Store
  Store
  Store
  Store
  Store
  Store

தமிழகத்தின் தூங்கும் விடுதிகள் !


   மத்துவம் சமதர்மம் என்ற வார்த்தைகள் மிகவும் அழகானவைகள் கவர்ச்சி மிகுந்தவைகள் எல்லா தரப்பு மக்களாலும் எபோதுமே விரும்ப கூடியவைகள்

எந்த வார்த்தைக்கும் இல்லாத மகத்துவம் இந்த வார்த்தைகளுக்கு உண்டு பல உலக நாடுகளின் சரித்திரத்தையே இந்த வார்த்தைகள் மாற்றி உள்ளன புரட்டிப் போட்டுள்ளன

அவ்வளவு சக்தி மிகுந்த வார்த்தைகள் நமது தமிழ் நாட்டில் வீதி எங்கும் பட்டி தொட்டி எங்கும் மக்களை ஏமாற்ற இன்று பயன்படுத்தப் பட்டு வருகிறது

ஆம்! சமசீர் கல்வி என்ற கவர்ச்சி மிகுந்த பதம் நமது அரசியல்வாதிகளையும் மக்களையும் பாடாய் படுத்திவிட்டது


சமசீர் கல்வி என்றால் என்ன? ஒரு ஏழை குடியானவனின் மகன் என்ன பாடத்தை படிக்கிறானோ அதே பாடத்தை தான் மாட மாளிகையில் கூட கோபுரங்களில் வாழுகின்ற சீமானின் மகனும் படிக்க வேண்டும்

அப்படி படித்தால் தான் பணம் உள்ளவன் புத்தி சாலி அது இல்லாதவன் தற்குறி என்ற நிலை மாறி அறிவால் ஆளுமை திறத்தால் எல்லோரும் ஒன்று என்ற சமத்துவம் பிறக்கும் சமதர்மத்திற்கு வழி ஏற்படும் அதனால் அதை தருவதனால் இந்த கல்வி திட்டத்திற்கு சமசீர் கல்வி என்ற பெயர் வந்ததாக சிலர் சொல்கிறார்கள்

இதை கேட்பதற்கு சந்தோசமாக தான் இருக்கிறது குழந்தைகளை உடனடியாக அறிவாளிகளாக மாற்ற கூடிய மந்திரக் கோல் எங்கள் கையில் தான் இருக்கிறது

போட்டி மிகுந்த நவநாகரிக உலகில் உங்கள் குழந்தைகள் எதிர்நிச்சல் போட்டு வெற்றி பெற வேண்டும் என்றால் எங்கள் பள்ளியில் சேர்த்து உடனடியான பலனை அனுபவிங்கள் என ஜவுளிக் கடை விளம்பரம் போல பல தனியார் பள்ளிகள் தங்களை விளம்பரம் படுத்தி கோடி கணக்கான பணத்தை மக்களிடம் இருந்து இது வரை கொள்ளை அடித்து வந்தது


அந்த கொள்ளை தமிழகம் முழுவதும் தங்கு தடை இல்லாமல் நடை பெறுவதற்கு தமிழ் நாட்டு கல்வி துறையும் முழுமுதற் காரணமாக இருந்தது

அரசாங்க பள்ளியில் பயிலுகின்ற மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ அவர்களை ஒன்பதாம் வகுப்பு வரை தோல்வியடைய செய்யாமல் மேல் வகுப்புக்கு தூக்கி போட்டு கொள்ளுங்கள் என கல்வி துறை அறிவித்ததனால் பல பாட சாலைகள் ஆசிரியர்களும் மாணவர்களும் தூங்கும் விடுதிகளாகவே செயல் படுகின்றன

எந்த அடிப்படை தகுதியும் இல்லாமல் பத்தாம் வகுப்பிற்கு வரும் மாணவன் தமிழ் கூட வாசிக்க தெரியாமல் தடுமாறும் போது பொது தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

இதனாலேயே பல தமிழ் குழந்தைகள் பத்தாம் வகுப்பு தேற முடியாமல் கடை கன்னிகளுக்கு வேலை செய்ய போய் விடுகிறார்கள் இதனால் மலர வேண்டிய வாழ்க்கை மலரும் முன்பே கருகி விடுகிறது 


அதனால் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தால் அவைகளை உயிரோடு புதைப்பதற்கு சமம் என்று கருதியே பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து பணம் கட்ட பாடாய் படுகிறார்கள்

இனி அந்த கவலை இல்லை சமசீர் கல்வி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாட திட்டம் என்பதினால் தனியார் பள்ளி குழந்தை போலவே அரசு பள்ளி குழந்தைகளும் புத்திசாலிகளாக இருப்பார்கள் ஒரே ஒரு வித்தியாசம் அரசு பள்ளிகளில் தமிழில் படிக்கும் பாடத்தை தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிப்பார்கள் அவ்வளவு தான் வித்தியாசம் என்று சிலர் கனவு காண்கிறார்கள்

இந்த கனவு வாதிகள் ஒரு நிஜத்தை உணர வேண்டும் ஒரு குழந்தை படிப்பதும் படிக்காமல் இருப்பதும் பாட திட்டத்தை பொருத்து மட்டும் அல்ல அதை போதிக்கும் முறையால் தான் என்பதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் 


ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்குமே தேர்ச்சி என்பதனால் ஆரம்ப பள்ளி முதல் நடு நிலை பள்ளி வரை எந்த ஆசிரியரும் பொறுப்பு உணர்ந்து பாட நடத்துவது கிடையாது

பல கிராமபுறங்களில் உள்ள பள்ளி கூடங்களுக்கு ஆசிரியர்கள் வருவதே கிடையாது அப்படியே வந்தாலும் குழந்தைகளுக்கு பாட நடத்த வேண்டிய நேரத்தில் தங்களது சொந்த வேலைகளை தான் கவனிக்கிறார்கள்

இன்னும் சில பாட சாலைகளில் வகுப்பிற்கு சரியாக வராத குழந்தைகளுக்கு கூட வரவு பதிவேட்டில் வந்ததாக பதிவு செய்து விடுகிறார்கள்

எதற்க்காக இப்படி செய்கிறார்கள் என்றால் ஒரு பள்ளி கூடத்திற்கு தொடர்ச்சியாக குழந்தைகள் வருவது குறைந்தால் ஆசிரியர் பணி இடங்கள் குறையும் இட மாற்றம் ஏற்ப்பட நேரிடும் இதை தவிர்ப்பதற்காகவே வராத குழந்தைகள் வந்ததாகவும் பரீட்சை எழுதாத குழதைகள் எழுதியதாகவும் போலி ஆவணங்களை ஊருவாக்குகிரார்கள்


இதனாலும் சரிவர பாடம் நடத்தாததினாலும் பத்தாம் வகுப்பிற்கு வந்த பிறகு கூட பல குழந்தைகளுக்கு எழுதப் படிக்கவே  தெரிவதில்லை

எனவே பாடத்திட்டம் எத்தகையதாக இருந்தாலும் எப்படிப்பட்ட சிறப்புகளை கொண்டிருந்தாலும் அதை நடத்துகின்ற ஆசிரியர்கள் தங்களது கடமையை ஒழுங்காக செய்ய வில்லை என்றால் எந்த பயனும் கிடைக்க போவது இல்லை

அதாவது சமசீர் கல்வி என்பது பலர் நினைப்பது போல எல்லா தரப்பு குழந்தைகள் வாழ்விலும் ஒளியேற்ற போவது கிடையாது வழக்கம் போலவே அரசாங்க பள்ளிகள் அழுது வடியும் தனியார் பள்ளிகள் பூத்துக் குலுங்கும்

இதை சிலர் ஏற்க மறுக்கலாம் அரசு பள்ளிகளை விட நாங்கள் தரம் வாய்ந்த பாடத்தையும் தரம் வாய்ந்த போதனை முறையையும் கையில் வைத்துள்ளோம் எங்களால் தான் திறமை மிகுந்த தலைமுறையினரை உருவாக்க முடியும் என்ற பிரச்சாரத்தால் தனியார் பள்ளிகள் மனம் போன போக்கில் வசூல் வேட்டையை நடத்த முடியாது தனது கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் என்று வாதிடுகிறார்கள் 

மிக ஆழமாக சிந்தித்தால் இந்த வாதத்தில் உள்ள குழந்தை தனம் தெரிய வரும் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே பாடம் எனும் போது அது சரியான முறையில் பயன் பாட்டுக்கு கொண்டுவரப்பட்டால் மாணவர்களின் அறிவு திறன் வளர்ச்சி அடையும் என்பதை வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும் இது நடைமுறைக்கு வருவது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது

காரணம் பண வசூல் செய்து பழக்கப் பட்ட தனியார் பள்ளியின் நிர்வாகம் ஒரே நாளில் தனது வருவாயை குறைத்து கொள்ள விரும்பாது எந்த வகையிலாவது பொருளாதார வரவை இரட்டிப்பாக்க முயலுமே அல்லாது நஷ்டத்தை மனமுவந்து ஏற்கவே ஏற்காது

இது சம்பந்தமாக எனது சந்தேகங்களை ஒரு நண்பரிடம் கேட்டேன் அவர் கல்வி துறையில் பல்லாண்டு காலம் அனுபவம் பெற்றவர் அவருக்கு சொந்தமாக இரண்டு உயர் நிலை பள்ளிகளும் ஒரு கல்லூரியும் உண்டு

அவரிடம் சமசீர் கல்வியால் தனியார் பள்ளியின் வருவாய் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதா? என்று கேட்டேன் 


அதற்கு மெளனமாக சிரித்த அவர் இந்த உலகில் பணத்தின் சுவையை ருசி பார்த்தவன் அதை அவ்வளவு விரைவில் விட்டுவிட மாட்டான் தமிழ் நாடு அரசு தனது சமசீர் கல்வி திட்டத்தை தனது இலாக்காவுக்கு உட்பட்ட பள்ளிகளில் மட்டும் தான் செயல் படுத்த முனைய முடியும்

அதாவது மாநில அரசின் பாட திட்டத்தை செயல் படுத்தும் பள்ளிக் கூடங்களில் மட்டும் தான் சமசீர் கல்வியை நடைமுறை படுத்த முடியும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ க்கு சொந்தமான பாடத்திட்டங்களை நடத்தும் பள்ளிக்கு இந்த கல்வி முறை பொருந்தாது

எனவே வரும் கல்வியாண்டில் இருந்து மத்திய அரசின் கல்வி துறையில் தான் தமிழக தனியார் பள்ளிகள் இனைய விரும்பும் இதுவரை சி.பி.எஸ்.இ பாடங்கள் கடினமானது என்று பிரச்சாரப் படுத்தப் பட்டது இனி அந்த பிரச்சாரத்தின் தன்மையை மாற்றி மத்தியரசு பாட திட்டம் தான் குழந்தைகளின் வருங்காலத்திற்கு ஏற்புடையது என பிரச்சாரம் செய்வோம் மக்களும் அதை ஏற்று கொள்வார்கள் எனவே எங்களது கல்வி வியாபாரத்தில் இந்த வருடம் சற்று தேக்கமே தவிர வேறொன்றும் பெரிய பாதிப்புகள் வரக்கூடிய சூழல் இல்லை என்றார் 


திருடானாக பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் அழகாக சொல்லுவார் அதாவது திருடனை கண்டுபிடிக்க ஒரு வழியை காவலர் கண்டுபிடிப்பதற்கு முன் தப்பிக்க பல வழிகளை திருடன் உருவாக்கி விடுவது போல லாபம் சம்பாதித்தே பழக்கப் பட்ட தொப்பை மனிதர்கள் தங்களது வசூல் வேட்டையை எதாவது ஒரு சட்டத்தின் சந்து பொந்துகளை கண்டுபிடித்து தடை இல்லாமல் நடத்திக் கொள்வார்கள் என்பது மிக தெளிவாக தெரிகிறது

எனவே அரசு பள்ளியில் பயிலுகின்ற மாணவர்களின் எதிர்காலம் தொடர்ந்து கேள்வி குறியாக தான் இருக்கப் போகிறது

இதை மாற்ற வேண்டும் என்றால் கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் ஒரு வகுப்பில் பொது தேர்வில் குழந்தைகள் மிக குறைவாக தேர்ச்சி அடைந்தார்கள் என்றால் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளத்தில் பிடித்தம் கொண்டுவர வேண்டும்

கையில் உள்ள காசு போய் விடும் என்ற பயம் வந்தால் தலைகீழே நின்று பாடம் நடத்தியாவது குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற செய்து விடுவார்கள்


இதுவும் அல்லாமல் ஒவ்வொரு பள்ளியையும் கண்காணிக்க பஞ்சாயத்து வாரியாக பாரபட்சம் அற்ற கண்காணிப்பு குழு அமைக்கப் பட்டு ஆசிரியர்களின் தாரதரத்திற்கு ஏற்ற நிலைப்பாடை எடுக்கும் அதிகாரத்தை கொடுக்க வேண்டும்

இப்படி இன்னும் சில கடின கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் செய்தாலே போதுமானது தமிழக பள்ளிகளின் தரம் தானாக உயர்ந்து விடும்

சம்சீர் பாடம் என்பதெல்லாம் புண்ணுக்கு புணுகு பூசும் வேலை தான் ஒரு நாட்டில் சட்ட திட்டங்கள் நன்றாக இருந்து அதை நடைமுறை படுத்துபவன் தகுதி இல்லாதவனாக இருந்தால் எந்த நல்ல சட்டமும் பயன் தரப்போவது இல்லை

அதை போன்று தான் சமசீர் கல்வி என்பதும் நல்ல வார்த்தை நல்ல கருத்து நல்ல கற்பனை ஆனால் நடைமுறையில் பயன் தராத தர முடியாத திட்டம்

நல்லவர்கள் நாடாள வரும் வரையில் இப்படி பட்ட சாரமற்ற சக்கையை தான் நாம் உண்ண வேண்டும்

பொதுவாக சொன்னால் சம்சீர் கல்வி என்பது இல்லாத பிள்ளையை கட்டாத தொட்டிலில் போட்டு தாலாட்டி பெயரும் வைத்து பூச்சூடி அழகு பார்ப்பது போலதான்

Contact Form

Name

Email *

Message *