Store
  Store
  Store
  Store
  Store
  Store

அம்மாவை வணங்க சாட்சி எதற்கு...?

 இந்து மத வரலாற்று தொடர் 14

    ன்னை வழிபாடு ஆதிகாலம் தொட்டே இருக்கிறது என முன்பே சொன்னேன். அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என சிலர் கேட்கலாம். ஏன் என்றால் இப்போதெல்லாம் உப்பு இருந்தால் தான் திண்பண்டம் தொப்பையில் இறங்குவது போல் ஆதாரமென்று எதையாவது காட்டினால் தான் விஷயம் மண்டைக்குள் இறங்குகிறது. இன்னும் சிலர் இருக்கிறார்கள் தொன்மையானதாக, பழமையானதாக இருந்தால் மட்டும் போதுமா? அது மட்டுமே ஒன்றிற்கு சிறப்பை சேர்க்குமா? வயதானது எல்லாம் பயனுடையது என்றால் கிழவர்கள் அனைவருமே புத்திசாலிகளாகவும், பொதுசேவகர்களாகவும் இருக்க வேண்டுமே, நிதர்சனம் அதுவல்ல நேற்று கண்டுபிடித்த மருந்து நோயை உடனடியாக குணப்படுத்துகிறது என்றால் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்திய மருந்தை தள்ளி வைக்கலாம், அதில் தவறில்லை என்கிறார்கள்.

            எல்லாவற்றிற்குமே ஆதாரம் வேண்டும், அத்தாட்சி வேண்டுமென்றால் குழந்தையை தூக்கி முத்தமிடுவதற்கு கூட மரபு சான்றிதழ் வேண்டும். நம்பிக்கை என்பது சுத்தமாக படுத்து விட்டால் வாழ்க்கை முழுவதும் துன்பமயமாகிவிடும் மனைவி நம் மேல் அன்பு வைப்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது. நாம் விற்கின்ற வரை சொத்து நம் பேரில் தான் இருக்கும் என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது? புற்றுநோய் வந்து சாகமாட்டோம் என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது. என ஒவ்வொன்றிற்கும் ஆதாரம் வேண்டும் என தேடிக்கொண்டே போனால் நிம்மதியாக ஒரு பிடி சாதம் சாப்பிட முடியாது. நீட்டி படுத்து தூங்க முடியாது. எல்லாவற்றையும் இல்லையென்றாலும் எதையாவது சிலவற்றையாவது அம்மா சொன்னாள், பாட்டனாரின் தகப்பனார் எழுதி வைத்திருக்கிறார் என்று நம்ப வேண்டும், நம்பிக்கை தான் நிஜமாகவே நம்மை இயங்க வைக்கும் சக்தியாக இருக்கிறது அவநம்பிக்கை பல நேரம் துயரத்தைதான் தருகிறது.

அதே போல புதுமை என்பது அவசியமானது தான். புறாவில் செய்தி அனுப்பிய காலம் போய் செல்போன் பேசுகின்ற காலத்தை உருவாக்கியது புதுமை கண்டுபிடிப்புகள் தான். அதற்காக பழமையை ஒதுக்க வேண்டிய முற்றிலும் அழிக்க வேண்டிய அவசியமில்லை. அது சரியாகவும் இருக்காது.   

பழமையோ புதுமையோ மனிதனுக்கு மனதிலும், உடம்பிலும் இதத்தை தர வேண்டும். அதே நேரம் மற்ற ஜீவன்களுக்கு தொல்லை தராமல் இருக்கு வேண்டும். அப்போது தான் உலகத்தில் அமைதி நிலவும் ஆனால் துரதிஷ்டவசமாக புதுமை என்று சொல்ல கூடிய பல விஷயங்கள் தொல்லை தருவதாக இருக்கிறது அதனால் தான் பழமையின் சிறப்பை பேச வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தாய் தெய்வ வழிபாடு என்பது பழமையானது என சொல்லி பெருமை அடைய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

        கருணையே வடிவான கடவுளை பெண்ணாக வழிபடுவது சிறப்பான காரியம்தான் ஆனால் பெண் கடவுள் என வரும் போது மதிக்கப்படுகிறாள் நிஜ பெண்ணாக வரும் போது மிதிக்க படுவதுதானே நடைமுறை உலகில் காணப்படுகிறது. கல்வியின் கடவுளாக சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம். அதே கல்வியை பெண்கள் சர்வ சுகந்திரமாக படிக்க அனுமதிக்கிறோமா?


   நாகரிகம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் பெண்கள் இந்த துறையில் படிக்க கூடாது அந்த துறையை தொட்டு கூட பார்க்க கூடாது என ஆயிரம் கட்டுதிட்டங்கள் வைத்து இருக்கின்றோம். அதையும் மீறி சில பெண்கள் படித்துவிட்டால் அவளுக்கு திமிரை பார், படித்துவிட்டோம் என்ற கர்வத்தில் தலைகால் புரியாமல் குதிக்கிறாள் என சாடுகிறோம். செல்வத்தின் அதிபதியும் மகாலஷ்மி என்ற பெண் தெய்வம் தான் ஆனால் இன்று உலகத்தில் நிதி ஆதாரத்தில் நிறைவு பெற்ற பெண்மணிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். சொந்தமாக பெண் சம்பாதித்தாலும் கூட அவள் பணத்திற்கு அவள் முதலாளி அல்ல, அதே போல வீரத்தின் கருப்பொருளாக எடுத்துகாட்டுவது அன்னை ஆதிபராசக்தியை ஆனால் இன்றைய பெண்களின் வீரம் இன்று எந்தளவு மழங்கடிக்கப்பட்டு இருக்கிறது என்பது உலகறிந்த சங்கதி

ஒரு காலத்தில் வாள் எடுத்து போர் புரிந்த பெண்ணினம் இன்று தெருவோர பைப்படியில் குடுமி பிடி சண்டை போடுமளவுக்கு தரம் குறைந்து போய்விட்டது இங்கு பூமி பெண், இயற்கை பெண் நதியும்பெண்,மொழியும் பெண் கடவுள் கூட பெண் தான். ஆனால் நிஜமான பெண் சுகந்திரம் பறிக்கப்பட்டு அடிமையாகி பலி பீடத்தில் கழுத்து நெறிக்கப்பட்டு கிடத்தப்பட்டு கிடக்கிறாள். இதற்கு யார் காரணம் என்று ஆராய்வது பெரிய வேலை. ஆனால் சுலபமான சுருக்கமான விடை நமக்கு தெரியும். ஆதிக்க மனபான்மை தான் மூலக்காரணம். இந்த ஆதிக்க மனோபாவம் மனிதனிடம் தொற்றி மதத்தையும் பிடித்து போது தான் தாய் தெய்வ வழிபாடு உச்ச நிலையில் இருந்து கீழே இறக்கப்பட்டது. மாதர்களின் மாண்பும் மதிப்பிழந்து போய்விட்டது. 


     நமது இந்தியாவில் சக்திவழிபாடு சிறப்புற்று இருந்த காலத்தில் பெண்கள் தேசத்தின் நிஜமான கண்களாகவே மதிக்கப்பட்டார்கள். ஆதிக்க மனோபாவம் மேலோங்கிய காலத்தில் தான் சக்தி வழிபாட்டில் உள்ள வாமசாரபூஜை முறைகளை முன்னிலைப்படுத்தி காட்டி அவமரியாதை செய்யப்பட்டு அது இரண்டாம் தர வழிப்பாட்டு முறையாக பின்னுக்கு தள்ளப்பட்டது. சிவன் உட்பட மும்மூர்த்திகளையும் படைத்து ஆதிபரா சக்தியாக ஓங்கி நின்ற தாய் தெய்வம் மும்மூர்த்திகளின் நாயகிகளாக படியிறக்கப்பட்ட பிறகே மகளிருக்கான அடக்கு முறைகள் பெருக்கெடுத்தது என்பதற்கு வரலாற்று சான்றுகள் பல இருக்கிறது அவைகளை பற்றியெல்லாம் வேறொரு முறை விரிவாக பார்ப்போம். இப்போது சக்தி வழிபாட்டின் சிறப்புகளை ஆராய முற்படுவோம்.

            அன்னை ஆதிபராசக்தியை உலக மாதாவாக வணங்கும் முறை நமது இந்திய துணைகண்டத்தில் சிந்து வெளி நாகரிக காலத்திற்கு முன்பே இருந்திருக்கிறது  இருந்தாலும் சிந்துவெளி காலத்தில் அந்த வழிபாட்டு முறையானது மிக உச்சமான நிலையை அடைந்திருக்கிறது மொகஞ்சதரோ, ஹரப்பா ஆகிய பகுதிகளில் அகழ் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட அன்னையின் மண் சிலைகளின் வயது சுமார் ஆராயிரம் வருடங்களாகும் இந்த ஒரு ஆதாரத்தை வைத்தே சக்தி வழிப்பாட்டின் தொன்மைகாலத்தை நாம் கணித்துவிடலாம்.


   இதே போலவே பாரசீகம், ஏஜியன், மெசபட்டோமியா,பிரான்ஸ், காஸ்பியா, பாலஸ்தீனம், சைப்பிரஸ், கீரிஸ், எகிப்து, துருக்கி போன்ற தேசங்களிலும் ஆதிபாராசக்தியின் வழிபாடு கொடிகட்டி பறந்திருக்கிறது இதை படித்தவுடன் சிலருக்கு ஒரு யோசனை வரும் ஆதிகால மனிதன் எங்கெல்லாம் வாழ்ந்தானோ அங்கெல்லாம் கடவுளைப் பெண்ணாக வழிபட்டு இருக்கலாம் அந்த பிரேதேசங்களில் கிடைக்கின்ற ஆதாரங்கள் அக்கூற்றை மெய்ப்பிக்கவும் செய்யலாம். ஆனால் அதை வைத்து பெண் கடவுள்கள் வழபாடு எல்லாமே இந்து மத சாயலுடைய பாராசக்தி வழிபாடு என சொல்வது எந்த வகையில் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றலாம். அப்படி சிந்திப்பவர்களுக்கு தக்க பதிலை தரவேண்டிய நமது கடமையாகும். 

பெண்தெய்வ வழிபாட்டை பாராசக்தி வழிபாடு என என் சொல்கிறேன் என்றால் மேலே நான் சொன்ன நாடுகளில் கிடைத்துள்ள பெண் தெய்வ சிலைகளும் ஹரப்பா, மொகஞ்ஜதரோ பகுதிகளில் கிடைத்துள்ள சிலைகளும் அச்சு அசல் ஒன்றாகவே இருக்கிறது இந்தியாவிலிருந்து அந்த வழிபாட்டு முறை அயல்நாடுகளுக்கு சென்றதா அல்லது அயல்நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்ததா என்பது ஆய்வுக்குரிய சங்கதி ஆனாலும் அயல்நாட்டு பெண் தெய்வ வழிபாடும் தம் நாட்டு பெண் தெய்வ வழிபாடும் ஒன்றாக இருப்பதை வைத்து சக்தி வழிபாடு தொன்மையானது மட்டும்மல்ல உலகம் முழுமைக்கும் பொதுமையானது என்பதையும் இங்கு வலியுறுத்தவே மேற்குறிப்பிட்ட கருத்தை வாசகர் முன்னால் வைத்தேன்.


    நாட்டின் எல்லைகளை தாண்டி பாராசக்தி வழிபாடு எப்படி உலகமெல்லாம் பரந்துவிரிந்து இருந்ததோ அதே போலவே அது பல மதங்களையும் தொட்டு தன்வயப்படுத்தி  தனியாட்சி நடத்தியது என்றே சொல்லவேண்டும். உலகம் முழுவதும் உள்ள பெருவாரியான மக்கள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுபவர்கள் என்று நமக்கு தெரியும் இந்து மதத்தை போலவே கிறிஸ்துவ மதத்திலும் பல உட்பிரிவுகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு மக்களால் பின்பற்றப்படும். கத்தோலிக்க முறையை மார்டின் லூதர் மாற்றியமைத்து புதிய கிறிஸ்துவ  கிளையை உருவாக்கினாலும் கூட அன்னை மரியாளை வழிப்பாட்டக்குரிய கருப்பபொருளாக கொண்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களே இன்று வரையில் உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்

 இன்னும் ஒருபடி சொல்லப் போனால் கன்னிமரியாளுக்கு உலக மக்கள் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தின் இரண்டு சதவீகிதத்தை கூட பைபிள் அவளுக்கு கொடுக்கவில்லை ஆனாலும் அன்னைமரியாளின் வழிபாடு அந்த மதத்தில் பட்டொளி வீசி பறக்கிறது அதற்கு முக்கிய காரணமே பைபிள் அங்கீகாரம் வழங்கவில்லை என்றாலும் அன்னை வழிபாடு மிகப்பழயை காலத்தில் இருந்தே கிரேக்க, ரோமானிய மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து போனதுதான்.


   மேலும் பைபிள் சிலைவழிபாட்டை ஏற்றுக்கொள்வது கிடையாது அதே நேரம் ஏசு ஒருவரை தவிர வேறு யாரையும் புனிதர்களாக கருதுவதும் கிடையாது ஆனால் கத்தோலிக்க மதப்பிரிவின் ஜீவ நாடியே சிலை வழிபாடுதான் கத்தோலிக்க தலைமை பீடமான வாடிக்கன் தேவாலயத்திலும் சரி உலகம் முழுவதும் உள்ள திருச்சபைகளிலும் சரி நிருவப்பட்டுள்ள சிலைகளின் எண்ணிக்கை கலை அழகையும் வார்த்தைகளால் சொல்லி மாளாது இந்த மரபை அவர்களுக்கு கொடுத்தது இந்து மதம்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

            இன்னும் ஒரு முக்கிய விசயத்தையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும் பிராட்டஸ்டென்ட் மற்றும் பெந்தெகோஸ்தே கிறிஸ்தவர்களிடம் சகிப்பு தன்மையும் மற்றவர்களை அரவணைக்கும் போக்கும் மிக்க குறைவு அதிலும் குறிப்பாக பெந்தெகோஸ்தே கிறிஸ்தவர்களிடம் கடவுள் பக்தியை விட மதவெறியே மேலோங்கி நிற்கும் ஆனால் கத்தோலிக்க கிறிஸ்துவர்களை ஒரளவு சகிப்புத் தன்மை கொண்டவர்கள் ஞானஸ்நானம் வாங்கினால் தான் மனிதப் பாவங்களை கழுவமுடியும் என்ற முட்டாள்தனமான பிரச்சாரத்தை அவர்களிடம் காணமுடியாது இந்த இயல்பை அவர்கள் தாய் தெய்வ வழிப்பாட்டில்யிருந்து பெற்றார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. 


    கிறிஸ்தவம் எப்படி அன்னை பாரசக்தியை அன்னை மரியாளாக ஏற்றுக் கொண்டதோ அதே போலவே இந்து மதத்தை எதிர்த்து பிறந்த பௌத்த மதமும் அன்னை சாரதாதேவியை அன்னை தாராதேவியாக போற்றி வணங்குகிறது இந்த நிலையை ஜைன மதத்திலும் காணலாம் சினாவின் தாவோயிஷம், கன்பூஷியம், போன்ற மதங்களிலும் அன்னை வழிபாட்டு முறையானது பகிரங்கமாகவே நடத்தப்படுகிறது.

   ஒவ்வொரு மதத்திற்குள்ளேயும் உள்விட்டு தகராறு இருப்பது இயற்கையான அம்சம்தான் ஒருவகையில் அத்தகைய தகராறு தான் சமயப்பண்பாட்டை இதுவரை உலகத்தில் நிலைநிறுத்தி வைத்துள்ளது கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க, பிராட்டஸ்டென்ட் தகராறு, இஸ்லாத்தில் ஷியா ஸன்னி தகராறு, பௌத்தத்தில் மகாயானத், ஷீனயான தகராறு என்பவைகளேல்லாம் உலகம் அறிந்ததுதான் நமது இந்து மதத்தை பற்றி கேட்கவே வேண்டாம் சட்டையை பிடித்து கிழித்து கொள்ளாத நிலை இன்று இருக்கிறது ஆதிகால நிலையை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது வைஷ்ணவனின் கண்ணை பறிப்பதும், சைவனை உயிரோடு சூளையில் வைப்பதும் என்று ஏகப்பட்ட ரணகளங்கள் தான் ஆனால் இந்து மதத்திற்குள் நடந்த மூர்க்கமான சண்டைகளை சக்தி வழிபாடு குறைத்தது என்றே சொல்ல வேண்டும்.


    அன்னை அகிலாண்டேஷ்வரி சிவபெருமானுக்கு நாயகி என்பதனால் சிவனை வணங்கும் சிவனடியார்களை தன்னை வணங்கவும் வைக்கிறாள். பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் தங்கை என்பதனால் ஸ்ரீ வைஷ்ணவனையும் வணங்க செய்கிறாள். பிரணவப் பொருளான கணபதிக்கு தாய் என்பதாலும், நக்கீரரை திருமுருகாற்றுப்படை பாட வைத்த ஞானபண்டிதனுக்கு தாய் என்பதாலும், முருக பக்தர்களும், விநாயக அடியார்களும் அவளை அன்போடு வணங்குகிறார்கள்.
   
        சிவபெருமானுக்கும், திருமாலுக்கும், இல்லாத முக்கியத்துவம் பாரத திருநாட்டில் பராசக்திக்கே கொடுக்கப்படுகிறது என்றால் அது மிகையில்லை காரணம் வடக்கு எல்லையான காஷ்மீரத்தில் அன்னை சஷிரபவானி என்ற திருநாமத்தோடு எழுந்து நிற்கிறாள், குஜராத்தில் அம்பாஜி, ஆகவும், உத்திரப்பிரதேசத்தில் விந்தியவாஷினியாகவும், வங்காளத்தில் காளியாகவும் வனம் சூழ்ந்த அஸ்ஷாமில், காமரூபினியாகவும், கன்னட தேசத்தில் சாமுண்டிஸ்வரி யாகவும் , பரசுராமர் பூமியான கேரளத்தில் பகவதி யாகவும், தமிழ் கூறும் நல்லுலகில் காமாட்சி, மீனாட்சி, சிவகாமி, விசாலாட்சி, அபிராமி என்ற பல திருநாமங்களோடு முக்கடலும் சங்கமிக்கும் நாட்டின் தெற்கு எல்லையில் ஈசனை வரவேற்க தவக்கோலத்தில் கன்னியாகுமாரியாக எழுந்தருளி நிற்கிறாள் உலகம் படைத்த அன்னை பிரிந்த கிடந்த சமயங்களை மட்டும் ஒருங்கிணைக்கவில்லை பல மொழியாக, பல இனமாக, பல பண்பாட்டுக்களாக பிரிந்து கிடந்த இந்திய தேசத்தையும் இது ஒரே நாடு, ஒரே பூமி என ஒன்று சேர்க்கிறாள். 


   அன்பின் உருவான அன்னையை ஆற்றலும் ஆவேசமும் ஒருங்கே கொண்ட மறக்கருணை நெறியில் வழிபடுவோரும் உண்டு. காலகாலத்தையும் கடந்து நிற்க்கும் இறைவனான சிவபெருமானை தனது ஆவேசத்தின் முன்னால் சவம் போல தரையில் தள்ளி மார்பில் ஏறி நின்று ரௌத்திர தாண்டவம் ஆடும் அன்னையின் ஆவேசக் கோலத்தை காளி தேவியாக பாரதத்தின் வடதிசை மக்கள் பக்தி சிரத்தையுடன் வழிபடுகிறார்கள்

பசித்த குழந்தைக்கு பாலூட்ட ஒடோடிவரும் பரம தயாள வடிவாக அழகே வடிவான காமாட்சியின் சௌந்தர்ய வடிவாகவும் தென்பகுதி மக்களால் போற்றி வணங்கப்படுகிறாள் அதனால் தான் அம்மையின் அருட்தலங்கள் என்று அழைக்கப்படும் சக்தி பீடங்கள் நாடு முழுவதும் நிறைந்துள்ளன. சாஸ்திரப்படி 64 சக்தி பீடங்கள் என சொல்லப்பட்டாலும் தந்திர சூடாமணி,குப்ஜிகா தந்திரம், ஸ்கந்த புராணம், தேவி பாகவதம் போன்ற நூல்கள் அன்னையின் அருள்ளாட்சி நடக்கும் சக்தி பீடங்களின் எண்ணிக்கையை சில இடத்தில் கூட்டியும், சில இடத்தில் குறைத்தும் நமக்கு காட்டுகின்றன  ஏது எப்படியோ நம் நாட்டை பொருத்தவரை வேலி ஒரமாக இருக்கும் பாம்பு புற்றிற்கு சிவப்பு பாவாடை கட்டி மஞ்சளை தெளித்து வழிபட்டாலே அங்கே அன்னை வந்து அருள்ளாட்சி நடத்தி அற்புதம் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.


    நாட்டு மக்கள் அனைவராலும் பேதங்களை மறந்து ஒரு மனதோடு வழிப்படும் உன்னத நிலையில் சக்தி மார்க்கம் என்ற சாக்த மதம் திகழ்ந்தாலும் அதன் பண்பாடும் தத்துவ ஞான மரபும் பழமை வாய்ந்ததாகவும், செழுமை வாய்ந்ததாகவும் இருந்தாலும் கூட அந்த நெறியை முழுமையாக தொகுத்து விளக்கமாக விரிவுரை செய்து மக்கள் பயன்படும் வண்ணம் எந்த முயற்ச்சியும் தொல்பழங்காலத்தில் எடுக்கப்படவில்லை

 அதுமட்டும்மல்ல சக்தி தத்துவம் இந்திய தத்துவ ஞான சாஸ்திரங்களில் ஒன்றாக கருதப்படவும் இல்லை இந்திய ஞானிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தவரான ஸ்ரீ மதத்துவர் எழுதிய சர்வ தரிசன சங்கீரக நூலிலும் இது இணைக்கப்பட வில்லை இதற்கு என்ன காரணம் என்று மிக ஆழமாக சிந்தனை செய்தோம் என்றால் சிற்சில விசயங்கள் நம் கண்களில் படுகிறது

சக்தி சாஸ்திரத்திலும் சாதனா மார்க்கங்களிலும் சொல்லப்பட்டிருப்பவைகள் சாதாரண மக்களால் சுலபமாக தொட்டு பார்க்க முடியாது அதி சூட்சுமங்களாகும் இப்படி அனுபவ நிலைக்கு விரைவில் பொருந்தி வர முடியாது எவைகளையும் தத்துவ ஞானிகள் தங்களது வாத பொருளாக எடுத்துக் கொள்வதுயில்லை அதுமட்டும்மல்ல சக்தி தத்துவத்திற்கும், சிவ தத்துவத்திற்கும் பெரியளவில் வித்தியாசம் கிடையாது. அதனாலும் ஞானிகள் இதை முழுமையாக தொகுக்காமல் விட்டிருக்கலாம்.


    இப்படி நாம் சொல்லும் இரண்டு காரணங்களில் எதையாவது ஒன்றை ஏற்றாலும் அல்லது இரண்டுமே சரியானது தான் என ஒப்புக்கொண்டாலும் நிச்சயம் அது நியாயமாக இருக்காது. காரணம் உபநிஷதங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு மெய்ப்பொருளியல் கருத்துகளை தொகுத்தால் சக்தி ஆகமக் கருத்துகளையும் நிச்சயம் கைநழுவ விடாமல் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. எனவே இவை இரண்டையும் தாண்டிய ஏதோ ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். அது இன்னதென்று நம்மால் அடையாளம் காண முடியவில்லை என்றாலும் வருங்கால ஆய்வுகள் அதை தெளிவுபடுத்தும்.

இதனால் புராதான காலத்து ஆதார நூல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் இடைக்காலத்தை சேர்ந்த நம்ப தகுந்த பல நூல்கள் நமக்கு கிடைக்கின்றன. இவற்றை சற்று மேலோட்டமாக படித்தாலே மிகப் பழைய கால நூல்கள் நிறைய இருந்திருக்கின்றன. அவைகள் கால வெள்ளத்தில் மறைந்து போய்விட்டன என்பது நமக்கு நன்கு விளங்குகிறது. தாந்திரிக கலை வளர்ச்சியடைந்து மக்களிடம் செல்வாக்கு பெற்ற பிறகு வடமொழி இலக்கியத்தில் சக்தி தத்துவம் தனியரசு செலுத்த துவங்கியது எனலாம். சாக்த நெறியை விளக்குவதற்காகவே பல ஆகமங்கள் புதியதாக தோன்றின. 


  பொதுவாக எல்லா ஆகமங்களும் கடவுளும் ஜீவனும் வேறுவேறானது அல்ல இரண்டுமே ஒன்றானதுதான் என எடுத்துக்காட்டும் அத்வைத கொள்கையை முக்கிய நோக்கமாக கொண்டவைகள் தான் ஆனாலும் கூட வேறு சில கருத்துகளையும் ஆகமங்கள் பிரதாண பாதையாக கருதுகின்றன சிவபெருமானது யோகமுகத்திலிருந்து 64 பைரவ ஆகமங்கள் தோன்றியதாக நம்பப்படுகிறது. அதில் பத்து ஆகமங்கள் சைவாகமங்கள் என்ற பெயரில் துவைத கொள்கையை தனக்குள் கொண்டுள்ளன 18வித ருத்ராகமங்கள் என்று சொல்லப்படுபவைகள் அத்வைதத்தையும், துவைதத்தையும் தனக்குள் கொண்டுள்ளன. இத்தகைய ருத்ராகமங்கள் சாக்த நெறியையும் பேசுகிறது. அவற்றில் குறிப்பாக சுவஸ்சந்தா, மாலினி விஜயம், விஞ்ஞான பைரவம், திரிசிரோபைரவம், குளகாவரம், பரமானந்த தந்திரம் என்பவைகள் சக்தி தத்துவத்தை அணு அணுவாக நமக்கு விளக்குகின்றன.

        இந்து சமயத்தில் மிக முக்கிய மத பிரிவான ஸ்ரீ வைஸ்ணவத்தில் வடகலை, தென்கலை என இரண்டு உட்பிரிவுகள் இருப்பதை போலவே சாக்தத்தில் ஸ்ரீ வித்யா, ஸ்ரீ காளி, என இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. இதில் ஸ்ரீ வித்யா மரபுக்கே மிக சிறந்த பரந்து விரிந்த இலக்கியங்கள் இருக்கின்றன. அகஸ்தியரும், துர்வாசகரும், தத்தாதிரேயரும் ஸ்ரீ வித்யாவின் இடத்தில் தீவிர அன்பு கொண்டு சுவை மிகுந்த பல நூல்களை எழுதியுள்ளன. சக்தி சூத்திரம், சக்தி மகிமாஸ் ஸ்தோத்திரம் என்பவைகள் அகத்தியரால் உருவாக்கப்பட்ட சிறப்படைய படைப்பாகும். இவற்றில் பிரம்ம சூத்திரம் சிவ சூத்திரங்களை போல் தத்துவ கருத்துக்கள் கொட்டிக்கிடைக்கவில்லை என்றாலும் அன்புமயமாக பக்திரசம் ஏராளமாக ஊற்றெடுக்கிறது.

     புராணங்களின் கருத்துப்படி துர்வாசக மகரிஷியை ஆகமங்களை உருவாக்கி உலகெல்லாம் பரப்புமாறு சிவபெருமான் கட்டளையிடுகிறார். துர்வாசகர் தனது தவபலத்தால் மூன்று ரிஷிகளை உருவாக்கி அவர்களுக்கு எல்லாவிதமான தத்துவ ஞானங்களை போதித்து நாடு முழுவதும் திருமடங்களை உருவாக்க உத்தரவு இடுகிறார். அது மட்டுமல்லாது சிவபெருமானை குறித்து பரசம்பு ஸ்தோத்திரம் என்ற நூலையும், சக்தியை வழிபட லலிதா தவரத்தினம் என்ற நூலையும் எழுதியுள்ளார். அவைகள் இன்றளவும் நிலைத்து நின்று சக்தி தத்துவத்தின் சிறப்புகளை நமக்கு எடுத்து சொல்கின்றன. இதே போல தத்தாத்ரேயர் தத்த சம்ஹித என்ற அற்புதமான நூலை படைத்துள்ளார். இது மிகப்பெரிய நூல் படித்து மனப்பாடம் செய்வது என்பது அக்கால குருகுல மாணவர்களாலேயே முடியாமல் இருந்தது. அதனால் இதை எளிமைப்படுத்த ஆறாயிரம் ஸ்லோகங்கள் உள்ள நூலாக பரசுராமன் தொகுத்து வைத்துள்ளார்.

        இதே நூலை மூல குருவான தத்தாத்ரேயருக்கும் எளிய உரை தந்த பரசுராமருக்கு நடக்கும் உரையாடலாக மீண்டும் எளிமைப்படுத்தி ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்ட நூலாக வடிவமைத்து உள்ளார். பரசுராமரின் நேரடி சீடரான ஸ்மேதா மகரிஷி என்பவர். இது தவிர இந்த மகரிஷி திரிபுரா ரகசியம் என்ற ஒரு நூலையும் எழுதி உள்ளார். இந்த நூலில் உள்ள ஞானகாண்டம் பகுதி இன்று வரையிலும் சாக்த மெய்பொருளியலுக்கு சிறந்த முன்னுரையாக அமைந்துள்ளது.


   ஆதிசங்கரரின் குருவுக்கும் குருவான ஸ்ரீ கௌடபாதர் ஸ்ரீ வித்யா ரத்ன சூத்திரகம் என்ற ஒரு நூலை இயற்றியுள்ளார். இதற்கு சங்காரான்யன் என்பவர் விரிவுரை எழுதியுள்ளார். சாக்த இலக்கிய வரலாற்றில் இது ஒரு முக்கிய நூலாகும். கௌடபாதர் ஆதி சங்கரின் பரம குருவாச்சே அதனால் இந்த நூலில் ஏராளமான தத்துவ கருத்துக்கள் கொட்டி கிடக்கும் என்று ஆர்வத்தோடு உள் நுழைந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சக்தி வழிபாட்டு இலக்கணம் பேசப்படும் அளவிற்கு தத்துவங்கள் பேசப்பட வில்லை இருப்பினும் சாக்த மதத்தினர் சங்கரரின் சௌந்தர்ய லகரி என்ற நூலுக்கு கொடுக்கும் மரியாதை ஸ்ரீ வித்யா ரத்ன சூத்திரத்திற்கும் கொடுக்கிறார்கள். ஆதிசங்கரர் சீடர் ஸ்ரீ பத்ம பாதர் விளக்க உரையுடன் பிரபஞ்சசாரம் என்ற நூலையும், பிரயோக கிரம திபீகை என்ற நூலையும் எழுதியுள்ளார்.  இது தவிர லஷ்மண தேசிகர் எழுதிய சாரதா திலகம், சோடமாந்தர் எழுதிய சிவதிருஷ்டி என்ற நூலும் குறிப்பிடதக்கதாகும்.

    இதை எல்லாவற்றையும் விட அபிநவ குப்தர் என்பவரே சாக்த மதத்திற்கு தத்துவ ரீதியான அஸ்திவாரத்தை கொடுத்தார். இவர் சங்கரரை போலவே மிகச் சிறந்த தத்துவ ஞானி வாத வல்லுநராவார். சைவ சமய, சாக்த சமய ஆகமங்களை தவிர இவருடைய நூல்கள் எல்லாம் அழகான கவிதைகள் மட்டுமல்ல நாடக பாணியில் தத்துவ கருவூலங்களை எடுத்து இயம்புகின்றன. இவருக்கு இணையாக சாக்த தத்துவத்தை சொன்னவர்கள் யாருமே இல்லையென துணிந்து சொல்லலாம். தந்திரலோகம் மாலினி விஜய வார்த்திகம், பரதிரியம் சிகா, விவர்ணம்பிரத்ய பிஞ்சா விமர்சினி, பிரத்ய பிஞ்சா விருத்திவிமர்சினி ஆகிய நூல்கள் அசாதாரணமான விதத்தில் சமய ஞானத்தை, நமக்கு படம்பிடித்து காட்டுகிறது.

     அபினவ குப்தருக்கு பின், கோரக்கர் புண்ணியாந்தர், நடனானந்தர், அமிர்தானந்தர் பாஸ்கரர் ராயர் போன்றோர்களும் அற்புதமான படைப்புகளை சாக்த மதத்திற்கு வழங்கி உள்ளனர். கோரக்கர், மாகத்த மஞ்சரி என்ற நூலுக்கு ஆசிரியராவார்.  அவரே அதற்கு பரிமளம், சம்வித் உல்லாசம் ஆகிய இரண்டு விரிவுரைகளை செய்துள்ளார். பாஸ்கரராயர் எழுதிய சக்தி சூத்திரம் என்ற நூலுக்கு பிரத்ய பிஞ்சா ஹிருதலம் என்ற விளக்க உரையை சோமராஜர் என்பவர் எழுதியுள்ளார். புண்ணியானந்தர், காமகலை விலாசம் என்ற தமது புகழ்பெற்ற நூலில் சக்தியின் படைப்ப தத்துவத்தை விரிவாக கூறுகிறார். சுமதந்திரானந்தர் எழுதிய சக்கர விவேகம் என்ற நூல் ஐந்து பிரிவுகள் உடையது. இது சக்தி தந்திரங்களின் ரகசிய ஞானம் ரகசியமான ஆகமங்களின் விரிந்த விளக்கத்தையும், தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் சேது பந்தம் கல்ப லதா, வாரிவாசிய ரகசியம் வாரிவாசிய பிரகாசம், கௌலதிரிபுரா, பாபனா உபநிசதம், லலிதா சகஸ்ரநாமம் என்ற சௌபாக்கிய பாஸ்கரும், துர்கா சம்தசதி போன்ற நூல்களும் ஸ்ரீ வித்யா பிரிவின் தத்துவங்களை நமக்கு விரிவாக விளக்குகின்றனர்.

        சாக்த மத பிரிவில், ஸ்ரீ காளி என்ற உட்பிரிவுக்கு இந்தளவு இலக்கிய செல்வங்கள் இல்லையென்றாலும் கால ஞானம், காலோத்தரம் பாகா கால சங்ஷீதா, வியோககேசங்ஷீதா ஜெயதிரதாயாமலை, உத்திர தந்திரம், சக்திசங்காமா தந்திரம் என்ற நூல்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

 ஸ்ரீ வித்யா பிரிவு என்றாலும், காளி ஸ்ரீ பிரிவு என்றாலும் இரண்டுமே உலக அன்னையை தான் பரம பிரம்மமாக கொள்ளுகின்றன. இதில் ஸ்ரீ வித்யா அன்னையை அறக்கருணை வடிவிலும் ஸ்ரீ காளி பிரிவு மறகருணை வடிவிலும் வழிபடுகிறத என சொல்லலாம். இவைகளுக்குள் பெரிய வித்தியாசங்கள் அதிகமாக கிடையாது. இனி நாம் சாக்த மதத்தின் முக்கியமான தத்துவங்களையும் அந்த மதத்திலுள்ள சிறப்பு மிக்க ஸ்ரீசக்ர வழிபாட்டின் ரகசியங்களையும் ஒரளவு எளிமையாக ஆராய்வோம்.
Contact Form

Name

Email *

Message *