடம் இருந்து இன்பம் தூர தூரமாகப் போய்விடும்.  உறவுகளுகம் உறவின் இருக்கப் பிணைப்புகளும் அப்படித்தான்.  பிறப்போடு வரும் உறவுகள் நிச்சயம் வேண்டும். இதை உணர்ந்து அந்த உறவுகளுக்காக ஒரு நிமிட மேனும் அஞ்சலி செலுத்த வேண்டும்.  அந்த அஞ்சலிதான் நம்மை அமாரர்களாக்கும்.Contact Form

Name

Email *

Message *