Store
  Store
  Store
  Store
  Store
  Store

மகளே நீ கொள்ளி போடு!


  வ்வளவு உயரத்தில் பறந்தாலும் கருடனின் சிந்தனை உச்சி மரத்தில் கூட்டில் இருக்கும் குஞ்சுகளை நோக்கியே இருக்குமாம்.  அதை போல சில மனிதர்களும் இருக்கிறார்கள்.  தங்களுக்குள் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் அனைத்தையும் மறைத்து கொண்டு சிரித்த வண்ணமே இருப்பார்கள்.  அப்படிப்பட்டவர்களை கண்களால் பார்ப்பது கூட சந்தோஷமாக இருக்கும்.

 என் பெரியம்மாவும் அப்படிப்பட்ட ஒரு மனுஷி தான்.  அவர்கள் அனுபவிக்காத கஷ்டங்கள் என்பதே கிடையாது.  ஆனால் அவர்களை பார்த்தால் கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்தால் கூட யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.  சும்மா தமாஷ் பண்ணாதீங்க சார் அவர்களை பார்த்தால் அவ்வளவு சுமைகளை சுமந்ததற்கான அடையாளமே இல்லை என்பார்கள்.


இப்போது அவர்கள் மகேஷ்வரி அக்கா வீட்டில் தான் இருக்கிறார்கள்.  86-வயதாகியும் சுறுசுறுப்பு குறையவில்லை.  எதுக்கு தள்ளாத வயதில் அங்கேயும் இங்கேயும் ஓடுகிறீர்கள்.  ஒரு இடத்தில் சும்மா இருக்கலாமே என்று யாராவது கேட்டுவிட்டால் போதும்

 பெரியம்மாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும்.  இது விவரம் தெரிந்த நாளில் இருந்து வேலை செஞ்சு பழக்கப்பட்ட கட்டை.  எப்ப நான் சும்மா இருக்கேனோ அப்ப செத்து போயிட்டேன் என்று அர்த்தம் என்று சொல்லி விடுவார்கள்.  இத்தனைக்கும் மகேஷ்வரி வீட்டில் வேலைக்கு ஆள் குறைவு இல்லை.  சமையலுக்கு வீட்டு வேலை, தோட்ட வேலைகளுக்கு என்று ஏராளமான நபர்கள் உண்டு.  அத்தனை பேருக்கும் பெரியம்மா தான் எஜமானி.

மகேஷ்வரிக்கு தோப்பு துரவுக்கு பஞ்சமில்லை.  அந்த பகுதியிலேயே பிரபலமான பள்ளி அவளுடையது தான்.  பள்ளியின் அடுத்தகட்ட வளர்ச்சியாக கல்லூரிக்கான கட்டுமான வேலையில் ஈடுபட்டு இருந்தாள்.  பள்ளி வளாகமும், வீடும் அடுத்தடுத்து இருக்கும்.  பெரியம்மா காலை நான்கு மணிக்கே எழுந்து சுடச்சுட காப்பி போட்டு பள்ளியின் வாகன ஓட்டிகளுக்கு கொடுக்க ஆரம்பித்து விடுவார்.


  காலங்காத்தாலேயே பிள்ளைகளை கூப்பிட போறீங்க தூக்க கலக்கத்தில் போனா வண்டிய ஒழுங்கா ஓட்ட முடியாது.  சூடா காப்பி சாப்பிட்டா சுறுசுறுப்பாக இருக்கும்.  வேண்டாம் என்று சொல்லாம ஒழுங்கா சாப்பிடுங்க என்று டிரைவர்களை அன்பாக மிரட்டுவார்.

  மகேஷ்வரியை பார்க்க யார் வந்தாலும் பெரியம்மாவின் கை மணத்தில் உருவான சூடான காப்பியை சாப்பிடாமல் வர முடியாது.  பெரியம்மாவின் சமையல் என்றாலே தனிச்சுவை தான்.  நட்சத்திர ஓட்டலில் இருந்து கையேந்திபவன் வரை சாப்பிட்டு பார்த்து இருக்கிறேன்.  அவர்கள் வைக்கும் முருங்கைக்காய் சாம்பாருக்கும் அவியலுக்கும் பக்கத்தில் கூட அவைகள் வந்தது கிடையாது.  கைப்பிடி பருப்பில் இரண்டு பச்சை மிளகாய் கிள்ளிப்போட்டு குழம்பு வைத்தாலே வாசனை நாக்கில் நீர் ஊற செய்யும்.

இப்போது கூட வேறு யார் சமைத்தாலும் அவர்களுக்கு சாப்பிட பிடிக்காது.  அது என்னவோ தெரியல ஒண்ணு நான் சமைக்கனும், இல்லன்னா எங்க அம்மா சமைக்கனும் அப்பத்தான் சோறு தொண்டையில இறங்கும் என்பார்கள்  இதற்காகவே அவர்கள் அதிகமாக யார் வீட்டிலும் விருந்துக்கு போவதில்லை.


சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாகத் தான் இருக்கும்.  பெரியம்மாவிற்கு பதினைந்து வயதிலேயே கல்யாணமாகி விட்டது.  அதுவும் காதல் கல்யாணம்.  அதைப்பற்றி என் பாட்டி அடிக்கடி சொல்வதை என்னால் மறக்கவே முடியாது.  என் மூத்த மகள் பார்ப்பதற்கு கிளி மாதிரி இருப்பா.  அவ அழகுல மயங்கி தான் அந்த படுபாவிபயல் (பெரியப்பா) காத்து இருந்து கொத்திகிட்டு போயிட்டான்.  மூச்சுக்கு முந்நூறு முறை அம்மா அம்மான்னு சுத்தி வந்தவ எதையுமே யோசிக்காம அவன் கூப்பிட்டான்னு பின்னால போயிட்டான்னா மருந்து மாயம் செய்யாம முடியவே முடியாது என்பார்கள்.

  பெரியப்பா சாகும் வரையிலும் பாட்டி அவரோட பேசியதை நான் பார்த்ததே இல்லை.  கிராமத்தில் இன்று கூட ஒரு பெண் பையனோட போய் விட்டாள் என்றால் எத்தனை விதமான பேச்சுகள் கேட்க வேண்டி இருக்கிறது?  எழுபது வருடத்திற்கு முன்பு நிலைமை எப்படி இருந்திருக்கும்?  அதை பாட்டி எப்படி சமாளித்து இருப்பாள்? தாத்தாவால் தலை நிமிர்ந்து நடந்திருக்க முடியுமா?  என்று நான் எண்ணி பார்ப்பது உண்டு.  அப்போது தான் பெரியப்பாவின் மீது பாட்டியின் கோபத்தின் அர்த்தம் புரியும்.

பெரியப்பா மட்டுமா தப்பு செய்தார்.  பெரியம்மாவும் தலையாட்டவில்லை என்றால் தவறு நடந்திருக்குமா?  அப்படியிருக்க கடைசி வரை பெரியப்பாவிடம் விரோதம் பாராட்டியது பாட்டியின் தவறு தானே.  இதைப் பற்றி என் அம்மாவிடம் கேட்டு இருக்கிறேன்.  அவரோட எங்க அக்கா ஓடிப் போயிட்டவுடனேயே எங்க அம்மா தலை முழுகிட்டா.  ஒரு குழந்தையை பெத்துக்கிட்டு அக்கா வந்த போது அம்மா வீட்டுக்குள்ளேயே விடல எங்களையும் பேச அனுமதிக்கல.  வீட்டு வெளி வாசலிலேயே கை குழந்தையோட சாயங்காலம் வரை உட்கார்ந்து இருந்த அக்கா அழுதுக்கிட்டே திரும்ப போயிட்டா.  எங்களுக்கு எல்லாம் பாவமா இருந்தது.  அக்காவுக்கு பிறந்திருப்பது என்ன குழந்தை என்றே எங்களுக்கு தெரியாது.  அதுக்கு அப்புறம் அக்காவுக்கு அடுத்தடுத்து பிறந்த இரண்டு குழந்தைகள் வைசூரி கண்டு செத்து போயிடுச்சி.  அந்த தகவல் வந்த போது கூட அம்மா போகல.


அம்மாவின் பிடிவாதத்தை தகர்ப்பது போல இரண்டு வருஷத்தில் ஒரு சம்பவம் நடந்தது.  அப்போது அக்காவிற்கு நான்காவது குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகியிருந்தன.  குழந்தைக்கும் பெரியம்மை, அக்காவுக்கும் பெரியம்மை.  அம்மையின் தாக்கம் அக்காவின் கண்களிலும் இருந்ததாம்.  ஒன்று நான் செத்து விடுவேன்.  அல்லது என் கண்கள் போய் விடும்.  அப்படி எதாவது ஒன்று நடப்பதற்குள் என் அம்மா அப்பாவை கடைசியாக பார்க்க வேண்டுமென்று அக்கா அழுதாளாம்.

 என் அம்மாவின் பிடிவாதம் அப்போதும் குறையவில்லையாம்.  என் மகள் சாக கிடக்கிறாள் நீ வீம்பு காட்டுகிறாயா?  பேசாமல் என்னோடு கிளம்பு.  இல்லையென்றால் என்னை முற்றிலும் மறந்து விடு என்று அப்பா கண்டிப்பாக பேசவும் தான் கிளம்பினாள்.  அக்காவின் நிலைமையை நேராக பார்த்தவுடன் அம்மாவுக்கு அடக்கி வைத்திருந்த உணர்வு எல்லாம் வெடித்து வெளியே கிளம்பிவிட்டது.  அம்மாவின் அழுகை சத்தம் கேட்பவர்களின் மனதை கரைந்து போக செய்து விட்டது.

கால தேவனுக்கு மட்டும் அந்த அழுகை சத்தம் கேட்டிருக்காதா என்ன?  அவனும் இரக்கப்பட்டு அக்காவை உயிரோட விட்டு விட்டான்.  ஆனால் அந்த குழந்தையும் போய்விட்டது.  வலது கண்ணில் பாதி பார்வையும் போய்விட்டது.  ஆனாலும் அக்காவுக்கு ஒருவகையில் சந்தோஷம்.  அம்மா அப்பாவோடு சேர்ந்து விட்டோமே என்று.


  இந்த கதையை என் தாயார் சொல்லும் போது சிறிய வயதில் அதன் கனம் என்னவென்று தெரியவில்லை.  வயது ஏற ஏறத்தான் தொடர்ச்சியாக பெற்ற பிள்ளைகளை எமனிடம் கொடுத்துவிட்ட ஒரு தாயின் பதபதைப்பு எப்படியிருக்கும் என்பது புரிந்தது.  அதன் பிறகு பெரியம்மாவிற்கு ஐந்து குழந்தைகள் பிறந்தார்கள். ஆனாலும் குழந்தைகள் மேலுள்ள பாசம் குறையவேயில்லை.  குழந்தை என்றால் தன் குழந்தை, மற்றவர்களின் குழந்தை என்ற பாகுபாடே பெரியம்மாவிற்கு கிடையாது.

 நான் அவர்களின் தங்கை மகன் தான்.  சின்ன வயதில் எனக்கு உடம்பு சரியில்லாமல் போன போது நாற்பது நாட்கள் பல் துலக்கி, குளிக்கும் நேரம் போக மற்ற நேரமெல்லாம் என்னை மடியிலேயே வைத்து கொண்டிருந்தார்களாம்.  உறங்குவது கூட அப்படியே தான் சாய்ந்து தூங்குவார்களாம்.  இன்று எனக்கு இத்தனை வயது ஆனாலும் என்னை கண்டவுடன் ஒரு குழந்தைக்கு முத்தமிட்டு கொஞ்சுவது போல் கொஞ்சுவார்கள்.

பெரியப்பாவின் மீது பாட்டியின் கோபம் தீராததற்கு வேறு காரணங்களும் இருந்தன.  கல்யாணம் செய்து மூன்று மாதங்களுக்கு மேல் அவர் மனைவியை சந்தோஷமாக வைத்ததே கிடையாது.  மொத்தமாக மாம்பழங்கள் வாங்கி சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு அனுப்புவதால் அவரிடம் பண தட்டுப்பாடு என்பதே இல்லை.  அந்த காலத்திலேயே மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பாராம். 


 ஆனால் மனைவியிடம் காலனா பணம் கூட கொடுக்க மாட்டாராம்.  ஏராளமான ஆசை நாயகிகள் உண்டாம்.  சீட்டாட்டம், குதிரை பந்தையம் என்று பணத்தை தண்ணீராக செலவழிப்பாராம்.  வீட்டுக்கு வரும் போதெல்லாம் முழு போதையில் தான் வருவாராம்.  அப்படி வந்தால் அவரின் பொழுது போக்கு மனைவியை அடிப்பதும், உதைப்பதும் தானாம்.

  பெரியம்மா சொல்லுவார்கள், அவர் அடிப்பது கூட வலித்தது இல்லை.  கூப்பிட்டவுடன் என் கூட ஓடி வந்தவள் தானடி நீ.  இப்படி எத்தனை பேரோடையும் போக  கூடியவள் நீ என்று போதையில் உளறுவாரே அந்த வலி இன்று வரை தீர்ந்ததே இல்லை.  தோட்டத்துக்கு சோறு எடுத்து போறவளை வழி மறித்து நீ என்னோடு வரவில்லையென்றால் நான் செத்து விடுவேன் என்பார்.  ஒரு நாள் என் முன்னால் விஷத்தையே சாப்பிட போனார்.  அதனால் அவரை நம்பி தாய் தகப்பனை விட்டுவிட்டு ஓடி வந்தேன்.  அதற்கு எனக்கு கிடைத்த பரிசு இந்த வார்த்தைகள் என்று அவர்கள் சொல்லும் போது பரிதாபமாக இருக்கும்.

கை நிறைய புருஷன் சம்பாதித்தாலும் பிள்ளைகளின் வயிற்றை நிரப்ப பெரியம்மா கூலி வேலைக்கு தான் போனார்கள்.  இதற்காகவும் புருஷனிடம் அடிவாங்கியிருக்கிறார்கள்.  அடுத்தவனிடம் கூலி வாங்க பல்லை காட்டிக் கொண்டு நிற்கிறாயே வெக்கமாக இல்லை உனக்கு என் மரியாதை என்னாவது என்று அடிப்பாராம். குடி, கூத்தி என்று அலையும் போது கெட்டு போகாத மரியாதை மனைவி கூலி வேலை செய்தால் மட்டும் கெட்டு போகுமாம். 


 எனக்கு விவரம் தெரிந்த போதெல்லாம் பெரியப்பாவின் ஆட்டம் அடங்கிவிட்டது.  அவரை பிடித்த காச நோய் மனுஷனை உட்கார வைத்து விட்டது.  எல்லோரும் அவரை குறை சொன்னாலும் எனக்கு அவரை பிடிக்கும்.  என்னை மடியில் உட்கார வைத்து கொண்டு நிறைய கதை சொல்லுவார்.  அதில் பாதி கதை புதிர் கணக்குகளாக இருக்கும்.  மீதி கதை வயிறு வலிக்க சிரிக்க செய்யும்.  எதுவும் தெரியாத பிள்ளை பருவத்தில் என்னை கவர்ந்த சிலரில் அவரும் ஒருவர்.  அதனால் தான் அவர் இறந்த அன்று உண்மையாகவே வருத்தப்பட்டு அழுதேன்.  அவர் செத்து போனதற்கு இவன் ஏன் இப்படி அதிகமாக அழுதான் என்று பெரியம்மா ஆச்சர்யப்பட்டு போனார்கள்.

பெரியம்மாவிற்கு மொத்தமாக பிறந்தது ஒன்பது குழந்தைகள்.  அதில் மூன்று பேர் அம்மை நோய்க்கு பலியாகி மீதம் ஆறு பேர்கள்.  மூத்தவள் செல்லம்மாக்கா, பெரியம்மாவின் கடின உழைப்பால் படித்து அரசு மருத்துவனையில் தலைமை செவிலியராக பணியாற்றி இப்போது ஓய்வு பெற்று விட்டாள்.

இரண்டாவது பாண்டியண்ணா, இவன் வாய் பேசமாட்டான்.  பிறவிலேயே ஊமை.  ஆனால் இனிப்பு பலகாரங்கள் செய்வதில் சூரப்புலி, கடினமான உழைப்பாளி.  தனது உழைப்பால் துவங்கிய சின்ன மிட்டாய் கடையை பல கிளைகள் உள்ள ஸ்வீட் ஸ்டாலாக உயர்த்தி இன்று சில கோடிகளுக்கு அதிபதி,


 அடுத்தவள் புனிதா அக்கா, படிப்பு ஏறவில்லை.  திருமணம் முடிந்து மூன்று மாதத்திலேயே குடிகார புருஷனோடு வாழ மாட்டேன் என்று பிறந்த வீட்டுக்கு வந்து பாண்டியண்ணனுக்கு ஒத்தாசையாக இருக்கிறாள். 

அடுத்தது முத்து அண்ணா, சின்ன வயதிலேயே பாத்திர கடையில் வேலைக்கு சேர்ந்து மிகவும் கஷ்டப்பட்டவன்.  தனது சொற்ப வருமானத்தில் அக்காமார்களுக்கு திருமணம் செய்து வைத்தவன்.  தனது திறமையான உழைப்பால் பாத்திரக்கடையின் முதலாளி மனதை கவர்ந்து அவர் ஒரே மகளை திருமணம் செய்து அவரின் சொத்துக்கள் எல்லாவற்றிற்கும் வாரிசு ஆகிவிட்டான்.  படிக்காமலே கணக்கு போடும் திறமை வாய் சாமார்த்தியம் எல்லாம் இருந்தாலும் கூட பத்து வயதுக்கு மேல் வந்த ஏதோ ஒரு நோயால் காதுகள் கேட்கும் திறனை இழந்து விட்டது. 

அவனுக்கு அடுத்தவள் தான் மகேஷ்வரி அக்கா.  நன்றாக படிக்கும் திறமை இருந்தும் இளநிலை படிப்பு வரை மட்டுமே அவளால் படிக்க முடிந்தது.  இந்த படிப்புக்கு எதாவது குமாஸ்தா வேலை கிடைக்குமா?  என்று தேடி திரியாமல் தனியாக டியூஷன் சென்டர் துவங்கினாள்.  அதில் திறமையை வளர்த்து கொண்டு ஆங்கில பள்ளியை ஆரம்பித்தாள்.  இன்று அதை கல்லூரி வரையில் நகர்த்தி கொண்டு வருகிறாள். 


 கடைசி பிள்ளை ராமச்சந்திரன்.  இவனுக்கு வலது காலும் இடது கையும் விளங்காது.  பத்தாம் வகுப்பு தாண்டுவதற்குள் பாடாய் பட்டு விட்டான்.  பெரியம்மா யார் யாரையோ சிபாரிசுக்கு பிடித்து அரசாங்க வங்கி ஒன்றில் பியூன் வேலை வாங்கி கொடுத்து விட்டார்கள்.  இன்றைய நிலையில் எல்லா பிள்ளைகளுமே செட்டிலாகி விட்டார்கள்.  ஆனாலும் பெரியம்மாவின் துயரம் தீர்ந்ததா?  இல்லை.  இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பெரியப்பா சம்பாதிப்பதை செலவழித்தாரே தவிர ஒரு வீட்டு மனை கூட சொந்தமாக வைத்தது இல்லை.  பெரியம்மா தான் சிறுக சிறுக சேர்த்து மனை வாங்கி குடிசை போட்டு பிறகு அதை ஓட்டு வீடாக்கி உடல் குறைவுடைய பிள்ளைகளை வைத்து கொண்டு கடினமாக போராடி எல்லோரையும் கரை சேர்த்தது.  பையன்களின் சம்பாத்தியத்தையும், ஊதாரித்தனமாக செலவழிக்காமல் மண்ணிலும் பொன்னிலும் முதலீடு செய்து எல்லாவற்றையும் வளப்படுத்தினார்கள்.

 நல்ல பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதே பெரிய போராட்டம்.  உடம்பு முடியாத பிள்ளைகளுக்கு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்பது சாதாரண விஷயமா என்ன?  இப்படி எல்லாமாகி இருந்து தங்களை உயர்த்திய தாய்க்கு ஆண்பிள்ளைகள் கொடுத்த பெரிய பசு வீட்டை விட்டு வெளியே போ என்ற கட்டளை தான்.


பெரியம்மாவிற்கு அமைந்த மூன்று மருமகளும் நல்ல பெண்கள் தான்.  ஆனால் அவர்கள் தங்ஙகளுக்கு மட்டுமே நல்லவர்களாகி போனது பெரியம்மாவிற்கு வாய்த்த துரதிஷ்டம்.  முடியாத புருஷன்மார்களை உருவாக்கி கொடுத்த வயோதிக பெண்மணி ஒரு காலக்கட்டத்தில் அவர்களுக்கு பாரமாகி போனது.

 இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரியம்மா சொன்ன வார்த்தை இன்னும் என் காதில் எதிரொலிக்கிறது.  மருமகள்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும்?  ஒரு சிறிய திண்பண்டம் என்றாலும் மறைத்து வைத்து காத்திருந்து நான் கொடுத்து வளர்த்தது என் மகன்களுக்கு அல்லாவா தெரியும்?

  ஊனமான பிள்ளைகள் எதற்கு ஆகப் போகிறார்கள் என்று நான் தூக்கி போட்டு இருந்தால் இன்று அவர்கள் இந்த நிலையை கண்ணால் கூட கண்டிருக்க முடியுமா?  பெண்டாட்டி வந்தவுடன் பெற்றவளின் உதவி தேவையில்லை என்று நினைபப்தை மன்னிக்கலாம்.  ஆனால் பெற்றவளே தேவையில்லை என்று நினைக்கும் மகன்களை எப்படி மன்னிப்பது?


  என் பெண் குழந்தைகளுக்கு உழைப்பை மட்டும் தான் கொடுத்தேன்.  சேமிப்பை கொடுக்கவில்லை.  ஆனால் வெளியே போ என்று மகன்கள் சொன்னதும் என் அம்மாவை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் என்று கூட்டி வந்து அரவனைக்கிறாள் பார் மகள் இவளுனுக்கு தான் எனக்கு கொள்ளி போட கூட யோகிதை இருக்கிறது.

 கட்டிய கணவன் பாதுகாக்கவில்லை.  பெற்ற மகன்களும் கைவிட்டு விட்டார்கள்.  என் வாழ்க்கையில் ஆண்மை பொருந்திய ஆண் மகனை என் தகப்பனாரை தவிர எவரையுமே பார்த்தது இல்லை.  ஆனாலும் இந்த பாழாய் போன மனது சோறு போடும் மகளை பார்த்து ஆறுதல் அடைய மாட்டேன் என்கிறது.

 என் பிள்ளை கையால் ஒரு பிடி சாதம் கூட சாப்பிட முடியாமல் போய்விட்டதே என்று தான் அங்கலாய்க்கிறது.  ஆண்கள் புறக்கணித்தாலும் அவர்களையே நாடுகிறதே பெண்ணின் மனது?  இதனால் தான் பெண் புத்தி பின் புத்தி என்றாகளோ? இப்படி பெரியம்மா கேட்டதை என்னால் மறக்கவும் முடியவில்லை, பதில் சொல்லவும் தெரியவில்லை. 

ஆனால் அவர்கள் என் பதிலுக்கு காத்திருக்காமல் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு போகும் டிரைவர்களுக்கு காப்பி தயாரிக்க முனைந்து விட்டார்கள்.  பெண்கள் இப்படி இருப்பது ஏன்?  என்று எனக்கு தெரியவில்லை.  உங்களில் யாருக்காவது தெயுமா?


இந்தக் கதையின் நிஜக்கதாநாயகி என் பெரியம்மா திருமதி. அன்னக்கிளி நீலபெருமாள் இவர்கள்தான் இவரின் உண்மை வாழ்வோடு சில கற்பனையும் கலந்ததுதான் இதுவரை நீங்கள் படித்த இக்கதை

Contact Form

Name

Email *

Message *