Store
  Store
  Store
  Store
  Store
  Store

திருமால் தமிழர் தெய்வம் இல்லையா?


இந்து மத வரலாற்று தொடர் 17

   ந்து மதத்தை தாக்குவதில் இன்பம் காணும் சில மேதாவிகள் இந்து மதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் எதுவும் தமிழ் நிலத்திற்கு தமிழ் மக்களுக்கு தமிழ் பண்பாட்டிற்கு சொந்தமானது அல்ல வடக்கில் இருந்து ஆக்கிரமிப்பாக தமிழ்நாட்டில் புகுந்ததே ஆகும் என்று வீதி தோறும் மேடை போட்டு பேசி திரிகிறார்கள் அப்படி பட்ட விதண்டா வாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கில்லை என்றாலும் நம்மில் சிலருக்கு சில நேரங்களில் மனக்குழப்பம் வந்துவிடுகிறது 
கிறிஸ்தவ மதம் என்றால் அதை உருவாக்கியது ஏசு நாதர் இஸ்லாம் மதம் என்றால் அதை உருவாக்கியது முகமது நபி பெளத்த மதத்தை உருவாக்கியது புத்தர் என்று சொல்லலாம் அதே போல அம்மதங்கள் எந்த காலகட்டத்தில் தோன்றின என்பதையும் தெளிவாக சொல்லிவிடலாம் ஆனால் இந்து மதத்தை இன்னாருதான் உருவாக்கினார்கள் இப்போது தான் உருவானது என்று யாராலும் சொல்ல முடியவில்லை அதனால் அவரவர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் அதில் எது உண்மை எது பொய் என்று கண்டுபிடிப்பது கஷ்டத்திலும் மாகா கடினமாக இருக்கிறது 



மேலும் இந்து மத தெய்வங்கள் அவதாரம் எடுத்ததும் அருள்லீலை புரிந்ததும் இந்தியாவின் வடபகுதியில் என்றே புராண இதிகாச நூல்கள் சொல்லுகின்றன அவற்றை வைத்து பார்த்தால் இந்து மத தெய்வங்கள் தமிழ் மண்ணுக்கு சொந்தமானது அல்ல என்று சொல்வதில் உண்மை இருக்குமோ என்று நினைத்து குழம்பவேண்டிய சூழ்நிலையும் வருகிறது 

இப்படி குழப்பம் அடைகிறவர்கள் நமது சங்ககால தமிழ் நூல்களை மேலோட்டமாக புரட்டி பார்த்தாலே ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிடலாம் வெளியில் இருந்து வந்த ஆரியர்களால் தான் இந்து மதம் தோன்றியது என்று பல திராவிட பாரம்பரிய பரிவாரங்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் அதை ஒரு வாதத்திற்காக ஒத்துக்கொண்டால் கூட ஆரியர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்பே இந்த நாட்டில் உயரிய கலாச்சாரமும் நாகரிகமும் இருந்திருக்கிறது அக்கால மக்கள் நாத்திகம் பேசிக்கொண்டு அலைய வில்லை மாறாக தன்னையும் தன்மனதையும் கட்டுபடுத்தி ஒழுக்கமுடன் வாழசெய்யும் இறைவழிபாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களாக இருந்திருக்கிறார்கள் இதற்கு ஆதாரமாக சிந்து சமவெளி நாகரிக தடையங்களும் தொல்பழங்கால தமிழ் இலக்கியங்களும் சான்று தருகின்றன 

அந்த சான்றுகளில் மிக முக்கியமாக சிவன் திருமால் பிரம்மன் பார்வதி போன்ற இந்து மத தெய்வங்கள் வேத காலத்திற்கு முன்பே மக்களில் வழிபாட்டில் முக்கிய இடம்பெற்றிருப்பதை அறியலாம் எனவே இந்து மதத்திற்கு எதிராக பரப்பப்பட்டு வரும் கருத்துக்கள் அனைத்துமே உள் நோக்கத்துடன் சொல்லப்படுகின்ற கற்பனை வாதங்களே ஆகும் உதாரணமாக ஸ்ரீ வைஷ்ணவத்தின் முழுமுதற் கடவுளான விஷ்ணு தமிழ் மண்ணுக்குரிய தெய்வம் அல்ல வடபுலத்தில் இருந்து வந்ததே ஆகும் என்று சிலர் சொல்லி வருகிறார்கள் அவர்கள் கூற்றில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கிறது என்பதை சற்று ஆராய்வோம் 


சங்கத்தமிழ் நூல்களிலேயே மிக மூத்ததும் உலக இலக்கியங்களில் மிக தொன்மையானதுமான தொல்காப்பியத்தில் முல்லை நிலத்திற்குரிய தெய்வமாக கரிய நிற திருமால் கருதப்படுகிறான் இவன் பசுக்கூட்டங்களை காக்கும் காவலனாகவும் உலகத்து உயிர்கள் அனைத்துமே இவனால் காக்கப்படுகிறது என்றும் தொல்காப்பியம் கூறுவதோடு பகைவர்களிடம் இருந்து அடிமை படாமல் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுகின்ற அரசர்களும் திருமாலுக்கு ஒப்பானவர்கள் என்று பேசுகிறது 

"மாயோன் மேய மன்பெறுஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்"


என்று இலக்கணம் அமைத்து தருகிறார் தொழ்காப்பியர் தொழ்காப்பியம் மட்டும் அல்ல புறநானுறு கூட திருமாலின் அவதாரமான கண்ணபெருமானை பாடுகிறது பூவை பூ வண்ணனான கண்ணனும் அவன் அண்ணனான பலராமனும் இணைந்து எதிரிகளை வாட்டி வதைப்பதை போல் இருபெரும் வேந்தர்கள் ஒருங்கிணைந்து நிலைபெறுமாறு காவிரி பூம்பட்டினத்தின் புலவர் காரிக்கண்ணன் புறநானூற்றில் பாடுகிறார் 


"பானிற உருவிற் பனைக்கொடி யோனும்
நீனிற் உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடனின் றாஅங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
..... இசை வாழியவே"


இந்த பாடலில் பனைக்கொடியோன் என்ற வார்த்தை கண்ணனின் மூத்தவனான பலராமனை குறிக்கிறது இதை வைத்து பார்க்கும் போது பாகவதத்தில் இறை சகோதரர்கள் இருவரின் சிறப்புகள் எழுதபடுவதற்கு முன்பே மக்கள் மத்தியில் அவர்கள் இருவரும் வழிபாட்டுக்குரிய தெய்வங்களாகவும் உதாரண புருஷர்களாகவும் இருந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது அதுவும் குறிப்பாக தமிழகத்திலேயே இந்த மரபு ஆழமான வேர்விட்டு பரவி இருந்ததை அறிய முடிகிறது 

சங்ககாலத்தில் இறைவனை பாடு பொருளாக கொண்டு எழுதப்பட்ட திருமுருகாற்று படை பரிபாடல் முதலிய நூல்களை தவிர அனைத்து தொகை நூல்களிலும் உதாரணங்களை எளிமையாக புரிந்து கொள்வதற்கு திருமாலின் சிறப்புகளே பல இடங்களில் எடுத்தாழப்படுகின்றன கலித்தொகையில் வரும் ஒரு குலை ஒருவன் போல் இணர்சேர்ந்த மராஅமும் என்ற வரியும் கொடுமிடல் நாஞ்சிலான் தார்போல் மராத்து என்ற வரியையும் உதாரணமாக சொல்லலாம் இது தவிர கலித்தொகைலேயே ஏராளமான பாடல் வரிகளில் திருமாலின் அருள் விளையாடல்கள் விவரித்து வியந்து பாரட்டபடுகின்றன 


அதே போல பழம் தமிழ்மக்கள் சிவபெருமானுக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் விழா எடுத்து கொண்டாடுவது போல் திருமாலுக்கு திருவோண நட்சத்திரத்தில் விழா எடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள் 

"கணங்கொள் அவுணர் கடந்த பொலத்தார்
மாயோன் மேய ஒண நன்னாள்" 
என்று வரும் மதுரை காஞ்சி வரிகளும் 

"ஆணொப் பார்இவன் நேரில்லைகாண், திரு
வோணத்தான்உல காளும் என்பார்களே"
 என்ற பெரியாழ்வாரின் அமுத வரிகளும் தமிழ்மக்கள் இருபெரும் தெய்வங்களான சிவனையும் மாலையும் இருகண்ணாக போற்றி வணங்கினார்கள் என்பது தெளிவு படுத்தும் தொல்காப்பியர் குறிப்பிடும் மாயோன் என்ற சொல்லும் மற்ற சங்க இலக்கியங்களில் காணப்படும் திருமாலை பற்றிய குறிப்புகளும் முல்லை நிலத்து தெய்வமான கார்மேக வண்ணனான கண்ணனே திருமாலாக வணங்க்கபட்டான் என்பதை தெளிவாக நமக்கு உணர்த்துகிறது இது மட்டும் அல்ல பழம் தமிழ் நூல்களில் காணப்படும் இத்தைகைய கருத்துக்கள் திருமால் வழிபாடு என்பது வெளியிலிருந்து வந்ததல்ல தமிழ் மண்ணின் சொந்த தெய்வமே என்பதை ஐயம்திரிபற காட்டுகிறது 


திருமாலை மட்டுமே பாடும் பொருளாக கொண்டு உருவான சங்க இலக்கியம் பரிபாடலாகும் இந்த நூலில் தற்போது கிடைத்துள்ள ஆறு பாடல்களும் வைஷ்ணவ முதல்வனான நாராயணனின் ஐவகை வடிவங்களின் கவியழகு சொட்டசொட்ட நமக்கு படம் பிடித்து காட்டுகிறது காணுகின்ற பொருளில் எல்லாம் கண்ணன் ஒருவனே உள்ளான் என்பதை பரிபாடல் புலவர் கடுவனிளவெயினார் மிக அருமையாக நாம் அறிந்து கொள்ள செய்கிறார் 

தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம்நீ
கல்லினுள் மணியும்நீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினுள் அன்பு நீ மரத்தினுள் மைந்துநீ
வேதத்து மறைநீ பூதத்து முதலும்நீ
வெஞ்சுடர் ஒளியும்நீ திங்களுள் அளியும்நீ
அனைத்தும் நீ அனைத்துனுட் பொருளும்நீ


இந்த பாடலை சொல்பிரித்து தனித்தனியாக உச்சரித்து பாருங்கள் உச்சரிக்கும் போதே உங்கள் உதடுகளில் அமுத சுவை ஒட்டிக்கொள்வதை உணர்வீர்கள் இதுவும் இதை போல பல பாடல்களும் சங்க நூல்களில் திருமால் பற்றிய அழகு தகவல்களாக நிறைந்து கிடைக்கிறது அவைகளை தனித்தனியாக எடுத்து பேசப்போனால் மிகப்பெரிய நூலாகவே எழுதலாம் நம் நோக்கம் அது அல்ல என்பதாலும் பழம்தமிழ் மக்களின் சொந்த சுய வழிபாடே திருமால் வழிபாடு என்பதை உணர்த்துவதே என்பதாலும் இங்கு சில பலாசுளைகளை மட்டும் ஆதாரங்களாக சுட்டிக்காட்டினேன் சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாது சிலப்பதிகாரத்திலும் ஆச்சியர் குரவை பகுதியில் ஓங்கி உலகளந்த உத்தமன் தமிழ்நிலத்து தனிப்பெரும் தெய்வம் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது 


இந்தியாவில் ஒரு மூலையில் தோன்றிய விஷயமானாலும் அது நல்லதாக பயனுள்ளதாக வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடியாதாக இருந்தால் அது யாரும் எடுத்து சென்று பரப்பாமலே நாலா திசையிலும் பரவிவிடும் இது தான் இந்திய பண்பாட்டின் தனிச்சிறப்பு இதனடிப்படையில் நாவலம் தீவு என்ற பாரத திருநாட்டில் தெற்கு பகுதியில் தோன்றிய ஸ்ரீ வைஷ்ணவம் இமயம் வரையும் ஏன் இமய வரம்பை தாண்டியும் எட்டு திக்கிலும் பல்கி பரவியது எனலாம் 

கெளதம புத்தரின் உபதேசங்களையும் பவுத்த நெறிகளையும் எடுத்து இயம்பும் திரிபீடகங்களுக்கு எழுதப்பட்ட நித்தேசம் என்ற மிக பழைமையான தெளிவுரையில் திருமாலை வாசுதேவனாகவும் பலதேவனாகவும் பண்டையமக்கள் வணங்கி இருப்பதாக தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது கிமு முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறும் பதஞ்சலி முனிவரின் பாணினி வடமொழி இலக்கண நூலில் வாசுதேவ வணக்கம் மக்கள் மத்தியில் மிக புகழ் பெற்று பரவிஇருந்ததையும் நமக்கு சொல்கிறது இதை போல கிமு இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று வட இந்தியாவில் கோசுண்டி என்ற இடத்தில் கண்டுபிடிக்க பட்டது அதில் திருமால் வழிபாடு மன்னர்களாலும் மக்களாலும் எவ்வளவு புனித தன்மையுடன் கடைபிடிக்க பட்டது என்பதை விளக்கப்பட்டுள்ளது கிரேக்க நாட்டு இதிகாசங்களிலும் வரலாற்றிலும் விஷ்ணு வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டதை அறிய முடிகிறது இவ்வளவு அறிய பெரிய ஸ்ரீ வைஷ்ணவ மரபை உலகுக்கு தந்தது தமிழ்நாடே தவிர தமிழ்நாட்டிற்கு இது கொண்டுவரப்பட்டது அல் 


ஸ்ரீ வைஷ்ணவம் கடவுளை கடவுளாக மட்டும் பார்ப்பது அல்ல அது கடவுளை மனிதனாகவும் பார்க்கிறது மனிதனையும் கடவுளாக பார்க்கிறது தரித்திரனுக்கு செய்யம் தொண்டே நாராயணனுக்கு செய்யும் தொண்டு என முதல் முதலில் சமய உலகில் சமூக புரட்சியை ஏற்படுத்தியது ஸ்ரீ வைஷ்ணவமே ஆகும் நாராயணனுக்கு இந்த உலகம் புறம்பாக இல்லை நாரணனும் உலகத்திற்கு புறம்பாக இல்லை நீ காணுகின்ற மனிதனும் புழு பூச்சிகளும் நாராயண வடிவமே நாராயண அம்சமே என்பதை எடுத்து காட்டியது ஸ்ரீ வைஷ்ணவம் ஆகும் கடவுள் ஆடம்பரங்களை ஆரவாரங்களை விரும்புவன் அல்ல அவன் எளிமையையும் அன்பையும் தியாகத்தையும் விரும்புவனே என்று சொல்லி ஆன்மிக வாழ்வில் புது வழியை காட்டியது ஸ்ரீ வைஷ்ணவமாகும் 

நாராயணன் முன்னால் நாடாளும் மன்னனும் அடிமையும் ஒன்றே வேதம் ஓதும் பண்டிதனும் அழுகிய மாமிசம் சுமக்கும் புலையனும் சமமே என்பதை சொல்லால் மட்டும் அல்ல செயலாலும் காட்டியது ஸ்ரீ வைஷ்ணவம் கடவுளின் அருள் அம்சத்தை தேவ பாஷையில் மட்டும் அல்ல தெய்விக மொழிலும் சொல்லியது ஸ்ரீ வைஷ்ணவம் அதர்மமும் தீமையும் கோலோச்சும் போது அடிமையாய் பேடியாய் ஒளிந்து கிடக்காதே மறைந்து வாழாதே எழுந்து நில் எதிர்த்து நில் மோதி மிதித்து விடு வஞ்சகர் முகத்தில் உமிழ்ந்து விடு என்று கோழைக்கு கூட வீர உபதேசம் செய்தது ஸ்ரீ வைஷ்ணவம் 

நமது இந்து மதம் மாபெரும் சமூத்திரம் என்றால் அந்த சமூத்திரத்தில் கலக்கும் புண்ணிய கங்கை ஸ்ரீ வைஷ்ணவம் இது கடவுளை வைகுண்டத்தில் வைத்து அழகு பார்த்து வழிபடும் மோட்ச மார்க்கம் மட்டுமல்ல முழுமுதலான மூல பரம்பொருளை பூமிக்கு இறங்கி வர செய்து மானிட கஷ்டத்தை நீயும் படு நான் விடுபட வழியும் சொல்லு என்று கடவுளையே கட்டி இழுத்த வாழ்க்கை மார்க்கமாகும் அத்தகைய உயர்ந்த உயரிய ஸ்ரீ வைஷ்ணவ நெறியை எளிமையாக விளக்கமாக நமது இந்து மத வரலாற்று தொடரில் இனி காண்போம்



Contact Form

Name

Email *

Message *