Store
  Store
  Store
  Store
  Store
  Store

கனவில் வந்து காணிக்கை கேட்பாள்


   ல்யாண தேதியை எதிர்நோக்கி காத்திருந்த ஒரு பெண் திடிரென பைத்தியமாகி விட்டால்  பெற்றவர்களின் மனது என்ன பாடு படும் வாழைபந்தல் கட்டி வந்தாரைவரவேற்று அகமும் முகமும் மலர அறுசுவை உணவு படைத்து குழந்தைகளை ஆசிர்வதியுங்கள் என்று உறவு முறையினரை வேண்டுவதற்கு கனாகண்ட இதயம் மகள் பைத்தியமானாள் என்பதை தெரிந்து பட்ட கஷ்டத்தை வர்ணனை செய்வதற்கு வார்த்தைகள் ஏது?

    அந்த நண்பர் ஒன்றும் பெரிய வசதி படைத்த சீமான் குடும்பம் அல்ல.  இருப்பதை வைத்து சிறப்புடன் வாழும் நடுத்தர வர்க்கத்தில் அவரும் ஒருவர்.  கை நிறைய சம்பாதித்தது பணத்தை அல்ல ஐந்து பெண்மக்களை தான்.  மனைவி கொண்டு வந்த நகையை வைத்து மூத்த பெண்ணை கரையேற்றினார்.  வயிற்றுக்கு சோறு போட்ட நஞ்சை பூமியை விற்று இரண்டாவது மகளுக்கு வரன் பார்த்து திருமண தேதியை முடிவு செய்தார்.

    திருமணம் முடிவு ஆனதை சந்தோஷமாக ஏற்று கொண்ட மகள் சில நாளில் மௌனமானாள்.  யாரிடமும் பேசுவது இல்லை.  வெற்றிடத்தில் எதையோ காண்பது போல் வெறித்து பார்த்தாள்.  உணவை தொட மறுத்ததோடு அல்லாமல் உடைகளை கூட மாற்றி கொள்ள மனமில்லாது இருந்தாள்.


     ஆண் பிள்ளைக்கு பைத்தியம் பிடித்தாலே ஏளனத்துடன் பார்க்கும் நம் சமூகம் திருமணத்திற்கு நிற்கும் பெண் பிள்ளைக்கு பைத்தியம் பிடித்தால் என்னென்ன பேசும்.  அந்த பிள்ளையின் எதிர்காலம் தான் என்ன ஆகும்? திக்கு தெரியாது நின்ற அந்த பெற்றோர்கள் ரகசியமாக பல மனநல மருத்துவர்களை அனுகினார்கள்.  ஒரே நாளில் நோயை குணப்படுத்த மருத்துவர் என்ன இயேசு நாதரா? நோய் நீங்கும் வழியும் தெரியவில்லை.  பிள்ளை வீட்டாருக்கு என்ன சமாதனம் கூறுவது என்பதும் புரியவில்லை.  வகையறியாத அந்த நண்பர் என்னை அனுகி ரகசியமாக விஷயத்தை சொன்னார்.  அவர் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் துளி பாறாங்கல்லை கூட மெழுகு போல் உருக்கி விடும்.

    அவர் விஷயத்தை சொன்னவுடன் பட்டென்று ஒரு சிந்தனை என் புத்தியில் தோன்றியது.  மருந்து மட்டும் இந்த பெண்ணின் மனநிலையை குணப்படுத்தாது.  கடவுளின் சக்தியும் கூட இணைந்தால்தான் காரியம் சித்தி அடையும் என தோன்றியதால் அவரிடம் நீங்கள் கவலைப்படாதீர்கள் உங்கள் மகள் திருமண தேதியை மட்டும் எதாவது ஒரு காரணம் காட்டி தள்ளி போடுங்கள்.  முப்பந்தல் இசக்கி அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனை தரிசனம் செய்து மகளை குணப்படுத்து, திருமணத்திற்கு முன் மகளோடு ஆலயத்திற்கு வந்து பட்டு புடவை எடுத்து சாத்துகிறேன் என வேண்டிக்கொண்டு புனித கயிறு வாங்கி கட்டிக் கொண்டு வாருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும் என்று உறுதியுடன் சொன்னேன். 

  அரைகுறை நம்பிக்கையோடு தான் அவர் கோவிலுக்கு சென்று பிராத்தனை செய்தார்.  ஆனால் அன்னை இசக்கி அம்மன் தன் முன்னால் வைக்கப்படும் பிராத்தனை முழு நம்பிக்கையோடு இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்ப்பவள் அல்ல.  அதனால் வேண்டுதல் எல்லாவற்றையும் நிறைவேற்றும் தாயாக திகழ்கிறாள்.  அவள் கோவிலுக்கு போய் வந்து ஒரு வாரத்திலேயே பெண் சகஜமான நிலைக்கு வந்தாள்.  குறித்த மாப்பிள்ளையையே மணமுடித்து பல குழந்தைகளுக்கு தாயாக இன்று இருக்கிறாள்.


    முப்பந்தல் என்ற அந்த புண்ணிய ஷேத்திரம் கன்னியாகுமரி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர் கோவிலில் இருந்து பதினாறாவது கிலோ மீட்டரில் உள்ளது.  இந்த ஊருக்கு இந்த பெயர் வருவதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு.

    நமது தமிழ் மக்கள் இன்று எப்படி ஒருவருக்கொருவர் ஜாதிகளால் பிளவுப்பட்டு ஒற்றுமை இல்லாமல் கிடக்கிறார்களோ அதே போல தான் பழைய கால மூவேந்தர்களும்  மண்ணுக்காகவும், பெண்ணுக்காகவும் தங்களுக்குள் அடித்துக் கொண்டு ஒற்றுமை இல்லாமல் கிடந்தார்கள்.  சேர, சோழ, பாண்டியர்களின் ஒற்றுமைக்காக பாடுப்பட்ட அறிஞர்கள் நிறைய பேர் உண்டு.  அவர்களில் முக்கியமானவர் ஒளவையார்.

    மூவேந்தர்களும் ஒளவையாரின் அறிவுரையை ஏற்று ஆரல்வாய்மொழிக்கு மேற்கிலுள்ள இந்த பகுதியில் கூடி பேசி கலைவார்களாம்.  அதனால் தான் முப்பந்தல் என்ற பெயர் இதற்கு வந்ததாம்.  சாலைக்கு அருகாமையிலேயே அன்னை கோவில் கொண்டுள்ளார்.  முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி அடர்ந்த மரங்களால் சூழப்பட்டு இருந்தது.  முக்கிய சாலை என்றாலும் கூட பகல் நேரத்திலும் இருண்டு தான் இருக்கும்.  கேரளபாணியில் அப்போது ஆலயம் இருந்தது.  மரங்களில் தொங்கும் சிறிய தொட்டில்களும் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் பல நூறு சுடுமண் பொம்மைகளும் அச்சம் கலந்த பக்தியை மனிதனுக்கு தரும்.


     இப்போது கோவிலின் முகம் மாறிவிட்டது.  நிறைய மரங்கள் இருந்த சுவடு கூட தெரியவில்லை.  நிற்கும் ஒன்றிரண்டு மரங்கள் தரும் நிழலை வைத்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்.  தமிழக அரசாங்கத்தால் கட்டப்பட்டிருக்கும் புதிய கோவில் சிறிய கோபுரத்துடன் காட்சி தருகிறது.  கருவறையில் அன்னை இசக்கி மூர்த்தமாக காட்சி தருகிளாள்.  வலது புறத்தில் பிராமணத்தி  அம்மனும், கருவறையின் வெளிசுவற்றில் விஷ்ணுதுர்கையும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளனர்.  மேற்கு பிராகரத்தில் வலம்புரி விநாயகர் பாலமுருகன் ஆகிய தனி சன்னதியின் மத்தியில் தமிழ் புலவரான ஒளவையார் ஒளவையாரம்மன் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.

    இசக்கி அம்மனைப் பற்றி பல புராணங்கள் உண்டு.  அவை அனைத்துமே அவளை தேவதாசி பரம்பரையில் வந்த கற்புகரசி என்றும், காதலித்தவனால் அல்லது கைப்பிடித்தவனால் கொலை செய்யப்பட்டவள் என்றும், பழிவாங்கும் சக்தியாக நீலியாக அலைந்ததாகவும், ஒளவையாரால் சாந்தப்படுத்தப்பட்டு கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் அபய ஹஸ்த தேவியாக ஆனதாகவே சொல்லுகின்றனர்.

    இசக்கி அல்லது இயக்கி என்ற சொல்லுக்கு பல்வேறுபட்ட பொருட்கள் சொல்லப்படுகிறது.  ஜெயின மதத்தில் சொல்லப்படும் யச்சினி என்ற வார்த்தையே இசக்கி என ஆனதாக சொல்வோரும் உண்டு.  இதற்கு ஆதாரமாக சிலப்பதிகாரத்தில் வரும் யட்சி சாந்த தேவதையை சுட்டிக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், பூங்கண் இயக்கி என்ற சீவக சிந்தாமணியில் சமண தெய்வமாக கருதப்படும் சாத்தனாரின் இரண்டு பணியாளர்களின் சங்கிலி பூதத்தார் ஒருவர்.  இசக்கி ஒருவர் என்ற வருவதனால் ஜெயின சமய தெய்வம் தான் இசக்கி என கொள்வாரும் உண்டு. 


     மேலும் பதினெட்டு கனங்களான தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், நாகர், பூதத்தார், வேதாளத்தார், தாராகணம், ஆகாசவாசி, போக பூமியார், இயக்கர், ராக்கதர், கந்தவர், சித்தர், சாரணர், வித்யாதாரர் ஆகியோர் வரிசையில் வரும் இயக்கர் என்ற வகையை சார்ந்த பெண் தெய்வமே இசக்கி என்று கருதுவாரும் உண்டு. 

    இவள் மனித பிறவியாகயிருந்து தெய்வ தன்மை பெற்றவளா? அல்லது தெய்வமாகவே மண்ணுக்கு இறங்கி வந்து அருள் மழை பொழியும் ஆதிசக்கியின் பல்வேறு அம்சங்களின் ஒன்றான மூர்த்தியா என்பது நமக்கு திட்டவட்டமாக தெரியவில்லை.  ஆனாலும் இசக்கி என்ற வார்த்தைக்கு இணங்கி வருகை தருபவள் என்ற பொருளை சூடாமணி நிகண்டு தருகிறது.  அதனால் தான் பக்தர்களின் குறைகளை இணங்கி வந்து தீர்த்து வைக்கும் கருமுகில் போல் காட்சி தருகிறாள். 

  இசக்கி அம்மனுக்கு பிடித்த நெய்வேத்தியம் பால் கொழுக்கட்டையும் பச்சரிசி சாதமுமே ஆகும்.  அன்போடு பக்தர்கள் தரும் காணிக்கை பொருட்களை கண்டிப்புடன் வசூல் செய்வதில் கில்லாடி இசக்கி அம்மன்.  நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு மறந்து விட்டாலோ கால தாமதமாகி விட்டாலோ கனவில் வந்து எச்சரிப்பாள்.

    பிள்ளை வரம் பெற்றவர்கள் மரத்தொட்டில் காணிக்கை செலுத்துவார்கள்.  பலவேறுபட்ட பிராத்தனைகளுக்கு மண் பொம்மைகளே காணிக்கையாக வைக்கபடுகிறது.  திருமணம் மற்றும் மங்கள விஷயங்களை முடித்து தரும் தாய்க்கு சிவந்த பட்டுபுடவை திருமேனியில் சாத்தப்படுகிறது.  உங்களுக்கு எந்த குறை இருந்தாலும் அவளிடம் வேண்டுதல் வையுங்கள்.  சந்தேகமே வேண்டாம் அது நிறைவேறுவது சத்தியம்.

பிப்ரவரி மாத கோகுலம் கதிர் இதழில் வெளியான குருஜியின் படைப்பு




Contact Form

Name

Email *

Message *