Store
  Store
  Store
  Store
  Store
  Store

உடம்பும் உயிரும் நீயே அம்மா

 இந்து மத வரலாற்று தொடர் 13
ம்மா

 இந்த மூன்று எழுத்தில் எத்தனை சுகம், எத்தனை இதம், எவ்வளவு பாதுகாப்பு நடந்து போகும் காலில் சின்ன சிறு கல் பட்டாலும் நம்மையும் அறியாமல் அம்மா என்று தானே கத்துகிறோம். எனக்கொரு வலி என்றால் என்னால் தாங்க முடியாத துயரம் வருகிறது என்றால் அதை உண்மையாகவே என்னிடம் இருந்து விரட்டுவதற்கு பாடுபடும் ஒரே ஜீவன் அம்மா தானே,

 இந்த உலகில் ஒரு ஜீவனாக பிறந்து கண் விழித்ததும் பார்த்தது அவள் முகம் தானே, அவள் இல்லையென்றால் நான் ஏது? திறமைகள் ஏது? எனக்கு வளர்ச்சி தான் ஏது? அம்மாவிடம் எனக்கு பயமில்லை, அம்மாவிடம் எனக்கு வெட்கமில்லை, நான் வயது முதிர்ந்து கிழவனாகி விட்டாலும் நாடி நரம்பெல்லாம் ஓடி ஒய்ந்து தளர்ந்து போய்விட்டாலும் அவளை காணும் போது நான் குழந்தையாகி விடுகிறேன்.


     கடவுளின் அருளில் கூட கலப்படம் இருக்கலாம், அழகான ரோஜா மலர் கூட நறுமணத்தை தராமால் இருக்கலாம். ஆனால் அம்மாவின் அன்பில் கலப்படம் இருக்காது. எப்போதுமே மாறுதல் இருக்காது. நான் என் தாயின் மீது அன்பு வைக்கலாம், வைக்காமல் கூட இருக்கலாம், வைப்பது போல் பாசாங்கு கூட செய்யலாம். ஆனால் அதை பொருட்படுத்தாமல் நான் நிஜமா? பொய்யா? என்று ஆய்வு செய்யாமல் என் மீது பரிபூரணமான அன்பை செலுத்துவது அம்மா தான். அம்மா மட்டும் தான்.

      அதனால் தான் உலகத்தை ஆண்ட தமிழ் குடிமக்கள் பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்றார்கள். கெட்ட பிள்ளைகள் இருக்கலாம், கெட்ட தாய் என்று உலகத்தில் ஒருத்தி கூட இல்லையென்று தேவி பாகவதம் சொல்கிறது. பிறக்கின்ற போதே அம்மாவின் உடம்பில், அம்மாவின் உயிரில் அம்மாவின் குருதியில் ஒட்டிக்கொள்கிறோம். அதனால் தான் அறுசுவை பதார்த்தம் கூட அவள் ஊட்டும் ஒரு பிடி சாதத்தின் முன் சுவையை தர முடியாமல் மண்டியிடுகிறது.

  வளர்ந்து விட்டோம், ஆயிரம் பொறுப்புகளை சுமக்க முடியாமல் சுமந்து தள்ளாடுகிறோம். செல்வமும், செல்வாக்கும் நம்மை சூழ்ந்து இருக்கிறது. ஆனாலும் மனம் எங்கும் துயர அரக்கனே சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறான், ஆட்சி செய்கிறான். இவனின் கோரபிடியிலிருந்து ஒரு விநாடியேனும் விடுபடமாட்டோமா என நெஞ்சம் பறக்கிறது, படபடக்கிறது. பிள்ளை பிராயத்தில் மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடியதையும், மணல் வீடு கட்டி விளையாடியதையும் நினைத்து நினைத்து உருகுகிறோம்.


   அப்போது மட்டும் நம்மிடம் இன்பம் மட்டுமே குடி கொண்டு இருந்ததற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? என் உடம்பு அழுக்கானால் அம்மா குளிப்பாட்டுவாள், எனக்கு நோய் வந்தால் அம்மா மருந்து தருவாள், எனக்கு பசிபிறக்கும் முன்பே சாதத்தை ஊட்டி என்னை போஸிப்பாள், என்று எல்லா பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு நாம் சும்மா இருந்தோம். அதனால் சுகமாக இருந்தோம். எப்போது என்னை நான் பார்த்து கொள்வேன் என செயல்பட துவங்கினோமோ அப்போதே துயரம் என்ற காரிருள் நம்மை சூழ ஆரம்பித்துவிட்டது.

        அம்மா தான் எல்லாம் என்ற ஞானம் மனிதனுக்கு புதியதாக வந்ததல்ல, பச்சை மாமிசத்தை தின்று இலை தழைகளால் உடல் மறைத்து மரக் கொம்பிலும், குகைக்குள்ளும் மனிதன் வாழ்ந்த போதே இதை உணர்ந்துவிட்டான். இதனால் தான் தாயாரை தெய்வமாக கருத வேண்டும் என்ற நிலையில் இருந்து தெய்வத்தையே தாயாக எண்ணி வழிபட ஆரம்பித்துவிட்டான். அன்று முதல் தோன்றியது தான் தாய் தெய்வ வழிபாடாகும்.

       நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நினைந்திருக்கும் பராமாத்மாவை பரம தாயாளனான  இறைவனை தாயாக ஒரு பெண்ணாக பார்ப்பது மனிதனின் கற்பனையல்ல. எல்லாமான எம்பெருமானுக்குள் எல்லாமும் இருக்கிறது. ஒரு தாயினுடைய அன்பில் மூலம் எங்கே இருந்து வருகிறது. எந்த விரலை தொட்டாலும் அறிய முடியாத பாசத்தை  உணர்கிறோமே அந்த கருணை, அந்த பாசம் எங்கே இருந்து வருகிறது எது அதனின் மூலம் என்று நெருங்கி பார்த்தால் கருணாமூர்த்தியான கடவுளிடம் இருந்து வருவதை உணர முடிகிறது.


   அதனால் தான் இறைவனுக்குள்ளும் இறைவி இருக்கிறாள் என நமது முன்னோர்கள் சொன்னார்கள். தாயிற் சிறந்த தயாவான தத்தவனே என மாணிக்கவாசகர் சொல்வதும், அப்பன் நீ, அம்மை நீ என்று அப்பர் சாமிகள் சொல்வதும் இதனால் தான். ஓங்கி உலகளந்து நிற்கின்ற பராமாத்மா நமது உடலையும் உயிரையும் வளர்கின்ற அம்மாவாகின்றான். அறிவை வளர்த்து ஆத்ம அனுபவத்தை தருகின்ற அம்மாவும் அவன் தான். மனித தாய் வயிற்று பசிக்கு பால் தருவது போல தெய்வ தாயான கடவுள் நம் ஞான பசிக்கு மோன வழியில் ஞான பால் தருகிறான். இப்படி இன்னும் ஏராளமான காரணங்களை தனக்குள் கொண்டு வளர்ந்து தான் சக்தி தத்துவம் என்ற சாக்த்த மத பிரிவாகும்.

        இந்து மத வரலாற்றை தொடர்ச்சியாக படித்து வரும் நாம் முதலில் வழிபாடு என்பதே சிவலிங்கத்தில் இருந்து தான் துவங்கியது என கண்டோம். சிவ வழிபாடு என்பது எப்படி காலத்தால் கணித்து கூறமுடியாத அனாதிகாலம் தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறதோ அதே போலவே சக்தி வழிபாடு என்பதும் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்து சமயத்திலுள்ள வைஷ்ணவம், சௌரம், கௌமாரம், காணாபத்தியம் போன்ற பிரிவுகள் எல்லாம் சிவ சக்தி வழிபாட்டுக்கு பிறகே வந்தது என்று சொல்வதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனவே அடுத்து வரும் சில பகுதிகளில் தாய் தெய்வ வழிபாடு என்ற சக்தி வழிபாட்டின் தத்துவத்தையும் மகத்துவத்தையும் சிறிது பார்ப்போம்.


     தாய் தெய்வ வழிபாட்டில் என்ன மகத்துவம் இருக்கப்போகிறது ஊர்தோரும் இருக்கும் அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் நெருப்பு மிதித்து சாக்கை ஊற்றுவது தான் அதன் மகத்துவமாக இருக்கலாம் என்று சிலர் கேலி பேசுவதும் உண்டு அலகுகுத்தி, ஆடு, கோழிகளை வெட்டி கொண்டாடும் வழிபாட்டில் தத்துவம் இருப்பது அதிசயம் அல்ல விநோதம் என்றும் சிலர் பேசலாம். இவைகள் வெறும் கேலி மொழியாகவோ விதண்டாவாதமாகவோ நாம் எடுத்து கொள்ளலாம் அப்படி எடுத்து கொண்டால் அது சரியானதாக கூட தோன்றும் ஆனால் உண்மை நிலையை அது பிரதிபலிப்பதாக இருக்காது.

   நமது இந்தியாவில் காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை நடைபெற்றுவரும் உயிர்பலி சடங்குகளில் பல அன்னை வழிபாட்டின் பெயரிலேயே நடக்கிறது எனலாம். அழகான மண்பானடங்களை செய்து வைத்த குயவனின் முன்னாலேயே அந்த பாண்டங்களை அடித்து உடைப்பது எப்படி மனிதாபிமானம் இல்லாத செயலோ அப்படியே எல்லா உயிர்களுக்கும் தாயாக இருக்கின்ற அன்னை அகிலாண்டேஷ்வரி முன்னால் உயிர்பலி செய்வதும் ஆகும்.

  எனவே தாய் தெய்வ வழிபாட்டில் உயிர்பலிகளும், கண்முடிதனமான பழக்கவழக்கங்களும் நிறைந்திருப்பதாகவே மேலோட்டமாக பார்க்கும் போது நமக்கு தோன்றும் இது மட்டுமல்ல தனது குழந்தையின் இரத்தத்தை விரும்பி சுவைப்பவள் தாயாக இருக்க முடியுமா அப்படி பட்டவளை உலக அன்னையாக வழிபடுவது சரிதானா என்ற எண்ணம் எழும்பினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


   ஆதிகால மனிதன் வேட்டையாடி உயிர் கொலை செய்து தான் வாழ்கையை நடத்தினான். அப்படி வாழ்ந்த போது தனக்கு எது பிரியமாணதோ, தனக்கு எது சுவையுடையதாக தெரிகிறதோ அதையே தான் வணங்கும் தெய்வத்திற்கு சமர்பித்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதே போல தான் ஆரம்பகால பழக்கத்தை கைவிட்டுவிட துணிச்சல் இல்லாமல் இன்று வரை பலியிட்டு வழிபடுவதை கடைபிடித்து வருகிறான்  இதை நிறுத்திவிட்டால் தீங்கு ஏதாவது நடைபெற்று விடுமோ என்று அச்சப்படவும் செய்கிறான்

  மேலும் பலிகொடுத்து வழிபடுவது என்பது இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான நடைமுறை அல்ல, யூத மதத்திலும், இஸ்லாம் மதத்திலும் கூட இத்தகைய வழிபாட்டு முறை இருந்து வருகிறது. ஆனால் நமக்கு அம்மன் கோயில் திருவிழாவில் ஆடு, கோழி பலியிடுவதுதான் காட்டுமிராண்டிதனமாக தெரிகிறதே தவிர \மொஹரம் பண்டிகையில் உயிர்பலி கொடுப்பது தவறுதலாக படவில்லை காரணம் உலகிலேயே இந்து மதத்தார் மட்டும்தான் தன்னைதானே இழிவுபடுத்தி கொள்ளும் ஜாதிகளாக இருக்கிறார்கள். அடுத்தவர்களின் குறை நிறையாக மட்டுமல்ல மேன்மை தங்கியதாகவும் நமக்கு படுகிறது.


    முதலில் இந்த நிலையை நாம் மாற்றவேண்டும். வளர்ந்து விட்ட நாகரிக சமூகத்தில் கூட மிக தொன்மை வாய்ந்த பழக்கவழக்கங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறாது இதனால் பல நன்மைகளுக்கும் சாதத்தில் கல் இருப்பது போல சில தீமைகளும் இருக்கலாம் அதனால் அந்த தீமைகளை படிப்படியாக தான் குறைக்க வேண்டுமே தவிர ஒட்டுமொத்தமாக ஒழித்துகட்டிவிட முடியாது. உலகத்தில் உள்ள எல்லா ஜீவன்களுமே அன்னை பராசக்தியின் குழந்தைகள் தான் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரும் போது உயிர்பலி சடங்கு தானாக முடிந்துவிடும்.
   
 அடுததாக தீ மிதித்தல் அலகுகுத்துதல் போன்ற முரட்டுதனமான வழிபாட்டு முறையை விமர்சனம் செய்பவர்கள் இது தான் அம்மன் வழிபாடு தந்த கொடை என்கிறார்கள். அவர்கள் ஒரு விசயத்தை மிக நன்றாக உணர வேண்டும். நெருப்பை வளர்த்து அதை தனிய விட்டு அதனுள் இறங்கி மற்றவர்களை நடக்க வைத்து நான் மட்டும் அழகுபார்த்தேன் என்றால் அது தவறு மட்டும்மல்ல மனிதாபிமானமற்ற செயலாகும்.

 ஆனால் இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை நான்தான் வெறும்காலுடன் நெருப்பு குண்டத்தில் இறங்குகிறேன். அதன் சூடும், வெப்பமும் என்னை மட்டும் தான் தாக்குகிறது. அலகு குத்துவதும், அருவாள் மேல் நடப்பதும் ஏறகுறைய அப்படிதான் எந்த வகையிலாவது மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளின் மீது லயிக்க வேண்டுமென்று இந்து மதம் சொல்கிறது. நான் முரடன், மிக கடினமான உடல் வேலைகளை செய்து பழக்கப்பட்டவன் எனக்கு எதுவும் சுலபமாக, சுகமாக இருந்தால் மனம் ஒட்டாது வியர்வை வழிய கண்கள் ஏறிய பாடுபட்டால் தான் மனம் ஒட்டும் அதனால் தான் இந்த இராட்ச்சஷ வழிபாடு இதனால் யாருக்கும் தீங்குயில்லையே அதனால் இதில் தவறு இல்லை.


    இந்து மதத்தில் மட்டும் தான் இத்தகைய முரட்டு வழிப்பாட்டு முறை இருப்பதாக யாரும் கூற இயலாது கல்வாரி மலைக்கு சிலுவையில் அரைவதற்காக இயேசு நாதர் அழைத்து செல்லப்பட்ட பாதையில் இன்றும் ஏராளமான பக்தர்கள் தோழில் சிலுவையும் தலையில் முட்கீரிடமும் தாங்கி நடக்கிறார்கள். சாட்டையால் கூட அடிவாங்கி கொள்கிறார்கள், ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாட்டு முஸ்லிம்கள் தங்கள் உடம்பில் காயம் ஏற்படும் அளவிற்கு கத்தியாலும் சங்கிலியாலும் அடித்து கொள்கிறார்கள். எனவே முரட்டு வழிபாடு என்பது உலகில் சகஜம் தான் என்பதை உணர்ந்து சக்தி வழிபாட்டின் மகத்துவத்தை உணர பயணத்தை தொடர்வோம்.




Contact Form

Name

Email *

Message *