Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒரு நல்ல தலைவன் உருவாவது எப்படி...?

அரசியல் வகுப்பு  3

    னிதனை  ஒரு தனி உயிராக கருதினாலும் அந்த தனி உயிர் இயங்குவதற்கு பல உறுப்புகள் வேண்டும். உறுப்புகளில் ஒன்று குறைவுபட்டு விட்டாலும் கூட உடல் இயக்கம் வழக்கமாக செயல்படாது. அதே போல தான் அரசாங்கமும்,அரசன்,அமைச்சரவை,மக்கள்,பாதுகாப்பு,இராணுவம்,செல்வம்,நட்புறவு ஆகிய ஏழு உறுப்புகளில் ஒன்று குறைந்தாலும் அரசாங்கத்தின் செயலானது நடைபெறாது என்பதை விட தேசத்தை அழிவு பாதையில் கொண்டு போய் நிறுத்தி விடும். இதை நன்கு உணர்ந்த சாணக்கியர் அவைகள் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கண வரைமுறையோடு அர்த்தசாஸ்திரத்தில் விளக்கிறார்.

    என் ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என சொல்வார்கள். அதே போல் ஒரு அரசாங்கத்திற்கு தலைவன் அல்லது அரசன் பிரதானமானவன் ஆவான். கோன் எவ்வழி மக்கள் அவ்வழி என தொன்று தொட்டு நம்பிக்கை இந்திய மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால் இது இன்று வெறும் நம்பிக்கையாக மட்டுமே இந்தியாவில் நிலவுகிறது. ஐரோப்பிய மக்களின் கலாச்சாரம் நமக்கு தெரிந்தது தான். தனிமனித ஒழுக்கம் என்பதை அவர்களிடம் அவ்வளவாக எதிர்பார்க்க முடியாது தான் அப்படியிருந்தாலும் தன்னை ஆளுபவன் நேர்மையாக இருக்க வேண்டுமென ஒவ்வொரு ஐரோப்பியனும் எதிர்பார்க்கிறான்.


 ஆனால் இந்தியர்களான நமது தனிமனித ஒழுக்கம் இன்னும் முழுமையாக கெடவில்லை. பெற்றவனுக்கு முன்னால் சிகரெட் பிடிப்பது மரியாதை குறைவு என இன்னும் பலபேர் கருதுகிறார்கள். ஒழுக்கத்தை சாகடிக்கும் பல உபகரணங்கள் சந்தைக்கு வந்துவிட்டாலும் கூட முழுமையாக கெட்டுபோவாத இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

    ஆனால் நமது தலைவர்களின் யோக்கியதை என்ன? இன்று நான் தான் பெரிய தலைவன் என மார்தட்டி கொண்டு மக்கள் மத்தியில் பவனி வரும் தலைவர்களின் அந்தரங்க வாழ்க்கையை சற்று எண்ணிப்பாருங்கள். துப்பிய எச்சியை மீண்டும் எடுத்து விழுங்குவது போன்ற அருவறுப்பு ஏற்படும் ஒழுக்கம் உள்ள மக்களும் ஒழுக்கம் கெட்ட தலைவர்களும் இந்தியாவில் மட்டும் தான் இருப்பார்கள்

ஆனால் சாணக்கியர் ஒரு நாட்டினுடைய தர்மத்தை வளர்ப்பவனாகவும், காப்பவனாகவும் அரசன் இருக்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் முன்னுதாரன புருஷனாக ஏற்று தன்னை பின்பற்றும் வண்ணம் உயர்ந்த ஒழுக்கமுடையவனாக அரசன் திகழ வேண்டும் என்கிறார் . அவர் அப்படி சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

  ஒரு நிர்வாகத்தை நடத்தும் நான் ஒழுக்கமாக இருந்தால் தான் என்னோடு இருப்பவர்கள் என்னை மதிப்பார்கள். என் மீது மரியாதை இல்லாதவர்களை வைத்துக்கொண்டு எந்த வேலையும் செய்ய முடியாது. அவர் இந்த நேரத்தில் குடித்துவிட்டு படுத்திருப்பார் என்று என் வேலைக்காரன் நினைத்தால் அவனும் நான் செய்வதைதான் செய்வான். ஓவ்வொரு பணியாளனும் வெளிபார்வைக்கு வேலை செய்வது போல பாவனை செய்வானே தவிர உண்மையாக உழைக்க மாட்டான்.

    நாட்டையே நிர்வாகம் செய்பவன் பல தவறுகளை அந்தரங்கமாகவும் வெளிப்படையாகவும் செய்தால் அவனுக்கு கீழ் இருக்கும் அலுவலர்கள் தலைக்கு தலை திருட ஆரம்பித்து விடுவார்கள். அதனால் தான் சாணக்கியர் அரசன் கெடுமதியாளனாக இருந்தால் சக்கரையும் உப்பும் கூட தனது இயல்பான சுவையை இழந்துவிடும் என்று ஒரு அழகான உதாரணத்தில் விளக்குகிறார்.அரசாங்க தலைமை பணியானது பட்டு கம்பளத்தில் நடப்பது போன்ற சுக அனுபவம் அல்ல. முள்படுக்கையில் உட்கார்ந்து முள் கிரிடத்தை சூட்டி கொண்டதற்கு இணையான துன்பத்தை தரவல்லது. அந்த துன்பத்தை மறக்க பலகீனமான வழிகளை மேற்கொள்பவன் செய்யும் கடமையிலிருந்து தவறிவிடுகிறான். நாட்டு நலனுக்காக துன்ப சிலுவையை சுமப்பது கூட இன்பம் தான் என்று கருதும் தலைவனால் தான் நல்லவனாக இருக்க முடியும். நல்லாட்சியையும் தர முடியும்.


    முடியாட்சி முறையாகட்டும் ஜனநாயகம் என்ற குடியாட்சி முறையிலாகட்டும் நாட்டுக்கும் மக்களுக்கும் எதாவது துன்பம் நேர்ந்தால் அதன் முதல் பொறுப்பாளன் அரசனே ஆகும். பருவமழை தவறி போய் கால்நடைகளுக்கு கூட பசும்புல் கிடைக்காமல் வறட்சி ஏற்பட்டாலும் வானத்தின் வயிறு கிழிந்து மழையாக கொட்டி வெள்ளத்தால் பயிர்பச்சை அழிந்து போனாலும்  தொற்று நோய்களும், கொலை,கொள்ளைகளும் பெருகி மக்களுக்கு உயிர் மற்றும் பொருள் சேதாரத்தை ஏற்படுத்தினாலும் அரச தலைவனே  இழி சொல்லுக்கு ஆளாவான்.

 ஏரிகளும், ஊருணிகளும் நிறைந்து தானிய மணிகள் மழையென கிடைத்தாலும் வெற்றி மேல் வெற்றி கிட்டி நாட்டின் புகழ் உச்சானி கொம்பில் பறந்தாலும் தொழில்வளமும்,மக்களின் பாதுகாப்பும் சீராக உயர்ந்தாலும் அரச தலைவனே முதல் பாராட்டுதலை பெறுவான். எனவே தான் தர்மத்தின் வடிவமாக அரசன் இருக்க வேண்டுமென சாணக்கியர் வலியுறுத்துகிறார். தர்மம் என்ற வார்த்தைக்கு சாணக்கியர் சுட்டிகாட்டும் பொருள் மிக விரிவானது,விசாலமானது,ஆழமானதாகும்.

        பிறக்கின்னா முற்பகல் செய்தால் தமகின்னா பிற்பகல் தானே வரும் என்பது அறவழிச் சட்டமாகும். பறந்து விரிந்த நிலப்பரப்பில் வாழ்வதற்கு நமக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளும் நமது சகமனிதர்களுக்கு மட்டுமல்ல சகல ஜீவராசிகளுக்கும் உண்டு அதை பறிக்க நினைப்பது கொடிய செயல் என்ற உணர்வு தான் நல்லறம் என்பது இத்தகைய அற உணர்வை இதயம் போல் தலைவர்கள் கைகொள்ள வேண்டும். அதையே மற்றவர்களும் பின்பற்றும்படி செய்ய வேண்டும்.


    மனிதர்களை சமுதாய விலங்கு என மானுடவியல் அறிஞர்கள் கருதுவார்கள். அதாவது ஒரு நாக பாம்பை போலவோ, கரடியை போலவோ மனிதன் தனித்து வாழ விரும்பமாட்டான். தன் குடும்பத்தார் மட்டுமல்ல தன்னை சுற்றி மற்றும் பல மனிதர்கள் வாழ வேண்டும் என அவன் விரும்புவான். இந்த இடத்தில் தான் சமுதாய நலன் என்பது பிறப்பெடுக்கிறது. என் வீட்டில் திருடன் புகுந்தபோது அண்டைய வீட்டுகாரன் ஒத்தாசைக்கு வரவேண்டும் என நான் எதிர்பார்ப்பதை போல பக்கத்து வீட்டுகாரனும் எதிர்பார்ப்பது இயற்கை. மகிழ்ச்சியில் பங்கெடுக்க துன்பத்தில் தோள் கொடுக்க. செத்து போனால் மயானத்திற்கு தூக்கி செல்ல துணை இல்லாமல் எதுவும் நடக்காது. எனவே பரஸ்பரம, விட்டுகொடுத்தல், உதவி செய்தல் என்ற சமூக அறம் மிக முக்கியம்.

    எதிர்த்த வீட்டு பெண்ணை கையை பிடித்து இழுத்தால், வாய்க்கால் தகராறுக்கு தம்பியன் தலையை வெட்டி எறிந்தால், தண்டனை கிடைக்கும் என்ற பயம் இருந்தால் தான் நாட்டில் அமைதி நிலவும். தவறுகள் செய்பவனுக்கு நானே தண்டனை கொடுப்பேன் என்று ஒவ்வொருவனும் கையில் வேல் கம்புடன் கிளம்பிவிட்டால் நாடுநாடாக இருக்காது சுடுகாடாக மாறிவிடும் எனவே குற்றம் செய்வதற்கு அச்சுறுத்தலாக அமையும் அரசாங்க சட்டம் நிச்சயம் தேவை.

 இப்படி தனிமனித ஒழுக்கத்தை தரும் அறச்சட்டமும், சமுதாய அமைதியை தரும் சமுக சட்டமும், நாட்டின் நலவாழ்வை உறுதிபடுத்தும் அரசியல் சட்டமும,; தேசத்தின் தர்மம் என்றும் அதன் காவலன் அரசத்தலைவன் என்றும் சாணக்கியர் கருதுகிறார். ஒரு தலைவன் துறவிக்குரிய பற்றற்ற தன்மை,நீதிபதிக்குரிய சமநோக்கு, போர் வீரனுக்குரிய நெஞ்சுரம், குடும்ப தலைவனுக்குரிய பொறுப்பு,கடவுளுக்குரிய ஆளுமை தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும் என்பது அவர் எதிர்பார்ப்பு. இத்தனை பண்புகளும் ஒருங்கே கொண்ட ஒரு தலைவனை கண்களை மூடி கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மனக்கண் முன்னால் மாண்புமிக்கதாக இந்திய தேசம் எழுந்து நிற்பதை அறீவீர்கள்.


    ஆட்சி நடத்துபவர்களுக்கு இத்தனை தகுதிகளும் இருக்க வேண்டுமென்றால்  அவர்கள் அவதார புருஷர்களாகத் தான் இருக்க வேண்டும். நம்மை போன்ற சாதாரண மனித ஜீவன்களுக்கு இத்தனை தகுதியும் ஒருங்கே அமைவதற்கு வாய்ப்பே இல்லை. இப்படி நமக்கு தெரியும் இந்த சாதாரண விஷயம் சாணக்கியருக்கு தெரியாமல் போய்விட்டதே அது ஏன்? உலகமே தெரியாத அப்பாவியா அவர்? நிச்சயம் கிடையாது.

ஒரு மனிதனுடைய குண இயல்புகள், அறிவு தீட்சண்யம் பிறவியில் மட்டும் அமைந்து விடுவதில்லை. குடும்ப வாழ்க்கையின் நடைமுறையும், சுற்றுபுற சூழலும் கூட ஒரு மனிதனின் இயல்புகளை தக அமைக்கிறது.
 நல்ல திறமைசாலிகளுக்கு கூட மடையர்களான குழந்தைகள் பிறக்கலாம். சுத்த முட்டாளாக பிறந்தவன் கூட நாளாவட்டத்தில் அறிவு தெளிவு பெறலாம். அதனால் பிறப்பை அடிப்படையாக கொண்டு அறிவு திறத்தை,ஒழுக்க நெறியை அறுதியிட்டு சொல்ல இயலாது.

 சாணக்கியரும் அரசனுக்கு பிறந்தவனாக ஒருவன் இருந்துவிட்டால் அவன் ஆட்சிகலையில் சிறந்தவனாக இருப்பான் என கருத முடியாது என்று உறுதிப்பட பல இடங்களில் நமக்கு தெரிவிக்கிறார். ஒரு மனிதனுடைய பல்துறை சார்ந்த அறிவும், பரந்த நூல் அறிவும், சிறந்த அனுபவத்துடன் கூடிய பயிற்சியும் அரசாட்சி செய்வதற்கான பக்குவத்தை கொடுக்கும் என்று நம்புகிறார்.


இதனால் ஆட்சிகலைக்கான பயிற்சி முறையை விரிவாகவும்,நுணுக்கமாகவும் விவரிக்கிறார். ஒரு ஆட்சி தலைவனுடைய அறிவு நுட்பத்தை அவர் விவரித்து கூறும் போது நமக்கே வியப்பாகயிருக்கிறது ஆயிரம் நவீன கருவிகளின் துணை கொண்டு ஆய்வு செய்தாலும் கூற முடியாத விஷயங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தனது மூளை பலம் ஒன்றையே வைத்து கொண்டு சொல்கிறார் என்றால் அவர் திறமையை என்னவென்பது

 ஒரு மனிதனுக்கு கல்வி என்பது எவ்வளவு அத்தியாவசியமானது என நமக்கு தெரியும். கண்கள் பெற்றவன் எல்லாம் பார்வையுடையவன் அல்ல, கல்வி பெற்றவனே உண்மையான பார்வையுடையவன் என்று வள்ளுவரும் சொல்கிறார்.  ஒரு சாதாரண மனிதன் வாழும் வாழ்க்கைக்கும், படித்தவன் வாழும் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குடும்பம் நடத்துவதில் இருந்து அரசாங்கத்தை நடத்துவது வரை கல்வியின் துணை இருந்தால் அதன் அழகே தனி தான்.

    நிறைய பேர் ஒரு கொத்தனார் வேலை செய்வதற்கு கூட படிப்பும், பயிற்சியும் வேண்டும் அரசியல்வாதியாக இருப்பதற்கு அவை எதுவுமே தேவையில்லை என்று நினைக்கிறார்கள். ஒலி பெருக்கியை பிடுங்கி அடிப்பதற்கும், நாற்காலிகளை தலைக்கு மேல் சுற்றுவதற்கும் வேஷ்டியை அவிழ்த்து விட்டு நடுரோட்டில் ஒடுவதற்கும் படிப்பு எதற்கு? என்றும் சிலர் எண்ணுகிறார்கள்.


இப்படி சாதாரண மக்கள் நினைத்தால் தவறில்லை. சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளே இப்படி உறுதியாக நினைக்கும் போது தான் விபரிதம் தலைதூக்குகிறது. கல்லூரிகளிலும் கலா சாலைகளிலும் சொல்லித்தரும் அரசியலா? நடைமுறையில் இருக்கிறது. அரசியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவன் தான் அதில் நுழைய வேண்டும், செயல்பட வேண்டுமென்றால் உலகத்தில் ஒரு பயல் தேறமாட்டான் இன்று முன்னுதாரன தலைவர்களாக காட்டப்படும் எவரும் அரசியல் பாடத்தை முறைப்படி கற்றவர்கள் இல்லை. ஜார்ஜ் வாசிங்டன் தொடங்கி மகாத்மாகாந்தி வரையிலும் எவருமே அரசியலை பாலபாடமாக கூட கற்றதில்லை. ஆனாலும் அவர்களுக்கு இணையான அரசியல்வாதியை காண்பதரிது.

    நமது தமிழகத்தின் தனிப்பெரும் தலைவரான காமராஜர் அரசியல் பாடத்தை மட்டுமல்ல அடிப்படை பாடத்தை கூட முறைப்படி கல்லாதவர். அவரால் உருவாக்கப்பட்ட நலத்திட்டங்கள் தான் இன்றைய தமிழகத்தையும் வாழ வைத்து கொண்டு இருக்கிறது. பல தமிழ் மக்களின் மனங்கவர்ந்த தலைவரான எம்.ஜி.ராமச்சந்திரன் கூட பள்ளிபடிப்பு அறியாதவர் தான் அவ்வளவு தூரம் போவானேன் கலைஞர் மு.கருணாநிதி கூட எட்டாவது வகுப்பை எட்ட முடியாதவர் தான். இவர்கள் எல்லாம் அரசியல் நடத்தவில்லையா? சில விமர்சனங்கள் இருந்தாலும் இவர்களால் நற்காரியங்கள் நிகழ்த்தப்படவில்லையா? என பலருக்கு கேட்க தோன்றும்.


அரசியல்வாதிகளின் கல்வி என்று பேசம் போது நிச்சயமாக அது பள்ளி படிப்பையோ கல்லூரி படிப்பையோ சார்ந்தது அல்ல என்பதை நன்கு உணர வேண்டும். காரணம் எந்த கல்லூரியிலும் நல்ல தலைவனை உருவாக்கி விட முடியாது, அப்படி உருவாக்குவதாக இருந்தால் நாடு முழுவதும் தலைவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் சாணக்கியர் படிப்பு, பயிற்சி என்று சொல்வது பிளாட்டோ சொல்வது போல் கல்வி கூடம் சார்ந்து அல்ல. ஒரு தனி மனிதனின் ஆர்வம் மற்றும் முயற்சியை சார்ந்தது என்கிறார். இத்தகைய முயற்சிகளுக்கு முறைப்படுத்தப்பட்ட கல்வி அறிவு உந்து சக்தியாக இருக்குமானால் அவனே மிகச்சிறந்த தலைவனாக திகழ்வான் எனவும் உறுதி தருகிறார். இதற்காக அவர் சில பயிற்சி முறைகளையும் அறிமுகப்படுத்துகிறார்.    தலைவனாக வரும் ஒருவனுக்கு ஆன்வீட்சிகீ, திரையீ, வார்த்தை, தண்டநீதி எனும் நான்கு வகை கல்வி அவசியம் இருந்தாக வேண்டும் என வலியுறுத்துகிறார்.

 நம்மில் பலர் நிறைய புத்தகங்கள் படிப்போம், இலக்கியம், வரலாறு என்பவைகள் பலருக்கும் சுலபமாக புரிந்து விடும் ஆனால் பொருளாதாரம், தத்துவம் சம்பந்தப்பட்ட நூல்களை படிக்கும் போது அவ்வளவு சீக்கிரம் எதுவும் புரிவதில்லை, எத்தனையோ முறை முட்டி முட்டி படிக்கிறேன் ஒரு பாரா கூட புரிய மாட்டேன் என்கிறது என நம்மில் பலர் சொல்கிறார்கள். எல்லா வகை நூல்களையும் சுலபமாக புரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை. ஆனால் அதற்கு சாணக்கியர் ஒருவழியை சொல்கிறார். என்றுமே உலகத்தில் மிக கஷ்டமான படிப்பு என்பது தத்துவதுறைத்தான். அந்த துறையில் ஒருவனுக்கு ஆர்வமும் அறிவும் இருந்துவிட்டால் எல்லாதுறைகளையுமே மிக எளிதாக புரிந்து கொள்ளலாம் எனவே தலைவர்களாக விரும்புபவர்கள் நிச்சயம் தத்துவதுறையில் ஓரளவு பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே ஆட்வீட்சிகீ  என்ற வார்த்தை மூலம் சாணக்கியர் வலியுறுத்துகிறார்.


    இன்றைய அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும், தொண்டர்களாகவும் இருப்பவர்களின் ஓரளவு புத்திசாலிகளாக திகழ்பவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தினரும்,சங்க பரிவார அமைப்பினருமே ஆகும். இவ்விரு அமைப்புகளிலும் முறைப்படியான தத்துவங்கள் வரையறுக்கப்பட்டு போதிக்கப்படுகிறது. மற்ற அரசியல் கட்சிகளில் அம்மாதிரியான போதனைகள் அவ்வளவுவாக கிடையாது. திராவிட கட்சிகளிலோ அந்த வாசனை என்பது மருந்துக்கும் இல்லை. தேசியளவில் முல்லாம் சிங் யாதவ், லாலு பிரசாத்யாதவ், மாயாவதி போன்றோர்களின் கட்சிகளில் ஜாதிய வெறிஉணர்ச்சி தத்துவங்களாக புகட்டப்படுகிறதே தவிர அதற்கு முறைப்படியான நடைமுறை திட்டங்கள் எதையும் காண முடியாது

 இப்படிப்பட்டவர்களால் தான் குழப்பங்கள் பலவற்றிற்கு பிள்ளையார் சுழி போடபடுகிறது. ஒரு முறை தமிழகத்தில் அண்ணாயிஷம் என்ற வார்த்தை பல இடங்களிலும் பேசப்பட்டது. அதற்கு என்ன விளக்கம் என்று கேட்கப்பட்ட போது சம்பந்தப்பட்டவர்கள் தக்க பதிலை சொல்ல முடியாமல் திக்கி திணறி கம்யூனிசமும், சோசலிசமும் கலந்துதான் அண்ணாயிஷம் என சொல்லி சிரிப்பை வரவழைத்தார்கள்.

ஆனால் இப்படி சிரிப்பை மூட்டியவர்களுக்கு தத்தவ அறிவு சிறிதேனும் இருந்திருந்தால் இன்று செம்மொழி மாநாடு போன்ற நல்ல விஷயங்கள் தனி குடும்ப விசேஷமாக  ஆகாமல் போயிருக்கும், எனவே தான் தத்துவ அறிவு உட்பட அனைத்தையும் கொண்ட கல்வி பயிற்சியாக அரசனுக்கு ஆண்வீட்சிகீ என்ற தகுதி சாணக்கியரால் கண்டிப்பாக வலியுறுத்தப்படுகிறது.


    அடுத்தது சாணக்கியரால் முன்வைக்கப்படுவது திரையீ என்பதாகும். திரையீ என்றால் மத சம்பந்தப்பட்ட அறிவு என்பது பொருள். தலைவர்கள் நாடாளப் போகிறார்களாக, சமய சொற்பொழியாற்றப் போகிறார்களா? அவர்களுக்கு எதற்கு மதம் சார்ந்த அறிவு என்று பலர் நினைக்கலாம், மதங்களை வெறுக்கும் நாத்திகர்கள் சாணக்கியரின் இக்கருத்து கேலிக்குரியது என வெறுத்தும் ஒதுக்கலாம் ஆனால் உண்மையில் இது வெறுக்கத்தக்க கருத்து அல்ல. ஒரு தலைவனுக்கு அத்தியாவசியமான கருத்தே ஆகும்.

    மதம் என்பதை வழிபாட்டு முறையோடு சம்பந்தப்படுத்தி பார்ப்பது ஒரு வகை என்றாலும் உண்மையில் மதம் வழிபாட்டோடு நின்றுவிடுவதில்லை. ஒரு மனிதனின் அன்றாட செயல்களிலும் மதம் சம்பந்தப்பட்டு இருக்கிறது. குளிப்பது துவங்கி உறங்குவது வரையிலும் கூட மதம் வருகிறது. வெறுப்புணர்ச்சி இல்லாமல் மதப்பற்று எந்த மனிதனிடம் இருக்கிறதோ அவன் கருணை மிகுந்தவனாகவும் ஒழுக்க முடையவனாகவும் இருக்கிறான். குறைந்த பட்சம் அவனிடம் தவறுகள் செய்வதற்கு தயக்கத்தையாவது காணாம்

 நாத்திக மனப்பான்மை என்பது மனசாட்சியை கூட செண்டிமென்ட் விஷயமாக கருதுவதினால் அங்கே உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. வறட்டுத்தனமான அறிவு மட்டுமே வாழ்க்ககைக்கு உதவாது, ஈரப்பதம் மிகுந்த, உணர்வுகளும் தேவை எனவே தான் சாணக்கியர் தலைவனுக்கு சமய உணர்வு வேண்டும் என்கிறார். 


மிக முக்கியமான விஷயத்தை இங்கே குறிப்பிட வேண்டும். சாண்க்கியர் திரையீ என்ற வார்த்தையை நேரடியாக சமய அறிவோடு சம்பந்தப்படுத்தவில்லை. வேத அறிவு என்பதை குறிப்பதற்காகவே அச்சொல்லை பயன்படுத்தகிறார். வேதம் என்பது இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல அவைகள் வெளிப்பார்வைக்கு சடங்;குகளை பற்றி பேசுவது போல் தெரிந்தாலும் உண்மையில் அண்டவெளிக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்புகளை பற்றி தான் பேசுகிறது. அதனால் வேதங்கள்  சமயம் கடந்ததாகவும் தனிப்பட்ட மதங்களுக்கு சொந்தங்காளக இல்லாமலும் இருக்கிறது.

ஒரு அரசியல் தலைவன் ரிக்,யஜீர்,சாம,அதர்வன வேதங்களைத் தான் பயில வேண்டும் என்றில்லை அவன் விரும்புகிறப்படி விவிலியத்தையோ,குரானையோ கூட கற்கலாம். எது படிக்கிறான் என்பது முக்கியமில்லை சமய அறிவு தான் முக்கியம்

அடுத்ததாக வார்த்தை என்பதற்கு பொருளாதார அறிவும், தண்ட நீதி என்பதற்கு சட்டதுறை அறிவும் பொருளாகும். ஆக ஒரு தலைவனிடம் சித்தாந்தம், ஆன்மிக ஞானம் பொருளாதார அறிவு, சட்டத்தெளிவு ஆகிய நான்கும் இருப்பது அடிப்படை தேவையென சாணக்கியர் வலியுறுத்துகிறார்.இந்த அறிவை படித்து பட்டம் பெற்றுதான் வாங்க வேண்டும் என்பதில்லை. பள்ளிகூடத்தின் வாசலை தொடாமலும் ஒரு தலைவன் பெறலாம்.

     ஒரு தலைவனை பள்ளி கூட பயிற்சி மட்டும் உருவாக்கி விட முடியாது உண்மையில் கல்வி என்பது தலைமை பண்புக்கு கட்டிடத்தின் மேல்பூச்சி போன்றது தான் அஸ்திவாரமாக, உள்கட்டுமானமாக தனிமனித ஒழுக்கமும், அனுபவசாலிகளின் இணக்கமும் தான் முக்கிய பங்காற்றுகின்றன. ஒரு தலைவனாக இருப்பவனுக்கு ஒழுக்கம் எவ்வளவு தேவையென முன்பே சிந்தித்தோம் ஒழுக்கத்தின் அளவு அனுபவசாலிகளின் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.இளம் கான்று பயமறியாது என ஒரு தமிழ் பழமொழி உண்டு. இதன் அர்த்தம் என்னவென்றால் இளமைக்கு வேகம் இருக்கலாம் விவேகமும் இருக்கலாம் ஆனால் அனுபவம் என்பது இருக்காது

 எந்தொரு செயலை செய்வதற்கும் வேகமும்,விவேகமும் அவசியம் தான் ஆனால் செயலின் பின் விளைவுகளை அனுபவத்தால் அன்றி மற்ற எவற்றாலும் பெற இயலாது நம் வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் திருமண வயது வந்த அவளை ஒரு வரன் வீட்டார் வற்புறுத்தி கேட்கிறார்கள் நமக்கோ அந்த வரணை பிடிக்கவில்லை அதற்காக உங்கள் பையனை இந்த காரணத்திற்காக பிடிக்கவில்லை என முகத்தில் அறைந்தாற்போல் சொல்லி விட முடியுமா? சொன்னால் தான் என்ன? உண்மையை சொல்லி விடுவது தானே நல்லது என விவேகமும், வேகமும் கேட்கும் ஆனால் அனுபவம் பட்டவர்த்தமாக அப்படி உடைத்து சொன்னால் கேட்பவர் மனது கஷ்டப்படுமே ஒரு வேளை இதே பையனுக்கு பெண்ணை கொடுத்தே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டால் இப்போதைய வார்த்தை வாழ்க்கை முழுவதும் முள்போல தைத்து நிற்குமே? என்று யோசிக்கும் அதனால் தான் நமக்கு அனுபவம் இல்லையென்றாலும் கூட அனுபவசாலிகளின் சொல்படி நடக்க வேண்டுமேன வலியுறுத்தப்படுகிறது.  


உலகம் முழுவதையும் அடக்கி ஆளும் தகுதி பெற்ற சக்ரவர்த்தி கூட அனுபவசான்றோரின் சொல்கேட்டு நடக்கவில்லையென்றால் மலை உச்சியில் இருந்து பாதாளத்தில் விழவேண்டியது தான் நமது ஜெயலலிதா அம்மையாரின் அரசியல் பிரவேசத்தை உதாரணத்திற்காக எடுத்து கொள்வோம் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அவரால் போற்றி வளர்க்கப்பட்ட அ.தி.மு.க சிந்தாமல்,சிதறாமல் ஜெயலாலிதா மடியில் வந்து விழுந்தது .

 எம்.ஜி.ஆரின் உடனிருந்த பண்ருட்டி ராமசந்திரன்,எஸ்.டி.சோமசுந்தரம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போன்ற அனுபவசாலிகள் அவர் கூடவே இருந்தாலும் அரசியலில் எள்முனை அளவு கூட அனுபவமே இல்லாத சசிகலாவின் பேச்சை கேட்டு நடந்து கொண்டதினால் தான் ஆயிரம் அறிவு இருந்தும் நல்ல திறமையிருந்தும் பொது நலம் என்பது இல்லாமல் போயி அதல பாதாளத்தில் விழுந்தார்.

அன்று ஏற்பட்ட களங்கத்தை இன்றுவரை அவரால் துடைக்க முடியவில்லை ஆயினும் கூட எதைப்பற்றியும் கவலைப்படாமல் சசிகலாவின் நட்பிற்காக இன்று வரை பல அவமானங்களை சந்தித்தும் அனுபவ முதிர்ச்சி ஏற்படாமலேயே உள்ளார். இது அவர் கட்சியையும் பாதிக்கிறது சில நேரம் தமிழ்நாட்டையும் பாதிக்கிறது அனுபவசாலிகளின் பேச்சை கேட்க வேண்டும் என்ற புத்தி ஜெயலலிதாவிற்கு இருந்திருக்குமேயானால் அவர் தோல்வியடைய வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது 


அதனால்தான் சாண்க்கியர் சான்றோர் சொல் கேட்டு நட என அரசனுக்கு சொல்கிறார். அடுத்ததாக ஒரு அரசனுக்கு புலனடக்கம் என்பதும் அவசியம் என்கிறார். இங்கே புலனடக்கம் என்பதை துறவிகளுக்குரிய முழுமையான புலனடக்கத்தோடு சாணக்கியர் சம்பந்தப்படுத்தவில்லை மற்றவர்களுக்கும் சட்டத்திற்கும் துன்பம் ஏற்படாத வகையில் ஒரு அரசன் இன்ப நுகர்ச்சி வைத்து கொள்ளலாம் என அவர் இடம் தருகிறார்.

 புத்திரபாசம் என்பதும் ஒரு வகை புலன் உணர்ச்சிதான் அந்த பாசம் அரசனும் மனிதன் என்பதினால் அவனுக்கு இருப்பதை யாரும் ஆட்சேபனை செய்ய முடியாது அதற்காக நாட்டு நலனையே பாதிப்படையும் வகையில் புத்திரபாசத்தால் மதியிழந்து போகும் போது அரசத்தலைவன் தனது செல்வாக்கை இழக்கிறான்.

    ஒரு சாதாரண தந்தையாக முத்து வேலரின் மகனாக மட்டும் கருணாநிதி அவர்கள் இருந்தால் அவர் அழகிரிக்கு ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு எத்தனை உதவிகள் செய்தாலும் எவ்வளவு பணத்தை வாரிவாரி கொடுத்தாலும் அதை யாரும் கேட்க போவது கிடையாது ஆனால் அவர் ஒரு கட்சி என்ற பொது ஸ்தாபனத்தின் தலைவர் மாநிலத்தின் முதலமைச்சர் இந்த வகையில் பொது பணத்தை தனது குழந்தைகளுக்கு அள்ளி கொடுக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை அப்படி செய்வது தருமத்திற்கு உட்பட்ட காரியமும் இல்லை எனவே இங்கு சாணக்கியரின் கூற்றை தற்காலிக சூழலில் பொருத்தி சொல்வதென்றால் ஒரு நல்ல தலைவன் ஜெயலலிதாவிற்கு இருப்பது போல ஆணவத்துடனும் கலைஞரை போல சுயநலத்துடனும் இருக்க கூடாது என்பது தான்


  ஒரு அரசாங்கம் நல்லபடியாக நடக்க தலைவன் எப்படி முக்கியமோ அதே போல அவனுக்கு ஆலோசனைகள் சொல்லி நிர்வாகத்தின் ஒவ்வொரு துறையையும் நடத்தி செல்ல ஆலோசகர்கள் கைதேர்ந்த நிர்வாகிகள் கண்டிப்பாக தேவை அதாவது அரசாங்கத்திற்கு நல்ல அரசனை போல நல்ல அமைச்சர்களும் மிகவும் முக்கியம். அரசன் நல்லவனாக இருந்து, அமைச்சர்கள் கெட்டவர்களாகவும்,அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்து அரசன் கெட்டவனாகவும் அமைந்துவிட்டால் அந்த அரசாங்க உருப்படாது.

 நமது இந்தியாவின் தற்போதைய பிரதமர் திரு.மன்மோகன் சிங் நல்லவர் தான், நல்ல திறமைசாலி தான் இதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது ஆனால் அவரை அவர் சகாக்கள் நல்ல முறையில் செயல்பட அனுமதிக்கிறார்களா? வழிகாட்டும் கட்சி தலைவி தனது நலத்தை மட்டுமே தனது விருப்பத்தை மட்டுமே செயல்படுத்த வேண்டுமென கட்டாயப்படுத்துகிறார். ஆ.ராசா,சுரேஷ் கல்மாடி, சிதம்பரம் போன்ற அமைச்சர்கள் அவரை பிரதமராகவே மதிப்பதில்லை திரு.முரசாஜி தேசாய் அமைச்சரவையில் ராஜ் நாராயணன், சரண்சிங் போன்ற அமைச்சர்கள் எப்படி குளறுபடிகள் செய்தார்களோ அதைவிட பத்துமடங்கு இப்போது செய்கிறார்கள்.


  ராஜீவ் காந்தி பிரதமாராக இருந்த போது அமைச்சர்களாக இருந்த பி.வி.நரசிம்ம ராவ், வி.பி.சிங் போன்றோர்கள் நல்லவர்கள் மட்டுமில்ல திறமைசாலிகளும் கூட ஆனால் ராஜீவ்காந்தி இவர்கள் யாரையுமே மதித்தது இல்லை இப்படி தலையும் காலும் மாறி மாறியிருந்தால் உடம்பால் எப்படி செயல்பட முடியும் எனவே தான் சாணக்கியர் நல்ல அரசனை போலவே நல்ல அமைச்சர்களும் அமைந்தால் தான் நாடும் முன்னேறும் என்கிறார்.

  அடுத்ததாக அமைச்சர்களக யாரை நியமிப்பது என்ற கேள்வி நம் முன்னால் நிற்கிறது. இதற்கு பல பதில்கள் சாணக்கியர் காலத்திற்கு முன்பே இருந்தே பலரால் சொல்லப்படுகிறது. விஷ்ணுபுராணம் எழுதிய பராசர மகரிஷி அரசனானவன் தன்னுடைய பள்ளி தோழர்களை மிக நெருங்கிய நண்பர்களை அமைச்சர்களாக வைத்து கொள்ளலாம் என்கிறார். கூட படித்தவனின், நெருங்கி உறவாடிய நண்பனின் மன இயல்புகளை திறமைகளை நன்கு அறிந்து கொள்ள முடியும் அதனால் அப்படி செய்யலாம் என்பது தான் பரசரின் உண்மையான கருத்து

இக்கருத்தை முழுமையாக விசலாட்சார் என்பவர் மறுக்கிறார். தோளில் கைபோட்டு பழகியவர்களை கட்டளையிட்டு செயல்பட வைப்பது கடினம் சில நேரம் நட்பிற்காக அவர்களின் தவறுகளை சகித்து கொள்ள வேண்டிய நிலை வரும் எனவே நண்பர்களை அமைச்சர்களாக்குவது எப்போதுமே அபாயம் என விசாலாட்சர் விளக்கம் தருகிறார்


மேலும் பராசரர் அபாயகால கட்டத்தில் உதவி ஒத்தாசை செய்தவர்களை அமைச்சராக்கினால் எப்போதுமே அரசனுக்கு விசுவாசமாக நடத்து கொள்வார்கள் என்கிறார். இதை மிக கடுமையாக நாரத மகரிஷி மறுக்கிறார்.உதவி செய்வது என்பது அன்பினால் வருவதே தவிர அறிவால் ஏற்படுவதில்லை அரசன் மீது அன்பு செலுத்துவர்கள் மட்டும் தான் அமைச்சர்களாக இருக்க வேண்டுமென்றால் அவன் அம்மாவும் மனைவியும் தான் அதற்கு தகுந்த நபர்கள் எனவே நாடாள அறிவாளிகளால் முடியாமல் போய்விடும் என வன்மையாக மறுக்கிறார்.

 கௌனவதத்தர் என்ற அறிஞர் அரசர்களின் மிக நெருங்கிய உறவினர்கள் அமைச்சர்களாக இருக்கும் தகுதியுடையவர்கள் நெருக்கடியான நேரத்தில் அப்பன்,பாட்டன்,சகோதரன் என்ற உறவுமுறை கை கொடுக்க பார்க்குமே தவிர கைவிடாது என்கிறார். சொந்தகாரர்கள் அமைச்சர்களாகி விட்டால் அதிகாரங்களை கைப்பற்றி கொண்டு தனியாட்சி செலுத்துவார்களே தவிர மன்னனை பற்றி கவலைப்பட மாட்டார்கள் தலைவன் நல்லவனாக இருந்தாலும் கூட இவர்களின் செயல்பாட்டால் மக்களின் செல்வாக்கை இழக்க வேண்டிய சூழல் வேண்டும். எனவே சொந்தங்கள் என்பது அந்தபுரத்தோடு அறுத்துவிட வேண்டிய பந்தமே தவிர அரசவைக்குள் நுழைய வேண்டியது அல்ல என்கிறார் உத்வர் என்பவர்.


     உத்வர் கௌனவதத்தர்,நாரதர்,விசாலாட்சர்,பரசரர் போன்ற தனக்கு முற்பட்ட அறிஞர்களின் கருத்தை முற்றிலும் புறக்கணகிகாமல்,அமைச்சர்கள் என்பவர் நல்ல குடும்பத்தில் பிறந்தவராகவும்,பேரறிவு படைத்தவராகவும், ஊக்கம் பெற்றவராகவும், தூய்மையான ஒழுக்கமுடையவராகவும், தனதுதலைவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும், அன்பும் கொண்டவராகவும் காலதேச வர்த்தமானங்களை நன்கு அறிந்து நடந்து கொள்பவராகவும் மிக முக்கியமாக அதிகார துஷ்பிரயோகம் செய்தாவராகவும் இருக்க வேண்டுமென சாணக்கியர் கருதுகிறார்.

 அதாவது அமைச்சர்களுக்கான உண்மையான தகுதி நேர்மையும் அறிவும் தவிர மற்றவைகள் முக்கியமில்லை என்பது சாணக்கியரின் கருத்து.  ஆனால் இன்றைய அமைச்சர்கள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள் என்பதை பார்க்கும் போது நமக்கு சுவற்றில் முட்டிக் கொண்டு அழத் தோன்றுகிறது.

 1967க்கு முன்பு கூட தமிழக அமைச்சர்கள் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமென்ற நியதி கடைபிடிக்கப்பட்டது. அந்த முறை நாளடைவில் மாறி தலைவருக்கு நெருக்கமானவர்கள் என்பதாக சுருங்கி ஒவ்வொரு ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்து கட்சிக்கு அதிகமாக நிதி கொடுப்பவராக இருந்தால் நல்லது என்ற நெறி ஏற்படுத்தப்பட்டு கடைசியில் அதுவும் போய் கட்சி தலைவர்களின் குடும்பத்திற்கு மாத மாதம் கணிசமான கப்பம் கட்டுபவராக இருக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. இத்தகையவர்கள் அமைச்சர்களாக இருந்தால் தேர் ஓட வேண்டிய தெருக்கள் எல்லாம் நரி ஓடும் காடுகளாக மாறாமல் எப்படி இருக்கும்?

 தர்மம் என்பதை சாணக்கியர் பலமுறை பயன்படுத்துவதினால் அது ஜாதிகளின் செயல்பாட்டை பற்றி பேசுகிறது என நம்பும் பலர் சாணக்கியரும் அப்படி தான் குல தர்மத்தை பற்றி பேசுவதாக நினைக்கிறார்கள். சாணக்கியரின் அர்த்தசாஸ்திர நூலை முழுமையாக படிக்கும் எவரும் அவர் ஜாதியில்லா சமூகத்தை உருவாக்க பாடுப்பட்டவர் என்று சொல்லமாட்டார்கள்.

குற்றங்களுக்கான தண்டனைகளை பற்றி பேசும்போது அவர் குற்றவாளிகள் அனைவரையும் ஒரே தரத்தில் பார்க்கவில்லை, ஜாதிவாரியாகவே பார்க்கிறார் என்பதும் தெளிவாகிறது. பிராமனன் ஒருவன் கொலை குற்றம் செய்தால் அவனுக்கு ஒரு தண்டனையும் சூத்திரன் அதே குற்றத்தை செய்தால் அவனுக்கு வேறு மாதிரியான தண்டனையும் வழங்க வேண்டுமென்று சாணக்கியர் கூறுவதை நம்மால் ஒருக்காலும் ஏற்றுகொள்ள முடியாது.

 அதே நேரம் அவர் பல நல்ல விஷயங்களை விரிவாக சொல்லியுள்ளார். அவைகளை ஏற்று நடைமுறைப்படுத்தினால் இன்றைய உலகின் கூட நன்மைகளை செய்யலாம் மிக குறிப்பாக தலைவர்களுக்கான பண்பு மற்றும் தகுதி போன்றவைகளும் எக்காலத்திலும் ஏற்க கூடியது தான் மேலும் அவர் அரசாங்கத்தை நடத்தும் முறை, அதன் அங்கங்களை பிரித்தமைக்கும் வகை போன்றவைகளை மிக விரிவாக  பேசினாலும் ஆட்சி நடத்துபவர்களின் மிக முக்கியமான பணி தானும் தர்மவழியில் நின்று தர்மவழியில் நிற்போரை காத்தும் மற்றவர்களை தர்மவழியில் நடக்கும் படி தூண்டுவதே ஆகுமென அவர் மிக கண்டிப்பாக வலியுறுத்துகிறார்.

 புதிய அரசியல் சித்தாந்தங்கள் எதையும் சாணக்கியர் உருவாக்கவில்லை உண்மையயை சொல்ல போனால் அப்படி புதிய வகை கொள்கைகள் எவற்றிலும் அவருக்கு நம்பிக்கையில்லை சிறப்பான நிர்வாகம் நடந்தாலே கடைகோடி மக்கள்வரை சுபிட்சமாக வாழ முடியும் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை

உலக நாட்டு சரித்திரங்களை ஒப்பிட்டு அனுபவ முறையில் பார்க்கும் போது சாணக்கியரின் நம்பிக்கை சரியானதாகவே நமக்கு படுகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்பும் தலைவர்களும் கடமைகளை சரிவர செய்யும் அரசாங்க அலுவலர்கள், நாட்டின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டுமென உறுதிகொண்ட மக்களும் இருக்கும் போது கம்யூனிஸ்ட், சோஸலிசம் என்பவைகள் எதற்காக? மனிதர்கள் திருந்திவிட்டால் பரஸ்பரம் ஒழுக்கமாக நடக்க துவங்கி விட்டால் எல்லாம் சரியாக இருக்கும் என எண்ணும் சாணக்கியரின் கருத்து சரிதான், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே?


 

Contact Form

Name

Email *

Message *