Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !

   1950 ஆம் வருடம் திபெத் என்ற சின்னஞ்சிறு மலை நாட்டை சீனா என்ற மஞ்சள் நாகம் விழுங்கி ஏப்பம் இட்டது உலகில் ஜனநாயகத்தை பற்றி வாய்கிழிய பேசுகின்ற எந்த நாடும் இந்த சின்ன நாடு தனது சுதந்திரத்தை பலி கொடுத்ததை பற்றி வாய்திறக்க வில்லை பல கண்டுகொள்ளவே இல்லை 

சீன நினைத்திருந்தால் பொதுவுடமை புரட்சி வெற்றி பெற்றவுடனேயே திபெத்தை ஆக்கிரமித்திருக்கலாம் ஆனால் அது நடக்கவில்லை இத்தனை ஆண்டுகள் கழித்து திபெத்தை கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? சீனாவிற்கு பெரும் ஆபத்தை கொடுக்கும் அளவிற்கு திபெத் என்ன அத்தனை பலசாலியா இந்த ராணுவ நடவடிக்கைக்கு பின்னே எதோ ஒரு பெரிய திட்டம் இருக்க வேண்டும் அது என்ன என்று யோசித்த ஒரே மனிதன் அப்போது இந்தியாவின் துணை பிரதமந்திரியாகவும் உள்துறை மந்திரியாகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் மட்டும் தான் ஆனால் அந்த தேச நலனை உயிர் மூச்சாக கொண்ட உன்னத மனிதரின் சந்தேகத்தை எந்த தலைவர்களும் காது கொடுத்து கேட்க வில்லை நாட்டு பிரதமமந்திரி நேரு சொன்னார் இந்தியாவும் சீனாவும் சகோதரர்கள் இருவரும் ஒருவர்க்கொருவரை எப்போதுமே தாக்க மாட்டார்கள் என்று நேரு பேச்சு ஊரெல்லாம் எதிரொலித்து உண்மை குரலை மங்க செய்துவிட்டது 


இந்திய ராணுவ தளபதி கே.எஸ்.திம்மையா சீனாவின் முகம் புத்தனை போல் கருணையானது அல்ல அசுரனை போல் கொடுமையானது எனவே இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென எச்சரித்து பார்த்தார் அதிகார பீடத்தில் அமர்ந்தவர்கள் சீனாவாவது இந்தியாவை தாக்குவதாவது என்று கேலி பேசி சிரித்தார்கள் அபாயத்தை உணராமல் உல்லாசமாக நடந்தார்கள் 1959 ல் அப்போதைய ராணுவ தளபதி பி.பி.எஸ் தோரட் இன்னும் இரண்டு ஆண்டுகளில் சீனாவின் தாக்குதல் இந்தியாவின் மீது நிகழ வாய்ப்புள்ளது எனவே எல்லை புறங்களை சரியான முறையில் வலுவாக்க வேண்டுமென்று நேருவிடம் முறையிட்டார் 

ராணுவ தளபதிகள் மட்டுமல்ல இந்திய உளவு துறையும் தலைமை அமைச்சரை எச்சரித்தது அசட்டையான போக்கு தேச பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல என்று இடித்துரைக்கவும் செய்தது ஆனால் நம் நாடு பெற்ற பெரிய சாபம் உண்மையை சொன்னால் நம்ப மாட்டோம் கற்பனையான உணர்வுகளை தூண்டிவிட்டால் அதை நம்பி ஆட்டம் போடுவோம் பகலில் கூட கனவும் காணுவோம் 


அப்போதும் அது தான் நடந்தது உலகத்தையே திரும்பி பார்க்க செய்யும் பஞ்சசீல கொள்கையை உருவாக்கி இருக்கிறேன் உலக நாடுகள் அனைத்திலும் அமைதி புறாக்கள் மட்டுமே பறப்பதற்கு பாடுபட்டு கொண்டிருக்கிறேன் எனது எண்ணத்திற்கு இசைந்து சீனா கையெழுத்தும் போட்டு தந்திருக்கிறது அப்படி பட்ட சீனாவை சந்தேகிப்பது மாபெரும் துரோகம் அதை நான் செய்யவே மாட்டேன் என்று நேரு உணர்ச்சி பொங்க வீர வசனம் பேசினார் ரோஜாவின் ராஜாவான அவரின் இனிய குரல் கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து வரேவேற்றனர் 

ஆனால் நடந்தது என்ன 1962 ஆம் வருடம் சீனா இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியது பல ஆயிர கணக்கான கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள நம் தாய் பூமி அந்நியர் வசமானது எதிர்த்து நிற்க கூட வலு இல்லாமல் நமது ராணுவம் தோல்வியை தழுவியது பஞ்சசீலம் பேசியவர்கள் நெஞ்சடைத்து நின்றார்கள் ஆனாலும் என்ன பயன் பட்ட தோல்வி பட்டது தான் விட்ட பூமி விட்டது தான் 



இவ்வளவு பெரிய அவமானத்தை தோல்வியை இழப்பை சந்தித்த பிறகாவது சீனா என்ற மஞ்சள் நாகத்திடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா? சீனாவின் வாயிலிருந்து வருகின்ற வார்த்தை ஒன்றாக இருக்கும் அதன் செய்யல் வேறொன்றாக இருக்கும் என்பதை உணரவேண்டாமா? சீனா ஒரு அடி அடித்தால் மறு அடியை திருப்பி கொடுக்கும் அளவிற்கு நாம் வலுவாக எல்லை புறத்தை பாதுகாக்க வேண்டாமா? 

அன்று நேருவிடம் சொல்லிய அனைத்து எச்சரிக்கை மொழிகளை அவர் எப்படி காதில் வாங்காமல் காலில் போட்டு மிதித்தாரோ அதே போலவே கடந்த எழு வருடமாக இந்திய அரசு சீனாவை பற்றிய எச்சரிக்கை மொழியை கேட்கும் போதெல்லாம் செவிடாக இருக்கிறது அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கண்ணில் பட்டாலும் பார்க்கவே மாட்டேன் என்று குருடாக இருக்கிறது சீனவை கண்டித்து ஒரு சொல் கூட சொல்லமாட்டேன் என்று ஊமையாக இருக்கிறது 


இந்த விஷயம் சோனியாவின் அடுப்பங்கரை சம்பந்தப்பட்டது மன்மோகன்சிங்கின் குளியலறை சம்பந்தப்பட்டது என்றால் நாம் யாரும் அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ஆனால் இது இந்த நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை இந்த நாட்டின் மண் களவு போகாமல் தடுக்கும் பிரச்சனை தாய் நாட்டின் சுதந்திரத்திற்கு உலை வைக்கும் பிரச்சனை அதனால் நாட்டை நேசிக்கும் எவரும் போனால் போகட்டும் என்று விட்டுவிட முடியாது 

பேரறிஞன் சாணக்கியன் இரண்டு பெரிய நாடுகள் சேர்ந்து பங்காளிகளாக அண்டை வீட்டுக்காரர்களாக இருக்க முடியுமே தவிர ஒரு போதும் நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்வான் இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை மட்டும் அல்ல வரலாற்று பூர்வமான ஆதாரமும் ஆகும் ஆசிய பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் மிகப்பெரும் நாடுகள் சீனா ஓரளவு பொருளாதார வல்லரசாக வளர்ந்து வருகிறது தட்டு தடுமாறி இந்தியாவும் அந்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது 


நான் வலுவானவனாக வளமானவனாக இருந்து விட்டால் என் தம்பியை என்னையும் விட பெரியவனாக ஆக்கி பார்க்க விரும்ப மாட்டேன் அவன் வளர்ந்து விட்டால் என்னை மதிக்க மாட்டான் மாறாக என் வளர்ச்சிக்கு இடைஞ்சலாக இருப்பான் என்று தான் என்னால் நினைக்க முடியும் இது தான் மனிதனின் அடிப்படை சுபாவம் இது மனிதக்கு மட்டுமல்ல மனிதனால் ஆளப்படுகின்ற நாடுகளுக்கும் பொருந்தும் 

உலக சந்தையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது என்றால் அது நிச்சயம் சீனாவை பாதிக்கும் இந்தியர்கள் அவ்வளவு சீக்கிரம் பொருட்களை உற்பத்தி செய்ய மாட்டார்களே தவிர செய்ய ஆரம்பித்து விட்டால் ஓரளவு உருப்படியான பொருட்களை தயாரிப்பார்கள் இது சீனர்களால் ஆகாத விஷயம் நாலணாவிற்கு காற்றாடி செய்து பதினாறு அணாவிற்கு விற்க நினைப்பவன் சீனாகாரன் அவனால் தனக்கு வரும் நஷ்டத்தை தாங்கிகொள்ளவே முடியாது எனவே யாரால் துன்பம் வருமென்று அவன் நினைக்கிறானோ அவர்களுக்கு எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு தொல்லை கொடுப்பது தான் சீனாவில் இயல்பு 


பாகிஸ்தான் நரிக்கு பல்தேய்த்து விட்டும் மியான்மர் ஆட்டுக்கு கொம்பு சீவி விட்டும் இலங்கை முயலுக்கு வாலில் கத்தியை கட்டிவிட்டும் சீனா இந்தியாவிற்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டது வெளியில் இருந்து சதி வேலை பார்ப்பதோடு மட்டும் அல்ல உள்நாட்டிலும் குழப்பங்களையும் கலவரங்களையும் தூண்டிவிட பொதுவுடைமை தீவிரவாதிகளை ஊக்குவித்ததும் வருகிறது 

இந்தியாவின் ஒரு பகுதியான அருணாச்ச பிரதேசத்தின் முற்றிலுமாக ஊடுருவி அந்த பகுதியை சிறிது சிறிதாக ஆக்ரமிக்கும் வேலையையும் துவங்கி விட்டது ஒளிவு மறைவு இல்லாமல் அருணாச்சல பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது என்று சொல்லியும் சாலைகளை போடுகின்ற பணியையும் துவங்கி விட்டது இதை விட அபாயகரமாக அந்த பகுதி மக்களை நீங்கள் சீனர்களை போல தோற்றமுடையவர்களாக இருப்பதனால் நீங்கள் இந்தியர் அல்ல சீனர்களே என்று மூளை சலவை செய்யும் கோயபல்ஸ் வேலையையும் ஆரம்பித்து விட்டது 


இவைகள் எல்லாம் திரைமறைவில் நடக்க வில்லை பகிரங்கமாகவே நடக்கிறது ஆனாலும் நமது இந்திய அரசு கும்பகர்ண உறக்கத்திலேயே இருக்கிறது எது நடந்தால் என்ன யார்வீடு கொள்ளை போனால் என்ன என் கல்லாபெட்டி நிறைகிறதா அது போதும் என்ற எண்ணத்தில் இந்திய தலைவர்கள் நடந்து கொள்கிறார்களே தவிர தேசத்திற்கு ஏற்பட்டு கொண்டிருக்கும் அபாயத்தை பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை எதோ ஒரு சிலர் கவலையோடு நிலைமையை எடுத்து சொன்னால் அதை காதில் வாங்கவும் யாரும் தயாராக இல்லை 

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய போனவன் போல் சீனா பாம்பு இந்தியாவை முழுமையாக சுற்றி வளைத்து நெருக்கிய பிறகு கத்தி கூப்பாடு போடுவதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை கடிக்க வரும் பாம்பை அடிப்பதை விட்டு விட்டு அழகு பார்த்த கதையாக ஆகி விடும் இன்றைய இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக அடிப்படை வாதங்களுக்கு எதிராக தீவிரவாதத்திற்கு எதிராக தங்களது மனபோக்கை வளர்த்து வருவது நல்ல அறிகுறி இவைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்பவர்கள் சீன அச்சுறுத்தலையும் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும் எதிர்கால சமூகம் அவர்களை கையெடுத்து கும்பிடும்.

Contact Form

Name

Email *

Message *