Store
  Store
  Store
  Store
  Store
  Store

நிஜமான அதிகாரம் யாருக்கு...?

அரசியல் வகுப்பு  2

    ழுத்தாளர் சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா என்ற நாவலை படிக்காத தமிழர்கள் குறைவு. அக்கதையில் ஒரு மனிதன் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும். எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். எப்போது குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும். மிக குறிப்பாக என்ன குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கம் தான் தீர்மானிக்கும் என்பது போன்ற விஷயங்கள் வரும் அதை படிக்கும் போது இப்படியெல்லாமா நடக்கும் என்று நமக்கு எண்ண தோன்றும். ஒரு தனி மனிதனுடைய சொந்த விஷத்தில் அரசாங்கமும் அரசியலும் இந்த அளவிற்கு தலையிட முடியுமா? என்ற சந்தேகமும் வரும்.

    உண்மையில் அரசியலால் அப்படி எல்லாம் நிச்சயமாக செய்ய முடியும். ஒரு முழு பைத்தியகாரன் நாட்டினுடைய சர்வதிகாரியாகி விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அவன் இன்று முதல் யாரும் பல் விளக்க கூடாது என்று சட்டம் போட்டுவிட்டால் வேறு வழியே இல்லை கள்ளசாரயம் காய்ச்சுவது போல் குத்து செடிக்குள் பதுங்கியிருந்து தான் பல் விளக்க வேண்டும்.


 இப்படி சர்வல்லமை பொருந்திய அரசியலுக்கு உயர்ந்த நெறிமுறைகளும், கொள்கை கோட்பாடுகளும் யாரும் வகுக்கவில்லையா அப்படி வகுக்காமல் விட்டால் ஆதிகால காட்டாச்சிதானே இன்று வரை தொடர்ந்து இருக்கும் என்று சிலர் கேட்கலாம். மனிதர்களில் மாணிக்கமான பல நல்ல அறிஞர்கள் பல சித்தாந்தங்களை அரசியலுக்காக உருவாக்கி இருக்கிறார்கள். அப்படி உருவாக்கி இருப்பதினால் தான் அக்கொள்கைகள் மனசாட்சிபடி  நடைமுறை படுத்தப்பட்டதினால் தான் தனிமனித ஆட்சியான மன்னராட்சி காலத்தில் கூட பல மாண்புகள் வளர்ந்து இருக்கின்றன. ஆயிரம் பின்னடைவுகள் இருந்தாலும் இன்றும் வளர்ந்து வருகிறது. இன்னும் சொல்லபோனால் வேட்டையாடி கிடைத்த பொருளை பகிர்ந்து கொடுக்க ஒரு தலைமை உருவான காலத்திலேயே அரசியல் நெறிமுறை என்பது தோன்றிவிட்டது எனலாம்.

    அரசியலில் நெறிமுறை, கொள்கை கோட்பாடுகள். சித்தாந்தங்கள் என்ற வார்த்தைகளை கேட்டவுடனேயே அவைகள் எல்லாம் இந்தியாவில் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. இங்கு தோன்றியது எல்லாம் யோகம், தானம், தவம் போன்ற ஆன்மிக விஷயங்கள் மட்டும் தான் என்று பலர் நினைக்கிறார்கள் கட்டுசாதம் கட்டி வழிநடக்க வழி தெரியாதவன் இந்தியன் இவன் பெற்றிருக்கும் அறிவு வளர்ச்சி எல்லாமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தவைகள் தான் சுயமாக ஒரு குண்டூசி செய்வதற்கு கூட வகையறியாத இந்தியன் விஞ்ஞான பூர்வமான அரசியலை எப்படி தெரிந்து வைத்திருப்பான் என்று பலர் கேலியும் பேசுகிறார்கள்.


     பொதுவாகவே இந்தியர்கள் தன்னை தானே குறைத்து மதிப்பீடு செய்வதில் வல்லவர்கள் நமது திருப்பூரில் தாயரான பனியனை ஜெர்மனியில் தயாரித்தது என்று சீல் குத்திவிட்டால் போதும். கண்ணை மூடிக் கொண்டு எவ்வளவு விலை சொன்னாலும் வாங்கி விடுவார்கள். அவ்வளவு வெளிநாட்டு மோகம் நம்பவர்களுக்கு நமது இந்த சின்ன புத்தியை சாதமாக பயன்படுத்தி கொள்ளும் வெள்ளைக்காரர்களும், பொருளாதாரம், பொறியியல், வேதியியல், அறிவியல், அரசியல் இப்படி எல்லாமே ஐரோப்பியர்கள் கொடுத்த கொடைகள் தான் ஆசிய நாடுகளுக்கு இந்த வாசனையே என்னவென்று தெரியாது என பெருமை பேசிக்கொண்டு அலைகிறார்கள்.

    உலகில் தொன்மையான சிறப்பு மிக்க நாகரிகங்களில் சிந்து சமவெளி நாகரிகமும் ஒன்று என நமக்கு தெரியும். சிந்து சமவெளி மக்கள் போற்றத்தக்க பண்பாட்டு செறிவுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அரசியலும், அரசாங்க நடைமுறையும் தெரியாமலா இருந்திருக்கும். ஒழுங்கான வீதிகள், வீடுகள் நகர நிர்மானங்கள், சிந்து சமவெளியில் வளர்ந்து இருக்கிறது என்றால் மக்கள் அமைதியுடனும் குழப்பமின்றியும் வாழ்ந்து இருக்க வேண்டும். அப்படி வாழ்க்கை முறை அமைவதற்கு தேர்ச்சி மிக்க நிர்வாகம் இல்லாமல் எதுவும் நடக்காது.


  மிகவும் பிற்காலத்தில் தான் ஐரோப்பா மக்கள் நாகரீகம் பெற்றார்கள் அத்தோடு கூட தங்களது சுக வாழ்க்கைக்கு மற்ற நாடுகளை ராணுவ ரீதியாலும் வியாபார நோக்கிலும் அடிமைபடுத்தினார்கள் அடிமைப்படுத்தப்பட்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தொன்று தொட்டு நடைமுறையில் இருந்த பண்பாடுகளை சிதைத்து தங்களது கருத்துக்களை பிராதனப்படுத்தி நடைமுறைப்படுத்தினர். இதனாலேயே பல நாடுகள் தங்களது சொந்த அடையாளங்களை மறந்து போயின அறிவு சம்பந்தப்பட்ட அனைத்துமே மேலைநாடுகளில் இருந்து வந்தவைகள் தான் என நம்பவும் ஆரமித்து விட்டன. அந்த  நம்பிக்கை இன்றும் கூட தொடர்கிறது.

    பழங்கால பாரத சிந்தனையாளர்கள் பொருளாதாரம் பற்றியும் சமூக அமைப்புகளில் செயல்முறைகள் பற்றியும் மானுட உறவுகளை, உணர்வுகளை தேசத்தினுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையிலான அரசியலை பற்றியும் மிக ஆழ்ந்து சிந்தித்து இருக்கிறார்கள். நமது தேசம் எங்கும் காண கிடைக்கின்ற பழங்கால நூல்கள், பல இதற்கு தக்க சான்றுகளாக திகழ்கிறது.

வேதங்களும், ஆகமங்களும், உபநிசதங்களும் பரலோக வாழ்க்கைகுறிய வழிபாடுகள், மந்திரங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் பற்றி மட்டும் பேசவில்லை. சமூக பொருளாதார அரசியல் சிந்தனைகளையும் அவற்றில் காண முடிகிறது. ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் கதை மாந்தர்களை பற்றி பேசும் போதும் பாத்திரங்களின் பல்வேறு உரையாடல்களிலும் மிகத் தெளிவான அரசியல் சிந்தனை வெளிகாட்டப்படுகிறது. அவைகளையெல்லாம் பல இடங்களில் இருந்து சேகரித்து தொகுத்து ஆய்வு செய்யும் போது அப்போதைய சிந்தனையாளர்களும் அரசியல் தலைவர்களும் நாட்டு மக்களை வெறும் கூட்டமாக பார்க்கவில்லை அறிவும் உணர்வும் கலந்த உயிர் தொகுப்பாக கண்டு இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.


     உணர்வுடைய மக்கள் கூட்டம் தர்மம் என்ற ஒழுக்கத்திற்கு உட்பட்டு இயங்குகிறது. இந்த தர்மம் இயங்காத இடத்தில் குழப்பங்கள் மட்டுமே எஞ்சி நிற்கும் என நமது முன்னோர்கள் கருதுகிறார்கள். அவர்கள் தர்மம் என்பது ஈகை, கொடை, நற்செயல் போன்றவைகள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல அவைகளையும் தாண்டியுள்ள இயற்கையின் அனைத்து கூறுகளிலும் ஒழுங்கு அல்லது ரீதமாக செயல்படுவதாகவும் சொன்னார்கள்.

மார்கழி மாதம் என்றால் பனிபெய்ய வேண்டும். பங்குனி  மாதமென்றால் வெய்யில் அடிக்க வேண்டும் ஐப்பசி மாதம் என்றால் மழை வர வேண்டும். இது தான் இயற்கையின் தர்மமாகும். இத்தகைய இயற்கையின் ஒழுங்கு மாறி அமைந்தால் வறட்சியும் இயற்கை சீற்றமும் தான் ஊழி தாண்டவமாடும். இயற்கை தர்மம் கெடக் கூடாது என்பது போல மனித தர்மமும் அதாவது மனித ஒழுங்கும் கெடக் கூடாது என அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள் .

    மனிதனாக பிறந்த எவனுமே அரசனாகவோ தலைவனாகவே மாற முயற்ச்சிக்கலாம் அதற்காக எல்லாருமே சிம்மாசனத்தில் அமர முயற்சித்தால் நாடு என்னாகும், நிர்வாகம் என்னவாகும் எல்லாமே குட்டிசுவராக போய்விடும். இன்றைக்கு நம் நாட்டில் நடைபெற்று கொண்டிருப்பது அத்தகைய குழப்பம் தான் ரேனால்ட் ரீகனும், எம்.ஜீ.ராமசந்திரனும் திரைப்பட நடிகர்களாக இருந்து அரசாங்க தலைவர்கள் ஆனார்கள் என்பதற்காக கோடாம்பாக்கத்தில் ஒட்டு திண்ணையில் உட்கார்ந்து துண்டுபீடி அடிக்கும் துணை நடிகர் கூட செங்கோட்டையில் கொடியேற்ற போட்டி போடுகிறான்.


  தெரு  கவுன்சிலிராக தேர்ந்தெடுக்கப் பட்டவன் கூட எனது அடுத்த இலக்கு பிரதம மந்திரி பதவி தான் என்கிறான். நமது பிரதமர்களோ தங்களை நாட்டு தலைவர்கள் என்பதை மறந்து கட்சி தலைவர் வீட்டில் கணக்கு பிள்ளை வேலை பார்க்கிறார்கள். தேசத்தலைவர்களாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டியவர்கள் குடும்பதலைவர்களாக மட்டுமே வலம் வருகிறார்கள். இது தான் மனிதர்கள் தங்களது சுயதர்மத்தை இழந்து நிற்கும் பரிதாப கோலமாகும்.

 ஒரு குடிமகன் தனது பொறுப்புணர்ந்து நடந்து கொண்டால் ஒரு அரசன் தனது கடமைகளை சரிவர செய்து கொண்டே வந்தால் மனித தர்மம் கெடாது. நாடும் பின்னோக்கி செல்லாது. அதனால் தான் மாறாத இயற்கையின் சட்டம் போல மனிதனின் வாழ்க்கை முறையும் ஒரு ஒழுக்கத்திற்கு கட்டுபட்டு அமைய வேண்டும் என இந்திய மேதைகள் வலியுறுத்தினார்கள்.

    மற்ற நாடுகளில் ஒரு நல்ல அல்லது கெட்ட கருத்துக்களை சொல்வதென்றால் அதற்கென்று தனி களம் அமைத்து அறிஞர்கள் பேசுவார்கள். ஆனால் இந்தியர்களின் முறை அதுவல்ல, அரசியல், பொருளியியல், சமூகவியல், அறிவியல் போன்ற கருத்துக்களையெல்லாம் மதத்தின் வழியாகவும், தத்துவத்தின் வழியாகவும் இலக்கத்தியத்தின் வழியாகவும் வெளிப்படுத்துவதே முறையாக இருந்தது. உதாரணத்திற்கு சமய சார்புடைய இலக்கியங்களான ஹரிவம்சம், விஷ்ணுபுராணம், பாகவதம் போன்ற நூல்களில் கூட அரசியல் கருத்துக்கள் ஆங்காங்கே சொல்லப்பட்டிருப்பதை காணலாம். இதனாலேயே அக்கால அரசியல் முறையை தெரிந்து கொள்வது மிக கடினமாக இருக்கிறது. ஆனால் முதல் முறையாக அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க கூடிய வெளிப்படுத்த கூடிய நூலாக அர்த்த சாஸ்திரம் நமக்கு கிடைக்கிறது.


     அர்த்த சாஸ்திரம் என்ற நூலை பற்றி நம்மில் பலருக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் அந்த நூலை எழுதிய சாணக்கியனை பற்றி தெரியாதவர்கள் மிக குறைவு. புத்திசாலித்தனமான காரியங்களை செய்து வெற்றி பெறுகின்ற ஒருவனை இவன் பெரிய சாணக்கியன் என்று போற்றுவதும் ஏடாகூடமாக எதையாவது செய்து மாட்டிக் கொள்ளும் அதிமேதாவிகளை பெரிய சாணக்கியன் என்று நினைப்போ என்று தூற்றுவதையும் நாள் தோறும் கேட்டு வருகிறோம். தினசரி எதாவது ஒரு வகையில் சாணக்கியன் என்ற சொல்லை இந்தியாவின் எந்த மூலையில் வேண்டுமென்றாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும் அந்தளவுக்கு அவர் பிரபலம்.

    சாணக்கியருக்கு விஷ்ணு குப்தர் கௌடில்யர் என்ற வேறு இருபெயர்களும் உண்டு, இவர் குடலர் என்ற ரிஷியின் வழியில் வந்தவரானதால் கௌடில்யர் என்ற பெயர் வந்ததாகவும், சணகம் என்ற நாட்டில் பிறந்ததினால் சாண்கியர் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், கடவுள் விஷ்ணுவால் காப்பற்றப்பட்டதினால் விஷ்ணு குப்தர் என்று அழைக்கப்பட்டதாகவும் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள.; ஒரு மனிதன் பிரபலமாக இருந்தாலே அவனைப் பற்றிய குழப்பமான பல தகவல்கள் நாட்டில் பரப்பட்டுவிடும். இந்த நியதில் இருந்து எந்த கால மனிதனும் சுலபமாக தப்பிவிட முடியாது. அதனாலேயே சாணக்கியரைப் பற்றிய பல குழப்பங்கள் ஆயிரகணக்கான ஆண்டுகளாக தொடர்கிறது.

     சாணக்கியர் வட இந்தியாவை சேர்ந்தவர் இல்லை. தென்னிந்தியாவில் குறிப்பாக சிதம்பரத்திலுள்ள தீட்சிதர் மரபை சேர்ந்தவர்கள் என்று ஒரு சாரரும். ஆந்திர பகுதியை சேர்ந்தவர் என்று மறு சாரரும் தொன்று தொட்டு விவாதித்து வருகிறார்கள். இன்னும் விடை தான் கிடைத்த பாடில்லை.

 வேறு சிலர் சாணக்கியர் என்ற ஒரு நபரே கிடையாது, சாணக்கியம் என்பது ஒரு குழுதான் அக்காலத்தில் இருந்தது. அந்த குழுவே அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதியது என்றும் சொல்கிறார்கள். இந்த குழப்பங்களை ஒதுக்கிவிட்டு அடுத்த கட்டத்திற்கு வந்தோம் என்றால் அர்த்த சாஸ்திரம் எழுதப்பட்டது எந்த காலத்தில் என்ற கேள்வி நம் முன்னால் நிற்கிறது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் இலக்கிய மொழி நடையை வைத்து ஆராயும் போது அது மனு சாஸ்திரத்திற்கு முற்பட்டது அதனால் அது கி.மு நாலாம் நூற்றாண்டை சேர்ந்ததாகத் தான் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். 

பொதுவாகவே இவைகளை பார்க்கும் போது நீக்கவே முடியாத நூல்கண்டு சிக்கலாகத் தான் இது நமக்கு படுகிறது. நாம் சாணக்கியரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய போவதில்லை. அவர் எழுதிய புத்தகத்திலுள்ள கருத்துக்களை தான் சிந்திக்க போகிறோம். எனவே அவரை பற்றி பேசுவதை இத்தோடு நிறுத்திகொள்வோம்.

     உயிர் தொகுதியானது விரிவடையவும் வளமடையவும் ஆண் பெண் என்ற இரண்டு பிரிவுகள் தேவை. அதாவது உலகத்தின் இரண்டு கண்கள் ஆணும், பெண்ணும் என்று சொல்லலாம், இதில் ஒன்றிருந்து மற்றொன்று இல்லையென்றால் எந்த இயக்கமும் நடைபெறாது. அதே போல மானிட சமுதாயத்தின் இரண்டு கண்களாக இருப்பது அரசியலும் பொருளியியலுமாகும். இந்த இரண்டு விஷயங்களை பற்றி அர்த்தசாஸ்திரம் விரிவாகவும், தெரிவாகவும் பேசுகிறது.

 இன்றைய தேதிவரை உலகத்தில் தோன்றியுள்ள அரசியலில் நூல்கள் அனைத்தையும் விட அர்த்த சாஸ்திரம் ஒரு படி மேலான தரத்துடனேயே நிற்கிறது. ஆட்சி செய்வதை பற்றிய வழிமுறைகளை அர்த்த சாஸ்திரம் நுணுக்கமாக பேசுவது போல வேறு எந்த நூலும் பேசவில்லை அல்லது அந்த நூலாசிரியர்களுக்கு சாணக்கியருக்கு இருந்தது போல பரந்த ஞானம் இல்லை என்றே சொல்லலாம்.

 இன்று வரை மனித சிந்தனையில் தெளிவுப்படுத்ததி கொள்ள முடியாத அரசியல் கூறுகள் பலவற்றை சாணக்கியர் மிக லாவாகமாக விளக்குகிறார். பல ஐரோப்பிய அரசியல் அறிஞர்கள் கிரேக்க, ரோமனிய, அரசியல் சிந்தனைகளை வானளவ போற்றி புகழ்கிறார்கள். ஆனால் அந்த சிந்தனைகள் எதுவும் அர்த்தசாஸ்திரத்திற்கு முன்னால் மண்டியிட கூட தகுதியற்றதாகும். இந்தியனாக பிறந்த ஒரே காரணத்திற்காக சாணக்கியரை உலக மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.


     அர்த்த சாஸ்திரம் என்று அழைக்கப்படும் கௌடில்யம் அதிகரணங்கள் என்ற பதினைந்து பகுதிகளை கொண்டதாகவும் பிரகரனங்கள் என்ற நூத்தி என்பது உட்பிரிவுகளை கொண்டதாகவும் இருக்கிறது. தந்திர பகுதி எனப்படும் முதல் ஐந்து அதிகரணங்களில் 95 உட்பிரிவுகள் உள்ளன. இதில் ஒரு அரசனின் ஒழுக்கம் அவனது கல்வி தகுதி பல்துறை சார்ந்த பயிற்சிகள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்பது பற்றி விரிவாக பேசப்படுகிறது. மேலும் அரசாங்கத்தின் நிர்வாக அமைப்பு, நிதி ஆதாரம், தலைமை நிர்வாகிகள் பற்றியும் நாட்டின் சட்டம் நீதிதுறை குற்றவியல் லஞ்சம் அரசத்துரோகம் என்பனவும் தலைமை செயலகம் எப்படி அமைய வேண்டும் என்பதை பற்றியும் விளக்கமாக சொல்லப்படுகிறது.   
   
ஆவாபப் பகுதி என்ற ஆறு முதல் ஒன்பது வரையுள்ள பகுதிகளில் 84 உட்பிரிவுகள் உள்ளன. ஆறு மற்றும் ஏழாவது அதிகரணங்கள் அரசாங்கத்தின் அடிப்படை பண்புகள் ஏழு அங்கங்களாகவும் அயல்நாட்டு அரசுகளோடு கொள்ளும் ராஜதந்திரிர உறவுகள் ஆறு அங்கங்களாகவும் நுணுக்கமாக விவரிக்கப்படுகிறது.

 இது தவிர புவியியல் மாறுபாடுகள் வருடந்தோறும் நடக்கும் பஞ்சம், தொற்றுநோய் போன்றவைகளை பற்றியும் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களையும் இவைகளால் ஏற்படும் பொருள் மற்றும் உயிர் இழப்புகள் அரசாங்க நிர்வாகத்தை தாக்காத வண்ணம் பாதுகாப்பது பற்றியும் படம் பிடித்து காட்டுகிறது.


  எட்டில் இருந்து பத்து வரையுள்ள பகுதிகளில் யுத்த தந்திரம் யுத்த சிக்கல் போர்கருவிகள், போர் பயிற்சி பற்றியும் பேசுகின்ற. பதினொன்றாவது பகுதி பொருளாதாரம் மற்றும் அரசியல் சார்ந்த நிறுவனங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை பற்றி விவரிக்கிறது. 11,12,13 ஆகிய பகுதிகளில் படைபலம், படை நடமாட்டம் உளவு அமைப்பு ஆகியவற்றை நிர்வகிப்பதை பற்றி பேசுகிறது. 14வது பகுதி வெளிநாடுகளால் ஏற்படும் சீர்கேடுகளை புணரமைக்கவும், பகைநாடுகளை அழிப்பது பற்றியும் விளக்கமாகவும், விரிவாகவும் எடுத்துரைக்கிறது.

    கடைசி பகுதியான 15வது பகுதி மிகவும் பாராட்டுதலுக்குரிய பகுதியாகும். அறிவுத்துறை சார்ந்த ஒரு நூல் எழுதபடும் போது அதில் பலவிதமான புதிய வகை சொல்லாடல்களை பிரயோகித்து இருப்பார்கள் அச்சொற்களை நூலாசிரியர் என்ன பொருளில் பார்க்கிறார் அதன்  மூலம் என்ன பொருளை சொல்லி வருகிறார் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள நூலின் இறுதி பகுதியில் தருவார்கள். இதற்கு கலைச்சொல் விளக்க அதிகாரம் என்பது பெயர்

இந்த நடைமுறைக்கு உலகம் முழுவதும் இன்று இருந்து வருகிறது. இந்த நடைமுறைக்கு வழிகோலியது அதாவது பிள்ளையார் சுழி போட்டது அர்த்த சாஸ்திரத்தின் இந்த 15வது பகுதிதான். இதில் முப்பத்தி இரண்டு வகையான கலைச்சொற்கள் பொருள் விளக்கத்துடன் தருகிறது. அதுமட்டுமல்ல நூலின் பல இடங்களில் ஆசிரியர் சில வார்த்தைகளை சுருக்கமாக பயன்படுத்துகிறார். அதன் விரிவாக்கத்தையும் இந்த பகுதியில் காண முடிகிறது.     ஒரு நல்ல அரசாங்கம் என்பது அரசன் அமைச்சரவை, பொருளாதாரம், நட்புறவு, ராணுவம், மக்கள், பாதுகாப்பு ஆகிய ஏழு அம்சங்களை முரண்பாடின்றி ஒருங்கிணைத்து செய்யபடுவதாகும். சமையல் செய்வதை  எப்படி புத்தகம் படித்து செய்ய முடியாதோ அதே போலவே ஆட்சி கலையை நூலறிவால் பெற்றுவிட முடியாது. முறைபடுத்தப்பட்ட நேர்முக பயிற்சியும் அனுபவமும் நாட்டை ஆள்வதற்கு அவசியமாகும்

 அதற்காக இவை இரண்டும் மட்டும் இருந்துவிட்டால் போதும் மற்றவைகள் தேவையில்லை என்று நினைப்பவன் சிறந்த தலைவனாக இருக்க முடியாது. அனுபவத்தாலும் பயிற்சியாலும் பெற்ற திறமையை நூலறிவால் மட்டுமே கூர்மைப்படுத்தி கொள்ள முடியும் எனவே அரசு தலைவனுக்கு அரசாங்க உறுப்புகளான மேலே சொன்ன ஏழு வகைகளிலும் அனுபவ அறிவும் நூலறிவும் தேவை என சாணக்கியர் நம்புகிறார்.

    அரசின் தலைவனாக இருப்பவன் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் அவன் அமைச்சர்கள் தொடங்கி மக்கள் வரையிலும் உள்ள நாட்டின் அங்கங்களோடு சேர்ந்து இயங்க கூடியவனே தவிர தனித்து இயங்க கூடாதவன். நாட்டின் அங்கங்கள் எல்லாவற்றையும் சமநோக்கில் பார்த்தறியாத அரச தலைமையால் நாடு அழிவு பாதைக்குத் தான் செல்லும் என்று அவர் அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்.


     ஜனநாயக இந்தியாவில் வாரிசு அரசியலை நடைமுறையில்; கொண்டு வந்தது அல்லது கொண்டு வர முயற்சித்தது திருமதி. இந்திராகாந்தி அம்மையார்தான் பண்டிட் ஜவகர்லால் நேரு கூட தனக்கு பின்னால் தனது குடும்பத்தினர் அரசு பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று விரும்பியதில்லை. தனது மகளான இந்திராகாந்தி பொது அறிவை பெற வேண்டும். உறுதியான மனம் படைத்த பெண்மணியாக வர வேண்டும் என்று ஒரு தந்தையின் நிஜமான ஆசை மட்டுமே அவருக்கு இருந்தது.

ஆனால் இந்திராகாந்தி தனது மகன்களான சஞ்சய்காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரை அரசியலுக்கு கொண்டு வர எண்ணியதை எந்த சூழலிலும் நேருவின் எண்ணத்தோடு ஒப்பிட முடியாது. இந்திரா அம்மையாரின் இத்தகைய தவறாக விருப்பங்களால் தான் போதிய பக்குவம் இல்லாத ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி, போன்றோர்கள் காங்கிரஸ் கட்சியை படுபாதாளத்திற்கு தள்ளும் நிலை ஏற்பட்;டது. இன்றும் ராகுல்காந்தியால் அந்த திருப்பணி இனிதே நடைபெற்று கொண்டிருக்கிறது.

    ஆரம்ப காலங்களில் இந்திரா காந்தியின் வாரிசு அரசியல் முறையை மிக கடுமையாக நாடு முழுவதும் பல தலைவர்கள் எதிர்த்தார்கள் அப்படி எதிர்த்த பலரில் ஆச்சர்யப்பட வேண்டாம் கலைஞர் மு.கருணாநிதி அவர்களும் ஒருவர் திராவிட கழகத்தில் இருந்து அறிஞர் அண்ணா வெளியேறியதற்கே மிக முக்கிய காரணம் வாரிசு தகவாறு தான். நியாயப்படி பெரியாருக்கு பிறகு திராவிட கழகத்தின் அனைத்து பொறுப்;புகளும் அண்ணாவுக்கு தான் வந்திருக்க வேண்டும். ஆனால் பெரியார் அதை அவருக்கு தர பிரியப்படாமல் திருமதி.மணியம்மையாருக்கு கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டார்.


  கொள்கை, சித்தாந்தம் என்று ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் வாரிசு தகராறு தான் திராவிட முன்னேற்ற கழகம் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தது. வாரிசு அரசியலின் கொடுமையை நேருக்கு நேராக அனுபவித்தவர்கள் தி.மு.கழகத்தினர் ஆனால் அதே தவறை ஸ்டாலின் அரசியல் நுழைப்பால் கருணாநிதி செய்தார் இன்று அதன் விளைவுகள் அழகிரி, கனிமொழி,தயாநிதி என்று விஸ்வரூபம் எடுத்து தி.மு.க. என்ற கப்பலை மூழ்கடித்து கொண்டிருக்கிறது.

    நமது அரசியல் தலைவர்களுக்கு தங்களது வாரிசுகளை அரியணையில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை புதியதாக வந்தல்ல இது வரை உலகத்தில் இல்லாத நடைமுறையும் அல்ல ஆதிகால இந்திய அரசியலில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பெரும் பகுதியில் நடைமுறையில் இருந்த அரசியல் முறை வாரிசு அரசியல் தான், அதனால் தான் சாணக்கியர் முடியாட்சியை சிறப்பித்து பேசுகிறார்.

 மன்னராட்சி முறையின் மாண்புகளை வளர்பதற்கும் பாதுகாப்பதற்கும் பல வழிமுறைகளையும் கூறுகிறார். அவர் அரசன் என்பவன் வரம்பற்ற அதிகாரம் படைத்தவன் என்றாலும் மிக மிக்கியமான காரியங்களில் ஈடுபடுவதற்கு முன்பு தனது அமைச்சர்கள் நாட்டின் சமய தலைவர்கள் துறை சார்ந்த அறிஞர்கள் ராணுவ நிபுணர்கள் சர்வதேச தூதர்கள் மற்றும் உளவாளிகளை கலந்து ஆலோசித்து பிறகே முடிவுகளை செயல்படுத்த வேண்டும் என்கிறார்.


  இந்த முறை சாணக்கியர் எழுதிய ஏடுகளில் மட்டுமே தங்கி பரண் மீது சித்தாந்த கருவூலமாக உறங்கவில்லை. நாட்டு அரசியலின் நடைமுறையிலும் பல சமயங்களில் கைவிட படாமல் பின்பற்றப்பட்டது. அதனால் தான் மற்ற நாடுகளின் அரசர்கள் தான் தோன்றி தனமாக நடந்ததை போல இந்திய சுதேசிய மன்னர்கள் பலர் நடந்து கொள்ளவில்லை.

    அரசின் அதிகாரம் குறைவில்லாமல் நிறைவாக இருந்தாலும் கூட அதிகார பரவல் என்பது சரியான முறையில் இருந்தால் தான் ஆட்சிகலை என்பது சிறப்புடையதாக இருக்கும். இன்றைய பிராந்திய கட்சிகளாக இருக்கட்டும், தேசிய கட்சிகளாக இருக்கட்டும,; அவற்றில் அதிகார பரவல் முறை என்பது பெயரளவிலேயே இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், பாரதிய ஜனதா கட்சி ஆகிய இருபெரும் கட்சிகளில் மட்டும் தான் உட்கட்சி அதிகார பரவல் என்பது ஒரளவு ஆரோக்கியமாக இருக்கிறது. மற்ற கட்சிகளில் பொதுகுழு, செயற்குழு என்று பல குழுக்கள் பெயரளவில் இருக்கிறது தவிர அவைகளில் எவற்றுக்கும்  அதிகாரம் கிடையாது உண்மையான அதிகாரம் கட்சி தலைமையின் காலாடியிலேயே கிடக்கிறது.

உதாரணத்திற்கு பிராந்திய கட்சியான அ.தி.மு.காவை எடுத்து கொள்வோம் அதில் அந்த குழு, இந்த குழு, அந்த பேரவை, இந்த பேரவை என்று பல அதிகார மட்டங்கள் சொல்லப்படுகின்றன. அவைகள் செயல்படுவதாகவும் வெளியில் ஒரு மாயை இருக்கிறது. ஆனால் உண்மையான அதிகாரம் செல்வி ஜெ.ஜெயலலிதா விடமே (அப்படி சொல்ல கூட முடியாது, அவரையும் ஆட்டுவிக்கும் அதிகார பீடம் சமையல் கட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது நாம் அதிகாரபூர்வமான விஷயங்களை மட்டும் பார்ப்பதினால் இப்படி எடுத்துக்கொள்வோம்) மண்டியிட்டு கிடக்கிறது என்பதை விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் சோனியாவின் கண்ணசைவிலும் தி.மு.காவின் அதிகாரம் கலைஞர் குடும்பத்தாரிடமும் கிடப்பது ஊரறிந்த ரகசியம் இப்படி அதிகாரம் என்பது ஒரே இடத்தில் குவிந்து கிடந்தால் மக்கள் பணி என்பதை சிறப்பாக செய்ய முடியாது என்பதை விட செய்யவே முடியாது என்பது தான் உண்மையாகும்.     ஆதனால் தான் சாணக்கியர் வரம்பற்ற அதிகாரியாக அரசன் இருந்தாலும் பலரின் ஆலாசனைக்கு பிறகே செயலில் இறங்க வேண்டும் என்கிறார். ஒரு சிறப்பான ஆட்சி நடைபெற வேண்டுமென்றால் சட்டங்கள் உறுதி, சமுதாய ஒழுங்கு மிக கடுமையான நடத்தை விதிமுறைகள் மிகவும் அவசியம்

பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள் பிசாகாமல் நடைமுறைபடுத்துவதை அரசன் தீவிரமாக கவனிக்க வேண்டும். அப்படி கவனித்தால் தான் அதாவது அன்றாட பிரச்சனைகளை உடனுக்குடன் களைந்தால்தான் ஒரு அரசனது செயல் துடிப்பு உள்ளதாக இருக்கும் அரண்மனையின் அந்த புறத்தில் நடக்கும் ரகசியங்களையும், நாட்டின் கடைசி எல்லையில் நடக்கும் ரகசியங்களையும்  தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் அரசனால் மட்டும் தான் சிறப்பான ஆட்சியை தர முடியும்.

அதாவது எல்லாவற்றை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள நம்பிக்கை மிகுந்த துறை சார்ந்த அமைச்சர்கள், தலைவர்கள், தலைமை செயலர்கள், ஓற்றர்கள் ஒரு அரசனுக்கு தேவை என்பதோடு அவர்கள் சுதந்திரமாக சட்டத்திற்கு உட்பட்டு சில முடிவுகளை எடுக்ககூடிய அதிகாரம் படைத்தவர்களாகவும் வைத்து கொள்ள வேண்டும் என சாணக்கியர் கருதுகிறார்.

அதிகாரம் கை நழுவி போவதை அனுமதிக்காத மனோபாவம் எப்படி அவசியமானதோ அதே போல நாட்டின் பாதுகாப்பிலும் சதாசர்வகாலமும் மிக உன்னிப்பான கண்காணிப்பு செலுத்த வேண்டும் அண்டைய நாடுகளில் உள் மற்றும் வெளி விவகாரங்கள் அரசு தலைவர்களின் மாற கூடிய மன இயல்புகள் அயல்நாட்டினர்  நடமாற்றம் என அனைத்திலுமே அரசன் விழிப்போடு இருக்க வேண்டும் என சாணக்கியர் சொல்கிறார்.

    தன் பதவியை காப்பாற்றி கொள்ளுதல் அயல்நாட்டு, அச்சுறுத்தலை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றில் செலுத்தும் கவனத்தை விட பத்துமடங்கு கவனம் மக்கள் நலப்பணியில் அரசன் செலுத்த வேண்டும் என்கிறார். தலைமை பொறுப்பில் இருப்பவன் அறிவுடையவனாக இருக்கலாம், ஆற்றல் பொருந்தியவனாகவும் இருக்கலாம் ஆனால் உண்மையான சேவை மனபான்மை இல்லாமல் ஆட்சி அதிகாரம் செலுத்த விரும்பும் எவனும் நல்லாட்சியை தர முடியாது என்பதை விட நிலையான ஆட்சியை கொடுக்க முடியாமல் மின்னல் போல மின்னி மறைந்து விட வேண்டியது தான் என சாணக்கியர் எச்சரிக்கிறார்.

இந்த எச்சரிக்கை கடந்த கால மன்னர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதல்ல. அதிகாரம் கையில் கிடைத்தவுடன் மக்கள் நலத்தை மறந்து போனவர்கள் மரம் ஏறி கைவிட்டவர்கள் போல பாதாளத்தில் விழுந்து சிதற வேண்டியது தான்.

 

Contact Form

Name

Email *

Message *