Store
  Store
  Store
  Store
  Store
  Store

தலைவர்களால் தப்பி ஓடிய தேவதை

    சொர்க்கத்தில் இருக்கும் தர்ம தேவதைக்கு நேரம் போகவில்லை. அமிர்த்தத்தை வயிறு முட்ட குடிந்து தொலைத்ததினால் ஆயிரம் வருஷமாக பசியே இல்லை. என்னடா இது சோம்பேறித் தனமான வாழ்க்கை எஙகேயும் நமக்கு வேலை இல்லாமலேயே போய்விட்டது என்று அவருக்கு அலுப்பாக போய்விட்டது.

 நேற்று கூட எமதர்மன் ஜப்பானில் இருந்து ஏகப்பட்ட உயிர்களை வாரி கொண்டு வந்து கொட்டினான். கலிகாலம் என்று அழைக்கப்படும் கலிபுருஷனுக்கு நிற்க நேரமே இல்லை அவனுக்கோ ஊசி போட்டுக் கொண்டு மக்களை எப்படியெல்லாம் ஆட்டிவிக்கலாம் என்று ஆயிரம் திட்டங்கள், செயல்பாடுகள் மலிந்துகிடக்கிறது. பாவம் தர்ம தேவதையை தேடுவார்யாருமில்லை எப்படியாவது ஒரு மனிதனை தனது வேலைக்கு பயன்படுத்தலாம் என் கடைசியாக தேடிப்பிடித்து காந்தியை தேர்வு செய்து போது எமனின் தூதர்கள் தூக்கி கொண்டே போய்விட்டார்கள்

அன்று முதல் இன்று வரை ஒரு மனித பயலும் தர்மத்தின் கண்ணில் தென்படவும் இல்லை. பாவம் அது தான் என்ன செய்யும்? விட்டத்தை பார்த்து கொட்டாவி எத்தனை வருஷம் விடுவது யோசித்து களைத்து போன தர்ம தேவதை கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது. தன்னால் ஒரு காலத்தில் ஆளப்பட்ட பூமியை ஒரு நடைபோய் சுற்றி பார்த்து வரலாம் என அதற்கு தோன்றியது அடுத்த வினாடியே ஒரு குழப்பம் வந்தது. பூமிக்கு போவது என்றால் எந்த பகுதிக்கு போகலாம் எதை பார்த்தால் உலகம் முழுவதையும் பார்த்தது போலிருக்கு என்பது தான் அந்த குழப்பம்.


    தர்மம் விளைந்த நாடு என்று இந்தியாவை தான் சொல்வார்கள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை தர்ம பூமி என்றே சிறப்பிப்பார்கள். தர்ம தேவதையின் செல்ல குழந்தைகளான சேரன், சோழன், பாண்டியர்கள் வாழ்ந்த பூமியெல்லவா அது கடவுளையே நேருக்கு நேர் நிற்க வைத்து நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதாடியவன் தமிழன் அல்லவா? எனவே தமிழ்நாட்டை பார்வையிடுவது என தர்ம தேவதை முடிவு செய்தது

  மனிதனுக்கு தான் இடம்விட்டு இடம் போக பாஸ்போர்ட் விசா என்பது தேவை. ரயில் டிக்கெட், விமான டிக்கெட் என தேடி அலைய வேண்டும். தேவகைளுக்கு அந்த சிரமம் கிடையாது. நினைத்தவுடன் வந்துவிடலாம் அப்படி தர்ம தேவதையும் தமிழ்நாட்டிற்கு வந்தது. வந்த தேவதை நேராக புஞ்சம் புளியபட்டிக்கோ, கொட்டாம்பட்டிக்கோ வந்துயிருக்கலாம் தெரியாத்தனமாக சீர்மிகுந்த சென்னைக்கு வந்து மாட்டிக் கொண்டது. ஒரே பெட்ரோல், டீசல் புகை கூவத்தின் மல்லிகை மணம் தேவதைக்கு பழக்கப்படாத ஒன்று அதற்கு கண்ணும் எரிந்தது வயிறும் குமட்டியது எதாவது மரநிழல் அகப்படாத என தேடிப்பார்த்து கடைசியில் ஒரு முட்டு சந்தில் தகர கொட்டையில் நிழலில் வந்து ஒதுங்கியது.


     சென்னையில் ஒவ்வொரு மனிதனையும் பார்க்க அதற்கு வியப்பாக இருந்தது. சிரிப்பே இல்லாத உதடு அன்பே இல்லாத கண்கள், அரவணைக்க தெரியாத கைகள் கொண்ட மனிதர்களை முதல் முறையாக அப்போது தான் பார்த்தது. நிச்சயம் பிரம்ம தேவனை பாராட்டித்தான் ஆகவேண்டும் வள்ளுவனையும், சாக்ரடிஸையும் படைத்த அதே பிரம்மன் தான் அவர்களுக்கு நேர் விரோதமான இவர்களையும் படைத்து இருக்கிறான். என்பதை அறியும் போது பிரம்மாவின் தொழில் திறமையை பாராட்டாமல் இருக்க முடியுமா?

  மொட்டை தலை, முன்னால் சரிந்து விழும் தொந்தி, வெண்ணையில் புரண்டு எழுந்தது போல் உடம்பில் மினுமினுப்பு கொண்ட தோற்றம் சென்னைக்கு புதிது என்பதினால் தகர கொட்டகையில் நின்ற தர்ம தேவதையை நெருங்கி ஆட்டோ டிரைவர் ஒருவன் என்ன சாமி ஊருக்கு புச்சா? என்று கேட்டான்

 அப்பனே நீ பேசும் மொழி எனக்கு புரியவில்லை இருந்தாலும் உன் வாகனத்தில் எனக்கு இந்த நகரத்தை சுற்றி காட்ட முடியுமா? என தேவதை கேட்டது அட என்னப்பா? எடக்கு மடக்கா தமிழ் பேசற செரி செரி ஏறி குந்து துட்ட கரிட்டா கொடுத்தா ஊர என்ன உலகத்தையே பீடி வழிச்சிகிட்டு சுத்தி காட்டுறேன் என்றான்.


  தேவதை உட்கார பெரிய குரலில் புகையை கக்கி ஆட்டோ கிளம்பியது கிளம்பிய வேகத்தில் தேவதையில் தொப்பை வித்தியாசமாக குலுங்கியது ஆட்டோகாரனுக்கு சிரிப்பை வரவழைத்து ஏனப்பா நகைக்கிறாய் என்று அது கேட்கவும் இன்னா சாமி நீ சும்மா ரவா லட்டாட்டம் தளதளன்னு கீற பாலும் நெய்யுமா துண்ணுவியோ? என கேட்டான்

 ஏன் நீ பால் சாப்பிடுவதில்லையா என தேவதை கேட்க ஆட்டோகாரன் புலம்ப ஆரம்பித்தான் வவுத்தெரிச்சல கௌம்பாத சாமி நாலு நாளா வூட்டாண்ட புள்ள பால்கோவா கிண்டி கொடுன்னு பிராணண வாங்குது கால் லிட்டர் பால் வாங்க வக்கில்லாம கெடக்கறன் ஆட்டோ ஓட்டுற துட்டு எண்ணை போட்டுக்கிறத்துக்கே சரியா பூடுது அப்பால நாஸ்தா, மதிய சோறு, ரவைக்கு கில்மால் வாங்க அல்லாட வேண்டிக்கீது, இதுல பாலும் நெய்க்கும் எங்க போறது என்றான்

ஏன் உங்கள் நாட்டில் அவ்வளவு பஞ்சமா வீதியில் நடமாடுகின்ற மக்களின் முகத்தை பார்த்தால் அப்படியொன்றும் தெரியவில்லையே  ஆபரண கடை, ஆடைகள் கடை எல்லாமே நிரம்பி வழிகிறதே பஞ்சமென்றால் எலும்பும் தோலுமாக அல்லவா நடமாட வேண்டும் என்று தேவதை கேட்க சாமி ஏதோ கொஞ்ச ஜனங்க சுமராகீறாங்க அத்த வச்சி அல்லாத்தையும் கணக்கு போட்டுடலாங்கீறியா? முடியாது அரிசி மட்டும் தான் மலிவு அதுவும் அடிக்கிற கப்புல கொடல பொறட்டுது, மத்தப்படி மளிகைசாம்மான் சீமஎண்ணெய், அடுப்பு சிலிண்டரரு வாங்க அல்லாட வேண்டி கீது


  தாகத்துக்கு நாக்குல நனைக்க தண்ணியில்லாலும் புட்டி தண்ணி ஜரூரா கிடைக்கும் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி மூணு ரூபாய்க்கு உப்பு போட்டாத்தான் துண்ண முடியும் என்ற நிலைமை வாயகட்டி, வயித்தகட்டி வாழ்ந்தா கூட நிறைய பேருக்கு கரண்ட் பீசு கட்ட முடியறதில்ல அப்படியே கட்டினாலும் எப்பவாச்சும் தான் கரண்ட் வரும், குப்ப தெரு, சாக்கட நாத்தம், கொசுக்கடி,சொறி நாய் கூட தூக்கம் அல்லாம் பலகி போச்சு நைனா அந்த கடுப்புல ஆறுதலுக்கு தான் ஜனங்க ரோட் மேல சுத்தது என்று விளக்கம் சொன்னான்.

    மக்களுக்கு இத்தனை கஷடமென்றால் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டியது தானே அத்தியாவசிய தேவைகள் உடனடியாக கிடைக்க வழி செய்வது தானே அரசாங்கத்தின் கடமை விலைவாசி உயர்வு, சுகாரதார சீர்கேடு இவை எல்லாம் மாற உங்கள் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? என்று அப்பாவித்தனமாக தர்ம தேவதை கேட்டது.

ஆக்காங்... எங்க குப்பத்து முண்ட கண்ணு கருப்பன் தான் இப்ப கவுன்சிலரு கெலிச்சவுடனே செங்குட்டுவன்னு பேரத்தான் மாத்திகிட்டாரு துண்டு பீடிக்கு வழியில்லாத பார்ட்டி இப்போ கார்ல ஜம்முன்னு குந்திக்கீன்னு போவுது பேட்ட முழுக்க மீட்டரு வட்டிதான் சீறுசு பெருசா முனு வூடு வூட்டாண்ட போயிட்டு வறத்துக்கே பொழுது சரியா இருக்கீது அவரு கவரத்த வுட்டுட்டு தெருவ பெருக்கி விளக்கு போட முடியுமா? கவுன்சிலர் கதையே இப்படித்துன்னா அப்பால எம்.எல்.ஏ, எம்.பி தலிவரு இவரு எல்லா எப்படின்னு சொல்ல தாவல என்று தனது பாணியில் ஆட்டோகாரன் சொல்வதை புரிந்து கொண்டு


  நல்லதப்பா வாகனத்தை நிறுத்து உங்கள் சிரமங்கள் விஷயமாக தமிழ் நாட்டு முதலமைச்சரை சந்தித்து பேசுகிறேன் என்று தர்ம தேவதை சொல்லவும் அவன் அதிர்ச்சி அடைந்து பட்டென பிரேக்கை அழுத்த ஆட்டோவில் இருந்த  தேவதை கண் முன்னாலேயே மறைந்தது

 தேவதை அப்படியே மேல் உலகிற்கு போயிருக்க கூடாதா? தெரியாதனமாக கோபாலபுரத்திற்குள் நடமாட ஆரம்பித்தது புதியவர்களின் நடமாட்டத்தை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி கவனித்த தளபதியின் படைத்தலைவர்கள் அவரிடம் காதை கடிக்க சிறிது நேரத்திலேயே ஸ்டாலின் முன்னால் தர்ம தேவதை கொண்டு நிறுத்தப்பட்டது

 நீ யார் ஏரியாவுக்கு புதியதாக இருக்கிறாயே தேர்தல் கமிஷன் உன்னை வேவு பார்க்க அனுப்பியதா என்று கேட்டார். அப்படியெல்லாம் ஒன்னுமில்லை நான் தர்ம தேவதை முதலமைச்சரை  பார்ப்பதற்காகவே வானத்தில் இருந்து வந்து இருக்கிறேன் என்று பதில் சொன்னது.


  சிறிது நேரம் அமைதியாக இருந்த ஸ்டாலின் கண்களில் நீர் துளிர்விட தர்ம தேவதைகளின் கைகளை பற்றிக் கொண்டு தழுதழுத்த குரலில் பேச ஆரம்பித்தார். தலைவர் கலைஞரின் மகத்தான மக்கள் தொண்டு மண்ணுலகையும் தாண்டி விண்ணுலகம் வரை எட்டி விட்டதா? இதை விட சந்தோஷம் வேறு ஒன்றும் இல்லை. முதலில் இந்த நல்ல சேதியை சோனியாஜீயிடம் சொல்ல வேண்டும். அப்போது தான் கலைஞரின் மாண்பு என்னவென்று அவருக்கு தெரிந்து கருணை காட்ட ஆரம்பிப்பார் என்று சொல்லிதோடு இல்லாமல் நீங்கள் சிரமம் பார்க்காது ஒருமுறை டில்லி சென்று சோனியாவையும், ராகுலையும் சந்தித்து கலைஞர் கல் வீடு கட்டி கொடுத்தது மருத்துவ காப்பீடு செய்தது, இன்னும் எல்லாவிதமான மக்கள் தொண்டுகளும் வானத்துவரை பரவி உள்ளது அதனால்  எங்கள மீது கருணை காட்ட சொல்லுங்கள் என்று வேண்டியும் கொண்டார்.

 தொண்டையை செருமி சரிபடுத்தி கொண்ட தர்ம தேவதை அப்படி எந்தொரு செய்தியையும் நான் மேலுகில் கேள்விபட்டு வரவில்லை. சென்னையில் ஒரு ஆட்டோகாரன் தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை, குடி தண்ணீர் இல்லை, சரியான சாலை வசதியில்லை, காய்கறி விலையெல்லாம் தாறுமாறாக ஏறிபோனது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு குதிரை கொம்பாக இருக்கிறது. தோட்டியிலிருந்து தொண்டைமான் வரை ஊழல் செய்கிறார்கள் என்று அடுக்கடுக்கான குறைகளை சொன்னான். அதனால் தான் முதல்வரை சந்தித்து விவரம் தெரிந்து போக வந்தேன் என்றது. 


அந்த நேரம் அழகிரி உள்ளே நுழைந்தார் என்ன இந்த குண்டு ஆசாமிக்கு ஏதாவது சொத்து பிரச்சனையா? நேரடியாக மதுரைக்கு வர சொல்ல வேண்டியது தானே என்று கேட்கவும் ஸ்டாலின் அழகிரியின் காதில் எதையோ கிசுகிசுத்தார் அழகிரியின் முகம் மாறிவிட்டது

 தர்ம தேவதையை பார்த்து நீங்கள் கேள்வி பட்டதெல்லாம் எதிர்க்கட்சிகாரர்கள் வேண்டுமென்றே கட்டிவிட்ட கதை அவர்களின் அராஜகம் எல்லை மீறி போய்விட்டது நீங்களே பாருங்களேன் போனவாரம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வரிசையில் கால் கடுக்க காத்திருந்து ஓட்டு போட்ட ஜனங்களுக்கு அவர்களின் ஜனநாயக கடமையை செய்ய சொல்லி அன்பளிப்பாக 1000மோ  2000 மோ கொடுக்க சொல்லி கலைஞர் உத்தரவிட்டார்.

அதை கூட ஒழுங்காக கொடுக்க முடியாமல் தேர்தல் கமிஷனை கையில் போட்டு கொண்டு ஜெயலலிதாவும் விஜயகாந்தும் தடுத்து மிகவும் தொந்தரவு செய்துவிட்டார்கள். இப்போது நடக்கும் கலைஞர் ஆட்சியை போல் எப்போதுமே நேர்மையான ஆட்சி இந்த நாட்டில் நடந்ததே இல்லை


 என்னையே எடுத்து கொள்ளுங்களேன் 25 வருடத்திற்கு முன்பு ஒரு ஓட்டை ஸ்கூட்டரில் தான் மதுரைக்கு சென்று குடியேறினேன். இன்று நான் மத்திய அமைச்சர், படிப்பறிவு இல்லையென்றாலும் 1000 கொலை குற்றச்சாட்டு என் மீது எதிரிகள் சுமத்தினாலும் ஒரு சாதாரண தொண்டனான என்னை மந்திரியாக்கி அழகு பார்க்கும் உயர்ந்த உள்ளம் கலைஞரை தவிர யாருக்கு வரும்

கனிமொழி என்ற பெண் கவிஞர் பல புரட்சி கருத்துக்களை கொண்ட புதுமை பெண் பெண்ணினத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவருக்கு மாநிலங்களவை பதவியை கொடுத்துள்ளார்.  ஒரு இளைய தலைமுறை பெண் கவிஞர் கயல்விழி என்று பெயர் அந்த புதிய கவிஞரின் கவிதைகளை உலகம் முழுவதும் கேட்க வேண்டும் என்பதற்காகவே பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து செம்மொழி மாநாட்டை நடத்தியவர் எங்கள தலைவர்

 இது மட்டும் அவர் சேவையில்லை சன் டி.வி என்கின்ற ஒரு தனியார் தொலைகாட்சி வாழ வேண்டும் தனியார் முதலீடு கெட்டுவிட கூடாது என்பதற்காக அரசாங்க கேபிள் டி.வி திட்டத்தையே கைவிட்டு தகவல் தொழில் வளத்தை காப்பாற்றியவர் அவர். அவர் மட்டும் அப்படி செய்யவில்லை என்றால் மாறன் சகோதர்கள் நொடிந்து போயிருப்பார்கள்


 ஓட்ட பந்தயத்தில் முன்னால் வருபவர்களுக்கு தானே முதல் பரிசு அந்த நியதியை கடைபிடித்து அலைகற்றை விற்பனையை உலகமே வியக்கும் வண்ணம் நடத்த காரணமாக இருந்தவர் ஒரு புதிய தொழில்முறையை அறிமுகப்படுத்திய தொழில் நுட்ப விஞ்ஞானி அவர் அவரிடம் குறை கண்டுபிடிப்பதும் சூரியனில் களங்கம் கண்டு பிடிப்பதும் ஒன்று தான் என மளமளவென பேசி கொண்டே போன அழகிரியை இடைமறித்து

 நீங்கள், கனிமொழி, கயல்விழி, மாறன் சகோதர்கள் எல்லோரும் முதல்வருக்கு உறவு தானே இதில் மக்கள் சேவை எங்கே இருக்கிறது என தர்ம தேவதை கேட்க பதில் சொல்ல முடியாமல் அழகரி திணற அவர்களை உறவு என்று பார்ப்பதே பெரிய தவறு அவர்கள் அனைவருமே தி.மு.காவின் அடிப்படை உறுப்பினர், திராவிட கொள்கையின் உண்மையான விசுவாசி அப்படிதான் பார்க்க வேண்டும் என்று சமாளித்து பதில் சொன்னார் ஸ்டாலின்.

    சரி நான் முதலமைச்சரை பார்க்க முடியுமா? முடியாதா என்று தர்ம தேவதை கராராக கேட்கவும் வேறு வழியில்லாமல் முதல்வரிடம் அழைத்து போனார்கள்

 தர்ம தேவதையை பார்த்த கலைஞர் புன் சிரிப்புடன் வரவேற்று சோபாவில் அமர சொன்னார் தேவதை அமர்ந்ததும் பார்த்தீர்களா? நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் பெரியார் பாசறையில் வளர்ந்தவன் இருந்தாலும் கடவுளான உங்களையும் மதித்து வரவேற்பதிலேயே என்னுடைய பரந்த மனம் உங்களுக்கு தெரியும் என்று முத்தாய்ப்பாக சொல்லி முகம் மலர சிரித்தார்

உங்களை நீங்கள் பகுத்தறிவுவாதி என அழைத்து கொண்டாலும் கடவுள் மார்களை பல கிண்டலும் கேலியும் செய்து அதை நிருபிக்க நீங்கள் பாடுபட்டாலும் உங்களின் மஞ்சள் துண்டு, ராசிகல் மோதிரம், சொந்த ஊரில் குலதேவதைக்கு பூஜை இன்னும் பல விஷயங்கள் மக்களால் சொல்லி ஏளனம் செய்யப்படுகிறதே உங்களை பகுத்தறிவு வாதி என சொல்லி கொள்ளும் நீங்கள் உங்கள் குடும்பம் பகுத்தறிவு குடும்பம் தான் என அதிகார பூர்வமாக சொல்ல முடியவில்லை ஏன் என்று தர்ம தேவமை கேட்டதும் முகம் கருத்து போய்விட்டார்.

 இருந்தாலும் சமாளித்து கொண்டு இந்த உலகில் சுத்தமான தமிழனுக்கு மரியாதை கிடையாது தமிழர்களுக்காக பாடுபடுபவர்களை கேலி பேசுவது தான் உலக மரபு இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என் உயிர் உள்ள வரை தமிழுக்காகவும், தமிழனனுக்காகவும் பாடுபடுவேன் என்று சொல்லி சமாளிக்க பார்த்தார் 


ஆனால் தேவதை விடுவதாக இல்லை தமிழர்களுக்காக பாடு படும் நீங்கள் இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன் என கிடுக்கி பிடிபோட்டது

 யார் அப்படி சொன்னது தமிழர்படும் இன்னலுக்காக நான் தனிமையில் உட்கார்ந்து எத்தனை முறை குலுங்கி குலுங்கி அழுதேன் என்று எனக்கு மட்டுமே தெரியும் என் உள்ள குமுறலை எல்லாம் எழுத்தில் வடித்து மத்திய அரசுக்கு கடிதமாக அனுப்பினேன் அதில் தெரியவில்லையா என் அக்கறை

அழகிரி என்ற மறதமிழனுக்கு மத்திய அமைச்சர் பதவிகொடுக்க முடியாது என்ற போது பதவி தராவிட்டால் ஈழ தமிழருக்காக வெளிப்படையாக போராடுவேன் என மத்திய அரசை மிரட்டிய போது புரியவில்லையா? என் கரிசனம்,

எதிர்கட்சிகாரர்கள் எல்லாம் பிராமணர்கள், மேட்டுகுடி மக்கள், நானோ தாழ்த்தப்பட்டவன் குடிசையில் பிறந்தவன் என்னை குறை காண்பது தான் அவர்களின் குறிக்கோள் அவர்கள் விரிக்கும் சதிவலையில் எப்போதும் நான் விழ மாட்டேன். என்று ஆக்ரோஷமாக கலைஞர் சொல்ல நீங்கள் குடிசையில் பிறந்தவர் என்பது உண்மைதான் பிறகு இத்தனை சொத்து சுகங்கள் உங்களுக்கு எப்படி வந்தது ஏதாவது வியாபாரம் செய்தீர்களா என்று தர்ம தேவதை அடுத்த கேள்வியை கேட்கவும் கலைஞர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். 


    முதுகு வலிக்க குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியாத உடல் எனக்கு இருக்கலாம் ஆனால் என் மூளையில் ஆயிரம் யானையின் பலம் இருந்தது நான் கதை வசனம் எழுதிய திரைபடங்கள் ஏராளம் எனக்கு புகழை வாங்கி தந்த புத்தகங்கள் ஏராளம் அவற்றால் வந்த செல்வங்கள் தான் இவை என்று சுடச்சுட பதில் சொன்னார். கருணாநிதி

நீங்கள் ஒன்றும் ஆங்கில நாவல் எழுதவில்லையே கோடி கோடியாக சம்பாதிப்பதங்கு ஹாரிபாட்டார் நாவல் எழுதி பல்லாயிரம் கோடி சம்பாதித்தவர் கூட உங்கள் அளவு சொத்து சேர்க்கவில்லையே என தேவதை விளக்கம் கேட்க தர்மம் என்பது ஆரியர்கள் கண்டுபிடித்த மாயைவலை நீ அவர்களின் பிரிதிநிதி தானே உனக்கு திராவிடர்களை கண்டால் இளக்காரமாகத் தான் இருக்கும் வேறென்ன கேட்க வேண்டுமா அதை சீக்கிரமாக கேட்டு தொலை எனக்கு ஆயிரம் பணி இருக்கிறது என்று கடுப்பாக கலைஞர் முணுமுணுத்தார் நீங்கள் வயதானவர் நல்ல அனுபவசாலி வாழ்வில் ஏற்ற தாழ்வுகளையெல்லாம் பார்த்தாகிவிட்டது பெற வேண்டியவைகளையும் பெற்றாகிவிட்டது இனியாவது மக்களுக்கு உண்மையான நன்மையை செய்யலாமே அதை அறிவுருத்தவே நான் வந்தேன் என்று சொல்லிய தர்மதேவதை அங்கிருந்து மறைந்தது.


    கோபாலபுரத்தில் இருந்து வெளியேறிய தேவதை போயஸ்கார்டனுக்கு வந்து ஜெ.ஜெயலலிதா அவர்களின் வீட்டுக்குள் செல்ல முயன்ற போது பாதுகாவலர்களால் தடுக்ககப்பட்டது. யார் நீ எங்கிருந்து வந்தாய் யாரை பார்க்க வேண்டும் என்று அடுக்கடுக்கான கேள்விகளும் கேட்கப்பட்டது

அதற்கு தர்மதேவதை ஜெயலலிதா அவர்களை சந்திக்க வேண்டும் என் பெயர் தர்ம தேவதை என பொறுமையாக பதில் கூறியது தர்ம தேவதையோ கால தேவதையோ யாராக இருந்தாலும் மேடத்தை பார்க்க வேண்டுமென்றால் அப்பாயிமெண்ட் வாங்க வேண்டும் அப்பாயிமென்ணட் இல்லையென்றால் நடையை கட்டி விட வேண்டியது தான் என பாதுகாப்பு அதிகாரி சொல்ல சரி பரவாயில்லை நான் அப்பாயிமெண்ட் வாங்கியே அவர்களை சந்திக்கிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? வழிமுறை என்ன? என்று தர்மதேவதை கேட்டது

 அந்த பாதுகாப்பு அதிகாரிக்கு தேவதையின் மீது இரக்கம் வந்திருக்க வேண்டும் அதனால் குனிந்து மெல்லிய குரலில் மேடத்தை பார்க்க அப்பாயிமென்டுக்கான வழிமுறை மிகவும் கஷடமானது கழகத்தின் கிளைசெயலாளர் துவங்கி பொது செயலாளர் வரைக்கும் ஏகப்பட்ட சிபாரிசு லெட்டர் தேவைப்படும் எல்லாவற்றையும் முடித்து வர குறைந்தது பத்து மாதமாவது ஆகும் நீ கஷடப்பட்டு அப்பாயிமென்ட் வாங்கி வந்து நிற்பாய் அந்த நேரம் பார்த்து மேடம் எதாவது ஒரு எஸ்டேட்டிற்கு ஓய்வுக்காக போய்விடுவார்கள் அந்த சிரமம் எல்லாம் படாமல் சின்ன மேடத்தை பார்த்து விஷயத்தை சொல்லு காரியம் கன்ணென்று முடிந்துவிடும் என்றார் தர்மதேவதையும் சரி சின்ன மேடம் எங்கிருப்பார்கள் என்று குழந்தை தனமாக கேட்க போச்சு போ! உனக்கு உலகமே தெரியாது போலிருக்கிறது சின்ன மேடத்தை பார்ப்பது அவ்வளவு சுலபமா என்ன? அவர்களிடம் அப்பாயிமென்ட் கிடைப்பதற்கே ஆறுமாதம் காத்திருக்க வேண்டும் என்று அதிகாரி சொல்ல சரி நான் பிறகு வருகிறேன் என்று தர்ம தேவதை அவர் கண்ணெதிரேலேயே மறைந்து ஜெயலலிதா அம்மையார் முன் திடிரென்று போய் நின்று தன்னை தர்மதேவதை என்று அறிமுகப்படுத்தி கொண்டது.

    ஜெயலலிதா மிகவும் சந்தோஷமாகி விட்டார் தீய சக்தியான கருணாநிதியை எதிர்த்து தர்மவழியில் போராட்டம் நடத்தி கொண்டு நான் இருப்பதினால் தான் தர்மதேவதையாகிய நீயே என்னை தேடி வந்திருக்கிறாய் இப்போதாவது உலகத்திற்கு நான் தான் தர்மத்தின் பிரதிநிதி என்ற உண்மை தெரியட்டும் என்று கலகப்பாக பேச்சை துவங்கினார்

எனக்கே இந்த பூமியில் வேலையில்லை பிறகு எனக்கு எதற்கு பிரதிநிதி நான் உங்களை கௌரவப்படுத்த வரவில்லை சில விளக்கங்களை கேட்கவே வந்தேன் என தர்ம தேவதை பதில் சொல்லவும் ஜெயலலிதாவின் முகம் சோர்ந்துவிட்டது.


  இன்று உங்கள் தமிழ்நாடு பல லட்ச கோடி ரூபாய் கடனில் உள்ளது. எல்லாமே இலவச திட்டங்களினால் தான் பொருளாதார பிரச்சினை உருவானது என நீங்களே குற்றம் சாட்டியிருந்திர்கள் இப்போது அதை மறந்து பல இலவச திட்டங்களை அமுல்படுத்தப்போவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்து இருக்கிறீர்கள் இதையே கருணாநிதி செய்தால் நாடு கடன்படும்  நீங்கள் செய்தால் மட்டும் ஒன்றும் ஆகாதா என்று தேவதை கேட்டது.

உன் பேச்சில் கோபாலபுரத்து வாசைனை வீசுகிறது அலைகாற்றை ஊழலில் வந்த பணத்தில் உனக்கும் பங்கு தந்துவிட்டாரா? மைனாரிட்டி முதல்வர் அவர் இலவசதிட்டங்களை அறிவித்தது தனது குடும்பம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக நான் அறிவித்து இருப்பதோ மக்கள் நலத்தை மட்டுமே மனதில் வைத்து என ஜெ பதில் சொன்னார்

அவருக்கு சொந்த குடும்பம் இருப்பது போல உங்களுக்கு தோழியின் குடும்பம் இருப்பதாக மக்கள் பேசி கொள்கிறார்களே நீங்கள் முன்பு ஆட்சியில் இருந்தபோது உங்கள் தோழியின் உறவினர்கள் நடந்து கொண்டதை போல தானே இப்போது இவர்கள் நடந்து கொண்டார்கள் என்று தர்ம தேவதை கேட்டவுடன் ஜெயலலிதாவின் முகம் ஜிவ்வென்று சிவந்துவிட்டது 


  தி.மு.காவில் கலைஞரின் அதிகாரம் என்று எதுவுமே இல்லை எல்லாம் அவர்கள் வாரிசுகளின் கையில் தான் உள்ளது. அ.தி.மு.காவின் நிலை அப்படியல்ல இங்கு என்னை தவிர யாரும் முடிவெடுக்க முடியாது அண்ணாவின் வழியில் புரட்சி தலைவரின் வழியில் நான் எடுக்கும் முடிவுகளுக்கே கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் செவி சாய்ப்பார்கள் என்று பெருமையுடன் அதே நேரம் ஆத்திரத்துடன் ஜெ பேசுவதை இடமறித்து நீங்கள் சொல்வதை முழுமையாக நம்ப மக்கள் இப்போது தயங்குகிறார்கள் உங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் நடந்த குழப்பம் மக்களின் நம்பிக்கையின்மையை உறுதிப்படுத்தி இருக்கிறது என்றது தர்ம தேவதை.

        நீ சொல்வதெல்லாம் எதிர்கட்சிகாரர்கள் கட்டிவிட்ட கதை நான் மக்களுக்காக வாழ்பவள் மக்கள் நலன் மட்டுமே என் உயிர்மூச்சி எனது ஆட்சியில் இப்போது போல் காட்டுதர்பார் நடக்கவே இல்லை இது உறுதி என்று உயர்ந்த குரலில் ஜெ சொல்லவும் இது மட்டும் காட்டாச்சி அல்ல உங்கள் மீது நீதிமன்றம் கொடுத்த நெருக்கடிக்காக சம்பந்தமே இல்லாத அப்பாவி மாணவிகள் தர்மபுரியில் உயிரோடு எரிக்கப்பட்டார்களே அதுவும் காட்டாச்சிதானே  நீங்கள் வீட்டில் புறப்படுவதற்கு முன்பே சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி வைத்து பொது மக்களுக்கு தேவையற்ற கஷ்டங்களை கொடுத்தீர்கள் அதுவும் காட்டாச்சி தானே

 மாற்றிகட்ட ஒரு முழ துணியில்லாத மக்கள் வாழும் நாட்டில் ஆடம்பர பொருட்களை வாரி குவித்து வைத்திருந்தீர்களே நீங்களும் உங்கள் தோழியும் உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிந்து மகாராணிகள் போல் பவனி வந்தீர்கள் அதுவும் காட்டாச்சு தானே என வரிசையாக தர்ம தேவதை குற்றசாட்டுகளை அடுக்க நெருப்பாகவே மாறிவிட்டார் ஜெயலாலிதா

 உனக்கு என்ன துணிச்சல் மைனாரிட்டி முதல்வரின் ஆட்சியையும் என் ஆட்சியையும் ஒப்பிட்டு பேசுவதற்கு இதற்காகவே சுப்ரமணியம் ஸ்வாமியை விட்டு உன் மீது வழக்கு போடுவேன் என்று கோபமாக எழுந்தார். சற்று பொறுங்கள் அம்மணி இந்த சுப்ரமணிய ஸ்வாமி மீது உங்கள் கட்சிகாரர்கள் தான் செருப்புகளை வீசினார்கள் உங்கள் கழக பெண்மணிகள் மொட்டை துடைப்பத்தால் வரவேற்பு நடத்தினார்கள் இதற்கெல்லாம் உச்சமாக சுப்ரமணிய ஸ்வாமியின் கட்சிளை சேர்ந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ் மீது ஆசிட் முட்டை வீசினார்கள் வழக்கறிஞர் விஜயனை வன்முறையால் அபிஷேகம் செய்தீர்கள் இவையெல்லாம் மீண்டும் நடக்காது என்பதற்கு உங்களால் உத்திரவம் தர முடியுமா? என்று தர்மதேவதை கேட்கவும் ஜெயலாலிதா ஆவேசத்தில் அறையை விட்டே வெளியேறி விட்டார் வேறு வழியில்லாத தர்ம தேவதை போயஸ் கார்டனில் இருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு வந்ததது.

    தைலாபுரத்திற்குள் நுழைந்த தர்ம தேவதைக்கு தடபுடலான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இனமான காவலர் ஐயா ராமதாஸே நேரில் வரவேற்று உபசரித்தார் வாருங்கள் உங்களைப் பார்த்தால் போயஸ் தோட்டத்திலிருந்து வருவது போல்தான் தெரிகிறது அன்பு சகோதரி ஏதாவது செய்து சொன்னார்களா தேர்தலின் போது சகோதரி அழைக்காததனால் தான் கலைஞரோடு கூட்டணி வைக்க வேண்டிய தர்மச் சங்கடம் ஏற்பட்டது வரப்போகும் தேர்தல் முடிவு அன்பு சகோதரிக்கு சாதகமாக அமைந்தால் நாங்கள் அவர்களோடு மக்கள் பணி ஆற்றுவதில் எந்த தடையும் இல்லை எப்படியோ அன்புமணிக்கு ராஜசபா சீட்கிடைத்தால் சரி என்று வளைந்து நெளிந்து பேசினார்.

 
   நீங்கள் நினைப்பது போல் நான் ஜெயலாலிதாவின் தூதன் அல்ல நான் தர்மதேவதை சில விளக்கங்கள் பெறவே உங்களை நாடி வந்தேன் என்று தர்ம தேவதை சொன்ன உடன் ராமதாஸின் உற்சாகம் எல்லாம் குறைந்து விட்டது தர்மதேவதையா நான் யாரோ என்று நினைத்து ஏமாந்து போய்விட்டேன் நீங்கள் விளக்கம் பெற வேண்டும்மென்றால் மக்கள் தெலைக்காட்சி அலுவலகததிற்கு போயிறுக்காலாமே திண்டிவனம் வரையில் வர வேண்டுமா என்ன? என்று சொல்லி விட்டு சரி என்ன விளக்கம் என்று கேட்கவும் செய்தார்.

உங்கள் கட்சி பிறந்த இடம் சாலைமறியல் மரங்களை வெட்டி சாய்த்தல் என்பவைகளில்  இருந்து தான் என பேசப்படுகிறதே அது உண்மையா? என்று தேவதை கேட்டது வடதமிழகத்தை அரசாண்டதே வன்னியர்கள் தான் ஆண்ட மக்கள் இன்று அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் நான் அந்த அடிமைகளின் உரிமைக்குரல் எனவே ஆளும் வர்க்கம் எப்போதுமே எங்கள் மீது புழுதி வாரிதான் தூற்றும் நாங்கள் மரங்கள் வெட்டியதை பேசுபவர்கள் பசுமை தாயகம் மூலம் மரம் நட்டதை ஏன் பேச மறுக்கிறார்கள் இன்றும் வருடா வருடம்  பல்லாயிரம் மரங்களை நட்ட இடத்திலேயே நட்டு கொண்டு இருக்கிறோம் தொடர்ந்து அதை செய்வோம் தமிழ்நாட்டை பச்சையாக மாற்றுகின்ற வரை விடப்போவது இல்லை என்று உணர்ச்சி வசப்பட்டு ராமதாஸ் பதில் சொன்னார்.


   நீங்கள் தேர்தலுக்கு தேர்தல் கொள்கையே இல்லாமல் அணிமாறுவதாக சொல்லப்படுகிறதே அது உண்மையா என்று தர்மதேவதை அடுத்த கேள்வியை கேட்க இது அபாண்டமான பொய் ‘பாட்டாளி மக்கள் கட்சி’ சரித்திரத்திலேயே அணி மாறுதல் என்ற பேச்சிக்கே இடமில்லை நாங்கள் ஒரு சமயம்  ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்திருந்தோம் எதற்காக அவர் பெரியார் கொள்கைப்படி நடக்கிறார் என்பதற்காக இன்னொரு முறை கருணாநிதியோடு கூட்டணி வைத்தோம் எதற்காக அவரும் பெரியார் கொள்கைப்படி நடக்கிறார் என்பதற்காக ஆக எப்போதுமே எங்கள் கூட்டணி பெரியார் கொள்கையோடுதான் இது புரியாத தெரியாதவர்களை பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை

    நீங்கள் கட்சி ஆரம்பித்த புதிதில் எனது உறவினர்கள் எவரும் அதிகாரப்பதவிகளுக்கு வரமாட்டார் என சொன்னீர்களே பிறகு எப்படி உங்கள் மகனுக்கு மந்திரி பதவி வாங்கி கொடுத்தீர்கள் என்ற கேள்வியை தர்மதேவதை கேட்கவும் ராமதாஸ் சூடாகிவிட்டார் வன்னீயர் நிலை உயரவேண்டும் என்பதற்காகவே அன்புமணி பதவிக்கு வந்தார் வன்னிய மக்களின் விரோதிகள் பழைய பிணத்தை சுமந்து கொண்டு இந்த கேள்வியை கேட்டு கொண்டே இருக்கிறார்கள் அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று விராப்பாய் பேசிய ராமதாஸ் தேவதையின் காதுக்கருகில் வந்து உனக்கு ராகுல் காந்தியிடம் பழக்கம் உண்டா இருந்தால் அன்புமணிக்கு ராஜசபா சீட் வாங்கி தர முடியுமா என கேட்க தேவதை பயந்து ஓடியது.


Contact Form

Name

Email *

Message *