Store
  Store
  Store
  Store
  Store
  Store

காம பூதத்தை தட்டி எழுப்பும் மந்திரம்


  மாலை நேரத்து மஞ்சள் வெயில் மலர்களை மட்டுமா வனப்புடையதாக்கும்? தனது ஒளிக்கரங்களுக்கு எவையெல்லாம் அகப்படுகிறதோ அவற்றையெல்லாம் பொன்முலாம் பூசி பளபளப்பாக்கி விடும் சின்னஞ் சிறிய வண்ணத்துப்பூச்சிக் கூட தங்க சிறகு கட்டி ஒய்யாரமாக பறந்து வரும் அந்த மலர்ச் சோலையில் காணும் பொருளெல்லாம் இப்போது தான் புதிதாக பிறந்தது போல் கண்ணை பரிக்கும் வேளையில் ஒரு சிறிய மணற் குன்றில் இடது கை ஊன்றி அழகாய் அமர்ந்திருந்த ஒரு இளம் மாதும் தங்கத்தில் வார்த்தெடுத்தது போல் குளிர்ச்சியாய் அமர்ந்திருந்தாள்

அவள் நீண்ட கருங்கூந்தல் தென்றல் காற்றில் கலைந்து வாழைக் குருத்து போன்ற அவள் தோள்களில் அசைந்தாடிய அழகும் இந்த இளம் தோளை தழுவிக் கொள்ள உனக்கு மட்டும் உரிமையில்லை நானும் அதற்கு பங்காளி என அவள் முந்தானை நெளிந்த அழகும் அங்கே பூத்திருந்த மலர்களை வியப்படைய செய்தன சந்தனத்தையும். வெண்மேகத்தையும் குழைத்தெடுத்தது போன்ற அவள் மேனியின் நிறம் கண்டு எனக்கில்லாத பேரேழில் உனக்கெப்படி வந்தது என கேள்வி கேட்டு பதில் இல்லாமல் புதர்களுக்குள் ஒளிந்து கொண்டன மயில்கள்


அந்த ஏழில் மங்கையின் மனத்திரையில் ஏதோ இனம் புரியாத சித்திரம் உருவாகிக் கொண்டிருந்ததனால் நிலம் பார்த்து கொண்டிருந்த வதனத்தை கண்ட பூமி வானில் இருந்து நிலா என்னை முத்தம் இட வருகிறதா என்ற ஆனந்த எதிர்பார்ப்பில் தனது பசும் புல் ரோமங்களை சிலிர்த்துக் கொண்டது

 தாமரை பூவிற்குள் இரண்டு மீன்கள் நீந்துவது போன்ற அவள் கண்களின் குளிர் பார்வைபட்டு பெயர் தெரியாத காட்டுப்பூக்கள் கூட நான் பிறந்த பலனை அடைந்துவிட்டேன் என்று தலையசைத்து நர்தனம் ஆடியது அவள் சிவந்த உதடுகளுக்குள் மறைந்திருந்தாலும் கூட பளிச்சென மின்னிய மாதுளை பற்களை கண்டு கொடியில் தொங்கிய கோவை பழங்கள் என்னை எடுத்து பூசிக்கமாட்டாயா என புலம்பிக் கொண்டிருந்தன.

        கழுத்தில் இருந்த ஆரம் என்னை போன்ற ராஜயோகம் பெற்றவர்கள் யார் இருக்க முடியும்? சங்கு கமுகு என இவள் கழுத்து வர்ணீக்கப்பாட்டலும் அவை எல்லாம் வந்து இந்த மென் கழுத்தை தீண்டிவிட என்னை போல எப்போதும் தழுவிக் கொண்டு ஆனந்த சாகரத்தில் மிதந்துகொண்டிருக்க முடியுமா? என கம்பீரமாக சிரித்தன



 ஆரத்தின் சிரிப்பை அகம்பாவம் என்று கருதியதோ என்னவோ அவள் நூல் இடையில் தவழ்ந்து கொண்டிருந்த ஒட்டியாணம் சும்மா கர்வம் கொள்ளாதே நான் ஒன்றும் குறைந்த இடத்தில் இருக்கவில்லை ஆலிலையா. நதியின் சூழலாக என் கவிஞர்களே தடுமாறும்அவள் மென் வயிற்றை தடவிப்பார்த்தது நான் தான் பார்ப்பவர் மனதை எல்லாம் பித்துப் பிடிக்கச் செய்யும் உடுக்கை இடையில் உட்கார்ந்து இருப்பதும் நான் தான் எனவே ஆரமே ஆரவாரத்தை நிறுத்து என மெல்லிய மணியோசை செய்தது.       

         ஒட்டியாணத்தின் பேச்சும் கழுத்தாரத்தின் சிரிப்பும் காதுகளில் தொங்கிய மாணிக்க குண்டலங்களை மதிமயக்க செய்துவிடாதா என்ன? கழுத்தையும் இடுப்பையும் தொடுவதற்கே இத்தனை கெக்களிப்பு. இருமாப்பு என்னை போல அவள் பட்டு கன்னத்தை தொட்டுப் பார்த்தால் ஆனந்த போதையில் செத்தே விடுவீர்கள் என ஒளிக் கொட்டி சொல்லி காதுகளில் அசைந்தாடியது

பல்லாயிரம் கவிஞர்களின் கற்பனைக்கே எட்டாத உலக மொழிகள் எவற்றாலும் வர்ணனை செய்ய முடியாத அவள் நிமிர்ந்த மார்வை தழுவிக் கொண்டிருந்த பட்டுக் கச்சையை கண்டு பச்சை இலைகளெல்லாம் நான் பட்டு புழுவாக பிறந்திருக்க கூடாதா என ஏக்க பெருமூச்சி விட்டுக் கொண்டிருந்தது.


      இயற்கையும் செயற்கையும் சேர்ந்தது அவளைப் பற்றி சுவைமிகுந்த உரையாடல் செய்து கொண்டிருந்த போது அவளோ இவை எவற்றையும் கவனிக்காது ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்கிறாள் என்பது மணிகுன்றில் ஊன்றியிருந்த கைவிரல்கள் நோக்கமே இல்லாத சில கோடுகளை தரையில் வரைவதும் அழிப்பதும்மாக இருந்ததில் தெரிந்தது 

அவள் வயதே ஒத்த ஒரு மாது சற்று தொலைவில் ஒரு தாழ்ந்த மரக்கிளையில் சாய்ந்த வண்ணம் நின்று இவளை பார்த்து மாலை நேரம் உலாவ வருவது மனக்களிப்பீர்க்கு தானே தவிர குழப்பத்திற்கு அல்ல நீ அழகே வடிவெடுத்த பெண் உன்னை அருகில் இருந்து பார்த்தே இன்பக் கிளு கிளுப்பை தரும் அதே நேரம் அழகி மட்டும் மல்ல அறிவில் சிறந்த பெண்ணும் ஆகும் நீ

 அழகும் அறிவும் ஒரே இடத்தில் கொலு இருக்கும் கோலத்தை உன்னிடத்தில் கண்டதால் தான் என்னை பரிகொடுத்து நட்பானேன் ஆனால் நீ குளிர் காய வந்த இடத்தில் குளிப்பதை போல தேவையில்லாத மௌனம் சாதிக்கிறாய் பேசு! பெண்ணே பேசு! உன் எண்ணத்தில் ஓடுவதை எதையும் சிதராமல் அத்தனையையும் என் முன்னால் கொட்டு அதை மாலையாய் தொடுக்க நான் சித்தமாய் இருக்கிறேன் என்றும் கேட்டாள்.


   தான் ஒவியன் வரைந்த பேசாத சித்திரம் அல்ல பிரம்ம தேவனே சிறத்தை எடுத்த செதுக்கிய உயிர் பதுமை என்பதை நிருபிக்க வாய் திறந்தாள் அந்த இளம் மாது அவள் வாயிலிருந்து குரல் வெளிவந்ததும் இது வரை பாடிக் கொண்டிருந்த கருங்குயில்கள் கொல்லன் பட்டறை முன் இது வரை ஊசி விற்றிருக்கிறோமே என வெட்கி தலைகுனிந்து மவுனமாய் பறந்து போனது

 அடியே தோழி கூட வந்தவளை தவிக்க விடுவதற்கு அல்ல நான் சிந்தனையில் ஆழ்ந்தது என் முன்னால் பச்சை பட்டுடுத்த நிலமங்கை கண்ணூக் கெட்டிய தூரம் வரை மடி விரித்திருகிறாள் அங்கங்கே நிற்கும் மரங்கள் வானத்திரையின் மீது புது ஒவியங்கள் வறைய தலைதூக்கி முயற்ச்சிக்கின்றது வெள்ளியை உருக்கி விட்டது போன்ற நீரோடையின் சலசலப்பு என் காதுகளில் விழுகின்றது ஆனாலும் என் மனம் அதிலெல்லாம் லயிக்கவில்லை எங்கோ ஓடுகிறது என்றாள்.

       கண் முன்னால் அழகான ரோஜா தோட்டம் விரிந்து கிடக்கும் போது வானத்திலிருந்து ஒரு கந்தர்வ தோட்டம் குதிக்க போவதாக கனவில் மூழகுபவன் மடமை நிறைந்தவன் ஆவான் நிறைய பேர் தங்கள் வாழ்க்கையை இப்படித்தான் நிகழ் காலத்தில் வைக்காமல் வருங்காலத்தில் வைத்து துன்பப்படுகிறார்கள்


 நீயும் அப்படி இருக்காதே ஒன்று நிகழ்காலத்திற்கு இறங்கி வா அல்லது மனதில் எழும்பி அடங்குகின்ற எண்ண அலைகளை யாரிடமாவது கொட்டி தீர்த்து விடு உன் ஆசைகளை உணர்வுகளை புரிந்து கொள்ள நானிருக்கிறேன் என்னிடம் சொல் எதுவாக இருந்தாலும் சொல் தோழனோடு ஏழமையை தான் பேசக் கூடாது எண்ணச் சிக்கல்களை கூறி விடிவு பெறலாம் என்று தோழி சொன்னாள்

       மைத்தீட்டிய விழிகளை மனங்கவர் தோழி மீது நிறுத்தி அழகு மங்கை தன் அந்தரங்க எண்ணங்களை நனைந்து போன எண்ணெய் துணியில் இருந்து சொட்டு சொட்டாய் சொட்டுவது போல் வார்த்தைகளை வெளியிட்டாள்

 நோய்க்கும் பேய்க்கும் இரவில் தான் கொண்டாட்டம் என்பார்கள் இரவு அவைகளுக்கு மட்டும் கொண்டாட்டம் ஆனது அல்ல நெஞ்சப் பெட்டகத்திற்குள் அடைக்கி பூட்டி வைத்திருக்கும் காதல் சிந்தனைகளுக்கும் கொண்டாட்டம் தான் மனம் விரும்பும் துணை அருகில் இருந்துவிட்டால் அந்த கொண்டாட்டம் சுகமானது காதல் மனமும் உடலும் பிரிந்திருந்தால் நள்ளிரவு என்பது இடுக்காட்டில் நடக்கின்ற ஊளி தாண்டவம் போல் கொடுமையானது


 ஊருக்கு மத்தியில் அரசமர மேடையில் ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டிருந்து ஊர் நலனையும் தீங்கையும் ஆராய்ந்து சலித்து தம் தமது இல்லம் போய்விட்டதனால் தெரு முழுவதும் அல்ல ஊரே அடங்கி விட்டது வீட்டிற்க்கு சென்ற மக்கள் வயிறாற உண்டு உறங்கி விட்டதனால் ஊர்களும் வீடுகளும் அமைதியாகிவிட்டன

நேரமோ நள்ளிரவு ஆந்தைகளும் கூகைகளும் மட்டுமே விழித்திருக்கும் நேரம் திருடர்களும் கூட உறங்க மாட்டார்கள் அவர்களை போலவே தான் நானும் உறங்காமல் கிடக்கிறேன் மார்கழி மாதத்து கடற்காற்று உடலெல்லாம் ஊசி குத்துவதுபோல் சிலிர் என இறங்குமே அதே போல என் மனதும் காதல் காய்ச்சலால் உறக்கம் இல்லாமல் நடுங்குகிறது.

       சற்று எண்ணிப் பார் யாருமே இல்லாத இருட்டு பொழுதில் தன்னந்தனியாக உட்கார்ந்து மனத்திற்குள் எரியும் நெருப்பை  அடக்க முடியாமல் தவிப்பது எத்தனை சித்ரவதை என்று உனக்கு புரியும் தனிமை என்பது தான் காமம் என்ற பூதத்தை தட்டி எழுப்பும் மந்திரமாகும் கட்டி வைத்த முரட்டு காளை கட்டவிழ்த்து விட்டுவிட்டால் எப்படி எதிர்படுவோரை எல்லாம் குத்தி புரட்டுமோ அதே போலவே தான் காம பூதம் மனித உடலை பேரலைகள் ஆட்டி வைக்கும் சிரிய படகாக செய்து விடும்


 இப்படி நான் காம பலி பீடத்தில் குத்தப்பட்டு கிடக்கம் போது துணையாக யார் இருக்கிறார்கள்? என்னை அரவணைக்க யார் உண்டு? என் மனது அது நல்லமனதாக இருந்தாலும் கூட என்னை ஒரு வார்த்தை கேட்காது என் கட்டளையை மதிக்காது கை மீறி செல்கிறதே அப்படி செல்லும் மனது எங்கே போகிறது தெரியுமா?

        அதோ தூரத்தில் ஒரு மலை தெரிகிறதே அந்த மலைக்கு அந்தப்புரமாக ஒரு ஊர் இருக்கிறதே அங்கே உள்ள ஒரு வீரம் நிமீர்ந்த மார்புடைய அழகான இளைஞன் என்னை தேடி மலையை கடந்து வருகிறான் அவன் வரும் வழியெல்லாம் ஆனைகள் அணிவகுத்து நிற்பது போல் பெரும் மரங்கள் நிற்க்கின்றன

 அந்த மரங்களுக்கு மத்தியில் ஊற்றெடுத்து ஓடும் சுனை ஒன்றிற்கருகில் பூத்திருந்த குவளை மலரெடுத்து தலையில் சூடிய வண்ணம் மலைப்பாம்பு ஒன்று நெளிந்து கிடப்பது போன்ற ஒற்றையடிப்பாதையில் நடந்து வருகிறான்

 அந்த நேரம் சூழ்ந்திருந்த இருளும் போதாது என்று கருமுகில் கூட்டங்களும் கருத்து இடிஇடித்து மழை பொழிய துவங்கியது சமவெளியில் விழுந்தாலே வெள்ளமாய் பெருக்கெடுக்கும் கனமழை. மலை மீது வழிந்தா ஓடிவிடும் மேட்டில் விழுந்து பள்ளத்தில் நிறைந்து குழி எது வழி எது என தெரியாமல் எல்லாம் சமமாகிவிடுமே!


 சமம் என்பதில் அழகும் இருக்கிறது ஆபத்தும் இருக்கிறது ஆண்டையும். அடிமையும் சமமாக இருப்பது அழகு அறிஞனும் அசடனும் சமமாக இருப்பது எப்படி அழகாகும்? நாட்டுக்கும் வீட்டுக்கும் ஆபத்தாக அல்லவா அந்த சமன்பாடு கொண்டு போய் விடும்

 வழியில் இருக்கும் குழியும் அப்படி அபாயகரமானது தான் அந்த மலையில் அந்த இருட்டில் ஆபத்தான அந்த பாதையில் என்னை விரும்பும் அந்த இளைஞன் எதையும் பொருட்டென கருதாமல் நடந்து வருகிறானே! அவன் கால் என்னப்பாடுபடும் எவ்வளவு வேதனையடையும்

 நடக்கவே முடியாமல் தளர்ச்சி அடைந்து விடுமே அந்த தளர் நிலையை போக்க என்னால் என்ன செய்ய முடியும்? தினசரி இப்படி அவன் என் பொருட்டு அடையும் தளர்ச்சியை நோக்கியே என் மனம் உருண்டோடுகிறது இதனால் தான் அன்பு தோழியையும் அழகான காட்சிகளையும் பொருட்படுத்தாமல் சிலந்தி வலைகளுக்குள் கிடப்பது போல் சிந்தனை வலைகளுக்குள் அகப்பட்டுக்கிடக்கிறேன் என்று அந்த ஆரணங்கு அமுத வாய் திறந்தாள் இப்படி ஒரு காட்சி
     "மன்று பாடவிந்து மனைமடிந் தன்றே
       கொன்றேர் அன்ன கொடுமையோடு இன்றே
       யாமம் கொளவரிற் கனைஇக் காமம்
       கடலினும் உரைஇக் கரைபொழி யும்மே
       எவன்கொல்! வாழி! தோழி! மயங்கி
       இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
       என்னெடும் நின்னெடும் சூழாது கைம்மிக்கு
       இரும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற்
       குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
       கான நாடன் வருஉம் யானைக்
       கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைக் சிறுநெறி
       மாரி வானம் தலைஇ நீர்வார்ப்பு
       இட்டருங் கண்ண படுகுழி இயவின்
       இருளிடை மிதிப்புழி நோக்கியவர்
       தளரடி தாங்கிய சென்ற தின்றே
"

      என்ற அழகு தமிழ் பாடல் ஒன்றில் சித்திரமாக வடிக்கப்பட்டு அகநானுறு என்ற அறிவுப் பெட்கத்திற்குள் பதிக்கப்பட்டுள்ளது

 இப்படி ஏராளமான சித்திரங்கள் நமது மனதை இதமாக்க பழந்தமிழ் புலவர்கள் அணி அணியாக அடிக்கி வைத்திருக்கிறார்கள் அவற்றில் இது ஒரு சிறிய முத்து இன்னும் இருக்கும் சரங்களை அடுத்து சிந்திப்போம்.



 

Contact Form

Name

Email *

Message *