Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்தியா வல்லரசாக வேண்டாம் !

  ள்ளிக்கு போகும் சின்ன குழந்தையாக இருக்கும் போது எல்லோருடைய மனதிலும் ஒரு எண்ணம் உதயமாகும் பெரிவர்களாக இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தாங்கள் விரும்பியப் படி எங்கு வேண்டும் என்றாலும் சுதந்திரமாக போகலாம் வரலாம் எல்லோரையும் அதிகாரப் படுத்தலாம் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை குறிப்பாக பள்ளிக்கூடம் போக வேண்டாம் ஆசிரியர்களின் கடு கடுத்த முகத்தை காண வேண்டாம் வீட்டிற்கு வந்த பிறகும் படித்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை

இப்படி தோன்றுவது எல்லா தரப்பு குழந்தைகள் வாழ்விலும் நடக்க கூடிய விஷயம் தான் காரணம் மனிதனாக பிறந்து விட்டாலே ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுவதற்கு தான் விரும்புகிறான் தன்னிடம் இல்லாத செளகரியம் மற்றவர்களிடம் இருப்பதாக நம்புகிறான் நடந்து போகின்றவன் காரில் போனால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறான் காரில் போகிறவன் ஆகாய விமானத்தில் போவது தான் சுலபம் என்று நினைக்கிறான் 


இந்த விருப்பங்களும் எண்ணங்களும் மனிதர்களுக்கு இருப்பதனால் அவனால் செய்யப் படுகின்ற எந்த செயலிலும் இத்தகைய ஆசைகள் பிரதிபலிப்பதை காண முடிகிறது ஒரு சினிமாவில் கதாநாயகனாக நடித்தவன் அடுதடுத்து நடித்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் தொழிலில் நிலைத்து நிற்க வேண்டும் என்று நினைக்கிறானோ இல்லையோ தன்னை எம்.ஜி.ஆரா க என்,டி,ஆரா க நினைத்து கொண்டு முதலமைச்சர் பதவிக்கு கனவு காண்கிறான்

ஒரு கல்யாண மண்டபத்தில் நான்கு பேரை வைத்து கொண்டு கட்சியை ஆரம்பித்த குட்டி தலைவன் கூட அடுத்தக் கட்ட தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது தான் தான் என்றும் தானே நாட்டின் அடுத்த தலைவன் என்றும் நம்புகிறான் அதையே நாலு இடங்களிலும் மேடை போட்டு பேசுகிறான் அதை சில அப்பாவிகளும் நம்புகிறார்கள் கூட்டம் சேர்ந்து கொடியும் பிடிக்கிறார்கள்

தனிமனிதர்களின் கதை இப்படி இருக்கிறது என்றால் தேசங்களின் கதையும் எதிர்பார்ப்பும் ஒன்றும் வித்தயாசப் பட்டு இருக்கவில்லை இன்னும் சில காலத்தில் உலகத்தின் வல்லரசாக தானே உயரப் போவதாக பல தலைவர்கள் மார் தட்டிக் கொள்கிறார்கள் வருங்கால வல்லரசு நமது நாடு தான் என்ற வார்த்தையை கேட்கும் போது பொது ஜனங்களுக்கும் உற்சாகம் பீறிட்டு கிளம்புகிறது 


இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்த ஒரு ஸ்ரீலங்கன் சொன்னார் பொறுத்திருந்து பாருங்கள் அமெரிக்கா ரஷ்யாவிற்கு அடுத்தப் படியாக உலகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தியாக இலங்கை வரப்போகிறது என்று சொன்னார் அது அவரது ஆசை எதிர்பார்ப்பு அதில் தவறு இருப்பதாக அதீத கற்பனை இருப்பதாக யாரும் சொல்ல முடியாது என் நாடு முன்னேறி விடும் என்று நான் நினைப்பது எந்த வகையில் தவறாகும்

இன்று நம் நாட்டில் பலரும் உலகின் அடுத்த வல்லரசு இந்தியாதான் என்று உரக்கப் பேசி வருகிறார்கள் இதை கேட்பதற்கு சந்தோசமாக இருக்கிறது எங்கெல்லாம் மனித உரிமைகள் மீரப்படுகிறதோ எங்கெல்லாம் அப்பாவி ஜனங்கள் கொடுமை படுத்தப் படுகிறார்களோ அங்கெல்லாம் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கும் அராஜகத்தை தட்டி கேட்கும் திருந்த மறுத்தால் அடித்து திருத்தும் என்று நினைக்கும் பொழுது சந்தோசம் அடையாத இந்தியன் யாரவது இருப்பார்களா என்ன

இந்தியா வல்லரசாகி விடும் என்ற நம்பிக்கை இன்று பரவலாக பலரிடம் இருக்கிறது இந்த நம்பிக்கை வரவேற்க தக்கது என்றாலும் அவர்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாக இருக்கின்ற விசயங்கள் அறிவுபூர்வமானதாக இல்லை என்பது வேதனை அளிக்கும் செய்தியாகும் 


அந்த காலத்தில் ஒரு பள்ளி கூட வாத்தியார் முன்னூறு ரூபாய் சம்பளம் வாங்கினார் இப்போது அவர் முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் பல துறையில் பணி புரிபவர்கள் ஐம்பதாயிரம் முதல் சில லட்சங்கள் வரை சம்பாதிக்கிறார்கள் சாதாரண கூலி வேலைக்கு போகிறவன் கூட தினசரி ஐநூறு ரூபாய் சம்பாதிக்கிறான்

சம்பாத்தியம் உயர்ந்துள்ள அளவு மக்களின் வாங்கும் திறனும் அதிகரித்துள்ளது ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்ற போது பொருளை வாங்க நாதி இல்லை இன்று இருபதாயிரத்திற்கு மேல் விலை கூடினாலும் அனைத்து நகை கடைகளும் மக்கள் கூட்டத்தால் நிறம்பி வழிகிறது ஜவுளி கடைகள் பல்பொருள் அங்காடிகள் என எல்லாவற்றிலும் கூட்டம் தான் நிலங்களை வாங்கிப் போடுவதிலும் புதிய வீடுகளை கட்டுவதிலும் மக்கள் போட்டி போட்டு கொண்டு ஆர்வம் காட்டுகிறார்கள்

இது மட்டுமா உலக அளவில் முதல் தரத்தில் இருக்கும் நிறுவனங்கள் பல இந்தியாவில் முதலிடு செய்ய ஆர்வம் காட்டுகிறது கார் தொழிற்சாலை முதல் கப்பல் கட்டும் தொழில் வரை இந்தியாவில் துவங்கினால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என உலக முதலாளிகள் நம்புகிறார்கள் வளர்ந்து விட்ட நாடுகள் பல இந்தியாவின் வளர்ச்சியை கண்டு மூக்கில் விரலை வைக்கின்றன 


 உலக அரசியல் நடப்பில் கூட இந்தியாவின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய தேசங்களும் அமெரிக்காவும் கூட இந்தியாவோடு நட்புரிமை பாராட்ட முன்னுக்கு நிற்கிறது இந்தியாவை சுற்றி உள்ள குட்டி நாடுகள் தங்களது சொந்த சிக்கல்களை தீர்த்து கொள்ள இந்தியாவின் தயவை எதிர் பார்க்கிறது

இது எப்போதும் இல்லாத நிலைமையாகும் நேரு காலத்தில் சீனாவோடு பரிதாபகரமான முறையில் தோற்றோம் காஷ்மீர் விவகாரத்திலும் இந்தியாவின் நிலை பாட்டை மற்ற நாடுகள் அவ்வளவாக காது கொடுத்து கேட்க வில்லை ஆனால் இன்று இந்தியாவின் குரலை கேட்டு உலக நாடுகள் திரும்புகின்றன திகைக்கின்றன இந்தியா தன்னை பகையாளியாக எண்ணக் கூடுமோ என்று அஞ்சுகின்றன அதனால் நமது நாடு வல்லரசாக வளர்ந்து வருவதில் ஐயம் இல்லை என பலர் பேசி வருகிறார்கள்

இத்தகைய கருத்துக்களை சில அரசியல் கட்சிகளும் சில தலைவர்களும் சில வெகுஜன ஊடகங்களும் மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள் இந்த கருத்துக்கள் நிஜமாகவே நடை பெற போவதாக ஒரு போலியான பிம்பம் உருவாக்கப் பட்டும் வருகிறது உண்மையாகவே நம் நாடு வல்லரசாக போகிறதா வல்லரசாக நம்மால் தற்போது முடியுமா என்பதை எதிர் பார்ப்பு கலக்காமல் நிதான புத்தியோடு சிந்திக்க வேண்டும் 


 இந்தியர்களின் சம்பளம் கூடி இருக்கிறது அதை நான் மறுக்க வில்லை ஆனால் ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் ஐந்து லட்சம் வாங்கினாலும் அது கூலி தானே தவிர உழைப்பிற்கான லாபம் இல்லை அதாவது நமது நாட்டில் குமாஸ்தாக்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர தொழில் முனைவோரின் எண்ணிக்கை கூட வில்லை

மேலும் அயல் நாட்டு நிறுவங்கள் நம் நாட்டில் தொழிற்சாலைகளை அதிகமாக உருவாக்குவதற்கு மூல காரணமே இங்கு மனித உழைப்பு மிகவும் மலிவாக கிடைக்கிறது மேலும் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பதற்கு இந்தியாவின் சந்தை மிக பெரியதாக இருக்கிறது இங்கே தான் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் அதனால் தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா பக்கம் வருகிறதே தவிர நம் நாடு வல்லரசாக போகிறது என்பதற்க்காக வரவில்லை

ஒரு நாடு வல்லரசாக உருமாற வேண்டுமென்றால் அதற்கென்று சில அடிப்படை தகுதிகள் இருக்கின்றன முதலில் மக்களின் கல்வி தரம் ஆரோக்கியமான வகையில் இருக்க வேண்டும் அதாவது படித்தவர்கள் பட்டதாரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கல்வி தரத்தை கணக்கிட கூடாது மாணவர்களின் புதியனவற்றை உருவாக்கும் அறிவு திறமையை அடிப்படையாக கொண்டு கணக்கிட வேண்டும் 


அடுத்ததாக படித்து முடித்து வெளியேறுகின்ற தலைமுறையினர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பது உத்திரவாதத்துடன் இருக்க வேண்டும் வேலையற்று தெருவில் திரிவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைய வேண்டும் அதே நேரம் பணியாளர்களிடம் வேலைக்கான ஊக்கம் குறையாமலும் இருக்க வேண்டும்

மிக முக்கியமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்த நிலையிலும் முன்னோக்கி செல்வதாக இருக்க வேண்டுமே தவிர ஏற்ற இறக்கத்தோடு இருக்கக் கூடாது அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் எதாவது ஒரு இக்கட்டான சூழலில் சர்வதேச சமூகம் பொருளாதார தடையை விதித்தால் கூட அதை சில வருடங்கள் ஆனாலும் தாக்குப் பிடிக்கும் வலுவோடு நாட்டுப் பொருளாதாரம் இருக்க வேண்டும்

அரசியல் என்பது சாக்கடை தான் என்றாலும் கூட நாட்டின் நிர்வாகத்தை சீரழிக்கும் அளவிற்கு அதன் வேகம் போக கூடாது ஓரளவாவது நேர்மையை கடைபிடிக்கும் அரசியல் அமைப்புகள் இருக்க வேண்டும் கொள்கை கோட்பாடுகள் என ஆயிரம் சிக்கல்கள் இருந்தாலும் தேச நிர்வாகம் என்று வரும் போது அனைத்து தரப்பினரும் இடைஞ்சல் செய்யாமல் ஒத்துழைக்க வேண்டும் 

இவை அனைத்தையும் தாண்டி சர்வதேச சமூகத்தோடு போட்டி போடக் கூடிய விஞ்ஞான தொழில் நுட்ப திறன் மற்றவர்களோடு ஒப்பிட முடியாத அளவு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தகவல் தொடர்பிலும் தன்னிறைவை எட்டி இருக்க வேண்டும் இவைகள் அனைத்தும் இருந்தால் தான் வல்லரசு என்ற ராஜ பாட்டையில் அடியெடுத்து வைக்க முடியும் அல்லது வைக்க நினைக்கலாம்

நம்மால் வல்லரசாக முடியுமா முடியாதா என்பதை பரிசோதனை செய்து பார்க்க ஒரு எளிய வழி இருக்கிறது நமது அண்டை நாடான சீனாவின் வளர்ச்சியோடு நமது வளர்ச்சியை ஒப்பிட்டு பார்த்தாலே சரியான விடை கிடைத்து விடும் ஒரு எளிய உதாரணத்தை சுட்டிக் காட்டலாம் சீனா ஒலிம்பிக் போட்டியை தன்னந்தனியாக நின்று வெற்றிகரமாக நடத்திக் காட்டும் வல்லமையை பெற்று இருக்கிறது ஆனால் இந்தியாவால் ஒரு காமன் வெல்த் போட்டியை கூட திறம்பட நடத்த முடிய வில்லை

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தான் நமது தேசிய நெடுஞ்சாலைகள் ஓரளவு சீர் பெற்று இருக்கிறது இன்னும் பல ஊரக சாலைகள் குண்டும் குழியமாக கிடக்கிறது கிராமங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் நகர சந்தையை சென்றடைய சில நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது இதனால் ஏற்படும் பண நஷ்டமும் பொருள் நஷ்டமும் கண்டுக் கொள்ளப் படுவதே கிடையாது 


ஆங்கிலேயர்கள் அமைத்து கொடுத்த இரும்பு பாதைகள் தான் இன்னும் உபயோகத்தில் இருக்கிறது நவீன கால போக்குவரத்திற்கு உகந்த புதிய இரயில் தடங்கள் எதுவும் திறம்பட அமைக்கப் பட வில்லை சீனர்களின் அன்றாட நிகழ்வாக இருக்கும் புல்லட் ரயில் என்பது இந்தியர்களுக்கு கனவாகவே இருக்கிறது இது தவிர உள் நாட்டு நீர் போக்குவரத்து என்பது முற்றிலுமாக கவனிக்கப் படாமலே கிடக்கிறது அடிப்படை கட்டமைப்பில் உள்ள பல குறைகளை மிக நீளமான பட்டியல் போட்டு சொல்லிக் கொண்டே போகலாம்

இது தவிர நமது ராணுவத்தின் நிஜமான பலம் என்னவென்று நமக்கு முற்றிலுமாக தெரியாது வலுகுறைந்த பாக்கிஸ்தானோடு நடந்த சில சண்டைகளில் நாம் வென்றிருக்கிறோம் என்பதற்காக நமது ராணுவ பலத்தை மிகைப் படுத்தி எடை போட கூடாது வலுவான எதிரிகளோடு மோதும் போது தான் இந்திய ராணுவத்தின் திறமை என்ன என்பது தெளிவாக தெரியும்

இருப்பினும் நமது ராணுவத்திற்கு தேவையான பல தளவாடங்களை நாம் இன்னும் அயல் நாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்கிறோம் இந்த நிலையை மாற்றி நமது இராணுவ தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ளும் விதமாக வளர வேண்டும் அதற்கு இன்னும் ஏராளமான அதிகப்படியான உழைப்பு தேவைப்படுகிறது 


இவை எல்லாவற்றையும் விட அதி முக்கியமானது நேர்மையான தேச பக்தி மிக்க அரசியல் தலமையாகும் இது இன்றைய சூழலில் இந்தியா முழுவதுமே தேடி பார்த்தாலும் கிடைக்கக் கூடியதாக இல்லை அடுத்த தேர்தலை மனதில் வைக்காமல் அடுத்த தலை முறையை மனதில் வைத்து செயல் படக்கூடிய தலைவர்களால் தான் நாட்டை வல்லரசாக்கி நடை போட வைக்க முடியும்

ஆனால் இன்றைய தலைவர்களின் உண்மையான முகத்தை சற்று மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி பாருங்கள் உங்களுக்கே பயமாக இருக்கும் தலை சுற்றும் இவர்களால் இவர்கள் மேடையில் முழங்குகின்றப் படி இந்தியாவை வல்லரசாக்க முடியுமா என்பதை பக்க சார்பில்லாமல் யோசித்தால் யதார்த்த நிலைமை தெளிவாக தெரியும்

எனவே இந்தியர்களான நாம் வீண் கனவு காண்பதை விட்டு விட்டு பிரச்சனைகளை நேருக்கு நேராக சந்திக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள விழித்துக் கொள்ள வேண்டும் முதலில் நம் நாட்டில் நல்லரசு இருந்தால் தான் அது வல்லரசாக வளரும் என்பதை உணர வேண்டும் நல்லரசை தராத எந்த அரசியல் சித்தாந்தமும் தோற்று போனதாகவே கருத வேண்டும் 


 படித்தவர்கள் பண்பாளர்கள் தேசத்தை நேசிப்பவர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் அத்தனை பெரும் பேசி கொண்டிருப்பதை விட்டு விட்டு செயலில் இறங்க முன்வர வேண்டும் சாக்கடையாக நாற்றம் வீசும் அரசியல் வாய்க்காலில் இறங்கி முதலில் அதை சுத்தப் படுத்த வேண்டும் நல்ல தலைவன் எங்கோ ஒரு மூலையில் இருந்து வருவான் என்பதை எதிர்பார்ப்பதை விட்டு விட்டு அவன் வரும் போது வரட்டும் அவன் வரும் வரை நான் அந்த பணியை செய்வேன் என்ற ஊக்கத்தை வளர்த்து செயல் பட வேண்டும்

அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளின் கூட்டத்தை எதிர்க்க போனால் நான் அடிபடுவேனே என் குடும்பம் நட்டாற்றில் நிற்க வேண்டிய சூழல் வருமே என் சொந்த பந்தங்கள் எல்லாம் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலைக்கி தள்ளப் படுவார்களே என்ற சுயநல அச்சத்தை தூக்கி எரிந்து கடல் பொங்கி எழுந்தாலும் கலங்கிட மாட்டேன் அண்டம் சிதறினாலும் அஞ்சிட மாட்டேன் என்ற உறுதியோடு செயலில் குதிக்க வேண்டும் அப்போது தான் அப்போது மட்டும் தான் தற்போதைய புல்லரசுகள் சிதறி நல்லரசு ஏற்பட்டு நாடு வல்லரசாகும்.

Contact Form

Name

Email *

Message *