Store
  Store
  Store
  Store
  Store
  Store

காமராஜரின் பதவி ஆசை

அரசியல் வகுப்பு  1

  ங்கிங்கெனாதப்படி எங்கும் பிரகாசமாய் இருப்பது கடவுள் என பெரியவர்கள் சொல்வார்கள். இந்த தத்துவம் கடவுளுக்கு மட்டும் தான் பொருந்துமா? மற்ற யாருக்காவது எதற்காவது பொருந்தி வருமா? என்று கேட்டால் மிக ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு கடவுள் போலவே வேறு சில விஷயங்களும் எங்கும் வியாபித்துள்ளது புரிகிறது. அவற்றில் மிக முக்கியமானது அரசியலாகும். அரசியல் என்ற வார்த்தையை கேட்டாலே நம்மில் பலர் முகம் சுளிக்கிறார்கள். எந்த படுபாவிப் பயல் கண்டுபிடித்தானோ இந்த அரசியலை ஒவ்வொரு மனிதனையும் பாடாய்ப் படுத்த்துகிறது. நேற்று வரை தோளில் கைப்போட்டு பழகிய நண்பன் கூட அரசியலில் பிரிந்து போகிறான். நான் தான் பெரியவன் நீ சிறியவன் என்ற சண்டையில் மத்தியஸ்தம் செய்ய வரும் அரசியல் பல குடும்பங்களை நடுத்தெருவில் இழுத்து விட்டு இருக்கிறது. பல தொழிற் கூடங்களை இழுத்து மூடவும் வைத்திருக்கிறது.

அரசியலால் ஏற்படுகின்ற மோசங்களை கூட மன்னித்து விடலாம். மோசடி மன்னர்களாக இருக்கும் அரசியல்வாதிகளை மன்னிக்கவும் முடியாது. சகிக்கவும் முடியாது. கொலைகாரர்கள் வாழ்ந்த நாட்டில் கூட வாழலாம். அரசியல்வாதிகள் உள்ள பகுதியில் வாழவே முடியாது. இவன் கொள்ளைக்காரனா? அப்படி என்றால் அவன் அரசியல்வாதி. இவன் கொள்ளையடிப்பவனா?அப்படி என்றால் அவன் அரசியல்வாதி. இவன் ஊரை கொளுத்துபவனா அப்படியென்றால் அவன் அரசியல்வாதி. இவன் ஊரார் பணத்தில் உண்டு கொளுத்து கிடப்பவனா அப்படியென்றால் அவன் அரசியல்வாதி 


  வரவும் போக்குமாக இருக்கும் வழியை அடைபவன், வலிய வழுக்கிட்டு மானம் கெடுப்பவன் கற்றவர் நெஞ்சை கலங்க வைப்பவன், நம்பவைத்து கழுத்து அறுப்பவன், நட்டாற்றில் கையை நழுவ விட்டவன் கற்புடைய பெண்களின் மானம் கெடுப்பவன், பச்சை குழந்தையின் நெஞ்சை கிழிப்பவன் வேறு யாருமல்ல. அரசியல்வாதியே தான். இன்னும் ஒருபடி விளக்கமாக சொன்னால் பிணத்தின் வாயில் விழும் வாக்கரிசியை கூட கடத்தி விற்பவன் அரசியல்வாதியென பலர் நெருப்பை உமிழ்கிறார்கள்.

இன்றைய அரசியல்வாதிகளின் பலருடைய செயல்களை பார்த்தால் அரசியல்வாதிகளை வெறுப்பதும் ஒதுக்குவதும் சரியெனவே நமக்குப்படுகிறது. அரசியல்வாதிகள் அப்படி தீமையே வடிவாக இருக்கிறார்கள் என்றால் அரசியலும் அப்படித்தான் இருக்குமா? அதை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லையே என்று நாம் கேட்டால் பன்றி மட்டுமல்ல பன்றி வாழும் இடமும் அசுத்தமாகத்தான் இருக்கும். எனவே அரசியலும் அசுத்தம் தான். என்று நமக்கு விளக்கம் தருகிறார்கள். வழிப்பறி திருடனிடம் பாடம் கற்க போனால் அவன் அர்த்த சாஸ்திரத்தையா கற்று தருவான். திருடுவது எப்படி கன்னகோல் வைத்த இடத்தில் இருந்து தப்பி ஓடுவது எப்படி என்று தான் கற்றுத்தருவான். அதே போலத்தான் அரசியல்வாதிகள் நடத்தும் அரசியலும் இருக்கும் என்றும் நமக்கு தோன்றுகிறது.


 இப்படி எல்லா வகையிலும் தீமையான தீமையை மட்டுமே தரக்கூடியதுமான அரசியலை தூக்கி தூர எறிந்து விட்டு மனிதன் வாழ வேண்டியது தான். பாம்பை பிடித்த குரங்கை போல் விட்டு விடாமல் கெட்டியாக பிடித்து கொண்டு வருத்தப்பட்டு சாவது ஏன் என்று கேட்டால் மனிதன் என்பவன் அதிகாரம் செய்பவன், ஆசையுடையவன்.

 அரசியல் என்பதே மற்றவர்களின் மீது செலுத்தும் அதிகாரம் தான். என் ஒரு வார்த்தைக்கு சக மனிதன் கட்டுப்பட்டு நிற்பதும் எனக்கு பணிவிடைகள் செய்ய தயாராக இருப்பதும், அதிகார போதையை என் தலை மீது ஏற்றி விடுகிறது. அதனால் தான் மனிதன் அரசியலை விட மறுக்கிறான். அரசியல் மட்டும் இல்லையென்றால் மனித குலம் இன்னும் எவ்வளவோ சிறப்பாக வளர்ந்திருக்கும் என்கிறார்கள்.

உண்மையில் இந்த வாதங்கள் சரிதானா? அரசியல் என்பது மனிதனுக்கு தேவையற்ற சுமைதானா என்று சிந்தித்து பார்க்கும் போது மிகத் தெளிவான பதில் ஒன்று நமக்கு கிடைக்கிறது. கசப்பான சுவையை மனிதன் விரும்பவில்லை என்றாலும் அது அவனது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையில்லாத சுவையல்ல என்பது போல அரசியலும் கசப்பனாதாக கரடுமுரடானதாக இருந்தாலும் நிச்சயம் மனிதனுக்கு தேவை அது இல்லையென்றால் ஒரு நாளையை கூட மனிதனால் சுலபமாக நகர்த்த முடியாது என்பது உண்மை.


 நம்மூரில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து குப்பனோ, சுப்பனோ பதவிக்கு வரவில்லை என்றால் தெரு எப்படி சுத்தம் செய்யப்படும். வீதி விளக்குகள் எப்படி எறியும் நிச்சயம் எண்ணெயையும் சீப்பும் பார்க்காத மனித தலைமுடியை போல் ஊரும் கோரமாகி போகும். அட துடப்பம் எடுத்து பெருக்குவதற்கும், விளக்கு போடுவதற்கும் தானே ஆட்கள் வேண்டும். நல்ல சம்பளம் கொடுத்து ஒரு வேளைகாரனை வைத்துவிட்டால் போகிறது. இதற்கு போய் தேர்தல் தலைவர், உறுப்பினர் என்று தெண்டமாக உருவாக்குவது. ஏன்? என்று யாராவது கேட்டால் அது புத்திசாலித்தனமான கருத்தாக நிச்சயம் இராது.

வேலைக்கு ஆள் வைப்பது யார், வேலை வாங்குவது யார்? மிக முக்கியமாக வேலைக்காரனுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதற்கோ அதற்காக பணம் வசூல் செய்வதற்கோ யார் வருவார்கள். இதையெல்லாம் செய்வதற்கு யாராவது ஒருவரை உருவாக்கி தானே ஆக வேண்டும். அப்படி உருவாக்கும் போது தான் அரசியல் என்பது தானாக தோன்றுகிறது ஊர் விஷயத்தை கூட விட்டுவிடுவோம். ஒரு குடும்பம் திறம்பட நடக்க வேண்டுமென்றால் வழி நடத்தி செல்ல ஒரு தலைமை வேண்டும். நல்லதோ கெட்டதோ அந்த தலைமையின் உத்தரவுக்கு மற்றவர்கள் கீழ்படிய வேண்டும். இப்படிபட்ட குடும்பத்தால் தான் போட்டி மிகுந்த சமுதாயத்தில் பாதுகாப்போடு வாழ முடியும் 


நாம் ஆடைகள் இன்றி அம்மனமாக வனாந்திரத்திற்குள் திரிந்த போது வேட்டையாடி கிடைக்கும் பொருட்களை சமமாக பிரித்து கொடுக்க ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அந்த அமைப்பிற்கு தலைமையும் தேவையாயிற்று. ஒரு கூட்டத்தாரை இன்னொரு கூட்டத்தார் தாக்க வரும்போது பலமிகுந்த தலைமை இருந்தால் தான் சொந்த கூட்டம் பாதுகாக்கப்படும். ஆகவே தலைமைக்கு பலமும் தேவைப்பட்டது. பலத்தை உண்டாக்க அதிகாரதும் தேவைப்பட்டது. எனவே மனிதன் எப்போது கூட்டமாக வாழ ஆரம்பித்தானோ அப்போதே அரசாங்கம், அரசியல்வாதி, அரசியல் போன்றவைகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. அதிலிருந்து உருவானவைகள் தான் மன்னராட்சி, மக்களாட்சி, பொதுவுடைமை ஆட்சி, சர்வதிகார ஆட்சி என்பவைகள்.

இப்படி பலவாறாக சிந்திக்கின்ற போது அரசியல் என்பது இல்லையென்றால் மனித குலத்திற்கு வளர்ச்சி என்பது இல்லை. வாழ்;க்கை என்பதும் இல்லை என்பது புலனாகும், இது மட்டுமல்ல அரசியல் என்பதே வேண்டாம். அது இல்லாமல் என்னால் வாழ முடியும் என்று எந்த தனிமனிதனும் சொல்லிவிட்டு சகஜமாக வாழ்ந்து விட முடியாது. ஒரு பருப்பு சாம்பார் வைப்பதற்கு கூட அரசியல் இல்லாமல் ஆகாது. பஞ்சாப்பில் விளைக்கின்ற துவரப்பரும்பை பாஞ்சாலங்குறிச்சிக்கு கொண்டு வர வேண்டுமென்றால் அரசியல் வேண்டும் அது இல்லையென்றால் பருப்பிற்கு பதிலாக சுடுதண்ணீரை தான் சாதத்தில் ஊற்ற வேண்டும் மாதம் பிறந்தால் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை அரசாங்கம் போட்டால் தானே குடும்பத்தை நடத்த முடியும், எனவே அரசியல் வேண்டாம் என்று சொல்லி தப்பித்து கொள்ள முயற்சிப்பது கண் இருக்கும் போதே அதை மூடி கொண்டு வாழ்வதற்கு ஒப்பாகும்.  


அதேபோல அரசியல்வாதி என்றாலோ கெட்ட மதிப்புடைய குடிகேடர்கள் என நினைப்பது முற்றிலும் தவறானதாகும். காரணம் அரசியல்வாதி என்பவன் தனியான ஜென்மம் எடுத்து பிறப்பவர் அல்ல அவனும் நம்மைபோல சராசரி மனிதன் தான் உண்ணுவதும், உடுப்பதும், உறங்குவதும் நம்மை போல் தான் அவனுக்கும் நிகழ்கிறது என்பதை மறக்க கூடாது பிறகு அவன் மட்டும் எப்படி தவறுகளின் மொத்;த வடிவமாக திகழ்கிறான் என்று கேட்டால் அவன் கெட்டு போவதற்கு நாமே காரணமென்று சொல்ல வேண்டும். எப்போது ஒரு தனிமனிதன் தனது சுயநலத்திற்காக அரசாங்க இயந்திரத்தை வளைக்க முற்படுகிறானோ அப்போதே அரசாங்கத்தை நடத்துபவன் வளைய ஆரம்பிக்கிறான். சட்ட திட்டங்களை மீறி நடக்க பொதுஜனங்கள் விருபம்புவதினால் தான் அரசியல்வாதி லஞ்சம் பெற விரும்புகிறான்.

நாம் நினைப்பது போல அரசியல்வாதி என்பவன் முட்டாளாக, முரடனாக இருந்தால் அவனால் நீண்ட நாட்களுக்கு செயல்பட முடியாது அரசியல் பாடத்தின் இலக்கியம் அரசியல்வாதிக்கென்று சில லட்சணங்களை தருகிறது. ஒரு அரசியல்வாதி என்பவன் நாட்டினுடைய, உலகத்தினுடைய கடந்த கால வரலாற்றை முற்றிலும் தெரிந்தவான இருக்க வேண்டும். அப்படி தெரிந்திருந்தால் மட்டும் தான் அவனால் நிகழ்கால சவால்களையுமும், வருங்கால திட்டங்களையும் திறம்பட கையாள முடியும்.


  தன்னோடு இருப்பவர்களையும் தனக்கு வெகு தூரத்தில் இருப்பவர்களையும் துல்லியமாக கணக்கு போட்டு பார்க்கும் மனோதத்துவமும் அவன் அறிந்தவனாக இருக்க வேண்டும். மனிதன் என்பவன் எதை எப்போது செய்வான், எதற்காக எப்படி செயல்படுவான் என்பதை அறுதியிட்டு காண்பது கடினம். மனோதத்துவம் தெரிந்தால் ஓரளவு மனித இயல்புகளை கணித்து அதற்கு தகுந்தவாறு அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

 அதே போல அரசியல்வாதிக்கு புவியியல் அமைப்பும், வானியல் அமைப்பும் தெரிந்து இருக்க வேண்டும். அப்படி தெரிந்தால் தான் தேசத்தின் எந்த பகுதியில் எப்போது எது விளையும் எது அழியும் எத்தகைய இயற்கை சீற்றம் வரும். வறட்சி, வெள்ள பெருக்கு எப்போது ஏற்படும் என்று தெரிந்து அதற்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்.

அரசியல்வாதிக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அவனுக்கு எல்லா மதங்களை பற்றியும் எல்லா தரப்பு மக்களின் பண்பாடு பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும். அப்போது தான் எல்லோரையும் சமமாக அரவணைக்க முடியும் மிக முக்கியமாக பொருளாதார அறிவும் அவனுக்கு வேண்டும். எந்த ஒரு நலத்திட்டத்தையும் செய்ய துவங்குதற்கு முன்னால் அதற்கு தேவைப்படும் நிதி, நிதியை பெறும் முறை போன்றவவைகளும் பல துறை வரிகளை சீரமைத்து நாட்டின் அன்றாட செலவுகள் ஒழுங்க முறைப்படி நடத்த தெரிய பொருளாதாரத்தை பற்றிய அரிச்சுவடி கூட தெரியவில்லை என்றால் நிலைமை விபரீதமாகத் தான் இருக்கும். அடுத்ததாக இக்காட்டான காலகட்டங்களில் துணிச்சலுடவுடன் நடந்து கொள்ளும் மனப்பக்குவமும் வேண்டும். மன தைரியம் இல்லாமல் கோழைத்தனமாக செயல்பட்டால் மக்களின் நகைப்பிற்கு இடமாவது மட்டுமல்ல தேசத்தின் கௌரவத்தையே ஆட்டங்காண செய்யும் செயல்களை செய்ய தூண்டும்.


 ஒரு அரசியல்வாதியிடம் பாரபட்சம் இல்லாத சிந்தனை வேண்டும். அவர் தனிப்படட வாழ்க்ககையில் கணவனாக, தகப்பனாக, மகனாக இருந்தாலும் கூட அவற்றின் சாயல் எதுவும் பொது வாழ்வில் வீழ்ந்து விட கூடாது. ஓரம் சார்ந்து நடக்கும் மனநிலை ஒரு அரசியல் தலைவனிடம் தலைதூக்க ஆரம்பித்தால் பொது நலம் என்பது தேய்பிறையாகிவிடும். அதனால் ஒரு துறைவிக்கு இருக்கும் பற்றற்ற மனோநிலை அரசியல்வாதிக்கும் அவசியம்.

 இவற்றில் எதாவது ஒரு பண்பு கூட அரசியல்வாதியிடம் இல்லாமல் போகலாம். அதனால் பெரிய குறைகள் ஏற்பட போவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும் தட்டி கொட்டி சரிபடுத்திவிடலாம். ஆனால் தனிமனித ஒழுக்கம் என்பது அரசியல்வாதியிடம் இல்லாமல் போனால் எல்லாமே கெட்;டுவிடும். அற்பமான பலகீனங்களுக்கு ஆட்பட்டு பெரிய குற்றங்களை வாசல் திறந்து விட்டுவிடுவான். எனவே அரசியல்வாதியிடம் அறிவு இல்லையென்றாலும் ஒழுக்கம் என்பது நிச்சயம் இருக்க வேண்டும். மேலே சொன்ன இத்தனை பண்புகளும் ஒருங்கே பொருந்தியவன் தான் அரசியல்வாதியே தவிர மற்றவர்கள் அல்ல.

இதை படித்து வரும்போது ஒரு அரசியல்வாதியாக இருப்பதற்கு இத்தனை விஷயங்கள் தேவைப்படுகிறதா என்று நமக்கு தோன்றும். அது மட்டுல்ல இவ்வளவு விஷயமும் ஒருங்கே பொருந்திய ஒருவன் இருக்க முடியுமா? என்று கேட்டால்; நிச்சயம் இருக்க வேண்டும். இத்தனை பண்புகள் இருந்தால் தான் அவன் அரசியல்வாதி, இல்லையென்றால் அவன் வியாபாரி என்ற பதில் தான் கிடைக்கும். 

 ஒரு மனிதனின் அறிவு விசாலம் என்பது பலதுறையில் பரந்துபட்டு இருந்தால் தான் அவனால் மற்றவர்களை  வழிநடத்தி செல்ல இயலும். இல்லையென்றால் தானும் பள்ளத்தில் விழுந்து மற்றவர்களையும் பள்ளத்தில் வீழ்த்திய கதையாகி விடும். இன்னொரு எண்ணமும் நமக்கு வரும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள நமது அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும். அமெரிக்காவிலிருந்து அஜர்பைஜான் வரை உள்ள உலக அரசியல்வாதிகளை எடுத்து கொண்டால் கூட இத்தகைய பண்புகள் நிறைந்த ஒருவரும் தேறமாட்டார் அப்படியென்றால் இவைகள் பேசுவதற்கும் எழுதுவதங்குத்தானா என்று தோன்றும் அதற்க்கு ஒருவிதத்தில் ஆமாம் என்ற பதிலைதான் சொல்லத் தோன்றுகிறது.

அரசியல்வாதிகள் என்றாலே ஒட்டுமொத்த அயோக்கியர்கள் என்ற சிந்தனை மக்கள் மனதில் பலகாலமாக பதிந்து விட்டது. இனி அதை விலக்க முடியும் என்பது சாத்தியம் இல்லாதது. எந்த ஒரு மனிதனின் செயலையும் முழுமையாக சீர்தூக்கி பார்க்கும் போது அதில் குறைகளே இருக்காது நிறைகள் மட்டும் தான் இருக்கும் என்று சொல்ல இயலாது. கடவுளின் படைப்பில் கூட மிக சுலபமாக குற்றம் குறைகள் கண்டுபிடிக்கப்படும் போது மனிதன் எம்மாத்திரம்?


  எனவே அரசியல்வாதிகளின் இயல்புக்கு இலக்கணம் வகுத்து ஆராய்வது சரியான செயலாகாது என பலர் நினைக்கிறார்கள். பெருந்தலைவர்கள் என்றும், கறுப்பு காந்தி என்றும் அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜரின் அரசியல் நேர்மையை பற்றி நமக்கு நன்றாக தெரியும். தமிழகம் இன்று பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு காமராஜரின் தொலைநோக்கு பார்வைதான் காராணமென்றும் இரண்டு முறை இந்திய நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு தன்னை நாடி வந்த போதும் அதை ஒதுக்கி தள்ளிய தியாகி என்றும் நமக்கு தெரியும்

 ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பற்றிய விமர்சனங்கள் மாற்றுகட்சிகாரர்களால் பலவாறு செய்யப்பட்டது. அவைகள் அனைத்துமே பொய்யானவைகள் என்று இன்று நிருப்பிக்கப்பட்டுவிட்டாலும் காமராஜரை பற்றிய மிக முக்கியமான குற்றசாட்டு ஒன்று வரலாற்று ஆசிரியர்களால் இன்றும் சுட்டி காட்டப்படுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை நினைத்தாலே அதன் கூடவே கோஷ்டி அரசியலின் நினைவும் நமக்கு வந்துவிடும் காங்கிரஸ் கட்சியில் இன்று தமிழ்நாட்டில் தொண்டர்கள் இருக்கிறார்களோ இல்லையோ பல கோஷ்டிகளும் அதற்கு பல தலைவர்களும் இருக்கிறார்கள். இந்த கோஷ்டி அரசியலுக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை பிள்ளையார் சுழி போட்டவர்கள் மூதறிஞர் ராஜாஜியும், தியாகி சத்தியமூர்த்தியுமாகும். 


1940ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் பதவிகாலம் முடிந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை இருந்தது. இதற்கு முந்தைய கட்சி தேர்தலில் ராமசாமி ரெட்டியாரை எதிர்த்து போட்டியிட்டு தியாகி சத்தியமூர்த்தி தோல்வியை தழுவியிருந்தார். இருந்தாலும் சத்தியமூர்த்தி அவர்களுக்கு கட்சியில் தனது செல்வாக்கை தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் நேரடி தலையீடும் இல்லாமலும் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த குமாரசாமி காமராஜரை தனது சார்பு வேட்பாளராக களமிறக்கினார்.

சென்னை ராஜதானியில் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக்கியிருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருக்கு தியாகி சத்தியமூர்த்தியிடம் கொள்கை ரீதியான மோதல் இருந்து வந்ததினால் சத்தியமூர்த்தியின் செல்வாக்கை மறைமுகமாக மட்டுபடுத்த வேண்டும். என்ற விருப்பம் இருந்தது. எனவே சத்தியமூர்த்தியின் வேட்பாளருக்கு எதிராக தன்சார்பு வேட்பாளராக கோவை சி.பி.சுப்பையா என்பவரை களமிறக்கினார். இது தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக உருவான கோஷ்டி அரசியலாகும் அந்த கட்சி தேர்தலில் கர்மவீரர் காமராஜர் அவர்களே வெற்றி பெற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார்.

  காமராஜருக்கு முன்பு காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாட்டு தலைவராக எஸ்.காஸ்தூரிரங்க அய்யங்கார் மூதறிஞர் ராஜாஜி, சீனிவாச அய்யங்கார். சுப்ரமணிய சாஸ்திரி, பி.வரதராஜலு நாயுடு, சி.என்.முத்துரங்க முதலியார், ஒ.பி. ராமசாமி ரெட்டியர், ஈ.வே.ராமசாமி நாயக்கர் (தந்தை பெரியார்) போன்றோர்கள் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோருமே தலைமை பதவியில் ஒன்று, இரண்டு வருடங்கள் தான் செயலாற்றி இருக்கிறார்கள்.

 காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை வற்புறுத்தியும் கூட இவர்களில் சிலர் தொடர்ந்து பதவியில் இருக்க மறுத்து இருக்கிறார்கள.; ஆனால் 1940ல் தலைமை பதவியை ஏற்ற காமராஜர் 1954ல் வரை அதாவது 14வருடங்கள் காங்கிரஸ் தலைவர் பதவியில் அழுத்தமாக உட்கார்ந்து கொண்டார்.

 1954க்கு பிறகு வேறு தலைவர்கள் வந்தாலும் கூட அவர்கள் அனைவருமே காமராஜரின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களாகத்தான் இருந்தார்கள.; இந்த குற்றசாட்டிற்கு ஆயிரம் சாமாதனங்கள் சொல்லப்பட்டாலும் அவையெல்லாம் நியாயமானதாக தெரியவில்லை சுயநலமே இல்லாமல் ஆட்சி நடத்தியவர் என்ற பெயர் பெற்ற காமராஜரின் செயல்களிலேயே குற்றம் குறைகளை காணும் போது மற்ற தலைவர்கள் எம்மாத்திரம்? எனவே எல்லா லட்சணங்களும் பொருந்திய அரசியல்வாதிகள் கிடைப்பது அரிதிலும் அரிது.

அரசியலை நடத்துகின்றவர்களின் குறைதான் அரசியலின் குறையாக தெரிகிறதே தவிர அரசியலே குறையுடையதாகாது. அதனால் நல்லவர்கள் அரசியலை கண்டு ஒதுங்கி போக வேண்டாம் எதற்கு நமக்கு வம்பு என்று கண்மூடி இருக்கவும் வேண்டாம். இப்படியே பலகாலமாக நல்லவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கியிருப்பதினால் தான் அது சாக்கடையாக கிடக்கிறது.

எனவே வாருங்கள் மற்றவர்களை குறை சொல்வதை விட்டு விட்டு தைரியமாக கடவுளுக்கும் மனசாட்சிக்கும் கட்டுபட்டு அரசியலை தூய்மைப்படுத்த நாமும் களமிறங்கி பார்ப்போம். அதற்காக உலகத்தில் உள்ள எல்லா தரப்பு அரசியல் சிந்தனைகளை சிறிதளவுவாயினும் நாம் தெரிந்து கொண்டு நமக்கு புரிந்ததை மற்றவர்களுக்கும் சொல்லி வழிகாட்ட துவங்குவோம்.



Contact Form

Name

Email *

Message *