Store
  Store
  Store
  Store
  Store
  Store

அட! மானங் கெட்ட மனுஷங்களா...


  சுப்பிரமணிக்கு அழுகை அழுகையாக வந்தது.  நேற்று நல்லா இருந்த அம்மா இன்னிக்கு சாயந்திரம் முகத்தை தூக்கி வைத்து கொண்டு உர்ரென்று இருக்கும் போதே அவனுக்கு புரிந்து விட்டது.  அம்மா கோவத்தில் இருக்கா.  ஏதாவது ஏடாகூடமா பேசினா போட்டு மொத்தினாலும் மொத்தி விடுவா, பேசாம தர சோற்றை தின்று விட்டு தெரு பக்கமா ஓடி விட வேண்டியது தான் என்று நினைத்து கொண்டு அரக்க பரக்க சாதத்தை எடுத்து விழுங்கியவனை ஓழுங்கா திண்ணுட்டு வீட்ல உட்கார்ந்து படி.  விளையாட போனேன், அது இது என்று ஊர் சுத்த கிளம்பாத என்றவுடன் அவனுக்கு பகீர் என்றது.

 அவனும் கமலகண்ணனும் ஊருக்கு தெற்கே இருக்கும் பூவரச மரத்தில் மைனா ஒன்று கூடு கட்டியிருப்படிதை பார்த்து விட்டார்கள்.  சூரியன் மறைந்து போய் விட்டால் மைனாவுக்கு கண் தெரியாதாம்.  அந்த நேரத்தில் மரத்தில் ஏறி தாய் மைனாவை அமுக்கி பிடித்து விடலாம் என்று திட்டம் தீட்டியிருந்தனர்.  அதை நிறைவேற்ற விடாமல் இந்த அம்மா வெளியில் போகாதே என்கிறாளே என்ன செய்யலாம் என்று யோசனை செய்யும் நேரத்திற்குள்ளேயே அடுத்த குண்டையும் தூக்கி போட்டாள்.  அந்த கமலகண்ணனோடு இனி நீ சுத்துவதை பார்த்தா காலை உடைச்சி போடுவேன் என்றாள்.

ஏன் என்னாச்சு இப்படியெல்லாம் அம்மாவிடம் கேள்வி கேட்க முடியாது.  அவள் சொன்னால் சொன்னது தான்.  அப்பா கூட அதை தட்ட முடியாது.  மீறி எதாவது எதிர் கேள்வி கேட்டால் சும்மா வாயை மூடிக்கிட்டு கிடங்க உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று அம்மாவிடம் இருந்து சத்தம் வரும்.  அப்பா அடங்கியே போய் விடுவார்.  


  அவர் நிலைமையே அப்படியென்றால் சுப்ரமணியை பற்றி கேட்கவே வேண்டாம்.  அடிக்கிற காற்றில் பஞ்சு போல் பறந்து போய் விடுவான்.  தொண்டை வரை எட்டி பார்த்த அழுகையை கஷ்டப்பட்டு சாதத்தோடு விழுங்கிவிட்டு வெளி திண்ணையில் வந்து உட்கார்ந்தான்.  கமல கண்ணனுக்கு எதிர்த்த வீடு தான். எப்படியும் அவன் வீட்டுக்குள் இருந்து வெளியில் விளையாட வருவான்.  அம்மாவின் கண்ணை மறைத்து அவனோடு ஓடிப் போய்விடலாம்.  திரும்ப ராத்திரி வந்தால் நாலு அடி வாங்கி தூங்கி போய்விடலாம் என்று நினைத்தான்.

வெகு நேரம் வரை கமல கண்ணன் வெளியே வரவில்லை.  விளக்கு வைக்கும் நேரமாகிவிட்டது.  அதற்குள் இரண்டு மூன்று முறை அம்மா வேறு வெளியில் வந்து பார்த்துவிட்டு போய்விட்டாள்.  கமல கண்ணனை காணவேயில்லை.  சுப்பிரமணியின் மனசு எல்லாம் பறந்தது.  தான் மட்டும் போய் மைனாவை பிடிக்கலாம் என்றால் மரம் ஏற பயமாக இருந்தது.  அதுவும் இல்லாமல் அந்த வழியாகத்தான் சுடுகாட்டிற்கு போக வேண்டும்.  பேய் பிசாசுகள் அங்கே நடமாடுமாம்.  பிறகு தனியாக எப்படி போக முடியும்.  மனக்கண்ணின் முன்னால் சிறகடித்து பறக்கும் மைனா வந்து வட்டமிட்டது.

சுப்பிரமணிக்கு மைனா என்றால் ரொம்ப பிடிக்கும்.  எண்ணெய் தேய்த்த கருப்பு நிறத்தில் மஞ்சள் நிற அலகும், கரிய கோலி குண்டு போல சின்ன கண்களும், அக்கம் பக்கம் பார்த்து பார்த்து நடக்கும் அதன் நடையழகும் பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்கும்.  அதுவும் இல்லாமல் கிளி மாதிரியே அதற்கு பேசவும் கற்று கொடுக்கலாம்.  காட்டிற்கு சென்று நிறைய பூச்சிகளை பிடித்து வந்து கொடுக்கலாம்.  கொழு கொழுவென்று அழகாக இருக்கும்.


சிவகாமி பாட்டி வீட்டில் ஒரு மைனா வளர்த்தார்களாம்.  அது தெளிவாக பேசுமாம்.  சிவகாமி பாட்டியை பெயர் சொல்லி தான் கூப்பிடுமாம்.  பசி எடுத்தால் சோறு தா சோறு தா என்று கேட்க்குமாம்.  யாராவது புதிய ஆள் வந்துவிட்டால் கள்ளன் வரான் கதவை சாத்து கதவை சாத்து என்று கத்துமாம்.  அந்த கதையை கேட்ட நாளில் இருந்தே சுப்பிரமணிக்கு மைனா வளர்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

  அவனும் யார் யாரிடமோ கேட்டு பார்த்து விட்டான்.  ஒருவரும் மைனா பிடித்து கொடுக்க தயாரில்லை.  கடைசியில் கமல கண்ணன் தான் இந்த வழியை சொன்னான்.  சுப்பிரமணிக்கு சந்தோஷம் பிடிப்படவில்லை.  ஒரு வாரமாக வேறு சிந்தனையே ஓடவில்லை.  கோபால் சித்தப்பா வீட்டுக்கு போய் பழைய கிளி கூண்டை தூக்கி வந்து சுத்தமாக துடைத்து வைத்தும் விட்டான்.  ஆசையாக காத்திருந்த நாளும் வந்து விட்டது.  இந்த கமல கண்ணனை தான் இன்னும் காணோம்.  பிள்ளையாரப்பா எப்படியாவது கமல கண்ணனை வரவச்சிடு.  உனக்கு பத்து தோப்புக்கரணம், இல்லை இல்லை நூறு தோப்புக்கரணம் போடுகிறேன் என்று வேண்டியும் கொண்டான். 

யார் வீட்டிலோ கடிகாரத்தில் ஆறு மணி அடித்த போது கமல கண்ணன் அவன் வீட்டிலிருந்து வெளியே வந்தான்.  சுப்பிரமணிக்கு உயிரே கண்ணெதிரே வருவது போல் இருந்தது.  அவசரமாக திண்ணையில் இருந்து இறங்கி போகலாமா என்று சைகையும் காண்பித்தான். ஆனால் கமல கண்ணன் இவனை பார்த்தவுடன் முகத்தை திருப்பி கொண்டு வீட்டுக்குள் போய்விட்டான்.  ஒரு வேளை அவன் பார்க்கவில்லையோ என்று சுப்பிரமணிக்கு தோன்றியது.  இல்லை நன்றாக பார்த்தான்.  நான் திண்ணையில் இருந்து குதித்ததை அவன் கவனிக்காமல் இருந்திருக்கவே முடியாது.  வேண்டுமென்றுதான் அவன் திரும்பி போய்விட்டான்.  இதை நினைத்த போது தான் சுப்பிரமணிக்கு அழுகை அழுகையாக வந்தது.


இந்த கமல கண்ணனுக்கு என்ன வந்தது.  பள்ளிக்கூடம் விட்டு வரும் போது கூட நன்றாக தானே பேசி கொண்டு வந்தான்.  அதற்குள் இவனுக்கு என்ன ஆச்சு.  கவலைப்படாதே இன்று எப்படியும் மைனாவை பிடிச்சிடலாம்.  ஆனா அது பெரிய மைனா.  நீ எக்கு தப்பா அதை தொட்டு விட்டால் ரத்தம் வர மாதிரி கொத்தி விடும்.  பழகாத மைனாகிட்ட முகத்த கொண்டு போகவே கூடாது.  நம்ம கண்ணை பூச்சின்னு நினைச்சு கொத்திவிடும்.  அப்புறம் கண்ணே தெரியாது.  எங்க மாமா ஊர்ல இப்படி நிறைய பேருக்கு கண்ணு தெரியாம போயிருக்கு என்றுதானே பேசிக் கொண்டு வந்தான்.  இப்போ என்னடான்னா முகத்த திருப்பிக்கிறானே.

கமல கண்ணனுக்கு கொஞ்சம் கூட நன்றியே இல்லாம போயிருச்சா?  அப்பா ராத்திரி வாங்கி வரும் மைசூர் பாக்கை வீட்டில் தெரியாம எத்தனை முறை தூக்கிக்கிட்டு போய் அவனுக்கு கொடுத்து இருப்பேன்.  இவனை வகுப்புல பாண்டிதுரை அடிச்சதுக்கு விளையாட்டு கிரவுண்டுல பாண்டிதுரையோட கட்டிபிடிச்சி சண்டை போட்டேனே, வேப்ப மரத்துல எடுத்த தேன் கூட்டை ஈக்கள் கடிக்க கடிக்க இவனுக்கென்று கொண்டு வந்தேனே அத்தனையும் மறந்து விட்டானா?

நான் சின்ன பையனா போயிட்டேன்.  மரம் ஏறத் தெரியாது.  பேய்க்கு வேறு பயமாக இருக்கிறது.  இல்லனன்னா இவனுக்காக காத்திருக்காம நானே போயி மைனாவை புடிச்சு வந்து விடுவேன்.   இப்படி நினைக்கும் போதே சுப்பிரமணிக்கு கண்களில் நீர் வடிய ஆரம்பித்து விட்டது.  மூக்கை உறிஞ்சய வண்ணம் அழ ஆரம்பித்து விட்டான்.  பசியாய் சாப்பிட போனவனின் கைகளை தட்டி விட்டால் எப்படி ஆத்திரம் பொங்கி கொண்டு வருமோ அப்படியே கோபமும் அழுகையும் நெஞ்சுக்குள் இருந்து ஒன்றாக ஓடி வந்தது.  திண்ணையில் உட்கார  பிடிக்காமல் வீட்டிற்குள் போய் கயிற்று கட்டிலில் படுத்து கொண்டான்.  அடே சோம்பேறி பயலே விளக்கு வைக்கும் நேரததில் துக்கிரியாட்டம் படுக்காதே என்ற அம்மாவின் குரலையும் அவன் சட்டை செய்யவில்லை.



  ஏன்டி மங்களம் உன் வீ ட்டு டி.வி ஒழுங்கா வேலை செய்யுதா? எங்க வீட்டு டி.வி வெள்ளையா படத்தை காட்டுது என்று பேசியவாறே திலகம் சித்தி வீட்டுக்குள் வந்தாள்.  எங்கள் டி.வி. புதுசாச்சே நல்லா தெளிவா அழகா படம்  தெரியுது என்று அவளுக்கு விளக்கம் சொன்ன அம்மா டி.வி.வை ஆன் செய்தாள்.  பிறகு அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே சீரியல் பார்க்க ஆரமித்து விட்டார்கள்.

  இதனால் சுப்பிரமணி கட்டிலில் படுத்ததை அம்மா மறந்தே போய்விட்டாள்.  இன்றைக்கு எப்படியாவது மைனாவை பிடிச்சி கொண்டு வந்து விடலாம் என்று ஆசைப்பட்டது நடக்காமலே போயிடுச்சே என்ற சோகத்தில் சுப்பிரமணி அவிழ்த்து போட்ட அம்மா சேலையில் முகத்தை புதைத்து கொண்டு ரகசியமாக அழுதான்.  எவ்வளவு நேரம் அப்படி அழுதானோ தெரியவில்லை உறங்கியே போய்விட்டான்.

  ராத்திரி அம்மா எழுப்பி தலையில் இரண்டு தட்டு தட்டியதும் வலுக்கட்டாயமாக அப்பா சோறு ஊட்டி விட்டதும் ஏதோ கனவில் நடப்பதாக நினைத்துக் கொண்டான்.  நேரத்திலேயே உறங்கி விட்டதினால் விடியற்காலமே விழித்து விட்டான்.  எழுந்தவுடன் வயிறு பசித்தது.  அம்மா பிழிந்து போட்டு கொடுத்த பழைய சாதத்தை வெங்காயத்தை கடித்து சாப்பிட்டு முடித்தான்.  முகம் அலம்பி திருநீறு பூசி பையை எடுத்து கொண்டு பள்ளி கூடத்துக்கு கிளம்பி விட்டான்.



 பள்ளி கூடம் திறக்கத்தான் இன்னும் நேரம் இருக்கிறதே குளிச்சிட்டு பள்ளிக்கு போயேன்டா என்ற அம்மாவிடம் சாயங்காலம் குளிக்கிறேன் என்று கத்தலாக சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.  கமல கண்ணன் வீட்டை ஓரப்பார்வை பார்த்தான்.  அவனை காணவில்லை.  அது சுப்பிரமணிக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

 பள்ளி கூடத்தை திறந்து  அப்போது தான் பெருக்க ஆரம்பித்தார்கள்.  சுப்பிரமணியை கண்டவுடன் அடே தம்பி ஹெட்மாஸ்டர் ரூமில் இருக்கும் பானையை கழுவி தண்ணி பிடித்து வை என்று பியூன் வேலையிட்டான்.  வேறு வழியில்லாமல் அதை செய்து முடித்து விட்டு யாருமே இல்லாத தனது வகுப்பறையில் வந்து உட்கார்ந்து வெற்று கரும்பலகையை வெகுநேரம் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.  இந்த கரும்பலகையில் அழகான மைனா படம் வரைந்து பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு வந்தது.  ஆனால் வகுப்பாசிரியரின் முட்டை கண்ணும், முரட்டு மீசையும் ஞாபகத்துக்கு வரவே பரபரத்த கையை அடக்கி கொண்டு சும்மா இருந்து விட்டான்.

யாரோ உள்ளே வரும் சத்தம் கேட்கவும் சரட்டென்று திரும்பி பார்த்தான்.  கமல கண்ணன் தான் வந்தான்.  அவனை பார்த்தவுடன் சுப்பிரமணிக்கு சந்தோஷம் பற்றிக் கொண்டது.  இன்றைக்காவது மைனாவை பிடித்து விடலாம் என்ற நப்பாசையும் கூடவே வந்தது.  அதனால் முகமெல்லாம் பளிச்சென்று மின்ன அவனை பார்த்து சிரித்தான்.  ஆனால் கமல கண்ணன் சிரிக்கவும் இல்லை, எந்த ஆர்வத்தையும் முகத்தில் காட்டவும் இல்லை.  உம்மென்று முகத்தை வைத்து கொண்டு கடைசி பெஞ்சில் போய் உட்கார்ந்தான்.


   சுப்பிரமணிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.  அவனும் கொஞ்ச நேரம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தான்.  பிறகு ஆர்வம் உந்தி தள்ள கமல கண்ணனின் பக்கத்தில் போய் அமர்ந்து உனக்கு உடம்பு சரியில்லையா? என்று ரகசியமாக கேட்டதும் தான் தாமதம்.  என்கிட்ட பேசாத போ உங்க அம்மாவுக்கும் எங்க அம்மாவுக்கும சண்டை.  உன் கூட பேசினால் என் தோலை உரிச்சி போடுவாங்க என படபடவென பேசினான்.

 அவுங்க சண்ட போட்டா நாம என்ன செய்ய முடியும்.  நான் என்ன தப்பு பண்ணினேன் என்று சுப்பிரமணி மெல்லிய குரலில் சொன்னதையும் கமல கண்ணன் காதில் கொள்ள வில்லை.  ஒண்ணும் நீ சமாதானம் சொல்ல வேண்டாம்.  என் பேச்சுக்கு இனி வராத என்று சத்தம் போட்டு கத்தவும் செய்தான்.

அவனுக்கு வந்த கோபம் சுப்பிரமணிக்கு வராதா என்ன?  உங்க அம்மா தான் சரியான வாயாடியாச்சே எங்க அம்மாக்கிட்ட வலுசண்டைக்கு அது தான் போயிருக்கும் என்று சூடாக பதில் சொன்னான் சுப்பிரமணி.  எங்க அம்மா ஒண்ணும் வாயாடி இல்ல, உங்க அம்மா தான் அடங்காபிடாரி சண்டக்காரி என்று பதிலுக்கு கோபமாக பேசினான் கமலக்கண்ணன்.  அடப்பாவி எப்படி அநியாயமாக பேசிவிட்டாய்.  என் அம்மா அடங்காபிடாரியா?

இவங்க அம்மா தான் தெருவில் எல்லோர்க்கிட்டேயும் சண்டைக்கு நிற்கும்.  வாரத்துல நாலு நாள் பைப்படியில் முடியை பிடித்து இழுத்து சண்டை போடும்.  யாரை பார்த்தாலும் மரியாதையில்லாமல் கெட்ட வார்த்தையில் பேசும்.  இவன் போய் என் அம்மாவை குறை சொல்வதா? இப்படிபட்டவன் கிட்ட இனியும் சங்காத்தம் வேணுமா?  அந்த பாழாய் போன மைனா கிடைக்காமல் போனால் போகிறது.  அதற்காக இந்த களவாணி பயல் கிட்ட ரோசம் கெட்டு போறதா என்று நினைத்த சுப்பிரமணி சட்டென்று எழுந்து கமலக்கண்ணன் முதுகில் ஓங்கி குத்தினான். 


  அவன் இதை எதிர்பார்ககவே இல்லை.  வலியால் அய்யோ அம்மா என்று கத்தி பெஞ்சை விட்டு எழுந்து நின்றான்.  கமலக்கண்ணனுக்கு ஆத்திரமும் ரோசமும் பொத்துக் கொண்டு வந்தது.  இந்த சின்ன பையன் நம்மை அடித்து விட்டானே.  இரண்டு வருஷமா இதே வகுப்பில் படிக்கிறேன் இவன் நேத்து வந்தவன் இவனுக்காக என்னென்ன செய்து இருப்பேன்.  மற்ற பசங்க அடிக்காம எத்தன முறை தடுத்திருப்பேன்.  நேற்று கூட முருகேசன் தோட்டத்தில் தெரியாம பறித்து வந்த மாங்காயில் முக்கால் பங்கு இவனுக்கு தான் கொடுத்தேன்.  அதையெல்லாம் மறந்து போய் விட்டானே.  இவன சும்மா விட கூடாது என்று கருவி கொண்ட கமலக்கண்ணன் சுப்பிரமணியின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி காலால் உதைத்தான். 

வலி தாங்க முடியாமல் சுப்பிரமணி கெட்ட வார்த்தைகளால் திட்டினான்.  அதற்குள் சத்தம் கேட்ட வகுப்பறைக்கு வந்த பியூனும் சில மாணவர்களும் இருவரையும் பிரித்து விட்டனர்.  சுப்பிரமணியின் பின்புறத்தில் சிறிய புண் இருந்தது.  அதில் கமலக்கண்ணன் மிதித்ததினால் கசிந்த ரத்தம் கால் சட்டையை நனைத்து அதிகமாக வலித்தது.  சுப்பிரமணி தேம்பி தேம்பி அழுதான்.  காலை நொண்டியவாறு தான் பள்ளி கூட பிரேயருக்கு சென்றான்.

  ரத்தத்தை பார்த்தவுடன் கமலக்கண்ணனுக்கு பயம் வந்து விட்டது.  அய்யோ பாவம் ரொம்பவும் வலிக்குமே என்ற இரக்கமும் வந்தது.  ஆனாலும் வீம்பாக முகத்தை வைத்து கொண்டான்.  வகுப்பிற்கு வாத்தியார் வந்ததும் என்னடா சண்டை ரெண்டு பேருக்கும் என்று கேட்டார்.  இரண்டு பேருமே எழுந்து நின்று உர்ரென்று முறைத்தார்களே தவிர பதில் பேசவில்லை.  சரி சரி ஒழுங்கா படியுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் வழக்கமாக மேஜையில் சாய்ந்து மெல்லிய குறட்டையில் உறங்க ஆரம்பித்தார். 

மாணவ மாணவிகள் கசமுசாயென்று பேசி சிரித்தது அவர் காதில் விழ வில்லையா?  இல்லை அந்த சத்தம் தான் அவருக்கு தாலாட்டு பாடலா என்று கடவுளுக்கு தான் வெளிச்சம்.  நேரம் செல்ல செல்ல சுப்பிரமணிக்கு வலி மறந்து பசியெடுக்க ஆரம்பித்தது.  விடியற்காலமே சாப்பிட்ட பழைய சாதம், போட்ட சண்டையில் எங்கோ ஒரு மூலையில் கரைந்து போயிருக்கும் மதியம் சாப்பாட்டிற்கு மணி அடிக்கும் நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தான்.

 அந்த நேரத்தில் முத்து கிருஷ்ணன் சுப்பிரமணியின் காதோரமாக வந்து டேய் கமலக்கண்ணன் சாரி கேட்டான்டா உனக்கு இன்னிக்கு எப்படியும் மைனாவை பிடிச்சி தருவானாம் என்று கிசுகிசுப்பாக சொன்னான்.  ஒண்ணும் வேண்டாம்.  நான் அவனோடு பேச போறதே இல்லை என்று விசும்பலுடன் சொன்னான் சுப்பிரமணி பெரியதாக படிப்பது போல் அறிவியல் புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டு தலைகீழாக புரட்ட ஆரம்பித்தான்.  மதிய சாப்பாட்டு மணியும் அடித்தது.  அவசர அவசரமாக சுப்பிரமணி வீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தான்.

தனது தெரு முனைக்கு வரும் போதே வீட்டு திண்ணையில் அம்மாவும் இன்னொரு பெண்ணும் பேசிக் கொண்டிருப்பதை சுப்பிரமணி பார்த்து விட்டான்.  தூரத்தில் இருந்து பார்க்கும் போது அந்த பெண் கமலக்கண்ணனின் தாயாரின் சாயலாகவே தெரிந்தாள்.

 நிச்சயமாக அவுங்களாக இருக்காது.  என் அம்மா ஒன்றும் ரோசம் கெட்டவள் இல்லையே நேற்று சண்டை போட்டு விட்டு இன்று சேர்ந்து கொள்வதற்கு என்று நினைத்து கொண்டே வீட்டுக்கு பக்கத்தில் வந்தவன் மலைத்து போயே விட்டான்.  அந்த பெண் வேறு யாருமில்லை கமலக்கண்ணனின் அம்மாவே தான்.  அவளும் இவன் அம்மாவும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

 இவனை பார்த்ததும் சரி யக்கா உன் பிள்ளை வந்து விட்டான் அவனுக்கு சாப்பாடு போடு என் மகன் காலையில் ஒன்றுமே சாப்பிடாமல் தான் பள்ளி கூடம் போனான்.  பாவம் பிள்ளை பசியோடு வருவான். நான் வீட்டுக்கு போகிறேன் என்று கிளம்பி போனாள். 

சுப்பிரமணிக்கு ஒன்றும் புரியவில்லை.  இந்த பெரியவர்களுக்கு புத்தி இல்லையா?  அல்லது மானம் ரோஷம் எதுவுமே கிடையாதா?  நினைத்தால் சண்டை போடுவது விடிந்தால் சேர்ந்து கொள்வது, என்ன ஜென்மங்கள் இவர்கள் என்று தோன்றியது.

Contact Form

Name

Email *

Message *